தஞ்சை மராட்டிய மன்னர் மோடி ஆவணத் தமிழாக்கமும் குறிப்புரையும் (மூன்று தொகுதிகள்) -  (முனைவர் பா.சுப்பிரமணியன் 1989 பதிப்பாசிரியர்) (வெளியீடு : தஞ்சாவூர் பல்கலைக் கழகம்)

பிற்காலச் சோழர் ஆட்சியில் இருந்த தஞ்சாவூர் கி.பி. 1535 முதல் 1675 முடிய 140 ஆண்டுகள் நாயக்க மரபினர் ஆட்சியில் இருந்தது. இதன் அடிப்படையில் ‘தஞ்சை நாயக்கர் ஆட்சி’ என்று வரலாற்றியலர் குறிப்பிடுவர்.

கி.பி. 1676 இல் மராத்தியனான ஏகோஜி என்ற வெங்கோஜி, தஞ்சை நாயக்கர் ஆட்சியை சூழ்ச்சி யால் ஒழித்து ஆளத் தொடங்கினான். இந்நிகழ்வில் இருந்து தஞ்சையில் மராத்தியர் ஆட்சி தொடங்கி, 1855 முடிய நீடித்தது. ஆங்கிலேயர் ஆட்சியின் போது ஆங்கில ரெசிடண்டின் கட்டுப்பாட்டிற்குட்பட்ட தாக மராத்தியர் ஆட்சி இருந்தது.

மோடி ஆவணங்கள்:-

தஞ்சை மராத்தியர் ஆட்சியில் அரசு ஆவணங்கள் மராத்தி மொழியில் காகிதத்தில் எழுதப்பட்டன. இவ்வாறு எழுதும் போது அவர்கள் பயன்படுத்திய எழுத்து முறை ‘மோடி எழுத்து’ எனப்பட்டது. மோடி எழுத்தில் எழுதப்பட்டதால் இவ் ஆவணங்கள் ‘மோடி ஆவணம்’ என்றழைக்கப்படுகிறது. மோடி எழுத்து மற்றும் மோடி ஆவணம் குறித்து இந்நூலின் பதிப்பாசிரியர் தம் பதிப்புரையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

“மோடணே என்றால் மராட்டி மொழியில் ‘உடைதல்’ என்று பொருள். அஃதினின்று ‘மோடி’ என்ற சொல் வந்திருக்கக்கூடும். மோடி எழுத்து என்பது தேவநாகரி எழுத்தை உடைத்துச் சிதைத்து உருவாக்கியது எனக் கொள்ளலாம்.”

“மோடி எழுத்துக்கள் தேவநாகரி வரிவடிவத்தை அடியொற்றியவையாயினும் தேவநாகரியி லுள்ள பல எழுத்துக்கள் குறைக்கப்பட்டுள்ள தோடு குறில், நெடில் வேறுபாடுகளும் இல்லை. இடத்திற்குத் தக்கவாறு அமைத்துப் படித்துக் கொள்வதே முறையாயிற்று. மேலும் எழுது கோலைக் காகிதத்திலிருந்து எடுக்காமல் தொடர்ச்சியாக வேகமாக எழுத மோடி எழுத்து பயன்படுகிறது. இதனால் சத்திரபதி சிவாஜியின் காலத்திற்கு முன்பிருந்தே வரலாற்றுக் குறிப்புகள், கடிதப் போக்குவரத்து, நாட்குறிப்பு, வரவு செலவுக் கணக்குகள் முதலியன மராட்டி மொழியில் மோடி எழுத்தில் எழுதப்பட்டன. மோடி எழுத்தினைப் படிக்க வல்லோர் மட்டுமே இதனைப் புரிந்து கொள்ளக் கூடுமாகையால் அரசியல் இரக சியங்களைப் பிறரறியாமல் காப்பதற்கும் பயன் பட்டது.”

மோடி ஆவணங்களின் நிலை:-

கி.பி.1676 தொடங்கி 1855 வரையிலான மோடி ஆவணங்கள் மூட்டைகளாகக் கட்டிப் பாதுகாக்கப் பட்டு வந்துள்ளன. 1746க்கு முந்தைய ஆவணங்கள் டெல்லிக்கும் சென்னைக்கும் எடுத்துச் செல்லப் பட்டுவிட, எஞ்சிய காலத்து ஆவணங்கள் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் பாதுகாக்கப்பட்டன.

தஞ்சை சரஸ்வதி மகாலில் இடம்பெற்றிருந்த மோடி ஆவணங்கள் தமிழில் மொழிபெயர்க்கப் பட்டு மொத்தம் அய்ம்பத்தொன்பது தொகுதிகளாக உள்ளன. இவை தவிர ஏனைய மூலப்படிகள் தமிழில் மொழியெர்க்கப்படாமல் மோடி எழுத்து வடிவிலேயே உள்ளன. அவற்றில் உள்ள செய்திகள் வெளியுலகிற்கு இன்னும் தெரியவில்லை.

