தமிழகத்தில் சமீப சில ஆண்டு களாக தமிழ்த் தேசியம் குறித்த புரி தலும், விழிப்புணர்ச்சியும் ஏற்பட்டு வர, அவ்விழிப்பு திராவிடத் தேசியத் தையும், திராவிடக் கருத்தியலையும் விமர்சிப்பதும், இக்கருத்தியலால் தமிழ்த் தேசியத் துக்கு ஏற்பட்ட இழப்புகளைப் பற்றி குறிப்பிட வேண்டி நேர்வதும் தவிர்க்க இயலாத தாக ஆகி விடுகிறது.
இதனால், இதையட்டி திரா விடப் பாரம்பர்யக் கட்சிகள் பற்றியும் விமர்சனங்கள் எழுவது இயல்பாகி இருக்கிறது.
இந்நிலையில் இதுபற்றி மண் மொழியின் நிலை சார்ந்து தெளிவுக் காக சில கருத்துகள்.
திராவிட இயக்கக் கட்சிகள்:
1. விமர்சனத்திற்குள்ளாக்கப் படும் திராவிட இயக்கக் கட்சிகள் என் பதாக பலரும் குறிப்பிடுவது தி.மு.க., அ.தி. மு.க. ஆகிய தேர் தல் கட்சி களும், தேர்தலில் நேரடியாக நிற்கா விட்டா லும் இவ்விரண்டில் எது அதி காரத்தில் இருந்தாலும் அதை ஆத ரித்து நிற்கும் தி.க.வும்தான். ஆக பெரு மளவும் இந்த மூன்று கட்சிகளே விமர்சனத்திற் குரியதாக இருக்கின்றன.
2. இம்மூன்று கட்சிகளுக்கு அப்பால் மறுமலர்ச்சி திராவிட முன் னேற்றக் கழகம், மார்க்சிய பெரியா ரியப் பொதுவுடைமை கட்சி, பெரி யார் திராவிடக் கழகம் முதலான கட்சிகளும் இருக்கின்றன.
இவை மூன்றுமே, தமிழக உரிமை கள் நலன்களுக்காகப் போராடுவது, தமிழீழ விடுதலைக்கு ஆதரவாக குரல் கொடுப்பது ஆகிய கொள்கைகளில் உறுதியோடு இருந்து வருகின்றன. இதில் ம.தி.மு.க. தேர்தல் கட்சியாக பிற கட்சிகளோடு கூட்டு சேர்ந்து அதி காரத்தில் பங்கு வகித்தாலும், ஒப்பு நோக்கில் தி.மு.க., அ.தி.மு.க. நிலைப் பாட்டிற்கு சரிந்து போகாமல் தன் தனித்துவத்தைப் பாதுகாத்துக் கொள் ளும் வகையில் செயல்பட்டு வருகிறது.
இந்த வகையில் திராவிட இயக் கக் கட்சிகள் எனப்படுவதை நாம் புரிந்து கொள்ளலாம்.
திராவிட இயக்கக் கருத்தியல்:
1. திராவிட இயக்கக் கருத் தியலின் புவியியல் கோட்பாடான திராவிட நாடு என்பது தமிழகம், ஆந்திரம், கர்நாட கம், கேரளம் ஆகிய நான்கு தேசிய இனப் பகுதிகளை உள் ளடக்கியது. இதுவே திராவிட நாடு எனப்பட்டது.
2. திராவிட நாட்டின் மொழி, இந்த நான்கு மொழிகளையும் உள் ளடக்கியதுதான் என்றாலும் 1956 மொழி வாரி மாநில உருவாக்கத்தை யட்டி தமிழகம் தனியே அமைய தாய்மொழியாம் தமிழும், அயல் மொழியாம் ஆங்கிலமும் என இரு மொழியைக் கொண்டதால், இரு மொழிக் கொள்கை, இதன் மொழிக் கொள்கையாயிற்று.
