பண்டைய சேரர்களின் துறைமுக நகரான முசிறியில், கடந்த பத்தாண்டுகளாக அகழாய்வு செய்து ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட பொருள்களை வெளிக்கொண்டு வந்த பாமா என்ற நிறுவனத்தின் தொல்லியல் கல்வி நிறுவன இயக்குநர் பி.ஜெ. செரியன் (P.J.CHERIAN) இந்த அகழாய்வு குறித்து வெளிப்படுத்தும் விடயங்கள் மிக முக்கியமானவை. இன்று கேரளாவில் உள்ள பட்டணம் என்ற இடத்தில் இந்த அகழாய்வு நடத்தப்பட்டுள்ளது. இப்பகுதி பண்டைய சேரர் துறைமுக நகரான முசிறியின் ஒரு பகுதியாக இருந்துள்ளது. இந்நகரம் கிரேக்க இலத்தீன் இலக்கியங்களில் முசிறிசு என அழைக்கப்பட்டுள்ளது. அங்கு கண்டெடுக்கப்பட்ட ஒரு இலட்சம் பொருட்களில் ஒன்று கூட மதச்சார்பானதாக இல்லை எனவும், இந்நகரம் அன்று கிழக்கே சீனா முதல் மேற்கே உரோம் வரை வணிகம் செய்து வந்துள்ளது எனவும், தமிழகத்தில் கி.மு. 1000 வாக்கிலேயே நகர் மையங்கள் உருவாகத் துவங்கிவிட்டன எனவும் செரியன் கூறுகிறார்.
கிரேக்க இலத்தீன் இலக்கியங்களை நன்கு அறிந்த அமெரிக்க ஐரோப்பிய அறிஞர்கள், அன்று இந்த முசிறி நகரானது, இன்றைய நியூயார்க், இலண்டன், சாங்காய் போன்ற புகழ்பெற்ற பெரும்துறைமுக நகரங்களுக்கு இணையாக இருந்ததாகக் குறிப்பிடுகின்றனர் எனக் கூறுகிறார். உலகின் இன்றைய பெரும் துறைமுக நகரங்கள் இவை. அன்று முசிறி இன்றைய உலகின் பெருந்துறைமுக நகரங்களுக்கு இணையான நகராக இருந்துள்ளது. மேலும் இந்த முசிறி நகர் தென் சீனத்திலிருந்து, ஐரோப்பாவின் ஜிப்ரால்டர் சலசந்தி வரை, மத்தியதரைக்கடல், செங்கடல், இந்தியப்பெருங்கடல் ஆகியவற்றில் உள்ள 40 துறைமுக நகரங்களோடும், 30 வேறுபட்ட பண்பாடுகளோடும் நேரடித் தொடர்பில் இருந்ததற்கான உறுதியான சான்றுகள் கிடைத்துள்ளன எனவும், இவை வாசுகோடகமா இந்தியா வருவதற்கு 1500 ஆண்டுகளுக்கு முன் நடந்தவை எனவும் செரியன் கூறுகிறார். பூம்புகார், கொற்கை போன்றவை முசிறியைவிடப்பெரிய நகரங்கள். பெரிப்ளசு என்ற எகிப்திய பயணி கி.பி. முதல் நூற்றாண்டில் இந்தியாவின் கங்கைவரை சென்று திரும்பியவர். அவர் மேற்கு நாடுகளிலிருந்து தமிழகத்துக்கு வந்த கப்பல்களை விட, மிகப்பெரிய அளவிலும் மிக அதிக எண்ணிக்கையிலுமான கப்பல்கள் கிழக்கு நாடுகளுக்கு தமிழகத்திலிருந்து சென்று வந்தன என்கிறார். மேற்கே முசிறி இருந்தது என்றால் கிழக்கே அதைவிடப் பெரிதான பூம்புகார் இருந்துள்ளது. இவ்விரண்டுக்கும் இடையே கொற்கை இருந்துள்ளது. ஆகவே அன்றைய தமிழகம், உலகின் மிகப்பெரிய உற்பத்தி மையமாக, உலகளாவிய அளவிலான வணிக மையமாக இயங்கி வந்துள்ளது எனலாம்.
