கீற்றில் தேட...

அன்று மனுதர்மவாதிகள்; இன்று தமிழ்த்தேசியவாதிகள்!' என்னும் அதிஅசுரனின் கட்டுரை படிக்கக் கிடைத்தது. பெருகும் பார்த்தீனியக் களை போல் தோன்றிய நாள் தொட்டு இன்று வரையிலும் வெட்ட வெட்ட முளைத்துக் கொண்டிருக்கிறது நம்மை அழிக்க முனைந்திருக்கும் திராவிட வாதம். வாதங்கள் கவைக்குதவாதவை எனினும் பாமர மக்களை நம்பச் செய்யும் கோயபல்ஸ் பொய்கள். எனவே பேசித் தான் தீர வேண்டியிருக்கிறது.

சங்ககாலம் திணை வாழ்க்கை முறை பயின்ற காலம். இனக்குழு ஆட்சியில் அரசர்கள், குறுநில மன்னர்களிடம் பெண்ணெடுக்கும் நிலை இருந்து பின் பேரரசுகள் உருவாக்கம் தொடங்கிய பிறகு, அரச மணம் என்பது வர்க்க நிலை, இரு நாடுகளுக்கிடையிலான சுமுக/இராஜதந்திர உறவு ஆகியவற்றை முன் வைத்தே இயங்கத் தொடங்கியது.

உலகின் எந்த இனமும் கலப்பின்றிச் சாத்தியமில்லை. ரத்தக் கலப்பை முன் வைத்து இனவாதம் பேசுவது நதிமூலம் தேடிக் காணாமல் போவதில் தான் நிற்கும். கவனிக்க வேண்டியது, எந்த ஆட்சியானாலும் மொழி, இன உணர்வு நிலை பற்றியது. தமிழ் மரபின் வழி வந்த அரசர்கள் வெவ்வேறு இனங்களில் பல்வேறு காரணங்களுக்காக மணம் புரிந்திருக்கலாம். அதனை இற்றை நாள் கண்ணோட்டத்துடன் பார்ப்பது காமாலைக் கண்ணோக்காகவே முடியும். கட்டுரையில் குறிப்பிடப்படும் பிற்காலச் சோழர்களின் ஆட்சியில்  தமிழே ஆட்சி மொழியாக இருந்தது; தமிழ்ப் புலவர்கள் தமிழரசர்களால் ஆதரிக்கப்பட்டனர். தமிழில் கம்ப ராமாயணம், பெரிய புராணம் போன்ற பேரிலக்கியங்களும் படைக்கப்பட்டன. தேவாரம் உள்ளிட்ட சமய இலக்கியங்கள் வளர்ச்சியுற்றதும் இக்காலத்தில்தான். சமயத்தைக் காழ்ப்புடனேயே பார்த்துப் பழகிய திராவிட வாதிகள் இதனைப் பொருட்படுத்தாததில் பெரும் ஆச்சரியமேதுமில்லை. சமய/தத்துவ கருத்தாக்கங்களில் வடமொழி ஆதிக்கம் இருப்பினும் கூட ஆட்சி மொழியாகவும் பண்பாட்டு மொழியாகவும் தமிழ் இருந்தமை ஈண்டு கவனிக்கத்தக்கது.

ஆனால் விசயநகர ஆட்சியும் அதன் கிளையான நாயக்கர் ஆட்சியும் தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்தியபோது தெலுங்கு ஆட்சி மொழியாக்கப்பட்டது. இவர்கள் தெலுங்கு மரபினர்; பலிஜா நாயுடு வகுப்பினர் (ஆதாரம்:http://en.wikipedia.org/wiki/Balija_dynasties). இவர்தம் ஆட்சிக் காலத்தில் தெலுங்கு ஆட்சிமொழியாக்கப்பட்டதோடு, வட மொழி வலுவான நிலையை அடைகிறது. தமிழ் இலக்கியங்கள் முடக்கப்பட்டு அரசர் புகழ் பாடும் சிற்றிலக்கியங்கள் தலையெடுத்தன. பல நாயக்க மன்னர்கள் தெலுங்கு, வடமொழி ஆகிய மொழிகளில் மேதமை கொண்டு அம்மொழிகளில் இலக்கியம் படைத்துள்ளனர். இந்தக் காலத்தில்தான் நம் மரபான தமிழிசை கர்நாடக இசையாகத் திரிக்கப்பட்டது. நம் தமிழிசை மூவர் மறைக்கப்பட்டு சங்கீத மும்மூர்த்திகள் முன்னிறுத்தப்படுகிறார்கள். தமிழ்ப் பண் வளர்த்த காவிரி மண் தெலுங்கு பாடத் தொடங்கிற்று.

