கிட்டத்தட்ட எழுபது ஆண்டுகளாக, நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்த பாபர் மசூதி - இராமஜென்ம பூமி நில உரிமை குறித்த வழக்கில் உச்சநீதிமன்றத்தின் அய்ந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, 9.11.2019 அன்று 1045 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை வழங்கியது. இந்த வழக்கின் உச்சநீதிமன்ற அமர்வில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்டே, டி.ஒய். சந்திரசூட், அசோக்பூஷன், எஸ். அப்துல் நசீர் ஆகியோர் இருந்தனர். இந்த நிலத்தின் உரிமை கோரி “ஸ்ரீராம் விராஜ்மன்” எனப்படும் ராம் லல்லா (குழந்தை இராமன்), முசுலீம் சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா ஆகியோர் வழக்குத் தொடுத்திருந்தனர்.
இந்த வழக்கு 2.77 ஏக்கரின் நிலவுரிமை சார்ந்த தாக மட்டும் இல்லாமல், இந்திய நாட்டில் 85 விழுக்காட்டி னராக இருக்கும் இந்து சமூகத்திற்கும், 12 விழுக்காட்டின ராக உள்ள முசுலீம் சமூகத்திற்கும் இடையிலான வழக் காகக் கடந்த முப்பது ஆண்டுகளில் உருவாக்கப்பட்டிருந்தது. பாபர் மசூதி-இராமஜென்மபூமி சிக்கலையொட்டி, இந்து- முசுலீம் மோதல்களும், உயிரிழப்புகளும், சொத்துகள் அழிப்பும், குண்டு வெடிப்புகளும் நிகழ்ந்துள்ளன. மத உணர்வை மய்யமாகக் கொண்ட இந்த வழக்கின் தீர்ப் பால் கலவரங்கள் மூளுமோ என்கிற அச்சம் நிலவியது.
தீர்ப்பு எப்படி இருந்தாலும் அதை ஏற்போம் என்று சன்னி வக்பு வாரியமும், பிற முசுலீம் அமைப்புகளும் பல ஆண்டுகளாகக் கூறிவந்தன. 2018 வரையில் சங்கப் பரிவாரங்கள் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்பதாக வெளிப்படை யாகக் கூறவில்லை. “பாபர் மசூதி உள்ள இடத்தில் தான் இராமர் பிறந்தார் என்பது ஒட்டுமொத்த இந்துக் களின் நம்பிக்கை; இது உயர்நீதித் துறையின் அதிகார வரம்புக்கும் அப்பாற்பட்டது” என்று நீண்டகாலமாகக் கூறிவந்தன.
உச்சநீதிமன்ற அமர்வு இந்த வழக்கை 2019 ஆகத்து 6 முதல் அக்டோபர் 16 வரையிலான காலத்தில், தொடர்ந்து 40 நாள்கள் விசாரித்தது; தீர்ப்பு பின்னர் வழங்கப்படும் என அறிவித்தது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நவம்பர் 17 அன்று பதவியிலிருந்து ஓய்வு பெறுவதால், அதற்கு முன் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்திய ஒன்றிய அரசின் ஆட்சிப் பொறுப்பில் இருப்பதால் நரேந்திர மோடி 27.10.18 அன்று தன்னுடைய ‘மனதின் குரல்’ வானொலி உரை யில், “அயோத்தி வழக்கில் 2010இல் அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த போது அரசியல் கட்சிகள், அமைப்புகள், பொது மக்கள் அமைதி காத்தனர். அது போல இப்போது உச்சநீதிமன்றத் தீர்ப்பின் போதும் அமைதியைப் பேண வேண்டும்” என்று வேண்டு கோள் விடுத்தார். இதேபோன்ற வேண்டுகோளை உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்தநாத்தும் விடுத்திருந்தார்.
தில்லியில் நடந்த ஆர்.எஸ்.எஸ்.-இன் உயர்மட்டக் கூட்டத்தில் அதன் தலைவர் மோகன் பகவத், அயோத்தி தீர்ப்பு இந்துக்களுக்கு வெற்றியாக அமைந்தாலும் ஊர்வலங்கள், கொண்டாட்டங்கள் நடத்தக் கூடாது என்று கட்டளையிட்டார். நீதிமன்றத் தீர்ப்பை மதித்து ஏற்க வேண்டும் என்று பேசுகிற இவர்கள், 2018-இல் உச்சநீதிமன்றம் சபரிமலையில் அனைத்து அகவைப் பெண்களும் வழிபடலாம் என்று அளித்த தீர்பபை இன்றளவும் எதிர்ப்பது ஏன்?
எப்போதும் இல்லாத தன்மையில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உ.பி. அரசின் உயர் அதிகாரிகளை அழைத்து சட்டம்-ஒழுங்கு ஏற்பாடுகள் குறித்துக் கேட் டறிந்தார். வடஇந்தியாவில் சில நகரங்களில் 144 தடை ஆணை பிறப்பிக்கப்பட்டது. தீர்ப்பின் விளைவாக ஏற்படக்கூடிய அசாதாரணச் சூழ்நிலையை எதிர்கொள்ள காவல்துறையை அணியமாக வைக்குமாறு ஒன்றிய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியது. நவம்பர் 13 அன்று தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நவம்பர் 9 அன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ள தாக நவம்பர் 8 அன்று உச்சநீதிமன்றம் அறிவித்தது. வழக் கத்துக்கு மாறாக விடுமுறை நாளான சனிக்கிழமை அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இத்தீர்ப்பின் பத்தி 796-இல், “தனித்தன்மையான முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கும் பொறுப்பு இந்த நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டது. மத நம்பிக்கையின் அடிப்படையில் அல்லாமல், சான்றா தாரங்களின் அடிப்படையில்தான் நில உரிமை குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது. அசையாச் சொத்துகள் தொடர் பான வழக்குகளில் எந்த அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும் என்கிற அளவீடுகள் சட்டத்தில் வகுக்கப்பட் டுள்ளன. அந்தக் கோட்பாடுகளின் அடிப்படையில் இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது” என்று கூறப்பட் டுள்ளது. இத்தீர்ப்பு மதநம்பிக்கையின் அடிப்படையில் அளிக்கப்பட்டிருக்கிறதா? சான்றுகளின் அடிப்படையில் வழங்கப்பட்டிருக்கிறதா? என்பது குறித்துப் பின்னர் பார்ப்போம்.