இதுவரை தமிழில் மொழியெர்க்கப்பட்ட மோடி ஆவணங்கள் மேற்கூறிய தலைப்பில் மூன்று தொகுதிகளாக வெளிவந்துள்ளன. மோடி ஆவணங்களுடன் இணைந்திருந்த தமிழ் ஆவணங்கள் சிலவும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

நூல் வெளிப்படுத்தும் செய்திகள்:

தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட மராத்திய மன்னர்களின் ஆட்சி ஏறத்தாழ 180 ஆண்டு காலம் நீடித்துள்ளது. வாணிபத் தொடர்புடைய தரங்கம்பாடி, நாகப்பட்டினம் ஆகிய கடற்கரைப் பட்டினங்களும் இவர்கள் ஆட்சியில் இருந்துள்ளன.

இஸ்லாமியர்கள் குறிப்பிடத் தகுந்த எண்ணிக் கையில் வாழ்ந்துள்ளனர். கிறித்தவத்தின் பரவல் தொடங்கிவிட்டது. தரங்கம்பாடி, தஞ்சாவூர் ஆகியன கிறித்தவத்தின் முக்கிய மறைத்தளங் களாக (மிஷன் ஸ்டேஷன்) விளங்கின. மற்றொரு பக்கம் வைதிக சமய நெறியின் பாதுகாவலர்களாக அறியப்பட்ட பிராமணர்கள் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் இங்கு நிலைபெற்றிருந்தனர்.

வேளாண்மையைத் தொழிலாகக் கொண்ட பல்வேறு சாதிப் பிரிவினர் திரளாக வாழ்ந்து வந்தனர். இம்மக்கள்பிரிவினர் அனுப்பிய மனுக்களும் மோடி ஆவணங்களில் இடம்பெற்று, இவர்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளை நாம் அறியச் செய்கின்றன.

இம்மனுக்களின் மீது அரசுத் தரப்பில் எடுக்கப் பட்ட நடவடிக்கைகளும், அரசு விதித்த தண்டனை களும் இவற்றில் இடம்பெற்றுள்ளன.

அரசு வழங்கிய கொடைகள், சமூகத்தில் நிலவிய சாதிகளுக்கிடையிலான உறவுநிலை, வழிபாட்டுத் தலங்கள், மடங்கள், சத்திரங்கள் போன்ற நிறுவனங் களின் செயல்பாடு ஆகியன தொடர்பான செய்தி களும் மோடி ஆவணங்களில் இடம்பெற்றுள்ளன. மேலும் நவீனத்துவத்தின் வருகை அறிமுகமாகத் தொடங்கிய காலமுமாகும். இக்காரணங்களால் சமுதாய வரலாறு தொடர்பான சான்றுகளாக மோடி ஆவணங்கள் அமைகின்றன. மிகுதியான வரலாற்றுத் தரவுகளைக் கொண்டுள்ள இந்நூலில் இடம்பெற்றுள்ள செய்திகளை

1) மகளிர் நிலை       2) பிராமணர் நிலை

3) சாதிய உறவு         4) சமயநிலை

5) குற்றமும் தண்டனையும்        6) கல்வி

7) மருத்துவம்            8) பயணங்கள்

9) அறச் செயல்கள்                10) விலங்கு மருத்துவம்

என்ற தலைப்புகளில் பகுக்கலாம். இத்தலைப்பு களுக்குள் அடங்காத வேறு பல செய்திகளும் இத் தொகுதிகளில் இடம்பெற்றுள்ளன.

இச்செய்திகளையெல்லாம் அடிப்படையாகக் கொண்டு மராத்தியர் ஆட்சியின் சமூக, பண்பாட்டு வரலாற்றைத் தெளிவாக எழுத முடியும். தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் முனைவர் வ.அய்.சுப்பிரமணியத்தின் முயற்சியால் அப் பல்கலைக் கழகத்தின் சுவடித் துறைப் பேராசிரியர் கே.எம்.வேங்கடராமையா ‘தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்’ என்ற ஆய்வு நூலை மோடி ஆவணங்களின் துணை யுடன் எழுதி தஞ்சை தமிழ்ப்பல்கழகத்தின் வாயி லாக வெளியிட்டுள்ளார்.

அதன் தொடர்ச்சியாகவே மோடி ஆவணங் களின் இம்மொழிபெயர்ப்பு வெளியாகியுள்ளது. இன்னும் எஞ்சியுள்ள மோடி ஆவணங்களும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்தால் பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டுக் காலத் தமிழகத்தின் சமூக, பண்பாட்டு வரலாற்றை விரிவாக எழுத முடியும்.