நாயக்க மன்னர் கொண்டு வந்த நில மானிய முறையில் எல்லா நிலமும் அரசனுக்கே சொந்தமாகக் கருதப்பட்டது. இது தமிழரசர்களின் காணியாட்சி முறைக்கு முற்றிலும் முரணானது. மதுரை நாயக்க மன்னர் கொண்டு வந்த பாளையப்பட்டு முறையில் மொத்தமுள்ள 72 பாளையப்பட்டுகளுள் தெலுங்கு, கன்னட மரபினருக்கு 61 பாளையப்பட்டுகளும் தமிழ் மரபினருக்கு 11 பாளையப்பட்டுகளும் வழங்கப்பட்டன. இதுவே இன்று வரையிலும் தமிழகத்தில் பெரும்பான்மை நிலவுடைமையாளர்களாகத் தெலுங்கர் வேரூன்ற வழி வகுத்தது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இவர்களுக்கு உதவியாக நிலம் பெயர்ந்து வந்த பிற தொழில் செய்பவர்களும் இங்கு குடியேற்றம் செய்யப்பட்டனர். அவ்வம் மரபினர் இன்றைக்கும் தமிழகத்தில் கால் கொண்டு, வேரூன்றி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இன்றைக்குத் திராவிட வாதம் பேசித் தமிழரசர்களின் ஆட்சியை விமர்சிப்பவர்கள் நாயக்கர் ஆட்சியை விமர்சிக்காததன் உள்ளடக்கம் என்ன? அவர்தம் நோக்கம்தான் என்ன?

தமிழ்த் தேசியத்தை ஒற்றை வார்த்தையில் மாயை என்று நிராகரித்துக் கடக்கும் இவர்கள்தான் திராவிட வாதம் என்கிற மாயா 'வாதை'யைத் தம் தோளில் சுமந்து திரிகின்றனர். பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தவர், அதற்காகத் தம் வாழ்நாள் முழுதும் பாடுபட்டவர், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்திற்காகக் குரல் கொடுத்தவர், முன்னெடுத்தவர் என்பதில் எவருக்கும் முரணிருக்கச் சாத்தியமில்லை. ஆனால் தாய்மொழியாவது, தந்தைமொழியாவது என்று எகத்தாளம் பேசி மொழிவழித் தேசிய இனத்தைப் புரிந்து கொள்ளாத, தமிழ்ப் புலவர்களையும் பழந்தமிழ் இலக்கியங்களையும் இழித்துப் பேசிய பெரியார் வழி நின்று தமிழ்த் தேசியத்தை என்றைக்கும் புரிந்து கொள்ளவே இயலாது. நாம் முரண்படும் இடமும் அதுதான்.

மொழி/தேசிய இனம் குறித்த பெரியாரின் பார்வை மிகக் குறைபட்டது; ஆய்வுக்குரியது. இன்றைக்குத் தமிழகத்தில் பெரியார் சர்வரோக நிவாரணி போலப் பயன்படுத்தப்படுகிறார். அவர் செய்யாததையெல்லாம் செய்ததாகக் காட்டும் மோடி வித்தைகளைத்தான் அன்று முதல் இன்று வரை வறட்டுத் திராவிட வாதம் செய்து வருகிறது. பிழைபட்ட இந்த வாதத்தின் குறைப்பட்ட பார்வையாகவே பெரியார் நம் கண்களுக்குக் காட்சி தருகிறார்.

