"இடது கையால் தண்ணீர் கொடுப்பது கெட்டப்பழக்கம், வலது கையால கொடுத்துப் பழக்குங்கள்'' என்று வீட்டில் குழந்தைகளை பெரியவர்கள் வலது கையில் கொடுத்து வாங்கப் பழக்குவதாலும் வலது காலை எடுத்து வச்சி உள்ளே செல்லுங்கள் என்றெல்லாம் சொல்வதால் இடது பழக்கம் அருவெறுப்பானதென்றும் அமங்கலம் என்றும் நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் பிறிவியிலேயே சிலர் இடதுகைப் பழக்கத்துடன் பிறந்துவிடுகிறார்களே என்ன செய்வது? எத்தனை முயன்றாலும் அவர்களை மாற்றமுடிவதில்லையே. அவர்களை அப்படியே விட்டுவிட வேண்டியதுதானா?.
கதவுகளின் கைப்பிடி முதல், கத்திரிக்கோல் வரை வலது கைப்பழக்கக் காரர்களுக்காகத்தான் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இடப்பழக்க முடையவர்கள் உலகில் அரிதாக இருப்பதால் அவர்களை பொதுவழக்கில் எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் இடப்பழக்கமுடைவர்கள் சில வேலைகளுக்கு மிகவும் தேவைப்படுகிறார்கள். விளையாட்டுகளில், பாக்ஸிங், கராத்தே போன்ற மாரபியல் வீர விளையாட்டுகளில் இடக்கைப் பழக்கக்காரர்கள் ரொம்ப டிமான்ட்.
உலகில் 90 சதம் பேர்கள் வலதுகைப் பழக்கம் உடையவர்களாக இருப்பதால், மைதானங்களில் பந்து வீசுவது, கோல் போடுவது, பந்தை உதைப்பது போன்றவை ஒரே மாதிரி இருப்பதால் பதில் செயல்களும் அதற்க ஏற்றபடியே உள்ளன. இடது கைப் பழக்கக்காரர் மைதானத்தில் வந்துவிட்டால் கிரிக்கெட் மட்டை வீசுவரது பாடு திண்டாட்டம்தான். அதேபோல இடது கை மட்டை வீசுபவருக்கு பந்து வீசுவதும் சிக்கல்தான். இடது கைக் காரரின் கராத்தே பஞ்ச் அல்லது கிக் மாறுபட்ட திசையிலிருந்து வருவதால் எதிராளியின் பாடு திண்டாட்டம்தான். அதனால் சில விஷயங்களில் இடதுகைப்பழக்கம் பரவாயில்லை என்று தோன்றுகிறது.
இயற்கையில் பொது விதிமீறல்கள் சிறிதளவு காணப்படுவது வியப்பாக மூளையின் அரைக்கோளங்களின் சிறப்பு வேலைகள் என்னென்ன என்பது தெரியவந்துள்ளது. இடது மூளை சிறப்பு அறிதலிலும் வலது மூளை பொது அறிதலிலும் பங்கு பெறுகிறது. இடது மூளை அகவயப்பட்ட வேலைகளையும் வலது மூளை புறவயப்பட்ட வேலைகளையும் செய்கிறது. இடது, மாமூலான அலுவல்களையும் வலது எதிர்பாராது வரும் அலுவல்களையும் கவனித்துக்கொள்வதாக உள்ளது. இதற்குக் காரணமும் இருக்கிறது. ஒரு கட்டத்தில் எல்லாருமே ஒரே மாதிரி இருந்து விட்டால் எல்லாருடைய பழக்க வழக்கங்களும் ஒன்றுபோலவே இருந்துவிடும். எதிரிகளுக்கு இது சாதகமாகிவிடும். எதிர்பாராத விதமாக கொஞ்சம்பேர் வேறுவிதமான செயல்படும்போது அந்த இனத்திற்கு சிறப்பு அனுகூலம் கிடைக்கிறது. ஆபத்திலிருந்து கொஞ்சம் பேராவது பிழைக்க வாய்ப்பு கிடைக்கிறது அல்லவா. "எங்க குடும்பத்திலேயே இவன் தப்பிப் பிறந்திட்டான். இவனத் தவிர வேறு எதுவும் உருப்படல' என்று வித்தியாசமான குணத்துடன் பிறந்த குழந்தையை குடும்பங்கள் பாராட்டுவதில்லையா அதுபோல! எனவே இயற்கையிலேயே உயிரினங்களில் கணிசமான சதவீதம் மாற்றத்துடன் தோன்றுகின்றன.
