உச்ச நீதிமன்ற நீதிபதி இராம சுப்பிரமணியம் நூலுக்கு ஆணித்தரமான அறிவியல் மறுப்பு

science 450இப்போது உச்சநீதிமன்ற பதவியாக இருக்கும் வெ. இராமசுப்பிரமணியம், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது அறிவியலையே கேள்விக்குள்ளாக்கும் தொடர் கட்டுரை ஒன்றை ‘தினமணி’ நாளேட்டில் எழுதினார். அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுக்க வேண்டிய சட்டக் கடமையிலிருந்து விலகி, ‘அறிவியலுக்கு அப்பால்’ அற்புதங்களைத் தேடிய அவரது கட்டுரைத் தொடர் பிறகு நூலாகவும் வெளியிடப்பட்டது. நீதிபதி எடுத்து வைத்த கருத்துகள் அறிவியலா? அறிவியல் என்ற பெயரில் பரப்பப்பட்ட கற்பனைச் சரடுகளா? இந்தக் கேள்விகளுக்கு ஆணித்தரமான மறுப்பைத் தருகிறது இக்கட்டுரை. முக்கியத்துவம் பெற்ற இக்கட்டுரையை அறிவியலில் பகுத்தறிவில் உடன்பாடு உள்ள அனைவரும் மக்களிடம் பரப்ப வேண்டும். - ஆசிரியர்

“அறிவியலுக்கு அப்பால்” என்ற பெயரில் நீதியரசர் வெ. இராம சுப்ரமணியன், ஒரு நூலை 2014ஆம் ஆண்டு எழுதியுள்ளார். அறிவியலால் விடை கூறமுடியாத புதிர்களாக அவர் கருதியனவற்றை தொகுத்தளித்துள்ளார். அவர் புதிர்களாக கருதியவற்றுக்கு விடை காண்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

புதிர் 1: இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ரோஸ் மேரி பிரவுன் என்பவர், மறைந்த இசைக் கலைஞர்கள் பலரின் ஆவியோடு பேசி அவர்களின் இசையை உள்வாங்கி இசையமைத்தார். இத்தனைக்கும் அவர் இசை கற்காதவர். இன்று வரை அவர் எப்படி இசையமைத்தார் என்பது புரியாத புதிராகவே உள்ளது.

விடை: 1994இல் ராபர்ட் கரோல் தொகுத்த “The Skeptics Dictionary”யில் (கேள்வி கேட்போர் அகராதி) இதற்கான விடை உள்ளது. எல்லோரும் சொல்வதைபோல, ரோஸ் மேரி பிரவுன் இசை தெரியாதவரல்ல. அவர் 2 ஆண்டுகள் இசை பயிற்சி பெற்ற தகவலும் இந்த அகராதியில் உள்ளது. அது மட்டுமல்லாமல், அவருடைய குடும்பமே இசைக்குடும்பம் என்பதையும் அவர் மறைத்துள்ளார். 1989இல் வேரன் ஜோன்ஸ் எழுதிய “Anomalistic Psychology – A Study of Magical Thinking” என்ற நூலில் ரோஸ் மேரி பிரவுனின் இசைகளை ஆய்வு செய்து, அது அவருடைய ஆழ்மனதில் இருந்து வந்தவையே தவிர, ஆவிகளோடு பேசி பெறப் பட்டவையல்ல என்பதை நிரூபித்துள்ளார். 1989லேயே நிரூபிக்கப்பட்ட ஒன்று, 2014இல் நூலை எழுதிய நூலாசிரியருக்கு புதிராகத் தெரிவது விந்தையிலும் விந்தை.

