திராவிட இயக்க வரலாற்றில் - பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் முன்னோடிகளாய் இருந்த பெண்கள் எத்தகைய வீரம் செறிந்த போராட்டங்களை நிகழ்த்திக் காட்டியுள்ளார்கள் என்பதை அறிந்துகொள்ள இந்நூல் உதவுகிறது. இந்நூலை கருஞ்சட்டைப் பெண்ணான ஓவியா எழுதியிருப்பது சிறப்பானது.
இந்நூலுக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, திராவிட முன்னேற்றக் கழக மகளிரணிச் செயலாளர் கனிமொழி, திராவிடர் கழகப் பிரச்சாரச் செயலாளர் அருள்மொழி ஆகியோர் அணிந்துரை எழுதிச் சிறப்பித்துள்ளார்கள். இந்நூல் கருஞ்சட்டைப் பதிப்பகத்தின் முதல் நூலாக வெளிவருவது கூடுதல் சிறப்பாகும்.
இந்நூலின் ஆசிரியர் தோழர் ஓவியா அவர்கள் ஐந்தாவது தலைமுறையாகத் தொடர்ந்து பெரியாரியலைக் கடைபிடிக்கக் காரணமான முதல் தலைமுறையாகிய - ஓவியாவின் தந்தைவழிப் பாட்டி கருஞ்சட்டைப்பெண் காந்தியம்மாளுக்கு இந்நூலை எழுதியதன் மூலம் பெருமை சேர்த்துள்ளார். அதேபோல் இந்நூலின் 95 ஆம் பக்கத்தில்
“காந்தியம்மாள் போன்று மேடைக்கு வராமல் அரங்குகளை நிரப்பிய பெண்மணிகள் மதுரை ஜெகதாம்பாள் போன்று இன்னும் ஏராளம் உண்டு”
என்று குறிப்பிட்டுள்ளார். அந்த ஜெகதாம்பாள் என்னுடைய தாயார் என்பதையும் அவர் வழியாக நாங்கள் தொடர்ந்து மூன்று தலைமுறையாகப் பெரியாரியலைக் கடைபிடித்து வருகிறோம் என்பதையும் பெருமையுடன் இக்கட்டுரையில் பதிவு செய்கின்றேன்.
முதல் அத்தியாயத்தில், தாய்வழிச் சமூகமாக பெண்ணின் தலைமையில் வாழ்ந்த சமூகம், எப்படி பெண்களை வீட்டுச் சிறையில் அடைத்தது என்பதிலிருந்து நூலைத் தொடங்குகிறார் தோழர் ஓவியா. உலக அளவில் பெண்கள் நிலை குறித்தும், இந்தியாவில் பெண்களின் நிலை குறித்தும் இந்நூல் பேசுகிறது. இந்தியாவில் பெண்களின் நிலை என்றால் ஒரு வயதுப் பெண் குழந்தைகூட விதவையாக இருந்திருக்கிறது.
அதேபோல் ஈழவப் பெண்கள் உள்ளிட்ட சில ஜாதியைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணியத் தடை செய்யப்பட்டிருந்தார்கள். இதைவிட மோசமாக, தேவதாசி முறை இருந்தது. ஒரு குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்த பெண்கள் கல்யாணம் செய்துகொள்ள உரிமை கிடையாது. பொட்டுக்கட்டி விடுதல் என்ற பெயரில் பூசாரிகளால் பொதுவில் அனுபவிக்கக்கூடிய பொது மகளிராக கோயிலில் விட்டு விடுவார்கள். இவ்வாறு பல கட்டுப்பாடுகளுக்குள் பெண்கள் வைக்கப்பட்டிருந்ததற் கான காரணத்தை அடுத்த அத்தியாயத்தில் குறிப்பிடுகிறார் தோழர் ஓவியா.