கத்தரி கனேக்ஷன்
மனித மூளையானது இரண்டாகப் பிளந்ததுபோல இரு அரைக்கோளங்களாக இருக்கின்றது. உடம்பை தலை முதல் கால்வரை சரிபாதியாகப் பிரித்தால், இடது கண், காது, கன்னம், கழுத்து, கை, வயிறு கால் என சகல உறுப்புகளும் மூளையின் வலுதுபக்க அரைக்கோளத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றன. அதுபோலவே வலதுபாதி உடலை இடதுபாதி மூளை பராமரிக்கிறது. மூளைக்கு வரும் போகும் தகவல்கள்கூட கத்தரிக்கோல் போல இடவலமாக மாறி மூளையில் செல்கின்றன.
மனிதனுக்கு மட்டும்தானா?
மூளையின் கத்தரி இணைப்பு மனிதனுக்கு மட்டும் சொந்தமில்லை. எல்லா பாலூட்டி இனத்திலுள்ள மிருகங்களுக்கும் பொது. மூளையின் எந்த அரைக்கோளம் ஓங்கி செயல்படுகிறதோ அதற்கு எதிர் கைப் பழக்கம் ஏற்படுகிறது. உதாரணமாக இடது மூளை அரைக்கோளம் ஓங்கி செயல்பட்டால் வலது கைப்பழக்கம் ஏற்படுகிறது. எந்த அரைக்கோளம் ஓங்குவது என்பது பிறப்பிலேயே நிர்ணயமாகிறது. உதாரணமாக தவளை, தேரை, பாம்பு, பல்லி, ஓணான் போன்ற சிறுபிராணிகள்கூட வலது பக்கமாக இரைகள் வந்தால்தான் அவற்றை கவனித்துப் பிடிக்கின்றன. இடது பக்கம் வந்தால் புறக்கணிக்கின்றன.
கோழி, புறா போன்ற பறவைகளும் வலது கண் மூலமாகத்தான் தானியங்களைத் தேடித் திண்கின்றன. வலது பக்கமாகவே அதிகம் தீனியைக் கொத்துவதால் அந்தப்பக்க அலகு அதிகம் தேய்வதையும், சிலபறவைகளுக்கு அலகு வலதுபக்கம் கொஞ்சம் பெரிதாகவும் இருப்பதுண்டு. திமிங்கலங்களின் வலதுபக்க தாடையில் அதிகமாக வெட்டு, கீறல்கள் இருப்பதன் காரணம் அவை தீனிகளை வழக்கமாக வலது பக்கமாகவே வேட்டையாடுவதால்தான்! இதற்கெல்லாம் காரணம் மூளையின் இடதுபக்கம் இரைதேடுதலில் முக்கிய பொறுப்பை எடுத்துக் கொள்வதாலேயே என்பது தெரிகிறது. மூளையின் வேலைப்பங்கீடு இருபக்கமும் சமமாக இல்லாதிருப்பது கிட்டத்தட்ட 500 மில்லியன்ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிவிட்டது என்று தெரிகிறது.
குரங்குகளிடம் ஒரு முனையில் தேன் நனைத்த மூங்கில் குச்சியைக் கொடுத்தால் அவை இடதுகையால் குச்சியைப் பிடித்துக் கொண்டு வலது கையின் உள் காட்டிவிரலால் தேனைவழித்து நக்குகின்றன. சிம்பன்சி முதலான மனிதனுக்கு மிக நெருங்கிய மிருகங்களிடமும் அதிகமாக வலதுகைப் பழக்கம்தான் காணப்படுகிறது. அடிக்க, அதட்ட சின்னச் சின்ன பொடி வேலைகளைச் செய்ய அவை வலக்கையையே அதிகம் பயன்படுத்துகின்றன. சைகை செய்வதுகூட அதிகம் வலது கைகளால்தான்.
