ஒப்புக் கொண்ட கூட்டத்துக்குச் சென்றாக வேண்டும் என்ற கடமை உணர்வும் சமுதாயக் கவலையும் கொண்ட தலைவராகப் பெரியார் வாழ்ந்தார்.
பெரியார் அவர்கள் சென்னையில் ஒரு தடவை கடுமையான வயிற்றுப் போக்கினால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டார்கள். அந்த காலத்தில் பெரியார் அவர்களுக்கு வழக்கமாக சிகிச்சை அளித்து வந்தவரான பிரபல நிபுணர் டாக்டர் குருசாமி முதலியார் அவர்கள் அழைக்கப்பட்டார்.
டாக்டர் குருசாமி முதலியார் அவர்கள் பெரியார்பால் பெரும் மதிப்பும் மரியாதையும் கொண்டவர். மேலும் பார்ப்பனர் அல்லாத மக்கள் நலனில் மிக்க அக்கறை கொண்டவரும் ஆவார்.
பார்ப்பனர் அல்லாத மக்களுக்கு வழிகாட்டவல்ல ஒரே தலைவர் பெரியார் அவர்களே ஆவார் என நம்பி தமது இறுதி மூச்சு அடங்கும் வரை வாழ்ந்த மாமனிதர் அவர் ஆவார்.
பெரியார் அவர்களும் சென்னைக்கு வந்தால் டாக்டர் அவர்களைச் சந்தித்து தமது உடல்நிலைக்கு சிகிச்சையும் மருந்தும் பெறுவ தோடு அவர்களோடு அளவளாவுவதையே தமது வாடிக்கையாகக் கொண்டவர் ஆவார்.
இந்த முறை டாக்டர் குருசாமி முதலியார் அவர்கள் பெரியார் அவர்களுடைய உடல்நிலை யினை சோதனை செய்து பார்த்துவிட்டு, ‘அதிகப்படியான வயிற்றுப் போக்குப் போனது காரணமாக உடல்நிலை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே தகுந்த சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனையில் சேர்க்க வேண்டும்’ என்று கூறினார்.
டாக்டரின் ஆலோசனைப்படியே பெரியார், சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்கள்.
டாக்டர் முதலியார் அவர்கள் உடனடியாக ‘செலைன்’ ஏற்றும்படி பணித்து தீவிர சிகிச்சையினை அளிக்கத் தொடங்கினார்.
தம் கீழ் பணியாற்றும் ஒரு டாக்டரை, பெரியாருக்குப் பக்கத்திலேயே இருந்து கவனித்துக் கொள்ளும்படி உத்தரவும் இட்டார்.
இரவெல்லம் ‘செலைன்’ ஏற்றப்பட்டது. மருந்துகள் ஊசி மூலமாகவும், மாத்திரை களாகவும் நான்கு மணிக்கு ஒரு தடவை அளித்த வண்ணமாகவே இருந்தார்கள்.
டாக்டர் அவர்களும் இரண்டொரு தடவைகள் நேரில் வந்து பெரியார் அவர்களைப் பார்த்ததும், போன் மூலமாகவும் விசாரித்து அறிந்த வண்ணமாகவே இருந்தார்.
இரண்டொரு நாளில் பெரியார் சற்று குணமாகி சிறிது எழுந்து உட்காரும் நிலையினை அடைந்தார்.
எனினும் டாக்டர் மேலும் சில நாட்கள் பெரியாருக்குப் பூரண ஓய்வும், சிகிச்சையும் தேவை எனக் கருதினார்.
பெரியார் அவர்கள் ஒரு நாள் டைரியை எடுத்து புரட்டிக் கொண்டு இருந்தார். அன்றைய தினம் சென்னை தியாகராய நகர் ‘பனகல் பார்க்கில்’ தமக்குக் கழகப் பொதுக் கூட்டம் ஒன்று இருப்பது கண்ணில் பட்டது.
அய்யா அவர்கள் இன்றைக்கு பொதுக் கூட்டம் உள்ளதே. எப்படிப் பேசுவது? உடல்நிலை சிறிது குணம் அடைந்து இருந்த போதிலும் டாக்டர் அனுமதி அளிக்க மாட்டாரே என்று எண்ணி கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்.
