globe renewableஅண்மைக் காலமாக சமூக வலைத்தளங்களில் கொரோனா உருவாகி வேகமாக பரவி வருவதற்கான காரணமாக சிலர் சொல்வது இதுதான்: "மனிதன் உலகில் சமமற்ற நிலையை ஏற்படுத்தி இருக்கிறான். அதை இயற்கை சரி செய்து கொள்ள நினைக்கிறது." அதாவது இயற்கை தன்னைத் தானே சரி செய்து கொள்கிறது. அறிவியல் ரீதியில் இது சரியான முன்வைப்புதானா?

சமநிலையும் (equilibrium), சமான நிலையும்:

ஒரு அமைப்பு முறையின்மீது (system) செல்வாக்கு செலுத்தும் செயல்பாடுகளின் ஒட்டுமொத்த விளைவு அந்த அமைப்பினை ஒரு நிலையான சூழலில் வைத்திருக்கும்போது, அந்த அமைப்பு சமநிலையில் உள்ளது என்று பொருள். இந்த செயல்பாடுகளின் ஒட்டுமொத்த விளைவு அந்த அமைப்பின் இயக்கத்தில் ஏதேனும் மாற்றத்தை ஏற்படுத்தும் போது அந்த அமைப்பு சமான நிலையில் உள்ளதாகப் பொருள்படும்.

இந்த சமநிலை வெவ்வேறு புலங்களில் வெவ்வேறு விதமாக காணப்படுகின்றது. இயந்திரவியலில் பல்வேறு விசைகளின் விளைவாக ஒரு பொருளில் ஏற்படும் ஓய்வு நிலை.

இயற்பியலில் வெப்ப இயக்கவியல் சமநிலை.

சமூகவியலில் பொருளாதார சமநிலை.

இயற்கை அல்லது இயற்கையின் எந்த ஒரு அங்கமும், இந்த சமநிலையைத்தான் விரும்புகிறதா? 

பண்டைய கிரேக்க நாகரிகத்திலேயே இந்த கேள்வி எழுப்பப்பட்டு விட்டது. அப்போதைய தத்துவவியலாளர் ஹெரோடோடஸ் இயற்கை சமநிலையைத்தான் விரும்புகிறது எனக் கூறுகிறார். அவரைக் கவர்ந்த விஷயம், இரையாகும் விலங்கு - இரைதேடும் விலங்குகளுக்கிடையேயான (prey - predator) உறவே. இது அனைவராலும் கையாளப்படும் ஒரு கருத்து. 

ஒரு காட்டில் ஓநாய்களும், முயல்களும் மட்டும் வசிப்பதாகக் கொள்வோம். முயல்களின் எண்ணிக்கை அதிகமாகும்போது, ஓநாய்கள் மகிழ்ச்சியோடு அதை வேட்டையாடி புசித்து வரும். வேட்டையாடப்பட்டு இந்த முயல்களின் எண்ணிக்கை குறையும் போது, ஓநாய்கள் இரையின்றி இறக்க ஆரம்பித்து அவற்றின் எண்ணிக்கை குறைந்து விடும். இதன் காரணமாக அவை வேட்டையாடும் முயல்களின் எண்ணிக்கை குறைந்து, முயல்களின் மொத்த தொகை கூடிவிடும். இப்படியாக இரை விலங்கு - இரை தேடும் விலங்குகளின் எண்ணிக்கையில் ஒரு சமநிலைத் தன்மை இருந்து கொண்டே இருக்கும் என்பதுதான் ஹெரோடொடஸின் பார்வை.

இயற்கை சம நிலையிலேயே இருக்க விரும்புகிறது அல்லது இருக்க முயற்சி செய்கிறது என்ற கருத்து பொதுவாக மக்களிடையே காலம் காலமாக நிலவி வருகிறது. அறிவியல் உலகத்தில் கூட சிலர் அதை ஏற்று வந்தனர். சார்லஸ் டார்வின் கூட இயற்கை தேர்வு பற்றிக் குறிப்பிடும் போது அதைக் குறிப்பிட்டிருக்கிறார்.

இயற்கை சமநிலையில் இருப்பதில்லை மற்றும் இருக்க விரும்புவதில்லை என்பதையே பின் வந்த அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன. 

இரண்டு ஆய்வுகள்:

1950களில் அமெரிக்காவின் மெயின் (Maine) கடற்கரையை ஒட்டிய அடர்ந்த காடுகளில் ராபெர்ட் மேக் ஆர்தர் என்னும் அறிவியலாளர் "பாடும் பறவைகள்" (warbler) பற்றி ஆய்வு மேற்கொண்டார். ஒரே மரத்தின் பல பகுதிகளில் வெவ்வேறு வகையான ஐந்து பறவையினங்கள் அந்த மரத்தின் பகுதிகளை உண்டு வசித்து வந்திருந்தன. இது ஒரு விஷேச பகிர்ந்துண்ணல் தன்மை ஆகும். அதாவது ஒரு சமநிலைத் தன்மையைக் குறிக்கிறது. இந்த கண்டுபிடிப்பு சூழலியலின் அடித்தளமாகி மாணவர்கள் அனைவரும் கற்கும் பாடமாகியது.