தொல்காப்பியமும் மனுதர்மமும்
இவ்விரு நூல்களும் பெண்களை எவ்விதமாகப் பார்த்தது என்பதைப்பற்றி விரிவாக எடுத்துரைக்கிறார் நூலாசிரியர் ஓவியா. தொல்காப்பியத்தில் பேணப்படும் பெண்ணடிமைத் தனம் என்னவென்றால்,
“ஒரு பெண் ஒரு நாளும் தன்னைப்பற்றி புகழ்ந்து ஆண் முன்னால் பேசக்கூடாது, ஒரு பெண் தனக்குக் கூடல் தேவைப்பட்டாலும், அதனால் அவள் துன்பப்பட்டாலும் அதனைத் தனது தேவையாகக் காதலனிடம் கேட்கக்கூடாது. மேலும் பரத்தையரைச் சகித்து வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்”
தொல்காப்பியத்தின் நிலையே இப்படி என்றால் மனுதர்மத்தின் நிலை எப்படி இருக்கும் என்பதை நாம் எண்ணிப் பார்க்க முடியும் என்கிறார்.
பெண்ணை ஒரு பொருட்டாக மனுதர்மம் எடுத்துக்கொள்ளவில்லை. பெண்ணுக்கு அடிப் படையாக தன்மனம்போல் காரியம் செய்கிற உரிமை கிடையாது. ஒருபோதும் பெண்ணுக்குச் சுதந்திரம் கொடுத்துவிடாதே என்பதை மனுதர்மம் வலிந்து சொல்கிறது. ஒரு பெண் எப்படியாவது பிள்ளை பெற்றாக வேண்டும். அதையும் ஓர் ஆணையாக மனுதர்மம் விதிக்கிறது. இந்த உளவியல்தான் மக்கள் தொகைப் பெருக்கம் பெரிய பிரச்சனையாக உள்ள நாட்டில் செயற்கைக் கருத்தரிப்பு மையங்கள் அதிகமாக ஏற்படக்காரணம் என்கிறார் ஓவியா.
அடுத்த அத்தியாயத்தில் பெண்ணுரிமையின் பிதாமகனா காந்தியார்? என்று கேள்வி எழுப்புகிறார். ஒரு பெண் ஜாதிக்கும் மதத்துக்கும் கட்டுப்பட்டு இருக்கவேண்டும் என்பதில் எந்த மாற்றத்தையும் விரும்பாத காந்தியார் பெண்கள் படிக்கவேண்டும் என்கிற கோரிக்கையை முன் வைக்கிறார். இந்து மதத்தை ஆதரித்துக்கொண்டே எப்படி பெண் விடுதலைக்குக் குரல் கொடுக்க முடிந்தது என்று கேட்கிறார் ஓவியா.
அடுத்து பெண்ணுரிமை குறித்து காந்தியாரின் புரிதலையும், தந்தை பெரியாரின் புரிதலையும் எடுத்துக்காட்டி, இருவருக்கும் உள்ள பெரிய இடைவெளியை எடுத்துக் காட்டுகிறார்.
அடுத்து குடும்பத்திலிருந்து தொடங்கினார் என்ற தலைப்பில், எந்த நடைமுறையைப் பின்பற்றினாலும் பெரியார் தன் குடும்பத்திலிருந்தே தொடங்குகிற பண்பைப் பெற்றவராக இருந்ததைக் குறிப்பிடுகிறார். பட்டுப்புடவை உடுத்துவதையே வழக்கமாகக் கொண்டிருந்த தன் தாயாரைக் கதராடை உடுத்த வைத்தவர் பெரியார். அதேபோல் தன் மனைவி நாகம்மையார், சகோதரி கண்ணம்மாள் ஆகியோரைக் கள்ளுக்கடை முன்னால் சென்று உட்கார்ந்து மறியல் செய்ய வைத்தவர். தொடர்ந்து கருஞ்சட்டைப் பெண்கள் ஒவ்வொருவராக நமக்கு அறிமுகப்படுத்துகிறார் தோழர் ஓவியா.
