கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

“இளைதாக முள்மரம் கொல்க; களையுநர்

கைகொல்லும் காழ்ந்த இடத்து” குறள் (879)

“முள்மரத்தை இளையதாக இருக்கும்போதே வெட்ட வேண்டும்; காழ்ப்பு ஏறி, முதிர்ந்த போது வெட்டுகின்றவரின் கையையே அது வருத்தும்.”

முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் எனும் சொலவடையாக இக்குறள் மக்கள் பேச்சுவழக்கில் வாழ்கிறது.

அயோத்தியில் பாபர் மசூதி - இராம ஜென்ம பூமி சிக்கல் இக்குறளுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறது. பாபர் மசூதி, பாபரின் தளபதி மீர் பாகியால் 1528இல் கட்டப்பட்டது. 19ஆம் நூற்றாண்டு முதல் பாபர் மசூதி வளாகத்தில் ஒரு மூலையில் இருந்த ஒரு மேடையை (சபுத்ரா) இராமர் பிறந்த இடமாகக் கருதி இந்துக்கள் வழிபட்டு வந்தனர். இந்த மேடை ‘ஜென்மஸ்தான்’ எனப் பட்டது. ஜென்மஸ்தானின் பூசாரி ரகுபர்தாஸ் என்பவர். 29-1-1885-இல் இராமர் பிறந்த மேடை மீது கோயில் கட்ட அனுமதி கோரி பைசாபாத் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். 24-12-1885 அன்று அவ்வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டது.

Ibrahmin raviSankar srirampanju 6001947-இல் இந்தியா, பாக்கித்தான் என இரண்டு நாடுகள் அமைந்த போது, வடஇந்தியாவில் இந்து-முசுலீம் பகை கொழுந்துவிட்டு எரிந்தது. பல இலட்சம் பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சூழலில் இந்துமகா சபை யைச் சேர்ந்த தீவிர இந்து உணர்ச்சியினர் பாபர் மசூதியைக் கையகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத் துடன் திட்டமிட்டு 1949 திசம்பர் 22 நள்ளிரவில் மசூதிக் குள் புகுந்து, மசூதியின் கவிகையின்கீழ் குழந்தை இராமன் சிலையை நாட்டினர். சுயம்புவாக இராமன் தோன்றியதாக 23-12-1949 காலையே ஆயிரக்கணக்கில் இந்துக்கள் மசூதியில் வைக்கப்பட்ட இராமனை வழி படுமாறு செய்தனர். உடனே இசுலாமியர்கள் காவல் துறையில் புகார் அளித்தனர். முதல் தகவல் அறிக் கையும் பதிவு செய்யப்பட்டது.

முசுலீம்கள் இராமன் சிலையை உடனடியாக அகற்றுமாறு கோரினர். பைசாபாத் மாவட்ட ஆட்சியராக இருந்த கே.கே.கே. நாயர் இந்து மகாசபையினருக்கு ஆதுரவாகச் செயல்பட்டார். அயோத்தியில் இருந்த காந்தியவாதியான அக்சய பிரம்மச்சாரி என்பவர் உத்திரப் பிரதேச அரசு மசூதியில் வைக்கப்பட்ட இராமர் சிலையை அகற்ற வேண்டும்; சிலை வைக்கப்பட்டது காந்தியின் -காங்கிரசின் மதச்சார்பின்மைக் கோட்பாட்டுக்கு எதிரானது என்று போராடினார். பிரதமராக இருந்த நேருவும் சிலையை அகற்றுமாறு உத்தரப்பிரதேச அரசுக்கு அறிவுறுத்தினார். உ.பி.யில் உள்துறை அமைச்சராக இருந்த லால் பகதூர் சாஸ்திரி இதில் உறுதியான நட வடிக்கை எடுக்கத் தவறிவிட்டார். பைசாபாத் மாவட்ட ஆட்சியர் நாயர், இராமர் சிலையை அகற்றினால் பெரும் கலவரம் ஏற்படும் என்று கூறியதையே உ.பி. அரசும் வழிமொழிந்தது.