இத்தீர்ப்பின் சுருக்கம் :
1) பாபர் மசூதி இருந்த 2.77 ஏக்கர் நிலம் பகவான் ஸ்ரீராம் விராஜ்மன் என்கிற ராம் லல்லாவுக்கு உரியதாகும். ஒன்றிய அரசு மூன்று மாதங்களுக்குள் ஓர் அறக்கட்டளையை நிறுவி அந்த இடத்தில் இராமர் கோயில் கட்டும் பொறுப்பை அறக்கட்ட ளையிடம் அளிக்க வேண்டும். அதற்கான விதிமுறை களை ஒன்றிய அரசு வகுக்க வேண்டும்.
2) முசுலீம்கள் வழிபட்டு வந்த இடத்தை இழந்த தற்கு இழப்பீடாக, அய்ந்து ஏக்கர் நிலத்தை 1993இல் அயோத்தியில் ஒன்றிய அரசு கையகப்படுத்திய 67.7 ஏக்கர் நிலத்திலிருந்தோ அல்லது உ.பி. அரசு அயோத்தியில் முதன்மையான இடத்தில் உள்ள நிலத்திலிருந்தோ முசுலீம்கள் மசூதி கட்டிக்கொள்வதற்காகச் சன்னி வக்பு வாரியத்துக்கு அளிக்க வேண்டும். 2.77 ஏக்கர் நிலத்தை அறக்கட்டளையிடம் ஒப்படைக்கும் போதே 5 ஏக்கர் நிலத்தை முசுலீம்களுக்கு அளிக்க வேண்டும்.
3) நிர்மோகி அகாரா நிலத்தின் மீதான உரிமையைக் கோரவில்லை. பூசை செய்யும் உரிமையையும் இராமர் பிறந்த இடத்தை நிர்வாகம் செய்யும் உரிமையையும் கோரியிருந்தது. அதனால் நிர்மோகி அகாராவின் வழக்குத் தள்ளுபடி செய்யப்படுகிறது. ஆயினும் இராமர் கோயில் கட்டுவதற்காக அமைக்கப்படும் அறக்கட்டளையில் நிர்மோகி அகாராவுக்குப் பொறுப்பு வழங்கலாம்.
இத்தீர்ப்பை நவம்பர் 9 அன்று காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் படித்தார். இத்தீர்ப்பு வெளியானதும், பிரதமர் மோடி தனது சுட்டுரையில், “சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்பதை அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தெளிவுபடுத்தியுள்ளது. இராமரை வழிபடுபவராகவோ, இரஹீமை வழிபடுபவரோ, எவராக இருந்தாலும் நாம் அனைவரும் தேச பக்தியை வலுப் படுத்த வேண்டும். அயோத்தி வழக்கின் தீர்ப்பை எவருக்கு மான வெற்றியாகவோ அல்லது தோல்வியாகவோ பார்க்கக் கூடாது” என்ற பதிவு செய்தார். சங் பரிவாரங்கள் ஆரவாரமில்லாத மகிழ்ச்சியுடன் இத்தீர்ப்பை வரவேற்றன. காங்கிரசுக் கட்சியும், பொதுவுடைமைக் கட்சிகளும், தி.மு.க. உள்ளிட்ட அனைத்து மாநிலக் கட்சிகளும் இத் தீர்ப்பை ஏற்பதாகக் கூறியதுடன், மக்கள் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணவேண்டுமென்று கேட்டுக் கொண்டன. தமிழ்நாட்டில் வாக்கு அரசியல் கட்சிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் மட்டும், மதநம்பிக்கையை அடிப்படை யாகக் கொண்டு வழங்கப்பட்டுள்ள இத்தீர்ப்பு நாட்டின் மதச்சார்பின்மைக்கும், சிறுபான்மையினரின் உரிமை களுக்கும் எதிரானது என்று கருத்துரைத்தார். சன்னி வக்பு வாரியமும் பெரும்பாலான முசுலீம் அமைப்பு களும் தங்களுடைய நீண்டகால நிலைப்பாட்டின் படி, இத்தீர்ப்பை ஏற்பதாக அறிவித்தன.
இத்தீர்ப்பு வெளியாவதற்குச் சில நாள்களுக்கு முன்பிருந்தே நாளேடுகள், காட்சி ஊடகங்கள் வாயிலாக, அயோத்தி தீர்ப்பை ஏற்கும் மனநிலை உருவாக்கப் பட்டிருந்தது. ஒன்றிய அரசு இதைத் திட்டமிட்டுச் செய்தது. வாட்ஸ்-அப் போன்றவற்றிலும் தீர்ப்பு குறித்து எவரும் கருத்துப் பதிவிடக் கூடாது என்று எச்சரிக்கப்பட்டது. அதனால் இந்தியா முழுவதும் இத்தீர்ப்பு வெளியான அன்றும், அதன் பின்னரும் அமைதி நிலவியது. இங்கு ஒரு கேள்வி எழுகிறது. ஒருவேளை, இத்தீர்ப்பு சங் பரிவாரங்களுக்கு எதிராக அமைந்திருப்பின் இதே போன்ற அமைதி நிலவியிருக்குமா? இந்தக் கேள்விக் குக் கடந்த ஆண்டு சபரிமலையில் பெண்கள் வழி படலாம் என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்குச் சங் பரிவாரங்கள் எவ்வாறு எதிர்வினையாற்றி என்பதே விடையாக நிற்கிறது.