புதிர் 2: ஜூலெஸ் வெர்னே என்ற நாவலாசிரியர் எழுதியவையெலாம் அப்படியே பிற்காலத்தில் நடந்துள்ளன. 1870 இல் “Around the Moon” (நிலவைச் சுற்றி என்ற நூலை எழுதினார். அந்நாவலில் அவர் 4 விஷயங்களை எழுதி யிருந்தார். 1. கேப்டவுனில் இருந்து நிலவுக்கு செயற்கைக்கோள் அனுப்பப்படும். 2. செயற்கைக் கோள் கோண வடிவில் இருக்கும். 3. அதில் 3 பயணிகள் பயணிப்பார்கள், 4. 39, 600 கிலோ மீட்டர் வேகத்தில் செயற்கைகோள் நிலவை அடையும். அவர் இவற்றை எழுதி 99 ஆண்டுகளுக்கு பின், இவையனைத்தும் நடந்தன. 1969இல் கேப் டவுனில் இருந்து அப்போல்லோ 11 என்ற கோண வடிவிலான செயற்கைகோள், மூன்று பயணி களுடன் (எட்வின், ஆர்ம்ஸ்ட்ராங்க், காலின்ஸ்), 38, 500 கிலோமீட்டர் வேகத்தில் நிலவை அடைந்தது. நடக்கப்போவதை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் ஆன்மீக சக்தி அவரிடம் இருந்தது.

விடை: எதிர்காலத்தில் நடக்கப்போகும் அறிவியல் மாற்றங்களை முன்கூட்டியே கணிப் பதற்கு ஆன்மீக சக்தி எதுவும் தேவையில்லை. அறிவியல் போகும் திசையை படித்து, கற்று உணர்ந்திருந்தாலே போதும். பெரியார் தன்னுடைய “இனி வரும் உலகம்” (1943) என்ற நூலில் சோதனைக்குழாய் குழந்தை, அலைபேசி போன்ற எதிர்கால அறிவியல் கண்டுபிடிப்புகளை கணித்து கூறியிருந்தார். இதற்கு காரணம் ஆன்மீக சக்தியல்ல. பெரியார் அறிவியலின் போக்கை உன்னிப்பாக கவனித்ததே காரணம். இது தர்க்கரீதியான பதிலாக இருந்தாலும், ஜூலெஸ் வெர்னே தன்னுடைய கணிப்பைப் பற்றி என்ன சொன்னார் என்று தெரிந்து கொள்வது அவசியமாகும். Strand என்ற இதழில், 1895இல், மரியி பெல்லோக் எழுதிய “வீட்டில் ஜூலெஸ் வெர்னே” என்ற கட்டுரையில் ஜூலெஸ் வெர்னேவின் பேட்டி பதிவாகியுள்ளது. எதிர்கால கண்டுபிடிப்புகளை வெர்னே நாவலில் குறிப்பிட்டது தற்செயலானது என்றும், கதைகளை எழுதுவதற்கு முன், புத்தகங்கள், செய்தித்தாள்கள், இதழ்கள், அறிவியல் அறிக்கைகள் ஆகியவற்றை படித்து விட்டு எழுதியதாகவும் அவரே ஒப்புக் கொண்டுள்ளார். எனவே, இதில் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தி எதுவும் இல்லை.

புதிர் 3: கனவுகள், அறிவியல் கண்டு பிடிப்புகளின் அடிப்படையாக இருந்துள்ளன. Benzene மூலக்கூற்றின் வடிவத்தை ஃப்ரடரிக் வோன் தன் கனவிலேயே முதலில் கண்டார். நரம்பு அதிர்வுகள் மின்சக்தியாக கடத்தப்படவில்லை; ரசாயன மாற்றங்களாகத் தான் கடத்தப்படு கின்றன என்று ஓட்டோ லூயி கண்டுபிடித்ததும் கனவில் தான். தையல் இயந்திரத்தின் வடிவமைப்பு, எலியஸ் ஹோவேயின் கனவில் தான் முதலில் வந்தது. துப்பாக்கி ரவை செய்யும் தொழில் நுட்பத்தை ஜேம்ஸ் வாட் கனவாகக்கண்டார். இத்தகைய கனவுகளுக்கு அறிவியலில் விளக்கம் இல்லை.