3. பொருளியல் தளத்தில் வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என தென்னிந்திய முதலாளிகளின் நலன் காத்தால்.
4. சமூகத் தளத்தில், இட ஒதுக் கீடு, சமூக ஏற்றத்தாழ்வைக் களைதல், பெண்ணுரிமை
5. பண்பாட்டுத் தளத்தில் கட வுள் மறுப்பு, தன் மரியாதை, பார்ப்பன எதிர்ப்பு, மூட நம்பிக்கை எதிர்ப்பு, பகுத்தறிவு நோக்கு முதலானவை.
இவற்றையே சுருக்கமாக திரா விட இயக்கக் கருத்தியல் என்கிறோம்.
இந்த திராவிட இயக்கச் செயல் பாடுகளை ஆய்வு செய்ய, திறனாய்வு செய்ய புகும்போது அதை இரு வகை யில் நோக்க வேண்டியுள்ளது.
1. அதன் கருத்தியலின் கருவி லேயே உள்ள கோளாறு.
2. அக்கருத்தியலின் செயல்பாட் டில் உள்ள கோளாறு.
முதலில் கருத்தியல் கோளாறு:
1. நாடு என்பது ஒரு மொழி பேசும், ஒரு தேசிய இன அடிப்படை யிலே - இதில் மொழிச் சிறுபான்மைகள் இருப்பது தனி செய்தி - அமைய வேண்டுமேயல்லாது, பல மொழி பேசும் பல் தேசிய இன அடிப்படையில் அமையாது - அமையக்கூடாது. அமைந்தால் அது பல்வேறு சிக்கல் களை உருவாக்கும். இதில் எல்லா தேசிய இனங்களும் தன்னுரிமை பெற்று ஒரு கூட்டாட்சியாய் அமை வது என்பது வேறு. ஆனால் அப்படி அல்லாமல் எல்லாம் சேர்ந்து ஓர் அர சாக அமைவது என்பது வேறு. திராவிட நாடு, அதன் புவியியல் அமைப்பு என்பது நான்கு தேசிய இனங்களை உள்ளடக்கியதாக இருந் தது. இது அறிவியலுக்கும் பகுத்தறி வுக்கும் முரணானது.
2. நாடுகள் மொழிவழி தேசிய இன அடிப்படையில் அமைய வேண் டும் என்னும்போது, இப்படிப்பட்ட நாட்டு அரசுகள் ஒரு மொழிக் கொள்கை கொண்டதாகவே அமை யும். இதிலும் மொழிச் சிறுபான்மை யினருக்கு சில உரிமைகள் சலுகைகள் உண்டு என்றாலும், அடிப்படை, அதாவது கல்வி, நிர்வாகம், நீதி ஆகிய அனைத்தும் அத்தேசிய மொழியி லேயே அமையும். ஆனால் திராவிட இயக்க மொழிக் கொள்கை, தமிழை ஒரு வரம்புக்குள் அடக்கி, பிற அனைத் துக்கும், உயர்கல்வி, உயர் நிர்வாகம், உயர் வேலைவாய்ப்பு, உயர்நீதிமன்ற நிர்வாகம், நடைமுறை ஆகிய அனைத் திற்கும் ஆங்கிலத்தையே கொண்டிருக் கிறது.
ஆக திராவிட இயக்கக் கருத்தி யலின் புவியியல் இருப்பு, மொழிக் கொள்கை இவ்விரண்டுமே சமூக அறிவியலுக்கு முரணானதாய் இருந்து, அதாவது சமூகப் பண்பாட்டுத் தளத் தில் மூட நம்பிக்கை எதிர்ப்பு, பகுத் தறிவு பேசியவர்கள் திராவிட நாட்டின் புவியியல் இருப்பில், மொழிக் கொள் கையில் மூட நம்பிக்கை கொண்டவர் களாக பகுத்தறிவற்றவர்களாக நடந்து கொண்டார்கள் என்பதே இதன் பொருள்.