அதில் ஒரு மாணவர், பிக் வீலர் என்று பெயர், அந்த ஆய்வினை தனது மேற்படிப்பிற்காக தொடர எண்ணினார். ஏறக்குறைய அரை நூற்றாண்டுக்குப் பின் அதாவது 2014ல் அவர் அதே காடுகளுக்கு, அதே மரத்திற்கு சென்றார். மனித பாதிப்புகள் ஏதும் அங்கு ஏற்பட்டிருக்கவில்லை. 

அவர் அங்கு மேக் ஆர்தர் கண்ட பறவையினங்களில் இரண்டு மட்டுமே இருந்ததாகவும், வேறு சில புதிய பறவையினங்கள் இருந்ததாகவும் ஆய்வு முடிவுகளாகத் தெரிவித்திருக்கிறார். அதாவது அவர் அங்கு கண்டது சூழலியல் பற்றிய பார்வையில் ஒரு பெரும் மாற்றத்தினைக் கொணர்ந்தது. இயற்கை ஒரு இயங்குகின்ற அமைப்பு, அது நிலையானது அல்ல என்பதே அது. 

இன்னொரு ஆய்வு. தென் ஆப்பிரிக்காவின் மேற்குக் கடற்கரையோரம் அமைந்திருக்கும் மால்காஸ் தீவை சுற்றிலும் உள்ள கடல் நீரில், கடல் பாசிகளும், பாறை இறால்களும் நிறைந்திருக்கும். அவை சிப்பிகள் மற்றும் சங்குகளின் உயிரினங்களை உண்டு வாழ்கின்றன. அதற்கு அருகேயே மார்கஸ் என்னும் தீவு ஏறக்குறைய மால்காஸ் தீவு போன்ற சூழலிலேயே அமைந்துள்ளது. அதனைச் சுற்றியுள்ள கடலில் சிப்பிகளும் சங்குகளுமே நிறைந்துள்ளது. அமோஸ் பார்க்காய், கிறிஸ்டோபர் மேக் குயாட் என்பவர்கள் நடத்திய ஒரு பிரபலமான பரிசோதனையில், வளர்ந்த பாறை இறால்களை மால்காஸ் தீவிலிருந்து, மார்கஸ் தீவிற்கு ஆயிரக்கணக்கில் கொண்டு வந்து விட்டனர். ஆனால் ஒரே வாரத்தில் சங்கு உயிரினங்கள், தன்னைவிட பெரிதான பாறை இறால்களை எளிதாக உண்டு விட்டன. ஒரு இறால் கூட மிஞ்சவில்லை. இந்த தீவுகளில் நிலவும் சமநிலை என்பது பகுதி ரீதியான சூழ்நிலைகளை வைத்து வருவதல்ல. ஏதோ ஒரு கட்டத்தில் ஒரு பெரும் நிகழ்வு, மார்கஸ் தீவை வேறொரு சமநிலைக்கு கொணர்ந்திருக்கிறது.

அதாவது உலகளாவியது என நாம் கருதும், இரை உயிரினம் - இரைதேடும் உயிரினம் ஆகியவற்றுக்கிடையிலான உறவு, சமநிலையைப் பொறுத்தவரை சார்புத் தன்மையுடையது, அதாவது மாறுதலுக்கு உட்பட்டது என்பதையே இது காட்டுகிறது. 

1970 - 80 களில் இயற்கையில் நிலவும் சமநிலை என்ற பார்வை, அறிவியலாளர்களிடமிருந்து முற்றிலும் மறைந்து விட்டது. இருந்தாலும் பொதுமக்களிடையே அது தொடர்ந்து நிலைத்து வருகிறது. கிம் கட்டிங்டன் என்னும் கனடா நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் தெளிவாகச் சொல்கிறார், "சமநிலை என்பது எளிதில் உடையக் கூடியது, எளிதில் மாற்றப்படக் கூடியது, எளிதானது என்று சொல்வதும் தவறு; அதேபோல் அதற்கு நேரெதிராக இயற்கை மிக சக்தி வாய்ந்தது, அது தனது சமானத் தன்மையை தானே சரி செய்து கொள்ளும் என்பதும் தவறானது."

