கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

தந்தை பெரியார் 17.09.1879இல் பிறந்தார். அவர் 140ஆம் பிறந்த நாள் 17.9.2018 திங்கள் அன்று வருகிறது.

periyyar 450அவரைப் பின்பற்றும் தொண்டர்களும் எல்லாத் தமிழர்களும் இந்தியாவிலுள்ள ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் அனைவரும் ஏதேனும் ஒரு வகையில் அவருடைய கொள்கைகளால்-உழைப்பால் -தொடர்ந்து அவர் நடத்திய போராட்டங்களால் பயன் பெற்றுள்ளனர்.

1919 ஆகத்துக்குப் பிறகு இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினரானார். “காங்கிரசு பதவி ஏற்கும் காலத்தில், 100 அரசு வேலைகளில் 50 வேலைகளைப் பார்ப்பனரல்லாதாருக்கு ஒதுக்கித் தரும் என்கிற உறுதிமொழியைக் காங்கிரசு ஏற்கவேண்டும்” என 1919 முதல் 1925 வரை போராடினார்.

அவர் இயல்பிலேயே எந்தக் கொள்கையை ஏற்றுக்கொண்டாலும், அக் கொள்கையில் முழுமையாகத் தம்மை ஈடுபடுத்திக் கொள்வார். தம் துணை வியார் நாகம்மையாரையும் ஈடுபடுத்திக் கொண்டார்.

காட்டாக, 1921 செப்டம்பர் 25 காலை 6 மணிக்கு, காந்தியார் ஈரோட்டுக்கு வந்து அவர்தம் இல்லத்தில் மாடியில் தங்கினார். அங்கு ஈ.வெ.ரா. மற்றும் முதன்மையானவர்களுடன்கள் ஒழிப்பு, கதர் பரப்புப் பற்றிக் கலந்துரையாடினார். இந்த இரண்டு கொள்கை களிலும் தம்மை 1921 நவம்பர் முதல் ஈடுபடுத்திக் கொண்டார், ஈ.வெ.ரா.

தாம் பட்டு வேட்டி உடுத்துவதைக் கைவிட்டுக் கதரை அணிந்தார். நம் தாயார், தங்கைகள், துணைவியார் ஆகியோரைக் கதர் சேலை உடுத்தச் செய்தார்.

15.11.1921இல் ஈ.வெ.ரா., நாகம்மையார், ஈ.வெ.ரா.வின் தங்கை கண்ணம்மாள் மற்றும் 100 பெண்களை அழைத்துக் கொண்டு, ஈரோட்டில் கள்ளுக்கடையில் மறியல் செய்தார். எல்லோரும் ஒரு மாதம் வெறுங்காவல் தண்டனை அடைந் தனர். இது இந்தியாவில் முதன்முதலாக நடந்த போராட்டம்.

அடுத்து, காந்தியாரின் நிர்மாணத் திட்டங்களுள் தீண்டாமை ஒழிப்பு முதன்மையானது.

தீண்டாமை என்பது தென்னகத்திலும் மற்ற மாகாணங்களிலும் “தொட்டால் தீட்டு” என்கிற வடிவில் மட்டும் இருந்தது.

ஆனால் திருவிதாங்கூர் அரசில் வாழ்ந்த தீண்டப்படாதார் காணாமை, அண்டாமை, தீண்டாமை என்கிற பேரால் இழிவுபடுத்தப்பட்டனர்.

அதேபோல் தமிழகத்திலும் தென்பகுதியில் நாடார், சாணார், தீண்டப்படாத வராக நடத்தப்பட்டனர். தமிழகத்தில் காங்கிரசுக் கட்சி அத்தகைய தீண்டா மையை ஒழிக்கப் போராட வேண்டுமென, 1922இல் திருப்பூர் தமிழ்மாகாண காங்கிரசு மாநாட்டில் ஈ.வெ.ரா.வும், பி. வரதராசலு நாயுடுவும் இணைந்து தீர்மானம் முன்மொழிந்தனர். அதை காங்கிரசு ஏற்கவில்லை. தீண்டாமை ஒழிப்புக் கொள்கைக்கு இடைவிடாது பரப்புரை செய்து, மக்கள் ஆதரவைத் திரட்டினார்.

அந்த நேரம் கேரளாவில், வழக்கறிஞர் மாதவன், பி.ஏ., பி.எல்., என்கிற ஈழவர், திருவாங்கூர் அரண்மனையில் விழாப் பந்தலுக்குள் அடங்கிய நீதிமன்றத்துக்கு வழக்காடப் போகக்கூடாது எனத் தடுக்கப்பட்டார். இதை எதிர்த்துப் போராட கேரள மாநில காங்கிரசு 1922இல் முடிவெடுத்தது.