என்றாலும் இதன் பின்னால் வேறு பலரின் நலன் அடங்கியிருந்தது உண்மை. ஆனால் அந்த உண்மையை மூடி மறைக்க, தாங்கள் தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவுமே நிற்பதாகக் காட்டிக் கொள்ள, இவர்கள் ஒரு புதிய தத்துவம் தந்தார்கள்.
அதாவது தமிழன் என்பவன் மொழியால் தமிழன், இனத்தால் திராவிடன், நாட்டால் இந்தியன் என் றார்கள். இந்த கூற்று சார்ந்த அறிவியல் பொருத்தப்பாட்டின் போலித் தனத் தைப் புரிந்துகொள்ள இயலாத ‘இளிச் சவாய்த் தமிழர்களோ’ திராவிட இயக்க போதையிலிருந்து மீள வாய்ப் பற்றவர்களாய் அதிலேயே மயங்கித் திளைத்தனர். இன்னமும் திளைத்துக் கொண்டிருக்கின்றனர்.
சரி, நாம் சிந்திப்போம். உலகத் தில் எந்த மனிதனுக்காவது மொழி வேறு, இனம் வேறாக அமையுமா? உலகிலுள்ள எல்லா மனிதர்களுக்கும் மொழியும் இனமும் ஒன்றுதான். இதை அடிப்படையாகக் கொண்டு அமைவதே நாடு. ஆங்காங்கே சில மக்கள் பிரிவினர்க்கு, புலம் பெயர்ந்து வாழ்பவர்களுக்கு வேண்டுமானால் மொழியும் இனமும் ஒன்றாயிருந்து நாடு மட்டும் வேறாக இருக்கலாம். ஆனால் மொழியும் இனமுமே வேறு வேறாக இருக்காது.
காட்டாக ஒரு பிரெஞ்சுக்கார னைக் கேட்டால் என்ன சொல்வான்? நான் மொழியால் பிரெஞ்சுக்காரன், இனத்தால் பிரெஞ்சுக்காரன். நாடும் பிரான்சுதான் என்பான். உலகில் 90 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட மக்க ளுக்கும் இப்படியே அமையும். சில வரலாற்றுச் சூழல்களில் மொழியும் இனமும் ஒன்றாயிருந்து நாடு மட்டும் வேறாக அமையும். ஆனால் மொழி யும் இனமுமே வேறுவேறாக அமைந்த மக்கள் உலகில் கிடையாது.
ஆனால் திராவிட இயக்க ஆதிக்க சக்திகள் இதை முற்றாக மறைத்து தமிழனுக்கு மட்டும் மேற் படித் தத்துவத்தைத் தந்து அவனை மயக்கத்தில் கிடத்தின.
ஆக இவ்விரண்டும் திராவிட இயக்கக் கருத்தியலின் குறை.
செயல்பாட்டுக் கோளாறு கள்: திராவிட இயக்கம் தொடக்கக் காலத்தில் முன்வைத்த முழக்கங்களுக்கு அவர்கள் எந்த அளவுக்கு விசுவாசமா யிருந்தார்கள், துரோகமிழைத்தார்கள் என்பதைப் பட்டியல் போட்டு விளக்க வேண்டியதில்லை. அவை எல்லாரும் அறிந்ததுதான். வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்று சொல்லி எல்லாவற்றுக்கும் வடக்கு மேல் பழி போட்டு பின் வடக்கோடு கூட்டு வைத்து, வடக்கு தந்த சுகங்களை அனு பவிக்கத் தொடங்கி, பகுத்தறிவு, மூட நம்பிக்கை எதிர்ப்பு பேசியவர்கள், அதிகாரம் பறிபோய் விடுமோ என்கிற அச்சத்தில் அனைத் தையும் கைவிட்டு, எல்லாவற்றிலும் சகுணம் பார்த்துச் செயல்படுவது வரை, நீண்ட பட்டிய லையே முன் வைக்கலாம்.