பத்திரிகையில் பெரியார் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார் என்ற செய்தியைக் கண்டு கூட்டத்தினை ஏற்பாடு செய்திருந்த இரண்டு முக்கிய தோழர்கள் மருத்துவமனைக்கு பெரியார் அவர்களைக் கண்டு உடல் நலம் விசாரிக்க வந்திருந்தார்கள்.
பெரியார் உடல்நிலையினைக் கண்ட தோழர்கள் கண்கலங்கியவர்களாக “அய்யா தங்கள் உடல்நிலை நன்கு குணமான பிறகு கூட்டத்தினை வேறு ஒரு தேதியில் வைத்துக் கொள்கிறோம். தங்களிடம் இதனைத் தெரிவித்து விட்டுப் போகவே வந்தோம்” என்றனர்.
பெரியார் அவர்களோ தாம் ஒத்துக் கொண்ட நிகழ்ச்சிகளுக்குப் பெரிதும் போய்ச் சேர்வதையே வழக்கமாகக கொண்டவர். எனவே வந்திருந்த கழகத் தோழர்களைப் பார்த்து “அய்யா மன்னிக்க வேண்டும். பணச் செலவு செய்து மிக்க பிரயாசை எடுத்துக் கொண்டு கூட்டம் ஏற்பாடு செய்துள்ளீர்கள்.
குறிப்பிட்ட தேதியில் கூட்டம் என்றும் விளம்பரப்படுத்தி விட்டீர்கள். தங்களுக்கும் பொது மக்களுக்கும் ஏமாற்றத்தினை உண்டு பண்ண நான் விரும்பவில்லை.
இப்போது எனக்கு உடல்நிலையே சற்று குணமாகி உள்ளது. வயிற்றுப் போக்கும் நின்று விட்டது. கொஞ்ச நேரம் பொதுக் கூட்டத்தில் பேசும் அளவிற்கு எனது உடல்நலம் இடம் தரும் என்றே நினைக்கிறேன். உடல்நலம் இடம் கொடுத்தாலும் டாக்டர் அனுமதி அளிக்க வேண்டுமே. அதுதான் கவலையாக உள்ளது” என்று கூறினார்.
வந்த தோழர்களோ கண்கள் குளமாக, “அய்யா தயவுசெய்து தங்கள் உடல்நிலையினைப் பார்த்துக் கொள்ளுங்கள். கூட்டம் வேறு ஒரு சமயம் வைத்துக் கொள்ளுகிறோம்” என்று எவ்வளவோ மீண்டும் மீண்டும் எடுத்துச் சொல்லியும் அய்யா கேட்கவில்லை.
தோழர்களைப் பார்த்து, “அய்யா நீங்கள் போய் கூட்ட ஏற்பாடுகளைச் செய்யுங்கள். எப்படியும் டாக்டரிடம் அனுமதி பெற்றுச் சிறிது நேரம் வந்து பேசி விட்டுத் திரும்பி விடுகிறேன்” என்று தோழர்களைச் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்கள்.
எப்படி டாக்டரிடம் பொதுக் கூட்டத்திற்குச் சென்று வர அனுமதி கேட்பது என்று சிந்திக்கத் தொடங்கினார் அய்யா.
சிறிது நேரத்திற்குப் பிறகு ஒரு முடிவுக்கு வந்தவராய் தம்மைக் கவனித்துக் கொள்ள டாக்டர் முதலியார் அவர்களால் நியமிக்கப்பட்டு இருந்த டாக்டரிடம் மெதுவாகப் பேச்சுத் தொடங்கினார்.
“டாக்டர் அய்யா இன்னும் எத்தனை நாளைக்கு ஆஸ்பத்திரியில் இருக்க வேண்டி இருக்கும்” என்று கேட்டார்.
டாக்டர் : “இன்னும் இரண்டொரு நாட்களில் முற்றிலும் குணமாகிவிடும். பிறகு சீஃப் எப்போது போகலாம் என்று சொல்லுகின்றாரோ அப்போது போகலாம்” என்றார்.
அய்யா அவர்கள் “டாக்டர் அய்யா ஒரு சின்ன உதவி. நான் திடீர் என்று மருத்துவமனைக்கு வந்துவிட்டபடியால் வீட்டில் சில பொருள்களைப் பாதுகாப்பான இடத்தில் வைத்துவிட்டு வர இயலவில்லை.
