periyar maniammaiபுரசைவாக்கம் அருணகிரி சபை தர்மத்தின் உண்மை விளக்கம்

நான் பேசுவதற்கு முன்னே அக்கிராசனர் என்னைக் குறித்து வெகுவாகப் புகழ்ந்து கூறி விட்டார்கள்; அதனால் பேச வேண்டியதையும் மறந்து விட்டேன். அவர் என்னைக் குறித்து அவ்வளவு பெருமையாக எடுத்து சொன்னதை நான் ஒப்புக் கொள்ள முடியாதாயினும், அக்கிராசனருக்கு என்னிடத்திலுள்ள அதிக அன்பினால் பலவாறு புகழ்ந்து பேசியிருக்கின்றார்.

நான் இன்று பேசக்கூடியது உங்கள் மனதுக்கு வருத்தத்தைக் கொடுக்கக் கூடுமெனக் கருதித்தான் அக்கிராசனர் முன் எச்சரிக்கையாகச் சில வார்த்தைகள் கூறினார். நான் யாருக்காகப் பேச வந்தேனோ அவர்களை வருத்தமுறச் செய்வதில் என்ன பயன்? முரட்டுத்தனமாகப் பிறர் உணர்ச்சியைப் புண்படுத்தக் கூடியவாறு பேசுவதில் யாதொரு பயனும் இல்லை என்பதை அறிவேன். ஆயினும் எனக்குச் சரி எனத் தோன்றுவதை நான் வெளியிட்டுப் பேசுவதில் பின்வாங்குவதில்லை யாதலால்தான் அக்கிராசனர் அதை யாரும் குற்றமாகக் கொள்ளக்கூடாதெனக் குறிப்பிட்டுப் பேசினார்.

எனக்கு முன் பேசிய நண்பர் குருசாமி தர்மத்தைக் குறித்தும், அருணகிரி நாதரைப் பற்றியும் சில வார்த்தைகள் சொன்னார். அவர் வாலிபராதலால் தமக்கு உண்மையாகப் பட்டதை எடுத்துச் சொன்னார். நான் வாலிபர்களின் உண்மைக் கருத்தை வெளியிடுவதைப் பாராட்டுபவன்தான். அதற்கு முலாம் பூசி மறைப்பது நாட்டுக்குத் தீமையைத்தான் விளைக்கும். பரோபகார சிந்தையோடு கஷ்டப்படுபவர்களுக்கு உதவி புரிவோரிடத்துள்ள அசூசையினால் அவ்வாறு பேசவில்லை. நமக்கு தர்மம் என்பது இதுதான் என்று வரையறுத்துக் கற்பிக்கப் பட்டிருப்பதனால்தான், கண் மூடித்தனமான செய்கைகள் இன்னும் செழித்து வருவதற்கிடமாய் இருக்கின்றது. இதன் சம்மந்தமாக நமது மதமும் கோட்பாடுகளும் தர்மமும் ஒரு எல்லை ஏற்படுத்தி இருப்பதனால் அவ்வளவுக்குச் செய்யத்தான் யாருக்கும் மனம் வருமே தவிர, அதைத் தாண்டிப் போக யாருக்கும் மனம் வராது.

ஒரு அடி யாருக்கு அன்னமளித்தால் இவ்வளவு புண்ணியம் என்று கணக்கு வாரியாக அதன் பலனாய் இவ்வளவு காலத்திற்கு மோட்சத்தில் இருக்கலாமென்று வகுத்து எழுதியிருக்கிறார்கள். இதைக் கேட்ட பிறகு, இத்தகைய தர்மம் சம்பந்தமான எண்ணம் வருகிறதே தவிர வேறல்ல. இம்மாதிரியான காரியங்களினால் உண்மையான பரோபகாரமான காரியங்களுக்குக் குந்தகம் ஏற்படுகின்ற தென்பதை நீங்கள் நன்றாய்க் கவனிக்க வேண்டும். இவற்றால்தான் நாடு முன்னுக்கு வருங்காரியங்கள் தடைப்படுகின்றன. எந்த தேசத்திலும் தர்மமில்லாமல் இருக்கவில்லை. வெள்ளைக்காரன் தேசத்தின் தர்மம் நம்நாட்டுத் தர்மத்தைவிட பன்மடங்கு உத்தமமாயும் தேசத்திற்கும் சமூகத்திற்கும் உண்மையான நன்மை அளிப்பதாயும் இருக்கின்றது. வெள்ளைக்காரன் நாட்டு தர்மம் கிணறு நிரம்பி வழிவது போல அவன் ராஜ்யம் நிரம்பி நம் நாட்டிலும் வழிந்தோடுகின்றது.

