(திரௌபதை வழிபாட்டை முன்வைத்து)

statue 450தமிழ் நிலப்பரப்பு முழுமையும் வாழும் மக்கள் பல சாதி, குலம், குடி, பங்காளிக்குழுக்கள், வகையறாக்கள், குடும்பங்கள் என தனித்தனியாகப் பிரிந்து கிடக்கின்றனர். ஒவ்வொருவருக்கும் என பழக்கவழக்கங்கள், தெய்வம், வழிபாடு, சடங்குகள், புழங்குபொருட்கள், வழக்காறுகள் என தனித்தனியான தனித்த பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டு விளங்குகின்றனர். இவ்வாறு பிரிந்துகிடக்கும் இவர்களை ஒன்றிணைக்கும் கூறாக மொழி விளங்குகிறது.

மொழியின் அடிப்படையில் தமிழ்ப் பண்பாடு ஒரு ஒற்றைப் பண்பாடு போல் தோற்ற மளிக்கிறது. என்றாலும் பல பண்பாட்டு அசைவுகளை தன்னுள் அடக்கியது தான் தமிழ்ப்பண்பாடாகும். கதைகள், புராணக்கதைகள், பாடல்கள், வழக்காறுகள், இன்ன பிற கூறுகள் போன்றவை மக்களுடைய வாழ்வியலில் பின்னிப்பிணைந்து இருப்பது போன்று மக்களின் வாழ்வியலில் தெய்வம், சடங்குகள், வழிபாடு போன்றவை நீக்கமற நிறைந்துள்ளன.

மக்களும் அவர்கள் வழிபடும் தெய்வமும் ஒன்றோடு ஒன்று பிணைக்கப் பட்டுள்ளன. இதனை தெய்வம் அவற்றுக்கு எடுக்கப் படும் விழாக்கள், மேற்கொள்ளப்படும் சடங்குகள் போன்றவற்றின் மூலம் அறிய முடிகிறது. தமிழகத்தின் வடமாவட்டங்களில் குறிப்பாக ஆற்காட்டுப்பகுதியான விழுப்புரம் மற்றும் புதுச்சேரிப் பகுதிகளில் நடைபெறும் திரௌபதை வழிபாடு அதனை ஒட்டிய பாரதக்கூத்து நிகழ்த்துதல், படுகளம் ஆகியவை குறித்ததாக இக்கட்டுரை அமைகிறது. 

திரௌபதை கோயில்

புதுச்சேரியிலிருந்து சென்னை செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ளது கூனிமேடு என்ற ஊர். இது தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தையும் மரக்காணம் ஒன்றியத்தையும் சார்ந்தது. கடற்கரையை ஒட்டி அமைந்திருக்கும் இவ்வூர் மீன் பிடித்தல், மற்றும் உழவுத் தொழில்களை முதன்மையாகக் கொண்டது. இங்கு திரௌபதைக்கு கோயில் அமைத்து வழிபாடு செய்து வருகின்றனர். இவ்வழிபாடு வெகு விமர்சையாக ஒரு குறிப்பிட்ட சாதியினரால் மட்டுமே  கொண்டாடப் பட்டு வருகிறது... வழிபாட்டில் பங்கேற்பாளர்கள் அதே சாதியைச் சார்ந்தவர்களாக இருக்கின்றனர். பார்வை யாளர்கள் மட்டுமே பல்வேறு சமூகத்தினராக இருக்கின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் மக்களால் விழா எடுக்கப் படுகின்றன. திரௌபதை கோயில் தொடர்பான பாரத விழாவின் ஒரு பகுதியாக நிகழ்த்தப்படும் பாரதக்கூத்து நிகழ்ச்சிகளின் சடங்கு சார்ந்த ஒன்று. இவ்விழா பங்குனி மாதத்திலிருந்து ஆவணி மாதம் வரை நடத்தப் படுகின்றது. இந் நிகழ்வை நடத்துவதற்கென்று பாரதப் பூசாரி ஒருவர் இருப்பார். இவருடைய வேளை பாரதத்தின் ஒரு பகுதியை ஒவ்வொரு நாளும் மக்களுக்கு பிரசங்கம் செய்வது ஆகும். திருவிழா நடக்கும் பத்து நாட்களும் வில்வளைப்பு, சுபத்திரை கல்யாணம், திரௌபதை வஸ்திராபரணம், துகில், அர்ச்சுனன் தபசு, கீசக சம்காரம், கிருஷ்ணன் தூது, கர்ண மோட்சம் என்னும் தலைப்புகளில் தெருக்கூத்து நிகழும். பகற் பொழுதுகளில் பகாசூரன் சண்டை, மாடுபிடி சண்டை, அர்ச்சுனன் தபசுமரம் ஏறல், அரவாண் களப்பலி, படுகளம் ஆகியவை சடங்கு சார்ந்த போலச்செய்தல்களாக நடைபெறும்.