இனி இந்நூலில் இடம்பெற்றுள்ள செய்தி களைச் சுருக்கமாக அறிந்து கொள்வோம். முதலா வதாக அக்காலத்தில் நிகழ்ந்த குற்றங்களையும் அவற்றிற்கு வழங்கப்பட்ட தண்டனைகளையும் குறித்துக் காண்போம்.

குற்றமும் தண்டனையும்:-

‘அரிசிக்காரி நனைந்துபோன அரிசியை விற்ற தினால் அபராதம் 2 பணம் விதிக்கப்பட்டது’ (12. 1. 1784). ‘தட்டான் மகாதேவனிடம் பார்சிப் பாய்கள் நகைகள் செய்வதற்குக் கொடுத்ததில் தங்கத்தைத் திருடினதினால் அவனுக்கு அபராதம் பணம் 1’ (28. 1. 1784). பொய் சாட்சி சொன்னவனுக்குச் செய்த தண்டனை விவரம்:

... அவனுக்குக் காலில் விலங்கு போட்டு ஒரு வருஷம் வரையில் அவனிடமிருந்து மராமரத்து வேலை வாங்குவது என்றும் பின்பு விடுதலை செய்கிற நேரத்தில் அவனைத் தண்டோ ராவுடன் 4 வீதிகளில் சுற்றவைத்து, அவனுடைய முழங்காலுக்குக் கீழே பிரம்பால் 6 அடிகள் வீதம் ஒவ்வொரு வீதிக்கும் அடிகள் ஆறுஅடித்து விட்டு விடுகிறது. (1. 1. 1845).

மேற்கூறிய தண்டனையில் ஆறு அடிகள் என்பதற்குப் பதில் மூன்று அடிகள் என்று குறைத்து உத்திரவிடப்பட்டுள்ளது. அது போல் ஒரு வருடம் மேற்கொள்ள வேண்டிய மராமரத்து வேலை ஆறு மாதமாகக் குறைக்கப் பட்டுள்ளது. குற்றவாளிகளைப் பொது இடங் களைப் பராமரிக்கும் பணியில் ஈடுபடுத்தியதை இச்செய்தியுணர்த்துகிறது. ‘குடியானவனுடைய பெண் தட்டிமாலில் கொஞ்சம் சாதத்தைத் திருடியதால் அவளுக்கு அபராதம் 3 தேங் காய்’. (தட்டிமால்: மாட்டுக் கொட்டகை). திருடியவள், பெண்குழந்தையென்பதால் அவளுடைய தந்தைக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மராட்டி எழுத்துக்களைக் கற்பிக்கிற சாமா சாரியர் வீட்டுக்குச் சென்று சீக்கிரமாக வரா மலிருந்ததினால் பள்ளிப்பையன்கள் வெளியே வந்து சாக்கடையில் விழுந்து காயப்பட்ட தினால் அபராதம் 6 பணம் வாங்கப்பட்டது (1834).

உமயாபுரம் கல்யாண ராமய்யர் என்பவர் நீதிமன்றத்தில் பொய்ச் சாட்சியம் கூறியதுடன் பொய்யான பத்திரத்தையும் கொடுத்துள்ளார். இதற்காகச் சிறையிலிருந்த அவர் தம்முடைய தந்தையின் ‘தவசத்திற்காக’ விடுதலை செய்ய வேண்டு மென்று மனுக்கொடுத்திருந்தார். இம்மனுவிற்கு எழுதப்பட்ட அலுவலகக் குறிப்பு வருமாறு:

“கும்பகோணம் ஜில்லா கோர்ட்டின் ஜெயிலி லிருக்கிற உமயாபுரம் சுகவாசி கல்யாண ராமய்யாவானவர் தன்னுடைய தகப்பனா ருடைய தவசத்திற்குத் தன்னை ஜெயிலிலிருந்து விடுதலை செய்ய வேண்டுமென்று மனு கொடுத்தார்.

ஷெ கல்யாண ராமய்யா பொய் ஸாஷி யையும் பொய்ப்பத்திரத்தையும் தயார் செய் திருப்பதால் அவருடைய குற்றத்திற்காக முதுகில் நாலு அடிகளை அடிப்பது அவனுக்குக் கேவல மான தண்டனை. அக்காரியம் சாஸ்திர சம்மந்தமானதால் ஒரு வேளை யாராவது மானஸ்தராக இருக்கிற குற்றவாளி தன் உயிருக்கு ஆபத்து நேரிடும்படி அபாயம் செய்துகொள்வான். ஆகையால் அதை மாத்திரம் செய்யாமல், உடல் முழுமைக்கும் கருப்பு - வெள்ளைப் புள்ளிகளை இட்டு, கழுதையின் மேல் வாலின் பக்கம் முகமாக உட்கார வைத்து, அவர் கழுத்தில் எருக்கம் பூமாலைகளைப் போட்டு, குற்றத்தின் விவரத்தைச் சொல்லி, தமுக்கு அடித்துக் கொண்டு, பிரசித்தமான வீதிகளில் தவறாமல் பட்டணம் முழுமையும் சுற்றி, அந்தந்தக் குற்றத்திற்கு 5,6 ஆண்டு வெளியில் விடாமல், ஜெயிலில் போட்டு, அவர் திருடனல்லாத தால் மொட்டை அடிக்காமல் வைத்துக் கொண்டு விடுதலை செய்வது வழக்கம்”.