நன்றாக கவனித்துப் பார்த்தால் மிருகங்கள் சப்தமிடும்போது வாயின் வலது பக்கம் அதிகமாக திறப்பது தெரியும். இதற்கெல்லாம் காரணம் மூளையின் இடது பக்கம் ஓங்கி செயல்படுவதே. இரைதேடவும்,சைகை முறையில் கருத்துப்பரிமாறிக் கொள்ளவும் இடது மூளை தயார் ஆக்கப்பட்டிருப்பதால் அதே இடதுபக்க மூளையே குரல்எழுப்பவும், சகாக்களின் அழைப்பு மற்றும், குட்டிகளின் அபாய அலறல்களை வித்தியாசப்படுத்தி அறியவும் தயாராகிவிட்டது.
இடப்பங்கீடு
எதிரிகளைத்தாக்குதல், ஆபத்திலிருந்து தப்பித்தல், இரைதேடல், தன் இனத்தை அடையாளம் காணுதல், தகவல் பரிமாறுதல், கூடுகட்டுதல்.போன்ற வேலைகளை (மனிதனுட்பட) மிருகங்கள் செய்யும்போது மொத்த மூளையும் அதில் பங்கேற்பதில்லை. ஒவ்வொறு வேலைக்கும் மூளையில் தனிப்பட்ட பகுதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.
நீண்ட காலமாக மேற்கொள்ளபட்ட பல ஆய்வுகளின் மூலம் மூளையின் அரைக்கோளங்களின் சிறப்பு வேலைகள் என்னென்ன என்பது தெரியவந்துள்ளது.
இடதுபக்க மூளை
பேச்சு, பேசும் மொழியைப் புரிந்து கொள்ளுதல், பேசும் உறுப்புகளை இயக்குதல் ஆகியவை இடது மூளையின் முக்கிய வேலை. வாழ்க்கையின் அன்றாட நடத்தைகளை இடதுபக்க மூளைபார்த்துக் கொள்கிறது. அதனால் இடதுமூளையை அகமுகச் செயலுக்காக ஒதுக்கப்பட்டது என்று சொல்லலாம். அதாவது அகத்திலிருந்து பிறக்கும் கட்டளைகளுக்கேற்ப நடைபெறும் நடத்தைகளுக்குரியது. ஏற்கனவே பெற்றுள்ள அனுபவ அறிவின் உதவியால் உறுதி செய்து, தீர்மானிக்கப்பட்ட கணிப்பின் மூலம் நிகழும் செய்லகள் யாவும் இடது மூளையின் வசமுள்ளது. பெரும்பாலும் மிருக சுபாவங்கள், உதாரணமாக பறவையின் கூடுகட்டும் முறை, உணவு தேடும் வகை, குஞ்சுகளை வளர்க்கும் விதம் ஆகியன இடது மூளையின் வசம் உள்ளது. கட்டளைகள் மேல்நிலையிலிருந்து வருவதால் மேலிருந்து கீழ் என்று இதை அழைப்பதுண்டு.
வலதுபக்க மூளை
தன் உடலின் அங்க பரிமானங்களையும் சுற்றுபுறத்தைப் பொருத்து உடலின் இருப்பிடம் எங்குள்ளது என்பதை சதாவர்வ நேரமும் கணித்துக் கொண்டிருப்பது வலது மூளையின் வேலை. இருப்பது அறையோ அல்லது சாலையோ நம்மைச் சுற்றிலும் உள்ள பொருள்களின் இருப்பிடம் மற்றும் தூரத்தை நிதானித்து வைப்பது வலது மூளையின் வேலை.
இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும்போது ஆபத்தின் ஆழத்தை அறிதல், அச்சப்படுதல், போராட்டத்திற்கு தயாராதல், தாக்குதல், தப்பித்தல் போன்ற உணர்வு சம்மந்தப்பட்ட நிகழ்ச்சிகளை வெளிப்படுத்துவது வலது மூளை. எதிர்பாராது திடீரென்று நிகழும் தாக்குதல்களையும், எதிர்ப்புகளையும் விபரீதங்களையும் உடனடியான உணருவது வலதுமூளையே. இடது மூளையிடம் அனுப்பினால் அது இவற்றை உதாசினம் செய்துவிடும் அதனால் பேராபத்தில் மாட்டிக்கொள்ள வேண்டி வரும்.