போராட்டக் களமாக வைக்கம் என்ற ஊர் தேர்வு செய்யப்பட்டது. வைக்கத்தப்பன் கோவிலைச் சுற்றிலும் உள்ள நான்குபுறச் சாலைகளிலும் தீண்டப்படாதார் யாரும் நடக்கக் கூடாது என அரசு ஆணை இருந்தது.

அதை எதிர்த்து 30.3.1924இல் கேரள மாகாண காங்கிரசு சார்பில், காங்கிரசுத் தலைவர்கள் பாரிஸ்டர் மேனன், கேசவ மேனன், ஜார்ஜ் ஜோசப் முதலானோர் முதல் நாள் கைதாயினர். அடுத்து வந்த 19 பேரும் ஒரு நாளைக்கு ஒருவர் வீதம் கைது செய்யப்பட்டனர்.

4.4.1924 வரை போராட்டத்துக்கு அதிகம்ஆள் அங்கு வரவில்லை.

குரூர் கே. நீலகண்டன் நம்பூத்ரி பாத், 4.4.1924இல் ஈரோட்டுக்கு ஈ.வெ.ராவுக்கு, அனுப்பிய தந்தியில், “14.4.1924இல் ஆசிரமத்தில் நடைபெற உள்ள ஆலோ சனைக் கூட்டத்தில் தாங்கள் கட்டாயம் பங்கு பெற வேண்டும்” எனக் கண்டிருந்தது.

13.4.1924இல், “நான் இன்று மெயிலில் வருவ தாகவும், திருச்சூரில் என்னை நம்பூத்ரிபாத் சந்திக் கும்படியும்” தந்தி கொடுத்தேன் என ஈ.வெ.ரா. நம்பூத்ரி பாத்துக்குச் செய்தி அனுப்பினார்.

“13.4.1924 பத்திரிகைகளுக்கு அறிக்கை கொடுத் தேன்; சி. இராசகோபாலாச்சாரியாருக்கும் எழுதினேன். உடனே கேரளாவுக்குப் புறப்பட்டேன்” என ஈ.வெ.ரா. மேலும் குறிப்பிட்டுள்ளார். ஏன்?

14.4.1924 காலை வைக்கம் படகுத் துறையை அடைந்த ஈ.வெ.ரா. திருவிதாங்கூர் அரசு சார்பில் மேள தாளத்துடன் வரவேற்கப்பட்டார்.

திருவிதாங்கூர் அரசரும், அவருடைய பரிவாரங்களும் ஈரோட்டில், ஈ.வெ.ரா.வின் சிங்க மெத்தை வீட்டிலும் அரசரின் பரிவாரங்கள் வெங்கட்ட நாயக்கர் சத்தி ரத்திலும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் தங்கி யிருந்தனர். புதுதில்லிக்குப் போகும் போதெல்லாம் அரசர் அப்படித் தங்குவார். அதனால், அரசரை ஈ.வெ.ரா. நன்கு அறிவார்.

“நான் திருவிதாங்கூர் அரசை எதிர்த்துப் போராட வந்திருக்கிறேன். அரசருக்கு நன்றி கூறுங்கள்” என்று கூறி விட்டு, நேரே சத்தியாகிரக ஆசிரமத்துக்குப் புறப்பட்டார்.

சத்தியாகிரக ஆசிரமம் படகுத்துறையிலிருந்து 4 பர்லாங்கு தொலைவிலுள்ளது.

15.4.1924 முதல் அன்றாடம் மாலையில் ஈ.வெ.ரா. படகுத் துறையில் விரிவாகப் பேசினார். சுற்றுப்புற ஊர்களிலும் ஈ.வெ.ரா. தீண்டாமை பற்றி காரசாரமாகப் பேசினார்.

“தீண்டப்படாத வகுப்பு மக்கள் பொதுச் சாலைகளில் நடக்கக் கூடாது. மீறி அந்தச் சாலைகளில் அவர்களை நடந்து போகத் தூண்டினார்” என்று ஈ.வெ.ரா. பேரில் குற்றஞ்சாட்டினர்; வழக்குப் போட்டனர்.

நீதிமன்றத்தில் ஈ.வெ.ரா. ஒரு வாக்கு மூலம் மட்டும் அளித்தார்.

28.4.1924 அவர் பேசிய பேச்சு சட்டத்துக்கு விரோதமானது என்ற காரணத்தால், 22.5.1924இல் ஈ.வெ.ரா.வுக்கு ஒரு மாதம் வெறுங்காவல் தண்டனை விதித்து, அருவிக்குத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.

