சமுதாயத்தில் ஒடுக்கப்ட்ட அடித்தள மக்கள் வாழ்வியல் தொடர்பான பல ஆவணங்கள் கிடைத்துள்ளன. அவை கல்வெட்டு, செப்பேடு, ஓலைச்சுவடிகளிலும் சில காகிதங்களிலும் எழுதப்பட்டுள்ளன.

வறுமை காரணமாகப் பெற்ற குழந்தைகளை விற்றுள்ளனர். திருமணத்திற்குக் கடன் வாங்கி மணமக்கள் பெற்றோருடன் அடிமையாகி உள்ளனர். பலர் தங்களுக்குச் சொந்தமான அடிமைகளைப் பிறருக்கு விற்றுள்ளனர். அடிமை விற்பனையில் பெண்களும் சிலர் ஈடுபட்டுள்ளனர். ஆண்களும் பெண்களும் குடும்பத்துடன் பொது இடத்துக்கு வந்து "எங்களை விலை கொள்வார் உண்டோ’ என்று விலைகூறி விற்றுக் கொண்டுள்ளனர். கோவில் மடங்கட்குச் சிலர் அடிமைகளைத் தானம் செய்துள்ளனர். விலைக்கு விற்றுள்ளனர். சிலர் வாழ வழியின்றி தாங்களாகவே கோவிலில் அடிமையாகியுள்ளனர். செல்வந்தர்கள் தம் வாரிசுகட்குச் சொத்துகளைக் கொடுக்கும்போது சில அடிமைகளையும் கொடுத்துள்ளனர். இதைவிடக் கொடுமை சிலர் "தீண்டா அடிமைகள்" என்று கூறப்படுவதுதான். ஆவணங்களில் பலர் சாட்சிக் கையொப்பம் இட்டுள்ளனர். எழுதியவர் பெயரும் உள்ளது.

வகைக்கு ஓரிரு ஆவணங்கள் காட்டப்பட்டுள்ளது. ஆவணம் மிக நீண்ட வடிவில் இருப்பதால் அவற்றின் மையக் கருத்துள்ள பகுதி மட்டும் தரப்பட்டுள்ளது. டாக்டர் ஆ.சிவசுப்ரமணியம், அ.கா.பெருமாள் போன்றவர்கள் சில ஆவணங்களைத் தொகுத்துள்ளனர். இக்கட்டுரையாளரின் 51 ஆவணத்தொகுப்புடன் “தமிழ் நாட்டில் அடிமை முறையும் ஆள் விற்பனையும்" என்னும் நூல் விரைவில் வர உள்ளது. (ஆதிவனம் பதிப்பகம் - 90806 51304) ஆவணம் எழுதப்படாமல் பல நிகழ்வுகள் நடந்திருக்கலாம்.dalit people 702தாது வருடப் பஞ்சக் கும்மிகளில் "கணவனைப் பறிக்கொடுத்துக் கை குழந்தை விற்ற பஞ்சம்", "பெண்டு பிள்ளைகளை விற்பாரும்" என்ற தொடர்கள் உள்ளன. அவற்றை ஆவணம் மெய்பிக்கிறது.

5 வயது பெண்குழந்தை விலை 2 புதுச்சேரி ரூபாய்

1781 ஆம் ஆண்டு நவம்பர் 25க்கு செல்லும் பிலபவ வருஷம் கார்த்திகை 12 புதுவை மாநகரம் ஊர் சவுத்ரி நயினார் அவர்கள் முன்பாக மரியம்மாளுக்கு கூனிமேடு பள்ளி பொன்னன் பெண்ஜாதி தயிலம்மை கிரைய சாதனமுறி குடுத்தபடி என் பெண் பேர் கவுதித்தாள் வயது 5 ஜாதி பள்ளச்சி சேர்ந்தவள் இவளை கொள்வாருளரோ கொள்வாருளரோ வென்று கூறுகையில் மரியம்மாள் நானே கொள்வேன் என்று பின் கூறுகையில் யிம்பி நான் இசைந்து தம்மால் பொருந்தி எதிர் மொழி மொழிந்ததினாலும் மத்திஸ்தர் முன்பாக நிச்ச­யித்த றாசி புதுசேரி ரூ. 2 இந்த ரூபாய் இரண்டுக்கு விலையறி­வித்துப் பொருள்பத்திக் கொண்டேன்.