அத்தகைய தர்மம் நிறைந்த நாட்டில் என்ன வழக்கமென்றால் ஒருவன் தெருவில் பிச்சைக்கு வந்தால் உடனே போலீஸ்காரன் பிடித்துக் கொண்டு போவான். அங்கு பிச்சையிடுவது சோம்பேறிகளை வளர்க்கும் முறை என்பதை நன்கறிந்து கொண்டார்கள். வெள்ளைக்காரன் நாட்டில் படிக்காதவன் என்றால் அவன் வெட்கித் தலைகுனிந்து விடுவான். நம் நாட்டிலோ தர்மம் என்று வந்தால் நமக்கென்ன நம்மாலான சாப்பாடு போட்டு விடுவோம்; பிறகு அவன் தலைவிதி போலாகிறது. சரஸ்வதி நாக்கிலிருந்தால் எப்படியும் படித்து விடுவான் என்ற தர்மந்தான் நமக்குக் கற்பிக்கப்பட்டிருக்கின்றது.

அவர்கள் முன்னேறும்போது நாம் இக்கதிக்காளாக்கியிருக்கக் காரணமென்ன? நமது மதங்கள், தர்மங்கள் என்ற பலத் தத்துவங்கள் தான் நம்மை இந்நிலையில் வைத்திருக்கின்றன. அவர்கள் முன்னேற்றத்திற்குப் பலமும் பீரங்கியும் மட்டும் காரணமல்ல. சென்னை மாகாணத்தில் உயர்ந்த குஷ்டரோக, க்ஷயரோக, மருத்துவ ஆஸ்பத்திரிகளும், உயர்ந்த கலாசாலைகளும், கல்லூரிகளும் அவர்களுடையதாகத் தானிருக்கக் காண்கின்றோம். தப்பான வழிகளில் பிள்ளைகளைப் பெற்று கள்ளியில் போட்டுவிட்டால் அவற்றை எடுத்து வளர்த்து சம்ரட்சிக்கும் அனாதை ஆசிரமங்களும் அவர்களுடையதாகத் தானிருக்கின்றது.

தெருவிலும் நடக்கக்கூடாது, அருகிலும் வரக்கூடா தென்று மிருகங்களிலும் கேவலமாய் நம்மால் நடத்தப்படுபவர்களையும் அவர்கள் சேர்த்துக் கல்வி அளித்து சமத்துவம் பாராட்டி மாக்களெனக் கருதப்பட்டவர்களையும் அவர்கள் மக்களாக்கி வருவதைக் காண்கின்றோம். இவற்றை எல்லாம் நாம் எளிதில் மறக்க முடியாது; அல்லது மறைக்கவும் முடியாது. அவர்கள் நொண்டி, முடம், குருடர்களைக் கொன்று விடுகிறார்களா? அத்தகையவர்களுக்கும் தம் சுய உதவியினால் எவ்வளவுக்கு ஜீவனோபாயத்தைத் தேடிக் கொள்ள முடியுமோ அவ்வளவுக்கு உதவி புரிந்து வழிகாட்டி வருகின்றார்கள்.

இதனால் வெள்ளைக்காரன் தான் புத்திசாலியா? நமது முன்னோர்கள் என்ன முட்டாள்களா? என்ற கேள்வியும் கிளம்பக் கூடும். இதற்காக நாம் நமது முன்னோர்கள் பேரிலும் சுலபமாகக் குற்றம் சொல்லிவிட முடியாது. எந்தக் கொள்கையும் நீதியும், தர்மமும் காலத்திற்கும் இடத்திற்கும் சந்தர்ப்பத்திற்கும் ஏற்றவாறு தானிருக்கும்.

ராமேஸ்வரத்தில் ஒரு செட்டியார் தர்மம் செய்வதற்காகச் சாணியும், பாலும் சுக்கு மட்டும் கொடுக்கிறார் என்றால் அதுபோல நாமும் இங்குச் சாணியை குவியலாய்க் கொட்டிக் கொண்டு வாரிக் கொடுப்பது தகுதியாகுமா? அந்தவிடத்திற்கு அவசியத்திற்கேற்றவாறு அது முக்கிய தர்மமாகவிருக்கலாம். அதற்காக நாம் அந்த செட்டியார் மீது குறை சொல்ல முடியுமா?