பாபர் மசூதி-இராமஜென்ம பூமி சிக்கல் தொடர்பாகக் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நிகழ்ந்த மோதல்களையும், அதனால் சமூகத்திலும் அரசியலிலும் பிளவுபடுத்தும் சக்திகள் வளர்ச்சி பெற்றதையும், நாட்டின் எதிர் காலத்தையும், சமூக அமைதியையும், மதநல்லி ணக்கத்தையும் கருத்தில் கொண்டே உச்சநீதிமன்றத்தின் அய்ந்து நீதிபதிகளும் ஒரு சமரசத் தீர்ப்பை ஒருமன தாக வழங்கியிருக்கிறார்கள். இத்தன்மையில் இது மதிக்கப்பட வேண்டிய-ஏற்கப்பட வேண்டிய தீர்ப்பு தான்.
ஆயினும் எந்தவொரு தீர்ப்பும் திறனாய்வுக்கு அப் பாற்பட்டது அன்று. திறனாய்வு செய்வதும் மாறுபட்ட கருத்தை வெளியிடுவதும், அதற்கான உரிமை இருப்பதும் சனநாயகத்தின் சாரமாகும். மதச்சார்பின்மை, சட்டத்தின் ஆட்சி, சனநாயகம் ஆகியவற்றின் அடிப்பiயில் இத் தீர்ப்பின் போதாமைகளை-குறைகளைச் சுட்டிக்காட்டுவது தேவையானதாக இருக்கிறது.
பாபர் மசூதி-இராமஜென்ம பூமி வழக்கின் வரலாறு
இராம பக்தி இயக்கம் 12-ஆம் நூற்றாண்டில் வட இந்தியாவில் பரவத் தொடங்கியது. இராமபக்தர்களில் இராமானந்தர் என்கிற பிரிவினர் இருந்தனர். தீவிர இராம பக்தர்களான இராமானந்தர்கள் 14, 15-ஆம் நூற்றாண்டுகளில் கூட குறிப்பிடத்தக்க அளவில் அயோத்தி யில் இல்லை. 18-ஆம் நூற்றாண்டில்தான் பெருமளவில் அயோத்தியில் வாழ்ந்தனர். அதன்பிறகே அயோத்தியில் பல இராமர் கோயில்கள் உருவாயின என்று கே.என். பணிக்கர், ரோமிலாதாப்பர் போன்ற வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர்.
இராமானந்தர்களில் ஒரு பிரிவு நிர்மோகி அகரா எனப்பட்டது. 1700 முதல் அயோத்தியில் பாபர் மசூதி உள்ள இடத்தில்தான் இராமர் பிறந்தார் என்கிற நம்பிக்கை மக்களிடம் பரவியது. பாபர் மசூதி 1528-இல் பாபரின் படைத் தளபதி, மீர்பாகியால் கட்டப்பட்டது. 1855-இல் பாபர் மசூதியில் இந்துக்கள் சிலர் வழிபட முயன்றதால் முசுலீம்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இப்பகை தொடர்ந்தது. அயோத்தி நகரம் அடங்கிய பகுதி அவந்த் எனப்பட்டது. 1857-இல் நவாபிட மிருந்து அவந்த் பகுதியைப் பிரித்தானியர் கைப்பற்றினர். பிரித்தானியர் முசுலீம்-இந்து மோதலைத் தடுக்க பாபர் மசூதி வளாகத்திற்குள் மூன்று கவிகைகள் (Domen) கொண்ட மசூதியின் கட்டடப் பகுதியிலிருந்து நூறு அடி தள்ளி இரும்புக் கம்பிகளாலான தடுப்பு வேலி அமைத்தனர். இரும்புத் தடுப்பை ஒட்டிய மசூதியின் வெளிமுற்றப் பகுதியில் 17 X 21 X 6 அடி நீள, அகல, உயர அளவு கொண்ட ஒரு மேடையை இந்துக்கள் கட்டினர். இது இராம் சபுத்தரா எனப்பட்டது. சபுத்தரா என்றால் மேடை. இது இராமர் பிறந்த மேடை-இராமஜென்மபூமி எனப்பட்டது. இராம்சபுத்ராவில் வழிபாடு செய்யத் தொடங்கினர்.
நிர்மோகி அகாரா பிரிவைச் சேர்ந்த தலைமைப் பூசாரி இரகுபர்தாசு என்பவர், இராம் சபுத்ரா மீது கோயில் கட்ட அனுமதி கோரி வழக்குத் தொடுத்தார். பைசாபாத் மாவட்டத் துணை நீதிபதி, இது மோதலுக்கு வழிவகுக்கும் என்று கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தார். இரகுபர்தாசு மாவட்ட நீதிபதியிடம் மேல்முறையீடு செய்தார். அவரும் 1866 மார்ச்சு மாதம், கோயில் கட்டும் கோரிக்கையை ஏற்க மறுத்தார். இரகுபர்தாசு விடாப்பிடியாக அவந்தின் நீதித்துணை ஆணையரிடம் மேல்முறையீடு செய்தார். அவரும் இதை 1886 நவம்பரில் தள்ளுபடி செய்தார். இம்மூன்று நீதிபதிகளிடமும், மசூதியின் வெளிமுற்றத் தில் இருந்த இராம்சபுத்ரா தான் இராமர் பிறந்த இடமாகக் குறிக்கப்பட்டுள்ளது என்பது மனங்கொள்ள வேண்டிய ஒன்றாகும். மசூதியின் உள் முற்றத்தின் உரிமையைக் கோரவில்லை.