குழந்தை கேசவன் விலை 4 ரூபாய்

பிள்ளை கிரைய சாசனம்

செய வருஷம் ஆனி மாதம் 21தேதி 1534 திருமுல்லை வாசலிருக்கும் ஸ்ரீ கிஷ்ணப்பிள்ளை அவர்களுக்கு மேற்படி யூரிலிருக்கும் சென்னப்பட்டணம் பாவாடை முதலி மேற்படி பெண்ஷ்சாதி னாகு னாங்களிருவரும் யெழுதிக் கொடுத்த பிள்ளைக்கிறைய சாதனம் யென்னமென்றால் யெங்களுதாகிய ஆண்பிள்ளை கேசவனை தங்களிடத்தில் யென்னென்னைக்கும் பிள்ளைக்குப் பிள்ளையாய் தாங்கள் வளத்து வச்சுக் கொள்ளும்படியாய் தங்களிடத்தில் யெங்கள் பிள்ளையை கொடுத்துவிட்டு அதுக்காக கிறயம் வாங்கிக் கொண்டது. ரூபா 4 யிந்த ரூபா னாலும் னாங்கள் றொக்கமாய் மேற்படி விட்டங்கறனூறு கிஷ்ணபிள்ளை முன்னிலைக்கு வாங்கிக் கொண்ட படியால் மேற்படி கேசவ கிஷ்ணன் யெங்குற பிள்ளையை தாங்கள் யெண்ணெண்ணைக்கும் பிள்ளைக்குப் பிள்ளைய்யா வச்சு ஆண்டனுபவிச்சுக் கொள்வீர்களாகவும்.

பெற்ற பிள்ளைகளும் அடிமை

வேதாரண்யம் கல்வெட்டு

1.            இந்த நாயனார் திருமடம் உடைய நாயனார் அடிமை நங்கைச்சி பெற்ற பிள்ளைகளும் உடையாள் பெற்ற பிள்ளைக்கும் தேவாண்டாள் பெற்ற

2.            பிள்ளைகளும் வம்பாண்டாள் பெற்ற பிள்ளைகளும் பெருமாள் பெற்ற பிள்ளைகளும்

3.            அடிமை

பிறக்கும் குழந்தையும் அடிமை

ஐயங்கொண்ட சோழவளநாட்டு திருவழுந்தூர் நாட்டுப் பிரமதேயம் உடையார் திருமடமுடைய

நாயனார்க்கு இந்நாயனார் அடியாரில் சிற்றாமருடையான் பொன்னன் நாயகப் பிச்சனேன்

என் மகள் இந்நாயனார் அடியாரில் பாம்புரமுடையான் பெரு ஞானமுடையான் பாரியை பொன்னன்

உலகுடையாளையும் இவள் மகள் பெருஞானமுடையாளையும் என் மகன் சொக்காண்டாரையும்

இவர்கள் வயிற்றில் பிறக்கும் பிள்ளைகளையும் அடிமை

கடன் வாங்கிக் கல்யாணம் மனைவி, தாயாருடன் அடிமை

விசைய வருஷம் சித்திரை மாதம் 30 (1833) நீலப்பாடியிலிருக்கும் அழகப்ப பிள்ளைக்கு நென்மேனியிலிருந்து நீலப்பாடியில் வந்திருக்கும்

னாகன் சாம்பான் ஒத்திச்சீட்டு குடுத்தப்படி யென்னமெண்டால் யிந்த னாள் கையில் யென் கல்லியாணத்துக்கு னான் நீலப்பாடி

ஆற்றி மகன் மொட்டையன் பாருவையாக னான் ரொக்கம் பத்திக் கொண்டது ரெண்டு பண வெள்ளி ரூபாய் 12 பணம் யிந்த பணிரெண்டு பொன்னும்

ஒரு பணமும் னான் ரொக்கம் பத்திக் கொண்டபடியினாலே மேல் எழுதிய பணத்துக்கு னானும் னான் கலியாணம் பண்ணுகிற பெண்டாட்டி பொட்டா

ளும் யென் தாயார் பரிமணத்தியும் யாங்கள் மூணு பேரும் தங்களிடத்தில் நின்னு பண்ணைவேலை செய்து தங்கள் பண்ணை ஆள் ஒப்பந்தம் கட்டு களவடி கூலி

ஆள் பணம் வாங்கிக் கொண்டு வேலை செய்து வருவேனாகவும்

கடன் வாங்கிக் கல்யாணம், கடனுக்காக அடிமை

1.            பிங்கல வருடம் ஆவனி மாதம் 6 தேதி மாகரலில் யிருக்கும் சேது முதலியார் குமாரன் முத்தண்ணா முதலியாருக்கு மேற்படி யூரில் யிருக்கும்

2.            கிஷ்ணாச்சி சீனுவாச முதலியார் குமாரன் யேகாம்பர முதலியார் யெழுதிக் கொடுத்த ஆள் வொத்திச் சீட்டு யென்ன வென்

