"திராவிடத்தால் வீழ்ந்தோம்", "திராவிடம் மாயை" என்று கூப்பாடு போட்டுவரும் குதர்க்கவாதிகளுக்கு முன்னோடியாக விளங்கியவர் ம.பொ.சி. திராவிட இயக்கங்கள் ஆட்சியை கைப்பற்றிய போதெல்லாம் பல் இளித்து பதவி சுகம் கண்டவர். அண்ணா ஆட்சியில் அமர்ந்ததும் பதவிகேட்டு அண்ணாவை நாடி அலைந்தார். அப்போது விடுதலையில் "ம.பொ.சிக்கு பதவியா?" என்று கேள்வி எழுப்பி பெட்டிச்செய்தி வெளியானது. சுதாரித்துக் கொண்ட அண்ணா, ம.பொ.சி யிடம் பெரியாரைப் பார்க்கச் சொல்லி பதவி தர மறுத்துவிட்டார்.

ma_po_sivagnanamநடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களின் இரத்தக்கண்ணீர் நாடகத்தில் ராதாவின் அம்மா இறந்துவிடுவது போல் ஒரு காட்சி! ராதா கின்டலாக ஒப்பாரி வைப்பதாக அமைத்திருப்பார். அதில் "இப்படி அல்ப ஆயுசுல போயிட்டியேம்மா! ம.பொ.சி க்கும் உனக்கும் ஒரே வயசுதானேம்மா! நீ மட்டும் போயிட்டியே" என்று புலம்புவார். ம.பொ.சியின் துரோகம் திராவிட இயக்கத்தினரிடையே அந்தளவு எரிச்சலை உண்டாக்கியிருந்தது.

விடுதலையில் 1953ல் குத்தூசி குருசாமி அவர்கள் ம.பொ.சி.யைப் பற்றி எழுதியிருந்தார்.

உயர்திருவாளர் ம.பொ.சி அவர்களைப் பற்றி இந்து பத்திரிகையில் ஒரு கடிதம் வந்தது. அதற்கு பதில் தரும் வகையில் ம.பொ.சி அவர்களால் எழுதப்பட்ட கடிதம் நேற்றைய இந்து இதழில் வெளிவந்திருக்கிறது. "சுதந்திரக் குடியரசு" தேவையென்று நான் கூறியிருப்பதாக நிருபர் கூறுகிறார். தமிழரசு மாநாட்டிலோ அல்லது வேறெங்குமோ என் ஆயுளில் இதுவரையில் எங்குமே இது மாதிரி பேசியது கிடையாது. இந்த மாதிரி பிளவு முயற்சிகளை எதிர்ப்பதற்காகவே தமிழரசுக் கழகம் துவக்கப்பட்டது.

இந்த விவகாரம் மதிப்பிற்குரிய ராஜாஜி அவர்கட்கும், இந்த மாகாணத்து காங்கிரஸ்காரர்கட்கும் நன்றாகத் தெரியும்.இன்றைய இந்திய யூனியனின் ஒரு பகுதியான மொழிவாரி மாகாணம் ஏற்பட வேண்டுமென்ற கொள்கையை காங்கிரசும் ஒப்புக்கொள்கிறது என்பதை மட்டும்தான் என் சொற்பொழிவில் விளக்கியிருக்கிறேன். இதுதான் நண்பர் சிவஞானம் அவர்களின் பதில்.

மதிப்பிற்குரிய ராஜாஜியை தமக்கு சான்றுக்காக அழைத்து அவருக்கும் வெண்சாமரம் வீச வேண்டிய நெருக்கடியான நிலைமை நமது வீரபாண்டியன் ம.பொ.சி அவர்களுக்கு ஏற்பட்டிருப்பது குறித்து எந்தத் தமிழனும் வெட்கித் தலைகுனிந்தே தீர வேண்டும். கேவலம் ஒரு சட்டசபை மெம்பர் பதவிக்காக நமது மாபெரும் வீரர் இப்படி ஆரியத்தின் அடிபணிகிறார் என்று அவர் சீடர்களே நினைத்து வேதனைப்படுவர் என்பது நிச்சயம்.

தோழர்களே! இப்படி பல நிகழ்வுகளை எழுதலாம். மாவீரர் ம.பொ.சி.யைப் பற்றி சொல்லி மாளாது. இவரது எச்சங்கள்தான் சீமான் போன்றவர்களும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

Pin It