விடை: உளவியல் ஆராய்ச்சியாளர் சிக்மண்ட் ஃப்ரூட், “ஆழ்மனத்தின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் விதமாகவே கனவுகள் வருகின்றன” என்றார். தற்கால உளவியல் ஆராய்ச்சியாளரான டெயர்ட்ரே பாரெட், மூளையில் ஏற்படும் ரசாயன எதிர்வினைகளால் தான் கனவுகள் உருவாகிறது என்று கண்டு பிடித்துள்ளார். இந்த எதிர்வினைகளுக்கும், நம்முடைய சிந்தனைகளுக்கும் தொடர்புண்டு. நீண்ட நாட்களுக்கு ஆராய்ச்சியில் ஈடுபடும் ஒரு விஞ்ஞானிக்கு, அவருடைய ஆராய்ச்சியோடு தொடர்புடையவை கனவாக வர வாய்ப்புகள் அதிகம். எனவே ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் தான் கனவுக்கும், அறிவியல் கண்டுபிடிப்பு களுக்கும் அடிப்படையே தவிர, கனவுகள் கண்டு பிடிப்புகளுக்கு அடிப்படையாகாது. அமெரிக்க அதிபர் கென்னடியின் கொலையை முன்கூட்டியே கனவில் கண்டதாக கருதப்பட்ட ஜீயேன் டிக்சனுடைய பல கனவுகள் பொய்யாகிப் போயுள்ளன. பார்ப்பனர்களை எதிர்த்தால் நீங்கள் கொல்லப்படுவீர் என்று காந்தியிடமே பெரியார் கூறியதற்கு பின்னால், எந்த தெய்வீக சக்தியும் இல்லை. மாறாக, சமூக, அரசியல் அறிவே இருந்தது. அதைப்போலவே தான் கென்னடியின் மரணத்தை கணிக்க கனவுகள் தேவையில்லை. அரசியல் அறிவே போதும். கனவுகளில் பெரும்பாலானவை பலிப்பதில்லை.

புதிர் 4: உரி கெல்லெர் என்பவர் 23.11.1973 இல் பிபிசி தொலைக்காட்சியில், உலோகப் பொருள்களை பார்வையாலும், தொடுதலாலும் வளைத்துக் காட்டியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. ஹெரால்ட் புத்தோஃப், ரஸல் டர்க் ஆகிய ஆன்மீக உளவியல் ஆராய்ச்சியாளர்கள் உரி கெல்லெரை சோதித்துப் பார்த்து, அவரிடம் உள்ள அமானுஷ்ய சக்தியை ஒப்புக்கொண்டனர். இதை எந்த அறிவியல் வல்லுனராலும் விளக்க முடியவில்லை.

விடை: மார்க்ஸ் டேவிட் என்ற உளவிய லாளரிடம் இதற்கான பதில் உள்ளது. அவர் 25க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அவற்றுள், “The Non-Psychic powers of Uri Gellar” என்ற நூல் புகழ்பெற்றது. 1977இல் எழுதப்பட்ட இந்த நூலில் உரி கெல்லரின் தில்லுமுல்லுகளை மார்க்ஸ் டேவிட் அம்பலப்படுத்தியுள்ளார். ஹெரால்ட் புத்தோஃபும், ரஸல் டர்க்கும் செய்த ஆய்வே மோசடியானதாகும். உரி கெல்லரை ஆய்வுக்கு உட்படுத்திய அறையில் சில ஓட்டைகள் இருந்தன… அதன் வழியே படங்களை பார்க்கும் வசதி உரி கெல்லருக்கு இருந்தது. மேலும், ஆய்வாளர்களுக்கும் கெல்லருக்கும் இடையே “இன்டர்காம்” எனப்படும் தொலைபேசி வசதியும் இருந்தது. இதனூடே, ஆய்வாளர்கள் பேசிக் கொள்வதை கெல்லரால் கேட்டிருக்க முடியும். எனவே, இந்த ஆய்வை நிராகரிக்கும் மார்க்ஸ் டேவிட், அறிவியல்ரீதியாக கட்டுப்படுத்தப்பட்ட நிலைமையில் செய்யப்படும் ஆய்வு தான் சரியான ஆய்வாக இருக்க முடியும் என்று நிறுவுகிறார். Brian Sapient என்பவர், “Rational Response Squad” (பகுத்தறிவு மறுமொழிக் குழு) என்ற யூடியூப் கணக்கில் பதிவேற்றிய காணொளியில், உரி கெல்லெர் தன்னுடைய வித்தையை செய்ய முயன்று தோற்றுப்போன தருணங்களை சேர்த்திருந்தார். இதனை எதிர்த்து காப்புரிமை வழக்காடி உரி கெல்லெர் தோற்றுப்போனது குறிப்பிடத்தக்கது.

