உயிர் எப்படித் தோன்றியது என்பது நமக்குத் தெரியும். ஆனால் இந்த உயிர் ஏன் தோன்றியது?

உயிரின் பயன் என்ன?

உயிருள்ளவற்றுக்கும் உயிரற்றதற்கும் என்னென்ன வித்தியாசங்கள் இருக்கின்றன?

உயிருள்ளவை சுவாசிக்கும் என்கிறீர்களா? மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் வெண்டிலேட்டர் எனும் கருவி, நம் நுரையீரல் வேலை செய்யாவிட்டால், நமக்குப் பதிலாக மூச்சைத் தருகிறதே..ஆனாலும் அது உயிரற்ற கருவிதானே. ஆக, மூச்சு விட்டால் மட்டும் உயிர் இருப்பதாக அர்த்தமில்லை!.

உணர்ச்சி இருக்க வேண்டும், அப்போதுதான் அது உயிர் வாழ்வதாக அர்த்தம் என்கிறீர்களா? பல ஓட்டல்களில் கைகழுவும் இடத்தில் உள்ள குழாயடியில் நீங்கள் கையை நீட்டினால் மட்டும்தான் தண்ணீர் வெளியே வருகிறது, நீங்கள் அருகே வந்தால் தான் கண்ணாடிக் கதவு திறக்கிறது, மின்விளக்கு எரிகிறது. அவ்வளவு ஏன், சுனாமி வருகிறதா இல்லையா, என்று கடல் அடியில் இருந்து உணர்ந்து சொல்வதே ஒரு கருவி தான். இப்படி பல சமிக்ஞைகளை உணரும் கருவிகள் இன்று உபயோகத்தில் இருந்தாலும், இவை எவற்றுக்குமே உயிர் கிடையாதே.

அப்படியானால், அறிவு வேண்டும், அப்போதுதான் அதற்கு உயிர் இருக்கிறது என்று அர்த்தம் என்றும் பலர் பதில் அளிப்பதுண்டு. பாக்டீரியா, வைரஸ், காளானுக்கெல்லாம் மூளையே இல்லையே. அப்படிப் பார்த்தால் எந்தச் செடி, கொடி, மரத்திற்கும் மூளையே இல்லையே, ஆனால் அவை எல்லாமே உயிருள்ள ஜீவன்கள்தானே!

அதை எல்லாம் விடுங்கள், ஆத்மா இருக்க வேண்டும், அப்போதுதான் உயிருள்ளதென்று அர்த்தம் என்றும் சிலர் சொல்வதுண்டு. வைரஸ் எனும் நுண்கிருமிக்கு ஏது ஆத்மா? ஏதாவது ஒரு வைரசைப் பிடித்து அதை பதப்படுத்தி கிறிஸ்டல் கல் மாதிரி உணத்தி எடுத்து ஒரு டப்பாவில் போட்டு அடைத்து வைத்தால் எத்தனை யுகங்கள் ஆனாலும் அது அப்படியே உறைந்தே கிடக்கும். இந்த நிலையில் அதை யார் பார்த்தாலும் உயிரற்ற ஏதோ பொடி என்றே நினைப்பார்கள். ஆனால், அதையே கொஞ்சம் லேசாய்த் திறந்து, கொஞ்சமே கொஞ்சம் காற்றாடவிட்டால் போதும், புசுக் என்று புடைத்து பெரிதாகி, உயிர் பெற்றுவிடும்.

இப்போதும் ஆர்டிக், அண்டார்டிக் பனி உருகும் போது, விஞ்ஞானிகள் அஞ்சும் மிகப் பெரிய அச்சுறுத்தல் என்ன தெரியுமா? அந்தப் பனியில் பல யுகங்களாய் உறைந்து போயிருக்கும் கிருமிகள் மீண்டும் உஷ்ணம் பட்டு உயிர்பெற்றுவிட்டால் என்ன ஆகும் என்பதுதான்!

