நிலவில் காற்று இல்லை, தண்ணீர் இல்லை. 250 டிகிரி வரையிலான உயர்ந்த வெப்பநிலை நிலவுகிறது. ஆனால் நிலவில் வருங்கால ஆய்வுகளுக்காக முகாம்களை அமைக்கத் திட்டமிடும் நாசா போன்ற விண்வெளி நிறுவனங்களுக்கு அங்கு நீண்ட காலம் புதிராகத் தொடரும் தூசுக்களே பெரும் சவாலாக உள்ளது. இந்த தூசுக்கள் விண்வெளி ஆடைகளை அரிக்கின்றன; இயந்திரங்களில் அடைப்புகளை ஏற்படுத்துகின்றன; அறிவியல் உபகரணங்களில் குறுக்கீடுகளை உண்டாக்குகின்றன; ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதைக் கடினமாக்குகின்றன.

இதற்கு விஞ்ஞானிகள் இப்போது ஒரு புதிய தீர்வைக் கண்டுபிடித்துள்ளனர். நிலவில் உள்ள தூசுக்களை ஒரு ராட்சச லென்சைப் பயன்படுத்தி உருக்கி உறுதியான சாலைகள், கலன்கள் இறங்க தளங்களைக் கட்டலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். நிலவில் வீதிகளா! இதைக் கேட்கும்போது நமக்கு நம்ப முடியாத வியப்பே ஏற்படும்!

யாருக்காக இதைக் கட்டவேண்டும் என்றும் தோன்றலாம்? ஆனால் இது பல காலங்களாக விஞ்ஞானிகளுக்கு மனச்சோர்வை ஏற்படுத்தும் ஒன்றாக இருந்து வருகிறது. நிலவின் தூசுக்கள் மிக நெகிழ்வானவை. நிலவிற்கு வளி மண்டலம் இல்லை. அதன் ஈர்ப்பு விசை பலவீனமானது. இதனால் தூசுக்கள் எல்லா இடங்களிலும் பரவுகின்றன. இவை எல்லாப் பொருட்களிலும் நுழைகின்றன; கலந்து விடுகின்றன; பாதிக்கின்றன.

moon 301தூசுக்கள் கருக்கிய லூனார் சர்வேயர்

2030ல் விண்வெளி வீரர்கள் நிலவிற்குச் சென்று தங்கி ஆய்வுகளை நடத்த ஏதுவாக ஆர்ட்டிமிஸ் திட்டத்தின் கீழ் ஆளில்லாத ஏவுவாகனங்களை நாசா நிலவிற்கு அனுப்பி பரிசோதித்து வருகிறது. அப்போலோ12 பயணத்தின்போது ஆய்வுக்கலனுடன் சென்று, நிலவில் தரை இறங்கிய லூனார் சர்வேயர் iii கலனுக்குள் தூசுக்கள் புகுந்து அதை கருக்கி சாம்பலாக்கியது. நிரந்தரமாக நிலவில் தங்குமிடத்தை அமைக்கத் திட்டமிடும் நாசாவிற்கு இது ஒரு சவாலான பிரச்சனையாக இருந்து வருகிறது.

பூமியில் இருந்து கட்டுமானப் பொருட்களை நிலவிற்கு எடுத்துச் செல்வது அதிக செலவு பிடிக்கும் ஒன்று. அதனால் இப்பிரச்சனையைத் தீர்க்க இதுவரை நடைமுறையில் இல்லாத ஒரு புதிய வழியை கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர ஆய்வுகளை நடத்தி வருகின்றனர். “நிலவில் இருக்கும் பொருட்களைப் பயன்படுத்துவதே இதற்கு சிறந்த தீர்வு. அங்கு ஏராளமாக இருப்பது நெகிழ்வான தளர்ந்த நிலையில் இருக்கும் தூசுக்களே” என்று ஜெர்மனி பெர்லின் பெடரல் பொருட்கள் ஆய்வு மற்றும் பரிசோதனைக்கான பி ஏ எம் (BAM) மையத்தின் (Federal Institute of Materials Research and Testing) பேராசிரியர் ஜென்ஸ் கூன்ஸ்ட்டர் (Prof Jens Goonster) கூறுகிறார்.