சில குற்றங்களுக்கு என்ன தண்டனை விதிப்ப தென்பதை தருமசாஸ்திரம் கற்ற பண்டிதர்கள் முடிவு செய்துள்ளனர். வண்டியேறி கன்றுக்குட்டி இறந்துபோன ஒரு நிகழ்ச்சியில், வண்டியோட்டிக்கு வழங்க வேண்டிய தண்டனை குறித்து சரஸ்வதி மஹாலின் தரும சாஸ்திரிகள், ‘மனு விஞ்ஞானேஸ் வரியம்’ என்ற நூலைப் பார்த்து எழுதிய குறிப்பு வருமாறு:

“ஒரு நாளிரவில் 8 மணிக்கு வண்டிக்காரனுடைய தம்பியின் பிள்ளை 18 வயதுள்ள இராமனைக் கற்கள் ஏற்றிய வண்டியுடன் அனுப்பி அவனுக்குப் பின் வீரராகு என்னும் வண்டிக்காரன் வந்து கொண்டிருக்கையில், 4 மாதத்திய காளைக் கன்றின் மேல் சக்கரமேறி செத்துப் போனது. அந்தத் தப்பிதத்திற்காக சக் 1.5 பணம் வண்டிக் காரன் வீரராகுவிடமிருந்து அபராதம் வாங்கு கிறது. கன்றுக்குட்டியின் விலையை வாங்கி கன்றுக்குட்டிச் சொந்தக்காரனுக்கு (அய்யம் பெருமாள்) கொடுக்கிறது.”

கொத்தவால் செய்தி - இரவில் ரோந்து செய்து கொண்டிருக்கையில் புவாஜி போஸ்லேயின் வீட்டில் திருடின தாண்டவராய் என்பவனை, சிகப்புக் கம்பத்திற்கட்டி பிரம்பினார் 12 அடி அடித்து விடப்பட்டது.

வீரராகு பிள்ளை என்பவரின் மகளை நீல கண்டர் மற்றும் முப்பத்திரெண்டு பேர்கள் பல வந்தமாகத் தாலிகட்டிய வழக்கில் குற்றம் சாட்டப் பட்டவர்களுக்கு உடலை வருத்தும் ‘சரீர தண்டனை விதிக்கப்பட்டது. இதையெதிர்த்து அவர்கள் முறையீடு செய்தனர். அதில் சரீர தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதையெதிர்த்து அவர்கள் மேல் முறையீடு செய்து ‘அர்த்த தண்டனை’ என்ற பெயரில் தண்டம் விதிக்கப்பட்டு சரீர தண்டனையி லிருந்து விடுவிக்கப்பட்டனர். இது தொடர்பாக வீரராகு பிள்ளை மன்னருக்கு முறையீடு செய்து உள்ளார். நீதி வழங்குவோர் வடமொழி சாஸ் திரங்களை தம் விருப்பத்திற்கேற்ப விளக்கம் செய் வதுண்டு என்பது தெரியவருகிறது (தொகுதி 1: 196-197).

கவனக் குறைவான செயல்களுக்கும், சிறிய குற்றங்களுக்கும் சிறிய அளவிலான தண்டனை வழங்கப்பட்டதற்குப் பின்வரும் செய்திகளைக் குறிப்பிடலாம்.

“யுத்த சாலையில் - ஒரு தச்சன் வேலை செய்து விட்டு வீட்டுக்குப் போகையில் பாராக்காரன் (காவல்காரன்) அவனுடைய வேஷ்டியை உதறிப் பார்த்த பொழுது 2-ஙு டாங்க் நிறை யுள்ள ஒரு பித்தளைத் தகடு வேஷ்டிக்குள் ஒட்டியிருந்தது. கீழே விழுந்ததைப் பார்த்துச் சொன்னதினால் வேலை செய்யுமிடத்தில் வேஷ்டியை உதறாமல் அஜாக்கிரதையாய் வந்த குற்றத்திற்காக அபராதம் 6 தேங்காய் விதிக்கப்பட்டது.”

சிவகங்கைக் குளத்தில் குடங்களை அலம்பிய இரண்டு பெண்களிடமிருந்து அபராதம் 4.5 சக்கரம் வாங்கப்பட்டது.