உயிர் பெற்றுவிடும் என்றால் என்ன அர்த்தமாம்? அது வளரும். சரி, வளர்ந்தால்தான் உயிர் இருக்கிறது என்றால், நம்மூர்க் குப்பை மேடுகள் கூடத்தான் வேகமாய்ப் பெரிதாய் வளர்கின்றன. ஆங், அதெப்படி, குப்பையை நாம் கொட்டித்தானே வளர்க்கிறோம், தானாய் வளர்ந்தால்தானே வளர்ச்சி என்கிறீர்களா? அப்படிப் பார்த்தால், மலைகள் கூடத்தான் தானாகவே உயரமாய் வளர்கின்றன! ஆனால் அவற்றுக்கு உயிர் இல்லையே!

ஆக, வெறும் வளர்ச்சி மட்டும் போதாது, அது குட்டியும் போட வேண்டும், அப்போது தான் அது உயிருள்ளதென்று எடுத்துக்கொள்ள முடியும். குட்டி போடுவது என்றால் எப்படி? தன் மரபணுக்களை பிரதி எடுத்து அடுத்தடுத்த தலைமுறைக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

ஆக, மரபணுக்களை அழியவிடாமல், மீண்டும் மீண்டும் மறுதலைமுறை மூலமாய் அப்படியே நிலைக்க வைக்கும் தன்மை கொண்டவற்றை மட்டும்தான் உயிருள்ளவை என்கிறோம். இந்த ஆற்றல் இல்லாத மற்ற எல்லாவற்றையுமே உயிரற்றவை என்றே கருதுகிறோம்.

அப்படியானால், குழந்தையே இல்லாதவர் உயிரற்றவரா, என்ன பேத்தல் இது என்று கேட்கத் தோன்றுகிறதா? குழந்தை இல்லாத மனிதரின் எல்லா செல்களும் குட்டிபோட்டுக்கொண்டே தான் இருக்கின்றன. நகத்தின் செல், முடியின் செல், நுரை ஈரலின் செல்கள் என்று எல்லாமே குட்டி போடும், மூளையின் நியூரான் செல்லைத் தவிர. இப்படி மைடாட்டிக் குட்டிபோட்டால் போதாது, இனப்பெருக்க செல் மூலமாக மியாடிக் குட்டி போட்டால் தான் ஏற்பீர்கள் என்றால், அவரின் ஒரே ஒரு செல்லை எடுத்து அதிலிருக்கும் மரபணுக்களை அபிவிருத்தி செய்து ஒரு புதிய மனிதக் குட்டியை உருவாக்கலாம் தெரியுமா?

இப்படித்தான் என்பதில்லை, எப்படியாவது, தன் மரபணுக்களை அபிவிருத்தி செய்யும் ஆற்றல் இருந்தாலே போதும், அது உயிருள்ள ஜந்து என்று கருதப்படும். மற்ற எல்லாமே உயிரற்ற வஸ்துவாகிவிடும்.

இந்த பிரபஞ்சத்தில் எத்தனையோ கிரகங்கள் உள்ளன. ஆனால் உயிர் உலாவும் கிரகங்கள் எத்தனை? நமக்குத் தெரிந்து இந்த பூமி ஒன்றுதான். இந்த அண்ட சராசரத்தின் வேறு ஏதாவது கோடியில், இன்னும் பெயரே வைக்காத ஏதோ ஒரு கிரகத்தில் வேறு விதமான உயிர்கள் இருக்கலாம். ஆனால் அது பற்றி நமக்குத் தெளிவு கிடைக்கும் வரை இப்போதைக்குப் பெருமைபட்டுக்கொள்ளலாம், நாம் எல்லோருமே இந்த பிரபஞ்சத்தின் பேரதிசயங்கள் என்று!

சரி, இன்னொரு மனவிளையாட்டு: உங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு ஜீவராசியை நினைத்துக்கொள்ளுங்கள். மரம், செடி, கொடியா? விலங்கினமா? பறவையா? அல்லது பாக்டீரியா, வைரஸ், காளான் மாதிரியான குட்டி ஜீவனா? மனிதர்கள் வளர்க்கும் ஜீவன்களை விட்டு விடுங்கள். மனித வாசனையே அறியாத ஏதாவது ஒரு காட்டு உயிரினத்தைத் தேர்ந்தெடுங்கள்.

