தலைவர்களே, தாய்மார்களே, தோழர்களே!
இன்று மாதர் சங்கத்தை இக்கல்வி நிலையத்தின் சார்பாக திறந்து வைக்கும் பெருமை எனக்கு அளித்தற்கு நன்றி செலுத்து கிறேன். மாதர் சங்கமென்பது ஒவ்வொரு ஊரிலும் தனியாக ஒன்று இருக்கவேண்டியது அவசியமாகும். நம் நாட்டு மாதர்களுக்கு செய்ய வேண்டிய நலன்களுக்கு மாதர்கள் ஆண்களையே எதிர்பார்க்கிறார்கள். ஆண்கள் தங்கள் அடிமைகளுக்கு எவ்வளவு நன்மை செய்ய முடியும்? தங்களுக்கு நல்ல அடிமையாய் இருப்பதற்கு ஏற்ற நன்மைதான் செய்ய முடியும்.
ஆதனால்தான் இந்த 20 ஆம் நூற்றாண்டிலும் மற்ற நாட்டு பெண்மணிகள் ஆகாயக் கப்பல் விடவும், பட்டாளத்தில் சேவிக்கவும், கல்வி மந்திரியாகவும் இருக்கவும் ஆன நிலை ஏற்பட்டும் நம் நாட்டு நிலை ஆண்களுக்கு வாய் ருசிக்க சமைப்பதும் மெய் சிலிர்க்க கொஞ்சுவதுமான நிலை இருந்து வருகிறது. நம் நாட்டுப் பெண்மணிகளின் திறமையெல்லாம் ஆண்கள் மெச்சும்படி, ஆசை கொள்ளும்படி அலங்கரித்துக் கொள்ளவும், தங்கள் ஆண்களுக்கு கடைமைப்பட்டு நன்றி செலுத்தும்படி விலை உயர்ந்த நகைகளும், புடவைகளும் அணிந்துகொள்ளவுமே ஆகிவிட்டது.
பெண்கள் படிப்பு விசயம்கூட நம்நாட்டு பெண்களுக்கு படிப்பு தேவையில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. ஏனெனில் படித்த பெண்கள் என்ன செய்கிறார்கள் ? பெரும்பாலும் சமையல் தான் செய்கிறார்கள். ஆகவே “அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு?” என்பது நியாமான பேச்சேயாகும். சமையல் செய்யத் தகுந்தபடியே தங்கள் பெண்களைப் பயன்படுத்தும் பெண்களுக்கு பெற்றோர்கள் அதிகப் படிப்பளிப்பது நாட்டின் செல்வம், நேரம், ஊக்கம் பாழ் செய்யப்படுவதாகும்.
ஆதலால், பெற்றோர்களே தெரியாமல் கல்வி கொடுத்து விட்டாலும் கல்வி கற்ற பெண்கள் கண்டிப்பாய் சமையல் வேலைக்குப் போகக்கூடாது. சமையல் வேலைக்கும் குடும்ப நிர்வாகத்திற்கும் என்று மாத்திரம் பயன்படுத்த பெற்றோர்கள் கல்யாணம் செய்வார்களானால் கண்டிப்பாய் படித்த பெண்கள் கல்யாணத்தை மறுத்து விட வேண்டும். பெற்றோர்கள் கட்டாயப் படுத்தினால் பெண்கள் வீட்டை விட்டு வெளியேறிவிட வேண்டும்.
நாம் படிப்பது அடிமையாகவா அல்லது மேன்மையும் விடுதலையும் பெறவா யோசியுங்கள். 10 பெண்களாவது ஓடினால்தான் பெற்றோர்கள் நன்றாக நடத்துவார்கள். ஆதலால், பெண்கள் சுதந்திரத்திற்காகப் படிக்க வேண்டும்.படித்த பெண்கள் அடிமையாகக் கூடாது. இதற்கு மாதர் சங்கம் பயன்பட வேண்டும்.என்று சொல்லி இச்சங்கத்தைத் திறந்து வைக்கிறேன். - குடி அரசு 19.08.1944
வடநாட்டு சுரண்டல் ஒழிப்பு போர்! பெண்களுக்கு அழைப்பு
சென்னையில் நடைபெறுகிற வடநாட்டுச் சுரண்டல் தடுப்பு மறியலிலே இவ்வட்டார மக்கள் பெரும் பங்கு கொண்டு, பெருவாரியாகச் சிறைக்குச் சென்றிருக்கிறார்கள். அதற்கு நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆனாலும் இத்தகைய போராட்டத்திற்கு நாட்டு விடுதலைக்கான நல்லதொரு கிளர்ச்சிக்கு ஆண்கள்தான் முன்வந்தார்களே தவிர, தாய்மார்கள் யாரும் இந்த வட்டாரத்திலிருந்து இன்னும் வரவில்லை.
இதிலே சேலம் மாவட்டம் தான் முதல் பரிசு பெற்றது. அங்கிருந்து தாய்மார்கள் குடும்பத்துடன் போந்து மறியல் செய்து சிறையேகினார்கள். எனவே, இந்த வட்டாரத்து அருமைத் மாய்மார்களும் போராட்டக் கிளர்ச்சியிலே ஈடுபட்டுத் தியாகிகள் பட்டியலிலே தங்களது பெயரையும் சேரும்படிச் செய்ய வேண்டும். - விடுதலை, 25.03.1951.