மனித குலம் தோன்றிய காலத்தில் இருந்த புராதனப் பொதுவுடமை சமுதாயத்தில் தாய்வழி சமுதாயமே இருந்தது. கூட்டம் கூட்டமாக இருந்த அன்றைய மனிதர்களுக்கு அக்கூட்டத்தில் உள்ள ஒரு பெண்ணே தலைமை தாங்கி வழி நடத்திச் சென்றாள். கால மாற்றத்தின் விளைவாக தாய்வழி சமுதாயம் மாறி, தந்தைவழி சமுதாயம் உருவானது. இதன் தொடர்ச்சியாக பெண்கள் அடிமைப்படுத்தப்பட்டனர். பல்வேறு வகையான அடக்குமுறைகள் பெண்கள்மீது ஏவப்பட்டன. பொருளாதார ரீதியாகவும் கலாச்சாரம் மற்றும் சமூக ரீதியாகவம் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள் உருவாகின. இருபதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட மாற்றங்களின் விளைவாக பெண்கள் தங்கள் வாழ்வில் சுதந்திரக் காற்றை சுவாசிக்க ஆரம்பித்தனர். குழந்தைத் திருமணம், உடன்கட்டை ஏறுதல், வரதட்சணை, குடும்ப வன்முறை என்பவற்றுக்கு எதிராகவும் பாலியல் வன்முறைகளுக்கு எதிராகவும் சட்டங்கள் உருவாகின. பெண்களுக்கு சொத்துரிமை வழங்கப்பட்டது. உயர்கல்வி வாய்ப்புகள் உருவாகின. அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்தன. கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் இட ஒதுக்கீடு கிடைத்தது.

எனினும் பெண்களுக்கு இன்னும் முழுமையான சமத்துவம் கிடைக்கவில்லை. எனவே, ஐக்கிய நாடுகள் அவையும் அரசியல் சட்டமும் பிற சட்டங்களும் பெண் உரிமையை உயர்த்திப் பிடித்தன. பெண்களின் உரிமைகளை சட்ட உரிமைகள் மற்றும் சமுதாய உரிமைகள் என வகைப்படுத்தலாம். இந்த இருவகை உரிமைகளும் பெண்களுக்கு முழுமையாக கிடைக்கக் கூடிய சூழல் இன்னும் உருவாகவில்லை. அரசியல், கல்வி, வேலைவாய்ப்பு, சொத்துரிமை என்பன சமுதாய உரிமைகளாகும். இந்த சமுதாய உரிமைகளை பெறுவதற்கான சட்டங்கள் உருவாக்கப்பட்டு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.women rights 545பாலியல் வன்முறை (கற்பழிப்பு)

பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் மிகக் கொடிய மனித உரிமை மீறல்களாகும். அன்றாடம் செய்தித்தாள்களை புரட்டும்போது இத்தகைய செய்திகளை காண முடிகிறது. பாதிக்கப்பட்ட பெண்கள் அல்லது அவர்களின் பெற்றோர் இத்தகைய பாலியல் வன்முறை குறித்து பெரும்பாலும் புகார் செய்வதில்லை. இதனால் குற்றவாளிகள் இலகுவாக தப்பி விடுகின்றனர். இவ்வாறு குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் தண்டிக்கப்பட வேண்டும்.

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 375, 376ன்படி ஒரு பெண்ணின் சம்மதின்றி அவளுடன் உடலுறவு கொள்வது கற்பழிப்பு ஆகும். அவளது விருப்பத்திற்கு எதிராக - குற்றவாளி தனது மேலான உடல் பலத்தைக் கொண்டு உடலுறவு கொள்வது கற்பழிப்பாகும். பதினாறு வயதுக்குட்பட்டவளாக இருக்கும்போது ஒப்புதல் அளித்தாலும், அளிக்காவிட்டாலும், மேலும் அவனது மனைவியாக இருந்தாலும் குற்றமாகும்.