மசூதியில் இராமன் சிலை வைக்கப்பட்ட மறு நாள் காலையே மாவட்ட நிர்வாகம் அச்சிலையை அகற்றியிருந்தால், இன்றளவும் தீர்க்கப்படாத பிரச்சனையாக-இந்திய அரசியலையே ஆட்டிப் படைக்கும் ஆற்றல் கொண்டதாக பாபர் மசூதி-இராமஜென்ம பூமி சிக்கல் உருவெடுத்திருக்காது. மாவட்ட ஆட்சியர் நாயர் விரைவில் விருப்ப ஓய்வில் சென்றார். அவருடைய மனைவி 1952 தேர்தலில் சனசங்கத்தின் (பா.ச.க.வின் அப்போதைய பெயர்) சார்பில் நாடாளுமன்ற உறுப்பினரானார். 1967-இல் நாயர் சனசங்கத்தின் நாடாளுமன்ற உறுப் பினரானார். உயர் அதிகார வர்க்கம் இந்துத்துவ உணர்வுடனே செயல்படுகிறது என்பதற்கு நாயர் நல்லதோர் எடுத்துக்காட்டு.

இராமர் சிலையை அகற்றுவதற்கு மாறாக, உ.பி. அரசு 29-12-1949 அன்று பாபர் மசூதியைக் கையகப் படுத்தியது. பாபர் மசூதியின் முதன்மையான நுழை வாயில் கதவு பூட்டப்பட்டது. இதையடுத்து 1950 சனவரியில் இராமச்சந்திரதாஸ் பர மஹன்ஸ் என்பவர் பாபர் மசூதி நிலத்தின் உரிமைகோரி வழக்குத் தொடுத் தார். 1959-இல் நிர்மோகி அகாரா என்கிற இந்து உட்பிரிவு இதேபோன்று ஒரு வழக்கைத் தொடுத் தது. பாபர் மசூதி இடத்துக்கான முழு உரிமை கோரி சன்னி மத்திய வக்ஃபு வாரியம் நீதிமன்றத் தில் 1961இல் ஒரு எதிர் வழக்கைத் தொடுத்தது.

பிரித்தானிய ஆட்சியில் பாபர் மசூதி இடத்தில் இராமர் கோயில் கட்ட வேண்டும் என்று 1885இல் தொடுக்கப்பட்ட வழக்கு ஓராண்டிற்குள் தள்ளுபடி செய்யப் பட்டு முசுலீம்களின் உரிமை நிலைநாட்டப்பட்டது. சுதந்தர இந்தியாவில் ஆட்சி அதிகாரம், மேல் சாதி-ஆதிக்க இந்துக்களிடம் சென்றதால் பாபர் மசூதியில் அநீதி இழைக் கப்பட்டது. சுதந்தரம் பெற்று எழுபது ஆண்டுகளுக்குப் பின்னும் இந்திய மக்கள் தொகையில் 17 விழுக்காட்டினராக உள்ள இசுலாமியர்கள் ஆட்சியா ளர்களாலும் அதிகார வர்க்கத்தாலும்-ஏன் நீதித்துறை யாலும் கூட இரண்டாம்தரக் குடிமக்களாகவே பார்க்கப் படுகின்றனர். எனவே இவர்கள் பாபர் மசூதி வழக்கில் இசுலாமியர்களுக்கு உரிய நியாயத்தை வழங்கும் பொறுப் பினைத் தட்டிக்கழித்துக் கொண்டே வந்துள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோவ்வால்கரின் ஆலோச னைப்படி தீவிரமான இந்துத்துவத்தை முன்னெடுப் பதற்காக 1964-இல் விசுவ இந்து பரிசத் என்கிற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்திராகாந்தி கொலையுண்ட பின், 1984இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ச.க. இரண்டே இடங்களைப் பெற்றது. இந்து என்கிற உணர் வை அரசியல் முதலீடாக மாற்றி, இந்துக்களின் வாக்கு களைத் திரட்டுவதற்காக விசுவ இந்து பரிசத் 1984இல் பாபர் மசூதி உள்ள இடத்தில்தான் இராமர் பிறந்தார் என்பதால் அவ்விடத்தில் இராமருக்குக் கோயில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பியது. இதை முன்வைத்து இந்தியா முழுவதும் பரப்புரை செய்தது. இராமர் கோயிலை இடித்துவிட்டு பாபர் மசூதியைக் கட்டியது இந்துக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும். எனவே இந்துக்களின் பெருமையை நிலைநாட்டிட பாபர் மசூதியிடத்தில் இராமருக்குக் கோயில் கட்ட வேண்டும் என்கிற கருத்துக்கு வடஇந்தியாவில் ஆதரவு பெருகியது.