3.            றால் யென் அடுமையாகிய பறபொன்னந் மகன் கிஷ்ணன் பரியதுக்காக முன்னாள் வருடம் புரட்டாசி மாதம் முதல் தேதியில்

4.            வாங்கின றூ&4 நாளது தேதியில் மேற்படியான் கல்யாணத்துக்காக வாங்கின றூ&10 ஆக றூ&14யிந்த றூபாயி பதி

5.            னாலுக்கும் வட்டி யீடாக மேற்படி கிஷ்ணன் யென்பவனை உங்கள் பயிர் வேலைக்காக வைச்சுக் கொண்டு

6.            படியும் சிறபணமும் கொடுத்து வேலை வாங்கி கொள்ளுகுறது

இறுதி சடங்கிற்காக 5 1/2 ரூபாய் வாங்கி அடிமை

ஆள் ஒத்தி உடன்படிக்கை

சாதாரண 1790 வருடம் ஆனி மாசம் 22 தேதி கொண்ணூர் சங்கர முதலியார் குமாரன் முனியப்ப முதலிக்கு மேற்படியூர் சேறியிலிருக்கும் மாகாளி யெழுதிக் குடுத்த ஆள் ஒத்தி ஒடன் படிக்கை யென்னவென்றால் னான் உங்களிடத்தில் வேலை செய்துவரும் காலத்தில் யென் அண்ணன் தெருவீதியான் யெரெந்து போனதற்காக ஆகுதற்க்கு முன்னதாகவும் னான் வாங்கிக் கொண்ட 5 1/2 யிந்த ரூபா அஞ்சரையும் னான் உங்களிடத்தில் வேலை செய்யாமல் போய்விட்டால் மேலெழுதிய ரூபா குடுத்துவதில் நஷ்டமும் ஒத்துக் குடுக்கக் கடவேனாகவும் இந்தப் படிக்கு யென் ராஜியில் யெழுதிக் குடுத்த ஆள் ஒத்தி உடன்படிக்கை

-              இக்கீறல் மாகாளி கைனாட்டு

கோயில் அடிமைகள்

கோயிலில் மூன்று வகையான அடிமைகள் இருந்தனர்

1.)          தானம் செய்யப்பட்டோர்

2.)          விலைக்கு வாங்கப்பட்டோர்

3.)          வறுமைக் காரணமாக தாமே அடிமை ஆனவர்கள்

கோயில் பணிகட்குப் பெண்கள் அடிமை தானம்

ஸ்வஸ்திஸ்ரீ மதுரையும் ஈழமும் கொண்ட கோப்பரகேசரி பந்மற்கு யாண்டு 41 ஆவது தென்கரை பிரமதேயம் நந்தபன்ம மங்கலத்து மத்தியஸ்தன் நாலாயிரத்து முன்னூற்றுவன் ஆன சந்திரசேகரன் அரமயிந்தனேன் நான் யாண்டு 35ஆவது கூழாள் கொள்ளமா என் அடியாள் ஊரன் சோலையையும் இவள் மகள் வேளான் பிராட்டியையும் இவள் மகள் அரமயிந்தன் கண்டிகையையும் உள்ளிட்டாரை...

கூற்றத்து திருக்கற்றளி பரமேஸ்வரருக்கு கவரிப்பிணாவாகவும் திருப்பதியம் பாடவும் நீரோடு அட்டிக் குடுந்தேன் சந்திர சேகர

அரமயிந்தனேன்

திரிசூலம் சாத்திக் கோயிலுக்கு அடிமை

முதல் குலோத்துங்க சோழரின் 49 வது ஆட்சியாண்டில் இருமுடி சோழத் தெரிந்த வில்லிகளில் நிலையுடைய ஆச்சப் பிடாரன் கணபதி நம்பியான் அழகிய பாண்டியப் பல்லவரையன் அவருக்கு உரிமையுடைய (சுவாத்திகமான)

ஆற்றி அரவி அவிசாணி

அவர் மகள் அரசை

இவள் மகள் அவையம்புக்காள்

இவள் தங்கை தவம் செய்தாள்

அரசை தங்கை ஆளவந்தாள்

ஆகியோரை ஆளுடையார் திருவல்லம் உடையார்க்கு திரிச்சூலம் சாத்தி தேவரடியாராகத் தானம் செய்தார்

வெள்ளாட்டி கோதை குடும்பம் கோவிலுக்கு விற்பனை

1.            ஐயங்கொண்ட சோழவள நாட்டு ஆக்கூர்நாட்டுத் தலைச்சங்காட்டுக் கவாகாசி கலையன் குமரன் ஆன தம்பிரான் தோழனேன் இவ்வூர் உடையார் திருவலம்புரமுடையார் கோயிலில் ஆதி சண்டேஸ்வர தேவர்க்கு நான் விற்றுக் கொடுக்கின்ற அடியார் வீரர் வெள்ளாட்டி கோதை அவையம்புக்காள்