அவளது ஒப்புதலுடன், அவ்வொப்புதல் அவன் தன்னைக் கொன்றுவிடக் கூடும் அல்லது காயமேற்படுத்தக் கூடும் அல்லது அப்பெண்ணுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு ஆபத்து விளையும் என்ற பயத்தில் தரப்பட்ட ஒப்புதலாக இருந்தால், உதாரணமாக தனியாக வசிக்கும் பெண்ணிடம் எதிர்ப்பு தெரிவித்தால் கொலை செய்து விடுவேன் என மிரட்டி உடலுறவு கொண்டால், அவள் ஒப்புதல் அளித்திருந்தாலும் அது கற்பழிப்பாகும். போதையுடன் அல்லது மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் பெண் ஒப்புதல் தந்திருந்தாலும் குற்றமாகும். கணவன் என்று நம்ப வைத்து உறவு கொள்வது குற்றமாகும். தான் கைது செய்யப்படக் கூடும் என்ற அச்சத்தில் சம்மதம் தெரிவித்தால் அது சம்மதமாகக் கருதப்படமாட்டாது.

காவல்துறை அதிகாரி ஒருவர் தனது அல்லது தன் துணை அதிகாரியின் பாதுகாவலில் உள்ள பெண்ணிடம், பொது ஊழியர் தன் பாதுகாப்பிலுள்ள பெண்ணிடம் அல்லது சிறை அதிகாரி, விடுதி காப்பாளர் முதலியோர் அங்குள்ள பெண்ணுடன் உடலுறவு கொள்ளுதல் குற்றமாகும். மேற்கண்ட சூழ்நிலைகளில் பெண் சம்மதம் தெரிவித்தாலும் அது முறையான சம்மதமாக கருதப்பட மாட்டாது. பெண் ஒப்புதல் தரவில்லை என தனது வாக்குமூலத்தில் கூறினால் இந்திய சாட்சியச் சட்டம 114 (அ)ன்படி அவ்வாறே அனுமானம் செய்து கொள்ளலாம். குற்றவியல் நடைமுறைச் சட்டம் (Crpc) பிரிவு 327ன்படி, தனித்த அறைக்குள் பாலியல் வன்முறை குறித்த விசாரணையை நடத்தலாம். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் எதிர்காலம் கருதி ஊடகங்களில் செய்திகள் வெளியிடுவதை தடை செய்யலாம்.

திருமணம் - விவாகரத்து

இந்தியாவில் வாழும் இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் ஆகிய மதத்தவர்களுக்கென தனித்னியான திருமண மற்றும் விவாகரத்துச் சட்டங்கள் உள்ளன.

இந்து திருமணச் சட்டம் 1955

இந்து திருமணச் சட்டம் புத்த, ஜைன மற்றும் சீக்கிய மதத்தினரையம் கட்டுப்படுத்தும், முறையற்றுப் பிறந்த குழந்தையின் தந்தை இந்துவாக இருப்பினும் தாய் கிறிஸ்தவராகவோ, இஸ்லாமியராகவோ இருந்தால் இந்துச் சட்டம் அக்குழந்தைக்குப் பொருந்தாது. இந்து திருமணச் சட்டப்பிரிவு 5-ன்படி திருமணத்தின் போது மணமகனுக்கு 21 வயதும், மணமகளுக்கு 18 வயதும் பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.

இந்து திருமணச் சட்டத்தின்படி ஒருவர் ஒரு திருமணம் மட்டுமே செய்யலாம். மறு திருமணம் செய்ய விரும்பும் ஒருவரின் கணவன் அல்லது மனைவி உயிருடன் இருக்கக் கூடாது. இல்லையேல் சட்டப்படியான விவாகரத்துப் பெற்றிருக்க வேண்டும். இந்து திருமணச் சட்டம் பிரிவு 5-ன்படி மணமக்கள், தடை செய்யப்பட்ட உறவு உள்ளவராக இருந்தால் திருமணம் செல்லாது. ஆனால் அத்தகைய உறவில் மணம் செய்ய அனுமதிக்கும் வழக்கம் இருந்தால் அத்திருமணம் செல்லுபடியாகும். இந்து திருமணச் சட்டத்தின் பிரிவு 7-ன்படி திருமணம் செய்யும் ஒருவர் ஹோமம் வளர்த்தல் மற்றும் மணமக்கள் தீயைச் சுற்றி ஏழு அடி (சப்தபதி சடங்கு) எடுத்து வைத்து வலம் வருதல் ஆகிய சடங்குகள் செய்தால் திருமணம் நிறைவு பெறும்.