முந்நூறு நானூறு வருடங்களுக்கு முந்திய காலத்துத் தர்மமென்ற காரியங்கள் இப்போது செய்ய முடியாதவைகளாகத் தானிருக்கும். அப்போது அவை அவசியமாகச் செய்ய வேண்டியவைகளாகத் தானிருந்திருக்கும். அக்காலத்தில் தற்போதிருப்பது போன்று துரிதமான போக்குவரத்து சாதனங்களோ மற்ற வசதிகளோ கிடையாது. அவ்வந்த நாட்டு மக்களுக்கு அவ்வந்த ஊரே சுவர்க்கம். அக்காலத்தில் அவர்கள் கிணற்றுத் தவளைகளைப் போலத் தானிருந்திருக்க முடியும். அப்பேர்பட்டவர்களுக்கு விளைச்சலும் அபரிமிதமாய் விளைந்து கொண்டிருந்தது. அக்காலத்தில் மழை பெய்வதற்கு அவசியமான காடு முதலியவை அடர்ந்திருந்ததால் பருவ மழைகள் தப்புவதில்லை. இதனால் உழுதாலும் உழாமல் விட்டாலும் அறுவடைக்குக் குறைவில்லை. அப்போது அதிகமாக விளைந்ததாலும் தற்போதைப் போல விளைந்த தானிய முழுதும் வெளி ஊருக்குக் கொண்டு போகப்படாமல் பெரும் குழிகள் வெட்டி அவற்றில் புதைத்து வைப்பதும் வழக்கமாயிருந்து வந்தது.

அன்றியும், அக்காலத்தில் பிச்சைக்காரர்களும் மிக அரிதென்றே சொல்லலாம். எவ்வளவு விளைந்தாலும் வாரி வெளிநாட்டுக்கு அனுப்புவது என்ற முறை அக்காலத்தில் அதற்கு சாதனமும் கிடையாது. அதனால்தான் இவ்வளவு பேருக்கு அன்னமிட்டால் இவ்வளவு புண்ணியமென்றும் எழுதி வைக்க இடமிருந்தது, அதனால் நம் நாட்டில் காலக்கிரமத்தில் பிச்சை எடுக்கும் சாதிகளென்றே பல ஜாதிகளும் தோன்றி விட்டன. ஏதோ சாம்பலையும் மண்ணையும் பூசிக் கொண்டு வந்தாலும் சாமி என்று விழுந்து கும்பிடும் முட்டாள்கள் அதிகமிருக்கின்றார்கள் என்பதையறிந்து தான் பிச்சைக்காரர்களும் நாளுக்கு நாள் விருத்தியாகி கொண்டு வருகின்றனர்.

இத்தனைக் கோயில்களிருக்கையில் இன்னும் புதிதாகக் கோயில் கட்டுவது அவசியமாவென்று கேட்டால் “பாவி தடுக்கிறான் அவன் சொல்லைக் கேட்ட காதை லோஷன் போட்டுக் கழுவ வேண்டு”மென்கிறார்கள். (நகைப்பும், கர கோஷமும்) அக்காலத்தில் செல்வமிகுதியினால் செலவிடுவதற்கு வழியின்றி இவ்வாறெல்லாம் செய்து கொண்டிருந்தார்கள். தங்கள் விளைபொருள்களுக்கு செலவு வேண்டுமென்ற முறையில் ஒருவரோடொருவர் போட்டி போட்டுக் கொண்டு மேன்மேலும் தர்மம் என்னும் பெயரால் பலவாறு செலவிட்டு வந்தார்கள்.

அக்காலத்தில் எத்தனைக் கடவுளிருந்தாலும் பூசை போட்டு எவ்வளவு பேர் வந்தாலும் சோறுபோடும் செல்வமும் செழிப்பு மிருந்தது. அதனால்தான் இவ்வளவு கடவுள்களும் அடியார்களும் ஏற்பட இடமிருந்தது. ஆனால் இப்போதைய கொள்கையும் மதக்கோட்பாடுகளும் காலதேச வர்த்தமானத்திற்கு ஏற்றபடியும் மனிதன் அறிவுக்கும் தன்மைக்கும் ஏற்றவாறுமிருக்க வேண்டும்.

மகமதியர்களும், கிறிஸ்துவர்களும், இந்துக்களும் எல்லா மதஸ்தர்களும் தான் பாவம் செய்யக் கூடாது என்கிறார்கள். ஆனால் பாவம், சுத்தம் முதலான தத்துவங்களுக்கு அவ்வந்த மதத்தினருக்கும் அர்த்தம் வேறாகத் தானிருக்கின்றது. பாலைவனத்தில் தோன்றிய இஸ்லாம் மதத்தில் சுத்தமென்றால் மூன்று வேளையும் குளிப்பதுதான் சுத்தமென்று எழுதி வைக்க முடியாது. அங்கு மணல் உடம்பில் தேய்த்துக் கொண்டாலும் குளித்து சுத்தமாவதற்கு ஒப்பாகத்தான் கருதப்படக் கூடும். அதனால் அந்த சுத்தம் தப்பு என்று சொல்லிவிட முடியாது.