சில தண்டனைகள் பொதுமக்கள் முன்பு, அவ மானப்படுத்தும் முறையில் அமைந்தன. ஒருவனை சாதியிலிருந்து நீக்குவதற்கு அரசிடம் அனுமதி பெற வேண்டியிருந்தது. அப்படி அனுமதி பெறாது செய்தவர்களில் ஒருவனுக்கு தலையில் எச்சலை களைக் (எச்சில் இலைகள்) கொடுத்து அங்குள்ள சத்திரம் வகையறாவைச் சுற்றி வந்துவிடும் போது பிரம்பால் முழங்காலின் கீழே 12 அடிகளை அடித்து விட்டு, விட்டு விட்டார்கள் (தொகுதி 1: 413). பாக்கிப் பேரையும் கோட்டையில் மேல் தண்டித்தபடி தண்டனை செய்து 6 அடிகளை அடிக்கிறது. பாக்கி 4 பேர்களையும் பிராகாரம் செய்து எச்சலை மாத்திரம் கொடுத்து விடுகிறது.

‘இராஜ மால்படி களிமோடு என்னும் ஊரி லிருக்கும் வீராயி என்பவள் செம்பு திருடி னாள். அவளைச் சாவடியில் வைத்தார்கள். அவளுடைய கழுத்தில் செம்பைக்கட்டி இன்ன குற்றஞ்செய்தாளென்று வாசித்துக் கொண்டு நான்கு வீதிகளிலும் தண்டோ ராவுடன் சுற்ற வைத்து, ஒவ்வொரு வீதி யிலும் பிரம்பினால் 3 அடி வீதம் அடித்து மூன்று வாசல்களையும் காட்டி விட்டு கோட் டைக்கு வெளியே விரட்டி விட்டது. சொந்தக் காரனுக்கு செம்பு கொடுக்கப்பட்டது’. (தொகுதி 1: 451).

ஆங்கில ஆட்சி நிலைபெற்ற பின், ரெசிடெண்ட்

என்ற பதவியில் ஆங்கில அதிகாரி ஒருவரை மன்ன ராட்சிப் பகுதிகளில் நியமித்தனர். இவரது கட்டுப் பாட்டிற்குள்தான் மன்னர்கள் இருந்தனர். இதனால் மன்னருக்கு இணையானவர் என்றே இவரைக் கூறலாம். 1824 முதல் 1838 வரை ஜான் பைஃப் என்பவர் தஞ்சை மராத்திய ஆட்சியில் ரெசிடண்டாக இருந்தனர். 1825 ஆகஸ்ட் ஐந்தாம் நாள் இவர் அம்பாரி கட்டப்பட்ட யானையின் மீது அமர்ந்து ஆற்று வெள்ளத்தைப் பார்க்கப் பயணித்தார். அப் போது, ‘அங்கு’ என்ற தேவதாசியின் மகள் ‘நாகு’ என்பவள் வண்டியில் அமர்ந்து ரெசிடண்டின் யானைக்கு எதிராகப் பயணித்தாள். இதன் பொருட்டு அவளுக்கு ஒரு சக்கரம் இரண்டு பணம் தண்டம் விதிக்கப்பட்டது (தொகுதி 1: 89-90).

தஞ்சைக் கோட்டையின் கொத்தவால் (காவலாளி) ஒருவனது செயல் குறித்து வட இந்தியாவிலிருந்து வந்து சால்வை வியாபாரம் செய்யும் ஒருவர் மன்ன ருக்குக் கொடுத்த பின்வரும் மனு, திருடருக்கும், காவலாளிக்கும் உள்ள உறவை வெளிப்படுத்து கிறது (தொகுதி 1: 555).

‘சால்வைகள் வியாபாரத்திற்காக சில பேர்கள் வந்து துகையைக் கொடாமலே சால்வை களை எடுத்துப் போய் விட்டார்கள். அந்தத் திருடன் அகப்பட, கொத்தவாலிடம் ‘அவனை ஒப்பித்தேன். அவர் திருடனை விட்டுவிட்டார். என்னுடைய வேலைக்காரர்களைப் பிடித்துக் கொண்டு போய், சாவடியில் வைத்திருக் கிறார்கள். வீட்டில் வேலைக்கு ஆளில்லாமல் பட்டினி கிடக்கிறேன். இவையெல்லாம் விசாரணை செய்ய வேண்டும்.’

மொத்தத்தில் குற்றவாளிகளைத் திருத்தும் முறையில் அல்லாமல், உடலை வருத்தும் முறை யிலும், அவமானப்படுத்தும் முறையிலும், தஞ்சை மராத்தியர் காலத் தண்டனை முறைகள் இருந்துள்ளன. வடமொழி நீதி நூல்களின் அடிப்படை யில் பண்டி தர்கள் தண்டனைகளைப் பரிந்துரைத்ததும் நிகழ்ந் துள்ளது.