1949 திசம்பர் 22 நள்ளிரவில், நிர்மோகி அகாராவைச் சேர்ந்த 50-60 பேர் கொண்ட கும்பல் பாபர் மசூதியின் நடுவில் உள்ள கவிகை யின் கீழ் இராம்லல்லா (குழந்தை இராமர்), சீதை, இலட்சுமணன் சிலைகளைத் திருட்டுத்தன மாக நாட்டினர். முசுலீம்கள் இதைக் கடுமையாக எதிர்த்தனர். சிலைகளை வைத்தவர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. இந்து-முசுலீம் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டதால் பைசதாலாத் நீதிமன்றம் (பைசாபாத் என்பது அண்மையில் அயோத்தி என்று பெயர் மாற்றப்பட்டது) 1949 திசம்பர் 29 அன்று பாபர் மசூதி இடத்தை அரசின் பொறுப்பில் ஒப்படைத்தது. பாபர் மசூதி பிரச்சனைக்குரிய பகுதியாக அறிவிக் கப்பட்டு அதன் நுழைவாயில் பூட்டப்பட்டது.
1950 சனவரியில் கோபால் சிங் விசாரத், பரமஹம்ச இராமச்சந்திர தாசு ஆகிய இருவரும் குழந்தை இராமர் சிலைக்குப் பூசை நடத்த அனுமதி கோரி, பைசாபாத் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இப்போது நவம்பர் 9 அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த வழக்கின் தொடக்கப் புள்ளி இதுதான். உள்முற்றத்திற்கு (Inner Courtyard) வெளியில் பூசை செய்து கொள்ள நீதிமன்றம் அனுமதி அளித்தது.
1959-இல் நிர்மோகி அகாரா, பாபர் மசூதி நிலத்தின் மீது உரிமை கோரி வழக்குத் தொடுத்தது. அயோத்தியில் வாழ்ந்த முசுலீம்களின் சார்பில் சன்னி வக்பு வாரியம் 1961 திசம்பர் 18 அன்று வழக்குத் தொடுத்தது. அதில் மசூதியில் வைக்கப்பட்ட சிலைகளை அகற்றவும், மசூதி இடம் தங்களுக்குச் சொந்தம் என்று அறிவிக்கவும் கோரியிருந்தது.
1989-இல் ஸ்ரீமான் விராஜ்மன் எனப்படும் இராம் லல்லாவின் நெருங்கிய நண்பர் என்ற பெயரில், விசுவ இந்து பரிசத் அமைப்பைச் சேர்ந்த வழக்குரைஞர் தியோகி நந்தன் அகர்வால் என்பவர், பாபர் மசூதி இடம் இராமர் பிறந்த இடம் என்பதால் அதை அவருக்கே வழங்க வேண்டும் என்று கோரி வழக்குத் தொடுத்தார்.
1989 சூலை 10 அன்று இந்த வழக்குகள் அனைத்தும் அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டன. பதி னொறு ஆண்டுகள் கழித்து 2010 செப்டம்பர் 30 அன்று அலகாபாத் உயர் நீதிமன்றம் பிரச்சினைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை இராம்லல்லா, சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா ஆகிய மூவருக்கும் சமமாகப் பிரித்தளிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பை எதிர்த்து 14 மேல்முறையீட்டு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டன. 2018 செப்டம்பரில் தான் இது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 2019 நவம்பர் 9 அன்று அய்ந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்தது.
இராமஜென்ம பூமி இயக்கமும் பாபர் மசூதி தகர்ப்பும்
பாபர் மசூதி - இராமஜென்ம பூமி தொடர்பாக 1950 முதல் நீதிமன்றத்தில் வழக்கு இருந்த போதிலும், பொதுவெளியில் அது குறித்து எத்தகைய விவாதமும் நடக்கவில்லை. ஆர்.எஸ்.எஸ். தலைவர் எம்.எஸ். கோல் வால்கர், கே.எம். முன்ஷி ஆகியோரின் ஆலோசனை யின் பேரில் 1964-இல் ஆர்.எஸ்.எஸ்.-இன் கிளை அமைப்பாக விசுவ இந்து பரிசத் உருவாக்கப்பட்டது. 1984-இல் விசுவ இந்து பரிசத், இராமஜென்ம பூமியை மீட்போம் என்று அறிவித்தது. இதற்காக “இராமஜென்ம பூமி முக்தி யக்ஞ சமிதி” என்ற அமைப்பை உருவாக்கியது. அதே ஆண்டில் பஜ்ரங்தள் (குரங்குப்படை) என்கிற இளைஞர் அமைப்பையும் ஏற்படுத்தியது. இராமஜென்ம பூமியை மீட்போம் என்கிற முழக்கத்தை முன்வைத்து பீகாரில் சீதாமர்ஹி (சீதை பிறந்த இடம்) என்ற ஊரி லிருந்து 1983 செப்டம்பர் 23 அன்று இரத யாத்திரை யைத் தொடங்கியது. இது அயோத்தியை அடைந்தது. அங்கிருந்து தில்லிக்குச் செல்லவிருந்த நிலையில், 1984 அக்டோபர் 31 இந்திரா காந்தி கொலை செய்யப் பட்டதால் அந்த இரதயாத்திரை கைவிடப்பட்டது. வட இந்தியாவில் பாபர் மசூதி இடத்தில் இராமர் கோயில் கட்ட வேண்டும் என்ற எண்ணத்தையும் முசுலீம்கள் மீதான பகை உணர்வையும் இந்த இரத யாத்திரை இந்துக்களிடம் ஏற்படுத்தியது.