தமிழைத் தம் தாய்மொழியாகக் கொண்டவர் அனைவரும் தமிழரே. ஆனால் தமிழகத்தைத் தம் நிலமாகக் கொண்டு இங்கே பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வரும், நிரந்தரக் குடியினராகி விட்ட பிற மொழியாளரைத் தமிழ்த் தேசிய இன வரையறைக்குள் கொணரலாமேயன்றி அவர்களை என்றைக்கும் தமிழர் என்று சொல்ல இயலாது. உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் தாய் மொழி அடிப்படையில் தமிழ் பேசுவோர் தமிழராகவே கருதப்படுவர். வேற்று நாடுகளில்  நிரந்தரக் குடியுரிமை வாங்கி, வீட்டு மொழியாகத் தமிழையும் பிழைப்புக்காகத் தாம் வாழும் நாட்டின் மொழியையும் பேச வாழ்ந்தாலும் கூட இன அடிப்படையில் அவர்கள் தமிழினம் என்றே சொல்லப்படுவர். காலப்போக்கில் தமிழே பேசத் தெரியாதவர்களாக சில தலைமுறை மாற்றம் பெறினும் தமிழ் மரபினர் (Tamil Origin) என்றே கருதப்படுகின்றனர்.

பன்னெடுங்காலமாக, தமிழகத்தில் வாழும் பிற மொழியினர், வீட்டு மொழியாகத் தத்தம் தாய்மொழியையும் பிழைப்புக்காக வெளியில் தமிழும் பேசும் இரு மொழியாளராகக் கருதப்பட்டாலும் தமிழ்த் தேசிய இனத்தின் உள்ளடக்கம்தான். இதற்குள் பார்ப்பனர், இஸ்லாமியர் என அனைவரும் சாதி, மதம், வர்க்கம் என எவ்விதப் பாகுபாடுமின்று அனைவரும் அடங்குவர். அயல் நாடுகளில் வாழும் தமிழர்களும் தேசிய இனத்தால் தாம் வாழும் நாட்டின் தேசிய இனமாகவே கருதப்படுவர். எனில் தமிழ்த் தேசியவாதி யார்? தமிழ்த் தேசிய உணர்வில் நம்பிக்கை கொண்டவர் அனைவருமே தமிழ்த் தேசியவாதிகள் தாம்.

பிற மாநிலங்களில் ஏற்படாத இச்சிக்கல் ஏன் தமிழ்நாட்டில் மட்டும் கால் கொண்டிருக்கிறது? ஏன் இங்கு மட்டும் மொழியால், இன உணர்வால் மக்கள் ஒன்றுபட முடியாத நிலை? இங்குதான் 'திராவிடத் திரிபுவாதம்' தம் திருவிளையாடலைத் தொடங்குகிறது. சாதியத்தை நோக்கிக் கேள்வி எழுப்பிய பெரியார் நம் மதிப்புக்குரியவரே. ஆனால் அவருடைய திராவிட வாதத்தின் நோக்கமென்பது நில உடைமை, முதலாளியம் ஆகியவற்றைப் பெரிதும் எதிர்க்காத பார்ப்பன எதிர்ப்பு மட்டுமே. பார்ப்பனர்களிடமிருந்த அதிகாரத்தை  அடுத்த நிலையிலிருந்த உயர் மற்றும் இடைநிலை ஆதிக்கசாதிகளிடம் கை மாற்றிக்கொடுத்தது மட்டுமே பெரிதும் நிகழ்ந்தது. கீழ்மையான மொழிவழி அரசியல் மூலம் நடுத்தர வர்க்கத்தை, இடைநிலை ஆதிக்கச் சாதிகளைக் கையகப்படுத்திக் கொண்ட திராவிடக் கருத்தியல் மேடைப் பேச்சு, திரைப்படம், இதழ்கள் ஆகியவற்றைத் தன் பொய்ப் பரப்புரைக்கு மிகச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டது.

பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார் எனப் பிரித்துக்காட்டி சாதிச் சிக்கலை, கட்டுமானத்தை எளிமைப்படுத்தி, பார்ப்பனரல்லாத பிற உடைமைச் சாதிகளின் ஆதிக்கத்தை நிலைநாட்டி, அதையே ஒட்டு மொத்தத் தமிழ்ச் சிந்தனையாகக் காட்டியது. நாட்டின் உடனடிச் சூழல்களை மையப்படுத்தி, அரசியலாக்கி, பரபரப்புக் காட்டி மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் வேலையைத் திராவிட மாயாவாதம் பேசுவோர் தொடர்ச்சியாகச் செய்து வருகின்றனர்.

"பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டுக்கு வந்து தமிழர்களாகவே வாழ்ந்து கொண்டிருக்கும் சக்கிலியர், நாயக்கர், நாயுடு, கவுடர், ஒக்கலிகர் போன்ற சில சாதியினர் அந்நியர்கள். சுத்தத் தமிழர்கள் அல்ல"

என்று தமிழ்த் தேசியர்கள்  சொல்வதாகச் சொல்லிச் செல்லும் கட்டுரையாளர் அதிஅசுரர், மனுதர்மத்தின் வருணாஸ்ரம பாணியில் தமிழ்த் தேசிய மாயைக்காரர்களும் ஒடுக்கப்பட்ட மக்களைப் பல கூறுகளாகப் பிரிப்பதாகக் குற்றம் சாட்டுகிறார். சக்கிலியர் ஒடுக்கப்பட்டோர்தான். ஆனால் நாயக்கர், நாயுடு, கவுடர் போன்ற ஆதிக்கச் சாதிகள் என்றைக்கு ஒடுக்கப்பட்டவையாக மாறின என்பதைத் தோழர் விளக்கினால் நல்லது.

"தமிழர்களுக்கு உள்ள தீண்டாமைக் கொடுமைகளைத் தாமும் ஏற்று, தமிழர்களுக்குள்ள ஜாதி இழிவுகளைத் தாமும் சுமந்து, தமிழர்களாகவே வாழ்பவர்களுமான இலட்சக்கணக்கான மக்களை பிறப்பு பார்த்து, ஜாதி பார்த்து அவர்களை வேறுபடுத்திப் பார்க்கிறார்கள் தமிழ்த்தேசியர்கள்."

என்னே ஒரு திரிபுவாதம்! தமிழர்களாகவே வாழும் இவர்கள் ஏன் இன்னும் தம்மைத் தெலுங்கர்களாய், கன்னடியர்களாய், மலையாளிகளாய்க் காட்டும் அவர்தம் பண்டிகைகளைக் கொண்டாடுகின்றனர்? நூற்றாண்டுகளாய் வாழ்ந்தும் தம் பண்டிகைகளை, தம் மொழியை, தம் பண்பாட்டை மறக்காமல் கடைப்பிடிக்கும் இவர்களைத் தமிழர் என்று எப்படிக் கூற இயலும்? இங்கே தாம் காலம்காலமாக வாழும் இவர்களை இருமொழியாளர் என்ற சொல்லால் அரவணைத்து, தமிழ்த் தேசிய இனத்துள் அவர்களையும் கொண்டு வருகிறார் ம.பொ.சி.

இராஜராஜனின், இராஜேந்திரனின் ரத்த சுத்தத்தை ஆராயும் அதிஅசுரனுக்கு பெரியாரின் ரத்தசுத்தம் புரியாமல் போனது ஆச்சரியம்தான். அவருடைய வார்த்தைகளில், உணர்வால், உழைப்பால், செயலால் தமிழனாக வாழ்ந்து, தமிழருக்கே தமிழரை உணர வைத்து, உயர வைத்த தோழர் பெரியார் என்று பெரியாரைத் தமிழராகக் காட்ட முயற்சிக்கிறார். உடல் முழுதும் எண்ணெயைப் பூசிக் கொண்டு உருண்டாலும் ஒட்டுவதுதான் ஒட்டும். பெரியாரைத் தமிழ்த் தேசிய இனத்துள் சொல்லலாமேயன்றித் தமிழராகக் காட்ட முயல்வது கேலியாகவே முடியும்.

"நம் வீட்டில் தமிழ் பேசுகிறோம். கடிதப் போக்குவரத்து நிர்வாகம், மக்களின் பேச்சு இவைகளைத தமிழில் நடத்துகிறோம். சமயத்தை, சமய நூல்களை, இலக்கியத்தைத் தமிழில் கொண்டு இருக்கிறோமே! இதற்கு மேலும் சனியனான தமிழுக்கு என்ன வேண்டும்?"

"மொழி என்பது ஒருவர் கருத்தை ஒருவர் அறியப் பயன்படுகிறதே தவிர, வேறு எதற்குப் பயன்படுவது? இதைத் தவிர, மொழியில் வேறு என்ன இருக்கிறது? இதற்காக - தாய்மொழி என்பதும், தகப்பன் மொழி என்பதும், நாட்டு மொழி என்பதும், முன்னோர் மொழி என்பதும், மொழிப் பற்று என்பதும் ஆகியவைகளெல்லாம் எதற்கு மொழிக்குப் பொருந்துவது?"

