இயற்கையின் படைப்பில் அன்னை பூமியில் வேறெந்த கோளிலும் காண முடியாத அற்புத அமைப்புகள் உள்ளன. மலைகள், குன்றுகள், சமவெளிகள், பீடபூமிகள், பள்ளத்தாக்குகள், நதிகள் என்று இவை பூமியின் பிறவியில் இருந்து உருமாறி வந்த கால ஓட்டத்தின் நேர்சாட்சிகளாக திகழ்கின்றன. இத்தகைய நில அமைப்புகள் தோன்ற பல காரணங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானவை பூமியின் உட்புறத்திலும், வெளிப்புறத்திலும் உருவாகும் மாற்றங்கள்.

காற்று, அலைகள், நதிகள், மழை, மண், பனிப்பாறைகள், ஓடும் நீர் போன்றவை இவற்றில் ஒரு சில. நிலநடுக்கம், எரிமலை போன்றவை உட்புறத்தில் ஏற்படும் மாற்றங்கள். இத்தகையவற்றால் நாம் இன்று காணும் நிலப்பகுதியும், பெருங்கடல்களும் தோன்றியுள்ளன. கண்டத்திட்டுகளின் ஆற்றலால் (tectonic force) நிலநடுக்கம், எரிமலைகள் ஏற்படுகின்றன. கிடைமட்டம், செங்குத்து திசையில் இது வெளிப்படுகிறது. பூகம்பங்கள் துரித மற்றும் மந்தமான நிலநடுக்கங்கள் என இருவகைப்படும்.

துரிதகதியில் ஏற்படும் எரிமலை, நிலநடுக்கங்களின் பலனாக பூமியின் மேற்பரப்பில் ஏதேனும் ஒரு பகுதி உயர்த்த அல்லது தாழ்த்தப்படுகிறது. தென்னமெரிக்கா சிலியில் 1822ல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் கடற்கரை ஒரு மீட்டர் அளவிற்கு உயர்த்தப்பட்டது. 1891ல் ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் கரையின் ஒரு பகுதி 6 மீட்டர் அளவிற்கு தாழ்ந்து போனது. 1993ல் மகாராஷ்டிரா லாத்தூரில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் பெருத்த இழப்புகள் ஏற்பட்டன.

பூமியின் உட்புறத்தில் ஏற்படும் மாற்றங்களே மேற்பகுதியில் பல அமைப்புகளைத் தோற்றுவிக்கின்றன. இதனால் கரை கடலாக மாறவும், கடல் கரையாக மாறவும் வாய்ப்பு உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 20 மீட்டர் உயரத்தில் கரை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் குஜராத் கத்தியவாரில் உயர்த்தப்பட்ட கரைப்பகுதியில் இருந்து கடல்வாழ் உயிரிகளின் கண்டெடுக்கப்பட்ட புதைபடிவங்கள் அப்பகுதி ஒருகாலத்தில் கடலாக இருந்தது என்பதை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.hillபூமியின் உட்பகுதியில் ஏற்பட்ட மாற்றங்களால் மலைகள் உருவாகியுள்ளன. எதிரெதிர் திசையில் செயல்படும் இரு விசைகள் பொதுவான ஒரு புள்ளியில்/தளத்தில் விசையை செலுத்துவதால் இவ்வாறு நிகழ்கிறது. பூமியின் ஆழமான பகுதியில் இந்த விசைகள் செயல்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட புள்ளியில் இருந்து எதிர் திசையில் பெரும் சக்தி பரவுவதால் பூமியின் மேற்பகுதியில் உள்ள பாறைகளில் விரிசல்கள் ஏற்படுகின்றன. இதனால் நிலப்பகுதி உயர அல்லது தாழ வாய்ப்பு உண்டு.

இதுபோன்ற நிகழ்வுகளால் சமவெளிகள், பள்ளத்தாக்குகள் உருவாகின்றன. எடுத்துக்காட்டு உலகில் பெரிய சமவெளியான நைல் நதி சமவெளி, ஜோர்டான் பள்ளத்தாக்கு. சமமான இரு விசைகள் மூலம் நடுவில் உள்ள பகுதி உயரும்போது பீடபூமி தோன்றுகிறது. இதனால் மலையின் உச்சியில் சமதளப் பகுதி உண்டாகிறது. காற்று, மழை, நகர்ந்து செல்லும் மண், அலைகள் போன்றவற்றால் பள்ளத்தாக்குகள் சமதளப் பகுதிகளாக மாறுகின்றன.

