சங்பரிவாரங்களால் இந்துத்துவக் கோட்பாட்டின் தந்தை எனப் போற்றப்படுகின்ற வி.தா.சாவர்கர், “அரசியலை இந்துமயமாக்கு; இந்துமதத்தை இராணுவ மயமாக்கு” என்ற முழக்கத்தை முன்னிறுத்தினார். இந்த முழக்கத்தின் அடிப்படையில்தான் ஆர்.எஸ்.எஸ்.-ம் அதன்சேய் அமைப்புகளும் இயங்கி வருகின்றன. ஆர்.எஸ்.எஸ்.இன் அரசியல் முகமான பாரதிய சனதாக் கட்சிக்கும் இதே கொள்கைதான்.
1980 முதல் அரசியலை இந்துமயமாக்குவதற் காகச் சங்பரிவாங்கள் அயோத்தியில் இராமர் கோயில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை முதன்மைப் படுத்திச் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் பல மாநிலங்களிலும் நடுவண் அரசிலும் பா.ச.க. ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. ஆர்.எஸ்.எஸ். தன்னை ஒரு கலாச்சார அமைப்பு என்று சொல்லிக்கொண்டே இந்துத்துவ அரசியலையும் பா.ச.க.வின் ஆட்சியையும் இயக்கி வருகிறது.
அரசியலை இந்துமயமாக்குதல் என்கிற திட்டத்தின் ஒரு பகுதியாக இராமஇராச்சிய இரதயாத்திரை வடக்கே அயோத்தியில் தொடங்கி தெற்கே திருவனந்தபுரத்தில் நிறைவடையுமாறு திட்டமிட்டுச் செயல்படுத்தப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தின் தலைநகரமான திருவனந்தபுரத் துக்கு அருகில் உள்ள செங்கோட்டுக்கோணம் என்ற ஊரில் “ஸ்ரீராமதாச சர்வதேச சேவா சங்கம்” என்கிற அமைப்பு உருவாக்கப்பட்டபோதிலும், இச்சங்கம் மகா ராட்டிரா மாநிலத்தில் வலிமையுடன் இயங்குகிறது. இந்தியாவின் பிற பகுதிகளிலும் இதற்குக் கிளைகள் இருக்கின்றன.
ஸ்ரீராமதாச சர்வதேச சேவா சங்கத்தின் சார்பில், 13.2.2018 அன்று அயோத்தியில் விசுவ இந்து பரிசத்தின் தலைமையிடமான கரசேவபுரத்திலிருந்து இராம இராச்சிய இரத யாத்திரைப் புறப்பட்டது. கரசேவ புரத்தில் 1993 முதல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் இராமர் கோயில் கட்டுவதற்கான தூண்கள் மற்ற கட்டுமானப் பொருள்களைத் தயாரிக்கும் வேலை நடை பெற்று வருகிறது. இந்த இரத யாத்திரை உத்தரப் பிரதேசம், மத்தியப்பிரதேசம், மகாராட்டிரம், கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம் ஆகிய ஆறு மாநிலங்களில் 41 நாள்களில் 6000 கி.மீ. தொலைவை 224 நாடாளும ன்றத் தொகுதிகள் வழியாகச் செல்லும் வகையில் திட்டமிடப்பட்டது. அயோத்தியில் சங்பரிவாரங்கள் கட்டு வதற்குத் திட்டமிட்டுள்ள இராமர் கோயிலின் வடிவில் இரத ஊர்தி வடிவமைக்கப்பட்டுள்ளது.