பிராமணர் நிலை:-

மராத்தி மன்னர்கள் பிராமணர்களுக்கு உயரிய இடம் வழங்கியிருந்தனர். பிராமணர் குடியிருக்க அக்கிரகாரங்கள் நிறுவப்பட்டதை மோடி ஆவணங்கள் குறிப்பிட்டுள்ளன.

‘திரிபுவனம் சத்திரத்திற்குப் பக்கத்தில் புதிய அக்கிரகாரம் உண்டு பண்ண’ ‘புஞ்சை நிலம் ஆறு வேலியும் மரத்தடி நிலம் இரண்டு வேலியும்’ வழங்கப்பட்டுள்ளது (தொகுதி 1:36)

கும்பகோணத்தில் புதிய அக்கிரகாரம் ஒன்று கட்டப்பட்டு தானமாக வழங்கப்பட்டுள்ளது (தொகுதி 1: 123)

திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலம், பிராதப சிங்கின் மூன்றாவது மனைவி யமுனாம் பாள் பெயரால் யமுனாம்பாபுரம் என்றழைக்கப் பட்டுள்ளது. இங்குள்ள பிராமணர்களுக்கு அறுபது வேலி நன்செய், புன்செய் நிலங்கள் சர்வமானிய மாய் நீர்வார்த்துக் கொடுக்கப்பட்டுள்ளது (தொகுதி 1:271).

இரண்டாவது சிவாஜி மன்னனுக்குப் புத்திரப் பேறு வேண்டி கும்பகோணம் அக்கிரகாரத்தில் ஜபம், பாராயணம், ஹோமம், பிராமண போஜனம் ஆகியன செய்விக்கப்பட்டன. அத்துடன் அவர்கள் நீராட, காவிரியில் படித்துறையும் கட்டிக் கொடுக்கப் பட்டது (தொகுதி 1: 12)

கும்பகோணம் சத்திரத்தில் நூறு பிராமணர் களுக்கு உணவளிக்கவும் நல்ல நாள்களில் அக்கிர காரத்திலுள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் பணம் வழங்கவும் தெப்பெருமா நல்லூர் என்ற கிராமம் சர்வமானியமாகக் கொடுக்கப்பட்டுள்ளது (தொகுதி 1: 36)

வீடுகள், நிலங்கள் மட்டுமின்றி சத்திரங்களில் அவ்வப்போது பிராமணர்களுக்கு உணவளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சரவேந்திரபுரம் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட புதிய ஊரில் சத்திரம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. அதில் துவா தேசி நாட்களில் பிராமணர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது (தொகுதி 1:48). வேத சாலையில் பிராமண போஜனம் நடத்தப்பட்டது (தொகுதி 1:466). வேதம் வல்ல பிராமணர்களுக்கு ‘சுரோத்திரியம்’ என்ற பெயரில் நிலக்கொடை வழங்கப்பட்டது. இந்நிலம் அவரது காலத்துக்குப் பின் அவரது பரம்பரையினருக்குச் சேராது (தொகுதி 2:259-263, 334)

உணவு தவிர வேறு சில பொருட்களும் அன் பளிப்பாக வழங்கப்பட்டன. செருப்பும், குடையும் இரண்டு பிராமணர்களுக்குத் தானமாக வழங்கப் பட்டதற்கான செலவு விவரம் மோடி ஆவணம் ஒன்றில் பதிவாகியுள்ளது (தொகுதி 1:49). இரா மேஸ்வரத்திற்கு இரண்டாம் சரபோஜி மன்னர் யாத்திரை சென்ற போது ‘எல்லாப் பிராமணர் களுக்கும் பூரி (தட்சினை) கொடுக்கிற வகையில் .5 படி அரிசியும் 4 காசும் கொடுத்து வந்தார் (தொகுதி 1:243). மேலும் சத்திரங்களில் பிராமணர்கள், வெள்ளைக்காரர்கள், அரசு உயர் அதிகாரிகளுக்கு உணவுக்குப் பதில் அரிசியும், உப்பு, புளி முதலிய உணவுப் பொருட்களும் வழங்கப்பட்டன. இது ‘உலுப்பை’ எனப்பட்டது (தொகுதி 1:115). ஆட்சி புரிந்த வெள்ளையர்களுக்கும் அரசு உயர் அதிகாரி களுக்கும் இணையாக, பிராமணர்கள் ‘உலுப்பை’ பெற்றது, அவர்களுக்கு வழங்கப்பட்ட மரியாதையைக் குறிக்கிறது.

