கண் தொடர்பான குறைபாடுகளுக்கு சிகிச்சையளித்தால் ஐந்தில் ஒருவருக்கு டிமென்சியா வராமல் தடுக்கலாம். வயதானவர்களுக்கு ஏற்படும் இந்த நோய்க்கு 19% காரணமாக இருப்பது அவர்களின் கண் குறைபாடுகளே என்று ஆய்வுகள் கூறுகின்றன. பார்வைக் குறைபாடுகள் தடுக்கப்பட்டால் அல்லது சிகிச்சை அளிக்கப்பட்டால் ஐந்தில் ஒரு முதியவருக்கு ஏற்படும் நோயைத் தவிர்க்க முடியும்.alzheimersஉலகளவில் சுமார் 55 மில்லியன் பேர் டிமென்சியாவுடன் வாழ்கின்றனர் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

கண் குறைபாடுகள் என்பவை முதுமையில் தடுக்கப்பட முடியாத அம்சம் அல்ல என்று ஆய்வாளர்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். சமீபத்தில் ஒரு புதிய ஆய்வு, நோய்த் தடுப்பிற்கு உதவும் தனி அல்லது ஒன்றாக சேர்ந்து பின்பற்ற வேண்டிய 14 வழிமுறைகள் பற்றி கூறியுள்ளது. இவற்றைக் கடைபிடித்தால் 45% நோயைத் தடுக்க அல்லது தாமதப்படுத்த முடியும். ஒருவரின் பிற்கால வாழ்வில் தோன்றும் சிகிச்சையளிக்கப்படாத கண் பார்வைக் குறைபாடுகளும் இதில் அடங்கும்.

முதியவர்களுக்கு கவனிக்கப்படாமல் போகும் பார்வைக் கோளாறுகள் நோய்க்கு 19% காரணமாகிறது. இது குறிப்பிடத்தக்க, கணிசமான ஒரு அளவு. இதனால் டிமென்சியா தடுப்புக் கோட்பாடுகளில் பார்வைக் கோளாறுகள் ஒரு முக்கிய அம்சமாக சேர்க்கப்பட வேண்டும் என்பதை இந்த ஆய்வு வலியுறுத்துகிறது என்று ஜாமா கண் நோயியல் (Jama ophthalmology)என்ற இதழில் வெளிவந்துள்ள ஆய்வுக் கட்டுரையில் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

அமெரிக்காவில் 65 மற்றும் அதற்கும் மேற்பட்ட சுகாதாரக் காப்பீடு பெற்ற, முதியோர் பராமரிப்பு இல்லங்கள் அல்லது மற்ற வசதிகளில் வாழாத 2,767 வயதானோரின் கண் செயல் மதிப்பீடுகள் மற்றும் அறிவாற்றல் செயல்திறன் தரவுகள் ஆராயப்பட்டன. விழித்திறன் குறைபாடுகளுக்கும் டிமென்சியாவிற்கும் இடையில் இருக்கும் வலுவான தொடர்பைப் பயன்படுத்தி விஞ்ஞானிகள் மூன்று வகை கண் குறைபாடுகளை ஆராய்ந்தனர்.

ஆய்வின் முடிவில் 5% பேருக்கு டிமென்சியா நோய் தூரப் பார்வையாலும், சுமார் 10% பேருக்கு கிட்டப் பார்வையாலும், சுமார் 15% பேருக்கு இருள் மற்றும் ஒளியைப் பகுத்தறியும் திறன், நிறங்களை அடையாளம் காணும் திறன் இல்லாததாலும் உண்டாகும் குறைபாட்டால் (contrast sensitivity) தோன்றுகிறது என்று தெரிய வந்தது. ஒட்டுமொத்தமாக 19% டிமென்சியா நோய் இந்த மூன்றில் ஏதேனும் ஒரு கோளாறால் ஏற்படலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 71 முதல் 79 வயது வரை உள்ளவர்களிடம் இது அதிகமாகக் காணப்படுகிறது.

பெரும்பாலான கண் கோளாறுகளும் சரி செய்யக் கூடியவையே என்பது இதில் குறிப்பிடத்தக்கது. “பாதிக்கப்பட்டவர்களுக்கு பொதுவாக இரண்டு கண்களிலும் பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் இவர்கள் டிமென்சியாவைத் தடுக்க உதவும் சமூகச் செயல்பாடுகளில் குறைவாக ஈடுபடுகின்றனர். குறைவாக பார்வையைப் பயன்படுத்துபவர்களின் மூளைக்கு கண்களில் இருந்து இரத்த ஓட்டம் குறைவாகவே செல்கிறது. பழையவை அழிந்து புதிய செல்கள் உருவாவது குறைவாக உள்ளது.

இதனால் கண் பார்வையை குறைவாகப் பயன்படுத்துபவர்களிடம் பார்வை இழப்பு டிமென்சியாவை ஏற்படுத்துகிறது. பல நாடுகளில் மக்களின் ஒடுக்கப்பட்ட சமூக நிலை, வறுமை போன்றவற்றால் சுகாதார உதவிகளைப் பெறுவது, மருத்துவரை சந்திக்க தேதி, நேரம் கிடைப்பது மற்றும் சிகிச்சை பெறுவது பலருக்கு கடினமாக உள்ளது. இது முதியவர்களுக்கு டிமென்சியா ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கிறது” என்று தன் புதிய ஆய்வின் மூலம் எடுத்துக்காட்டியுள்ள லக்ஃபரா (Loughborough) பல்கலைக்கழகப் பேராசிரியர் ஈஃப் ஹோஜர்வாஸ்ட் (Prof Eef Hogervorst) கூறுகிறார்.

“முதியவர்கள் குறிப்பிட்ட இடைவேளைகளில் கண் பரிசோதனை செய்து கொள்வதன் முக்கியத்துவத்தை இந்த ஆய்வு உணர்த்துகிறது. வருங்காலத்தில் கண் பரிசோதனைக்காக என்று மட்டும் இல்லாமல் நீங்கள் உங்கள் கண் மருத்துவரை சென்று பார்த்தால் டிமென்சியா, இதயக் கோளாறு போன்ற மற்ற நோய்கள் இருப்பதை அறியவும் அது உங்களுக்கு உதவும்” என்று லண்டன் பல்கலைக்கழக பேராசிரியர் ஆண்டனி கவாஜர் (Prof Anthony Khawaja) கூறுகிறார்.

“இந்த ஆய்வு கண் கோளாறுகள் டிமென்சியாவை ஏற்படுத்துகிறது என்பதை நிரூபிக்கவில்லை. சுகாதார காப்பீடு பெற்ற குறைவான அளவு மக்களிடம் மட்டுமே இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த முடிவுகள் பெருவாரியான சமூகங்களுக்கு பொருந்தும் என்று கூறமுடியாது. இது குறித்து மேலும் ஆழமாக ஆராயப்பட வேண்டும்” என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வாளர் டாக்டர் தாமஸ் லிட்டில் ஜான்ஸ் (Dr Thomas Littlejohns) கூறுகிறார்.

இந்த ஆய்வு நோய்சிகிச்சையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

மேற்கோள்: https://tribune.net.ph/2024/09/06/vision-impairments-linked-to-one-in-five-dementia-cases-study-reveals

சிதம்பரம் இரவிச்சந்திரன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.