இடது மூளை வழக்கமாக அன்றாட நிகழ்ச்சிகளுக்காக ஒதுக்கப்பட்டது என்றால் வலது மூளை திடீரென்று எதிர்பாராமல் நிகழும் சம்பவங்களைச் சமாளிப்பதற்காக உள்ளது. இது புற வயப்பட்ட செயலின்பால் இருப்பதாலும், புறத்தூண்டுதலையே அதிகம் கவனிப்பதாலும் இதன் செயலை கீழிருந்து மேல் என்று சொல்லலாம்.
மக்களிடமிருந்து தகவல் ராஜாவுக்கு செல்வது போல உள்ளதால் கீழிருந்து மேல் எனப்படுகிறது. ராஜாவிடமிருந்து மக்களுக்கு கட்டளைகள் பிறப்பதுபோல இடது மூளையின் செயல் உள்ளதால் அது மேலிருந்து கீழ் எனப்படுகிறது.
வலதுக்குப் பொது, இடதுக்குச் சிறப்பு
இன்னொரு வித்தியாசம் இடது மூளை எதையும் கூர்ந்து, தனித்தனியாக, அறிய முற்படுகிறது. ஆனால் வலதுபக்க மூளை எல்லாவற்றையும் பொதுவாக அறியவே முற்படுகிறது. அதற்கு சின்னச்சின்ன விஷயங்களில் ஈடுபாடுஇல்லை. சம்பவத்தின் பொது சாராம்சத்தை அறிவதே வலது மூளையின் ஸ்பெஷாலிட்டி. இடது மூளை சம்பவத்தின் சிறு சிறு அம்சங்களில் மட்டும் கவனம் செலுத்துகிறது அதன் பொது இயல்பை கவனிக்கத் தவறுகிறது. இதை பலமுறை மனிதர்களிடமும் விலங்குகளிடமும் சோதித்துப்பார்த்து உறுதி செய்திருக்கிறார்கள்.
ஒரு சோதனையில் ஆங்கில எழுத்து ஏ வை நிறைய பயன்படுத்தி பெரிய வடிவில் எச் என்ற எழுத்தை உருவாக்கி பலரிடம் காட்டினார்கள். வலதுபக்க மூளையில் பாதிப்பு உள்ளவர்களிடம் படத்தைக் காட்டி அதில்என்ன காணப்படுகிறது என்று கேட்டபோது, அவர்கள் "நிறைய ஏ உள்ளது' என்று சொல்லி ஒரு தாளில் இரைத்துப்போட்டது போல ஏ வை எழுதித் தந்தார்கள்.
வலதுபக்க மூளையில் பிரச்சனை இருப்பவர்களிடம் கொடுத்தபோது அவர்கள் அதில் காணப்பட்ட ஏவை கவனிக்காமல் ஒட்டு மொத்தமான வடிவமாகிய எச் ஐ தாளில் எழுதிக் காட்டினார்கள். இதிலிருந்து உங்களுக்கு இடது மூளையானது சம்பவத்தின் சிறு அம்சங்களைமட்டும் பார்க்கும் அதனால் பொதுவான தத்துவத்தை அறிய முடியாது என்பது தெரிந்திருக்கும். அதுபோலவே வலது மூளையானது சிறப்பு விஷயங்களில் கவனம் செலுத்தாமல் பொதுவான அம்சத்தையே கவனிக்கிறது என்பதும் உங்களுக்குப் புரிந்திருக்கும்.
ஏன் இந்தப் பாகப்பிரிவினை?
மிருக வாழ்க்கையில், ஒவ்வொரு தினமும் போராட்டம். இரைதேடுவது, ஆபத்துகளிலிருந்து தன்னையும் குடும்பத்தையும் பாதுகாப்பது ஆகிய மிக முக்கியமான இரண்டையும் தனித்தனியாக பிரித்து கவனித்தால்தான் குழப்பமில்லாமல் இருக்கும். இரண்டையும் சேர்த்து மூளை ஏகமாக கவனித்து முடிவு செய்வதைவிட, வேலையைப் பிரித்துக்கொண்டு செயல்படுவது பலமடங்கு வெற்றிகரமானது என்பதை பரிணாமம் கண்டுபிடித்திருக்கிறது.