நமக்குள் வெளிக்குப் போனால் நான்கு செம்பு தண்ணீர் விட்டு கழுவுபவர்களும் போதாக்குறைக்கு தலைமுழுகுபவர்களும் இருக்கிறார்கள். அவ்வாறு செய்தால் தான் அதனைச் சுத்தமெனக் கருதப்படுகிறது. ஆனால் இவர்களைவிட பன்மடங்கு கடுமையான சுகாதாரமுடைய வெள்ளைக்காரன் காகிதத்தில் பாதியும் கால்சராயில் பாதியுமாக துடைத்துவிட்டு போகிறான். அவன் நாட்டில் அவ்வளவுதான் வசதி. இங்கு குளிக்காவிட்டால் பாவி என்கிறார்கள். அங்கு குளித்தாயாவென்று கேட்பதே மரியாதைக் குறைவாகக் கருதப்படுகின்றது. இங்கு சிற்சிலர் வியர்வையினால் குளிக்க வேண்டிய அவசியமுண்டு. அங்கு குளிரினால் அத்தகைய அவசியமில்லை.

அவ்வாறே நமக்கு பாவம் என்பது எறும்பை மிதித்து விட்டாலும் பாவம். அவன் சங்கதி அதைப் பற்றி அவனுக்கு கவலையில்லை. இங்கு நாம் பசுவை அடித்தாலும் மகா பாவமென்கிறோம். அங்கு அவன் அதைக் கொன்று தின்னாவிட்டால் மார்க்கமில்லை. ஒருவன் சிற்றப்பன் மகளைக் கட்டலாமென்கிறான். மற்றவன் அதைப் பாவம் என்கிறான். இப்படி சௌகரியத்திற்கும் பழக்கத்திற்கும் ஏற்றவாறு தான் கொள்கைகளும் கோட்பாடுகளுமிருக்கக் கூடும். ஆதலால் அனைத்தும் காலதேச வர்த்தமானத்திற்கு ஏற்றவாறிருக்க வேண்டுமென்பது நன்கு விளங்கும்.

அன்றியும் அவ்வந்தக் காலத்தில் திறமைக்கேற்றவாறு ஏமாற்ற, ஏதேதோ எழுதி வைத்திருக்கலாம். அவற்றைக் குறித்து இப்போது கவலையில்லை. ஆனால் நாம் முக்கியமாய் கவனிக்க வேண்டியது இன்றைய நிலைமையில் எப்படியிருக்க வேண்டுமென்பதே யாகும். அதிலிருந்து தப்ப வழியுண்டாவென்றும் பார்க்க வேண்டும். நாம் நமது செல்வம், அறிவு, ஒழுக்கம் முதலியவை பிரயோசனமான வழியில் செலவிடப்பட வேண்டு மென்பதனால் அது தர்மத்திற்கு விரோதமானதென்று சொல்ல முடியாது.

இப்போது நாமிருக்கும் நிலையில் தர்மத்தின் பெயரால் சத்திரமும் சாவடிகளும் கட்டிக் கொண்டு போவோமானால் நம் சமூகத்தின் கதி என்னாகும்? நமது நாட்டின் நிலைக்கும் மக்களின் தேவைக்கும் ஏற்றவாறு தான் எந்த தர்மமும் ஏற்பாடும் செய்யப்பட வேண்டும். இனி நமக்குப் புதிதாகச் சாமிகள் வேண்டியதில்லை. இப்போது இந்துக்கள் கணக்கின்படி 22 கோடி இந்துக் களிருக்கின்றனர். இவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் கடவுள்களோ புராணங்களின் கணக்குப்படி 33 கோடி கடவுள்களாயிருக்கின்றன. இதனை பங்கிட்டால் ஒரு ஆசாமிக்கு ஒன்றரைக் கடவுள் வீதம் மக்களைவிட கடவுள்தான் அதிகப்படுகிறது. (நகைப்பும் கரகோஷமும்) இவ்வளவு கடவுள்களை நாம் காப்பாற்றினால் போதும்.