"எனது இந்தி எதிர்ப்பு என்பது இந்தி கூடாது என்பதற்கோ, தமிழ் வேண்டும் என்பதற்கோ அல்ல என்பதைத் தோழர்கள் உணரவேண்டும். மற்றெதற்கு என்றால், ஆங்கிலமே பொது மொழியாக, அரசாங்க மொழியாக, தமிழ் நாட்டு மொழியாக, தமிழன் வீட்டு மொழியாக ஆக வேண்டும் என்பதற்காகவேயாகும்."


(பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் தொகுதி 2, வே.ஆனைமுத்து, திருச்சி, 1974)

இதுவே பெரியாரின் மொழி சார்ந்த குறைபார்வை என்பது.

மொழி என்பது பற்றிப் பேச, சிறிதும் அறிவோ, ஆராய்ச்சியோ, ஆற்றலோ அற்ற நான் மொழி என்பது குறித்துப் பேசத் துணிந்தது, மொழித் தத்துவத்திலுள்ள என்னுடைய ஆசை மிகுதியின் பொருட்டேயாகும் (சொற்பொழிவுகளின் தொகுப்பு - நூல்: மொழி - எழுத்து)

என்று தன் குறை அறிவு சார்ந்து ஒப்புதல் வாக்குமூலம் தரும் அவரே பல முறை தம்மைக் கன்னடியர் என்று சொல்லிக் கொண்டபொழுதும் அவரை இழுத்துப் பிடித்துத் தமிழர் என்ற முத்திரை குத்துவதன் மூலம் திராவிடக் கருத்தியல் எதைத் தாபிக்க நினைக்கிறது?

தமிழ்த் தேசிய இன மாயை என்று மொழிவழித் தேசிய இனத்தை மாயையாகக் காட்டுவதன்மூலம் என்ன மாய்மாலத்தைக் காட்ட விரும்புகிறார் அதிஅசுரர்? புனைபெயரில் ஒளிந்துகொண்டு கண்டதே காட்சி, கொண்டதே கோலம், பேசுவதே பேச்சு எனத் திரியும் திராவிட மையவாதிகளுக்குச் சொல்ல ஒன்றுண்டு. இனி தமிழர்களைத் திராவிட வாதம் பேசி ஏமாற்ற முடியாது. இப்படிப் பேசித் திரிகிறவர்களால், அதன் வழி அமைந்த ஆட்சியாளர்களால்தான் தமிழினம் நசிந்து, பிற இனத்தார் ஆதிக்கம் செலுத்தி வாழும் இழிநிலை தமிழகத்தில் காணக் கிடைக்கிறது.

கர்நாடகத்தில் கன்னடத் தேசியவாதம் எப்படி சரியோ, கேரளாவில் எப்படி மலையாளத் தேசியவாதம் சரியானதோ, ஆந்திராவில் எப்படி தெலுங்குத் தேசியவாதம் சரியோ அது போல தமிழ் நாட்டில் தமிழ்த் தேசியவாதம் பேசுவது சரியே. மற்றெல்லா மாநிலத்திலும் செல்லுபடியாகும் மொழிவழி இனத் தேசியவாதம், தமிழகத்தில் மட்டும் திராவிட வாதமாக ஏன் பேசப்பட வேண்டும்? ஏனெனில் திராவிட வாதம்தான் இங்குள்ள பிற மொழி முதலாளிகளை, ஆட்சியாளர்களைக் காக்கும் அருமருந்து.

அதி அசுரனார் மற்றொரு கருத்தையும் திருவாய் மலர்ந்திருக்கிறார்.  "மொழியின் அடிப்படையில் தமிழனை அடையாளம் காணத்தொடங்கினால், ஒடுக்கும் பார்ப்பான் தமிழனாக வந்து விடுவான். ஒடுக்கப்படும் இஸ்லாமியர்கள் வெளியே நிற்பார்கள்." தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட பார்ப்பனன் எப்படித் தமிழனாகக் கருதப்படுவானோ, அப்படியே தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட இஸ்லாமியனும் தமிழனாகவே கருதப்படுவான். தமிழர்களைப் பேதம் பிரித்துச் சிக்கலாக்கி, அச்சிக்கலில் குளிர் காயும் திராவிடக் கருத்தியலின் ஓநாய்த்தனம் இங்கே வெள்ளிடைமலை.