இப்போது கூடு விட்டுக் கூடு பாய்ந்து, உங்களுக்குப் பிடித்த ஜீவனாகவே நீங்கள் ஒரு கணம் மாறிவிட்டதாய்க் கற்பனை செய்யுங்களேன்.

உதாரணத்திற்கு, உங்களுக்குப் புலிதான் பிடிக்கும் என்று வையுங்கள். புலியாக உங்களைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். இப்போது நீங்கள் காட்டில் வேட்டையாடித் திரிந்து கொண்டிருக்கும் ஒரு புலி மட்டுமே.

இப்போது சொல்லுங்கள், புலி ஆகிவிட்ட உங்கள் வாழ்க்கையின் குறிக்கோள் என்னவாக இருக்கும்? நல்லா சாப்பிடணும், தூங்கணும், நல்லா வேட்டையாடணும், என்றால், எல்லாம் சரிதான். அதற்கும் மேலே? எதிர்பாலினப் புலியோடு கூடி ஜாலியா என்ஜாய் பண்ணனும்! என்கிறீர்களா, சரி. அதை எதற்காகச் செய்ய வேண்டும்? அப்போதுதான் நிறைய குட்டிகள் பிறக்கும். அது வளர்ந்து ஆளாகி, நாலாப்பக்கமும் போய், அதன் துணையோடு சேர்ந்து மீண்டும் பல குட்டிகளைப் போட்டு உங்கள் மரபணுக்களைப் பரப்பும். இப்படி மரபணுக்களை மறுமைக்குப் பரப்பிக்கொள்வதுதான் புலியின் ஒரே குறிக்கோள்.

இதை யாரும் புலிகளைக் கூப்பிட்டு வைத்துச் சொல்லி எல்லாம் தருவதில்லை. புலிகளின் மனதில் இயற்கையிலேயே அமைந்த உந்துதல் இது. அதனால் புலி வாழ்வதும், வளர்வதும், உணர்வதும், புணர்வதும், இதை இலக்காக வைத்துத்தான். இந்தப் புலியைப் போலத்தான் எல்லா உயிரினங்களுமே. தம் மரபணுக்களை அழியாமல் காப்பாற்றப் போராடுகின்றன.

ஆனால் எல்லா உயிர்களுமே இந்த மரபணு ஆட்டத்தில் வெற்றி அடைய முடியாதே. இருப்பதே ஒரே ஒரு பூமி, ஒரே ஒரு சூரியன். இந்தக் கிரகத்தில் ஜெனித்த அனைத்து உயிரினத்திற்கும் இதன் வளங்களின் மீது உரிமை உண்டு. பங்கு உண்டு. ஆனால் எல்லோரும் சம வாய்ப்புப் பெற்று உயிர் வாழ்வதென்பது முடியாத காரியம், காரணம், இயற்கை வளங்கள் அளவோடுதான் இருக்கின்றன.

அதனால் ஜீவராசிகள் அனைத்திற்குள்ளும் உயிர்வாழ்வதற்கே பெரும் போட்டி நிகழ்கிறது. இந்த Struggle for existence எனும் வாழ்வியல் போட்டியில் ஜெயிக்க வேண்டும் என்றால், எந்தச் சூழலிலும் பிழைக்கும் வல்லமை வேண்டும். இயற்கையில் எதுவுமே நிலையானதல்ல, எல்லாமே காலத்தோடு மாறிக்கொண்டே இருக்கும், இந்த மாற்றங்களுக்கு ஈடுகொடுத்துத் தானும் அதற்குத் தோதாக மாறி, adapt செய்துகொண்டே இருந்தால்தான், இயற்கையின் இந்தச் சவால்களை மீறிப் பிழைக்க முடியும். இப்படி, இயற்கையோடு இணைந்து மாறிக்கொண்டே இருக்கும் வல்லமை கொண்ட ஜீவராசிகளால் மட்டும்தான் தாமும் பிழைத்து, அதிக எண்ணிக்கையில் தன் இனத்தையும் பரப்பிக்கொள்ள முடியும். இதைத் தான் இயற்கைத் தேர்வு, Natural selection என்றார் சார்லெஸ் டார்வின். இந்தத் தேர்வில் தேற ஒரே ஒரு விதிதான்: survival of the fittest, சூழ்நிலைக்கு ஏற்ப, தன்னைத் தானே மாற்றிக் கொண்டு எதற்கும் ஃபிட்டாய்த் தன்னைத் தயார்படுத்திக்கொள்ளும் வல்லமை பெற்றவை மட்டும்தான் பிழைத்துக்கொள்ள முடியும்.