நாட்டின் பெருமையை வளர்க்க மக்கள் கஷ்டத்தைப் போக்க அறிவை வளர்க்க கல்வி அத்தியாவசியம். அவர்கள் சுயமரியாதையுடனும் சுகமாயும் வாழ்வதற்குத் தொழிலபிவிருத்தி அவசியம். எந்தத் தேசத்திலும் இவையிரண்டும் இன்றியமையாத அவசியமான அம்சங்கள். நம் நாட்டிலோ நூற்றுக்கு 93 பேர் படிப்பில்லாத தற்குறிகளாயிருக்கிறார்கள். இதைவிட அவமானமான காரியம் ஒரு தேசத்திற்கு வேறு என்ன இருக்கிறது?

அதுபோலவே சாப்பாட்டிற்கு கஷ்டப் பட்டு வெளிநாடுக்கு பிழைப்புக்காக துறைமுகங்கள் தோறும் கப்பல்கள் தோறும் ஆயிரக்கணக்கான ஜனங்களை பெண்டு பிள்ளைகளுடன் ஏற்றுமதி செய்யப்படுவதான கோரக் காட்சியைத் துறைமுகங்களுக்குச் சென்று பார்த்தால் தெரியும். இவ்வாறு பிழைப்பின்றியும் சாப்பாட்டுக்கு வகையின்றியும் கடல் கடந்து ஜீவிக்கச் செல்லும் ஏழை மக்கள் தொகைகளை இச்சென்னை மாகாணத்தில் மட்டும் மாதமொன்றுக்கு லட்சத்திற்கு அதிகமாகக் கூடும். இவர்கள் குழந்தை குட்டிகளுடனும் வயோதிகர்கள் கர்ப்பிணிகளுடனும் செல்வதான பரிதாபத்தை என்னவென்று சொல்வது?

இங்குள்ள கஷ்டத்தைவிட அங்குபோய் சாகலாமென்று தான் மனம் முறிந்து போகிறார்கள். இக் கொடுமைகளைக் கவனித்து பரிகாரம் தேடப்படுவதில்லை. இத்தகைய நாட்டில் நடக்கும் விஷயங்களோ விபரீதமாகத் தானிருக்கின்றன. இங்கு சாமிகளுக்கும் சடங்குகளுக்கும் உற்சவ வேடிக்கைகளுக்கும் லட்சக்கணக்காகத்தான் செலவிடப் படுகின்றது. திருப்பதி முதலிய தேவஸ்தானங்களுக்கும் முக்கியமான மடங்களுக்கும் சுமார் 20 லட்சத்திற்கு அதிகமாக மாதாமாதம் வருமானம் கிடைக்கிறது. ஒரு சாமிக்கு ஒரு வேளைச் சாப்பாடாகிய சட்டி அரணைப் பூசைக்கு சுமார் 20 ரூபாய்க்கு அதிகம் செலவிடப்படுகிறது. இவ்வாறிருக்க அச்சாமியின் பிள்ளைகள், சாமியே கதி என்று கருதிக் கொண்டிருக்கும் மக்கள் கஞ்சிக்கலைந்து கொண்டு பிழைக்க வழியில்லாது ஆயிக்கணக்காகக் கப்பலேறி வெளிநாடு சென்று துன்புறுகின்றார்கள்.

இவையிரண்டினையும் சேர்த்துப் பார்த்தால் அந்த சாமிக்குத்தான் அதிக அவமானமென்பது நன்கு விளங்கும். அத்தகைய சாமிகளுக்கிருக்கும் சொத்துகளுக்கும் ஆடம்பரங்களுக்கும், வாண வேடிக்கைகளுக்கும் சதுர் கச்சேரிகளுக்கும் ஒரு விதமான அளவில்லை. ராஜாவுக்குகூட அவ்வளவு ஆடம்பரமில்லை. ராஜாவாயினும் கொடுங்கோன்மையினால் அந்த சுகங்களை ஜனங்கள் படும் கஷ்டத்தைப் பாராமல் அனுபவிக்கின்றான் என்று சொல்லலாம். ஆனால் கருணை வள்ளல் என்ற கடவுள் இப்படி வீணாக்கு வதற்கு இடங்கொடுத்துக் கொண்டிருக்கலாமாவென்று தான் உங்களை கேட்கிறேன். இதனால் நாம் கடவுள் மீது குற்றம் சொல்லவில்லை. அது என்ன செய்யும். இன்றைக்கு யாராவது தங்கக் காரை போட்டால் பேசாமல் போட்டுக் கொள்ளுகிறது. யாராவது கழற்றிக் கொண்டு போனாலும் கல்லுப்போல் பேசாமல் சும்மா இருக்கிறது. சமீபத்தில் ஆண்டாள் தாலியையும் யாரோ கழற்றிக் கொண்டு போய் விட்டதாயும் இப் பத்திரிகைகளில் வாசித்திருப்பீர்கள்.