இத்தண்டனை முடிந்து 21.6.1925இல் விடுதலை யான ஈ.வெ.ரா. ஊர்வலமாக ஆசிரமத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சிறையிலிருந்து விடுதலையான ஈ.வெ.ரா., கோவை அய்யாமுத்து ஆகியோர் கோட்டையம் மாவட்டத்தில் பேசக்கூடாது எனத் தடை விதிக்கப்பட்டது.

சிறையிலிருந்து விடுதலையான ஈ.வெ.ரா. 6.7.1924 இல் “தி இந்து” (The Hindu) ஆங்கில நாளேட்டுக்கு ஓர் அறிக்கை எழுதினார். அது 7.7.1924இல் வெளி யிடப்பட்டது.

அந்த அறிக்கை தான் வைக்கம் போராட்டத்தை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றது.

சிறந்த தூண்டுதல்களாக, 6.7.1924 அன்று “The Hindu” “சுதேசமித்திரன்” நாளேடுகளில் ஈழவ மக்களுக்கு ஈ.வெ.ரா. விடுத்த வேண்டுகோளும், 1.10.1924 கூட் டத்தில் ஸ்ரீநாராயண குரு ஓராயிரம் நன்கொடை வழங்கியதுடன், தேவை ஏற்பட்டால் தானே கிளர்ச்சி யில் பங்கேற்றிடவும் உறுதி கூறியதும், திருவாங்கூர் பகுதியில் பெண்களிடையே கிளர்ச்சி பற்றிப் பேசி அநேகரைப் பங்கேற்க வைத்த ஈ.வெ.ரா. நாகம்மை யாரின் பங்களிப்பும் வைக்கம் கிளர்ச்சி வரலாற்றில் முதன்மை இடம் பெற்றவையாகும்!

“கேரளாவில் ஏழு இலட்சம் ஈழவர்கள் இருக்கிறீர்கள், உடனே நீங்கள் முன்வந்து இந்தப் போராட்டத்தைக் கையில் எடுக்க வேண்டும். ஒரு நாளைக்கு நூறு தொண்டர்கள் வேண்டும்; எல்லாச் செலவுகளுக்கும் ஒரு நாளைக்கு ரூ.100 வேண்டும். அரசரின் பரிவா ரங்கள் எல்லோரையும் கைது செய்யத் தொடங்கினால் அதிக எண்ணிக்கையில், தொண்டர்கள் வரவேண்டும்” என, ஈழவர்களுக்கு உணர்ச்சி வரும்படி அந்த அறிக்கை அமைந்தது.

இதன் பயன் என்ன?

அன்றாடம் இருமுடி, மும்முடி எனத் தேங்காய்களும், வீடுதோறும் பெற்ற பிடி அரிசியும், காய்கறிகளும் மலைபோல் சத்தியாகிரக ஆசிரமத்தில் குவிந்தன.

ஈழவ வகுப்பு ஆண்களும் பெண்களும் தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தில் குதித்தனர்.

கோவிந்தன் சாணார் மனைவி மற்றும் ஈ.வெ.ரா. நாகம்மாள், எம். எம்பெருமாள் நாயுடு மனைவி கோவில் மேலண்டை வாயிலில் போராடினார்.

1924 மே, சூன், சூலை, ஆகஸ்டு, நவம்பர் மாதங் களில் நல்ல மழை பெய்தது. கழுத்தளவு வெள்ளத்தில், 3 மணி நேரத்துக்கு ஒருவர் வீதம், மறியல் போராட் டத்தில் பங்கேற்றனர்.

சூலை, ஆகஸ்டில் பெருமழை பெய்தது. ஆண், பெண் சத்தியாகிரகிகள் கழுத்தளவு தண்ணீரிலும் சத்தியா கிரகம் செய்தனர்.

கோவிந்தன் சாணாரின் மகனான இராகவன் - அநேகம் பேரின் உயிரைக் காப்பாற்றினவர் - ஒருவரை மீட்கப் போய் அவரால் மாண்டார். அவர் மெட்ரிகுலேஷன் படித்தவர். நிற்க.

நானும், அப்போது (1978இல்) அங்கே இரயில் வேயில் பணியாற்றிய திருச்சி உறையூர் மு. நரசிம்மனும், கோட்டையத்தில் 21.12.1978இல், கேரள முன்னாள் அமைச்சர் வி.மாதவன் (82) அவர்களைச் சந்தித்தோம். 1924இல் அவர் சட்டக் கல்லூரி மாணவர். அவர் நாள்தோறும் வைக்கம் படகுத் துறையில், ஈ.வெ.ரா. பேச்சைக் கேட்டவர். முதுமையிலும் எழுந்து நின்று அப்படியே பேசிக்காட்டினார்.