சுயமரியாதைத் திருமணம் 1967

தமிழ்நாட்டில் சுயமரியாதைத் திருமணம் மதச்சடங்குகளையும், புரோகிதரையும் அனுமதிப்பதில்லை. இந்து திருமணச் சட்டம் (சென்னை திருத்தம்) 1967. (The Hindu Marriage Act) (Madras Amendment) 1967 என்ற சட்டத் திருத்தத்தின்படி மதச் சடங்குகளை பின்பற்றத் தேவையில்லை. மணமக்கள் ஒருவரையொருவர் பார்த்து மற்றவர்க்கு புரியும் மொழியில், கணவனாக அல்லது மனைவியாக மற்றவரை ஏற்றுக் கொள்கிறேன் என்று உறவினர்கள் அல்லது நண்பர்கள் முன்னிலையில் கூறினால் போதமானது. அல்லது மாலையோ, மோதிரமோ மாற்றிக் கொள்ளலாம். இச்சட்டம் தமிழ்நாட்டுக்கு மட்டுமே பொருந்தும்.

கணவனோ அல்லது மனைவியோ எந்தவிதமான நியாயமான காரணமும் இல்லாமல் சேர்ந்து தாம்பத்திய உறவுக்கு மறுக்கும்போது, பாதிக்கப்பட்டவர் தாம்பத்திய உறவை மேற்கொள்ள தீர்ப்பாணை வழங்கும்படி மாவட்ட நீதிமன்றத்தில் மனு செய்து கொள்ளலாம். திருமணம் செய்துகொண்ட நபர், வேறு திருமணம் செய்திருந்தாலோ அவ்வாறு திருமணம் செய்தவர் விவாகரத்து பெறாமல் இருந்தாலோ இரண்டாம் திருமணம் செல்லாததாகிவிடுகிறது. மேலும் தடை செய்யப்பட்ட உறவு முறைகளுக்குள் செய்யப்படும் திருமணம் முற்றிலும் சட்டத்தால் விலக்கப்படுகிறது.

திருமணம் செய்யும் நபர் குழந்தை பெறும் தகுதியற்றவராக இருந்தாலோ மனநிலை பாதிக்கப்பட்டவராக இருந்தாலோ அத்திருமணம் செல்லாது. திருமணம் செய்பவரிடம் மோசடியாக ஒப்புதல் பெறப்பட்டாலோ மனைவி திருமண காலத்தில் வேறொருவர் மூலம் கர்ப்பமாக இருந்தாலோ அத்திருமணம் செல்லாது.

சட்டப் புறம்பான குழந்தைகள்

இல்லாநிலை திருமணத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு சொத்தில் எந்த உரிமையம் இல்லாமல் இருந்தது. ‘காஷ்மீரிவால் எதிர் அரசு 1962 னுஆஊ டெல்லி 348” என்ற வழக்கில் தன் தகப்பனாரின் சொத்தில் சட்டப்புறம்பான குழந்தைகளும் மற்ற சட்டப்பூர்வ வாரிசுகளைப் போலவே சம பங்கு கோரமுடியும் என தீர்ப்பளிக்கப்பட்டது.