ஏன் இந்த நாட்டில் நூற்றுக்கு 93 வீதமானவர்கள் தற்குறிகளாயிருக்க வேண்டும்? இதற்கும் வறுமைக்கும் காரணமென்ன? ஆனால், நான் உங்களை சந்தோஷப்படுத்த ஒரு வார்த்தையில் பதில் சொல்லிவிடலாம். வெள்ளைக்கார நீச்ச அரசாங்கத்தார். நம் பணத்தைக் கொள்ளையிட்டுப் போவதாகச் சிலர் கூச்சலிடுகின்றனர். அந்த நீச்ச அரசாங்கத்தால்தான் சரஸ்வதியும் நம் நாட்டை விட்டு ஓடி விட்டாள் என்கின்றனர் மற்றும் சிலர். ஆனால் நம் நாட்டை விட்டோடிய சரஸ்வதி அந்த நீச்ச நாட்டுக்குத்தான் போய்ச் சேர்ந்திருக்கிறாள். வெள்ளைக்காரன் கொள்ளையிட்டு போவதையும் சாமிகளுக்கும் சடங்குகளும் செலவிடுவதையும் கணக்குப் பார்த்தால் சாமிகளுக்கு செலவாவது தான் பன்மடங்கு அதிகமாகும். சாமிகள், மதம், சடங்குகள் முதலியவற்றின் பேரால் செலவாகும் பணமும் கஷ்டமும் அசௌகரியங்களும் கணக்கிட முடியாது.

பணம் சம்பாதிப்பதில் எத்தனையோ தந்திரமும் சூழ்ச்சியும் செய்யும் அறிவாளிகளும் கூட இவ்வாறு செலவிடுவதில் அந்தத் தந்திரமொன்று மில்லாமல் முட்டாள்களாகத்தான் நடந்து கொள்கின்றனர். (கரகோஷம்) அபிஷேகத்தில் 150 ரூபாய் கொடுத்தா லென்ன? 10 ரூபாய் கொடுத்தா லென்ன? வித்தியாசமென்னவென்று யாராவது சிந்திப்பது உண்டா?

சென்னை மாகாண சர்க்காருக்கு வரும் கணக்குப்படி சாமிகளுக்கு வருமானம் 2 கோடிக்கு அதிகமாகிறது. இது தவிர கணக்கில் வராத கொள்ளைகளும் போக்குவரத்து தரகர் செலவும் சொல்ல வேண்டியதில்லை. கணக்குப் பார்த்தால் சாமிகளுக்கு நாம் கொடுப்பது சர்க்கார் வரி வருமானத்தை விட அதிகமாகுமேயன்றி ஒருவிதத்திலும் குறையாது.

தர்மமென்றால் சாப்பாடு போடுவது தானாவென்று கேட்டால் பாவம் என்ற தர்ம முறையைத்தான் நமக்குக் கற்பிக்கப்படுகிறது. இத்தகைய வீணுக்குச் செலவாகும் பணம் மூன்று ஜில்லாவுக்குச் சாப்பாட்டுடன் கல்வி போதிக்கப் போதுமானதாகும். இந்த மாதிரி, சுமார் 25 வருடங்களுக்கு நம் சாமிகள் சிறிது வயிற்றை இழுத்துக் கட்டிக் கொண்டு சும்மா இருந்தால் பிறகு நம் நாட்டில் ஒருவன்கூட மருந்துக்கும் தற்குறியாய் இருக்கக் காண முடியாதென்பது திண்ணம். (பெருத்த கரகோஷம்)

உள்ளது உள்ளபடி உண்மையைச் சொன்னால் அவன் தப்பு சொன்னான் இவன் நாத்திகப் பேச்சுப் பேசுகின்றான் என்று வீண் கூச்சலிடும் கூட்டத்தாருக்கும் குறைவில்லை. மேடை மீதேறி வெள்ளைக்காரர்களைத் துரத்தி விடுவோமென்று பயமுறுத்தலாம், மிரட்டினாலும் அர்த்தத்தோடல்லவா மிரட்ட வேண்டும்? ஜோபில் எலிக்குஞ்சு இருக்கிறது. எடுத்து விட்டால் செத்துப் போவாய் என்றால் எவன் பயன்படுவான்? எடுத்துவிடு ஒரு கை பார்ப்போமென்றுதான் சொல்வான். ( நகைப்பு)