தயவு செய்து இரண்டு மணி நேரம் மாலை 6 மணி அளவில் அனுமதி அளித்தால் வீட்டுக்குச் சென்று அவைகளை எல்லாம் சரி செய்து விட்டு வந்து விடுகின்றேன்.
நமது டாக்டர் முதலியார் எப்போது டிஸ்சார்ஜ் செய்வாரோ, இல்லையோ, சொல்ல முடியாது. எனவே தாங்கள் தான் பெரிய மனது பண்ண வேண்டும்” என்று இதமாகப் பேசினார்கள்.
அந்த டாக்டரும் பெரியார் அவர்களின் கூற்றினை உண்மை என்று கருதி விட்டார். சீஃப் மறுநாள் காலை தானே வரப்போகின்றார். பெரியார்தான் போய்விட்டு இரவு எட்டு மணிக்கெல்லாம் வந்து விடுவதாகக் கூறுகின்றாரே என்று எண்ணி அனுமதியும் அளித்து விட்டார்.
பெரியார் தாம் வெற்றி பெற்றுவிட்டதை எண்ணி மகிழ்ந்தார். மருத்துவமனையில் இருந்து நேரே வீடு போகாமல் பொதுக் கூட்டம் நடைபெறும் பனகல் பார்க்கை அடைந்தார்.
பெரியாரைக் கண்டதும் கூட்டம் நடத்துபவர்களுக்கும், பொது மக்களுக்கும் ஒரே மகிழ்ச்சி. தாம் ஒரு மணி நேரம் மட்டும் பேசிவிட்டு வந்து விடலாம் என்று எண்ணி போனவர் இரவு 10 மணி வரை பேசிக் கொண்டே இருந்து விட்டார்.
பிறகு கடிகாரத்தினைப் பார்த்த உடன் தூக்கிவாரிப்போட்டது. இரவு 8 மணி அளவில் மருத்துவமனைக்கு வந்துவிடுவதாக உறுதி கூறிவிட்டு வந்தோமே முடியாமல் போய்விட்டதே என்று வருந்தியவராய், கூட்டத்தை முடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு வந்து தாமதமாக வந்தமைக்கு மன்னிக்க வேண்டும் என்று டாக்டரிடம் கூறிவிட்டு படுக்கையில் படுத்துக் கொண்டார்.
மறுநாள் காலை “இந்து” பத்திரிகையில் பனகல் பார்க்கில் திராவிடர் கழகத் தலைவர் ஈ.வெ.இராமசாமி நாயக்கர் உரை நிகழ்த்தினார் என்று செய்தி பிரசுரமாகி இருந்தது.
டாக்டர் முதலியார் இந்த செய்தியினைப் பத்திரிகையில் கண்டுவிட்டார். அவரால் முதலில் நம்ப முடியவில்லை. “இது உண்மைக்கு மாறான செய்தி. நாயக்கர்தான் மிகவும் மோசமான உடல்நிலைக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அல்லவா இருக்கின்றார். அவர் வீடு திரும்ப நான் அனுமதி அளிக்க வில்லையே.
குறைந்தது ஒரு வாரமாவது அவரை மருத்துவமனையிலேயே ஓய்வாக வைத்து விடுவது என்று அல்லவா எண்ணிக் கொண்டு இருக்கின் றேன்” என்று தனக்குத்தானே முனகிக் கொண்டார்.
பிறகு பனகல் பார்க் பகுதியில் இருந்து தம்மிடம் வந்த சிலரிடம் கேட்டு உண்மையினை உணர்ந்துகொண்டார்.
அடங்காச் சினம் கெண்டார். “இந்த நாயக்கர் என்ன விஷயம் புரியாதவரா? படிக்கத் தெரியாத பட்டிக்காட்டு ஆசாமியா?
கடுமையான வயிற்றுப் போக்குக் காரணமாக உடல்நலம் மிக மிகப் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இவருக்கு என்ன கூட்டம் வேண்டிக் கிடக்கின்றது?
நான் அவரது உடல்நலம் குன்றிப் போய் உள்ளது கண்டு எவ்வளவு கவலை உள்ளவனாக இருக்கின்றேன். அது அவருக்கே தெரியும்.