இதுபோன்ற ஒரு தவறான கருத்து பருவநிலை மாற்றக் கொள்கையில் தேவைப்படும், சூழலியல் மேலாண்மைக்கும் எதிரானதாக மாறி விடுகிறது. அறிவியலாளர்கள், மக்களின் மனங்களில் இருந்து இந்த மாயையான கருத்தினை விடுவிக்க நினைத்தாலும், அது முடிவதில்லை. மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருக்கிறது.

அறிவியலாளர்கள் அனைவரும் ஒத்துக் கொள்வது மாற்றம் ஒன்றே மாறாதது என்பதையே.

ஆனால் இயற்கையில் சமநிலை என்பது பற்றி பேசும் போது இரண்டு விஷயங்களைப் பற்றி குறிப்பிட வேண்டும். ஒன்று: பெருங்குழப்ப தத்துவம் (chaos theory). அதாவது சமநிலையில் இருந்து விலகிச் செல்லும் ஓர் இயக்கத்தின் போக்கு தாறுமாறான தன்மை கொண்டதாக தெரிந்தாலும், அதில் ஓர் ஒழுங்கு இருக்கிறது. அந்த இயக்கம் சில நேரம் ஒழுங்காகவும், சில நேரம் ஒழுங்கற்றதானதாகவும் மாறுகிறது. அதாவது ஒழுங்கற்ற இயக்கத்தில் ஓர் ஒழுங்கு.

இரண்டாவது: சம நிலையிலிருந்து மிக தூரம் விலகிச் சென்றுள்ள அமைப்புகளிடையே மட்டும்தான் முன்னேற்றகரமான போக்கு வெளிப்படுகிறது. உதாரணமாக உயிர் உருவாகும் நிகழ்வு. அதேபோல பரிணாம வளர்ச்சி ஏற்படுவதும் அந்த அமைப்புகள் சமநிலையில் இருந்து வெகு தூரத்திற்கு வந்ததால் மட்டுமே சாத்தியமானது. இதை சுய ஒழுங்கமைப்பு (self-organisation) என்று அறிவியல் குறிப்பிடுகின்றது.

பெரும் குழப்ப தத்துவம்:

நாம் உலகில் காணும் அனைத்து இயக்கங்களும் சமநிலையை நோக்கிய சீரான அலைவுகளாக இருப்பதில்லை. 

உதாரணமாக ஒரு உயிரினத்தின் மக்கள் தொகையில் ஏற்படும் மாற்றத்தினை கவனிப்போம். இனப்பெருக்கத்தின் விகிதம், இறப்பு விகிதம், சூழ்நிலையோடு அந்த உயிரினம் கொண்டிருக்கும் உறவு என பலவிதமான காரணிகளால் இது தீர்மானிக்கப் படுகிறது. சில வேளைகளில் தொடர்ச்சியாகக் கூடி, மீண்டும் தொடர்ச்சியாகக் குறைந்து ஒரு சுழற்சியான மாற்றத்துக்கு உட்படலாம். அல்லது ஓர் ஒழுங்கற்ற, தாறுமாறான (randomness) தன்மையைக் கொண்டிருக்கலாம்.

ஆனால் இந்த ஒழுங்கற்றதில் ஓர் ஒழுங்கு இருக்கிறது என்பதுதான் பெருங்குழப்ப தத்துவத்தின் அடிப்படை. இதை விளக்க ஓர் உயிரினத்தின் மக்கள் தொகைப் பெருக்கத்தினை எடுத்துக் கொள்வோம். ஒரு குறிப்பிட்ட வளர்ச்சி வீதத்தில் அது வளர்ந்து வருவதாக வைத்துக் கொள்வோம். அந்த வளர்ச்சி வீதம் 1க்கும் குறைவாக இருந்தால் அந்த உயிரினத்தின் எண்ணிக்கை குறைந்து அழிந்துவிடும். அந்த வளர்ச்சி வேகத்தை அதிகரித்துக் கொண்டே வந்தால் என்ன நடக்கிறது என்று பார்ப்போம். வளர்ச்சி வீதம் 3 வரும்வரை அதன் எண்ணிக்கை ஒரு சமநிலை மதிப்பிலேயே இருந்து கொண்டிருக்கும். அந்த வளர்ச்சி வீதம் அதிகரிக்கும் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், சமநிலை மதிப்பிலிருந்து விலகி, அதன் மக்கள் தொகை குறிப்பிட்ட இரண்டு மதிப்புகளின் நடுவே ஊசலாடிக் கொண்டிருக்கிறது. இதை பிரிவுப்புள்ளி என்கிறோம். இன்னும் இந்த வளர்ச்சி வீதத்தை அதிகப்படுத்தினால் ஒரு குறிப்பிட்ட அளவில் அது நான்கு மதிப்புகளுக்கு இடையே ஊசலாடிக் கொண்டிருக்கிறது. இப்படியே அதிகரித்துக் கொண்டு போனால் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் ஒரு ஒழுங்கற்ற ஊசலாட்டமாக மாறி விடுகிறது. ஒரு மதிப்பிலிருந்து இன்னொரு மதிப்பிற்கு மாறி ஒழுங்கற்றதாக ஆகிவிடுகிறது. இந்த பகுதியைத்தான் நாம் பெருங்குழப்பம் என்று சொல்கிறோம்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்தப் பெரும் குழப்பம் தொடர்ந்து குழப்பமாகவே நீடிப்பதில்லை. மீண்டும் இந்த வளர்ச்சி வேகம் அதிகரிக்கும் போது, பெருங்குழப்பத்திற்கு முந்தையது போன்ற பிரிவுப் பாதைகளை வந்தடைகிறது. வேறு வார்த்தைகளில் சொன்னால் மீண்டும் அந்த மாற்றங்களில் ஓர் ஒழுங்கு வந்து விடுகிறது. அதாவது ஒழுங்கற்றதில் ஓர் ஒழுங்குப் பகுதி.