புதிர் 5: சோவியத் ரஷ்யாவில் மேடம் நீனா குலகினா என்பவர் இருந்தார். அவர் பார்வையாலேயே பொருள்களை நகர்த்தும் திறன் பெற்றிருந்தார். நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் உட்பட பலரும் அவரை சோதித்தனர். யாராலும் அவருடைய சக்தியை மறுக்க முடியவில்லை

விடை: 1983 இல் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழக அச்சகம் வெளியிட்ட “Science: Good, Bad and Bogus ” என்ற நூலில் இந்த சித்து விளையாட்டுகளைப் பற்றிய தகவல்கள் உள்ளன. சோவியத் விஞ்ஞானிகளிடம், ஒரு முறைக்கு மேல், ஏமாற்றும் போது மேடம் நீனா குலகினா சிக்கியுள்ளார். 1991 இல் சோவியத் ரஷ்யா உடைந்த பின், 2002ஆம் ஆண்டு, லெவி ஜோயல் என்ற ஆய்வாளர் எழுதிய, “K.I.S.S. Guide to the Unexplained” என்ற நூலில், மேடம் நீனா குலகினா, பொருள்களை அசைக்க கண்ணுக்கு புலப்படாத நூலை பயன்படுத்திய தகவலும், காந்தங்களை மறைத்து வைத்து பயன்படுத்திய தகவல்களும் உள்ளன. எனவே, மேடம் நீனா குலகினா செய்வதை ஒரு மாயாஜால ஏமாற்று வேலை என்று தான் கருத முடியும்.

புதிர் 6: ராபர்ட் எம். மில்லெர் என்ற விஞ்ஞானி தன்னுடைய தோட்டத்தில் புற்களை வளர்த்தார். பிரார்த்தனைகளுக்கு சக்தி உண்டா? என்பதை அறிய ஒரு சோதனையை நடத்தினார். பிரார்த்தனைக்கு பேர்போன ஒல்க வோரல் & அம்புரோசு தம்பதியினரை தன்வீட்டில் பிரார்த்தனை செய்ய அழைத்தார். அவர்கள் பிரார்த்தனை செய்யாத நேரத்தில் 0.00625 அங்குலம் வளர்ந்த புற்கள், பிரார்த்தனை செய்யும்போது, 0.0525 அங்குலம் வளர்ந்ததைக் கண்டார். பிரர்த்தனைக்கு சக்தியுண்டு என்பதை  உணர்ந்து கொண்டார்.

விடை: முதலில் இது நடந்த சம்பவமா? கற்பனையா? என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது. எப்படியிருப்பினும், தாவரங்களின் வளர்ச்சி எவற்றை சார்ந்து உள்ளது என்பதை இங்கு காண்போம். பொதுவாக, ஒரு தாவரத்தின் வளர்ச்சி, ஒளி, நீர், தட்பவெப்பநிலை, சத்துப் பொருள்கள் போன்றவற்றை சார்ந்து தான் இருக்கிறது. பிரார்த்தனையினால் தாவரம் வளர்ந்ததாக எந்த ஒரு ஆய்வு அறிக்கையும் இல்லை. ஒருவேளை மேற்கூறிய சம்பவம் உண்மையாக நடந்திருந்தால், அதற்கு வேறு சில அறிவியல் காரணங்கள் இருக்கலாம். தாவரங்கள், பொதுவாக மாலை & இரவு நேரங்களில் அதிகமாக வளர்கின்றன. அந்த நேரத்தில் பிரார்த்தனை செய்தால், தாவர வளர்ச்சிக்கு பிரார்த்தனை தான் காரணம் என்று தவறாக முடிவெடுக்க வேண்டியிருக்கும். அதே போல், சில தாவரங்கள் ஒலியைச் சார்ந்து வளர்கின்றன. “Research in Plant Diseases” (தாவர நோய்களில் ஆராய்ச்சி) என்ற ஆய்விதழில் 2014 ஆம் ஆண்டு வெளியான “Update on the effects of sound wave on plants” என்ற ஆய்வறிக்கையில், குறிப்பிட்ட மாதிரியான ஒலியை எழுப்புவது, சில தாவரங்களின் வளர்ச்சிக்கு பயன்படும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே, பிரார்த்தனையின் போது, குறிப்பிட்ட ஒலியால் வளரக்கூடிய தாவரமாக அந்த புற்கள் இருந்திருந்தால், ஒலியினால் வளர்ந்திருக்குமேயன்றி பிரார்த்தனையால் வளர்ந்திருக்க முடியாது. அதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