நீதிமுறைப் பிரிவு (Judicial Seperation)

நீதிமுறைப் பிரிவு என்பது தற்காலிகமாக தம்பதிகளை பிரிந்திருக்க சட்டப்பூர்வமான அனுமதி அளித்தலாகும். நீதிமுறைப்பிரிவு அளிக்கப்பட்டாலும் திருமணம் செல்லாததாகிவிடாது. இந்நிலையில் அவர்கள் வேறு திருமணம் செய்து கொள்ள முடியாது.

நீதிமுறைப் பிரிவு எப்போது வழங்கப்படலாம்?

 தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் பிரிந்திருந்தால்

 மனைவியை கொடுமை செய்தால்

 எவரேனும் ஒருவர் ஒரு ஆண்டுக்கும் குறையாமல் தொழுநோயால் பாதிக்கப்பட்டிருந்தால்

 தொற்றிக் கொள்ளக்கூடிய பாலியல் நோயால் பீடிக்கப்பட்டிருந்தால்

 எவரேனும் ஒருவர் மனநோய்க்கு உள்ளாகி இருந்தால்

 திருமணத்திற்கு பிறகு பிறருடன் உடலுறவு கொண்டிருந்தால்

அதே வேளை, நியாயமான காரணங்களுக்காக மட்டுமே நீதிமுறைப்பிரிவு வழங்கப்படும். கணவன் வேறொருத்தியுடன் வாழ்வதால் மனைவி பிரிந்து போனால், மனைவி கைவிடப்பட்டு விட்டாள் என்ற அடிப்படையில் நீதிமுறைப் பிரிவு வழங்கப்பட மாட்டாது.

மணமுறிவு (விவாகரத்து)

பிரிவு 13-ன்படி மணமுறிவு (விவாகரத்து) பின்வரும் காரணங்களின் அடிப்படையில் வழங்கப்படலாம்.

 தானாக விரும்பி பிற நபருடன் உடலுறவு கொண்டால்,

 இன்னொருவரைக் கொடுமைப்படுத்தினால்

 இன்னொருவரை இரண்டாண்டு காலம் கைவிட்டுச் சென்றுவிட்டால்

 வேறு மதத்தைத் தழுவினால்

 குணப்படுத்த முடியாதபடி மனநோயால் அல்லது தொழுநோயால் பாதிக்கப்பட்டிருந்தால்,

 தொற்றக்கூடிய பாலியல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால்,

 துறவு நிலையை மேற்கொண்டால்

 ஏழாண்டுகளுக்கு மேல் காணாமல் போயிருந்தால்.

மேலும் நீதிமுறைப்பிரிவு வழங்கப்பட்ட பிறகு ஒரு வருட காலமோ, அதற்கு மேலோ கணவன் மனைவிக்குள் எந்த தொடர்பும் இல்லாமல் இருந்தால் அல்லது நீதிமன்றம் மண வாழ்க்கையை மீட்டளிக்க தீர்ப்பாணை அளித்தும் இருவரிடையே ஒரு வருடத்திற்கு மேல் எந்த சம்பந்தங்களும் இல்லை எனும் பட்சத்தில் நீதிமன்றம் மணமுறிவு வழங்கலாம்.

மனைவி மட்டும் சில காரணங்களின் அடிப்படையில் விவாகரத்து பெற இயலும்.

 கணவன் இன்னுமொரு திருமணம் செய்துகொண்டால்,

 கணவன் ஜீவனாம்சம் கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு ஒரு வருடமோ, அதற்கு மேலோ கணவன் மனைவியுடன் எந்தத் தொடர்பும் இல்லாமலிருந்தால்,

 பதினைந்து வயதிற்குள் திருமணம் செய்யப்பட்டப் பெண் 18 வயதிற்குள் திருமணத்தை மறுதலித்திருந்தால்,

மேற்கண்ட காரணங்களுக்காக இந்துப் பெண் விவாகரத்து பெற முடியும். இந்த விஷயத்தில் முஸ்லிம் பெண்ணைவிட இந்துப் பெண்ணுக்கு சில உரிமைகள் உள்ளன என்பதை நாம் காண முடிகிறது.