பிரதமர் இராசிவ் காந்தியின் அறிவுறுத்தலின் பேரில் 1986 பிப்ரவரி 1, அன்று பாபர் மசூதியின் பூட்டு திறக்கப்பட்டு மசூதியின் கவிகையின் கீழ் வைக்கப்பட்ட இராமர் சிலையை வழிபட இந்துக்கள் அனுமதிக்கப் பட்டனர். 1989 அக்டோபர் - நவம்பர் மாதங்களில் இராமர் கோயில் கட்டுவதற்காக இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் ‘ஸ்ரீராம்’ என்று பொறிக்கப்பட்ட செங்கல்கள் ஊர்வலமாக அயோத்தி நோக்கி எடுத்துச் செல்லப்பட்டன. இது “சிலன்யா பூசை” எனப்பட்டது. இதற்கிடையில் 1989 ஏப்பிரல் மாதம் இமாச்சலப் பிரதேசத்தில் பலம்பூரில் நடந்த பா.ச.க.வின் செயற்குழுக் கூட்டத்தில், அயோத்தியில் இராமர் கோயில் கட்டுவது என்பது கட்சியின் கொள்கையாக முறைப்படி அறிவிக்கப்பட்டது.
1990 ஆகத்து மாதம் பிரதமர் வி.பி. சிங் இந்திய அரசு வேலைகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு அளித்தார். பா.ச.க. ஆதரவுடன் வி.பி. சிங் ஆட்சியில் இருந்தார். பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியதை வடஇந்தியாவில் மேல்சாதி மாணவர்கள் எதிர்த்துப் போராட்டங்கள் நடத்தினர். இந்தப் பின்னணியில் மேல்சாதி இந்துக்களின் வாக்குகளை ஈர்க்கும் நோக்குடன், எல்.கே. அத்வானி 1990 செப்டம்பரில் சோமநாதபுரத்திலிருந்து அயோத்தி நோக்கி இராம இரத யாத்திரை நடத்தினார். இரத யாத்திரை சென்ற வழிநெடுகிலும் மோதல்கள், தாக்குதல்கள் நடந்தன.
1991 மே மாதம் தமிழ்நாட்டில் தேர்தல் பரப்புரை யின் போது இராசிவ் காந்தி கொல்லப்பட்ட அனுதாப அலையால், பி.வி.நரசிம்மராவ் தலைமையில் காங்கிரசுக் கட்சி ஆட்சியில் அமர்ந்தது. சங் பரிவாரங்கள் அயோத்தி யில் இராமர் கோயில் கட்டுவதற்கான அணிதிரட்டல் களை மேலும் முடுக்கிவிட்டன. மேலும் மதுராவில் கிருஷ்ணர் கோயில் அருகில் உள்ள மசூதி, காசியில் விசுவநாதர் கோயிலையொட்டியுள்ள மசூதியையும் இடித்துக் கோயில்களை மீட்போம் என்று சங் பரிவாரங்கள் முழங்கின. எனவே 1991 செப்டம்பரில் ஒன்றிய அரசு ஒரு சட்டம் இயற்றியது. பாபர் மசூதி தவிர 1947 ஆகத்து 15 அன்று நாட்டில் இருந்த வழிபாட்டு இடங்கள் அனைத் தின் நிலை, இச்சட்டத்தால் பாதுகாக்கப்படும். அவற்றின் மீது உரிமைகோரி வழக்குத் தொடர முடியாது.
1992 ஆகத்து 15 அன்று செங்கோட்டையில் உரையாற்றிய பிரதமர் பி.வி. நரசிம்மராவ், பாபர் மசூதி காக்கப்படும் என்று உறுதி அளித்தார். சங் பரிவாரங்கள் அயோத்தியில் 1992 திசம்பர் 6 அன்று கரசேவை நடக்கும் என்று அறிவித்தன. அப்போது உ.பி.யில் பா.ச.க. ஆட்சியில் முதல்வராக இருந்த கல்யாண் சிங், தேசிய வளர்ச்சி மன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும் பாபர் மசூதி பாதுகாக்கப்படும் என்று உறுதி அளித்தார். அயோத் தியில் படைகள் குவிக்கப்பட்டன. ஆயினும் அயோத்தியில் திரண்ட இரண்டு இலக்கம் சங் பரிவாரங்களால் 6.12.1992 அன்று பாபர் மசூதி இடித்துத் தகர்க்கப்பட்டு, தற்காலிக இராமர் கோயிலும் அமைக்கப்பட்டது. பி.வி. நரசிம்ம ராவ் பாபர் மசூதி தகர்ப்பைத் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தார். மதச்சார்பின்மையின் கறுப்பு நாள் அது. கரசேவர்கள் பாதுகாப்பாக அவரவர் ஊர்களுக்குத் திரும்பிட, தொடர் வண்டிகளும் பேருந்துகளும் ஏற்பாடு செய்து அளித்தார் பிரதமர் பி.வி. நரசிம்மராவ்.
பாபர் மசூதியை இடித்ததற்காக இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஒன்று பெயர் தெரியாத எண்ணற்ற கரசேவர்கள் மீது; மற் றொன்று எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, வினஸ் கட்டியார் உள்ளிட்ட தலைவர்கள் மீது. இந்த வழக்கு உ.பி. மாநில லக்னோ உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. 1993 சனவரி 7 அன்று பாபர் மசூதியைச் சுற்றியுள்ள 67.7 ஏக்கர் நிலத்தை ஒன்றிய அரசு தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டது.