முற்போக்குக்கான மார்க்கத்துக்கும் அது வெற்றி பெறத் தகுந்த வழிக்கும் நமது அறிவையும் செல்வத்தையும் செலவிடாமல் நாம் யாரையும் வெல்ல முடியாது. ஒரு கூட்டத்தார் நம்மைத் தாழ்ந்த நிலையிலேயே அடக்கி வைத்துக் கொண்டிருக்க முயல்வது சரித்திர பூர்வமாயும் நிரூபிக்கப் பட்டிருக்கின்றது. மத விஷயத்திலும் மற்ற விஷயங்களிலும் வெள்ளைக்காரன் நம்மைவிடக் கேவலமாக இருந்திருப்பதை அவர்கள் தேச சரித்திரமே நன்கு விளக்குகிறது. அங்கிருந்த புரோகிதமும் சாமிகளும் இப்போது எங்கு போயின? எல்லாம் இங்கு வந்து சேர்ந்துவிட்டன. (நகைப்பு) அவர்கள் எல்லாவற்றையும் இங்கு மூட்டை கட்டி செலவுக்குப் பணமும் கொடுத்து அனுப்பிவிட்டு அங்கு விஞ்ஞான ஆராய்ச்சியில் இறங்கியிருப்பதால் நாளுக்கு நாள் அந்நாட்டார் முன்னேற்றமடைந்து வருகிறார்கள். அவர்கள் சாமிக்கு உற்சவமில்லை, தேர் இல்லை, திருவிழா இல்லை. அப்படியிருந்தும் அந்த சாமி அவர்களைப் பல அற்புதங்கள் கண்டுபிடிக்க வழியாயிருக்க, நம் சாமிகளுக்கு லட்சக் கணக்கான பணம் செலவிட்டு தேர் திருவிழா நடத்தியும் நாம் இந்தக் கதியிலிருக்கின்றோம்.

நம் நாட்டுப் பொருள்கள் வெளிநாட்டுக்கு போகின்றது என்று கூச்சலிடுவதனால் பயன் என்ன? கடுகளவாவது நாம் முன்னேறும் முயற்சி செய்வதில்லை. நேற்று தினம் ருஷ்யாவில் செத்தவர்களைப் பிழைக்க வைக்கும் நூதன முறையை ஒருவர் கண்டுபிடித்ததாகத் “திராவிட”னில் படித்திருப்பீர்கள். இத்தனைக்கும் அது நாத்திகம் நிறைந்த நாடு. நாத்திகருக்கு நரகம் வேண்டுமானால் ருஷியாவில் இருப்பவர்களுக்கே இருக்குமிடம் சரியாய் போய்விடும். ஆதலால், வேறு எந்த நாத்திகர்களுக்கும், நரகத்திலிடமிராது. அவ்வளவு நாத்திகமாயிருக்கும் ஊரில் செத்தவனைப் பிழைக்க வைத்து சாமியோடு போட்டி போடுகிறார்கள்.

வெள்ளைக்காரன் நாட்டில் சாமிக்கு முக்கால் துட்டுக்கூட செலவில்லை. மகமதியனும் அப்படித் தான் வெள்ளைக்காரன் கோவிலுக்குப் போனால் துணி அழுக்கை வெளுப்ப தற்குச் செலவிடுவதைவிட வேறு செலவில்லை. விவசாயத்திலும் அவர்கள் எந்தப் பழத்தை எந்த நிறத்துடன் எந்தச் சுவையில் பயிரிட வேண்டுமென்னும் ஆராய்ச்சி செய்து அதற்குத் திராவகங்கள் ஊற்றிப் பயிரிட்டு வெளிநாடுகளுக்கு அனுப்புகிறார்கள். நாம் உழவு கட்ட வேண்டுமானாலும் பார்ப்பனனைக் கூப்பிட்டு நல்ல வேளை பார்த்து அந்தந்த ஏருக்கும் மாட்டுக்கும் பூசை போட்டு உழுவதனால் தான் இக்கதியிலிருக்கிறோம். (கரகோஷம்)

நமக்கு இவ்வளவு கோடி சாமிகளும், இவ்வளவு பணச் செலவுமிருந்தும், நாம் கடுகளவாவது முன்னேற முடியாதிருக்கிறோம். பூகோள சாத்திரம் போதிக்கும் ஆசிரியரின் தகப்பனும் கிரகணத்தன்று தர்ப்பையை எடுத்துக் கொண்டு சமுத்திரக்கரைக்கு தர்ப்பனம் செய்து வைக்க வந்து விடுகிறான். இவன் பேச்சைக் கேட்டுக் குளிக்கப் போனால் நம்மை முதலை இழுத்துக் கொண்டு போய்விடுகிறது.

