தமிழ்த் தேசத்தின் விடுதலை அரசியலும் அதன் படிநிலைகளும் பல திசை நெடுக தம் அடிகற் கற்களைக் கொண்டு விளங்குகின்றன. காந்தி இந்தியா வுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார் என்பதைப் போன்ற எளிமைப் படுத்தல்கள் தமிழ்த் தேச அரசியலிலும் நடந்து கொண்டுதான் வந்திருக் கின்றன.
கல்லும் முள்ளும் மண்டிக் கிடந்த தமிழ்த்தேச அரசியல் பாதையை செப்பனிட்டவர்களுள் ம.பொ.சி. முதன்மையானவர். இன்னும் கூர்மையாகச் சொன்னால் தமிழகத்தின் தனித்துவம் கொண்ட தமிழ்த்தேச ஆளுமைகளில் ஒருவர் ம.பொ.சி. எனக் குறித்துக் கொள்ள பல காரணங்கள் உண்டு.
இந்திய தேசியமா? திராவிடத் தேசியமா? என தமிழகம் இரண்டுபட்ட போது ஒரு குரல் தனித்தொலித்தது. தமிழ்த்தேசிய சோசலிசக் குடியரசே நம் இலக்கு என முழங்கிய அக்குரல் ம.பொ.சி. யினுடையது. அச் சொற் பயன் பாட்டின் நீள அகலங்கள் நம் இன்றைய அளவுகோலில் மாறுபட லாம்தான்.
ஆயினும் தேச எல்லை வரையறுப்பு, தேச அடையாளங்களைத் தோண்டியெடுத்து மக்கள் மயப்படுத்தல், எதிரிகளை இனங்காணல் என ம.பொ.சியின் அரசியல் தமிழகத்தின் வரலாற்றில் பல கடமைகளை நிறைவு செய்தது. இந்தியா என்பதை சுய நிர்ணய உரிமைகள் கொண்ட தேசங்களின் கூட்டரசாக மட்டுமே முன் மொழிந்த ம.பொ.சி. ஒரு தேசத்தின் மெய்யான உரிமைகளை சற்றேனும் பெற்றிருக்கும் ஒரு தன்னாட்சியை தமிழகத்திற்காய் கனவு கண்டார்.
இந்தியா ஒரு பேருருக் கொண்ட ஆதிக்க வெறி கொண்ட வல்லரசாக உருவாவது குறித்த முன் ஊகம் அவருக்கு வரலாற்றில் வாய்க்கவில்லை. ஆயினும் தமிழக உரிமைகள் குறித்த தெளிவான புரிதல்களும் அவற்றினடியாக அவர் முன் வைத்த வரையறுப்புக் களும் தேசிய இன விடுதலை நோக்கில் தமிழகத்தில் வேறு எந்த அரசியல் குழாமையும் விட ம.பொ.சி.யை அறிவிற் சிறந்தவராக ஆக்கின என்றால் அது மிகையில்லை.
ராச.கோபாலாச்சாரியாரின் நம்பிக்கைக்குரிய ஊதுகுழல் ம.பொ.சி. என்பதும் அதனால் அவரின் சிந்தனையும் செயலும் பார்ப்பனர்க்கானது என்பதும் திராவிட இயக்கத்தினரால் "நிறுவப்பட்ட பேருண்மை கள்' ஆனால் ஆழ்ந்த தமிழ்த் தேசிய அரசியலில் இவ்வுண்மைகள் மெல்லக் கரைகின்றன.
தமிழ்த்தேசிய வரலாற்றாளர்கள் ராசகோபாலாச் சாரி எனும் எதிர் முகாமின் தலைவனை ம.பொ.சி. பயன்படுத்திய விந்தையைப் பேசுவதற்கு ஆகப் பெரிய ஆதாரமாய் சென்னை எனும் தமிழர் தலைநகர் திகழ்கிறது. "மதராஸ் மனதே' என முழங்கி ஆந்திர தேசத்தவர்களை தலை கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம் என்ற ம.பொ.சி.யின் முழக்கத்தின் அதிர்வில் ராசகோபாச்சாரி முதல் பெரியார் வரையான தமிழகத்தின் முதன்மைத் தலைவர்கள் அனைவரும் அணிவகுக்க வேண்டியதாயிற்று.