திடீரென்று ஏற்படும் அதிரடி நிகழ்ச்சிகளை சாதாரண சம்பவங்களிலிருந்து இனம்பிரித்து அறிந்து அதற்குக் கேற்ப எமெர்ஜென்சி நடவடிக்கைகளில் இறங்குவதற்கு வலது மூளையும், பரிச்சயமான, வழக்கமான நிகழ்ச்சிகளில் ஈடுபடுவதற்கும் இயல்பான முடிவுகளை எடுக்கவும் இடது மூளையும் தயார் ஆகிவிட்டன. நாட்டு பரிபாலனம் கூட அப்படித்தானே நடக்கிறது. உள்நாட்டு வளர்ச்சிப் பணிகளை, பராமரிப்பு, மரமாத்தது வேலைகளைச் செய்ய பொதுத்துறைகளும், நாட்டின் பாதுகாப்பையும், வேவு பார்ப்பதையும் போலீஸ், இராணுவம் சிபிஐ ஆகியவற்றிடம் ஒதுக்கப்பட்டிருப்பது அதற்காகத்தானே!
பேச்சு பிறந்தது எப்படி
‘அறிந்தது அறியாதது, தெரிந்தது தெரியாதது... அனைத்தும் அறிந்தவர் யாம். அங்கம் புழுதிபட காலிரண்டைப் பரப்பி சங்கை கீர் கீரென்று அறுக்கும் புலவன் நக்கீரனல்லவோ...!’ என்றெல்லாம் நீளமான வசனங்களை நாம் இன்று பேசினாலும் மனிதன் முதலில் பேச ஆரம்பித்த போது ஒற்றைச் சொற்களை துப்பாக்கித் தோட்டாபோல துப்பித் துப்பித்தான் பேசினான். பிறகுதான் அவற்றை எழுவாய், பயனிலை செயபடுபொருள் என்று இலக்கணமாக வரிசையாக்கி வலத்தையும் அதில் விகுதியாக்கிப் பேசினான்,
முதலில் அவன் உதிர்த்த சிறு சிறு சப்தங்கள் பின்னர் வார்த்தைகளாயின. அந்த சிறு சொற்கள் பிறந்த கதை சுவாரசியமானது. மனிதன் உணவை மெல்லுவதற்காக தாடையை மேலும் கீழுமாக அசைக்கும்போது ஒலிகள் பிறப்பதை அறிந்து அவற்றையே சொற்களாகப் பயன்படுத்திக் கொண்டான்.
அ, இ, உ, எ, அய், ஒ என்ற உயிரெழுத்துக்களை உச்சரித்துப் பாருங்கள் வாய் திறக்கும், கீழ்தாடை இறங்கும். மெய்யெழுத்துகளாகிய க், ந், ப், ச், ம் ஆகியவற்றைச் சொல்லிப் பாருங்கள் கீழ்த்தாடை மேலெழும், இனி உயிர்மெய்களாகிய க, ச, த, ப, ம முதலியவற்றைச் சொல்லுங்கள், வாய் மெல்லுவதற்கு மேலும் கீழும் அசைவது போலிருக்கும். அப்படி அசையும்போது நாக்கால் ஒலியை மாற்றி மாற்றி பற்பல சப்தங்களை எழுப்பி அவற்றைச் சொற்களாகப் பயன் படுத்தியிருக்கிறான்.
ஏற்கனவே வாய் மெல்லும் வேலையை இடது மூளைக்கு ஒப்படைத்திருந்ததால் அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட சொற்களை உச்சரிக்கும் வேலையையும் அதுவே செய்ய வேண்டியதாயிற்று. டெக்ஸôஸ் பல்கலைக் கழக உளவியல் பேராசிரியர் மெக்விய்லாஜ் (Mc Weilage) வாய் மெல்லுதலால் மொழி பிறந்தது என்று கருத்தை உருவாக்கியிருக்கிறார்..
இடது கண்ணால் பார்த்து வலது கையால் குத்து
இடக்கைப்பழக்கம் இருப்பவர்களைத் தவிர்தது மீதமுள்ள எல்லா மனிதரையும் கவனித்தால் வலது கண்களைவிட இடது கண்களையே அவர்கள் உஷாராகக் கவனிக்கவேண்டியவற்றிற்கு அதிகம் பயன்படுத்துவது தெரியும். பாக்ஸிங், கராத்தே போன்ற தற்காப்புக் கலையில் ஹோதாவில் இறங்கும் விரர்கள் தலையை வலதுபக்கம் திருப்பி இடது கண் மூலம் போட்டியாளரைக் கவனிப்பதைப் பார்க்கலாம். இடதுகண் மூலம் வரும் தகவல்கள் வலது மூளையில் பரிசீலனை செய்யப்படுவதால், வலது மூளை எமெர்ஜென்சி வேலைக்கு ஏற்றது. என்பதால் அப்படி (தெரியாமலே) செய்கிறார்கள்.