புதிர் 7: ஜேம்ஸ் எஸ்டெய்ல் (1808 - 1859) என்ற அறுவை சிகிச்சை நிபுணர், பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தில் வேலை பார்த்தார். அப்போது, மயக்க மருந்து இல்லாமல், hypnotism (அறிதுயில் நிலை - மன வசியம்) மூலம் நோயாளிகளை அரை மயக்க நிலையடையச் செய்து அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்தவர். மனவசியத்துக்கு இன்று வரை எந்த அறிவியல் விளக்கமும் இல்லை. ரமண மகரிஷி தன்னைத் தானே மன வசியம் செய்துகொண்டவர்.

விடை:  ஜேம்ஸ் எஸ்டெய்ல் செய்த மன வசியத்தின் பலன் எதுவும் ஆய்வு செய்யப்பட்டு, ஆவணப்படுத்தப்படவில்லை. எனவே, அது மிகவும் பலனளிக்கவல்லது என்று கூற முடியாது. இன்று வரை, hypnotism (அறிதுயில் நிலை) என்பதை ஒரு பெரும்பயனுள்ள முறை என்று நிரூபிக்க போதிய சான்றுகள் இல்லை. எனவே, மனவசியம், மாற்று மருத்துவத்தின் பகுதியாகத் தான் பார்க்கப்படுகிறது. எனவே, மனவசியத்தை பற்றிய மிகைக்கூற்றை ஏற்க முடியாது. அதுவும், ரமண மகரிஷி இதை செய்தார் என்று நம்புவதற்கு எந்தவித முகாந்திரமும் இல்லை. தனது சொத்துக்களையெல்லாம் குடும்பத்தினருக்கு எழுதி வைத்துவிட்டு புற்று நோயால் மரணமடைந்தவர் ரமணரிஷி.

புதிர் 8: பிரேசில் நாட்டைச் சேர்ந்த அரிகோ என்ற விவசாயி, பல மருத்துவர்களால் குணப்படுத்த முடியாத நோய்களை குணப் படுத்தினார். துருப்பிடித்த கத்தியையும், கத்தரிக்கோலையும் வைத்தே அறுவை சிகிச்சை செய்தார். முறையாக மருத்துவம் படிக்காத இவரால் எப்படி அறுவை சிகிச்சை செய்ய முடிகிறது? என்ற கேள்விக்கு மருத்துவ உலகில் பதில் இல்லை.

விடை: முதலில் அரிகோ பல நோய்களை குணப்படுத்தியதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. உலகப் புகழ்பெற்ற நாத்திக அறிஞர் ஜேம்ஸ் ரண்டி, 1982 இல் இதை பற்றி “Film – Flam Psychics Especially Unicorns & other delusions” என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். மாயாஜாலம் (தந்திரம்) செய்பவர்களின், மக்களை ஏமாற்றும் “கை சாதுரியத்தை” விளக்கும் படங்களை வெளியிட்டு, அதனை அரிகோவின் கை சாதுரியத்தோடு ஒப்பிட்டுக் காட்டியுள்ளார். முறையாக மருத்துவம் கற்காமல் வைத்தியம் பார்த்ததாலும், மருத்துவ உரிமம் இல்லாததாலும் இருமுறை சிறை சென்றவர் அரிகோ. இவருடைய பெரும்பாலான நோய் குணப்படுத்துதல் என்பது, இயேசு கிறிஸ்து பார்வையற்றவர்களுக்கு பார்வை அளித்ததைப் போன்ற கட்டுக்கதையே ஆகும்.