விசுவ இந்து பரிசத்தின் இந்துத்து வப்பரப்புரையை எதிர்ப்பதற்கு உண்மையான மதச்சார்பின்மையை முன் னெடுத்து முறியடிப்பதற்குப் பதிலாக இளம் பிரதமர் இராசிவ் காந்தி மென்மையான இந்துத்துவப் போக்கைப் பின்பற்றினார். இராசிவ் காந்தியின் அறிவுறுத்தலின் பேரில் 1986 பிப்பிரவரி 1 அன்று பாபர் மசூதியின் வாயிற் கதவின் பூட்டுகள் அகற்றப்பட்டு, இந்துக்கள் பாபர் மசூதிக்குள் சென்று இராமரை வழிபடுவதற்கு அனுமதிக்கப்பட்டனர். தாழியில் அடைத்து வைத்திருந்த பூதத்தைத் திறந்துவிட்ட பெருங்கேட்டை இராசிவ் காந்தி செய்தார்.

அதன்பின் ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிசத், பஜ்ரங்தள், பா.ச.க. உள்ளிட்ட சங்பரிவாரங்கள் அயோத் தியில் பாபர் மசூதி உள்ள இடத்தில்தான் இராமர் பிறந்தார் என்று இந்துக்கள் நம்புகிறார் கள்; எனவே அங்கு இராமருக்குக் கோயில் கட்ட வேண்டும் என்கிற பரப்பு ரையை இந்தியா முழுவதும் செய்தனர். இராமர் கோயில் கட்டுவதற்காக 1989 அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் செங்கற்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. இந்த ஊர்வலங் களில் இசுலாமியருக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப் பட்டு, சாதாரண இந்துக்களிடம், இசுலாமியர்கள் அந்நியர் கள்-ஆக்கிரமிப்பாளர்கள்-பகைவர்கள் என்கிற சிந்தனை ஊன்றப்பட்டது. 9-11-1989 அன்று மசூதிக்கு வெளியில் இராமர் கோயில் கட்டுவதற்கான “சிலன்யா பூசை” பிரதமர் இராசிவ் காந்தியின் ஆதரவுடனும் உச்சநீதி மன்றத்தின் துணையுடனும் நடந்தது. 1989இல் இராசிவ் காந்தி நாடாளுமன்றத்திற்கான தேர்தல் பரப்பு ரையை அயோத்தியிலிருந்து தொடங்கினார். 1989 தேர்தல் அறிக்கையில் பா.ச.க. அயோத்தியில் இராமர் கோயில் கட்டுவோம் என அறிவித்தது.

அதன்பின், சங்பரிவாரங்கள் பாபர் மசூதியை இடிப்பதற்குத் திட்டமிட்டனர். 1990இல் எல்.கே. அத்வானி வடஇந்தியாவில் மேற்கொண்ட இராம இரத யாத்திரை அதற்கான அடித்தளத்தை அமைத்தது. பி.வி. நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது - உ.பி.யில் கல்யாண்சிங் தலைமையிலான பா.ச.க. ஆட்சி இருந்த போது, 6-12-1992 அன்று சங்பரிவாரங்களால் பாபர் மசூதி இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. பாபர் மசூதி இடிக்கப்படும் என்று எல்லோரும் அறிந் திருந்த நிலையில் காங்கிரசின் தலைமையிலான நடுவண் அரசும், உ.பி.யின் பா.ச.க. அரசும், உச்சநீதிமன்றமும் இதைத் தடுக்கத் தவறிவிட்டன. பாபர் மசூதிக்கு அருகில் இந்தியப் படைகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையிலும் பாபர் மசூதி இடிக்கப்பட்டது என்பது இந்திய ஆளும் வர்க்கத்தின் இந்துத்துவ மனச்சாய்வையே காட்டுகிறது.

1949 திசம்பர் 22 நள்ளிரவில் பாபர் மசூதியில் இராமர் சிலை வைக்கப்பட்டதை அடுத்த நாளே அகற்றாமல் ஆட்சி நிர்வாகம் துணை நின்றது. அதேபோல் 1992 திசம்பர் 6 அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்டதும் அங்கிருந்த சங் பரிவார குண்டர் படையைக் காவல் துறையும், இராணுவமும் விரட்டியடித்திருக்க வேண்டும். மாறாக, பாபர் மசூதி தகர்க்கப்பட்ட பின், அதன் இடிபாடுகளை அகற்றி, மசூதியின் கவிகை இருந்த இடத்தில் இராமர் சிலையை நாட்டி, தற்காலிகக் கோயில் அமைக்கும் வரையில் இந்திய அரசும் அதன் படைகளும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது எவ்வளவு வெட்கக்கேடு. உலகில் இந்தோனேசியாவுக்கு அடுத்து அதிக எண்ணிக் கையில் முசுலீம்கள் வாழும் நாடு இந்தியா. ஆனால் இவர்களின் மத உணர்வுகளை, உரிமைகளைக் காப்பாற்றாமல் இந்திய அரசு வஞ்சித்துவிட்டது.