அர்ச்சுனன் தபசு

சடங்குக்களத்தில் பாரதக்கதைப்படி அர்ச்சுனன் சிவனை நோக்கி தவமிருந்து வழிபட்டு பாசுபதம் பெறல் அப்போது சிவன், பார்வதி வேடர்கள் வேடத்தில் வந்து அர்ச்சுனனிடம் சண்டையிடல், இறுதியாக வரம் பெறல். இதனை ஒரு பெரிய நிகழ்வாக நடத்திக் காட்டுவர். தெருக்கூத்து நடைபெறும் இடத்தில் அன்று வெட்டப்பட்ட ஒரு பனைமரம் நடப்படும் அதில் எதிர் எதிர் பக்கமாக துளையிட்டு அதில் ஒரு சவுக்கு புல்லை சொருகியிருப்பர், பனைமரத்தின் உச்சியில் ஒரு பலகை கடப்பாரையால் அடிக்கப்பட்டிருக்கும் கடப்பாரை கூர்மையாக நீட்டிக்கொண்டிருக்கும்...

இரவு தெருக்கூத்து நடைபெறும். பாரதக்கதை நடிக்கப்படும் அன்று அதிகாலை அர்ச்சுனன் வேடமிட்ட கூத்தாடி நிறுத்தப்பட்டுள்ள பனைமரத்தண்டில் சொருகப் பட்டுள்ள கட்டையில் கால்வைத்து ஒவ்வொரு படியாக பாட்டு பாடிக்கொண்டு ஏறுவார். உச்சியில் அடிக்கப் பட்டுள்ள பலகையில் அமர்ந்து சிவனை நோக்கி தவமிருப்பார். அப்போது வேடன் உருவத்தில் வரும் சிவனிடம் மரத்தில் நின்று சண்டை புரிவார். பிறகு சிவன் அர்ச்சுனனின் தவத்தை உணர்ந்து பாசுபதம் கொடுப்பார். வரம் பெற்றவுடன் மரத்தின் உச்சியில் நின்று தேங்காய் உடைத்து தீபாராதனை செய்து நிறுத்தப் பட்டுள்ள கடப்பாரையை ஆட்டியபடி ஆனந்தக் கூத்தாடி பூசைப்பொருட்களான மலர், எலுமிச்சம் பழம், வில்வ இலை முதலியவற்றை எடுத்துக் கீழே வீச, கீழே விழும் அவற்றைப் பிரசாதமாகக் கருதிக் குழந்தை யில்லாத பெண்கள் தங்கள் முந்தானையை ஏந்திப் பிடித்துக்கொள்கின்றனர். இதன் மூலம் தங்களுக்குப் பிள்ளை பெறும் ஆற்றல் கிடைக்கும் என நம்புகின்றனர் (ராமசாமி, மு.2003). அர்ச்சுனன் தபசு முடிந்து படுகளம் ஆரம்பிக்கப்படுகிறது.

திரௌபதை கோயில் திருவிழாவில் பாரதம் நிகழ்த்துதல் முக்கிய நிகழ்வாகும். மேலும் படுகளம், அரவாண் களப்பலி, தீ மிதித்தல், அர்ச்சுனன் தபசு போன்றவையும் திருவிழாவின் முக்கியச் சடங்குகளாகும். திருவிழா சடங்கியல் நிகழ்வுகளில் பங்குபெறும் மாந்தர்கள் காப்புக் கட்டிக்கொண்டு நோன்பு நோற் கின்றனர். படுகளச்சடங்கில் முதன்மையான இடம் வகிக்கும் சடங்கியல் மாந்தர்கள் படுகளம் மட்டு மல்லாது, பிற வழிபாட்டு நடத்தைகளிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். படுகளம் என்பது போர்க் களத்தையும், போர்க்களத்தில் இறந்துபட்டவரையும் உள்ளடக்கும் சொல்லாகக் குறிக்கப்பெறுகிறது. குல தெய்வ வழிபாட்டில் அத்தெய்வ இறப்பு நிகழ்வினை ஒரு நாடக வடிவில் நிகழ்த்திக்காட்டுவர். கொங்கு நாட்டிலுள்ள அண்ணன்மார் கோயில் வழிபாட்டிலும் படுகள நிகழ்வு நடத்தப்படுகிறது என்பது கருத்தில் கொள்ளப்படவேண்டிய ஒன்றாகும். மக்கள் விளையாட்டு களில் சில முன்னைய நிகழ்வுகள் உள்ளடங்கியிருத்தல் போல் படுகளம் என்பது முன்னைய நிகழ்வுகளை உள்ளடக்கியது. மேலும் தெய்வ விழாக்களில் வழிபடும் தெய்வம் எவ்வாறு தெய்வமாக்கப்பட்டது என்கிற வரலாற்றை அறிந்து கொள்வதற்கு இப்படுகள நிகழ்வு ஆதாரமாக அமைகிறது (தி.நடராசன்.2002).