இது போன்ற பெருங்குழப்பம் நிகழும் அமைப்பு முறைகள் இயற்கையில் எண்ணற்று உள்ளன. மீண்டும் இங்கு நினைவில் கொள்ளலாம். இந்த ஒழுங்கு சமநிலையிலிருந்து விலகி வரும்போது ஏற்படுவது.

சுய ஒழுங்கமைப்பு:

சுய ஒழுங்கமைப்பு என்பது ஓர் அமைப்பு முறைக்குள் ஏற்படும் ஓர் ஒழுங்கு (order), வழமை (regularity), இணக்கம் (coherence), ஒருங்கிணைப்பு (coordination) ஆகும். இத்தகைய சுய ஒழுங்கமைப்பு, அந்த அமைப்பு சமநிலையிலிருந்து வெகுதூரம் விலகி வந்து ஒரு குறிப்பிட்ட புள்ளியைக் கடக்கும்போது ஏற்படுகின்றது.

சாதாரணமாக வெப்பமும், பொருளும் ஓர் அமைப்பு முறைக்கு அளிக்கப்படும் போது அது சிதைந்து ஒழுங்கற்ற தன்மை உருவாகிறது. ஆனால் உயிரியல் அமைப்பு முறைகளில், வெப்பமும், பொருட்களும் அளிக்கப்படும்போது அதில் கட்டமைப்பும், ஒழுங்கமைப்பும் உருவாகின்றன.

உயிரியல் அமைப்பு முறைகள் வெப்ப இயக்கவியல் சமநிலையில் இருந்து வெகுதூரத்தில் உள்ளவை. அவை சுற்றுச்சூழலோடு வினைபுரிந்து, சக்தியையும், பொருளையும் தொடர்ந்து பரிமாறி இந்த நிலையில் நிலைத்திருக்கின்றன. இத்தகைய கட்டமைப்புகள் சமநிலையில் இருந்து வெகுதூரத்தில் இருப்பதாலேயே உயிர் வாழ்கின்றன.

சமநிலையற்ற அமைப்பு முறைகள், சூழலிலிருந்து சக்தியையும் பொருளையும் எடுத்துக் கொண்டு, சுற்றுச்சூழலுக்கு தொடர்ந்து தனது சிதறல் இயக்கத்தின் மூலம் வெப்பத்தினை வெளியிட்டுக் கொண்டே இருக்கின்றன. இத்தகைய கட்டமைப்புகளை கட்டிக் காப்பதற்கு, இதுபோன்ற சிதறல்கள் மிக முக்கியமானவை. சிதறல்களின் இந்த அடிப்படையான பண்பின் காரணமாக ஏற்படும் இத்தகைய சுய ஒழுங்கமைப்பை நோபெல் பரிசு பெற்ற அறிவியலாளர் ப்ரிகோஜைன் கண்டறிந்து 'சிதறல் கட்டமைப்புகள்' (dissipative structures) என அழைத்தார்.

இத்தகைய சிதறல் கட்டமைப்புகள் உயிரியலோடு மட்டும் நின்று விடவில்லை. இயற்பியல், வானியல், வேதியியல் ஆகியவற்றிலும் இத்தகைய சுய ஒழுங்கமைத்துக் கொள்ளும், சமநிலையற்ற அமைப்பு முறைகள் நிலவுகின்றன.

எனவே இயற்கை நமக்கு கற்றுத் தந்திருப்பது இதுதான்: அது சமநிலையை விரும்புவதில்லை. பரிணாம வளர்ச்சிக்கு வழி கோலும் சமான நிலையையே விரும்புகிறது.

- இரா.ஆறுமுகம்,
உதவிப் பொது மேலாளர்,
தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம்,
மணப்பாறை

Pin It