பாபர் மசூதியை இடித்ததற்காக இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஒன்று பெயர் தெரியாத எண் ணற்ற கரசேவர்கள்மீது; மற்றொன்று அத்வானி, உமாபாரதி உள்ளிட்டோர் மீது. வாஜ்பாய் ஆட்சியில், அத்வானி உள்ளிட்டோர் வழக்கிலிருந்து விடுவிக்கப் பட்டனர். மீண்டும் காங்கிரசு ஆட்சி ஏற்பட்ட போது அவர்களை வழக்கிலிருந்து விடுவித்தது செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த வழக்குகள் என்னவாயின என்று கேட்பதற்குக்கூட ஆள் இல்லாத அவலநிலை இப்போது ஏற்பட்டுவிட்டது. 500 ஆண்டு களாக அயோத்தியில் இருந்த பாபர் மசூதியை இடித்த வர்கள் தண்டனையில்லாமல் தப்பிப்பது என்பது சட்டத்தின் ஆட்சிக்கும் சனநாயகத்திற்கும் மதச்சார்பின் மைக்கும் மாபெரும் இழுக்காகும்.

குதிரை வெளியேறிய பின் இலாயத்தைப் பூட்டியது போல், பாபர் மசூதி இடத்தின் 2.77 ஏக்கர் நிலத்தைச் சுற்றிலும் உள்ள 67.7 ஏக்கர் நிலத்தை 1993இல் நடுவண் அரசு ஒரு அவசரச் சட்டத்தின் மூலம் தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டது. இதன் நோக்கம், பாபர் மசூதியைச் சுற்றியுள்ள நிலப்பகுதியில் இராமர் கோயில் கட்டாமல் தடுப்பதே ஆகும். பாபர் மசூதி இடிக் கப்படுவதற்குமுன் கல்யாண் சிங் தலைமையிலான உ.பி. அரசு, 1992இல் 42 ஏக்கர் நிலத்தை நீண்டகாலக் குத்தகையில் இராமஜென்ம பூமி அறக்கட்டளைக்குக் கொடுத்தது. இந்துத்துவத்தை நிலைநாட்ட பா.ச.க. ஆட்சி என்னவெல்லாம் செய்யும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாகும்.

பாபர் மசூதி-இராமஜென்ம பூமி வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் 2010 செப்டம்பர் 30 அன்று தீர்ப்பு வழங்கியது. பாபர் மசூதி இருந்த 2.77 ஏக்கர் நிலத்தை இராம் லல்லா, (குழந்தை இராமன் சார்பாக வழக்குத் தொடுத்தவர்), நிர்மோகி அகாரா, சன்னி வக்பு வாரியம் ஆகிய மூன்று தரப்பினருக்கும் சமமாகப் பிரித்தளிக்க வேண்டும் என்று அத்தீர்ப்பு கூறியது. இத்தீர்ப்பை எதிர்த்து 14 மேல் முறையீட்டு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டன.

எட்டு ஆண்டுகள் கழித்து இம்மேல்முறையீடு களை 2018 செப்டம்பர் 27 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, அசோக் பூஷண், அப்துல் நாசர் ஆகியோ ரைக் கொண்ட அமர்வு, 2018 அக்டோபர் 29 முதல் இந்த வழக்கின் மீதான விசாரணை தொடர்ந்து நடை பெறும் என்று அறிவித்தது. அதனால் சங்பரிவாரங்கள் 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் அயோத்தி வழக்கின் தீர்ப்பு வெளியாகும் என்று ஆவலுடன் எதிர்பார்த்தன.