2.            இவள் தங்கை செல்வியும் இவள் சிறியதாய் கோதை திருவெண்காட்டு நங்கையும் இவள் மகன் உடையான் சீராளதேவனும் இவன் தங்கை உய்யவந்தாளும் இவள் தங்கை சொக்கியும் இவள் தம்பி சொக்கனும் ஆக பேர் 8 இப்பேர் எட்டும் சித்தேவர்க்கு விற்றுக் கொடுத்துக் கொள்வதாக எம்மிலிசைந்த விலைப் பொருள்

பஞ்சத்தால் குடும்பம் கோயில் அடிமை

மிதுன நாயிற்று பூர்வ பட்சத்து துவாதெசி சோமவாரமும் பெற்ற அனுஷத்து நாள் பண்டாரத்தார்

எம்பெருமாள் அடியாள் மல்லாயிக்கும் இவள் மகள் உலகுடைய நாச்சி உள்ளிட்டாற்கும் பிரமாணம் பண்ணிக் குடுத்த பரிசாவது. இவர்கள் பரதேசியாக இவ்வூரிலே வந்து இருந்து முன்னாள் நள வருஷம் சஷாமத்திலும் பிறமாதூத பிறசாபதி வருஷம் சஷாமத்திலும் விதனமானது கொண்டு இவர்கள் பொன்னமராபதி ஊரவரையும் எங்களையும் கூட்டி நாங்கள் இவ்வெம்பெருமானுக்கு அடிமை ஆகப் புகுந்தோம் எங்களைக் காப்பாற்றிக் கொள்ளவேணும் என்று சொல்லுகையாலே நாங்களும் ஊரவரும் இம்மரிஆதிக்குப் பொருத்தி இந்த உலகுடைய நாச்சிக்கு ஊரவரும் மலையாயிருக்கும் பொன்னன் உள்ளிட்டாற்கும் சீபண்டாரத்திலும் ஆக மெலிவு குறை உண்டானதும் தீர்த்து இவர்களையும் எம்பெருமான் அடிமையாக முன்பே திரு இலச்சினையும் சாத்திவிடுகையில்

பஞ்சத்தால் கோயிலுக்கு விற்றுக் கொண்ட குடும்பம்

1.            ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் சக்கரவர்த்திகள் மதுயையும் ஈழமும் பாண்டியன் முடித்தலையும் கொண்டருளிய ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு 23வது உடையார் திருப்பாம்புரமுடையார்க்கு இவ்வூர் இருக்கும்

2.            வெள்ளாளன் காட்டுடையான் இருக்க அவன்... காலம் பொல்லாக் காலமாய் காசுக்கு முன்னாழி நெல்லு விற்று நானும் என் மக்களும் சோறு பெறாமல் சவாப்புக்கு

3.            வாரேயும் இவனை முதுகண்ணாக இன்னாயனார்க்கு நானும் என் மகள் அரியாளும் இவள் தங்கை நம்பாண்டியும் மட அடிமை ஆக ஆதி சண்டேசுவர தேவர் ஸ்ரீபாதத்து நீர் வார்த்துபசரித்து ஸ்ரீபண்டாரத்துக் கொண்ட காசு நூற்றொருபது

தந்தை மகனுக்குக் கொடுத்த காணியாட்சி அடிமைகள்

ஸ்வஸ்திஸ்ரீ கோச்சடையபன்மரான திரிபுவன சக்கரவத்திகள் ஸ்ரீ பராக்கிரமபாண்டிய தேவற்கு ஆண்டு 5 ஆ

வதின் எதிர் 7 ஆவது கும்ப நாயற்று அபரபக்ஷத்து துவாதெசியும்

நாயிற்றுக் கிழமையும் பெற்ற உத்திராடத்

து நாள் கானனாடான விருதராச பயங்கர வளநாட்டு மேலூர் சீராளதேவன் முனையதரையன் மக்கணாயநே

ன் என்மகன் சீராள தேவர்க்கு நான் குடுத்த காணியாட்சி மனையும் அடிமையும்

இவைபடி இம்மரியாதி அனுபவித்து நாம் எழுதிக்குடுத்த அடிமையரான தேவியும், இவள் மகள் சீராளும், இவள் தம்பி மக்கணாயனு

ம் இவளுடைய சிறிய தாய் ஆவுடையாளும், இவள் தம்பி சீராள தேவனும், இவன் மருமகள் சீராளும், பெரியனாச்சி மகன் திருமெய்யம

