பார்ப்பனியம் கட்டமைத்த ஜாதி அமைப்பை வாழ்வியல் போக்காக நிலைநிறுத்தி வரும் இரண்டு முக்கிய நிறுவனங்களாக ‘குடும்பம்’, ‘திருமணம்’ என்பவற்றைக் குறிப்பிடலாம். இந்த இரண்டு நிறுவனங்கள் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்பது நடைமுறைக்கும் எதார்த்தத்துக்கும் சாத்தியமானதல்ல என்றாலும், இந்த நிறுவனங்களின் ‘இறுக்கம்’ தளர்த்தப்பட்டாக வேண்டும் என்பதில் முற்போக்கு சிந்தனையாளருக்கு கருத்து மாறுபாடு இருக்க முடியாது. வேறு மொழியில் கூற வேண்டுமானால் ‘குடும்ப - உறவுகள்’ - திருமண உறவுகளிடையே நிலவும் ‘ஜாதியம்’ நீக்கம் பெற்று இந்த அமைப்புகள் ஜனநாயகப்படுத்தப்பட வேண்டும்.

பெண் விடுதலைக்கான தத்துவத்தை ‘பெண் ஏன் அடிமையானாள்?’ நூல் வழியாக அறிவுப் பெட்டகமாக சமூகத்துக்கு வழங்கிச் சென்றிருக்கிற பெரியார், பெண்ணடிமையைக் காப்பாற்றும் இந்த நிறுவனங்கள் மீது கேள்வி எழுப்புகிறார்.

இந்த திசை வழியில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள இரண்டு தீர்ப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன. ஒன்று இந்தியத் தண்டனைச் சட்டத்தில் இடம் பெற்றிருந்த காலாவதியாகிப் போன 377ஆவது பிரிவை உச்சநீதிமன்றம் நீக்கியிருப்பதாகும். இதன் மூலம் வயதுக்கு வந்த எவருக்கும் அவர்களுக்கான உடல் உறவு, அவரவர் ‘விருப்புத் தேர்வுக்கு’ உட்பட்டது. அதில் சட்டங்கள் குறுக்கிட முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது. ஒரு ஆண் - ஆணுடனோ, பெண் - பெண்ணுடனோ உறவுகளைத் தேர்வு செய்து கொள்ளும் உரிமை சட்ட அங்கீகாரம் பெற்றுள்ளது.

தீர்ப்புகள் வந்து விட்டதாலேயே அவை சமுதாயத்தின் நடைமுறையாக மாறிவிடப் போவது இல்லை என்பது உண்மைதான் என்றாலும், ‘பெண் - ஆண்’ குடும்ப உறவு - பிள்ளைப் பேறு - திருமணம் என்ற சமூகம் திணித்த கலாச்சார மரபுகளின் மீறலுக்கும், ‘பெண் விடுதலை - ஜாதி மறுப்பு’க்கான பாதை நோக்கிய பயணத்துக்கும் இந்தத் தீர்ப்பு வழி திறந்து விட்டிருக்கிறது என்று கூற முடியும்.

மற்றொரு தீர்ப்பு, 1971இல் சேலத்தில் பெரியார் நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டில் தீர்மானமாக வலியுறுத்திய இந்திய தண்டனைச் சட்டத்தின் 497ஆவது பிரிவை நீக்கம் செய்வதாகும். ஒரு மனைவியை கணவனின் ‘உடைமையாக’ நிலைநிறுத்தும் இந்தப் பிரிவு உச்சநீதிமன்றத்தால் நீக்கம் செய்யப்பட்டிருக்கிறது. கணவன், தனது மனைவியை ‘விபச்சாரம்’ செய்ய அனுமதித்தால் அது குற்றமாகாது; மாறாக பெண் தன்னிச்சையாக வேறு ஒருவருடன் உறவு கொண்டால் குற்றம் என்ற பாகுபாட்டை இந்தத் தீர்ப்பு நீக்கி, பெண்ணின் பாலுறவு சுதந்திரத்தை உறுதிப்படுத்தியிருக்கிறது.

விவாகரத்துச் சட்டம் இருப்பதாலேயே திருமணங்கள் அனைத்தும் விவாகரத்துக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்று கூறிட முடியாது. விவாகரத்து பெண்களுக்கான ஒரு பாதுகாப்புக் கவசம். அதேபோல் பெண்களின் பாதுகாப்புக்கான கவசமாகவே இந்த இரண்டு தீர்ப்புகளையும் அணுக வேண்டும். ‘பெண் ஏன் அடிமையானாள்?’ நூலில் பெரியார் முன் வைத்த பெண் விடுதலைக் கருத்துகளின் நீட்சியாகவே இந்தத் தீர்ப்புகள் வந்திருக்கின்றன. பெண்கள் மீது மதம் திணித்த அடிமை விலங்குகளும் ‘மனுதர்மத்தின்’ மனித விரோத கோட்பாடுகளும் இத் தீர்ப்புகளால் சம்மட்டி அடி வாங்கியிருக்கின்றன.

Pin It