படுகள நிகழ்வில் பங்குபெறும் சடங்கியல் மாந்தர்கள் காப்புக்கட்டிக்கொண்டு திருவிழா முடியும் வரை விரதமிருக்கின்றனர். திருவிழாவின் அனைத்துச் சடங்குகளையும் காப்புக்கட்டிகளான இச்சடங்கியல் மாந்தர்களே நிகழ்த்துகின்றனர். திரௌபதியம்மன் கோயில் திருவிழாவில் பாரத கதைப்படிச் சடங்குகள் நடத்தப்பெறுவதனால் சடங்கியலில் பங்குபெறும் மாந்தர்கள் (பூசாரியை விடுத்து) தருமன், நகுலன், சகாதேவன், அர்ச்சுனன், பீமன் எனப் பெயரிட்டுக் கொள்கின்றனர். கதைப்படி இவர்களுக்கு எதிரியான துரியோதனனாக அடையாளப்படுத்திக் கொள்பவர் படுகளச்சடங்கு நடைபெறும் அன்று மட்டுமே திருவிழாச்சடங்கில் பங்கேற்கிறார். இவர்கள் அனைவரும் பரம்பரையாகச் சடங்கில் ஈடுபடுகின்றனர்.

அரவாண் களப்பலி நிகழும் அன்று முற்பகல் 11 மணியளவில் சடங்குகள் தொடங்குகின்றன. பாரதப் பூசாரி பாரதத்தைப் படிக்கிறார். கோயில் பூசாரி கோயிலில் அலங்கரிக்கப்பட்டுள்ள சாமி சிலைகளின் முன் தேங்காய் உடைத்துச் சூடம் ஏற்றுகிறார். பின்னர் கோயிலில் உள்ள அரவாண் சிலையைத் (தலை) துணி போட்டு மூடிப் படுகளம் நிகழும் இடத்திற்குக் கொண்டு செல்கின்றனர். அவ்விடத்தில் ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பனைமரத்தண்டில் தெற்குத்திசையை நோக்கித் தலையைப் பொருத்துகின்றனர். பின்னர் கோயிலுக்கு வந்து ஒரு புது மண் தோண்டியில் மூன்று பொத்தல் (ஓட்டை) இட்டு அதன் மேல் குச்சிகளைக் கட்டி, பூச்சுற்றி, மஞ்சள் குங்குமம் இட்டு, தோண்டியினுள் சாணி உருண்டை வைத்துக் கோயில் கருவறையில் இருக்கும் விளக்கிலிருந்து தீபம் ஏற்றி அதனுள் வைக்கின்றனர்.      