பூமியின் மண்ணுக்கு மாற்றாக நிலவில் புதிய பொருள்

ஐரோப்பிய விண்வெளி முகமையில் நிலவில் இருக்கும் மண்ணிற்கு மாற்றாக உருவாக்கப்பட்ட இ ஏ சி-1A (EAC-1A) என்ற நுண்பொருளை ஆய்வாளர்கள் பரிசோதித்தனர். இப்பொருளை 50 மில்லிமீட்டர் குறுக்களவுடைய லேசர் கற்றையைப் பயன்படுத்தி வெப்பப்படுத்தினர். சுமார் 1,600 டிகிரி செல்சியர்ஸ் வெப்பநிலைக்கு அதை சூடுபடுத்தி உருக்கினர். அவை ஒவ்வொன்றும் மெதுவாக அதிக வளைவுகளுடன் கூடிய முக்கோண வடிவில் 25 செண்டி மீட்டர் குறுக்களவுடைய பொருட்களாக மாறின.

இவற்றைப் பயன்படுத்தி நிலவின் மண் பரப்பில் பெருமளவில் திட வடிவில் தரை அமைக்கலாம். வருங்காலத்தில் இது நிலவில் வீதிகளாகவும், கலன்கள் இறங்கும் தளங்களாகவும் மாறும். ஆனால் இந்த செயல்முறை துரிதமாக நடைபெறுவதில்லை. ஒவ்வொரு ஜியோமிதி மெட்ரிக் அலகு (geo metric unit) அளவுள்ள பொருளும் உருவாக ஒரு மணி நேரம் ஆகிறது. 10x10 மீட்டர் பரப்புள்ள தரையிறங்கு தளத்தை அமைக்க நூறு நாட்கள் ஆகும்.

நிலவுக்குச் செல்லும் லென்ஸ்

இந்த செயல்முறை நிறைவு பெறாமல் தொடர்ந்து கொண்டே இருப்பது போலத் தோன்றும். ஆனால் பூமியில் கட்டுமானங்களை நினைத்துப் பார்த்தால் சில சமயங்களில் புதிய ஒரு சந்திப்பை அமைக்க பூமியிலும் இதுபோல பல காலம் ஆகிறது என்பதை உணரலாம். இதே செயல்முறையை நிலவில் கடைபிடிக்க 2.37 சதுர மீட்டர் அளவுடைய லென்ஸ் பூமியில் இருந்து நிலவுக்கு கொண்டு செல்லப்பட வேண்டும்.

இது சூரியனுக்கு நிகரான லேசருக்கு மாற்றான ஒன்றாக நிலவின் தூசுக்களை வெப்பப்படுத்தப் பயன்படும். இந்த லென்சை பூமியில் இருந்து எடுத்துச் செல்ல சுலபமாக இருக்கும் வகையில் பாலிமர் படலத்தால் (Polymer foil) செய்யப்பட்டு சுருட்டி எடுத்துச் செல்லும் விதத்தில் உருவாக்கப்படும். ஆனால் அப்போதும் தூசுக்கள் லென்சை பாதிக்கும். அவை லென்ஸின் மீது அதிக அளவில் படியும்போது உடனடியாக அல்லது காலப்போக்கில் லென்ஸ் இயங்காமல் போய்விடும்.

இதைச் சமாளிக்க அதிரும் லென்சை (vibrating lens) தயாரிக்க விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். இது குறித்த ஆய்வுக்கட்டுரை சயண்ட்டிஃபிக் ரிபோர்ட்ஸ் (Scientific Reports) என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது. விஞ்ஞானிகளின் முயற்சிகள் வெற்றி பெறும்போது நிலவில் வீதிகள் உருவாகும்! அவற்றில் விளக்குகள் பளிச்சிடும்! பூமியில் இருந்து அங்கு செல்லும் மனிதர்கள் வாகனங்களை ஓட்டிச்செல்வர்! அந்த நாள் விரைவில் வரட்டும்!

மேற்கோள்: https://www.theguardian.com/science/2023/oct/12/streets-on-the-moon-lunar-dust-could-be-melted-to-make-solid-roads?

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It