கும்பகோணம் காஞ்சிமடத்தின் செயல்பாடு களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சாஸ்திரிகள் சிலர் எழுதிய நீண்ட மனு ஒன்றும் மோடி ஆவணத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது (தொகுதி 1:354-356). காஞ்சிமடம் கும்பகோணத்திற்கு இடம் பெயர்ந்த பின்னர் ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சி, அங்கு பணிபுரிந்த தம்பிரானின் திருட்டுச் செயல்கள் ஆகியன இம்மனுவில் விரிவாகப் பதிவாகியுள்ளன.

சாதிகள்:

சாதி வேறுபாடு அழுத்தமாகப் பேணப்பட்டு உள்ளது. தஞ்சை சிவகங்கைக் குளத்தில் குறிப் பிட்ட சாதிகளுக்கென்று படித்துறைகள் ஒதுக்கப் பட்டிருந்தன. ஒரு சாதியினரின் படித்துறையில் வேறு சாதியினர் புழங்குவதைத் தடுக்கக் காவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர் (தொகுதி 1:74-75).

பஞ்ச கம்மாளர் என்றழைக்கப்படும் தட்டார், கன்னார், கல்தச்சர், கொல்லர், பொற்கொல்லர் ஆகிய ஐந்து கைவினைஞர்களும் ‘பாஞ்சாளர்கள்’ என்றழைக்கப்பட்டனர். இப்பிரிவினர் தம் திருமணத்தில் மேற்கொள்ளும் நடைமுறைகளைக் குறித்து அரசிடம் உடன்படிக்கை எழுதிக் கொடுத் துள்ளனர் (தொகுதி 1:193). சாதிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் வரையறுக்கப்பட்டிருந்ததை இது உணர்த்துகிறது.

மோடி ஆவணங்களின் இடையில் தமிழில் எழுதப்பட்ட காகிதச் சுவடிகள் இருந்துள்ளன. இவற்றுள் வலங்கை, இடங்கைப் பிரிவு குறித்த நீண்ட ஆவணம் ஒன்று இடம்பெற்றுள்ளது (தொகுதி 2:356-371). இது இரண்டாம் சரபோஜியின் மகன் சிவாஜியின் ஆட்சிக் காலத்தில் (1832-1855) எழுதப் பட்டுள்ளதாக, கே.எம். வெங்கட்றாமையா குறிப் பிட்டுள்ளார். மற்றபடி இது எழுதப்பட்ட சரியான காலம் தெரியவில்லை. வாக்குமுலமாக அமைந் துள்ள இந்த ஆவணத்தில் வலங்கை, இடங்கைப் பிரிவுகளில் இடம்பெற்றுள்ள சாதிகளின் பட்டியல் இடம்பெற்றுள்ளது.

இப்பட்டியல் படி, வலங்கைச் சாதியினராக (1) ரெட்டிவடுகர் (2) கமல வடுகர் (3) துளுவ வடுகர் (4) துளுவச் செட்டி (5) வெள்ளாளச் செட்டி (6) குத்திக் கொல்லர் (7) நங்காரி வடுகர் (8) சேணயர் (9) சலுப்பன் (10) இடையர் (11) சாலியர் (12) கோமுட்டி (13) உப்பிலியன் (14) சாணான் (15) சுண்ணாம்புக்காரன் (16) மாறாயச் செட்டி (17) மேளகாரன் (18) வலையர் (19) தெலுங்க அம் பட்டன் (20) தமிழ் அம்பட்டன் (21) வண்ணான் (22) வாணியன் என இருபத்திரண்டு சாதியினர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இடங்கைச் சாதியினராக (1) மேலசெட்டி (2) கைகோளர் (3) பள்ளி (4) படையாச்சி (5) மறவர் (6) மேளக்காரர் என ஆறு சாதியினர் குறிப்பிடப் பட்டுள்ளனர்.

இப்பட்டியலைடுத்து அவர்கள் மணப்பந்தல் அமைக்கும் முறை, மண ஊர்வலம் நடந்தும் முறை ஆகியன தொடர்பான செய்திகள் பதிவாகியுள்ளன. சடங்குகளை மையமாகக் கொண்டு உருவான வேறு பாடுகளை இதன் வாயிலாக அறிய முடிகிறது.

மிருக வைத்தியம்:-

மராத்தியர் அரண்மனையில் யானை, குதிரை, ஒட்டகம், மாடு ஆகிய விலங்குகள் வளர்க்கப் பட்டுள்ளன. இவற்றிற்கான தீனி வழங்கப்பட்ட போதிலும் அவை அரண்மனை ஊழியர்களால் களவாடப்பட்டுள்ளன (தொகுதி 1:500). விலங்குகளுக்கு ஏற்படும் நோய்களுக்கும், விபத்தினால் ஏற்படும் காயங்களுக்கும் உரிய மருந்து விவரங்களும் மோடி ஆவணத்தில் இடம்பெற்றுள்ளன. சில எடுத்துக் காட்டுகள் வருமாறு:

கன்றுக்குட்டிக்கு மாந்தமென்னும் ரோகத் திற்கு மருந்துக்கு கால்சேர் சுக்கு’ (தொ 1:60).