அரசியற் சறுக்கல்களும் புரிதற் பிழைகளும் வகுப்புப் பார்வையில் வழுக்கி விழுந்த கருதுகோள் களும் மற்றோரைப் போன்றே ம.பொ.சி.யிடமும் உண்டு. ஆனால் வரலாறு அவற்றைப் புறமொதுக்கி முன்னேறுகிறது அவர் ஆற்றிய தேசியக் கடமை களின்நன்றியுணர்ச்சி பீறிட!
சென்னையின் தலைமையிலான ஒருங்கிணைந்த ஆந்திரம் கோரி பட்டினிப் போர் நிகழ்த்திய பொட்டி சீராமுலுவை சாவுப் படுக்கையில் சந்தித்த ம.பொ.சி. "சென்னை நகர் மீது உரிமை கொண்டாடுவதை விட்டு ஆந்திர மாநிலம் கோரினால், தமிழரசுக் கழகம் ஆந்திரர்களுடன் பூரணமான ஒத்து ழைக்கும்' எனச் சொல்லும் அளவிற்குத் தெளிவாகத்தான் முன் நகர்ந்திருக்கிறார்.
ராசகோபாலாச்சாரியின் ஆதரவும் இல்லாமல் வட வெல்லைப் போராட்ட முயற்சிகளில் ஈடுபட்ட ம.பொ.சி. திருத்தணி காக்க ஆறுவாரக் கடுங்காவல் தண்டனை பெற்றதை இங்கே குறித்துக் கொள்வோம்.
"எனது நிலைமை அன்று பரிதாபமாகத்தான் இருந்தது. ஆயினும் நான் மனந் தளரவில்லை. நான் எந்தவொரு தனி மனிதரையோ, தனி ஒரு அரசியல் கட்சியையோ நம்பி எல்லைக் கிளர்ச்சியில் ஈடுபட வில்லை. சென்னையைக் காப்பதிலே எனக்குக் கை கொடுத்த தமிழினப் பொதுமக்கள், வடக்கெல்லையை மீட்பதிலே என்னைக் கைவிட மாட்டார்கள் என்று நான் உறுதியாக நம்பினேன் எனத் துயரத்தோடு பதிவு செய்ததை தமிழ்த் தேசம் உணரத் தலைப்படட்டும்.
ஒப்போலை அரசியலாளரின் சொல் நுட்பம் ஏதுமின்றி தமிழகத்தின் பெரும் அரசியற் தலைவர் களை ம.பொ.சி. எதிர் கொண்டதற்கு அவரின் அரசியற் புரிதலின் வலிமையே காரணமாக அமைந்திருந்தது.
சென்னையை ஆந்திரத்திடம் பறி கொடுக்க நேர்ந்திருகுகக் கூடிய வரலாற்றுத் துயரம் ம.பொ.சி.யால் மட்டுமே தடுக்கப்பட்டது. தட்சிணப் பிரதேசம் என முன்வைக்கப்பட்ட கருதுகோளையும் தீவிரமாக எதிர்ப்பதில் ம.பொ.சி. முன்னின்றார். தட்சிணப் பிரதேச சூழ்ச்சி தமிழ்த் தேசத்தை சூழ்ந்த போது அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைத்து (அண்ணா, இரா. நெடுஞ்செழியன், ப.ஜீவானந்தம், சு.ர.நல்லசிவம், ப.சு. சின்னத்துரை, பாரதிதாசன், சி.பா. ஆதித்தனார், கா. அப்பாத்துரையார் உள்பட பலர் கலந்து கொண்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் பிடி. இராசன் தலைமையில் போராட்டக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது) ம.பொ.சி. எதிர்கொண்டார்.
அரசியல் மேற்படலத்தில் தேவைப்படும் போதெல் லாம் தனிப்பகை, தனிப்பட்ட விருப்பு வெறுப்பு போன்றவற்றை சுருக்கிக் கொள்ளாது காமராசர் முதல் பெரியார் வரை தேச நலனுக்கென ஒருங்கிணைப் பதில் அவர் காட்டிய பாங்கு நமக்கும் நல்ல பாடம்தான்.