அடுத்து கோட்டையத்தில், கோபாலன் தந்திரி என்பவரை (82) 22.12.1978 காலை 11 மணிக்குப் பார்த்தோம். அவர் 1924இல் சத்தியாகிரகத் தொண்டர். அவரும் ஈ.வெ.ரா.வின் பேச்சை அப்படியே நடித்துக் காண்பித்தார்.

தீண்டப்படாத கீழ்ச்சாதி மக்களைப் பார்த்து, “உங்களுக்கு மானம், ரோசம் இல்லையா? என்றும்; வைக்கத்தப்பன் வெறுங்கல் என்றும், நீங்கள் அதைக் குப்புறப் போட்டுத் துணி துவைக்க வேண்டாமா?” என்றும் பேசி, மக்களுக்கு அறிவு கொளுத்தினார்.

ஈ.வெ.ரா. நாகம்மையாரையும் கண்ணம்மாளையும் உடனழைத்துக் கொண்டு தனியே பெண்கள் கூட்டத்தில் பேசி அவர்களிடம் விழிப்பை உண்டாக்கினார்.

ஈ.வெ.ரா. பேரிலான இரண்டாவது, வழக்கு 27.7.1924இல் உசாவப்பட்டு, 4 மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

கோட்டையத்திலிருந்து திருவனந்தபுரத்துக்குக் கால் நடையாகவே அழைத்துச் செல்லப்பட்டார் (“சுதேசமித்திரன்”, 28.8.1924).

ஸ்ரீமான் சி. இராசகோபாலாச்சாரியார் பின்வருமாறு எழுதுகிறார்.

“இப்பொழுது திருவனந்தபுரம் சிறையிலிருக்கும் சத்தியாகிரகக் கைதியான ஸ்ரீமான் ராமசாமி நாயக் கரை உணவு, இடவசதி முதலிய விஷயங்களில் சாமானியக் கைதிகளைப் போல் நடத்துவதாக நம்பத் தகுந்த இடத்திலிருந்து எனக்குச் செய்தி கிடைத்திருக் கிறது. அவர் சிறை உடைகளை அணிகிறார். காலில் இரும்பு வளையம் போட்டிருக்கிறது. மற்ற சத்தியாகிரகி களிடமிருந்து பிரித்துத் தொலைவில் ஒரு தனி அறையில் அடைத்திருக்கிறார்கள். ஆயினும் ஸ்ரீமான் நாயக்கர் உற்சாகத்துடன் இருந்து வருகிறார் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. அவருடன் நான் நெருங்கிப் பழகியிருப்பதால் அவரை நன்கு அறிவேன். அவர் செல்வத்தையும், அந்தஸ்த்தையும் துறந்து சங்கடங்களை ஏற்றுக்கொண்ட தீரபுருஷர்...” (“சுதேச மித்திரன்”,  28.8.1924).

இந்நிலையில், அரசுக்கெதிராகப் போராடுபவர்கள் சாகவேண்டும் என்று கருதி, 1924 சூலையில் அரசர் சத்துரு சம்ஹாரயாகம் நடத்தினார். ஆனால் நோய் வாய்ப்பட்டிருந்த அரசர் 7.8.1924 இரவு இறந்துவிட்டார்.

உடனே சேது லட்சுமிபாய் மகாராணி பட்டத்திற்கு வந்தார். இராணி பட்டத்திற்கு வந்ததை ஒட்டி, ஈ.வெ.ரா., ஜார்ஜ் ஜோசப் மற்றும் பலர் விடுதலை செய்யப்பட்டனர். இதனை முன்வைத்தே வைக்கம் கிளர்ச்சியில் சிறை வைக்கப்பட்ட தலைவர்கள், தொண்டர்கள் எல்லோரும் விடுதலை செய்யப்பட்டனர்.

இனி, வைக்கம் சத்தியாகிரகம் முடிவுக்கு வந்தது.

இராணி அரசில் இருந்த ஒரு முக்கியமான பார்ப்பனர் சத்தியாகிரக வெற்றியின் பெருமை ஈ.வெ.ரா.வுக்குக் கிடைக்கக் கூடாது எனத் திட்டமிட்டு, உடனே இராஜாஜிக்கு எழுதி, காந்தியார் வந்து இராணியுடன் பேச வேண்டும் என்று கோரி எழுதினார். அதன்படி, இராஜாஜி காந்தியாருக்கு எழுதியபடி, 9.3.1925 மாலை வைக்கத்துக்கு வந்தார், காந்தி.