2006 முதல் 2016 வரை பத்துதடவை முசிறியில் அகழாய்வு செய்யப்பட்டது எனவும் 10 வருடங்களாக இதுவரை ஒரு விழுக்காட்டு அளவு பரப்புக்கே அகழாய்வு நடந்துள்ளது எனவும் இந்தியப்பல்கலைக்கழகங்கள் மட்டுமின்றி ஆக்சுபோர்டு, உரோம் போன்ற உலகின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களோடு இணைந்து இவ்வாய்வு நடைபெற்றது எனவும், இங்கு கீழடியில் கிடைத்தது போலவே செங்கல் அமைப்புடன் கூடிய கட்டடங்கள், கூரை ஓடுகள், செம்பு, தந்தம் போன்றவற்றால் செய்யப்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன எனவும் முசிறியின் அகழாய்வு காலம் கி.மு. 500 முதல் 300 வரை எனவும் செரியன் கூறுகிறார். மேலும் அவர் 2000 ஆண்டுகளுக்கு முன் தனித்த பண்பாட்டோடு தமிழ்மக்கள் வாழ்ந்துள்ளனர் எனவும், அன்று பெண்களுக்கு பெரும் சமூகப் பொறுப்புகள் அளிக்கப்பட்டிருந்தன எனவும், புத்தமதப் பரவலுக்கு முன் தமிழர்கள் வளமாக வாழ்ந்து வந்துள்ளனர் எனவும், அமலன் என்ற பிராமி எழுத்துப்பொறிப்பு தவிர மதம் சமயம் சார்ந்த அடையாளம் எதுவும் அங்கு காணப்படவில்லை எனவும்(அமலன் என்பது சமயச்சொல் அல்ல. அது ஒரு பெயர்ச்சொல். கொடுமணலில் கி.மு. 6ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த பல வட இந்திய வணிகர்களின் பெயர் பொறித்த தமிழி எழுத்துப்பொறிப்புகள் கிடைத்துள்ளன), மிகவும் நாகரிகமான மக்கள் வாழ்ந்ததற்கு அடையாளமாக கழிப்பறைகள் கட்டப்பட்டு, பூமியின் மேற்பரப்பிற்கு கெடுதல் ஏற்படாத வகையில் கழிவுகளை வெளியேற்றி உள்ளனர் எனவும் கூறுகிறார். பண்டைய தமிழகம் என்பது ஆந்திரா, கர்நாடகா ஆகியவைகளின் தென்பகுதியையும், தற்போதைய தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய பகுதிகளையும் கொண்டதாக இருந்துள்ளது எனவும் ஆனால் மற்ற மாநிலங்களில் தங்களின் முன்னோர்கள் குறித்தும், வரலாறு குறித்துமான புரிதல் இல்லை எனவும் அவர் கூறுகிறார். (1.தின மலர் நாளிதழ், நாள்: 4-11-2018 & 2.எம்.டி. சஜு(M.T. SAJU) என்பவர் செரியன் அவர்களிடம் எடுத்த பேட்டி).
முசிறியில் கிடைத்த ஒரு இலட்சம் பொருட்களில் மதம் சமயம் சார்ந்த பொருள் எதுவும் கிடைக்கவில்லை. கீழடியில் கிடைத்த பல ஆயிரம் பொருட்களிலும் மதம் சமயம் சார்ந்த பொருள் எதுவும் இல்லை. இவை எதைக் காட்டுகின்றன? முதலும், முடிவுமற்ற இப்பேரண்டம் என்றென்றும் இருந்து கொண்டிருக்கிறது என்பதால் படைத்தவன் ஒருவன் தேவையில்லை என்கிறார் எண்ணிய மூலவரும், தமிழ் அறிவு மரபின் தந்தையுமான தொல்கபிலர். பழந்தமிழ்ச் சமூகத்தின் அடிப்படையாக இந்தத் தொல்கபிலர், கணாதர் போன்றவர்களின் பொருள்முதல்வாத மெய்யியல் சிந்தனைகள் தான் இருந்தன என்பதை, ‘மூலச்சிறப்புள்ள தமிழ்ச்சிந்தனை மரபு’ என்ற எனது நூல் நிறுவியுள்ளது. இவைகளைத்தான் முசிறி, கீழடி அகழாய்வு முடிவுகள் உறுதி செய்கின்றன. தமிழகத்தில் கி.மு. 1000க்கு முன்பிருந்தே நகர, நகர் மைய அரசுகள் இருந்தன என்பதையும், அவை தங்களது உயர் தொழில்நுட்ப மேன்மை காரணமாக கி.மு. 8ஆம் நூற்றாண்டில் இருந்தே உலகளாவிய அளவில் வணிகம் புரிந்து வந்துள்ளன என்பதையும் எனது ‘பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும்’ என்ற நூல் உறுதிசெய்துள்ளது. இவைகளையும் முசிறி, கீழடி அகழாய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
எனது நூல்கள்: 1. மூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு, கணியன்பாலன், தமிழினிபதிப்பகம், சூலை-2018, சென்னை(கைபேசி:8667255103).
- பழந்தமிழக வரலாறு, கணியன்பாலன், தமிழினிபதிப்பகம் சூலை-2018. சென்னை(கைபேசி:8667255103),
- பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர்வெளியீடு பதிப்பகம், சூன்–2016, பொள்ளாச்சி.
Note: PAMA – Institute for the advancement of Transdisciplinary Archaeological sciences
- கணியன் பாலன், ஈரோடு