புதிர் 9: பிரஞ்சு புரட்சி நடைபெறுவதற்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு இளவரசர் கலந்துகொண்ட கேளிக்கை விருந்தில், ஜாகுயெஸ் கஸோட் என்பவர் ஆளும்வர்க்கத்தினர் ஒவ்வொருவரும் எப்படி கொல்லப்படுவார்கள் என்று துல்லியமாகக் கணித்தார். தற்கொலை செய்பவர்கள், எத்தனை முறை கத்தியால் கீறி இறப்பார்கள் என்பதுவரை கணித்தார். அவர் சொன்னதைப் போலவே, 1792இல் நடந்த புரட்சியில் ஆளும்வர்கத்தினர் பலர் கொல்லப்பட்டனர். எதிர்காலத்தில் நடக்கப் போவதை  ஜாகுயெஸ் கஸோட் முன்கூட்டியே கணித்தது எப்படி என்பது புரியாத புதிராகவே உள்ளது.

விடை: நடிகர் ரஜினிகாந்த், துக்ளக்கில் (1971) சோ, பெரியார் ராமன் சிலையை நிர்வாணமாக எடுத்துச் சென்றதாக துணிச்சலாக எழுதி யுள்ளதாகக் கூறினார். ஆனால், ஆதாரம் எங்கே? என்று கேட்டபோது, 2017இல் வெளியான அவுட்லுக் இதழை காண்பித்தார். 1971இல் நடந்த சம்பவத்துக்கு 1971 துகளக்கை தானே ஆதாரமாகக் காட்டியிருக்க வேண்டும்? அதே போல, 1788இல் கஸோட் சொன்ன தீர்க்கதரிசனங்களுக்கு 1788இல் ஆதாரம் காட்டுவது தானே முறையாகும்!! ஆனால், கஸோட்டை தீர்க்கதரிசியாகக் காட்டுபவர்கள் 1805ஆம் ஆண்டு லவு ஹார்ப் என்பவர் தொகுத்த நூலையே சான்றாகக் காட்டுகின்றனர். எனவே, இத்தகைய கணிப்பு நடந்திருக்க வாய்ப்பே இல்லை. பிறரின் இறப்பை கணிக்கத் தெரிந்த கஸோட்டால், தன் இறப்பை கணிக்கத் தெரியவில்லை. அதே பிரஞ்சு புரட்சியில் அவரும் கொல்லப்பட்டார்.

புதிர் 10 : உப்டோன் பியல் சின்கிலைர் என்ற அமெரிக்க எழுத்தாளர், தன்னுடைய துணைவி மேரி கிரெய்க்குக்கு, Telepathy (நுண்ணுணர்வு) இருப்பதை அறிந்துகொண்டு, நுண்ணுணர்வில் ஆய்வு செய்தார். தன்னுடைய துணைவிக்கு நுண்ணுணர்வு திறனால் கிடைத்த அனுபவங்களை, “Mental Radio” என்ற பெயரில் நூலாக வெளியிட்டார். தன் வீட்டுக்கு வரும் பல முக்கிய பிரமுகர்களுக்கு, தன் துணைவியின் நுண்ணணர்வுத் திறனை நிரூபித்துக் காட்டியுள்ளார். இதனால், அறிவியலை மிஞ்சிய ஆன்மீக உளவியல் உண்டு என்பது உறுதியாகிறது.

விடை: எவ்வளவோ சோதனைகளை நடத்திய போதும், நுண்ணுணர்வை நிரூபிக்க ஒரு சான்றும் கிடைக்கவில்லை என்ற உண்மையை டால்க்விஸ்ட் (1994), ஹோக்கார்ட் (1995), ராபர்ட் கோகன் (1998), டெரென்ஸ் ஹைன்ஸ் (2003) ஆகிய பேராசிரியர்கள் தங்கள் நூல்களில் குறிப்பிட் டுள்ளனர். அமேரிக்க தேசிய ஆராய்ச்சிக் குழு, “130 ஆண்டுகால ஆராய்ச்சியில் நுண்ணுணர்வை நிரூபிக்கும் சான்று ஒன்றும் இல்லை என்று அறிவித்துள்ளது. ஆன்மீக உளவியலையே (Para Psychology) போலி அறிவியல் என்று மருத்துவ உலகம் பிரகடனப்படுத்துகிறது.