ஆக திராவிட இயக்கக் கருத்தி யலில் கருவிலேயே சில கோளாறுகள் உண்டு. எஞ்சியவற்றிலும் செயல்பாட் டில் பல கோளாறுகள் உண்டு.
இதில் தமிழ்த் தேசியச் சிந்தனை யாளர்களின் விமர்சனம் எது சார்ந்தது என்பதே இங்கு நமக்கு முக்கியம்.
த.தே.சி.யினர் மையப்படுத்தி விமர்சிப்பது திராவிட இயக்கத்தின் செயல்பாட்டுக் கோளாறுகளை அல்ல. அதுவும் விமர்சனத்திற்குரியதுதான் என்றாலும், மையம், முதன்மை அதுவல்ல. அவர்கள் மையப்படுத்தி விமர்சிப்பது திராவிட இயக்கத்தின் கருத்தியலில் கருவிலேயே உள்ள கோளாறையே, அதாவது திராவிட நாட்டுக் கருத்தாக்கத்தை, திராவிட நாட்டுச் சிந்தனையையே, இது தமிழகத் திற்கும், தமிழர்களுக்கும் பெரும் இழப் புகளைப் பாதகங்களை ஏற்படுத்துவது என்பதனாலேயே இதை எதிர்க்கின் றனர்.
இந்த இழப்புகளும் பாதகங் களும் மிக விரிவாக ஆராயப்பட வேண்டியவை என்றாலும் சுருக்கமாக சாரமாக சில.
1. திராவிட நாட்டுக் கருத் தாக் கத்தின் விளைவாக, அடிப்படையாக வும், முதன்மையானதாகவும் தமிழர் அடையாளம், தனித்தன்மை, அது சார்ந்த நலன் புறக்கணிக்கப்பட்டது.
2. தமிழகத்தின் அரசியல் அதி காரத்தில், ஆட்சியில், பொருளியல் வகை நிறுவனங்களில் சமூகப் பண் பாட்டுத் தளங்களில் திரைத்துறை உள் ளிட்ட அனைத்திலும் தமிழர் அல்லா தோரின் ஆதிக்கம் பரவியது.
3. தமிழ்மொழி பின்னுக்குத் தள்ளப்பட்டு ஆங்கிலம் முன்னுக்கு வைக்கப்பட்டு, அதற்கு முன்னுரிமை தரப்பட்டது.
4. இதனால் தமிழன் தமிழக உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு இல் லாது திராவிட மயக்கத்துக்கு ஆட் பட்டு, பல்வேறு உரிமைகளையும் வளங்களையும் இழந்தது.
5. இந்திய தேசியத்துக்கு மாற் றாகத் தமிழ்த் தேசியத்தை முன்வைக்க மக்கள் அணியமாவதற்கு மாறாக, திராவிடத் தேசியக் கருத்தியல் குறுக்கே வந்து தமிழ்த் தேசியச் சிந்தனையைத் தடம் புரளச் செய்தது.
ஆகிய இக்காரணங்களாலேயே இதன் அடிப்படையிலேயே த.தே.சி. யினர் திராவிடக் கருத்தியலை எதிர்க் கின்றனர், விமர்சிக்கின்றனர்.