விசுவஇந்து பரிசத்தின் பொதுச் செயலாளர் மகா சிவராத்திரி நாளில் இந்த இரத யாத்திரையைத் தொடங்கி வைத்தார். இந்துமதச் சாமியார்களையும் இளைஞர்களையும் திரட்டித் தீவிரமான இந்துத்து வத்தை முன்னெடுப்பதற்காக ஆர்.எஸ்.எஸ்.இன் கிளை அமைப்பாக 1964இல் விசுவ இந்து பரிசத் உரு வாக்கப்பட்டது. விசுவ இந்து பரிசத்தான் 1984இல் பாபர் மசூதி உள்ள இடத்தில் தான் இராமர் பிறந்தார்; எனவே அங்கு இராமர் கோயில் கட்டவேண்டும் என்ற கோரிக்கையை முதன்முதலில் எழுப்பியது. பா.ச.க. 1989இல் தன் கட்சியின் பேரவைக் கூட்டத்தில் இதற் கான தீர்மானம் இயற்றியது. 1984இல் நாடாளு மன்றத்தில் இரண்டு உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருந்த பா.ச.க. அயோத்தியில் இராமர் கோயில் கட்டுதல் என்ற முழக்கத்தை முன்னெடுத்ததன் மூலம் 1989இல் 86 நாடாளுமன்றத் தொகுதிகளில் வென்றது.
இராம இராச்சிய இரதயாத்திரையைத் தொடக்கி வைத்த விசுவஇந்து பரிசத்தின் பொதுச்செயலாளர் சம்பத்ராய், “ஆர்.எஸ்.எஸ்.க்கும், விசுவ இந்து பரிசத் துக்கும் இந்த இரத யாத்திரைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்று பேசினார். இது ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்பது போன்றதே ஆகும். மேலும் சம்பத் ராய், “ஸ்ரீஇராமதாச சர்வதேச சேவா சங்கம் கடந்த 27 ஆண்டுகளாக இதுபோன்ற ஆன்மீகப் பரப்புரை யைச் செய்துவருகிறது. இந்த ஆண்டு அயோத்தி லிருந்து இராமேசுவரத்திற்கு இந்தப் பயணம் திட்ட மிடப்பட்டுள்ளது” என்று கூறி இந்த இரதயாத்திரைக் கும் அரசியலுக்கும் தொடர்பு இல்லை என்று உணர்த்திட முயன்றார்.
2018 மே மாதம் கர்நாடகத்திலும் திசம்பரில் மத்தியப் பிரதேசத்திலும் சட்டமன்றங்களுக்குத் தேர்தல் நடை பெற விருப்பதால்தான் இந்த இரண்டு மாநிலங்கள் வழியாக இரத யாத்திரைச் செல்வதற்குத் திட்டமிடப் பட்டது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பா.ச.க.வுக்கு ஓரளவுக்கு ஆதரவு இருப்பதால் இரத யாத்திரைத் திட்டத்தில் தமிழகமும் சேர்க்கப்பட்டது. மேலும் 2014இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது நரேந்திர மோடி, அயோத்தில் இராமனுக்குக் கோயில் கட்டுதல் என்பதைப் பற்றிப் பேசாமல், இந்தியாவின் வளர்ச்சி, நாட்டுக்கு நல்லகாலம் பிறக்கப்போகிறது, அயல்நாட்டில் உள்ள கருப்புப் பணத்தை மீட்டு வந்து ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் உருவா 15 இலட்சம் போடப்படும் என்பவற்றைப் பேசி, பா.ச.க.வைத் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறச் செய்து தலைமை அமைச்சரானார். ஆனால் கடந்த நான்கு ஆண்டுக் கால ஆட்சியில் தேர்தல் வாக்குறுதிகளில் எதையும் நிறைவேற்றவில்லை என்பதுடன் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. அமலாக்கம் போன்றவற்றால் உழவர்கள்; சிறுதொழில் செய்வோர், தொழிலாளர்கள் முதலானவர்கள் கடுமையான பொருளாதார நெருக் கடியில் சிக்கியுள்ளனர். ஆண்டிற்கு இரண்டு கோடி புதிய வேலை வாய்ப்பு என்ற வாக்குறுதி கானல் நீராகி விட்டது. மாறாக அமைப்புச் சார்ந்த தொழில்களில் வேலை இழப்புகள் தொடர்கதையாகிவிட்டன. இத்தகைய அரசியல் பின்னடைவுகளிலிருந்து மீள்வதற்கான ஒருவழியாகவே, குரங்கு தன் குட்டியின் கையை விட்டு ஆழம் பார்ப்பது போல் இந்த இராம இராச்சிய இரத யாத்திரையை ஆர்.எஸ்.எஸ்.-விசுவஇந்து பரிசத் பின்நின்று இயக்குகின்றன.