நிலநீர் வாழ்விகளாகிய தவளை தேரை; பாம்பு, பல்லி, ஓணான் போன்ற ஊர்வன, பறவைகள் மற்றும் பாலூட்டிகள் யாவும் முதுகெலும்பிகள். ஆபத்துகள் இடதுபக்கமாக வந்தால்தான் இந்த மிருகங்கள் உடனடியாகச் செயல்படுகின்றன. வலது பக்கமாக வந்தால் கண்டுகொள்ளாமல் முட்டாள்தனமாக இருந்து மாட்டிக் கொள்கின்றன.
உதாரணமாக தவளையைப் பிடித்துத் தின்பதற்காக மெள்ள ஊர்ந்துவரும் பாம்பு தவளையின் இடதுபக்கமாக வந்தால் உடனே தவளை தப்பிக்க முயலுகிறது (தகவல் வலது மூளைக்குச் செல்கிறது). அதே பாம்பு வலதுபக்கமாக வரும்போது தவளை அதை உதாசினப்படுத்தி மாட்டிக்கொள்கிறது. (தகவல் இடது மூளைக்குச் செல்கிறது). இன்னொரு சோதனையில் தவளையை ஒரு சுழலும் வட்ட மேஜையில் அமர வைத்து அதன் இரையாகிய பூச்சி மெள்ள இடமிருந்து வலமாக நகரும்படி செய்தபோது பூச்சி இடது பக்கம் இருக்கும் வரை தவளை அதைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை, பூச்சி வலது பக்கம் வந்ததும் வலது கண்பார்வையில் அது விழுகிறது (இடது மூளைக்குத் தகவல் செல்கிறது) உடனே தவளை உஷாராகி நாக்கை நீட்டி பூச்சியைப் பிடிக்கிறது.
மைக்கெல் டிஃபாக்ஸ் (வாசிங்டன் பல்கலைக்கழகம்) என்பவர் இவற்றைப் பரிசோதனை செய்துபார்த்தார். வலது மூளையானது எதிர்பாராது நிகழும் அதிர்ச்சி சம்பவங்களை வேறுபடுத்தி அறிவதிலும் அதற்குத் தக்கபடி நடந்து கொள்வதிலும் தேர்ச்சி பெற்றிருப்பதால் மிருகங்கள் இடதுபக்க பார்வைக் கோணத்தை ஆபத்துகளை அறிய பயன்படுத்துகின்றன. அதனால் எதிர் தாக்குதல்களையும் இடது பக்கமாகவே நிகழ்த்துகின்றன என்கிறார்.
வலது மூளைக்கு இன்னொரு முக்கிய பணியும் இருக்கிறது. விலங்குகள் தமது சக குழுவினருடன் எப்படி நடந்து கொள்வது, தமது குழு உறுப்பினர்களை அடையாளம் கண்டு கொள்வது என்பதை வலது மூளைதான் செய்கிறது. ஆடுகள் தமது மந்தையில் உள்ள ஒவ்வொரு ஆட்டையும் நினைவு வைத்துக் கொள்வதும், பறவைகள் தம் ஆட்டத்தை மறக்காமலிருப்பதும் வலது மூளையின் செயலால்தான். வலது மூளை அடையாளத்துடன் உணர்வுகளையும் பகிர்ந்து கொள்வதால் வலது மூளையில் அடிப்பட்டவர்கள் சில சமயங்களில் சொந்தங்களையே அடையாளம் தெரியமல் தவிப்பார்கள் அப்படியே தெரிந்து கொண்டாலும் தக்க உணர்வுகளை வெளிப்படுத்த மாட்டார்கள். இது யார் என்று கேட்டால், தெரியுமே "என் அம்மா...' என்று மரக்கட்டை போல அடையாளம் காட்டுவார்கள்!
- முனைவர் க.மணி