நாகம்மையார்
பெண்கள் இயக்க வரலாற்றில் முதல் முத்தாக நாகம்மையாரே திகழ்கிறார். 1924-ல் வைக்கம் போராட்டம் நடைபெறுகிறது. பெரியார் கைது செய்யப்பட்டதும் நாகம்மையார் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துகிறார். அப்போது காவலர்கள் நீ என்ன ஜாதி? என்று கேட்கிறார்கள். ஏன் நான் தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவள் இல்லையென்றால் என்னை மட்டும் உள்ளே விடலாம் என்று நினைக்கிறீர்களா? நான் ஜாதி சொல்ல முடியாது என்கிறார். இங்குதான் பெரியார் கொடுத்த பயிற்சியை பார்க்கமுடிகிறது என்று வியக்கிறார் ஓவியா.
கண்ணம்மாள்
நாகம்மையாரும், பெரியாரின் உடன் பிறந்த தங்கை கண்ணம்மாளும் சேர்ந்துதான் இயக்க வேலைகளில் ஈடுபட்டிருந்தனர். பெண் பத்திரிகையாளராக இருந்து சிறை சென்ற முதல் பெண் இந்திய வரலாற்றில் கண்ணம்மாள்தான்.
இராமாமிர்தம் அம்மையார்
தேவதாசி குலத்தில் பிறந்த இவர் 1925 இல் மாயவரத்தில் “பொட்டறுப்பு மாநாடு” நடத்தி பல தேவதாசிப் பெண்களின் பொட்டுகளை அறுத்தெறிந்ததோடு அதே மேடையில் பல பெண்களுக்குத் திருமணமும் நடத்தி வைக்கிறார். இதனால் பல எதிர்ப்புகளைச் சந்திக்கிறார். ஒரு முறை மேடையிலேயே நான்குபேர் இவரது தலைமுடியை அறுத்து எறிகிறார்கள். ஒரு கிராமத்தில் இவருக்கு பாலில் விஷம் கலந்து கொடுக்கப்படுகிறது. இவ்வளவு வன்முறைகளையும், எதிர்ப்புகளையும் எதிர் கொண்டவர் இராமாமிர்தம் அம்மையார்.
குஞ்சிதம் குருசாமி
இவர் பள்ளி இறுதித்தேர்வில் பள்ளியின் முதல் மாணவியாக, தங்கப்பதக்கம் பெற்றவர். பெரியாரின் பெண் விடுதலைக் கொள்கைகளை ஏற்று, தாலி அணிய மறுத்ததோடு பொட்டு வைப்பதையும் நிறுத்திவிட்டார். இதனால் இவர் தேசிய மகளிர் பள்ளியின் ஆசிரியர் பணியை இழந்தார்.
மீனாம்பாள் சிவராஜ்
தமிழ்நாட்டில் வர்த்தக ரீதியாக முதன்முதலாக கப்பலோட்டிய குடும்பத்தைச் சேர்ந்தவர். பெரியாரிடம் மிகவும் அன்பு பாராட்டியவர். இவரது ஆளுமையைக் குறிப்பிட வேண்டுமானால், “காங்கிரஸ்காரர்கள் அழைத்து நான் எப்படி சட்டம் எழுதும் பொறுப்பை ஏற்றுக் கொள்வது?” என்று அம்பேத்கார் தயங்கியபோது, அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வலியுறுத்தி அதில் வெற்றி பெற்றவர் மீனாம்பாள் அம்மையார்.