வையாளனும் சிவத்த மக்கணாயனும் ஆகப் பேர் எட்டும் பள்ளடியாரில் வளத்தி மகள் மன்றியும், இவள் மகள் பொன்னியும், கொள்

ளி மகள் தொழுதியும் உடப்பி மகன் பொன்னனும் விளத்தி மகன் வில்லியும் ஆக இவ்வகைப்படி உள்ள அடிமையும் காணியாட்சி

யும் மனையும் மற்றும் எப்பேர்ப்பட்ட சமுத்தப்ராத்விகளும் தான

விக்கிரங்களுக்குரித்தாவதாக சந்திராதித்தவற் செல்ல அனுபவிக்கு

ம் படி கல்லிலும் செம்பிலும் வெட்டிக் குடுத்தேன் சீராள தேவர்க்கு முனையதனரயன் மக்கணயாகரேன்.

சீதனப் பிரமாணம் கொடுத்த தந்தை

கொல்லம் 606 வைகாசி மீ 1 அமர பக்கத்து ஏகாதசியும் வெள்ளிக்கிழமையும் பெற்ற உத்திரத்து நாள் எழுதின சீதனப்பிரமாண மாவது புறத்தாநாட்டு அன்னநல்லூர் வளத்து வாழ்வித்தான் கேசவப் பெருமாளான கலிங்கத்தரயநேன் நாஞ்சி நாட்டு அதியரான அழகிய பாண்டியபுரத்து குருந்திடங்கொண்டான் கேசவப் பெருமாளான குலோத்துங்க சோழ செட்டி... என் பிதா... குடுத்த சீதனமாவது பசு 20ம் அன்னநல்லூர் பெரிய குளத்தில் நடுவில் மனைடயில் நீர் பாய்ந்து நெல் விளையும் நிலத்தில் காலிருணையும் செம்பு தரா வெண்கலம் 2 படியும் வெள்ளாளண் பிள்ளைகளில் வளத்தி மகன் அலைவாச்சியும்... நாயினானும் நல்லிமகன்... மகன் இனக்கியும் நாச்சி மகன் நாகனும் வெள்ளாட்டிகளில் நாச்சி மகன் பிறவியும், இவள் தங்கை பெருமியும், ஆயி மகள் நல்லியும், தேவி மகள் கற்பகமும், பறைச்சிகளில் நல்லி மகள் பொதுவியும், இவள்மகள் நல்லியும், பொதுவி மகள் அவச்சியும், இவள் தங்கை பொதுவியும், அவைக்கி மகள் நல்லியும், பறையரில் பொதுவி மகன் பிறவியும், அவன் தம்பி நாகனும், இவன் தம்பி சிறு நாகனும், நல்லிமகள் பிறவியும், இவன் தம்பி பெற்றானும் இவ்வனைவரையும் சீதனமாக எழுதிக் குடுத்தேன்.

மகனை முப்பது பணத்திற்கு விற்ற தீண்டா அடிமை

பிரபவ வருசத்துக்கு செல்லாநின்ற ஸ்ரீமுக வருசம் ஆவணி மாதம் 23ந் தேதி அதளையூரிலிருக்கும் காவல்காற மணியன் சேருவைக்காறன் மகன் குமாரயிருளப்ப சேறுவைக்காரன் மேற்படி குமாரன் முத்திருளாண்டி சேருவைகாறன் மேற்படி குமாரன் சோணை சேருவைகாரன்

மேற்படி குமாரன் வீரணன் சேருவைகாரன் மகன் சுப்பிரமணியன் சேருவைகாறனுக்கு ஷயூரிலிருக்கும் தீண்டாதாரில் பறைவயிரன் மகன் வியறன் மேற்படி மகன் கட்டையனேன் அடிமை விலைக் கிரைய சாதனமெழுதிக் குடுத்தபடி அடிமை சிறைக் கிரைய சாதனமாவது சாம்பான் வலைவீசி அடைச்சான் வியான்முன்பாக கரைஏற்றி நிற்செயித்து அன்னாடகம் விளங்கும் கலியுக ராமன் புதுமின்னல் பணம் 30 ஊசி கிரந்தம் பணம் ஒண்ணு ஆக பணம் முப்பத்தொரு பணமும் காட்டி ஏற்றி கயிலறப் பற்றிக் கொண்ட படியினாலே விலை தீர்த்து விலை பிரமாணம் செய்து கொடுத்தேன். கட்டையன் மகன் பெரியகறுப்பனை

தீண்டா அடிமையுடன் கோயிலுக்கு ஊர் கொடை

1.            சகாப்தம் 1355ன் மேல் ஸ்ரீகோ மாறபன்மரான திரிபு

2.            வனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீவீரபாண்டிய தேவற்கு யாண்டு 2                    வது எதிர் 12வது