எனவே இந்த நியாயத்தைத் திராவிட இயக்கச் சிந்தனையாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும். எப் போதோ வரலாற்றில் நேர்ந்து விட்ட பிழையை, அல்லது திட்டமிட்ட சதியை, அது தமிழர்களுக்கு, தமிழ்த் தேசியத்துக்கு எதிரானது என்று தெள் ளத்தெளிவாய் அறிந்தபின்னும், நாம் மதித்துப் போற்றும் சிலரால் அது முன் வைக்கப்பட்டது என்பதற்காகவே அதைக் கட்டியழ முடியாது. எனவே நேர்மையான முறையில் இதுபற்றி சிந்தித்து, திராவிடக் கருத்தியலில் தமிழ்த் தேசியத்துக்கு இசைவானது எது, எதிரானது எது, அதனால் தமி ழகமும், தமிழர்களும் பெற்ற பலன்கள் யாவை? இழப்புகள் எவை என சிந் தித்து தமிழ்த் தேசியச் சிந்தனை களோடுத் தங்களைப் பிணைத்துக் கொண்டு, தமிழ்த் தேசிய எழுச்சிக்கு, அதன் விழிப்புக்கு, பரவலுக்குத் துணை நிற்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இந்த நோக்கில் திராவிட இயக்கப் பற்றாளர்களின் சிந்தனைக்கு மேலும் சில.
1. தமிழ்நாட்டில் தமிழன்தான் மொழியால் தமிழன், இனத்தால் திரா விடன் என்பதுபோல ஒரு மலையாளி, ஒரு தெலுங்கன், கன்னடன் யாராவது தங்களை அப்படிச் சொல்லிக் கொள் கிறார்களா?
2. திராவிட இயக்கம் தமிழ் நாட் டில் மட்டுமே பரவி, அல்லது பரப்பப் பட்டதே தவிர, அண்டை மாநிலங் களில் எங்காவது திராவிட இயக்கம் உண்டா. இருந்தால் அது தமிழ் நாட் டுக் கட்சிகளின் கிளை அமைப்பாக தமிழர்கள் மத்தியில் மட்டுமே நிலவுமே அல்லாது, மலையாளிகள், தெலுங்கர்கள், கன்னடர்கள் யாராவது திராவிட இயக்கக் கட்சி கட்டியிருக் கிறார்களா?
3. திராவிட நாடு என்று சொல்லி, தமிழன்தான் ஏமாந்தான், உரிமைகளை இழந்தானே தவிர, அண்டை மொழிக் காரர்கள் எதையாவது இழந்தார்களா? மாறாக பலது பெற்றார்கள். அதோடு தற்போது காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாற்று உரிமைகளையும் இழந்து வரு கிறோம். யாராவது எல்லாம் திராவிடர்கள் தானே என்று எதையாவது விட்டுக் கொடுக் கிறார்களா?
4. தமிழ்நாட்டில் திராவிட இயக்கத் தால் தான் எல்லா முன்னேற்றமும் வந்தது என்று சிலர் பெருமை பேசுகிறார்களே, அண்டை மாநிலங்களில் திராவிட இயக்கம் இல்லாமலேயே அவர்கள் நமக்கு நிகராகவும், நம்மைவிட கூடுதலாகவும் வளர்ச்சி பெற்றிருக்கிறார்களே அது எப்படி?
5. திராவிட இயக்கம் தோன்றிய தமிழகத்தில் தமிழன் மொழி சொரணை, இன சொரணை இல்லாமல் இருக்கிறான். ஆனால் திராவிட இயக்கம் தோன்றாத அண்டை மாநிலங்களில் அம்மக்கள் மொழி சொ ரணை, இன சொரணையோடு இருக்கிறார் களே, எப்படி? இந்த நிலைமைகளுக்கு யார் காரணம்?
இவையனைத்தும் நம் சிந்தனைக்குரிய செய்திகள்.
எனவே, தமிழ்த் தேசியம் என்கிற கருத் தாக்கத்தைத் திராவிட தேசியம் என்கிற பொய்மையோடு, மாயையோடு தொடர்பு படுத்தி இதை ஏட்டிக்குப் போட்டியாக நோக்காமல், அந்த நோக்கில் வெட்டி விவா தங்களில் ஈடுபடாமல், தமிழ், தமிழக, தமிழர் நலன் நோக்கில் எது சமூக அறிவியலுக்கு பொருந்தி வருமோ, அந்த நோக்கில் எதையும் மறு ஆய்வு செய்து, தமிழ்த் தேசிய எழுச்சிக்கு உதவுமாறு அனைவரையும் அன்போடு வேண்டிக் கொள்கிறோம்.