ஆனால் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஓய்வு பெற்றதால் புதிய தலைமை நீதிபதியாகப் பதவியேற்ற ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு 2018 அக்டோபர் 29 அன்று கூடிய போது, 2019 சனவரி முதல் கிழமையில் அயோத்தி வழக்கை விசாரிப்பதற் கான புதிய அமர்வு அறிவிக்கப்படும்; அது விசாரணையை நடத்தும் என்று அறிவித்தது. நாடாளுமன்றத் தேர்த லுக்கு முன்-மோடி பிரதமராக உள்ள போதே அயோத்தி வழக்கில் தீர்ப்பைப் பெற்று விடலாம் என்று எதிர் பார்த்திருந்த சங்பரிவாரங்களுக்கு இந்த அறிவிப்புப் பேரிடியாய் அமைந்தது.

அதனால் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கத் துடன் உடனடியாக ஆர்.எஸ்.எஸ்.-இன் தேசிய செயற் குழுவின் மூன்று நாள் கூட்டம் மும்பையில் கூட்டப் பட்டது. இக்கூட்டத்திற்குப்பின் நவம்பர் 2 அன்று ஆர்.எஸ்.எஸ்.-இன் பொதுச் செயலாளர் சுரேஷ் பய்யாஜி ஜோதி, “நீண்டகாலம் காத்திருந்துவிட்டோம்; இனியும் கால வரம்பின்றிக் காத்திருக்க முடியாது. 1992இல் மேற்கொள்ளப்பட்டது போன்று மிகப் பெரிய போராட்டம் நடக்கும். இராமர் கோயில் போன்ற உணர்வுபூர்வமான விடயங்களுக்கு நீதிமன்றங்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் சட்டப்படியான தடைகள் விரைவில் அகற்றப்படும். இராமர் கோயில் கட்டுவதற் குச் சட்டம் இயற்றுவது அல்லது அவசரச் சட்டம் இயற்று வது குறித்து நடுவண் அரசு ஆராய வேண்டும்” என்று கூறினார்.

தில்லியில் 127 உட்பிரிவுகளைச் சார்ந்த 3000 இந்து சாமியார்களின் கூட்டம் 4.11.18 அன்று நடை பெற்றது. இக்கூட்டத்தில் நடுவண் அரசு அயோத்தியில் இராமர் கோயில் கட்ட அவசரச் சட்டம் இயற்ற வேண்டும் என்று தீர்மானம் இயற்றியது.

விசுவ இந்து பரிசத் தில்லியில் 5 இலட்சம் பேர் கொண்ட பேரணியை நடத்தியது. அப்போது விசுவ இந்து பரிசத் தலைவர் விஷ்ணு கோக்ஜே, “சனநாய கத்தில் நாட்டு மக்களின் விருப்பங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். நாட்டு மக்களே அனைவரையும்விட உயர்ந்த வர்கள்; நீதிமன்றம் அல்ல. மசூதி இருந்த இடத்தில் இராமர் கோயில் கட்ட விரும்புவதாகத் தவறான கருத்து நிலவுகிறது. கோயில் இடிக்கப்பட்ட இடத்தில்தான் மசூதி கட்டப்பட்டது” என்று பேசினார். மேலும் அப்பேரணி யில் 2019 சனவரி 31 மற்றும் பிப்பிரவரி 1 அன்று பிரயாகையில் கும்பமேளாவின்போது நடைபெறும் இந்து சாமியார்களின் நாடாளுமன்றத்தில், அயோத்தியில் கோயில் கட்டுவதற்கான நாள் அறிவிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

2019 சனவரி 4 அன்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு கூடியது. அயோத்தி வழக்கை நிலவுரிமை சார்ந்ததாக மட்டுமே 2010இல் அலகாபாத் உயர்நீதிமன்றமும், 2018 செப்டம்பரில் தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ரா அமர்வும் கருதின; ஆனால் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் இது வெறும் நிலவுரிமை மட்டும் சார்ந்த வழக்கு அல்ல; மதம் சார்பான மக்களின் உணர்வுபூர்வமானதாகவும் இருப்பதால் அய்ந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்புச் சட்ட அமர்வு இதை விசாரிக்க வேண்டும் என்று கருத்துரைத்தார்.