வண்டிமாட்டுக்கு பாரம் தூக்கி மாரில் இரத்தங்கட்டி, மாடு நொண்டுகிறதாகையால் உள்ளுக்குக் கொடுக்க, கர்க்கம் கோழியின் மசாலை ... (தொகுதி 1:60).

ஒட்டகத்திற்கு ஜலதோஷத்தினால் ஜுரம் வந்து தீனியை சாப்பிடாததினால் உள்ளுக்குக் கொடுக்க மசாலை... (தொகுதி 1:61).

குதிரைக்கு உஷ்ணந் தணிவதற்காக ‘தவிரி புத்தி’ என்னும் தயிர்ச்சாதம் தினமொன்றுக்கு கைலி அரிசி படி 5 இடை தயிர் சேர் 10 (தொகுதி 1:81).

கிரிராஜ் என்னும் குதிரைக்கு வாயுக்காக உள்ளுக்குத் தினம் கொடுக்க ஒரு வாரத்திற்கு இஞ்சியைக் கொடுக்கிறது (தொகுதி 1:82).

ஒரு மாட்டுக்கு கழுத்து வீங்கியிருப்பதற்கு ஒத்தடம் கொடுக்க கைலி உப்பு படி .5 மாட்டுக்குச் சிரங்கு வந்ததற்குத் தடவ வேப் பெண்ணை சேர் 2 கொடுக்கிறது (தொகுதி 1:83).

உடுப்பு தந்தமுள்ள யானைக்கு வாயுவினால் கால் பிடித்திருப்பதால் உள்ளுக்கு மருந்து 45 நாட்களுக்கு மாவுத்துவசம் கொடுப்பது. சுக்கு ஙு சேர், அரிசித் திப்பிலி ஙு சேர், கண்டத் திப்பிலி .5 சேர், காயம் .5 சேர், கோதுமை படி 2, செவ்வீயம் ஙு சேர், அபின் ஙு சேர், உப்பு படி 2, பனை வெல்லம் 2 சேர் (தொகுதி 1:87).

சமயம்:

மராத்தி மன்னர்கள் இந்து சமயத்தினர் என் றாலும் இஸ்லாமிய சமயத்தை ஆதரித்துள்ளனர். முஸ்லிம்களின் முகரம் பண்டிகை ‘அல்லாப் பண்டிகை’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது (தொகுதி 1:133). முகரம் திருநாளையொட்டி நிகழும் ஊர்வலம் தொடர்பாக ‘அல்லா ஊர்வலம் சுற்றி வருவதற்கும் விருதுகளை வழக்கப்படி கொடுக்கிறது’ என்று குறிப்பிட்டு விட்டு ஈட்டிக்காரர்கள் 40, யானையின் மேலுள்ள விருதுகள், மேளம், ஸங்கீத மேளம், அரபி வாத்தியம், துருப்புகள், கோட்டையிலும் கோட்டைக்கு வெளியிலுமுள்ள தப்பு தம்பட்டம் வகையறா, நெட்டியினால் செய்த மரங்கள், 20 தீவட்டிகள், வாணங்களின் கடிகள், பல்லாக்குத் தூக்குகிற ஆள் 5, டகோரா வாத்தியம் ஜோடி 1, குதிரையின் சேணங்கள் என ஒரு பட்டியலைக் குறிப்பிட்டுள்ளது (தொகுதி 1:212).

நாகூர் தர்காவிற்கு நகரா வாத்தியமும் (தொ 1:215) தர்காவில் மூடுகிற போர்வையும் (தொ 1:217). மொகரம் பண்டிகையையொட்டி நிகழும் கொடி யேற்றத்தின் போது, விளக்கு எண்ணை வாங்க பத்து நாட்களுக்குப் பணமும் (தொகுதி 1:214) அரண்மனையிலிருந்து வழங்கப்பட்டுள்ளன.

தர்க்கா ஒன்றின் உரிமை தொடர்பான மனு ஒன்றும் மோடி ஆவணத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது (தொகுதி 2:61-64). இஸ்லாமியருடன் மராத்தி மன்னர்கள் கொண்டிருந்த நல்லுறவை இச்செய்திகள் உணர்த்துகின்றன.

மழை பெய்ய வேண்டி தஞ்சைப் பெரிய கோவிலில் உள்ள நந்திக்கு, சிறப்பு வழிபாடு நிகழ்த்தப்பட்டது (தொகுதி 1:133).

***

(உங்கள் நூலகம் செப்டம்பர் 2012 இதழில் வெளியானது)

Pin It