சிறப்புத் திருமணச் சட்டம் 1954

எந்தவித மதச்சடங்குகளும் இல்லாமல் எந்தச் சாதியையம், எந்த மதத்தையும் சேர்ந்த இருவர், திருமணப் பதிவாளர் முன்னிலையில் மணந்து கொள்ள இச்சட்டம் வகை செய்கிறது. இச்சட்டத்தி;ன கீழ் திருமணம் செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மாவட்டத் திருமண பதிவாளருக்கு அறிவிக்கை கொடுக்க வேண்டும். இருவரில் ஒருவர் அறிவிக்கை கொடுப்பதற்கு முன் குறைந்தது ஒரு மாத காலம் தங்கி இருந்தார்களோ அந்த மாவட்டப் பதிவாளருக்கு அறிவிக்கை கொடுக்க வேண்டும். அந்த அறிவிக்கை பொது மக்கள் பார்வைக்கு ஒரு மாதம் வைக்கப்பட்ட பின் எந்தவித சட்டப்பூர்வ எதிர்ப்பும் இல்லையென்றால் அறிவிக்கை கொடுத்த மூன்று மாதங்களுக்குள் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.

திருமணம் செய்து கொள்ள எந்த சடங்குகளும் கிடையாது. மணமக்கள் ஒருவரையொருவர் பார்த்து திருமண அதிகாரி மற்றும் மூன்று சாட்சிகள் முன் கணவனாக அல்லது மனைவியாக ஏற்றுக்கொள்ள விரும்பவதைக் கூற வேண்டும். திருமண அதிகாரி திருமணம் நடந்ததற்கு ஆதாரமாகச் சான்றிதழ் தருவார். இச்சட்டத்திலும் தாம்பத்திய உரிமைக்கு, நீதிமுறைப் பிரிவுக்கு, மணமுறிவுக்கு, வகை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இச்சட்டத்தின்படி மனைவி மட்டுமே பராமரிப்புத் தொகையை கேட்டக உரிமை பெற்றிருக்கிறார். பிரிவு 28-ன்படி, கணவன் மனைவி இருவரின் ஒப்புதலுடன் மணமுறிவு பெற முடியும்.

இஸ்லாமியத் திருமணச் சட்டம்

இஸ்லாமியத் திருமணச் சட்டப்படி திருமணம் என்பது காலவரையற்ற ஆண், பெண் வாழ்க்கை ஒப்பந்தமாகும். எனவே சம்பிரதாயங்கள் எதுவும் இல்லாமலே திருமணம் நடைபெற முடியும்.

மணமக்களின் தகுதி

திருமணம் செய்துகொள்பவர்கள் உரிமை, வயது பெற்றவராயும், சித்தம் தெளிந்தவராயும் இருத்தல் வேண்டும். ஆணும் பெண்ணும் 15 வயதை பூர்த்தி செய்திருந்தால் உரிமை வயது வந்தவராகக் கருதப்படுவர். ஆனால் உரிமை வயது அடையாதவர்களும், சித்தம் கலங்கியவர்களும் காப்பாளர் மூலம் திருமணம் செய்து கொள்ளலாம். இஸ்லாமிய சட்டப்படி முஸ்லிம் ஆண் நான்கு பெண்களை சட்டபூர்வமாக மணந்து கொள்ள முடியும். கணவன் மனைவி இருவரில் யாராவது ஒருவர் இஸ்லாத்தை துறந்து வேறு ஒரு மதத்தை தழுவினால், உடனே அத்திருமண ஒப்பந்தம் முறிந்து விடுகிறது.

வாழ்க்கைப் பொருளுதவி

கணவனால் கைவிடப்பட்ட பெண்ணுக்கும் அவளால் பராமரிக்கப்படும் குழந்தைகளுக்கும் வாழ்க்கைப் பொருளுதவி (ஜீவனாம்சம்) அளிக்க குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (criminal Procedure Code – CRPC) பிரிவு 125 வகை செய்கிறது. மேற்படி சட்டத்தின் பிரிவு 125(1)-ன்படி முறைப்படியான திருமண உறவின் மூலம் பிறந்த குழந்தையானாலும் முறையற்ற உறவின் மூலம் பிறந்த குழந்தையானாலும் தனது தந்தையிடமிருந்து வாழ்க்கைப் பொருளுதவி கோரலாம்.

