kuthoosi gurusamy 268எல்லோரும் எல்லாக் காரியத்துக்கும் உண்ணாவிரதம் இருக்கின்ற காலம் இது!

சிறையதிகாரிகள் தொல்லை கொடுக்கிறார்களா? - உண்ணாவிரதம்!

ஆந்திர மாகாணம் பிரிய வேண்டுமா? - உண்ணாவிரதம்!

மனைவியோடு கோபமா? - உண்ணாவிரதம்!

- விரதம் அல்லது நோன்பு அல்லது பிடிவாதத் தியாகம் என்பது சாப்பாட்டுத் துறையில் மாத்திரம் இருப்பது ஏன்? மற்றத் துறைகள் எவ்வளவோ இருக்கின்றனவே!

உதாரணமாக, உடுக்கா விரதம் இருக்கலாம்! ஆனால் போலீஸ் அதிகாரிகள் சும்மா விடமாட்டார்கள்! உடுக்கா விரதம் இருப்பதென்றால் சாமியார் வேஷம் போட வேண்டும்! ஹரித்வார் கும்பமேளாவின் போது நூற்றுக்கணக்கான நிர்வாண சந்நியாசிகள் ஊர்வலமாகச் சென்றார்களாம்! அதாவது ஆண் சந்நியாசிகள்! பெண் இனத்துக்கு இன்னும் அவ்வளவு பக்தி வரவில்லை! எந்தத் துறையிலும் ஆண்கள்தான் முன்னேற்றக் கட்சியிலிருக்கிறார்கள் என்பது இதிலிருந்தாவது விளங்குகிறதல்லவா? உண்ணாவிரம் போலவே இனிப் பல விரதங்கள் படிப்படியாகத் தோன்றிவிடும் என்றே தெரிகிறது!

மத்திய பிரதேச ராஜ்யத்திலுள்ள சவுகேரா என்னும் ஜில்லாவில் மூன்று கிராமங்களைச் சேர்ந்த மக்கள், இனிமேல் பீடி, சிகரெட் முதலியன குடிப்பதில்லை யென்றும், வேறு கெட்ட பழக்கங்களையும் விட்டுவிடுவதென்றும் விரதம் எடுத்துக் கொண்டிருக்கிறார்களாம். இந்த விரதத்தை மீறுகிறவர்களை அவர்களே தண்டித்து விடுவார்களாம்.

இது எவ்வளவு நல்ல ஏற்பாடு பார்த்தீர்களா?

சென்ற வாரத்தில் ஒரு செய்தி வந்தது; அலகாபாத்திலுள்ள சலவைத் தொழில் பெண்கள் கூடி சினிமாவுக்கே செல்வதில்லை என்று, சினிமா பார்க்கா விரதம் இருந்து வருகிறார்களாம்! இந்த முடிவு செய்யப்பட்ட பெண்கள் மகாநாட்டுக்கு ஆண்களும் சென்றிருந்தார்களாம்! சினிமா மூலம் சமுதாயத்தின் ஒழுக்கம் கெட்டுப் போகிறது என்பதற்காகவே இந்த முடிவு செய்தார்களாம்!

இந்த இரு விரதங்களும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்குத்தான் முக்கியமாகத் தேவை!

நம் இளைஞர்கள் மட்டும் பீடி சிகரெட் குடிக்கா விரதம், சினிமா பார்க்கா விரதம் இருப்பார்களே யானால் தமிழ் நாட்டில் மாதம் 10-15 லட்ச ரூபாயாவது பெற்றோர்களுக்கு மிச்சமாகும்! இந்தப் பணத்தைக் கொண்டு சிறுவர்களுக்கெல்லாம் ஆளுக்குத் தினம் 2 கோழி முட்டையும் 2 ஆழாக்குப் பாலும் தரலாம்!

இதற்காகவே ஒரு இளைஞர் கழகம் இருந்தால் கூட நல்லது! அதாவது சினிமா - சிகரெட் பகிஷ்கார கழகம் என்ற பெயரால்! 20 வயதுக்குட்பட்ட இளைஞர்களெல்லாம் இதில் உறுப்பினர்களாகச் சேரலாம்! கல்விச் சாலைகளுக்கெல்லாம் சென்று இந்தக் கழகத்தார் பிரசாரஞ் செய்யலாம். இந்தக் கழகத்துக்குச் சர்க்கார் கூட கிராண்ட் கொடுக்கலாம்!

உண்ணாவிரதத்தைப் போல இம்மாதிரி விரதங்கள் 2 வாரம் 3 வாரத்தில் நிறுத்திவிடக் கூடியவைகளல்ல! ஆயுள் வரையில் இருக்க வேண்டியவை!

எந்த விரதம் இருந்தாலும் ஒரே ஒரு விரதம் மட்டும் யாராலும் இருக்க முடியாது! அதுதான் பண வெறுப்பு விரதம்!

“காந்தியார் இருந்தாரே” என்று சிலர் கூறலாம்! அவர் சங்கதியே வேறு!

“பகவான்” ரமணரிஷியினாலேயே பண வெறுப்பு விரதம் இருக்க முடியவில்லை யென்றால், மற்றவர்களால் எப்படி முடியும்? ஊரார் சொத்தைக் திரட்டித் தன் தம்பி குடும்பத்துக்கு லட்சலட்சமாக உயில் எழுதி வைத்து விட்டுப்போன “பகவான்” அல்லவா, அவர்? அதனால் தான் உலக உத்தமர் படுகொலை செய்யப்பட்டு மாண்டு போனபோது கூடத் தோன்றாத வால் நட்சத்திரம், அக்கிரகார பகவான் புழுப் புழுத்துச் செத்தபோது தோன்றிற்று!

“என் தேவைக்கு இந்தப் பணம் போதும்; என் குடும்பத் தேவைக்கு இனிப் பணமே தேவையில்லை,” - என்று சொல்லக் கூடியவர்கள் ஒருவராவது இந்த உலகிலுண்டா? அப்படியிருந்தால் தான் உலகப்போர் இருக்காதே! உள்நாட்டுப் பூசல் இருக்காதே! கொலை - களவு இருக்காதே! கம்யூனிஸ்ட் கட்சிக்குக்கூடத் தேவையிருக்காதே!

- குத்தூசி குருசாமி (20-06-1952)

நன்றி: வாலாசா வல்லவன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.