10-03-1920 - 10-03-2019 நூற்றாண்டு தொடக்கத்தின் நினைவாக
உலகில் தோன்றிய எத்தனையோ புரட்சிகரமான இயக்கங்கள் மற்றும் அதனைத் தோற்றுவித்த தலைவர்கள் அந்தந்த மண்ணில் சிறப்பானவர்களே வெற்றியாளர்களே! இதனைச் சரித்திர சான்றுகள் இன்றுவரை பதிந்து ஆவணப்படுத்தியுள்ளது.ஆனால்!
வேறு எந்த நாட்டிலும் இல்லாத மக்கள் தொகையில் வெறும் மூன்று சதவீதத்திற்கும் குறைவான மக்கள் தொகையைக் கொண்டுள்ள இந்து- இந்தி - இந்தியா என்கிற இந்த நாட்டில் பிறப்பின் அடிப்படையில் உழைக்கும் வெகு மக்களை நால் வர்ணம், நாலாயிரம் சாதிகளாகப் பிரித்து அந்தப் பிரிவில் தங்களுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டு இன்றுவரையிலும் ஆதிக்கச் சக்திகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இவர்களை எதிர்க்கத் துணிந்த எல்லோரையும், எவற்றையும், எதையும் இந்து மதம் சொன்ன சாம - பேத - தான - தண்டம் முதலியவற்றைப் பயன்படுத்தி அழித்தார்கள். தங்களை யாரும் வெல்ல முடியாத கட்டுக்கோப்பான அமைப்புகளை உருவாக்கி அரசியல், சமூக, பொருளாதார துறையில் பல ஆயிரம் ஆண்டுகள் அதிக்கம் செலுத்தி வந்தார்கள்.
இந்த சூழலில் தென்னகமாம் திராவிடர் நாட்டில் 1925-ஆம் ஆண்டு கலகக்காரர் தோழர் பெரியார் திராவிடர் இயக்கத்தைத் தோற்றுவித்தார். அந்த இயக்கத்தில் தானே அதன் கொள்கை வகுப்பாளர் களாகவும் அதனைச் செயல்படுத்தும் பரப்புரை மற்றும் போராட்டங்களை முன்னின்று நடத்தும் தளபதியாகவும் விளங்கி பல்லாயிரக்கணக்கான திராவிடர் இயக்கத் தொண்டர்களையும் உருவாக்கி தன்னைப் பின்பற்றச் செய்து திராவிடர் இனமான மீட்புப் பணியில் எண்ணற்ற தன்னல மறுப்பு வீரர்களின் துணைகொண்டு நடத்தி இருந்தாலும்,
அவர்களில் குறிப்பிடத்தக்க வகையில் பழமைவாதம் படிந்த மக்கள் மத்தியில் அவருக்குத் துணையாக நின்ற கலகக்காரர் தோழர் பெரியாரின் ஆயுள் நீடிப்பின் ரகசியமாக விளங்கிய அண்னை ஈவெரா மணியம்மையார் குறித்து திராவிடர் இயக்க இளைய இருபால் தோழர்கள் அறிந்து கொள்ளவும், “அனைத்து உலக மகளிர் நாளில்” அன்னை மணியம்மையாரின் உரை மற்றும் அறிக்கைகள் அரிய செய்திகள் அடங்கிய இத்தொகுப்பை “காட்டாறு” குழு பகிர்ந்து கொள்கிறது.
“உலக வரலாற்றில் மகளிரில் எவரும் எதையும் தியாகம் செய்வது எளிது - இளமையே தியாகம் செய்வது எளிதல்ல! ஆனால், தாம் கொண்ட இலட்சியப் பிடிப்புக்காக, அவற்றைத் தந்த தலைவருக்காகவும், அவர் கண்ட இயக்கத்திற்காகவும், தம்மையே தந்த, வெந்த, புடம் போட்ட தங்கம் அவர்!”
“அசிங்கங்களும், அருவருப்புகளும் குவியல் குவியலாக வசை மொழிகளாக அவர் மீது வீசப்பட்டும்,”
‘குடி செய்வார்க்கில்லை பருவம் மடிசெய்து மானம் கருதக் கெடும்’ என்ற பெரியாருக்குப் பிடித்த குறளின் இலக்கியமாய் வாழ்ந்தவர்கள் அம்மா!
இதுவரை ‘பற்றற்று, பற்றற்றான் பற்றினைப் பற்றி’ வாழ்ந்து அவர் சொத்துக்கள் அனைத்தையும் மக்களுக்கு விட்டுச் சென்ற “மக்களைப் பெற்ற மகராசி”யாகவே, மக்களின் உள்ளத்தில் குடியேறியவர்!
தூற்றியவர்கள் போற்றினார்கள்! ஒதுங்கியவர்கள் ஓடோடி வந்து உயர்த்தினார்கள்!
என்றாலும் அவர் ஒரு சலனமுற்று சீராக ஓடும் ஜீவநதியாகவே இன்று ஓடிக் கொண்டிருக் கிறார்கள் - பொதுவாழ்வு வரலாற்றில்!”
மேலே கண்டுள்ள அன்னை மணியம்மையார் குறித்த பதிவானது திராவிடர் கழகத் தலைவர் தோழர் கி.வீரமணி அவர்களின் அணிந்துரையிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. இதிலிருந்து அன்னையாரின் பணி நீள, அகல பரிணாமங்களைப் புரிந்துகொள்ளலாம்.