வீரம்மாள்
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த இவர், கல்வியில் ஆர்வம் கொண்டு, இவராகவே பிற பிள்ளைகளுடன் பள்ளிக்குச் சென்று, தொடக்கக்கல்வி முடித்தபின் சொந்த ஊரில் உள்ள பள்ளியில் இவரைச் சேர்த்துக்கொள்ள மறுத்ததால் எட்டு கி.மீ தொலைவிலுள்ள பள்ளியில் கல்வி கற்கச் செல்கிறார். அதுவும் வீட்டு வேலைகளையும் முடித்துவிட்டு. இதைக் கேள்விப்பட்ட பெரியார் திருச்சிக்குச்ச் செல்லும் போதெல்லாம் இவரை அழைத்து ஊக்கமளிக்கிறார். திருமணமானவுடன் கணவருக்கு வேறு வாழ்க்கை இருப்பதை அறிந்து அவரை விட்டுப் பிரிந்து அதிலிருந்து வெள்ளை உடை அணிந்து பொதுமக்களுக்காக சேவை செய்து வாழ்வேன் என்று உறுதியேற்கிறார். 1943-ல் ஆதிதிராவிடர் நலத் தொடக்கப்பள்ளியையும், 1954 இல் தமிழ்நாடு ஷெட்யூல்ட் வகுப்பு பெண்கள் நலச் சங்கத்தையும் தொடங்கி நடத்தியவர்.
டாக்டர் எஸ்.தருமாம்பாள்:
இவர் ஒரு சித்த மருத்துவர். இருப்பினும் தமிழாசியர்களுக்கு நல்ல வாழ்நிலை இல்லை என்பதால், அவர்களது ஊதியத்தை உயர்த்தித் தரக்கோரிப் போராடியவர். சம்பளத்தை உயர்த்தித்தராவிட்டால் ஆசிரியர்களைக் கூட்டி “இழவுவாரம்” அனுசரிப்பேன் என்று சவால் விட்டதை அடுத்து சம்பளத்தை உயர்த்தித்தர அமைச்சர் இசைகிறார். இவரது மிகச் சிறந்த ஆளுமையைக் குறிக்கும் ஒரு நிகழ்வு.
இலட்சுமி காந்தன் கொலை வழக்கில் கலைவாணருக்கு நீதிமன்றத்தில் தண்டனை உறுதியாகிறது. அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியில் அப்பீல் செய்ய லண்டன் பிரிவியூ கவுன்சிலுக்குப் போகவேண்டும். கலைவாணர் மனைவி டி.ஏ.மதுரம், தரும்மாம்பாளிடம் முறையிடுகிறார். தருமாம்பாள் பலபேரைச் சந்தித்து, நிதி திரட்டி அப்பீல் செய்து விடுதலை பெற்றுத் தருகிறார்.
நீலாவதி அம்மையார்
திராவிட இயக்க ஏடுகளான திராவிடன், குடிஅரசு, ஊழியர் முதலிய பத்திரிகைகளில் தீவிரமான அரசியல் கருத்துக்களைப் பதிவு செய்தவர். இவருக்கும் இராமசுப்ரமணியனுக்கும் சாதி மறுப்புத் திருமணம் ஏற்பாடானது. திருமணத்தன்று பெரியார் திருமணத்தை மணமக்களே நடத்திக் கொள்ளுமாறு அறிவிக்கிறார். மணமக்கள் இருவரும் திருமண உறுதிமொழி ஏற்கிறார்கள். இவர்களது திருமணம் குறித்த விவாதத்தின் போதுதான் “பெண் ஏன் அடிமையானாள்?” நூல் எழுதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பல கருஞ்சட்டைப் பெண்களின் ஆளுமைத் திறனையும், போராட்ட குணத்தையும் பற்றித் தெளிவாக நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.
மலர் முகத்தம்மையார்
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் சிறைபட்டவர். “தெருவிளக்கு“ என்னும் இதழின் ஆசிரியரான வேலூர் மாணிக்கத்தின் துணைவியாரே தாமரைக்கண்ணி அம்மையார். இவர் வேலூரில் நடைபெற்ற தமிழ்ப்பெண்கள் மாநாட்டை தொடங்கி வைத்தவர். சிறந்த நாவலாசிரியர்.ஆங்கிலப் புலமை மிக்கவர்.
பொற்செல்வி
இளமுருகுவின் தந்தை, தாய் இருவரும் நீதிக்கட்சியில் இருந்தவர்கள். சுயமரியாதை இயக்கத்தின் சாதனைகள் பற்றி ஒருவர் கேட்டபோது பெரியார் பொற்செல்வி அவர்களை விளக்கமாக பதில் சொல்லச்சொல்லி இரசித்திருக்கிறார்.