நீரோட்டமே பூமியின் மேற்பகுதியில் அதிக மாற்றங்கள் ஏற்பட முக்கிய காரணம். மலைகளில் உற்பத்தியாகி தாதுக்களை சுமந்து குறிப்பிட்ட திசையில் பயணிக்கும் நீர்ப்பெருக்கே நதி எனப்படுகிறது. அதன் இரண்டாம் கட்டத்தில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. இடுங்கிய பள்ளத்தாக்குகள் இதனால் உருவாகின்றன. அதன் இரண்டாம் கட்டப் பயணத்தில் அகண்ட பள்ளத்தாக்குகள் வழி பாய்ந்து செல்கின்றன. பக்கவாட்டில் உள்ள அழுத்தம் காரணமாக அதன் அகலம் அதிகரிக்கிறது.

அதன் மூன்றாவது கட்டப் பயணத்தில் அது நிதானமாக ஓடி வண்டல் மண்ணை சேர்த்து புதிய செழுமையான சமவெளிப் பகுதிகளை ஏற்படுத்துகிறது. திறந்தவெளி மணற்பரப்புகளில் காற்றின் சக்தியால் மாற்றங்கள் உண்டாகின்றன. இதனால் பாலைவனப் பகுதியில் குன்றுகள், பள்ளங்கள் போன்றவை உருவாகின்றன. பாறைக்கற்கள் பலவிதங்களில் காணப்படுகின்றன. சில அடர்த்தி மிகுந்தவை, சில எடை குறைந்தவை.

காலநிலை மாற்றம், வேதிமாற்றம் காரணமாக பாறாங்கற்கள் உருமாற்றம் அடைகின்றன. எடை அதிகமுள்ள பாக்சைட், சுண்னாம்புக்கல் போன்றவை வேதிமாற்றங்களுக்கு உட்படுவதில்லை. உயர்ந்து நிற்கும் மலைகள், குன்றுகள் உருவாக இவை காரணமாகின்றன. இத்தகைய வடிவங்கள் மலைகள், பீடபூமிகள், சமவெளிகள் என மூன்று வகைப்படும்.

உருவாகும் சூழ்நிலையைப் பொறுத்து மடக்கு மலைகள், எரிமலையால் உருவான மலைகள், வெளிப்புறக் காரணங்களால் உருவாகும் மலைகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இமயமலை, ஐரோப்பாவில் ஆல்ப்ஸ், தென்னமெரிக்காவில் ஆண்டீஸ் போன்றவை மடக்கு மலைகளே.

நதி, காற்று, பனிக்கட்டிகள் போன்றவற்றின் வெப்ப தட்ப செயல்களால் நிலப்பகுதியில் இருப்பவை ஒன்றுசேர்ந்து அகற்றப்பட்டு ஒரு இடத்தில் குவிக்கப்படுவதால் நீலகிரிக் குன்றுகள், ராஜ்மஹல் குன்றுகள் போன்ற குன்றுகள் உண்டாகியுள்ளன. அருகில் உள்ள பகுதியைக் காட்டிலும் உயர்ந்து நிற்கும் தக்காணம் போன்ற பீடபூமிகள் உருவாகின்றன.

 சூழ்நிலையைப் பொறுத்து கண்டத்திட்டுகளின் மாற்றத்தினால் உயர்த்தப்பட்டு உருவாகும் மலைகளும், பீடபூமிகளும் மண் அடிந்து சமதளப் பரப்பாக்கப்படுவதன் மூலம், இயற்கை மாற்றங்களால் தாழ்வான பள்ளங்கள் மண் மூடப்பட்டு சமவெளிப் பரப்புகள் உருவாகின்றன. நதிகள் சுமந்து வரும் மண் போன்றவற்றைக் கொண்டு சேர்ப்பதால் செழுமைமிக்க கங்கை சமவெளி போன்ற வண்டல் மண் சமவெளிகள் தோன்றுகின்றன.

அன்னை பூமியின் அதிசயிக்கத்தக்க படைப்புகளில் இந்த நில அமைப்புகள் ஒவ்வொன்றும் பல்வேறு தனிச்சிறப்புகள் கொண்டவை. அந்தந்தப் பிரதேசங்களுக்கு ஏற்றவாறு உயிரினங்கள் தோன்றி பரிணாமம் அடைந்து வாழ்ந்து வருகின்றன. மில்லியன்கணக்கான ஆண்டுகளில் உருமாற்றம் அடைந்து உருவான இவற்றைப் பாழாக்காமல் காக்க வேண்டியது மனித குலத்தின் பொறுப்பு.

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Pin It