வாழ்க்கைக் குறிப்புகள்
1920 மார்ச் மாதம் 10 ஆம் நாள் வேலூரில் வி.எஸ். கனசபை – பத்மாவதி தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். உடன் பிறந்தவர்கள் சண்முகம், தியாகராஜன் ஆகிய இரு சகோதரர்களும், கமலா என்ற சகோதரியும் ஆவார்கள்.
வேலூரில் உள்ள அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி இறுதியாண்டு ( எஸ்.எஸ்.எல்.சி ) வரைப் படித்தார்.தமிழ்ப் புலவர் வகுப்பு – படிக்கையில் கல்வி தடைப்பட்டது.
1943 செப்டம்பர் மாதம் 11 ஆம் நாள் - தந்தை பெரியாரின் சுயமரியாதை கருத்துக்களால் கவரப்பட்டு அய்யாவின் தொண்டராகப் பணியாற்ற வந்தார்.
1948 டிசம்பர் 20 ஆம் நாள் குடந்தையில் நடந்த மொழி உரிமைப் போரில், அரசு தடையை மீறியதாக கைது செய்யப்பட்டு பாபாநாசம் சப் -ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
விசாரணைக்குப் பின் இரண்டுமாதம் தண்டனை அளிக்கப்பட்டு வேலூர் சிறையில் காவலில் வைக்கப்பட்டார்.
1949 பிப்ரவரி மாதம் 23 ஆம் நாள் வேலூர் சிறையிலிருந்து விடுதலை அடைந்த மணியம்மையாரை தந்தை பெரியார் வரவேற்றார்.
மார்ச் மாதம் 31 ஆம் நாள் சென்னையில் அன்னை மணியம்மையார் தலைமையில் இந்தி எதிர்ப்பு போர் நடந்தது.
ஜீலை மாதம் 9 ஆம் நாள் பெரியார் ஈவேரா மணியம்மையார் அவர்கள் பதிவுத் திருமணம் முறைப்படி ரிஜிஸ்ட்ரார் முன்னிலையில் பதிவு செய்யப்பட்டது.
திருமணத்திற்குப் பிறகு கே.ஏ. மணியம்மை என்று இருந்துவந்த பெயரை ஈ.வெ.ரா.மணியம்மை என்று தமிழிலும் E.V.R.மணியம்மையார் என்று ஆங்கிலத்திலும் அழைக்குமாறு தந்தை பெரியார் வேண்டுகோள் விடுத்தார்.
1958 மார்ச் மாதம் 8 ஆம் நாள் சாதி ஒழிப்பு போரில் ஈடுபட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்ட தோழர் பட்டுகோட்டை ராமசாமியும், 10 ஆம் நாள் மணல்மேடு வெள்ளைச்சாமியும் மாண்டனர். இவர்களின் சடலத்தைதர சிறை அதிகாரிகள் மறுத்துவிட்டனர். ஆந்த நேரத்தில் மணியம்மையார் அவர்கள் முதலமைச்சர் காமாராசர் அவர்களை சந்தித்து மறைந்த தோழர்களின் உடல்களை திரும்பப் பெற்றார். மணியம்மை தலைமையில் சவ ஊர்வலம் சிறப்பாக நடைந்தது.
1958 ஜனவரி 19 ஆம் தேதி விடுதலையில் வெளியான “இளந்தமிழா புறப்படு போருக்கு” என்ற கட்டுரை சம்பந்தமாக அதன் ஆசிரியரும் வெளியிடுபவருமான திருமதி மணியம்மையார் மீது வழக்குத் தொடரப்பட்டது. மணியம்மையாருக்கும் கட்டுரையை எழுதிய தோழருக்கும் ஒரு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
1973 டிசம்பர் 24 ஆம் நாள் ‘பகுத்தறிவுப் பகலவன்’ தந்தை பெரியார் அவர்கள் மறைந்தார். அதன்பின் அன்னை மணியம்மையார் அவர்கள் கழகத்தலைவர் பொறுப்பேற்று வழி நடத்திச் சென்றார்.
1974 டிசம்பர் 25 ஆம் நாள் சென்னை பெரியார் திடலில் நடந்த “இராவண லீலா” நிகழ்ச்சி சம்பந்தமாக அன்னை மணியம்மையார் கைது செய்யப்பட்டார். இது சம்பந்தமாக வழக்கு தொடரப்பட்டது.
1976 செப்டம்பர் 9 ஆம் நாள் ‘இராவண லீலா’ வழக்கில் அன்னை மணியம்மையார் மற்றும் தோழர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டது. வழக்கை எதிர்த்து அப்பீல் செய்து அனைவரும் விடுதலை அடைந்தனர்.
16-09-1976 அன்று தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவிற்கு முதல் நாள் தீடிரென்று கைது செய்யப்பட்டு இரண்டு நாள் கழித்து விடுதலை செய்யப்பட்டார்.
1977 ஏப்ரல் 25 ஆம் நாள் “இராவண லீலா” வழக்கில் அம்மா மற்றும் தோழர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
அக்டோபர் மாதம் 30 ஆம் நாள் தமிழகம் வந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு கருப்புக் கொடி காட்டியதற்காக மணியம்மையார் கைது செய்யப்பட்டார்.
1978 மார்ச் மாதம் 16 ஆம் அன்னை மணியம்மையார் மாரடைப்பு நோயால் சென்னை பொது மருத்துவமனையில் காலமானார்கள்.
அன்னை மணியம்மையாரின் திராவிடர் இயக்கத்தில் ஆற்றிய எழுதிய முக்கியமான உரைகளும் கீழே பதிவிடப்படுகிறது.