சத்தியவாணிமுத்து அம்மையார்
கருஞ்சட்டைப் பெண்களில் சிறந்த ஆளுமையாகத் திகழ்ந்த சத்தியவாணி முத்து அம்மையார். இவர் உலகம் முழுவதும் உள்ள பெண்கள் இயக்கங்களின் வரலாற்றைத் தொகுத்து உரையாற்றியவர். “அன்னை” என்னும் இதழின் ஆசிரியர். குலக்கல்வித் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் நிறைமாத கர்ப்பிணியாகப் பங்கெடுத்தவர். 1967 இல் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றவர்.
மஞ்சுளாபாய்
கணவனை இழந்த இவர், பெரியாரின் முதன்மைத் தொண்டராக அவர் செல்லுமிடங்களுக் கெல்லாம் உடன் சென்றவர். பெரியார் இவருக்கும் கானாடுகாத்தான் வை.சு.சண்முகம் என்பவருக்கு சாதிமறுப்பு மற்றும் விதவைத் திருமணத்தை நடத்தி வைக்கிறார். இணையர்கள் இருவரும் வாழ்நாள் முழுவதும் இவ்வாறான திருமணங்களை நடத்தி வைப்பதையே தங்களது பணியாக ஏற்றுக் கொண்டனர்.
மிராண்டா கஜேந்திரன் - பரிபூரணத் தம்மையார்
திராவிடர் கழகப் பேச்சாளர்களில் சிறப்பான இடம் பெற்றவர். 29.04.45 இல் திராவிடர் கழக மாநாட்டில் கொடிஏற்றி வைத்து, முதன்முதலாக “அடைந்தால் திராவிட நாடு,இல்லையேல் இடுகாடு” என்னும் முழக்கத்தை முன் வைத்தவர்.இரெ.இலட்சுமி அம்மையார். 1957-ல் சட்ட எரிப்புக் கிளர்ச்சியில் 3 மாதக் கடுங்காவல் தண்டனையும், 1960-ல் தேசப்பட எரிப்புப் போரில் ஒன்றரை மாதச் சிறைத் தண்டனையும் அஞ்சாமல் ஏற்றவர். பெரியாரால் இவருக்கு நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு. அதேபோல் பரிபூரணத் தம்மையாரும் சாதிஒழிப்பு சட்ட எரிப்புக் கிளர்ச்சியில் 6 மாதச் சிறைத்தண்டனை பெற்றவர்.
சிவகாமி அம்மையார் - அலமேலு அம்மையார்
பெரியாரின் வாழ்க்கை வரலாற்று நூலான “தமிழர் தலைவர்” என்னும் நூலை எழுதிய சாமி சிதம்பரனாரின் துணைவியாராகிய சிவகாமி அம்மையார் மிகத் திறமையான எழுத்தாளரும், பேச்சாளரும் ஆவார். தன்னுடைய கணவரின் நூல்களை வெளிக்கொண்டு வந்து பதிப்பாசிரியராகவும் செயல்பட்டவர். பன்மொழிப் புலவர் அப்பாதுரையாரின் துணைவியார் அலமேலு அப்பாதுரையார் இந்தி எதிர்ப்புப் போரில் சிறை சென்றவர்.