திராவிடக் கருத்தியல்
திராவிட இயக்கக் கருத்தியல் பற்றி விமர்சித்தாலே திராவிட இயக்க வழிவந்த சிலருக்குக் கோபம் வருகிறது. இவர்கள் உடனே பெரியார் அண்ணா உருவங்களின் அருகே போய் ஒளிந்து நின்று அவர்களது சாதனைகளைப் பற்றிப் பேசத் தொடங்கி விடுகிறார்கள்.
இவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இங்கே நாம் பேசுவது, விமர்சிப்பது திராவிட இயக்கக் கருத்தியல் பற்றி. அது எப்படித் தமிழ்த் தேசியத்துக்கு எதிராகக் குந்தகமாக அமைந்தது என்பது பற்றி. எனவே அது பற்றித்தான் பேசவேண்டுமே அல்லாது பெரியார், அண்ணா உருவங்களின் பின்னே போய் ஒளிந்து கொள்ளக் கூடாது.
காரணம், நம் விமர்சனம் திராவிட இயக்கக் கருத்தியல் பற்றிதானே தவிர, பெரியார், அண்ணா செயல்பாடுகள் பற்றி அல்ல. இது இவர்கள் விமர்சனத்துக்கு அப்பாற் பட்டவர்கள் என்பதனால் அல்ல. வரலாற்றில் முன்னோடிச் சிந்தனையாளர்கள் ஒவ்வொருவரும் தனி நபராக ஆற்றியப் பங்கு என்பதும் அது போற்றுதலுக்குரியது என்பதும் தனி. அதேவேளை, அவர்களது கருத்தியலில் செயல்பாடுகளில் குறைபாடுகள் இருந்தால் அதைச் சுட்டிக் காட்டுவது என்பதும் தனி.
இதுவரை நாம் கருத்தியல் குறைகளை மட்டும்தான் குறிப்பிட்டு வருகிறோமே தவிர, செயல்பாட்டுத் தளங்களில் அல்ல. அதற்குள்ளேயே நாம் போகவில்லை. கருத்தியலே தவறாயிருக்கும் போது செயல்பாடு மட்டும் எப்படி செம்மைப்பட முடியும் என்பதே நம் கேள்வி. ஆகவே தற்போதைக்கு கருத்தியல் தளத்திலேயே நம் விவாதம்.
இதை இங்கே வலியுறுத்திச் சொல்வதன் நோக்கம் திராவிட இயக்கக் கருத்தியலை விமர்சனம் செய்தால் அது ஏதோ குணாவழி வந்த சிந்தனை என்பதுபோல சிலர் பேசி வருகின்றனர். திராவிடத்தால் வீழ்ந்தோம் நூல் வழி குணா முன்வைக்கும் தளம் வேறு. திராவிட இயக்கக் கருத்தியல் மீது தமிழ்த் தேசிய நோக்கில் நாம் முன் வைக்கும் தளம் வேறு. இரண்டிற்கும் வேறுபாடு உண்டு.
இது தனிநபர் தாக்குதலற்றது. உணர்ச்சி வயப்படலுக்கு ஆட்படாமல் எதையும் அறிவியல் நோக்கில் சிந்திக்கத் தூண்டுவது. “தமிழரசுக் கழகம்” கண்டு தமிழின உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த ம.பொ.சி.யின் சிந்தனைகளை மதிப்பது. அதனோடு நெருக்கமாக உறவு கொண்டது. எனவே இந்த வேறுபாட்டுத் தன்மைகளோடு இதைப் புரிந்து கொள்ள, விளங்கிக் கொள்ள வேண்டும்.