தெரிந்தும் என்னை ஏமாற்றிவிட்டு என் அனுமதி இன்றி எப்படிப் போனார். நாயக்கர் உயிர் எவ்வளவு விலை மதிப்பற்றது! இவர் நீண்ட நாள் வாழ்ந்து பார்ப்பனர் அல்லாத தமிழ் மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டும், வழிகாட்ட வேண்டும் என்பதுதானே என்னுடைய விருப்பம். அது மட்டுமா, எல்லாத் தமிழர்களின் விருப்பமும் அதுதானே” என்று தனக்குக் கீழ் பணியாற்றக் கூடிய டாக்டர்களிடமும், தம்மைக் காண வந்த பிரமுகர்களிடமும் கூறி ஆத்திரப்பட்டார்.
அன்றைக்குக் காலை சற்று முன்னதாகவே மருத்துவமனைக்கு வந்து விட்டார்.
அய்யா அவர்கள் தங்கி இருந்த வார்டிற்கு நேரே வந்தார். டூட்டி டாக்டர், நர்ஸ் முதலானவர்கள் பரபரப்புடன் காணப்பட்டனர்.
பெரியார் அவர்களைத் தான் டிஸ்சார்ஜ் செய்வதற்காக சற்று முன்னதாகவே டாக்டர் வந்து உள்ளார் போலும் என்று முதலில் எண்ணிக் கொண்டனர்.
ஆனால் டாக்டர் கடுகடுப்பான முகத்துடன் காணப்பட்டதால் ஏதேனும் நிகழப் போகின்றது என்றும் எண்ணி அஞ்சினர்.
டாக்டர் முதலியார் அவர்கள் பெரியார் அவர்களைக் கவனித்து வந்த டாக்டர். நர்ஸ் முதலானவர்களைக் கூப்பிட்டு இரவு பெரியார் எங்கு போனார்? எப்படி அனுமதி அளித்தீர்கள்? என்று கடுமையாகக் கடிந்து கொண்டார்.
எல்லோரும் நடுநடுங்கிப் போனார்கள். ‘ஸ்பெஷல்’ வார்டே அமர்க்களப்பட்டது.
டாக்டர் முதலியார் அவர்கள் வழக்கமாக காலை ஆஸ்பத்திரிக்கு வந்த உடன் முதலில் அய்யா அவர்களைப் பார்த்து விட்டுத்தான் மற்ற நோயாளிகளைப் பார்க்கச் செல்வது வழக்கம்.
ஆனால் அன்று டாக்டர் முதலியார் அவர்கள் பெரியார் அவர்கள் தங்கி இருந்த அறை பக்கமே திரும்பவில்லை. மற்ற நோயாளிகளைப் பார்த்துக் கொண்டு போய்க் கொண்டு இருந்தார்.
பெரியார் அவர்கள் தமது செயல் காரணமாகத் தானே டாக்டர்கள், நர்சுகள் முதலானோர் டாக்டர் முதலியார் அவர்களின் கோபத்திற்கு ஆளாக நேர்ந்தது என்று எண்ணி மனம் வருந்தினார்கள்.
டாக்டர் அவர்கள் தமது வேலைகளை எல்லாம் முடித்துக் கொண்டு வீட்டிற்குத் திரும்பும் போது மதியம் 2 மணி அளவில் பெரியார் தங்கி இருந்த அறைக்கு வந்தார்கள்.
சற்று சினம் தணிந்து உள்ளவராகக் காணப்பட்டார். அய்யா அவர்கள் கவலை தோய்ந்த முகத்தவராய் ‘டாக்டர் மன்னிக்க வேண்டும். தப்பு என்னுடையது. டாக்டர், நர்ஸ்கள் உடையது அல்ல.
நான்தான் வீட்டுக்குப் போய்விட்டு வந்து விடுவதாகக் கூறிவிட்டுப் பொதுக் கூட்டத்திற்கு போய் வந்தேன். கூட்டம் முதலிலேயே ஒப்புக் கொள்ளப்பட்ட கூட்டம்.
மேலும் அதிகப்படியான செலவும் அதற்குச் செய்துவிட்டார்கள். அவர்களுக்கு ஏமாற்றமும் பொருள் நட்டமும் ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காக சிறிது தலையைக் காட்டிவிட்டு வந்து விடலாம் என்றுதான் வீட்டுக்குப் போய்விட்டு வந்து விடுவதாகக் கூறி விட்டுக் கூட்டத்திற்கு போய் வந்து விட்டேன். தங்கள் அனுமதி இன்றி போனது தப்புதான் மன்னித்துக் கொள்ளுங்கள்” என்றார்.