தன் பணியைத் தொடர்ந்த ம.பொ.சி. ஒப்போலை அரசியலின் இழுப்புக்குச் செல்ல வேண்டிய தேவை யில்லாது போயிற்று. அதன் வாய்ப்பாக தமிழ்நாடு பெயர் சூட்டு விழாவின் தலைவராக தமிழரசும் ம.பொ.சி.யையே முன்னிறுத்தியது. திராவிட முன் னேற்றக் கழகப் பொதுச் செயலர் அண்ணா ம.பொ. சிக்கு அந்த வாய்ப்பை வழங்கியபோது, "கால்நகம் முளைத்த காலம் முதல் நான் காங்கிரசுக்காகப் பாடுபட்டுள்ளேன். அங்கு கூட எனக்குக் கிடைத்திடா வாய்ப்பு திராவிட இயக்கத்தவரால் இங்கே கிடைத் திருக்கிறது. என் தாய் நாட்டுக்குப் பெயர் சூட்டும் பெருவிழாவுக்குத் தலைமை தாங்க நான் என்ன தவம் செய்தேனோ?' என நெக்குருகிப் பேசியதை நாம் உணர்வுப்பூர்வமாக உள்வாங்க முயல்வோம்.
சுய நிர்ணய உரிமை எனும் பொருள் பொதிந்த சொற்களைத் தமிழ்த் தேசிய அரசியலோடு இணைத்துப் பேசிய ம.பொ.சி. தமிழ்த் தேசத்தின் முதன்மை உரிமைகளுள் ஒன்றான தமிழ் அலுவல் மொழியாகக் கல்வி மொழியாக வேண்டும் என்பதை விளக்கிப் பரப்புரை செய்து தக்க அறிவாற்றலுடன் பேசியும் செயல்பட்டும் வந்திருக்கிறார்.
"ஜெர்மனி, பிரான்சு, இத்தாலி, ருசியா, சப்பான் முதலிய விஞ்ஞானக் கலைகளில் முன்னணியில் உள்ள நாடுகளில் எல்லாம் பல்கலைக் கழகப் பாடங்களுக்கு அந்தந்த நாட்டு மொழியே போதனா மொழியாக இருந்து வருகிறதென்ற உண்மை நம் நாட்டுப் பட்டதாரிகளின் நினைவுக்கு வருவதில்லை. நாம் நினைவூட்டினாலும், அவர்கள் அதனை நெஞ்சில் கொள்வதில்லை' என்றும் பல்கலை கழகப் பாடங்களைப் பயிற்றுவிப்பதற்கான மொழி தமிழா, ஆங்கிலமா? என்று விவாதிக்கப்பட்டு வருகின்றது. ஆங்கில நாட்டில்ல, நம் தாயகமான தமிழ்நாட்டில் தான். இதைவிட மானக்கேடு தமிழருக்கு வேறு என்ன இருக்க முடியும்? இதுபோன்ற ஒரு விவாதம், உரிமை வாழ்வு நடத்தும் எந்த ஒரு நாட்டிலும் நடந்ததாக வரலாறு சொல்லவில்லை என்றும் அங்கலாய்க்கும் ம.பொ.சி. ஒரு தேசம், அதன் தனித்த மொழி, தனித்த நிலம், தனித்த பண்பாடு என அனைத்தையும் உள்ளார்ந்து உணர்ந்திருந்தார் என்று உறுதிபட நம்மால் உரைக்க முடிகிறது.
திராவிட இயக்கத்தின் முற்றான பகையாக, காங்கிரசின் வேண்டாத விருந்தாளியாக தன் வாழ்வின் அதிர்வுமிக்க பகுதிகளைக் கழித்த ம.பொ.சி. தமிழ்த் தேசத்தவர் என்ற முறையில் ஆற்றிய கடமைகளை பின்வருமாறு தொகுக்க முயல்வோம்.