பாபர் மசூதி தகர்ப்பைக் கண்டித்து மும்பையில் ஊர்வலம் சென்றதற்காக, நூற்றுக்கணக்கில் முசுலீம்கள் கொல்லப்பட்டனர். 2002இல் கோத்ரா இரயில் பெட்டி எரிப்பில், 59 கரசேவர்கள் கொல்லப்பட்டனர். அதையொட்டி குசராத்தில் முசுலீம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 2000-க்கு மேற்பட்ட முசுலீம்கள் கொல்லப்பட்டனர். முசுலீம் தீவிரவாதிகள் அயோத்தியில் பாபர் மசூதி இடத்தில் ஏற்படுத்திய இராமர் கோயிலை ஊர்தியில் வெடிகுண்டுகளுடன் வந்து தாக்க முயன்றனர்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்து...
வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட வேண்டும்; எதற்கும் பணியாமல் அஞ்சாமல் தீர்ப்புகளை வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்திடம் மக்கள் எதிர் பார்க்கிறார்கள். ஆனால் மிகவும் முதன்மை வாய்ந்த இத்தீர்ப்பில், இத்தீர்ப்பை எழுதிய நீதிபதியின் பெயர் குறிப்பிடப்படவில்லை. தீர்ப்பை எழுதிய நீதிபதியின் பெயரைக் குறிப்பிடும் நடைமுறை ஏன் பின்பற்றப்பட வில்லை. அதேபோல் இத்தீர்ப்புக்கு 116 பக்கங்கள் கொண்ட இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதை எழுதிய நீதிபதியின் பெயரும் குறிக்கப் பெறவில்லை. இது பல ஊகங்களுக்கு இடமளிக்கிறது.
அலகாபாத் உயர்நீதிமன்றம் 2003-ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் அகழாய்வு நடத்தி அறிக்கை அளிக்குமாறு இந்திய தொல்லியல் துறையைக் கேட்டுக் கொண்டது. தொல்லியல் துறையின் அறிக்கை யைப் புறந்தள்ள முடியாது என்று கூறிய உச்சநீதி மன்றம், தீர்ப்பின் பத்தி 788 உட்பிரிவு 1, 2, 3 ஆகிய வற்றில் தன் கருத்தைப் பதிவு செய்துள்ளது.
“மசூதியின் அடியில் இருந்த பொருள்கள் இசுலாமியக் கூறுகளைக் கொண்டவையாக இல்லை; இந்து மதம் சார்ந்தவையாக உள்ளன என்று தொல்லியல் அறிக் கையில் கூறப்பட்டுள்ள போதிலும், 1. மசூதி கட்டப்படு வதற்கு முன் இருந்த கட்டுமானம் இடிக்கப்பட்டதற்கான காரணம் எது என்று கூறப்படவில்லை, 2. பாபர் மசூதி கட்டுவதற்காகத்தான் அதற்குமுன் இருந்த கட்டடம் இடிக்கப்பட்டதாகக் கூற முடியாது. 3. மசூதியின் அடியில் கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் கி.பி.12-ஆம் நூற் றாண்டைச் சேர்ந்தவை; ஆனால் பாபர் மசூதி 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. எனவே இடைப்பட்ட 400 ஆண்டுகள் காலத்தில் என்ன நடந்தது என்று தெரிய வில்லை” என்று தீர்ப்பின் பத்தி 788-இல் கூறப்பட்டுள்ளது.
சங் பரிவாரங்கள் அயோத்தியில் இராமர் பிறந்த இடத்தில் கட்டப்பட்ட இராமர் கோயிலை பாபரின் தளபதி மீர்பாகி இடித்து விட்டுத்தான், மசூதியைக் கட்டினார் என்று கூறிவந்தது உண்மையல்ல என்பது தெளிவாகிறது.
தீர்ப்பின் பத்தி 788 உட்பிரிவு 4-இல் வெளிநாட்டுப் பயணிகள் - குறிப்பாக டைபன்தலர், மாண்ட்கோமரி மார்டின் ஆகியோர் 18-ஆம் நூற்றாண்டில் எழுதியுள்ள குறிப்புகளிலிருந்து 1. பிரச்சனைக்குரிய இடத்தில்தான் இராமர் பிறந்தார் என்ற நம்பிக்கை மக்களிடம் இருந்தது. 2. பிரச்சனைக்குரிய இடத்தில் வழிபாடு செய்யும் நடை முறை இருந்தது. பண்டிகை நாள்களில் பக்தர்கள் திரளாகக் கூடினர். 3. அவந்தி பகுதியைப் பிரித்தானியர் கைப் பற்றுவதற்கு முன்பிருந்தே அதாவது 1857-இல் தடுப்புச் சுவர் கட்டப்படுவதற்கு முன்பிருந்தே பிரச்சனைக்குரிய இடத்தில் இந்துக்கள் வழிபட்டு வந்தனர் என்கிற செய்தி கள் தெரிய வருவதாகத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. வெளிநாட்டுப் பயணிகள் மக்களிடம் கேட்டறிந்தவற்றை எழுதியிருந்தனர். மக்கள் தங்கள் நம்பிக்கையைத் தெரிவித்ததால் இக்கூற்றுகளை தகுந்த சான்றுகளாக ஏற்கக் கூடாது.
பத்தி 888 உட்பிரிவு 5-இல், “மசூதி இருந்த போதிலும் இராமர் பிறந்த இடம் என்று தாங்கள் நம்பும் இடத்தை இந்துக்கள் தொழுவது தடுக்கப்படவில்லை, மசூதி இருப்பதை பொருட்படுத்தாமல் இந்துக்கள் 1856-7-க்கு முன்பிருந்தே வழிபட்டு வந்துள்ளனர். முசுலீம்கள் 1856-7-க்கு பாபர் மசூதியில் தொழுகை நடத்தியதற்கான ஆதாரத்தை அளிக்கவில்லை என்பது சான்றுகள் மூலம் தெரிய வருகிறது” என்று கூறப்பட் டுள்ளது.