வாழ்க்கைப் பொருளுதவி அளிக்கும் அளவுக்கு வசதியுள்ளவரிடமிருந்துதான் கோர முடியும். அவரால் பராமரிக்கப்படாமல் ஒதுக்கி வைக்கப்பட்டவர்தான் கோர முடியும், கோருபவர் தன்னைப் பராமரித்துக் கொள்ள இயலாத நிலையில் இருக்க வேண்டும். தன்னைப் பராமரித்துக் கொள்ளும் வசதியிருப்பின் தன் கணவனிடமிருந்து மனைவி வாழ்க்கைப் பொருளுதவி கோர முடியாத. வாழ்க்கைப் பொருளுதவி கோர கால வரையறை கிடையாது. பிரிவு 125(4)ன்படி, வேறு ஒரு பெண்ணை மனைவியாக வைத்திருப்பதனால் அல்லது ஏதேனும் நியாயமான காரணத்திற்காக கணவனிடமிருந்து பிரிந்து வாழும் பெண் வாழ்க்கைப் பொருளுதவி கோரலாம். இருவரின் இசைவுடன் பிரிந்து வாழும் போதும் மனைவி வேறு ஆணுடன் சேர்ந்து வாழ்ந்தாலும் வாழ்க்கைப் பொருளுதவி கோர முடியாது. மனைவி கணவனிடமிருந்தும் கணவன் மனைவியிடமிருந்தும் குழந்தைகள் பெற்றோரிடமிருந்தும் வயதான பெற்றோர் மகனிடமிருந்தும் வாழ்க்கைப் பொருளுதவி கோரலாம்.

பெண் தொழிலாளர் உரிமைகள்

பொதுவாக தொழிலாளர் என்றால் இருபால் தொழிலாளர்களையும் குறிக்கும். தொழிலாளர் சட்டங்கள் அனைத்தும் ஆண் பெண் இருபாலாருக்கும் பொதுவானவையே, அதேவேளை, பெண் தொழிலாளர் மற்றும் இளம் தொழிலாளர்களுக்கென தொழிலாளர் சட்டங்களில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தொழிற்சாலைகள் சட்டம் 1948

தொழிற்சாலைகள் சட்டம் 1948-ன் பிரிவு 71ன்படி பெண் குழந்தைத் தொழிலாளர்களை இரவு 7.00 மணிமுதல் காலை 8.00 மணிவரை வேலை செய்யக்கூறுவதோ, அனுமதிப்பதோ கூடாது. மேலும் 15 – 18 வயதிற்குட்பட்டோர் குழந்தைத் தொழிலாளர் ஆவர். பிரிவு 66-ன்படி, இரவு 7.00 மணிமுதல் காலை 6.00 மணி வரையிலும் பெண்களை வேலைக்கு அமர்த்தக்கூடாது.

இச்சட்டத்தின் பிரிவு 22 மற்றும் 27-ன்படி ஆபத்தான எந்திரங்கள் இயங்கிக் கொண்டிருக்கும்போது, அவை தொடர்பான வேலைகளில் குறிப்பாக சுத்தம் செய்தல், எண்ணெய் போடுதல், திருகாணிகளை சரி செய்தல் போன்ற வேலைகளில் பெண்களை ஈடுபடுத்தக்கூடாது. தொழிற்சாலைகள் சட்டம் பிரிவு 87-ன்படி எந்தவொரு தொழிலும் உடல் தீங்கு நச்சுத்தன்மை அல்லது நோய்கள் உருவாகும் வாய்ப்பு உள்ளது என்று மாநில அரசு கருதுமானால் அத்தொழில்களை ஆபத்தான தொழில்கள் என அறிவிக்கலாம். இவ்வாறு அறிவிக்கப்பட்ட ஆபத்தான தொழில்களில் பெண் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தக் கூடாது.