இந்த இரதயாத்திரையின் நோக்கங்களாக, அயோத்தி யில் இராமனுக்குக் கோயில் கட்டுதல், இந்தியாவில் இராம இராச்சியத்தை அமைத்தல், பள்ளிப் பாடத் திட்டத்தில் இராமாயணத்தை இடம் பெறச் செய்தல், தற்போது ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்று இருப்பதை இராமனுக்கு உரிய நாளான வியாழக் கிழமையை விடுமுறை நாளாக அறிவித்தல், துறவிகள், மாடதிபதிகள் ஆகியோருடன் கலந்து பேசி ‘தேசிய இந்துநாள்” (National Hindu Day) என்பதை அறிவித்தல் ஆகியவை முன் கைப்பட்டுள்ளன.
பாபர் மசூதியா? இரமன் பிறந்த இடமா? என்கிற சிக்கல் உச்சநீதிமன்றத்தில் வழக்காக விசாரணையில் இருக்கும்போது, பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் இராமர் கோயில் கட்டுவோம் என்று கூறி இரதயாத் திரை நடத்துவது சட்டத்தின் ஆட்சி என்கிற கோட் பாட்டுக்கு எதிரானதல்லவா? உச்சநீதிமன்றத்தின் செயல்பாட்டில் தலையிடுவதல்லவா? இந்த இரத யாத்திரை தங்கு தடையின்றி செல்வதற்கும், தேவை யான பாதுகாப்பை வழங்குவதற்கும் உரிய ஏற்பாடு களைச் செய்யவேண்டும் என்று நடுவண் அரசின் உள்துறை அமைச்சகம் இராம இராச்சிய இரதம் பயணிக்கும் ஆறு மாநில அரசுகளுக்கும் ஆணையிட்டு அறிக்கை அனுப்பியுள்ளது. இந்தியாவில் இருப்பது இந்துத்துவ ஆட்சியே என்பதை இது பறைசாற்றுகிறது.
இராமஇராச்சியம்-இராமனின் அரசசை அமைக்கப் போகிறோம் என்கிறார்கள். ‘அரசு’ என்பது முற்றிலும் அரசியல் சார்ந்ததாகும். ஆயினும் இராம இராச்சியம் என்பது ஆன்மீகம் சார்ந்தது என்று பா.ச.க.வினரும் மற்ற சங்பரிவாரங்களும் விதண்டா விவாதம் செய்து கொண்டிருக்கிறார்கள். இராமஇராச்சியம் என்பதைக் காந்தியார் சுதந்திரப் போட்டக் காலத்தில் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார். பிரித்தானிய அரசிடம் வலிமையுடன் பேரம் பேசுவதற்காக, பல ஆயிரம் சாதிகளாகப் பிரிந்து கிடந்தவர்களை இந்துக்கள் என்ற ஓர்மை உணர்வில் அணி திரட்டிட இராம இராச்சியம் என்ற முழக்கத்தை முன்வைத்தார் காந்தியார்.