சனவரி 8 அன்று இதற்கான அமர்வு அறிவிக்கப் பட்டது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதி பதிகள் எஸ்.ஏ. பாப்டே, என்.வி. ரமணா, யு.யு. லலித், டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் இந்த அமர்வில் இடம் பெற்றிருந்தனர். இவர்களில் நீதிபதி யு.யு. லலித், அயோத்தி வழக்கில் கல்யாண் சிங்கிற்காக வழக்குரைஞராக வாதாடியது சுட்டிக்காட்டப்பட்டதாலும், நீதிபதி என்.வி. ரமணா வேறு காரணத்திற்காகவும் இந்த அமர்வி லிருந்து விலகினர். இவர்களுக்குப் பதிலாக நீதிபதிகள் அசோக் பூஷண், அப்துல் நசீர் ஆகியோர் சேர்க்கப் பட்டனர். இதனால் வழக்கு விசாரணை தள்ளிப் போயிற்று.

கும்பமேளாவில் சாமியார்கள் நாடாளுமன்றம் கூடவிருந்த நிலையில், சங்பரிவாரங்களின் அழுத்தத்தை மடைமாற்றும் வகையில், 29.1.2019 அன்று நடுவண் அரசு, 1993இல் அயோத்தியில் கையகப்படுத்திய 67.7 ஏக்கர் நிலத்தை உரியவர்களிடம் திருப்பி அளித்திட உச்சநீதிமன்றத்தின் அனுமதியைக் கோரியது. இஸ்மாயில் பரூக்கி தொடுத்த வழக்கில் 1994இல் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் போது, அந்நிலத்துக்கு உரியவர் அதைப் பயன்படுத்தவிடாமல் முடக்கக் கூடிய சூழ்நிலையைத் தடுப்பதற்காகவே 67.7 ஏக்கர் நிலம் அரசின் பொறுப்பில் அளிக்கப் பட்டுள்ளது என்று தெளிவுபடுத்தப்பட்டது. 2003இல் உச்சநீதிமன்ற அமர்வு இதே கருத்தை மீண்டும் உறுதி செய்தது.

இதையெல்லாம் மூடி மறைத்துவிட்டு, நாடாளு மன்றத் தேர்தலுக்குமுன் சங்பரிவாரங்களை மகிழ்விப் பதற்காக நரேந்திர மோடி அரசு 67.7 ஏக்கர் நிலத்தைத் திருப்பி அளிக்கும் முயற்சியில் ஈடுபட்டது. இதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துவிட்டால், இராம ஜென்ம பூமி அறக்கட்டளைக்குச் சொந்தமான 42 ஏக்கரில் இராமர் கோயில் கட்டும் பணியைத் தொடங்கி விடலாம் என்பதே இத்திட்டத்தின் சூழ்ச்சியாகும். ஆனால் உச்சநீதிமன்றம் நிலத்தைத் திருப்பித் தரக்கூடாது என்று கூறிவிட்டது.

2019 பிப்பிரவரி 26 அன்று உச்சநீதிமன்றத்தின் அய்ந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, நீதிமன்றத்தின் மேற்பார்வையின்கீழ் சமரச முயற்சியை மேற்கொள்ள விரும்புவதாக அறிவித்தது. வழக்கை மார்ச்சு 6ஆம் நாளுக்கு ஒத்தி வைத்தது. 6.3.2019 அன்று ராம்லல் லாவின் சார்பாளர்களும், மேல்முறையீடு செய்திருந்த மற்ற இந்து அமைப்புகளும் நீதிமன்றத்தின் சமரச முயற்சியை எதிர்த்தன. நிர்மோகி அகாராவும் சன்னி வக்பு வாரியமும் சமரச முயற்சியை ஏற்பதாகத் தெரி வித்தன. பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் இராமர் பிறந்தார் என்பது இந்துக்களின் நம்பிக்கை; இது எந்தவொரு நீதிமன்றத்தின் அதிகாரத்துக்கும் அப்பாற் பட்டது என்று சங்பரிவாரங்களின் தலைவர்கள் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து சொல்லி வருகின்றனர்.

ஆயினும் உச்சநீதிமன்ற அமர்வு குடிமை யியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 89-இன்படி சமரசக் குழுவை 8.3.2019 அன்று அறிவித்தது. உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா இக்குழுவின் தலைவர். உயர்நீதித் துறையில் சமரச முயற்சிகளில் திறம்படப் பங்காற்றிய மூத்த வழக்குரைஞர் ஸ்ரீராம் பஞ்சும், வாழுங்கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீரவிசங்கரும் இக்குழுவின் மற்ற இரண்டு உறுப்பினர்களாவர். சமரசக் குழு எட்டு கிழமைகளுக் குள் சமரச முயற்சியை முடிக்க வேண்டும். இக்குழு செயல்படத் தொடங்கிய நான்கு கிழமைகள் கழித்து, சமரச முயற்சியின் முன்னேற்ற அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் அளிக்க வேண்டும். சமரச முயற்சியின் நடவடிக்கைகள் குறித்து ஊடகங்கள் செய்தியை வெளி யிடக்கூடாது என்று உச்சநீதிமன்றம் கூறியது. உச்சநீதி மன்றத்தின் சமரச முயற்சி குறித்து பல்வேறு கருத்துகள் நிலவிய போதிலும், நாடாளுமன்றத் தேர்தலின் போது பாபர் மசூதி-இராம ஜென்ம பூமி சிக்கல் முதன்மையான விவாதமாக உருவாகாமல் தடுப்பதும் இதன் நோக்க மாகப் பார்க்கப்படுகிறது.