சூழலை உணராமல் இருப்பது, அதற்கேற்ப மாறாமல் இருப்பது, பொருத்தமாய் மாறாமல் இருப்பது என்று பிழைக்கத் தெரியாமல் சொதப்பும் ஜீவன்களை அப்புறப்படுத்திவிட்டு, போட்டியில் பங்கேற்கும் தயார் நிலையில் இருப்பனவற்றை மட்டும் ஆட்டத்தில் சேர்த்துக்கொள்கிறது இயற்கை.

survival என்றால், இன்று ஒரு பொழுது மட்டும் பிழைத்திருந்து நன்றாக மூக்கு பிடிக்கச் சாப்பிட்டு, நிறைய சொத்து சுகங்களை அனுபவிப்பதில்லை. சாப்பாட்டிற்கே வழி இல்லை என்றாலும், எந்த உடைமைகளுமே இல்லாவிட்டாலும், தன் உயிருக்கே ஆபத்து நேர்ந்தாலும் விடாப்பிடியாகக் குட்டி போட்டு, தன் மரபணுக்களை அடுத்த தலை முறையினுள் பத்திரப்படுத்தி வைப்பதுதான் நிஜ சர்வைவல்.

இந்த மரபணு ஆட்டம் ஒரு பிரமாண்டமான பரமபத விளையாட்டு மாதிரியானது. இதில் ஒருவரின் காலை வாரிவிடப் பல பாம்புகளும், திடீர் ஏற்றத்தைத் தரப் பல ஏணிகளும் ஒளிந்திருக்கின்றன. எப்படியாவது காய்களை நகர்த்தி வம்சாவிருத்தி எனும் பரமபத பொற்கதவுகளை அடைந்தால்தான் ஜெயித்ததாக அர்த்தம்.

எத்தனையோ கோடி ஆண்டுகளுக்கு முன்பு, இந்த உலகில் தோன்றிய முதல் உயிருக்குள் இருந்த சாட்சாத் அதே மரபணுக்கள்தான், உங்கள் வரைக்கும் அறுபடாமல் அப்படியே பத்திரமாக வந்து சேர்ந்திருக்கின்றன. உங்கள் மரபணுக்களைப் பரிசோதனை செய்து பார்த்தால் அவற்றின் மிக நீண்ட தூரப் பயணத்தின் வரலாறும், அவை கடந்து வந்த பாதைகளின் அடையாளமும் தெரியும்.

இத்தனை யுகங்களால் அறுபடாமல், அழியாமல் மற்ற விதமான மரபணுக்களை ஜெயித்துக்கொண்டே வந்த உங்கள் மரபணுக்கள் இனிமேலும் தோற்றுவிடக் கூடாதென்றால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? உங்கள் பெற்றோர் பொக்கிஷமாய் பாதுகாத்து உங்களிடம் ஒப்படைத்த உயிர் எனும் இந்த அதிசயத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செலுத்த நீங்கள் உங்களை எப்படித் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும்?

சும்மா, உலகில் மற்ற எல்லா ஜீவராசிகளைப் போல, நீங்களும் இனப் பெருக்கம் செய்து, உங்கள் குட்டிகளைப் பாதுகாத்து வளர்த்து, அவர்கள் மூலமாய் உங்கள் மரபணுக்களை அழியாமல் தொடரச் செய்ய வேண்டும். கேட்பதற்கு மிக எளிதாக இருக்கிறதே, ஆனால் நடைமுறையில் இது எவ்வளவு கடினமான காரியம் தெரியுமா?

(கருஞ்சட்டைப் பதிப்பகம் வெளியீடு செய்த "கொஞ்சம் டார்வின் கொஞ்சம் டாக்கின்ஸ்" என்ற நூலிலிருந்து...)

Pin It