இந்து-முசுலீம் ஒற்றுமையை வலியுறுத்திக் கொண்டே காந்தியார் இராம இராச்சிய பசனையையும் பாடிக் கொண்டிருந்தார். காந்தியார் ஒரு புதிரான மனிதர் என்பதற்கான ஒரு சான்று இது. 1947இல் நாட்டுப் பிரிவினையையொட்டி இந்து-முசுலீம் மோதல்களும் படுகொலைகளும் நிகழ்ந்து கொண்டிருந்த போது பிப்ரவரி 26 அன்று பிரார்த்தனைக் கூட்டம் ஒன்றில், ‘இராம இராச்சியம் என்பது இந்துக்களின் ஆட்சி என்று யாரும் தவறாக நினைக்க வேண்டாம். என்னுடைய இராமன் என்பது கடவுளின் இன்னொரு பெயர். நான் கூறும் இராம இராச்சியம் என்பது உலகில் கடவுளின் ஆட்சியை-“குடராஜ்” (Khuda Raj) அமைப்பதே ஆகும்” என்று கூறினார். (Khuda என்பது இஸ்லாத்தில் கடவுளைக் குறிக்கும்) ஆனால் சங்பரிவாரங்கள் காந்தியார் சொன்ன இராம இராச்சியத்தை அமைக்கப் போவ தாகக் கூறி, பார்ப்பன மேலாதிக்க ஆட்சியை நிறுவிட முயல்கின்றனர்.
வால்மீகி எழுதியதுதான் மூல இராமாயண மாகும். இராமாயணத்தில் உள்ள இராமன் ஆட்சியே உலகில் சிறந்த ஆட்சி என்று இந்துத்துவவாதிகள் கூறிவருகின்றனர். வால்மீகி இராமாயணத்தில் “பிராம ணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் அனைவரும் பேராசையின்றி அவரவர்களுக்குத் தர்மப்படி விதிக்கப்பட்ட கடமைகளையும் வேலை களையும் மனநிறைவோடு செய்கின்றனர்” (காண்டம் 116, வசனம் 89) என்று கூறப்பட்டுள்ளது. எனவே வருணாசிரமத்தை-நால்வருண சமூகக் கட்டமைப் பைக் கட்டிக் காப்பதே இராம இராச்சியத்தின் குறிக் கோளாகும். ஆகவேதான் சூத்திரனான சம்புகனுக்குத் தவம் செய்யும் உரிமை சாத்திரப்படி இல்லை என்ப தால் இராமன் அவன் தலையை வாளால் வெட்டிக் கொன்றான். எனவே நால்வருணத்தை-சாதியக் கட்டமைப்பை-இதன் வழியிலான சமூக ஒடுக்கு முறையை-பொருளாதாரச் சுரண்டலை நிலைநாட்டிட முயலும் இராம இராச்சிய இரதயாத்திரையைச் சூத்தி ரர்களும், தலித்துகளும், பழங்குடியினரும் எதிர்க்க வேண்டியுள்ளது.
இராம இராச்சிய இரதயாத்திரை 20.3.18 அன்று கேரளத்திலிருந்து தமிழ்நாட்டில் செங்கோட்டைக்குள் நுழைந்தது. அதற்கு முன்பே மதச்சார்ப்பின்மையிலும் சனநாயகத்திலும் நம்பிக்கை உள்ள பல்வேறு அமைப்பு கள், தமிழ்நாட்டு அரசு இந்த இரத யாத்திரையைத் தமிழ்நாட்டில் அனுமதிக்கக்கூடாது; அவ்வாறு அனுமதித் தால் போராட்டம் நடத்துவோம் என்று அறிவித்தன. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு திருநெல்வேலி மாவட்டத்தில் 144 தடை ஆணைப் பிறப்பித்தது. தொல்.திருமாவளவன், வேல்முருகன், ஜவாஹருல்லா போன்ற தலைவர்களைச் செங்கோட்டைக்குப் புறப்படுவதற்கு முன்பே கைது செய்தது.