பிரிவு 48-ன்படி முப்பதுக்கும் மேற்பட்டப் பெண்கள் பணியாற்றும் தொழிற்சாலைகளில் போதுமான வசதிகளுடன் கூடிய குழந்தைகள் காப்பகம் அமைக்கப்பட வேண்டும். கழிப்பிடங்கள் இருக்க வேண்டும்.

பிரிவுகள் 51, 54

மற்றத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஓய்வு நேரத்தைக் காட்டிலும் கைக்குழந்தை உடைய தாய்மார்களுக்கு சம்பளத்தில் பிடித்தம் எதுவும் செய்யாமலேயே கூடுதலான ஓய்வு நேரங்கள் வழங்கப்பட வேண்டும். இந்த கூடுதல் ஓய்வு நேரம் குழந்தையை கவனிப்பதற்காக ஒதுக்கப்படுகிறது. இது தவிர, பெண்கள் வேலை செய்யும் நேரங்களை மாற்றியமைக்கும் மாற்று முறைகளை நடைமுறைப்படுத்தக் கூடாது. எனினும் வார விடுமுறை நாட்களை அடுத்து வரும் வேலை நாளில் இத்தகைய மாற்று முறைகளை வேலை பார்க்குமாறு கோரலாம்.

மேலும், பெண் தொழிலாளருக்கு வழங்கப்படும் ஊதியத்துடன் கூடிய வருடாந்த விடுப்பிற்காக, முந்தைய ஆண்டில் அவர் வேலை செய்த மொத்த வேலை நாட்களை கணக்கிடும்போது அத்தொழிலாளி 12 வாரங்களுக்கு மிகாமல் எடுத்த பேறுகால விடுப்பினை வேலை செய்த நாளாகக் கணக்கிட வேண்டும்.

தொழிலாளர் அரசு காப்பீட்டுச் சட்டம் 1984

இச்சட்டமானது இயலாதச் சூழ்நிலையில் தொழிலாளர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் பல நலன்களை வழங்க வகை செய்கிறது. மேலும் இச்சட்டத்தின்படி குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் பெண்களுக்கு 14 நாட்களுக்கான உதவிக்தொகை வழங்கப்பட வேண்டும்.

பேறுகால நலச் சட்டம் 1961

பெண் தொழிலாளர்களுக்கான சட்டங்களில் மிகவும் முக்கியமானது பேறுகாலச் சட்டமாகம். இச்சட்டம் 1961-ம் ஆண்டு இயற்றப்பட்டது. 1948 ஆண்டு இயற்றப்பட்ட தொழிலாளர் அரசு காப்பீட்டுச் சட்டத்தின் கீழ் உதவிகள் பெறும் பெண் தொழிலாளர்களுக்கு இச்சட்டம் பொருந்தாது. எனினும் தொழிலாளர் அரசு காப்பீட்டுச் சட்டத்தின் கீழ் உதவி பெற இயலாத பெண் தொழிலாளர்கள் இச்சட்டத்தின் கீழ் உதவி பெறலாம்.

பிரிவு 4

இப்பிரிவின்படி குழந்தை பிறந்த நாளில் இருந்து அல்லது கருச்சிதைவு ஏற்பட்ட நாளிலிருந்து ஆறு வாரங்களுக்கு பெண் தொழிலாளரை வேலையில் ஈடுபடுத்துவது தடை செய்யப்படுகிறது. மேலும், கர்ப்பிணி பெண்களை கடினமான வேலைகளில் ஈடுபடுத்தக்கூடாது. கருவுற்றக் காலங்களில் இலகுவான வேலைகளை செய்தபோதும் அப்பெண்களுக்கு முழுமையான சம்பளம் வழங்கப்பட வேண்டும்.