இதற்குமுன், நீதிமன்றத்துக்கு வெளியில் மூன்று தடவை அயோத்தி சிக்கலைத் தீர்ப்பதற்கான சமரச முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இவை தோல்வியில் முடிந்தன. காஞ்சி சங்கராச்சாரி 2003இல் மேற்கொண்ட சமரச முயற்சியின் போது, இசுலாமியப் பிரதிநிதிகளிடம், இசுலாமியர்கள் அயோத்தி, காசி, மதுரா ஆகிய மூன்று இடங்களில் உள்ள மசூதிகள் மீதான உரிமையை விட்டுக்கொடுத்தால், இந்தியாவில் உள்ள மற்ற மசூதிகள் மீது இந்துக்கள் உரிமை கோரமாட்டார்கள் என்று சொன்னார்.

இப்போது சமரசக் குழுவில் இடம்பெற்றுள்ள ஸ்ரீரவிசங்கர் இதற்குமுன் சமரச முயற்சியில் ஈடுபட்ட போது, இசுலாமியர்கள் பாபர் மசூதி இடத்தை இந்துக் களுக்கு விட்டுக்கொடுக்காவிட்டால் உள்நாட்டுப் போர் மூளும் என்று கூறினார். ஓராண்டுக்குமுன் அகில இந்திய முசுலீம் தனிநபர் சட்ட வாரியத்துக்கு ஸ்ரீரவிசங்கர் எழுதிய மடலில், “பாபர் மசூதி இடத்தின் உரிமையை முசுலீம்கள் விட்டுக்கொடுப்பது என்பது, பாபர் மசூதியை இடித்தவர்களிடமே மண்டியிடுவதாகாது. மாறாக, இந்திய நாட்டுக்கே நன்கொடையாக அளித்தது போன்றதாகும்” என்று குறிப்பிட்டிருந்தார். ஸ்ரீரவிசங்கர் கண்ணோட் டத்தில் இந்திய நாடு என்பது இந்துக்களுக்கானது மட்டுமே ஆகும். இத்தகைய ஒருவரை உச்சநீதிமன்றம் சமரசக் குழுவில் சேர்த்திருப்பது குறித்துப் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சமரசக் குழு தன் பணியை 13.3.19 அன்று தொடங் கியது. எட்டுக் கிழமைக்குள் அதாவது 8.5.2019-க்குள் இக்குழு தன் பணியை முடிக்க வேண்டும். எட்டுக் கிழமைக்குள் இக்குழு அதன் பணியை முடிக்குமா? மேலும் காலநீட்டிப்புக் கேட்குமா? என்பது தெரியவில்லை. அரசு அமைக்கும் விசாரணை ஆணையங்கள் மூன்று மாதங்களுக்குள் அதன் பணியை முடிக்க வேண்டும் என்று கூறப்பட்டாலும், மூன்று ஆண்டுகளுக்கு மேலும் கால நீட்டிப்புப் பெறுவதைப் பார்க்கிறோம். ஆனால் உச்சநீதிமன்றம் அமைத்துள்ள சமரசக்குழுவிற்குக் கால நீட்டிப்பு வழங்கப்பட்டாலும், அது மிகவும் குறுகிய காலத்திற்கே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமரசக் குழு உறுப்பினர்களிடையே ஒத்த கருத்து எட்டப்படுமா? என்பது பெரிய வினாவாக இருக்கிறது. ஏனெனில் ஸ்ரீரவிசங்கர் பாபர் மசூதி இடத்தை இசுலா மியர்கள் இந்துக்களுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும் என்கிற கருத்தில் உறுதியாக இருப்பவர். கருத்து வேறு பாடு கொண்ட பரிந்துரையைச் சமரசக் குழு அளிக்கும் நிலையில்-அதாவது சமரச முயற்சி தோல்வியடைந்த நிலையில் உச்சநீதிமன்றமே விசாரித்துத் தீர்ப்பு வழங்க வேண்டிய நிலை ஏற்படும்.