20.3.2018 அன்று சட்டப் பேரவையில் எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், இந்த இரத யாத்தி ரைக்கு அனுமதி வழங்கப்பட்டதையும், இதை எதிர்த்துப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தவர்களைக் கைது செய்திருப்பதையும் கண்டித்துப் பேசினார். மு.க.ஸ்டாலின் பேச்சு வன்முறையைத் தூண்டுவதாக இருப்பதாகத் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கூறியதன் பேரில் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப் பட்டது. முதலமைச்சர் பழனிச்சாமி ஆன்மீக இரத யாத்திரைக்கு அரசியல் சாயம் பூசப்படுவதாகக் குற்றம் சாட்டினார். இசுலாமிய இராச்சியம், கிறித்தவ இராச்சியம் என்று பிற மதத்தவர்கள் யாத்திரை நடத்தினால் ‘மத ஊர்வலம்‘ என்று கூறி தமிழக அரசு அனுமதிக்குமா? செயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, இராமனுக்கு அயோத்தியில் கோயில் கட்டாமல், பாக்கித்தானிலா கட்ட முடியும் என்று சங்பரிவாரங்களின் குரலை எதிரொலித்தவர். அயோத்தியில் கரசேவை நிகழ்ச்சிக்கு ஆட்களை அனுப்பியவர். எனவே செயலலிதாவின் வழிவந்த இந்த ஆட்சி இரத யாத்திரைக்கு அனுமதி அளித்ததில் வியப்பதற்கு ஏதுமில்லை!
இரத யாத்திரைக்கு மற்ற அய்ந்து மாநிலங்களில் எதிர்ப்பு இல்லாத போது, தமிழ்நாட்டில் மட்டும் எதிர்ப்பது ஏன்? என்று இந்துத்துவவாதிகள் வினவுகின்றனர். ஆம்! தமிழ்நாடு மற்ற மாநிலங்களிலிருந்து பலவகை யிலும் தனித்தன்மையானது. சமற்கிருத மொழியை விட மூத்ததும், தனித்து இயங்கவல்லதும், பல கோடி மக்களுக்கு இன்றளவும் தாய்மொழியாக இருப்பது மான தமிழ்மொழியின் தாயகம் தமிழ்நாடு. அதனால் சமற்கிருத்தையும் அம்மொழியின் வாயிலாக ஆதிக்கம் செய்யும் பார்ப்பனர்களையும் இந்தியாவிலேயே தமிழ் நாடுதான் தொடர்ந்து எதிர்த்து வருகிறது. எனவேதான் தமிழ்நாடு மட்டும் இந்தி ஆதிக்கத்தை 1938 முதல் எதிர்த்து வருகிறது. வகுப்புவாரி இடஒதுக்கீட்டுக் கொள் கையைக் காப்பாற்றுவதில் தமிழ்நாடு தனித்து விளங்கு கிறது. மருத்துவ நுழைவுத் தேர்வு (நீட்) சமூக நீதிக்கு எதிரானது என்று தமிழ்நாடு மட்டும் தொடர்ந்து போராடி வருகிறது. இவ்வாறு எண்ணற்ற காரணங்கள் இருக்கின்றன.
1922 இல் திருப்பூரில் தமிழ் மாகாண காங்கிரசின் சார்பில் நடைபெற்ற மாபெரும் பொதுக் கூட்டத்தில், இராகோபாலாச்சாரியை மேடையில் வைத்துக் கொண்டே தந்தை பெரியார், சம்புகனைக் கொன்ற-நால்வருணத் தைப் பாதுகாக்கும் இராமாயணத்தைக் கொளுத்த வேண்டும் என்று பேசினார். அச்சில் வெளிவந்த அனைத்து இராமாயணங்களையும் படித்து ஆராய்ந்து இராமன் “ஒரு அவதார புருஷன்” என்பது ஒரு பித்தலாட்டம், திராவிடர்களின் பண்பாட்டுக்கு எதிரான நூல் இராமாயணம் என்று தன் வாழ்நாள் முழுவதும் எழுதியும் பேசியும் வந்தார். காமராசர் முதலமைச்சராக இருந்தபோது இராமன் பட எதிரிப்புப் போராட்டம் பெரியார் தலைமையில் தமிழ்நாடு முழுவதும் நடத்தப் பட்டது. அறிஞர் அண்ணா இராமாயணம் கொளுத்தப் படவேண்டும் என்று ஆற்றிய உரை “தீ பரவட்டும்” என்ற தலைப்பில் நூலாக வெளிவந்து பல்லாயிரக் கணக்கான இளைஞர்களால் விரும்பிப் படிக்கப்பட்டது. 1971இல் சேலத்தில் பெரியார் தலைமையில் இராமன் படத்தைச் செருப்பால் அடிக்கும் பேரணி நடத்தப்பட்டது.
