periyar veeramaniஅருமை மணமக்களே! இங்கு கூடியுள்ள சகோதரிகளே! சகோதரர்களே! இங்கு நடைபெற்ற மணத்தைப் பார்த்த பின்பு சீர்திருத்த மணமென்பது எத்தகையது என்பது இப்போது உங்களுக்கு நன்றாய் விளங்கியிருக்கும். பண்டைக் காலத்திலும் நம் நாட்டில் இம்முறையில்தான் மணங்கள் நடை பெற்று வந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள். ஆனால் இடையில் இம்முறை எப்படி மாறிற்று என்பதுதான் அதிசயமாய் இருக்கின்றது. இப்போது நம் நாட்டில் நடைபெற்று வரும் மணங்கள் பெரிதும் மணத்தின் உண்மைத் தத்துவமற்றதும், அர்த்தமற்ற வெறும் சடங்கையே முக்கியமாக கொண்டதுமாய் நடைபெறுகின்றன.

மணமக்கள் தங்களுக்குள் செய்து கொண்ட ஒப்பந்தத்தை காப்பாற்றுதற்குப் பலர் முன் உறுதிப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட மண முறையானது தற்காலம் வெறும் சடங்குகளையும் அர்த்தமற்ற பழக்க வழக்கங்களையும் காப்பாற்றும் முறையாய்த் திகழ்கின்றது. மணத்தின் லட்சியம் முழுவதும் சடங்காய் ஏற்பட்டு விட்டது. இயற்கை எழுச்சியாலும் உணர்ச்சியாலும் ஏற்பட வேண்டிய மணம் செயற்கையில் நிகழ வேண்டியதாய் விட்டது.

அது போலவே, இயற்கைக் காதலும் இன்பமும்கூட செயற்கைக் காதலாகவும் இன்பமாகவும் மாறி விட்டது. மணமக்கள் ஒருவரை ஒருவர் தாங்களாகவே தெரிந்து எடுத்துக் கொள்ள வேண்டியதற்குப் பதிலாக வேறு ஒருவர் தெரிந்தெடுத்து மணமக்களை ஒப்புக் கொள்ளச் செய்ய வேண்டிய தாயிருக்கின்றது.

அநேக மணங்களில் மணம் நிகழும்வரை, அதாவது தாலியைப் பெண் கழுத்தில் கட்டும் வரை ஆண் இன்னார், இப்படிப்பட்டவர் என்று பெண்ணுக்கும், பெண் இன்னார், இப்படிப்பட்டவர் என்று ஆணுக்கும் தெரியாமலேயே இருக்கின்றது. சில மணங்களில் தாலி கட்டி சில நாள் வரை கூட தெரிவதற்கில்லாமல் இருக்கின்றது. ஒருவருக்கொருவர் முன்னைக் கூட்டியே தெரிய வேண்டாமா என்று யாராவது கேட்டால், “அன்று பிரமன் போட்ட முடிச்சை இனி அவிழ்த்து வேறு முடிச்சு போடவா போகிறான்” என்று சமாதானம் சொல்லி விடுகின்றார்கள்.

எங்கள் பக்கங்களில் கல்யாணப் பெண்கள் இரண்டு கைகளைக் கொண்டும் கண்களை நன்றாய் பொத்திக் கொண்டும் தேம்பித் தேம்பி அழுது கொண்டும் இருக்க, மற்றொரு பெண் கையைப் பிடித்து தரதரவென்று மணவறைக்கு இழுத்துக் கொண்டு வருவது வழக்கம். தாலி கட்டுவதற்குக் கூட கைகளைப் பிடித்து விலக்கித்தான் கட்ட வேண்டும். யார் தாலி கட்டினதென்று பெண்ணுக்கு தெரியவே தெரியாது.

இப்படி அழுது கொண்டும் கண்களை மூடிக் கொண்டும் இருக்கும் பெண்கள்தான் நல்ல உத்தமப் பெண்கள் என்று சொல்லுவார்கள். பெண்களுக்கு கல்யாணம் என்பது தன்னை மற்றொரு வீட்டிற்கு அடிமையாய் விற்பது என்பது அர்த்தமாயிருக்கின்றதேயொழிய ஆணும் பெண்ணும் கூடி வாழ்வதற்கு செய்யும் காரியம் என்பது இன்னமும் அநேக பெற்றோர்களுக்குத் தெரியவே தெரியாது.