1. தமிழ்த் தேசத்தை ஒரு தேசமாக உணர்ந்தும் பேசியும் நடத்திய அரசியல்.
2. அதன் நலனிலிருந்து அனைத்தையும் நோக்கிய தமிழ்த் தேசியப் பார்வை.
3. தேச நலன் கருதி எவருடனும் அணி சேர முனைந்த நெஞ்சுரமும் நேர்மையும்.
4. உலகின் தேச உருவாக்கங்களை தமிழ்த் தேசத் துடன் இணைத்துப் பார்த்து கருத்தறிவித்த அறிவாற்றல்.
5. மற்ற அரசியற் குழாமைப் போலன்றி ஆங்கிலத் தையும் தமிழர்களின் நலன்களிலிருந்து எதிர்த்தமை.
6. திராவிட நாடு என்பது இன்னொரு அடிமைத் தனமே என்ற புரிதலும் அதை வெளிப்படையாகப் பேசிய அரசியலும்.
7. அனைத்திற்கும் மேலாக தமிழ்த் தேச நிலப் பரப்பின் மீதான நீங்காப் பற்றும் அதன் பொருட்டு நீறுபூத்தெழுந்த மாறாப் போர்க்குணமும்.
இவற்றோடு இழையிழையாக அவரிடம் பிணைந் திருந்த தமிழ்த்தேசப் பற்று அவரை தமிழ்த் தேசிய அரசியலை தன் வரம்பிற்குட்பட்ட வகையில் வளர்த்தெடுக்க துணை செய்தது.
இளங்கோவடிகள் விழா நடத்தியதும், சிலப்பதி கார மாநாடு கண்டதும் தமிழரசுக் கழகம் என தன்ன மைப்புக்குப் பெயர் சூட்டிக் கொண்டதும், இந்திய விடுதலைப் போராட்ட காலத்தில் கட்டபொம்மனை யும், வ.உ.சி.யையும், திருவுருக்களாக முன் வைத்ததும், தன் அமைப்புக் கொடியில் மீன், புலி, வில் மூன்றையும் பொறித்துக் கொண்டதும் ம.பொ.சி.யின் தமிழ்த் தேசிய உணர்தலுக்கான சான்றுகள்.
ம.பொ.சி. விரும்பிய இந்தியக் கூட்டிணைவு வரலாறு பெறாத பிள்ளையாய்ப் போனதும் இந்தியா என்பதன் ஒற்றைச் சொல்லில் ஈழம் புதைக்கப்பட்ட நமது காலத்தின் கதை இந்தச் சுமையை அவர் மேல் ஏற்றிச் சிரிக்க நமக்கு ஒருபோதும் விருப்பமில்லை.
தான் கலந்து கொள்ளும் பொதுக் கூட்ட நிகழ்வு களில் தமிழ் தமிழினம், தமிழ்நாடு என்று ம.பொ.சி. முழங்குவதும் ஒவ்வொன்றுக்கும் மக்கள் கூட்டம் வாழ்க என்று முழங்குவதும் அக்கால வழக்கம்.
அதன் நோக்கம் தமிழ்த்தேச உணர்தலை மக்கள் மயப்படுத்துவதன்றி வேறில்லை. இருந்த முகாமிற்கும் கொண்டிருந்த அரசியலுக்கும் முரண்களை ம.பொ.சி யின் வாழ்க்கை நெடுக நம்மால் பார்க்க முடிகிறது.
ஆனால் நமக்குத் தெரியும், தேசம் எனும் தாய் எங்கிருந்தாலும் தன் மகவை ஈர்த்து அணைத்துக் கொள்வாள். இந்தியாவின் ஆதிக்கக் கோட்டையான காங்கிரசில் இருப்பினும் ராச கோபாலாச்சாரி போன்ற அறிவார்ந்த எதிரிகளின் அணுக்கத்தில் இருப்பினும் ம.பொ.சி. எனும் தன் மகனை தமிழ்த் தேசம் ஆரத் தழுவிக் கொண்டது.
தாயோடு உறவாடுவதை தடுக்க கட்சி வேலிகளுக்கு ஏது வலிமை?