கிரகண ஸ்நானத்துக்குப் போவோம் என்று சொல்லும் எம்.ஏ.க்களும், பி.ஏ.க்களும் இன்னுமில்லாமல் போகவில்லை. இக்காலத்திலும் சந்திரசூரியனை ராகுகேதுவென்னும் பாம்புகள் விழுங்கும் கதைகளும், அதன் மூலமான புரட்டுகளும், பணம் பறிக்கும் சூழ்ச்சிகளும் ஒழிந்த பாடில்லை. தேச முன்னேற்றத்திற்கோ, அறிவு வளர்ச்சிக்கோ, ஒழுக்கத்துக்கோ முட்டுக்கட்டையாய் இருக்கும் எவற்றையும் ஒழிக்க முயல வேண்டும். அம்மாதிரி செய்யும் தேசமும் மதமும் சமூகமும் தான் முன்னுக்கு வரும்.

கிலாபத் மதப்பித்துப் பிடித்திருந்த துருக்கி தற்போது அதனை இருந்தவிடம் தெரியாமல் மூட்டைக் கட்டியனுப்பி விட்டு முன்னேற்றத்துக்கு வழி தேடியதனால் தான் தற்போது ஐரோப்பாவில் மற்றைய நாடுகளை போல நல்ல நிலைமை அடைந்து வருகிறது. நாம் தர்மம் வேண்டாமென்று சொல்லவில்லை. நம் மதத்திலுள்ள அர்த்தமற்ற தத்துவங்களை ஒழித்து, பிறருக்கு எவ்விதத்தில் உபகாரமோ, அதை செய்து மக்களுள் சமத்துவமுவம், சகோதரத்துவமும், சத்தியமும், ஜீவகாருண்யமும் பரவச் செய்வதற்கு வழி தேட வேண்டுமென்றுதான் சொல்லுகிறோம். வீண் செலவிடும் பணங்களை உண்மையாகக் கஷ்டப்படுவர்களுக்கு உபகாரம் செய்வதில் செலவிடுங்கள் என்றுதான் சொல்லுகின்றோம்.

பழைய குருட்டு நம்பிக்கைகளைத் தம் சூழ்ச்சிகளுக்கு ஆதாரமாகக் கொண்டு சுகமாயிருந்த கூட்டத்தார் இப்போது கூலிகளை, குறும்புப் பிரசாரத்தில் ஏவி விடுகின்றனர். எந்தக் காலத்திலும் நன்மைக்கும் பரோபகாரத்திற்கும் விரோதமாக நம் நாட்டில் ஒரு கூட்டத்தார் இருந்திருப்பது சரித்திர மூலமாகவும் நன்கறியப்படும். அர்த்தமற்ற கொள்கைகளை ஒழித்து ஒழுக்கமே பிரதானமென்று சீர்திருத்தி மற்றவனுக்கு உபகாரம் செய்வதுதான் மோட்சமென்று புகட்ட வேண்டுவது அவசியம். கஷ்டப்படுபவர்களுக்கு உதவியளித்து திருப்தி செய்வது தான் மேலான புண்ணியம். இவற்றைச் சொன்னால் என்ன நாத்திகம் வந்துவிட்டது?

வீணாக மக்களைக் குழப்பி அவன் அறிவை கட்டிப் போட்டு 'நான் சொல்வதை நம்பு. இல்லா விட்டால் பாவம்' என்று நான் சொல்லவில்லை. எதிலும் உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டும். அப்போது தான் நம் நாடு முன்னேற்றம் அடையுமேயன்றி, என் பாட்டன், முப்பாட்டன் போனபடி போகிறேன் என்ற மூடக் கொள்கைகளால் நாடு நாளுக்கு நாள் நாசமடைவது திண்ணம். என் புத்திக்கு எட்டியதை நான் சொன்னேன். அதில் சரி எனத் தோன்றியதை ஒப்புக் கொண்டு அதன் படி நடக்கும்படி கேட்டுக் கொள்ளுகிறேன். நான் சொல்வதில் பிசகிருந்தால் என் அறியாமைக்கு பரிதாபப்படும்படி கேட்டுக் கொள்ளுகிறேன். ( பெருத்த கரகோஷம்)

(குறிப்பு : 23.06.1929 ஆம் நாள் அருணகிரி நாதர் சபையின் ஆதரவில் புரசைவாக்கம் அன்னதான சமாஜத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சொற் பொழிவு.

குடி அரசு - சொற்பொழிவு - 30.06.1929)

Pin It