3.            மீனநாயற்று பூர்வபட்சத்து சப்தமியும் புதன் கிழமையும் பெற்ற             அத்தத்து நாள் முத்தூற்

4.            கூற்றத்து பிரமதேயம் மருங்கூரான பண்டித சோழச்              சதுர்வேத   மங்கலத்து

5.            கோதரத்து ஆஸ்வலாயன சூத்திரத்து நாராயண பட்டன்           வீரபாண்டிய

6.            தேவனுக்கும் தனக்கும் (நன்றாக) நம்முடைய பேர்க்கூலி செம்பு

7.            நாட்டில் நம்முடைய உழவுப் பற்றான பற்குளம் உட்பட்ட

8.            பற்றும் இவ்வூரில் புறஞ்சேரியில் தீண்டாஅடிமை உள்ளதும்

9.            உதகபூர்வ தானமாக நாம் தருகையில்

10.         மனைத்திடல் ஊருணி உடைப்புகுளம் குளப்பரப்பு நன்செய்

11.         மேனோக்கிய மரம் கீணோக்கிய கிணறு தீண்டா அடிமை

12.         மற்றும் எப்பேர்பட்ட சமஸ்த பிதாப்பதிகளும் குடுத்தோம்.

தீண்டா அடிமை ஆபரணம் எதுவும் அணியக்கூடாது, செருப்பு அணியக்கூடாது, வீட்டில் உலோகப் பாத்திரம் இருக்கக் கூடாது, வீட்டுக்குக் காறை பூச்சுகூடாது, மண் பாத்திரம் மட்டும் இருக்க வேண்டும். நன்மை தீமைக்கு வாத்தியம் வாசிக்க்கூடாது, பெண்கள் மார்பை மறைக்க தாவணி ரவிக்கை போடக்கூடாது, ஆண்கள் இடுப்பிற்கு மேலும் முழங்காலுக்குக் கீழும் ஆடை அணியக்கூடாது. குடை பிடிக்கக் கூடாது.

பறையர் குடும்ப விலை 80 பொன்

1.            நள வருடம் தை மாதம் 24 தேதி குருவாரமும் பூறுவது பஷ்சமும் ரேபதி நஷ்செத்திரமும் சஷ்ட்டியும் கூடின சுபதினத்தில் சீகாழிச் சீமை குண்ணமருதூர் மாகாணம் கஞ்சா நகரம்

2.            வடபாதியிலிருக்கும் அப்பாச்சி முதலியார் அவர்களுக்கு தீவிச் சீமை அட்டாங்கிசத்திலிருக்கும் சுப்பா படையாட்சி பறையன் பேரில் அடுமை சாதனம் பண்ணிக் குடுத்தபடி

3.            யென்னுதான் பறையன் மகன் ராமன் அவன் பெண்டாட்டி முக்கட்டை அவன் பிள்ளை இவாளை அடங்கலும் கொள்வார் உளரோ கொள்வார் உளரோ என்று நான் முற்கூற

4.            கொள்வோம் கொள்வோம் யென்று பிற்கூறி மத்திஷத்தாள் கூடி நிஷ்சயம் பண்ணினது கோபால சக்கிரம் சுழி பொன் 80 இந்த யென்பது பொன்னும் அங்கடிப் பார்வையாக

5.            ஒரு கிழிப்பிட வடபாதி உதையப் பையன் ரெங்கய்யனவர்கள் முகாந்திரம் னான் பத்திக்கொண்ட படியினாலே புத்திர பவுத்திர பாரம்பர்யம் சந்திராதித்தாள் உள்ளவரை

6.            கல்லும் காவேரியும் பில்லும் பூமியும் உள்ள வரைக்கும் ஆண்டு அனுபவிச்சுக் கொண்டு யெப்பேற்ப்பட்ட தொழிலும் செய்விச்சுக் கொண்டு சுகத்திலே ஆண்டு அனுபவிச்சுக் கொ(ள்)

7.            வீராகவும்

கிரயம் செய்யப்பட்ட பள்ளர் குடும்பம்

பள்ளுப் புரியல் சீட்டு (30.4.1852)