பின்னர் பூசாரிக்குப் புதுத்துணி (வெள்ளை வேட்டி) கட்டி உடலின் இரண்டு புறமும் மாலை போடுகின்றனர். ஏற்கனவே அலங்கரிக்கப்பட்ட மண் தோண்டியினை கையில் எடுத்துக்கொண்டு செல்ல அவருடன் காப்புக் கட்டியவர்களும் செல்கின்றனர். கோயில், தபசு மரம் மற்றும் எல்லையைச் சுற்றி வந்து படுகளத்தின் எதிரே வைக்கப்பட்டுள்ள அரவாண் சிலைக்கு முன் மண் தோண்டியை வைக்கிறார். மேலும் கருப்புக்கிடாய்(ஆடு), இலை, வெல்லம், சோறு, புதிய மண்சட்டி, கத்தி, சாட்டை போன்றவற்றையும்  இவற்றுடன் கொண்டுவருகின்றனர். படுகளத்தின் எதிரே வைக்கப்பட்டுள்ள அரவாண் தலைக்கு முன்னர் ஆட்டின் கழுத்தை அறுத்து குருதியை சட்டியில் பிடித்துக்கொள் கின்றனர். அதில் சோற்றைப் போட்டுப் புரட்டிக் கொண்டு அரவாண் தலை முன் பூசாரி நிற்கிறார். அரவாண் சிலையை மூடிய துணி விலக்கியதும் ஹோ ஹோ என்ற ஒலியுடன் பூசாரி உதிரச்சோற்றை வாரி அரவான் முகத்தில் அடிக்கிறார், பின்னர் அரவாண் சிலையைச் சுற்றிவந்து தெற்குத்திசையில் ஓடுகிறார். தபசு மரத்தைச் சுற்றியும் எல்லை கட்டிய இடங்களிலும் உதிரச்சோற்றை இறைக்கிறார். பின்னர் அரவாண் தலைக்கு முன் சட்டியைப் போட்டு உடைக்கிறார்.  பூசாரி மருள் விலகிய நிலையில் கீழே விழுகிறார். அவருக்கு நெற்றியில் வீரகந்தகம் பூசி பானகம் கொடுக்கின்றனர்.

படுகளம்

படுகள நிகழ்வில் ஈடுபடும் சடங்கியல் மாந்தர்கள் காப்புக்கட்டியது முதல் விழா முடியும் வரை இரவு 9 மற்றும் 12 மணியளவில் சாட்டை, கத்தி போன்ற வற்றுடன் சாமி சிலைகளை தூக்கிக்கொண்டு வேட்டைக்குச் செல்கின்றனர். எல்லைகளைச் சுற்றி வந்து கோயிலின் பின்புறமாக மண்டியிட்டுக் கையை உயர்த்திக்கொண்டு நிற்க, பூசாரி ஹோ ஹோ என்ற ஒலியுடன் சாட்டையால் மூன்று முறை கையில் அடிக்கிறார். சாட்டையால் அடிப்பது அவர்கள் மீது ஏறியுள்ள ஆற்றலை நீக்குதல்/விடுவித்தல் என்கிற நிலையில் அமைவதாகும். இதனை மீனவர்களிடையே நிகழும் கன்னிமார் வழிபாட்டில் காணமுடிகிறது (ஆ.தனஞ்செயன்.1999:105-114). இச்சடங்கியல் மாந்தர்கள் கோயிலில் கரகம் சுமப்பவர்களாகவும், முதலில் தீக்குழி(குண்டம்) இறங்குபவர்களாகவும் இருக்கின்றனர்.

படுகளம் அமைக்கப்படும் இடம் ஊருக்கு ஒதுக்குப் புறமானது. கோயிலின் அருகில் அமைகிறது. அரவாண் களப்பலிச் சடங்கு நடைபெறும் நாள் அன்றுதான் இக்களம் அமைக்கப்படுகின்றது. அன்றைய தினம் வெட்டிய புளியமரத்தின் சிறிய கிளை(மிளார்)களால், சதுர வடிவிலான 15/15, 10/10 இடத்தினுள் வேலி அமைக்கப்படுகிறது. வடக்குப்புறமாக வாயிற்படி அமைக்கின்றனர். சதுர வடிவ இடத்தினுள் படுத்த நிலையில் அரவாண் சிலை(சுதை) மண்ணால் அமைக்கப் படுகின்றன. அந்தச் சிலையின் நான்கு புறங்களிலும் சிறிய பள்ளம்(குழி) அமைத்து அதனுள் வைக்கோல் போட்டு, அதன் மேல் தண்ணீரில் நனைக்கப்பட்ட வெள்ளை வேட்டியை விரித்து வைத்திருக்கின்றனர். துரியோதனன் படுகளக்காரர் தனது உடலை வைக்கோல் பிரியால் சுற்றி கையில் உலக்கையுடன் வாயிற்படியில் நிற்கிறார். மேலும் மற்ற காப்புக்கட்டிகளை வேட்டியின் மீது பூசாரி படுக்கவைக்கிறார்.