பத்தி 888 உட்பிரிவு 7-இல் “1857-இல் இரும்புத் தடுப்புச் சுவர் அமைத்த பிறகு ராம்சபுத்ரா கட்டியது இராமர் பிறந்த இடத்தின் மீது வரலாற்று ரீதியாக தங் களுக்கு உள்ள உரிமையை இந்துக்கள் நிலைநாட்டுவதாக இருந்தது. தடுப்புச் சுவர் அமைத்த பிறகும் உள் முற்றத்தில் (கவிகையின் கீழ்) தான் இராமர் பிறந்தார்; அங்கு வழிபட உரிமை வேண்டும் என்று இந்துக்கள் கோரி வந்தனர். சிலர் உள்முற்றத்தில் சிலைகளை வைக்க முயன்றதற்கான ஆதாரங்கள் உள்ளன. ராம் புத்தாவில் வழிபாடு நடத்திய போதிலும் மசூதியின் உள் முற்றத்தையே கருவறையாகக் கருதி கைகூப்பித் தொழுதனர். அதே சமயம் மசூதி முழுவதும் தங்கள் கட்டுப் பாட்டின்கீழ் இருந்தது என்பதற்கான சான்றுகளை முசுலீம்கள் தரவில்லை” என்று கூறப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் கூறிய வாக்குமூலங்களையே ஆதாரமாக எடுத்துக் கொண்டுள்ளது. பிரச்சனைக்குரிய இடத்தில் தான் இராமர் பிறந்தார் என்பதற்கு கந்த புராணம் உள்ளிட்ட மத நூல்களை ஆதாரமாக உச்ச நீதிமன்றம் காட்டுகிறது. கந்த புராணத்தில் அயோத்தில் இராமர் பிறந்தார் என்று எழுதப்பட்டுள்ளதே தவிர, குறிப்பிட்ட இந்த இடத்தில் தான் பிறந்தார் என்று சொல்லப்படவில்லை. சீக்கியர் களின் மதகுருவான குருநானக் கி.பி.1510-இல் அயோத் தியில் வழிபட்டார் என்பது ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் உண்மைத் தன்மையை ஆராயவில்லை. குருநானக் சிலை வழிபாட்டையும் புனித இடங்களுக்குச் செல்வதையும் எதிர்த்தார். இதேபோன்று மசூதியின் உள்முற்றத்தைக் கருவறையாகக் கருதி தொலைவில் நின்று வழிபட்டனர் என்று சொல்லப்பட் டதை ஏற்பது என்பது இந்துக்களின் மத நம்பிக்கை யையே முழுமையான ஆதாரமாகக் கொண்டதாகிறது. இந்துக்களின் மத நம்பிக்கை என்பதைத் தவிர பாபர் மசூதி இடம் இந்துக்களுக்கு உரியது என்பதற்கான திட்டவட்டமான சான்று எதுவும் இத்தீர்ப்பில் காட்டப்பட வில்லை.
மசூதியின் வெளிமுற்றத்தில் இராம்சபுத்தராவில் இந்துக்கள் தங்குதடையின்றி வழிபட்டனர் என்பதா லேயே அது அவர்களுக்குச் சொந்தமானதாகிவிடுமா? ‘தி இந்து’ ஆங்கில நாளேட்டின் செய்தியாளர் வி. வெங்க டேசன், மசூதியின் வெளிமுற்றத்தில் வழிபாடு நடத்த விடாமல் தடுத்து இந்துக்களை விரட்டாமல், சகிப்புத் தன்மையுடன் முசுலீம்கள் செய்ததுதான் அவர்கள் செய்த குற்றமா? என்கிற கேள்வியை எழுப்பியிருந்தார்.
மசூதியின் உள் முற்றத்தில்தான் இராமர் பிறந்தார் என்கிற இந்துக்களின் நம்பிக்கையை உறுதியான சான்றுகள் இல்லாமல் ஏற்றுக்கொள்கின்ற உச்சநீதி மன்றம் 1528 முதல் 1857 வரையில் மசூதியில் தொழுகை நடந்ததற்கான சான்றினை முசுலீம்களிடம் கேட்பது என்ன நியாயம்? 300 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு மசூதியில் தொழுகை நடக்காமல் இருந்திருந்தால் அது பழுதடைந்து குட்டிச்சுவராகி விட்டிருக்காதா? அதேசமயம் 1857 முதல் 1949 வரை மசூதியில் தொழுகை நடந் திருப்பதாக உச்சநீதிமன்றம் கூறுகிறது. 300 ஆண்டு களாக மசூதியில் தொழுகை நடத்தப்படவில்லை என்பதா லேயே அது முசுலீம்களுக்குச் சொந்தமில்லை என்று ஆகிவிடுமா?
பத்தி 788 உட்பிரிவு 15-இல், “மசூதியின் உள் முற்றத்தின் மீதான உரிமை தொடர்பாக 1934-இல் இந்துக்களுக்கும் முசுலீம்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் மசூதியும் கவிகைகளும் (Domes) சேதமடைந்தன. பிரித்தானிய அரசு, அரசின் செலவில் ஒரு முசுலீம் ஒப்பந்தக்காரர் மூலம் பழுது நீக்கம் செய்து கொடுத்தது. அதன்பின் முசுலீம்கள் தொடர்ந்து தொழுகை நடத்தி வந்தனர்” என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இது, மசூதி முசுலீம்களுக்குச் சொந்தம் என்பதைக் காட்டுகிறது.