எந்தத் தமிழை அடிப்படையாக வைத்துள்ளீர்கள்? என்ற அடுத்த கேள்வியின் மூலம் மொழி குறித்த அடிப்படைச் சிந்தனையும் அற்றவர்கள் திராவிடக் கருத்தியல் கொண்டவர்கள் என்பதை அவரே மெய்ப்பித்துக் கொள்கிறார். உலகின் எந்த மொழியானாலும் அது வழங்கும் நிலப் பகுதி சார்ந்து சற்றே திரிந்து, வெவ்வேறு சொற்களின் அழகியலோடுதான் காட்சியளிக்கும். அப்படித்தான் தமிழும் நெல்லைத் தமிழாகவும், கொங்கு தமிழாகவும் அழகு காட்டுகிறது.

தமிழர்களிடையே கலந்து புழங்கிவரும் வெவ்வேறு சடங்குகளும் பண்பாடுகளுமே தமிழர் பண்பாடுகள் தாம். அவற்றுள் நிலவும் ஒடுக்குமுறைகளை, வேறுபாடுகளைக் களைந்து தமிழன் என்ற தேசிய இன அடையாளத்தின் மூலம் திரண்டெழ முயற்சிக்க வேண்டுமேயன்றி, மூட்டைப் பூச்சிக்குப் பயந்து திராவிட மாயையில் மூழ்கலாகாது.

தமிழ்த் தேசிய இனத்தின் எல்லைப் பிரச்சனை பற்றிப் பேசும்போதும் இன்னும் தமிழர்களை முட்டாள்களாகவே பாவித்து பழந்தமிழ் எல்லை தொடங்கி வெவ்வேறு பரப்புகளைப் பேசி, மிகத் தெளிவாகக் குழப்புகிறார். தமிழ்த் தேசிய எல்லை குறித்து இவ்வளவு அக்கறையாகப் பேசும் இவர்களின் திராவிட நாட்டு எல்லை பற்றி இதே தெளிவோடு இவர்களால் விளக்க முடியுமா?

சென்னை மாகாணம்தான் இன்று திராவிட நாட்டு விஸ்தீரண அளவு. விஸ்தீரணம் கூடுவதும் குறைவதும் நம் நாட்டின் சவுகரியத்தையும் இஷ்டத்தையும் பொறுத்தது (குடியரசு - 02.12.1944)

பெரியாரின் குறைவுபட்ட எல்லைப் பார்வையை எங்கப்பன் குதிருக்குள் இல்லை எனும் பாணியில் அசுரர் எடுத்துக் காட்டியிருக்கும் பெரியாரின் மேற்கோளே காட்டி நிற்கும்.

ஆந்திரர், கர்நாடகர், மலையாளி, தமிழர் உள்ளிட்ட இன மக்களைக் கொண்ட திராவிட நாடு/திராவிடஸ்தான் கேட்டவர்கள் அதற்காக என்றைக்கேனும் தமிழக எல்லை தாண்டி பிரச்சாரம் செய்திருக்கிறார்களா? அல்லது அவர்களே எதிர்பார்க்காமல் தட்சிணப் பிரதேசத்திட்டம் முன்மொழியப்பட்டபோது பெரியார் எதிர்த்ததன் காரணமென்ன?

தட்சிணப் பிரதேசம் வந்தால் தமிழராகிய நமக்குத்தான் ஆபத்து. தமிழ், கன்னடம், மலையாளம் மூன்று நாடுகளும் ஒன்று சேர்ந்தால், பார்ப்பனர்களால் கழித்து விடப்பட்டு நம்மவருக்குக் கிடைத்துவரும் உத்தியோகங்களெல்லாம் மலையாளிகளின் கைக்குள் போய் விடும் (விடுதலை - 14.06.1956).

என்று கூறியதும் பெரியார்தான். இது குறித்து ம.பொ.சியின் தமிழன் குரல் அரசியல் கட்டுரைகளில் எது திராவிடம்? (பக். 150) என்ற கட்டுரை மேலும் விளக்கும்.

