periyar and tho pramasivanநமது நாட்டில் கல்யாணம் செய்வதில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு பெண் தேடுவதிலோ, மாப்பிள்ளை தேடுவதிலோ நல்ல வர்க்கமாக இருக்க வேண்டும் என்கின்ற சாக்கைச் சொல்லிக் கொண்டு பணக்காரர்கள், பிரபுக்கள் வீட்டிலேயே போய் சம்மந்தம் வைத்துக் கொள்ள பிரயத்தனப் படுவதைப் பார்க்கின்றோம். ஆனால் பிரபுக்கள் வீட்டுப் பிள்ளைகளில் அதுவும் சரியான பிரபுக்கள் என்கின்றவர்களின் வீட்டுப் பிள்ளைகளில் பெரிதும் சமையல்காரன் வர்க்கமாகவும், மோட்டார் டிரைவர் வர்க்கமாகவுமே முடிந்து விடுகின்றது.

அந்த பிரபுக்கள் வர்க்கமெல்லாம் தாசிகளிடமுமே போய் சேர்ந்து விடுகின்றது. ஏனெனில் பிரபுக்கள் என்றால் அவர்களுக்குக் கட்டாயம் தாசிகள் இருந்தாக வேண்டும். இல்லாவிட்டால் பிரபுப் பட்டம் பூர்த்தியாவதில்லை. ஆதலால் இவர்கள் வர்க்கம் தாசிகளிடமே இறங்கி விடுகின்றது. அப்பிரபுக்களின் மனைவிமார்கள் ஐயோ பாவம்! வேறு வகையின்றியும் குடும்பத்தின் கௌரவத்தைக் காப்பாற்ற வேண்டாமா என்கின்ற கவலை மீதும், தங்கள் கணவர்களைப் போல் வெளியில் வேறு தக்க மனிதர்களின் சிநேகம் வைத்துக் கொள்ளாமல் வீட்டுக்குள்ளாகவே சரிபண்ணிக் கொள்ளக் கருதி சமையல்காரனுடனேயோ, அல்லது மோட்டார் டிரைவருடனேயோ மாத்திரம் தான் பெரிதும் சம்மந்தம் வைத்துக் கொள்ள முடிகின்றது. ஆகவே இதனால் சமையல் வர்க்கமும் டிரைவர் வர்க்கமும் தான் பிரபுக்கள் வீட்டில் இறங்கி விடுகின்றது.

இதைக் கண்ட ஒரு தாசி தன் மகனைப் பார்த்து “சமஸ்தானாதிபதிக்குப் பிறந்த நீ சங்கீதத்தில் பிழைக்கின்றாய், சமையல்காரனுக்கு பிறந்தவன் சர்வாதிகாரம் பண்ணுகின்றான். என்னே! கடவுளின் திருவிளையாடல்” என்று சொன்னதாக ஒரு பழமொழி சொல்லிக் கொள்ளப்படுவதுண்டு. ஆதலால் அறிவும் கல்வியும் அழகும் உடையது தான் நல்ல வர்க்கமாகுமே தவிர பணக்காரர் வீட்டுப் பிள்ளைகள் என்கின்றதனாலேயே அவர்கள் எப்படி இருந்தாலும் நல்ல வர்க்கம் என்று நினைப்பது வெறும் மதியீனமும் பேராசையுமேயாகும்.

('சித்திரபுத்திரன்' என்ற பெயரில் பெரியார் எழுதியது; குடி அரசு - கட்டுரை - 30.06.1929)

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.