இன்று சங்பரிவாரங்கள், இசுலாமியரும் கிறித்து வரும் இராமனை இந்தியாவின் ஒப்பற்ற இலட்சிய புருஷனாக ஏற்றுக்கொண்டால்தான் இந்தியாவில் வாழமுடியும் என்று அச்சுறுத்துகின்றனர். “அயோத்தியில் பாபர் காலத்தில் இராமன் பிறந்த இடத்தில் கட்டப் பட்டிருந்த கோயிலை இடித்துவிட்டு மசூதி கட்டப்பட்டது. ஆகவேதான் பார் மசூதி தகர்ப்பட்டது. எனவே இசுலாமி யர்கள் இந்துக்களின் நம்பிக்கைக்கு மதிப்பளித்து, பாபர் மசூதி இருந்த இடத்தை இராமன் கோயில் கட்டுவதற்கு அளிக்கவேண்டும்” என்று சங்பரிவாரங்கள் வலியுறுத்தி வருகின்றன. அத்வானி போன்ற தலை வர்களும், அயோத்தியில் நாங்கள் குறிப்பிடும் இடத்தில் தான் இராமர் பிறந்தார் என்பது எங்கள் மத நம்பிக்கை; இதில் உச்சநீதிமன்றமும் தலையிட முடியாது என்று எச்சரிக்கின்றனர்.
“ராம் லல்லா”-வின் (குழந்தை இராமன்-பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டுள்ள இராமன் சிலை) சார்பில் 8.2.18 அன்று உச்ச நீதிமன்றத்தில் வாதிட்ட மூத்த வழக்குரைஞர் கே.பராசரன், “இராமர் பிறந்தது திரேதயுகத்தில். 30,000 ஆண்டுகளுக்கு முன் இது நிகழ்ந்தது. இவ்வளவு நீண்ட காலத்திற்கு முன் நிகழ்ந்ததற்கு இப்போது சான்று எப்படித் தர முடியும்”? என்று வாதிட்டு இந்துக்களின் நம்பிக்கை யின் அடிப்படையில் இராமன் பிறந்த இடத்தை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றார். புராண மரபுப்படி திரேதயுகம் 1,36,000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். இன்றுள்ள மனிதர்கள் (ழடிஅடி ளுயயீநைளே ளுயயீநைளே) பரிணாம வளர்ச்சியில் தோன்றி 60,000 ஆண்டுகள் ஆகின்றன என்பது மானுடவியலில் உலக அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் அறிவியல் உண் மையாகும். அரசு என்கிற வடிவம் ஏற்பட்டு பத்தாயிரம் ஆண்டுகள்தான் ஆகிறது. ஆனால் ஒரு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பே இராமன் ஒப்பற்ற ஆட்சியை நடத்தினான் என்கிற இந்துத்துவவாதிகளின் பித்த லாட்டத்தை எப்படி எதிர்க்காமல் இருக்கமுடியும்?