உங்கள் வாழ்வுதான் எங்கள் வாழ்வு!
டாக்டர் அவர்களும் முற்றிலும் கோபம் தணிந்த நிலையில் இருந்தமையால் அய்யா அவர்களைப் பார்த்து “அய்யா நீங்கள் சாதாரண மனிதர் அல்ல. தமிழ்நாட்டு மக்களுக்கு வழிகாட்ட வேண்டியவர். பார்ப்பனர் அல்லாதாரின் நல்வாழ்வு தங்கள் கையில்தான் உள்ளது.
உங்கள் உடல்நலம் நன்றாக இருந்தால் தானே நீண்ட நாள் பாடுபடமுடியும். உங்கள் உடல்நிலை கண்டு கலக்கம் உடையவனாக நான் இருக்கிறேன்” என்று தழுதழுத்தக் குரலில் கூறினார்.
அய்யா அவர்களும் டாக்ரின் சீற்றத்தில் இருந்து விடுபட்டதை எண்ணி உள்ளூர மகிழ்ச்சியும் மன நிம்மதியும் அடைந்தார்கள்.
பொதுவாகவே டாக்டர்கள் தங்களிடம் சிகிச்சை பெற்றுக் கொள்ளும் நோயாளிகள் தங்களிள் அறிவுரைகளைக் கடைபிடிக்கத் தவறினால் நோயாளிகளிடம் கடிந்து கொள்வது உண்டு. அதற்குக் காரணம் தங்களுடைய சிகிச்சை நல்ல பலனை அளிக்கவில்லையானால் தங்களின் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் வந்து விடுமே என்ற அவர்களது கவலையேயாகும்.
ஆனால் டாக்டர் குருசாமி முதலியார் பெரியார் அவர்களிடம் சினம் கொண்டது தமது சிகிச்சை பலனளிக்காமல் போய் தமது நற்பெயருக்கு குறை வந்து விடுமே என்ற தன்னல ஆசையினால் அல்ல; பெரியார் வாழ்ந்தால்தான் தமிழர் சமுதாயத்திற்கு வாழ்வு உண்டு. அவருக்கு ஏதேனும் ஊறு ஏற்பட்டால் தமிழர் சமுதாயம் நாதியற்றப் போகுமே என்ற பொதுநலக் கண்ணோட்டம் அவரின் உள்ளத்தில் மேலோங்கி யிருந்ததே அவர்தம் சீற்றத்திற்குக் காரணம்.
தமிழகம் கண்ட தலைசிறந்த மருத்துவ மேதைகளில் ஒருவரான டாக்டர் குருசாமி முதலியார் போன்றவர்கள் அய்யா அவர்களின் ஆயுள் அதிகரிப்பு தமிழர் சமுதாயத்தின் நல்வாழ்விற்கு இன்றியமையாதது என்பதை எந்த அளவிற்கு உணர்ந்திருந்தார் என்பது இந்நிகழ்ச்சியால் விளங்குகிறது. இது இன்றைய இளைய தலைமுறையினர் பெரியாரின் தொண்டு எத்தகையது என்பதை உணரச் செய்யவல்ல நிகழ்ச்சியுமாகும்.
அது மட்டுமா? இந்நிகழ்ச்சி இன்னொரு செய்தியையும் நமக்கு உணர்த்துகின்றது. சமுதாய மருத்துவரான பெரியார் ஒரு கூட்ட நிகழ்ச்சிக்கு ஒத்துக் கொண்டால் குறிப்பிட்ட நேரத்தில் மேடைக்கு வந்து சேர்ந்து விடுகின்ற வழக்கத்தினை உடையவர். அவருடைய 60 ஆண்டுகால பொது வாழ்வில் ஒப்புக் கொண்ட நிகழ்ச்சிக்கு செல்லாமல் கூட்டத்தை ஒத்தி வைத்ததாக இரண்டொரு சம்பவத்தைத் தவிர வேறு காண முடியவில்லை.
‘விடுதலை’ பெரியார் பிறந்த நாள் மலரிலிருந்து, கட்டுரையாளர் : பெரியாரின் தனிச் செயலாளராகப் பணியாற்றியவர்