புளிய மிளாரால் அமைக்கப்பட்டுள்ள இடத்திற்கு வெளியில் வாயிற்படி ஓரமாக, ஒரு பலகையில் (பெஞ்சில்) கிழக்குமுகமாகத் தலைவைத்து ஒருவர் குண்டுக்கட்டாக படுத்திருக்கிறார். இவர்கள் ஐவரின் மீதும் ஈர வெள்ளை வேட்டி போர்த்தப் படுகிறது. அரவாண் தலைமுன் அறுக்கப்பட்ட ஆட்டின் குடலை எடுத்துப் படுகளத்தில் படுத்திருக்கும் காப்புக் கட்டிகள் மீது போடுகின்றனர். மண்ணால் செய்யப் பட்டுள்ள அரவாண் சிலைமீதும் வேட்டியைப் போர்த்து கின்றனர். படுத்திருக்கும் சடங்கியல் மாந்தர்களின் கால் விரல்கள் மட்டும் வெளியே தெரிகின்றன. அவர் களுடைய கால்மாட்டில் அவருடைய மகன் அல்லது உறவுடைய ஒருவர் உட்கார்ந்துகொண்டு புளிய மிளாரால் இடைவெளி விட்டு விட்டுக் காலில் தட்டிக்கொண்டிருப்பார். அவர்கள் கால் விரல்களை அசைக்கவில்லையானால் இறந்து விடுவர் என்ற நம்பிக்கை மக்களிடம் நிலவுகிறது. சடங்கு நிறைவுக்கு வரும் நிலையில் படுகளத்தில் படுத்திருக்கும் மாந்தர் களை ஒவ்வொருவராக எழுப்பி வடக்கு நோக்கி முட்டிக்கால் போட்டு இருக்கச்செய்து கையை உயரே நீட்டச் சொல்லி ஹோ ஹோ என்ற ஒலியுடன் மூன்று முறை சாட்டையால் பூசாரி அடிக்கிறார்.

பின்னர் அவர்களின் நெற்றியில் வீரகந்தகம் பூசப்பட்டுப் பானகம் கொடுத்து சடங்கில் இருந்து விலக்கப்படுகின்றனர். களத்திற்கு வெளியே பலகையில் படுத்திருக்கும் மாந்தரை(வீமன்) எழுப்பியதும் மருள்வந்து கத்தியை எடுத்துக்கொண்டு அரவாண் (மண்ணால் செய்யப்பட்ட சுடாத மணல் சிற்பம்) சிலையின் தொடைப் பகுதியையும், வயிற்றுப் பகுதியையும் குத்துகிறார், வெட்டுகிறார். அந்த இடத்தில் இரத்தம் (சிவப்பு நீர்) ஊற்றப்படுகிறது. அவர் ஆவேசமுற்று ஆட அவரைத் தூக்கிக்கொண்டு கோயிலுக்குச் செல்கின்றனர். அங்குப் பானகம் கொடுக்கப்பட்டு, குளிக்கச் செய்து நெற்றியில் வீரகந்தகம் பூசப்படுகிறது. பின்னர் திருநங்கைகள் (அ) திருநங்கை வேடம் புனைந்த கூத்தாடிகள் அரவாண் மணற் சிற்பத்தின் அருகே அமர்ந்து மாரடித்து அழுகின்றனர். இவ்வாறாக அரவாண் களப்பலிச் சடங்குகள் தொடர் நிகழ்த்துதல்களாக திரௌபதியம்மன் வழிபாட்டில் நடைபெறுகின்றன.

இதன் பின்னர் தீ மிதித்தல் சடங்கு நடைபெறுகிறது. அன்று அல்லது அதற்கு முந்தைய நாள் வெட்டப்பட்ட புதிய மரக்கிளைகளைக் கொண்டு தீ மூட்டப்படுகிறது. மலை நேரத்தில் பூசாரி தலையில் கரகம் ஏற்றப்படுகிறது. அவர் இறங்குவதற்கு முன் ஒரு பூப்பந்து நெருப்பில் உருட்டப்படுகிறது அதன் பின்னர் பூசாரி நெருப்பில் இறங்குகிறார். அவர் கோயிலுக்கு போய் கரகத்தை இறக்கிவைக்கிறார். அதன் பின்னரே அனைவரும் தீ மிதிக்கின்றனர் இவ்வாறாக திரௌபதை திருவிழா நடைபெறுகிறது.