பிரிவு 5

இப்பிரிவின்படி பேறுகாலத்தில் பிரசவத்திற்கு முன் ஆறு வாரங்களும் பின்னர் ஆறு வாரங்களும் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும். இத்துடன் அப்பெண்ணுக்கு மருத்துவ உதவித் தொகையும் வழங்கப்பட வேண்டும். மேலும் பிரிவு 51-ன்படி ஒவ்வொரு பெண் தொழிலாளியும் பிரசவ கால நலன்களை கோரிப் பெறும் உரிமையைப் பெற்றுள்ளார்.

பேறுகால நலன்களாவன

1. பேறுகால உதவித்தொகை.

2. பேறுகால விடுப்பு பிரவசத்திற்கு முன் 6 வாரங்கள், பிரசவத்திற்குப் பின் 6 வாரங்கள் (பிரிவு 10)

3. கருத்சிதைவு விடுப்பு (பிரிவு 9)

4. கூடுதல் இடைவேளை (பிரிவு 11)

5. வேலைநீக்கம் செய்யத் தடை

6. கூலியை குறைக்கத் தடை (பிரிவு 12)

7. மருத்துவ உதவி (பிரிவு 8)

உதவித்தொகை

இத்தகைய பிரசவ கால நலன்களைப் பெற வேண்டுமானால் பிரசவ நாளுக்கு முந்தைய 12 மாதங்களில் குறைந்தபட்சம் 160 நாட்கள் வேலை செய்திருக்க வேண்டும். நிர்வாகம் தொழிலை நிறத்தி வைத்த நாட்களும் வேலை நாட்களாகக் கருதப்பட வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகளில் பெண்கள்

தமிழ்நாட்டில் 12,745 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் 99,333 ஊராட்சிமன்ற வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். 395 ஊராட்சி ஒன்றியங்களும் 546 பேரூராட்சிகளும் 164 நகராட்சிகளும் 15 மாநகராட்சிகளும் உள்ளன. இவற்றில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக பெண்கள் உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகம் செய்யும் அதிகாரத்தையம் பெற்றுள்ளனர்.

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம்

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் 1993-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. மகளிர் நலனை உறுதி செய்தல், பாலினப் பாகுபாடு குறித்த விவகாரங்களை கவனித்தல் மற்றும் பெண்களின் பல்வேறு பிரச்சினைகள் குறித்தப் பரிந்துரைகளை அரசுக்கு அனுப்புதல் என்பன இவ்வாணையத்தின் குறிக்கோள்களாகும். மகளிர் ஆணையத்தில் தங்கள் உரிமைகள் மறுக்கப்படும்போது பெண்கள் தனிப்பட்ட முறையிலோ, பொதுநலன் கருதியோ அமைப்பு ரீதியாகவோ புகார் செய்யலாம்.

அகில உலக பெண்கள் தினம்

மார்ச் 8, அகில உலக பெண்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 19ஆம் நூற்றாண்டில் எட்டு மணி நேர வேலை உரிமைக்காகப் பெண் தொழிலாளர்கள் போராடியதன் நினைவாகவே இந்த நாள் அகில உலகப் பெண்கள் தினமாக 1975ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அவையில் பிரகடனப்படுத்தப்பட்து.

நிலைத்த வளர்ச்சிக்கான இலக்குகள் (SDG)

ஐ.நா. அவையில் 17 நிலைத்த வளர்ச்சிக்கான இலக்குகள் (SDG) அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பாலின சமத்துவம் என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்த 5வது இலக்காகும். உலகெங்கும் 2030ஆம் ஆண்டு பெண்களின் நிலையை மேம்படுத்தும் செயல்பாடுகள் நடத்தி வருகின்றனர்.

பெண்ணடிமை விலங்கொடிப்போம்!

பேதமையை முறியடிப்போம் !

விண்ணதிரக் குரல் எழுப்பி !

வீரமுடன் அணிதிரள்வோம் !

- வழக்கறிஞர் ஆ.தமிழகன்

Pin It