ramar tem 450பாபர் மசூதி நிலவுரிமை குறித்த வழக்கு 1950 முதல் நீதிமன்றத்தில் இருந்துவருகிறது. கிட்டத்தட்ட எழுபது ஆண்டுகளாக இதன்மீது தீர்ப்பு வழங்காமல் நீதித்துறை இழுத்தடித்துக் கொண்டே வந்திருப்பது அது தன் பொறுப்பைத் தட்டிக்கழித்து வந்திருக்கிறது என்ப தையே காட்டுகிறது. இப்போது உச்சநீதிமன்றத்தின் அய்ந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விரைந்து விசாரணை செய்து ஒரு தீர்ப்பை அளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

நீதித்துறையின் காலத்தாழ்ச்சியால் இந்தியாவின் அரசியல், சமூக நிலைகளில் பெரும் கேடுகள் நிகழ்ந் துள்ளன. அயோத்தியில் இராமர் கோயில் கட்டுதல் என்ற முழக்கத்தை முன்வைத்து இந்திய அரசியல் இந்துத்துவ மயமாக்கப்பட்டுவிட்டது. இதனால் சனநாயக நெறிமுறைகளை வளர்த்தெடுப்பதற்கான பொதுவெளி அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது. மக்களுக்கான அரசியல் என்பது மதத்திற்கான அரசியலாக மாற்றப்பட்டுவிட்டது. இருபது கோடி மக்களாக இருக்கும் இசுலாமியர்கள் இந்து மதத்தின் பகைவர்களாக - இந்திய நாட்டின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலானவர்களாகச் சித்தரிக்கப் பட்டு, வெறுப்பு அரசியல் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. இதனால் பாபர் மசூதி இடிப்புக்குப்பின் முசுலீம்கள் மீதான கொடிய தாக்குதல்களும், கொலைகளும் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன.

வாஜ்பாய் ஆட்சிக் காலத்திலும் (1998-2004), நரேந்திர மோடியின் ஆட்சியிலும் (2014-2019) இந்துத்துவ ஏகாதிபத்தியம் அரச அதிகாரத்தின் துணையுடன் ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்கிற பாசிசக் கோட்பாட்டைச் செயல்படுத்தி வருகிறது. இந்துத்துவத்துக்கு எதிராகப் பேசுவோரைத் தேசத் துரோகிகள், நகர நக்சலைட்டுகள் என்று முத்திரை குத்தி ஒடுக்கி வருகிறது. பாபர் மசூதி இடத்தில் இராமருக்குக் கோயில் கட்டுதல் என்கிற வலிமையான அடித்தளத்தின் மீது நின்று கொண்டுதான் இந்த அட்டூழியங்கள் செய்யப்படுகின்றன.

எனவே இந்துத்துவப் பாசிசத்திடமிருந்து இந்திய நாட்டைக் காப்பாற்றிட அயோத்தி வழக்கில் சட்டத்தின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிட வேண்டும். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்பதாக இசுலாமியர்கள் தொடர்ந்து கூறிவரு கின்றனர். ஆனால் சங்பரிவாரங்கள் பாபர் மசூதி இடத்தில் இராமர் கோயில் கட்டுவதைத் தடுக்கும் அதிகாரம் உலகில் யாருக்கும் இல்லை என்று சொல்லி வருகின்றனர்.

அறுவை செய்து உயிரைக் காப்பாற்ற வேண்டிய நிலை இருக்கிறது. உச்சநீதிமன்றம் மேலும் தன் பொறுப்பைத் தட்டிக்கழிக்காமல் துணிவுடன் செயல்பட்டு பாபர் மசூதி - இராம ஜென்ம பூமி வழக்கில் தீர்ப்பு அளிக்க வேண்டும்.

பாபர் மசூதி நிலம் இசுலாமியருக்கு உரிமை யானது என்று தீர்ப்பு வருமாயின், பெருந்தன்மையுடன் இசுலாமியர்கள் அவ்விடத்தை இராமர் கோயில் கட்டுவதற்காக விட்டுத்தருவது நாட்டிற்கே நலம் பயப்பதாக அமையும்.