பத்தி 788 உட்பிரிவு 18-இல் 1934-இல் மசூதி மீது தாக்குதல் நடத்தியதும், 1949-இல் மசூதி யினுள் சிலைகள் வைக்கப்பட்டதும் 1992-இல் மசூதி அடியோடு தகர்க்கப்பட்டதும் சட்டத்தைக் கடுமையாக மீறிய குற்றச் செயல்களாகும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இக்குற்றங்களைச் செய்தவர்களிடமே இந்த நிலம் ஒப்படைக்கப் பட்டிருப்பதை என்னவென்று சொல்வது? பாபர் மசூதி இடிக்கப்படாமல் இருந்திருந்தால், உச்ச நீதிமன்றம் இப்படியான தீர்பபை வழங்கியிருக்குமா? 1992-இல் மசூதியை இடித்தவர்கள் மீதான வழக்கு லக்னோ நீதிமன்றத்தில் உள்ளது. இதை ஓராண்டிற்குள் விரைந்து முடித்து குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதே ஓரளவுக்கு நியாயம் சேர்ப்ப தாக இருக்கும். இதைச் செய்ய வேண்டிய பொறுப்பு ஒன்றிய அரசுக்கு இருக்கிறது.
பத்தி 800-இல் ஒப்பீட்டளவில் முசுலீம்கள் முன் வைத்த ஆதாரங்களைவிட இந்துக்கள் முன்வைத்த ஆதாரங்கள் கூடுதலாக மேம்பட்டவையாக இருப்ப தால், இந்த நிலம் இந்துக்களுக்கு அளிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. இந்துக்கள் முன்வைத்த ஆதாரங்கள் அனைத்தும் நம்பிக்கை சார்ந்ததாகவே இருந்தன என்பதே உண்மையாகும். அதே பத்தியில், எந்தவொரு வழக்கிலும் முழுமையான தீர்ப்பு வழங்கு வதற்கான அதிகாரம் அரசமைப்புச் சட்டம் பிரிவு 142-இல் வழங்கப்பட்டுள்ளது; இதன் அடிப்படையில் ஒரு மதச்சார்பற்ற நாட்டில் நடக்கக் கூடாத வகையில், பாபர் மசூதியின் மீதான உரிமை பறிக்கப்பட்டதற்கு நியாயம் செய்யும் வகையில் முசுலீம்களுக்கு 5 ஏக்கர் நிலம் அளிக்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்படுகிறது என்று சொல்லப்பட்டுள்ளது.
எல்லா மதங்களும் சமம். ஆனால் இந்து மதம் கூடுதலாகச் சமமானது என்று கூறுவது போல் இருக்கிறது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. நில உரிமை தொடர்பான வழக்கில் நிலம் யாருக்குச் சொந்தம் என்று தீர்ப்பளிப்பதுடன் நில்லாமல், அந்நிலத் தில் இராமர் கோயில் கட்டும் பொறுப்பை ஒன்றிய அரசிடம் உச்சநீதிமன்றம் ஒப்படைத்திருப்பது எந்த வகையான மதச்சார்பின்மை? மதச்சார்பின்மையே இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை என்று இத்தீர்ப்பில் கூறப்பட்டுள்ள போதிலும், இத்தீர்ப்பின் பிழிவான கருத்து நடப்பில் சிறுபான்மை மதத்தவர் சமமாக நடத்தப்பட மாட்டார்கள் என்கிற உண்மையை எதிரொலிப்பதாகவே இருக்கிறது.
நாட்டில் அமைதியையும் நல்லுறவையும் மத நல்லிணக்கத்தையும் விரும்புகின்ற அனைவரும், “அப்பாடா! நீண்டகாலமாக இருந்துவந்த பெரும் சிக்கலான வழக்கு ஏதோவொரு வகையில் முடிவுக்கு வந்ததே” என்று ஆறுதல் அடைகின்றனர்.
ஆயினும் சங்பரிவாரங்கள் இந்த அமைதியை நீடிக்க விடுவார்களா? என்கிற கேள்வி நம்முன் நிற்கிறது. ஏனெனில் அவர்களின் தத்துவத் தந்தை கோல்வால்கர், “இந்துஸ்தானத்தில் இருக்கும் இந்துக்கள் அல்லாதார், ஒன்று இந்துக் கலாச்சாரத்தையும் மொழியையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்து மதத்துக்கு மரியாதை செலுத்த வேண்டும். இந்து மதத்தின் புனிதத் தன் மையை உயர்த்திப் பிடிக்க வேண்டும். இந்து இனத்தின் கலாச்சாரத்தைப் போற்றுவதைத் தவிர, வேறு கருத்து எதையும் ஆதரிக்கக்கூடாது. இந்து தேசத்துக்குத் தம்மை முழுமையாக அடிமைப்படுத்திக் கொண்டு இந்த நாட்டில் அவர்களும் வாழலாம். எதற்கும் அவர்கள் உரிமை கொண்டாடக்கூடாது. சலுகை கொடுப்பது என்கிற பேச்சுக்கே இடமில்லை என்பது மட்டுமல்லாமல், எந்த உரிமை யும் இன்றி-குடியுரிமைகூட இல்லாமல் வேண்டுமா னால் இங்கே தங்கி வாழலாம்” என்று கூறியுள்ளார். சங் பரிவாரங்களின் கொள்கையாக இது இன்றளவும் பின்பற்றப்படுகிறது. 2014-இல் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பின், சிறுபான்மையினருக்கும், தலித்துகளுக்கும் எதிராக சங் பரிவாரங்கள் நடத்திய தாக்குதல்களைக் கோல்வால்கரின் கூற்றின் பின்னணியில் புரிந்து கொள்ள வேண்டும்.
இப்போது ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே பண்பாடு, குடியுரிமைப் பதிவேடு என்கிற புதிய ஆயுதங்களுடன் வருகிறார்கள். மதத்தின் பெய ரால் நடத்தும் எந்தவொரு வன்முறையையும் எந்த மதத்தவர் செய்தாலும் அதைக் கடுமையாக எதிர்ப்பதன் மூலமே உண்மையான மதச்சார் பின்மையை, சமூக நல்லுறவை நிலைநாட்ட முடியும்.