இவ்வாறாக ஆன்மீக உளவியல் என்ற கற்பனையை வைத்துக்கொண்டு, மக்களை ஏமாற்றி வயிறு வளர்ப்பவர்கள் மத்தியில், தாங்கள் செய்வது மந்திரமல்ல, தந்திரமே!! என்று முரசறைபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். அத்தகையோருள் ஒருவர் ஹேரி ஹவ்டினி. உலோகத்தால் செய்யப்பட்ட பூட்டுகளையும், கை விலங்குகளையும் சர்வசாதாரணமாக உடைப்பதில் வல்லவர். 1899ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13ஆம் தேதி சான் ஃப்ரான்சிஸ்கோ நகர போலீஸ் தலைமையகத்தில், அவருடைய சவாலை ஏற்று, காவல்துறையினர் அவரை நிர்வாணமாக்கி, அவர் உடலில் ஏதாவது மறைக்கப்பட்டிருக்கிறதா என்று பரிசோதித்த பின், அவருடைய கைகளை பின்னால் இணைத்து, 10 விலங்குகளால் அவரைப் பூட்டினர்.

கைகள் மற்றும் முழங்கால்கள் பல சங்கிலிகளால் கோர்க்கப்பட்டு, அவற்றின் மீது பூட்டுகள் போடப்பட்டன. அவரை ஒரு சிறை அறையில் அடைத்து வைத்துவிட்டு, வெளியே பூட்டு போட்டனர். யாரும் எதிர்பார்க்காத வண்ணம், 10 நிமிடங்களில், அனைத்து பூட்டுகளிலிருந்தும், விலங்குகளிலிருந்தும் தன்னை விடுவித்துக்கொண்டு, கம்பீரமாக வெளியே வந்தார் ஹேரி ஹவ்டினி. அவர் நினைத்திருந்தால், தன்னிடம் ஏதோ சக்தி இருக்கிறது என்று கூறி, மக்களை ஏமாற்றி பிழைத்திருக்க முடியும். ஆனால், சீரிய பகுத்தறிவாளரான அவர், அதைச் செய்யவில்லை.

மாறாக, தனக்கு தெரிந்த மந்திர (தந்திர) வித்தைகளை பயன்படுத்தி, யாரெல்லாம் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று மக்களுக்கு அடையாளம் காட்டினார். “Scientific American” (அறிவியல் அமெரிக்கன்) என்ற அமைப்பில் இணைந்து போலி மதகுருக்களின், போலி அறிவியலாளர்களின் மந்திர தந்திரங்களை அம்பலப்படுத்தி பகுத்தறிவுத் தொண்டாற்றி மறைந்தார்.

இன்னும் சில புதிர்கள் “அறிவியலுக்கு அப்பால்” நூலில் கூறப்பட்டுள்ளன. இவற்றுக்கும் தெளிவான அறிவியல் விளக்கங்கள் உள்ளன. அதுவும் இந்த நூல் எழுதப்பட்ட 2014ஆம் ஆண்டுக்கு முன்பே இந்த புதிர்களுக்கு முறையான பதில்கள் கிடைத்துவிட்டன. அவற்றையெல்லாம் கவனித்து இருந்தால், இந்த நூலை எழுத வேண்டிய அவசியமே வந்திருக்காது.

ஆதாரங்கள்:

1) "Anomalistic psychology: A study of Magical thinking" - Warren Jones

2) "The Non- Psychic powers of Uri Gellar" - Marks David

3) "Science: Good, Bad & Bogus" - Oxford University press

4) "K.I.S.S. Guide to the Unexplained" - Levy Joel

5) "Film – Flam Psychics Especially Unicorns & other delusions" - James randi 

(தொடரும்)

Pin It