அன்னை மணியம்மையார்
மணியம்மையார் அளவுக்கு ஒரு மிகப்பெரிய வசவுச் சொற்களை, அபவாதத்தைச் சந்தித்த ஒரு பெண் தலைவர் எந்த இயக்கத்திலும் இருக்க முடியாது. திருமணம் குறித்து அம்மாவின் கருத்துக்களை நாம் கட்டாயம் தெரிந்து கொள்ளவேண்டும் என்கிறார் ஓவியா. அதாவது,
“சமையல் வேலைக்கும் குடும்ப நிர்வாகத்திற்கும் என்று படித்த பெண்களைக் கல்யாணம் செய்வார்களேயானால் கண்டிப்பாக படித்த பெண்கள் கல்யாணத்தை மறுத்துவிட வேண்டும்”
என்று கூறுகிறார் மணியம்மையார். அதற்கும் மேலாக பெற்றோர் கட்டாயப்படுத்தினால் பெண்கள் வீட்டைவிட்டு வெளியேறிவிட வேண்டும் என 1944 இல் மணியம்மையார் எழுதுகிறார். நாம் படிப்பது நல்ல அடிமைகளாக வாழ்வதற்கோ அல்லது மேன்மையும், விடுதலையும் பெறவா? என்று கேட்கிறார், அன்னை மணியம்மையார்.
ஓர் எழுத்தாளராக, போராளியாக பொது வாழ்க்கைக்கு வந்த மணியம்மையார் எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு, பெரியாரைக் கவனித்துப் கொள்வதையே தனது முழுநேரப் பணியாக மாற்றிக் கொண்டார். அதை அவரே “பெரியாரை சிறு குழந்தையாகவே என் மனதில் இருத்தி அக்குழந்தைக்கு ஊறுநேரா வண்ணம் பாதுகாப்பதிலேயே மகிழ்ச்சி கொண்டேன்” என்கிறார்.
அறிஞர் அண்ணா தலைமையில் பிரிந்து சென்றவர்கள், பிளவுக்குக் காரணமாக, பெரியார் மணியம்மை திருமணத்தை முன்வைத்தபோதும், மிகப்பெரும் பாதிப்புக்கும் அவமானத்திற்கும் ஆளானார் மணியம்மையார்.
சாதியைப் பாதுகாக்கும் சட்டப் பிரிவுகளை எரிக்கும் போராட்டத்தில் பெரியார் உட்பட 3000 பேருக்கு மேல் சிறை வைக்கப்படுகிறார்கள். சிறையிலிருக்கும் போதே மணல்மேடு வெள்ளைச்சாமி, பட்டுக்கோட்டை இராமசாமி உள்ளிட்ட மூன்று தோழர்கள் இறந்து போகிறார்கள். அதில் மணல்மேடு வெள்ளைச்சாமியின் உடலை உறவினரிடம் ஒப்படைக்காமல் சிறையிலேயே புதைத்து விடுகிறார்கள். அப்போது களத்தில் இறங்கிய மணியம்மையார், முதல்வர் மற்றும் அமைச்சர்களை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்ததோடு, உடல்களை வாங்காமல் ஓயமாட்டோம் என்று போராட்டம் நடத்தி உடல்களைப் பெற்றதோடு மட்டுமில்லாமல், ஊருக்குள் ஊர்வலமாக உடல்களை எடுத்துச் செல்லக் கூடாது என்று, அரசு அனுமதி மறுத்தபோது, அரசை மீறி ஊருக்குள் ஊர்வலத்தை வெற்றிகரமாக நடத்திக் காட்டியவர்.
1973 இல் பெரியாரின் மறைவுக்குப்பின் இயக்கத்தின் பொறுப்பு மணியம்மையாருக்கு வருகிறது. இது எப்படிப்பட்ட பொறுப்பு என்றால், ஒரு முழுமையான கலாச்சார எதிர்ப்பு, ஆளும் அடக்குமுறை ஆட்சிக்கு எதிரான இயக்கத்திற்கு ஒரு பெண் தலைவராக வந்தார் என்பதே வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய சாதனை என்று குறிப்பிடுகிறார் தோழர் ஓவியா.
தலைமைப் பொறுப்பேற்ற அடுத்த ஆண்டிலேயே இராவண லீலாவை அறிவிக்கிறார் மணியம்மையார். அது குறித்து, நீங்கள் இராமலீலா நடத்துவது தென்னாட்டவராகிய எங்களை புண்படுத்துகிறது. நாம் அனைவரும் ஒரே நாட்டவர் என்றால் நீங்கள் இராமலீலா நடத்தக்கூடாது என்று பிரதமருக்கும், குடியரசுத் தலைவருக்கும் மடல் எழுதுகிறார்.