கல்யாணச் சடங்கு நடந்து பெண்ணை மாப்பிள்ளை வீட்டிற்கு அனுப்பும் போது பெண் வீட்டாரும், நெருங்கின சுற்றத்தாரும் அழுது கொண்டும், பெண்ணும் தேம்பித் தேம்பி அழுது கொண்டும் தான் அனுப்பப்படுகின்றது, “கல் என்றாலும் கணவன், புல் என்றாலும் புருஷன்” என்று சொல்லி, புருஷன் சொன்னபடியும், மாமி, மாமன், நாத்தி, கொழுநன் சொன்னபடியும் நட என்று பெண்களுக்கு படிப்பிக்கப்படுகின்றது. இம்மாதிரி உபதேசத்தில் கட்டுப்பட்ட பெண்கள் தங்களை மாமியின் வேலைக்காரிகள் என்று எண்ணிக் கொள்ளுவார்களே தவிர இயற்கை இன்பத்தை எப்படி அனுபவிக்க முடியும் என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள்.

வாழ்க்கை, மணம், இன்பம், காதல் என்பவைகள் ஒவ்வொரு தனி மனிதனின் உரிமையாகும். அன்றியும் அவை அவரவரின் தனி இஷ்டத்தைப் பொறுத்ததுமாகும். இவற்றில் அன்னியருக்குச் சற்றும் இடமில்லை. ஆனால் இப்போது இவை மற்றவர்களுடைய திருப்திக்கும் இஷ்டத்திற்கும் ஏற்றபடி நடக்கின்றது. மணமக்களுக்கு தங்கள் தங்கள் காதலின் மேல் ஏற்படும் மணம்தான் வாழ்க்கையில் இன்பத்தைக் கொடுக்க முடியும்.

ஆதலால் இன்று நடந்த மணமானது உண்மையான சீர்திருத்த மணமாகும். இங்கு வந்திருக்கும் பெரியார்களையும் அன்பர்களையும் பார்க்கும்போது இம்மாதிரி மணத்திற்கு இதுசமயம் நாட்டில் உள்ள பேராதரவு நன்கு விளங்குகின்றது.

திரு.முருகப்பர் அவர்கள் நாட்டின் நிலையையும் தேவையையும் நன்கறிந்தவர். அவருடைய எழுத்தும் பேச்சுமே அவருடைய தெளிவைக் காட்ட போதுமானதாகும். சென்ற பத்து பதினைந்து வருஷங்களாக இவர் சீர்திருத்தத் துறையில் உழைத்து வருபவர். சீர்திருத்த முறையைச் சொல்லில் மாத்திரமல்லாமல் செயலிலும் காட்டி விட்டார். நாட்டுக்கோட்டை நகரத்தார்களில் திரு.முருகப்பர் - திரு.பிச்சப்பா சுப்பிரமணியம் முதலியவர்கள் மிகுதியும் உழைத்து வந்திருக்கின்றார்கள். இப்போது அந்த சமூகம் எல்லாத் துறையிலும் முன்போக்கடைந்து நாட்டுக்கு வழிகாட்டியாய் இருப்பதற்குப் பெரிதும் இவர்கள் போன்றவர்களே பொறுப்பாளிகளாவார்கள். பொதுவாகவே நாட்டில் சீர்திருத்தத்திற்கு அதிக ஆதரவு ஏற்பட்டு வருகின்றது. நாளுக்கு நாள் நிலைமை அனுகூலப்பட்டுக் கொண்டே வருகின்றது. சாதாரணமாக சென்ற வருஷத்தை விட இவ்வருஷம் எவ்வளவோ பெரிய மனமாறுதல் ஏற்பட்டு இருக்கின்றது.

சென்ற இரண்டு மாதத்திற்கு முன் நடந்த திரு.அருணகிரி திரு.சுந்தரி திருமணமும் இம்மன மாறுதலுக்கு உதாரணமாகும்.

திரு.மரகதவல்லி அம்மாளும் மிகவும் பாராட்டற்குரியவராவார். அவர்களைப் பட்டுக்கோட்டையில் சந்தித்த போது அவ்வம்மையார் தமது அபிப்பிராயத்தை சிலரிடம் தெரிவித்தார்கள். நாம் அதை அவர்களின் பெற்றோர்களுக்குத் தெரிவித்துக் கொள்ளும்படி சொல்லி விட்டோம். அதில் அவர்களுக்கு அனுகூலம் கிடைக்காததால் தாமாகவே முயற்சி எடுத்துக் கொண்டது மிகவும் பாராட்டத்தக்கதாகும். நம் நாட்டு விதவைத் தன்மையின் கொடுமையை நன்றாய் அனுபவித்தவர்களானதாலும், “குடி அரசு” முதலிய பத்திரிகைகளை பார்த்து வந்ததனாலும், அவர்கள் தைரியமாய் முன்வர நேர்ந்தது.