ஸ்ரீராமஜயம்

பரிதாபி வருஷம் சித்திரை மாதம் 20 தேதி கொண்டயம் பேட்டையில் இறுக்கும் பாபுராயர் பேறன் இராமசந்திர ராயறுக்கு ஆங்கரையில் இறுக்கும் கோதண்டறாம புத்ரன் யெக்கறாமயன் பள்ளு சுத்த கிரய சாசனம் மண்ணிக் குடுத்ததர்க்கு பள்ளு புரியல் சீட்டு மாந்துறை (வுள்ளன்) பனையடியான் பள்ளு, சன்னாசி பள்ளு, மறுதாயி பள்ளு, பஞ்சன்பள்ளு, அநந்தன் பள்ளு, ஆக பள்ளு 5 யிந்த யிந்தபள்ளு அஞ்சும் அதை சேர்ந்த ஆண் அடுமை பெண் அடுமை குடும்ப சகிதம் (நமக்கு) சுத்த கிரய சாசனம் பண்ணிக்குடுத்தபடியினாலே மேற்படி பள்ளுக்கு புரியல் சீட்டு எழுதிக் குடுத்தோம் யெக்கறாமயன் சம்மதி சாட்சியள் அய்யாவய்யன் அறிவேன் ஆங்கரை முத்துறாமய்யன் குமாறன் றாமயன் அறிவேன்

4 பறை அடிமைகள் விலை 14 பொன்

1.            விளம்பி வருடம் ஆனி மாதம் 27 தேதி சனிக்கிழமை கொள்ளடத்துக்குத் தெற்குக் காவேரிக்கு வடக்கு உபைய காவேரி மத்தியில் திருப்பனைந்தாள்ச் சீமை சோழம் பேட்டை மாகாணம் ரெட்டி கடலங்ககுடியிலிருக்கும் காவெட்டி வெங்குள

2.            சீமை குண்ணமருதூர் மாகாணம் மங்கைநல்லூரிலிருக்கும் சுப்ரமணிய முதலியார் அவர்களுக்கு அடுமை சாதன முறி கொடுத்தபடி யென்னுதான பறையன். சாம்பான் வெளிச்சான்

3.            முத்தான் யிந்த மூணு ஆணும் வெளிச்சான் பெண்சாதி பார்வதியும் யிந்த னாலு செனத்தையும் மங்கை நல்லூரில் ஆவணக் களரி யேத்தி கொள்வாருளரோ கொள்வாருளரோ (வென்று)...

4.            பிற்கூறி கொள்வோ மென்று யெம்மிலுமிசைந்து யெதிர் மொழி மொழிந்து னாலு மத்திஸ்தாள் முன்பாக விலை நிற்ணயம் பண்ணினது கோபால சக்கரம் குளிகை 14

மேல்காட்டப்பட்ட ஆவணங்கள் மூலம் தமிழ்நாட்டில் அடிமை முறை இருந்தது தெரிகிறது. எல்லாச் சமூகத்திலும் அடிமை முறை இருந்தாலும் பறையர் பள்ளர் சமூகத்தினரே அதிகம் அடிமை ஆகியுள்ளனர். அடிமைத் தனத்திற்குக் காலம் நிர்ணயிக்கப்படுவதில்லை. ஆயுள் பரியந்தம் அடிமைகளே.

மேல் ஆதிக்கம் கொண்டோர் அடிமைகளை வைத்திருந்தனர். கோ­யில்களில் அடிமை ஏன் என்ற கேள்வி எழலாம் நெல்லைக் குத்திப் புடைத்து அரிசியாக்க, தண்ணீர், எரி கரும்பு (விறகு) கொண்டுவர, அலகிட்டு மெழுக, அடியார், பார்ப்பனர் உண்ணும் இடத்தைத் தூய்மை செய்ய, பிரகாரத் தூய்மை பேண, அமுதுபடி அரிசி போன்றவற்றை தூய்மையாக்க, நீர் தெளிக்க, பூப்பறிக்க, மாலை தொடுக்கக் கோயில் அடிமைகள் பணி செய்தனர். கொறுக்கை வீரட்டானேசுவரர் கோயிலில் 100 அடிமைகள் இருந்தனர்.

கோயில் அடிமைக்கு அடையாளமாக இலச்சினை பொறிக்கப்பட்டது. சிவன் கோயிலில் திரிசூலமும் விண்ணகரங்களில் சங்கு சக்கரமும் பொறிக்கப்பட்டுள்ளது. புதுகோட்டை மாவட்டம் ராங்கியம் கோயில் பெண் அடிமைக்கட்கு முலையில் இலச்சினை பொறிக்கப்பட்டது.

பொது அடிமை விற்பனையில் விலை பஞ்சாயத்தால் நிர்ணயிக்கப்பட்டது. சிலர் முன்னிலை வகித்தனர். விற்பவர் "ஒப்பு" அல்லது "சம்மதி" என்று எழுதினார். "அறிவேன்" என்று எழுதிச் சாட்சிக் கையொப்பமிட்டார். கையொழுத்துப் போடத் தெரியாதவர் ஒலையில் எழுத்தாணியால் கீறினர். "இந்தக் கீறல் நாகு கையொழுத்து" என்று எழுதப்பட்டது.