இந்துமதம் என்று சொல்லப்படுவதில் சைவம், வைணவம் என்ற இருபெரும் பிரிவுகள் இருக்கின்றன. இவற்றில் பல கடவுள்கள் இருக்கின்றனர். இவை தவிர பெண் தெய்வங்கள், நாட்டார் வழக்கியல் தெய்வங்கள், சாதிகளுக்கான குலசாமிகள் என்று எண்ணற்ற கடவுள்களை நம்புகிறார்கள்; வழிபடுகிறார் கள். இவற்றில் பல கடவுள்களுக்குச் சிறியதும் பெரியது மான கோயில்கள் உள்ளன. பெருங்கோயில்களில் ஆண்டுதோறும் திருவிழா நடக்கிறது. சாதி இந்துக் களின் முதன்மையான வீதிகளில் உற்சவர் சிலை வைக்கப்பட்ட தேர் உலா நடக்கிறது. இதே தன்மை யில் இசுலாமியரும் கிறித்தவரும் மதவிழாக்களைக் கொண்டாடுகின்றனர். சில இடங்களில் ஒரு மதத்தின் திருவிழாவில் மற்ற மதத்தவரும் கலந்து கொள்கின்ற னர். அரசமைப்புச் சட்டத்தில் ஒருவர் தான் விரும்பும் எந்த மதத்தையும் நம்பவும், பின்பற்றவும், பரப்புரை செய்யவும் உரிமை உண்டு என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலைகளைத் தடுக்க வேண்டும் என்று பெரி யாரியலாளர்களோ, அம்பேத்கரியவாதிகளோ, பொது வுடைமை இயக்கத்தினரோ கோருவதில்லை. ஆனால் கடவுளின்-இராமனின் பெயரால், மதத்தின் பெயரால் அரசியல் நடத்துவதை எதிர்க்கின்றனர். மதஉரிமை என்ற பெயரால் இந்துத்துவப் பாசிச அரசியல் செய் வதைக் கண்டிக்கின்றனர்.
ஆனால் சங்பரிவாரங்கள் அயோத்தியில் இராமர் கோயில்-அதுவும் பாபர் மசூதியிடத்தில்தான்-கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை அரசியல் குறிக் கோளாக முன்வைத்துதான் பா.ச.க. இந்திய அளவில் முதன்மையான அரசியல் கட்சியாக வளர்ந்துள்ளது. பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் ஆங்கிலேயனை எதிரி யாகக் காட்டி இந்துக்களை ஒன்று திரட்டியதுபோல், இப்போது சங்கபரிவாரங்கள் இசுலாமியர்களை இந் நாட்டின் ஆக்கிரமிப்பாளர்களாகக் காட்டி இந்துக்களை அரசியல் வாக்கு வங்கியாக அணி திரட்டுகின்றன. இதன்மூலம் பார்ப்பன-பனியா ஆதிக்கத்தையும், சுரண்டலையும் நிலை நிறுத்திட முயல்கின்றன. பார்ப்பன-பனியா ஆதிக்கச் சூழ்ச்சியைப் புரிந்து கொள்ளும் திறனற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரிலும், தலித்துகள்-பழங்குடியினரிலும் ஒரு பகுதியினர் வீபிடனர்களாக மாறி அவர்களின் தாள் பணிந்து கிடக்கின்றனர்.
நேருவும் காங்கிரசும் சோசலிசம் பற்றியெல்லாம் பேசினாலும் காங்கிரசுக் கட்சி 1885இல் தோற்றுவிக் கப்பட்ட காலம் முதலே பார்ப்பன-பனியாவின் மேலா திக்கத்தில் இருந்து வருவதால், சங்பரிவாரங்களுக்கு எதிராக உண்மையான மதச் சார்பின்மையை முன் னெடுக்கவில்லை. 1986 பிப்பரவரி 1 அன்று பிரதமராக இருந்த இராசிவ் காந்தியின் ஆணையின் பேரில்தான் பாபர் மசூதியின் வாயில் பூட்டுகள் அகற்றப்பட்டன. குடுவையில் அடைத்து வைக்கப்பட்ட பூதத்தைத் திறந்துவிட்ட கதையாயிற்று. அயோத்தியில் இராமர் கோயில் கட்டுதல் என்ற பெயரால் நடந்த கலவரங் களில் ஆயிரக்கணக்கான முசுலீம்கள் கொல்லப்பட்டனர்.
எனவே அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் இராமர் கோயில் கட்டுவது, இராம இராச்சியம் அமைப்பது என்கிற சங்பரிவாரங்களின் குறிக்கோள், பார்ப்பன-பனியா மேலாதிக்கத்தை நிலைபெறச் செய் வதற்காகவே என்பதால் மதச்சார்ப்பற்ற, சனநாயக, முற்போக்கு இயக்கங்களும் ஒடுக்கப்பட்ட மக்களும் சங்பரிவாரங்களின் சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும்.