இதற்கு அவர்கள் பதில் தரவில்லை. இராமலீலா நடப்பதற்கு ஆதரவான செய்திகளே வந்து கொண்டிருக்கின்றன. அதையடுத்து பெரியார் நினைவு நாளான டிசம்பர் 24-க்கு அடுத்த நாள் இராவணலீலா நடத்தப்படும் என்று அறிவிக்கிறார். அதைக் கேள்விப்பட்ட பிரதமர் இந்திரா காந்தி மணியம்மையாருக்கு பதில் அனுப்புகிறார். இராமயணம் ஆரிய, திராவிடப்போர் என்பதெல்லாம் கிடையாது,எனவே இராவணலீலா நடத்தக்கூடாது என்று கூறுகிறார்.
இராவணலீலாவுக்கு முந்தையநாள் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கைது செய்யப்படுகிறார். இந்தியாவே திரும்பிப் பார்த்த ஒரு நிகழ்வாக இராவணலீலாவை முன்னெடுத்து மிக வெற்றிகரமாக நடத்திக் காட்டியவர் அன்னை மணியம்மையார். அதேபோல் நெருக்கடி நிலை காலத்தில், வருமான வரித்துறையின் தாக்குதல் ஒருபுறமும், அரசின் ஒடுக்குமுறை மறுபுறம் என இருவழி ஒடுக்குமுறைகளை எதிர்த்து நின்று வழிநடத்திய தலைமைப் பண்பாளர் அவர். ஒரு பக்கம் போர்க்குணமிக்க தலைவரக இருந்த அதே நேரத்தில் பல நிறுவனங்களை உருவாக்கி சொத்துக்களை நிர்வகிக்கக்கூடிய தனித்திறன் பெற்றவராகவும் இருந்திருக்கிறார்.
அன்னை மணியம்மையாருக்குப் பின் இந்நூல் பயணிக்கவில்லை என்று குறிப்பிடுகிறார் நூலாசிரியர் ஓவியா. எனவே ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம் அம்மையார், திருமகள் இறையன், வெள்ளக்கோயில் இரங்கநாயகி அம்மாள், தங்கமணி குணசீலன், பார்வதி கணேசன், மீரா ஜெகதீசன், வழக்கறிஞர் அருள்மொழி, பேராசிரியர் சரசுவதி ஆகியோரைப் பற்றி இந்நூல் விவரிக்கவில்லை என்றும், “இந்நூலின் இரண்டாம் பதிப்பிலோ, அல்லது தனித் தொகுதியாகவோ அவர்களைப் பற்றி விரிவாகப் பதிவு செய்யவேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார். “வீரஞ் செறிந்த போராட்டத்தை முன்னெடுத்த நமது திராவிட இயக்கப் பெண்களின் பெயர்கள் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டும்” என்ற தனது ஆவலையும் பதிவு செய்துள்ளார்.
இந்நூலில் கருஞ்சட்டைப் பெண்கள் எவ்வாறெல்லாம், களத்தில் இறங்கிச் செயல் பட்டார்கள் என்றும், அதுவும் அவர்கள் சுயநலத்திற் காகவோ, பெரிய பதவிகளை அடைவதற்காகவோ அல்லாமல் சமுதாயத்தில் சிறந்த மாற்றங்களை ஏற்படுத்தி மக்களை பகுத்தறிவுவாதிகளாக மாற்றுவதற்காக செயல்பட்டவர்கள் என்பதையும் விரிவாக எடுத்துரைத்திருக்கிறார் தோழர் ஓவியா. .இன்றைய இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டிய சிறந்த வரலாற்றுப் பதிவு இந்நூல்.
நூல் கிடைக்குமிடம்: கருஞ்சட்டைப் பதிப்பகம், 122 / 130 என்.டி.ஆர். சாலை, அரங்கராசபுரம், சென்னை - 600024