நினைவு தெரிந்த நாள் முதல் மகாபாரதக் கதையானது காட்சி ஊடகங்கள் வாயிலாக ஒளிபரப்பப் படுகின்றன. இன்றைய நிலையிலும் சின்னத்திரைகளில் அதே பாரதக்கதை புதிய வடிவத்தில், புதிய புதிய நடிகர்கள், பளிச்சிடும் வண்ணங்களில், நவீனத்தொழில் நுட்பத்துடன் ஒளிபரப்பப்படுகிறது. இவ்வாறு ஒளி பரப்பப்படுதல் என்பது இன்றோடு நின்றுவிடுமா என்றால் நிற்காது நாளை, நாளை மறுநாள், அடுத்த நாள் எனத் தொடர்ந்துகொண்டேயிருக்கும். மக்களும் அதனை ரசித்துப் பார்த்துக் கொண்டுதான் இருப்பார்கள். இது ஒருபுறம் இருக்க இதே வேளையில் திரௌபதை வழிபாடு நடக்கும் பத்து நாட்களும் பாரதக் கதை ஒரு பூசாரியால் படிக்கப்படுகிறது, தெருக்கூத்துக் கலைஞர் களால் பத்து நாட்களும் நடித்துக் காண்பிக்கப்படுகிறது. காப்புக்கட்டிக்கொண்டு விரதமிருக்கும் சடங்கியல் மாந்தர்களாலும் தொடர்ந்து பாரதக்கதை நினைவூட்டப் படுகிறது. இது அந்த வருடம் மட்டுமல்ல தொடர்ந்து நடைபெறும் மக்கள் சலிப்படையாமல் ரசித்துக் கொண்டேயிருப்பார்கள்.

மகாபாரதக் கதையும், திரௌபதை வழிபாடும் தமிழ் மண்ணுக்கும் தமிழ் சமூகத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லாதது மகாபாரதக்கதையினைப் பொறுத்தவரை பல்வேறு தேசிய இனங்கள் வாழும் இந்திய ஒன்றியம் முழுவதையும் ஒன்றாக்கிக்கொள்வது. இதன் மூலம் இந்திய ஒன்றியம் முழுமையும் ஒருங்கமைக்கப் பட்ட ஒரு ஒற்றைப் பண்பாட்டைக் கொண்டது என்ற மாயையை கட்டமைக்கும் முயற்சியாக இது அமைகிறது. இம்மண்ணிற்கும், மக்களுக்கும், அவர் களுடைய வழக்காறுகளுக்கும் சற்றும் துளி அளவும் தொடர்பில்லாத, பொருந்தாத இந்தக்கதை அதனை ஒட்டிய வழிபாடு சடங்கு முறைகள் இந்த மண்ணின் மக்கள் மீது வலிந்து புகுத்தப்பட்டுள்ளன. அத்தகைய உட்புகுத்தல்கள் அவர்களது வாழ்வியலில் பிரதி பலிப்பதைக் காண முடிகிறது. திரௌபதை வழிபாடு ஒரு குறிப்பிட்ட சமூக மக்களால் கொண்டாடப் படுகிறது. இது குலதெய்வ வழிபாடாகக் கொள்ளப் படவில்லை என்றபோதிலும் இக்கதையினை தங்கள் சமூகத்தின் தோற்றம் குறித்த கதையாகக் கொள்வதற்கும் இடமுண்டு. இவ்வழிபாடு தொடர்ந்து பரவலாக்கப் படும் போது வழிபாட்டைச் சார்ந்திருக்கும் சமூகம் மிகப்பெரிய சிக்கலை எதிர்கொள்ள நேரிடும் இவ் வழிபாடானது தமிழ் சமூகத்தின் பண்பாட்டின் மீது தாக்குதல்களைத் தொடுப்பதாக அமைகிறது.

தமிழர்களுக்கும், இந்த மண்ணுக்கும் எவ்விதத் தொடர்பில்லாத பாரதக்கதையையும், திரௌபதை வழிபாட்டையும் எவ்வித விசாரணையும் இன்றி ஏன் என்று கேட்காமல் இந்த மண்ணினுடைய மக்கள் வணங்கி வருவதும், சடங்குகளில் பங்குபெறுவதும் தங்களின் பண்பாட்டுக் கூறாக அவற்றை உள்வாங்கிக் கொள்வதும் இவ்வழிபாட்டில் நிகழ்கிறது. இதன் மீதான விவாதங்களும் விரிவான ஆய்வுகளும் தேவைப் படுகின்றது. திரௌபதை வழிபாட்டின் மூலம் ஒரு பெரிய புனைவுகள் வழியே வரலாற்றைக் கட்டமைக்க முயலும் அதே வேளையில் மக்களை அதில் பங்கேற்க வைத்தல், பாத்திரங்களாக மாற்றுதல் என்பதன் மூலமாக நாட்டுப்புற மக்களிடம் ஆழ்மனதில் ஒரு புதிய வரலாற்றைப் புனைவதற்கு இவ்வழிபாட்டை ஒரு கருவியாக மாற்றும் முயற்சியாகக் காண முடிகிறது.