மற்றபடி உலகத்தில் எத்தனை பெண்கள் இம்மாதிரி கஷ்டப்பட்டுக் கொண்டு இருப்பார்கள் என்பதை நினைத்தால் மனம் பதறும். திரு.காந்தி அவர்களைச் சில “விதவைகள்” ஒன்று கூடி தங்கள் கஷ்டத்திற்கு வழி என்ன என்று கேட்டபோது, அவர்கள் “உங்கள் இஷ்டத்தை உங்கள் தாய் தகப்பன்மாரிடம் சொல்லிப் பார்த்து அவர்கள் அதற்கு ஏதாவது பரிகாரம் செய்யவில்லையானால் தைரியமாய் வெளிக்கிளம்பி உங்களுக்கு ஏற்ற மணாளனை நீங்களே தெரிந்தெடுத்துக் கொள்ளுங்கள்” என்று சொன்னார். அந்த உபதேசத்தை முறைப்படி திரு.மரகதவல்லியே முதன் முதலாய் நிறைவேற்றி இருக்கின்றார். அதாவது, திரு.மரகதவல்லிக்கு இது இரண்டாவது மணமாகும். முதல் மணக் கணவன் காலமாய் விட்டார். மறுமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு இன்று தமது இச்சையை நிறைவேற்றிக் கொண்டார். இதுதான் இயற்கைத் தத்துவம்.

எப்படி எனில், ஒரு புருஷன் தன் மனைவி இறந்து விட்டாலோ அல்லது அது தனக்கு சரிப்படாவிட்டாலோ உடனே மறுமணம் செய்து கொள்ள ஏற்பாடு செய்கிறான். மனைவி காயலாவாய் இருக்கும்போதே பிழைக்காது என்று தெரிந்தால் வேறு பெண்ணை மனதிலேயே தேடுகின்றான். மனைவி இறந்து போனவுடன் மறு கல்யாணத்திலேயே கவலையாய் இருக்கின்றான். பந்துக்களிடம் சென்று “அணைந்து போன விளக்கை மறுபடியும் ஏற்றி வைக்க வேண்டியது உங்கள் கடமை”, என்று சொல்லி பெண் கேட்கின்றான். வருஷத்திற்குள் மறு கல்யாணம் செய்து கொள்ளுகின்றான். அப்படியிருக்க, பெண்கள் மாத்திரம் ஏன் அந்த மாதிரி செய்து கொள்ளக் கூடாது? ஆகவே, திரு.மரகதவல்லி மற்ற பெண்களுக்கு ஒரு வழி காட்டியாக துணிந்து மணம் செய்து கொண்டதற்கு நான் மிகவும் போற்றுகின்றேன்.

மணமக்கள் இருவரும் நல்ல கல்வியும் அறிவும் உள்ள தக்க ஜதையானதால் இன்று இவ்வைபவத்தைக் கண்டு ஆனந்திக்க முடிந்தது. அன்றியும் இம்மண வைபவம் ஆடம்பரமின்றியும் வீண் சடங்குகளின்றியும் வெகு சிக்கனமாகவும் சுருக்கமாகவும் முடிவு பெற்றது மிகவும் போற்றத் தக்கதாகும். இம்மணமக்கள் இனியும் இவ்வித காரியங்களுக்கு வழிகாட்டியாய் இருந்து ஒத்த இன்பத்துடன் வாழ்ந்து உலகத்திற்கு நன்மை செய்ய வேண்டும் என்பதாக ஆசைப்படுகின்றேன்.

(குறிப்பு : 29.06.1929 ஆம் நாள் மதுரையை அடுத்த திருப்பரங்குன்றத்தில் திரு முருகப்பர் அவர்களுக்கும் திரு மரகதவல்லி அவர்களுக்கும் நடைபெற்ற திருமணத்தில் மணமக்களைப் பாராட்டி சொற்பொழிவு.

குடி அரசு - சொற்பொழிவு - 07.07.1929)

Pin It