தமிழ் பேசும் நிலப் பகுதிகள் அனைத்தும் தமிழர் பகுதிகளாகக் கொள்ளப்பட்டு, தமிழ்த் தேசிய எல்லை வரையறை செய்யப்பட்டது. அந்த அடிப்படையில்தான் தேவிகுளம், பீர்மேடு, கொள்ளேகாலம், திருப்பதி ஆகியவை தமிழர் நிலப் பகுதிகளாகக் கேட்கப்பட்டன. ம.பொ.சி உயிரோடு இருக்கும்போதே பெரியார் விளக்கி விட்டதாகச் சொல்வது அசுரரின் அடுத்த அண்டப் புளுகு. தட்சிண ராஜ்யம் திட்டத்தை எதிர்க்கவும், தேவிகுளம்-பீர்மேடு தாலுக்காக்களை மீட்கவும், தமிழ்நாடு பெயர் கோரிக்கைக்கு வெற்றி தேடவும் அனைத்துக் கட்சிகளும் கலந்த ஒரு கூட்டணியை அமைக்க விரும்பி ம.பொ.சி. மூன்று முறை பெரியாரைச் சந்தித்துப் பேசியபோதும், அப்போராட்டத்தில் தான் பங்கேற்க வேண்டுமானால் தி.மு.க. இல்லாத கூட்டணி அமைக்கப்படவேண்டும் (அதாவது - தி.மு.க. இதில் பங்கேற்கக் கூடாது) என்பதே பெரியார் விதித்த நிபந்தனை என்பதையும், இந்த விடயத்தில் - அனைத்துக் கட்சிகளையும் போராட்டத்தில் இணைக்க எண்ணிய - ம.பொ.சி.யால் பெரியாரைத் திருப்திப்படுத்த முடியவில்லை என்பதையும் அவரது தன்வரலாறு தெரிவிக்கிறது (எனது போராட்டம், பக். 501-504).

தன்னை எதிர்த்து வெளியேறிய திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கண்ணீர்த்துளிகள் என்று சாடியபடி, அவர்தம் கருத்துக்கு எதிர்மறையாகப் பேசுவதையே தம் பிற்கால வாழ்வின் கொள்கையாகக் கொண்டு வாழ்ந்தவர் பெரியார். தி.மு.க. காமராசரை எதிர்த்தபோது பெரியார் பச்சைத் தமிழர் என்று அவரை ஆதரித்தார். அவர்கள் இந்தி எதிர்ப்புப் போரில் பங்கேற்றபோது (1965) பெரியார் அப்போராட்டத்தை ஒடுக்க அரசுக்கு - இந்திக்கு - ஆதரவு தெரிவித்தார். காங்கிரசை எதிர்ப்பதையே தம் முதல் வேலைத் திட்டம் என்று சொல்லிக் காங்கிரசை விட்டு வெளியேறிய பெரியார் தாம் பிறகு தி.மு.கவை எதிர்ப்பதற்காகவே காங்கிரசை ஆதரிக்கிறார். பெரியாரின் இத்தகைய அரசியலை இன்னும் விரிவாக்குவது கட்டுரைக்கு அநாவசியமென்பதால் இத்துடன் விட்டுச் செல்கிறேன்.

1946இலேயே தமிழ்த் தேசியக் கருத்தாக்கத்தைப் பேசி, விடுதலை பெற்ற திருநாளில் போர் முனையும் போர் முறையும் மாறும் நாள் என்று தமிழர் விடுதலை, மாநில சுயாட்சி, சுதந்திர சுயநிர்ணய சோஷலிசக் குடியரசுஎன்ற தம் கொள்கைகளை முன் வைத்து அதற்ற்காக ஒரு பிடி மண்ணையும் இழக்க மாட்டோமென, விடுதலை இந்தியாவிலும் அரசுடன் போராடி, சிறை சென்று மண் மீட்ட, தமிழ்த் தேசியத்தின் தந்தை ம.பொ.சி.யை எந்த விதமான ஆதாரமுமின்றித் தனிப்பட்ட காழ்ப்பின் காரணமாக மதவாதி என்ற சேறு பூச முயற்சிக்கும் அதி அசுரர்கள் சற்றே விழிமலர் திறந்து பார்க்கட்டும். தமிழ்த் தேசிய வெளிச்சம் தெரியும்.

- தி.பரமேசுவரி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)