ஓலையில் எழுத உரிய கூலி தரவேண்டும் (ஊசிக் கரணம்) ஆவணத்தில் ஓலைக் குற்றம், எழுத்துக் குற்றம், எழுத்தாணிக் குற்றம், கவில் குற்றும், வாசகப்பிழை, வரி மாறாட்டம், பொருள் குற்றம், வரி நுழைந்து எழுதுதல், புழுக்கடி, உளிதாக்கு, நெரிவுமுறிவு, போன்றவை எக்குற்றமும் அல்லவாகவும்.

ஆட்சியில் பாலாறும், தேனாறும் ஓடியதாகப் புகழப்படும் பிற்காலச் சோழர் ஆட்சியில்தான் அடிமை வணிகம் கொடிகட்டிப் பறந்தது. 19&ஆம் நூற்றாண்டு இறுதிவரை நீடித்தது.

தமிழ்நாட்டு வரலாற்று நூல்களில் அடிமை முறை அதிகம் பேசப்படுவதில்லை. சிலர் நாட்டு வரலாற்றில் நல்லதுதான் எழுதப்படவேண்டும் என்றனர். கே.கே.பிள்ளை போன்ற சிலர் தமிழ்நாட்டில் அடிமைமுறை இல்லை என்றனர்.

வரலாற்றில் அடிமைமுறை அவசியம் இடம்பெற வேண்டும். அப்பொழுதுதான் வரலாறு முழுமைபெறும். அடிமை வரலாற்று ஆவணங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இது தொடர்பான ஆய்வு பெருக வேண்டும்.

கொங்கு ஆவணங்களில்

* கொங்கு குடிகளில் "குறவர், கூத்தாடி, சக்கிலியர் (:ஒட்டியச் சக்கிலியர், மதுரைச் சக்கிலியர் அனுப்பச் சக்கிலியர் கானக் காட்டுச் சக்கிலியர்) தொட்டியர், தொம்பர், பறையர், புலவர், மறவர், மாணிக்கி, வலையர் வேட்கோவர், ஆண்டிகளில் குறுப்பாண்டி" ஆகியோருக்கு வரி இல்லை. ஆனால் இவர்கள் ஏவின ஊழியம் செய்ய வேண்டும்.

* தலைய நாட்டில் கொங்கு வேளாளர் கண்ணகுலத்தார் - பள்ளி இடையே ஏற்பட்ட பூசலில் கன்னிவாடியைவிட்டு கண்ணகுலத்தார் அனைவரும் வெளியேறுகின்றனர். மணப்பெண்ணுக்குப் பதிலாக கருநாய் காட்டப்படுகிறது. வேளாளரின் எல்லா முயற்சிகட்கும் மூவர் துணையாக உள்ளனர். நல்லராண்டி, நாவித நல்லான், பறைக்காளி ஆகிய மூவரும் பல சிறப்புப் பெறுகின்றனர்.

* தென்னிலையில் சக்கிலியத் திம்மன் பாப்பான் நீலனுக்கு 500 பொன் கொடுக்க ஏற்பாடானது. பாப்பான் நீலன் மீது நம்பிக்கை இல்லை என்று சக்கிலியத் திம்மன் கூறவே திம்மனுக்கு தனங்காடு எழுதிக் கொடுக்கப்படுகிறது.

* கொங்கு நாட்டில் இடங்கைக் குழுவினர் செங்குந்தர், படையாச்சி, பஞ்ச சம்மாளத்தார், பள்ளர், மாதாரிகள் ஆகியோர்

* வராக்க நாட்டு ஆவுலப்பம்மப்பட்டி கரிய காளி அம்மன் தேர் ஓட்ட வேண்டும் என்றால் ஒரு நரபலி கொடுக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. கவுண்டர்கள் ஆடு, மாடு, கோழி, பலி கொடுக்கலாம் மனிதப் பலி எப்படிக் கொடுப்பது, தேரை நிறுத்தலாமா என்று ஊரில் உள்ள இரண்டு பறையர் குடும்பத்தில் யோசனை கேட்டனர் பறையர் குடும்பத்தில் ஒருவர் வேளாண்மைக்காக நரபலி கொடுக்க என்று முடிவு செய்யப்படுகிறது. பறைக் குடும்பத்தினர் இருவரில் சின்னான், குடும்பத்தினருடன் ஊரை விட்டு ஓடி விட்டான்.

உறுமப்பறையன் மனைவி தேரோட்ட நரபலி கொடுக்கப்படுகிறாள்.

- முனைவர் செ.இராசு, கல்வெட்டு ஆய்வறிஞர்