காந்தி, 12.3.1925 முற்பகல் இராணியைச் சந்தித்து விட்டு, மாலை 4 மணிக்கு சிவகிரிக்கு அருகிலுள்ள கோவிந்தன் சாணார் இல்லமான காந்தி ஆசிரமத்தில் தங்கியிருந்த ஸ்ரீநாராயண குரு, சி. இராஜகோபாலாச் சாரி, வ.வே.சு. அய்யர், ஈ.வெ.ரா. ஆகியோரைச் சந்தித்தார்.

அங்கு, ஈ.வெ.ரா.விடம், தனியே, “இராணி பொதுச் சாலைகளைத் திறந்து விடுவதாகச் சொல்கிறார். நீர் என்ன சொல்கிறீர்” என, காந்தி கேட்டார்.

“கோவில் நுழைவுதான் தங்களுடைய அடுத்த வேலைத் திட்டம் என்றும், இப்போது அவ்வேலைத் திட்டம் இல்லையென்றும் இராணியிடம் கூறிவிடும் படி” ஈ.வெ.ரா., காந்தியாரிடம் கூறினார்.

பொதுச்சாலைகளில் அமைக்கப்பட்டிருந்த தீண்டாமை அறிவிப்புப் பலகைகளும் தடுப்புக் கட்டுமானங்களும் காவல் துறையினரால் உடனே நீக்கப்பட்டதாகக் காவல் துறை ஆணையர் பிட் (Pitt) அறிவித்தார்.

வைக்கம் கிளர்ச்சியின் முடிவு என்ன?

கிழக்குச் சாலையுடன் இணைப்பதற்குத் தெற் கிலிருந்தும், வடக்கிலிருந்தும் வரும் கொஞ்ச நீள முள்ள இரண்டு சந்துகள் தவிர்த்து, வைக்கம் கோவிலைச் சுற்றிலும் உள்ள எல்லாச் சாலை களும் எந்த வேறுபாடும் இன்றி எல்லாச் சாதி களைச் சார்ந்த மக்களுக்கும் திறந்துவிடப் பட்டுள்ளன.

இதுவே வைக்கம் போராட்டத்தின் மூலம் காணப்பட்ட வெற்றியின் உண்மையான தன்மையாகும்.

இந்த இடங்களை நான் 1978 திசம்பரிலும், அதன் பின்னரும் நேரில் பார்த்தேன்.

அதாவது வைக்கம் கோவிலைச் சுற்றிலும் நான்கு பொது வீதிகளிலும் எல்லா வகுப்பினரும் நடக்க உரிமை அளிக்கப்பட்டது. அதே நேரத்தில் கீழண்டை வாசலில் மட்டும், அவர்ணர்கள் (கீழ்ச்சாதியார்) நடப்பதற்கென்று தனியாக ஒரு சாலை அமைக்கப்பட்டு, 23.11.1925 முதல் அந்தத் தனி வழியே அவர்கள் செல்லத் தொடங் கினர்.

29.11.1925இல் வைக்கம் சத்தியாகிரக ஆசிரமத்தில் வெற்றி விழாக் கூட்டம் ஈ.வெ. இராமசாமி தலைமை யில் நடைபெற்றது.

சிறந்த உத்தி என்பது, வைக்கம் தீண்டாமை ஒழிப்புப் போராட்டம் 30.3.1924 முதல் 23.11.1925 முடிய 20 மாதங்கள் இடையீடு இன்றி நடத்தப் பட்டது என்பதே ஆகும்.

டாக்டர் அம்பேத்கர் வைக்கம் நிகழ்ச்சிகளை அப்போதே கூர்ந்து கவனித்தார். அவர் மகத் சத்தியாகிரகம் தொடங்க விருந்த போது, எழுதிய ஆசிரிய உரை ஒன்றில், வைக்கம் சத்தியாகிரகம் பற்றி நெஞ்சம் நெகிழ்ந்து அவர் எழுதினார்.

வைக்கம் சத்தியாகிரகம் இந்தியாவில் நடை பெற்ற முதலாவது தீண்டாமை ஒழிப்புப் போராட்டம் ஆகும்.

இதற்காகப் பெரும்பங்கு ஆற்றியோர் ஈ.வெ. இராமசாமி, ஈ.வெ.ரா. நாகம்மாள், கண்ணம் மாள், எஸ். இராமநாதன், கோவை அ. அய்யாமுத்து, எம். எம்பெருமாள் நாயுடு, அவர்தம் துணைவியார் மற்றும் பலர் ஆவர்.

வெல்க பெரியாரியம்!