முதலாளியம் தன் தேவைக்காகப் பொதுக்கல்வி முறையைக் கொண்டுவந்தது. இயந்திரங்களை இயக்கு வதற்குத் தொழிலாளர்களுக்குக் கல்வியைத் தரவேண்டிய தாயிற்று. அதற்கு முன்வரை உலகம் முழுவதும் கல்வி என்பது சிறு எண்ணிக்கையினராக இருந்த மேட்டுக்குடியினருக்கு மட்டுமே உரியதாக இருந்தது.

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியில் 1835இல் மெக்காலே கல்வித் திட்டம் பொதுக்கல்விக்கு வித்திட்டது. ‘எண்ணத்திலும் அறிவாற்றலிலும் கலாச்சாரத்திலும் ஆங்கிலேயராகவும், ஆனால் இரத்தத்திலும் நிறத்தி லும் இந்தியராகவும் இருப்போரை அரசு வேலைகளில் பணிசெய்வதற்கான ஆட்களாக உருவாக்குவதே’ மெக் காலே கல்வித் திட்டத்தின் நோக்கமாகும். அனைவருக் கும் கல்வி அளிக்க வேண்டும் என்பது ஆங்கிலேய அரசின் நோக்கம் அன்று.

1947இல் இந்தியா சுதந்தரம் பெற்ற போது, இந்தியாவில் 12 விழுக்காட்டினர் மட்டுமே எழுத்தறிவு பெற்றிருந்தனர். இவர்களில் 90 விழுக்காட்டினர் மேல் சாதியினர். சுதந்தர இந்தியாவுக்கான அரசியலமைப் புச் சட்டத்தை இயற்றிய போது அனைவருக்கும் கல்வி என்பது அடிப்படை உரிமை என்று விதி செய்யவில்லை. இந்துமத சாத்திரங்களின் பெயரால் காலங்காலமாக பெரும்பான்மையினராக உள்ள கீழ்ச்சாதி மக்களுக்குக் கல்வி உரிமையை மறுத்து வந்தமை தொடரவேண்டும் என நினைத்ததே இதற்குக் காரணமாகும்.

அரசமைப்புச் சட்டத்தில் “அரசு கொள்கைகள் வழிகாட்டும் நெறிகள்” பகுதியில் “இச்சட்டம் நடை முறைக்கு வந்தபின் பத்து ஆண்டுகளுக்குள் 14 அகவைக் குட்பட்டவர்களுக்குக் கட்டாய இலவயக் கல்வி தர அரசு முயலவேண்டும்” என்றுதான் எழுதப்பட்டது. நேரு தலை மையிலான நடுவண் அரசும், காங்கிரசுக் கட்சியின் கீழ் இருந்த மாநில அரசுகளும் இதைக்கூட நிறை வேற்றிட அக்கறை காட்டவில்லை.

அன்றைய சென்னை மாகாணத்தில் 1920 முதல் 1937 வரை ஆட்சியில் இருந்த நீதிக்கட்சி ஆட்சியில் இந்தியாவில் பிற மாகாணங்களில் இல்லாத அளவில் பள்ளிகள் தொடங்கப்பட்டன. 1937இல் சென்னை மாகாணத் தலைமை அமைச்சராக இராசகோபாலாச்சாரி ஆட்சியில் அமர்ந்ததும், 2200 தொடக்கப் பள்ளிகளை மூடினார். மீண்டும் 1952இல் முதலமைச்சராக வந்த போது 6000 பள்ளிகளை மூடினார். மேலும் குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தார். பெரியார் ஈ.வெ. இராம சாமியும் மற்றவர்களும் இதைக் கடுமையாக எதிர்த் தனர். இராசாசி பதவி விலகினார்.

காமராசர் 1954 ஏப்பிரலில் முதலமைச்சர் ஆனார். காமராசர் ஆட்சியில் (1954-1963) ஏராளமான தொடக் கப் பள்ளிகளும், உயர்நிலைப் பள்ளிகளும் தொடங்கப் பட்டன. அப்போது எஸ்.எஸ்.எல்.சி. எனப்பட்ட உயர் நிலைப் பள்ளி வரை தமிழே பயிற்று மொழியாக இருந்தது. அதனால் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பினர் குறிப்பிடத்தக்க அளவில் கல்வியில் முன் னேறினர். கல்லூரிகளில் பட்டம் பெற்று அரசுப் பணிகளில் அமர்ந்தனர். கேரளத்திலும் முற்போக்கு இயக் கங்கள், மன்னராட்சியின் கல்வி ஆதரவு நிலைப்பாடு காரணமாகக் கல்வி வளர்ச்சி விரைவாக நடந்தது. எனவே இந்தியாவில் கேரளமும் தமிழ்நாடும் தொடக் கக் கல்வி அளிப்பதில்-எழுத்தறிவு பெற்றவர் எண்ணிக் கையில் இன்றும் முதலிடத்தில் இருக்கின்றன.

நடுவண் அரசு 1964இல் பேராசிரியர் டி.எஸ். கோத்தாரி தலைமையில் கல்விக்குழுவை அமைத்தது. அதன் அறிக்கை 1968இல் அரசிடம் தரப்பட்டது. இக்குழுவின் முதன்மையான பரிந்துரைகளில் ஒன்று, நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் (GDP) 6 விழுக்காடு கல்விக்காக அரசு செலவிட வேண்டும் என்பதா கும். இன்று வரையில் இது 3.5 விழக்காடு என்கிற அளவிலேயே இருக்கிறது. மேலும் கோத்தாரி குழு, ‘கல்வி என்பது மாணவர்களின் ஒட்டுமொத்தத் திறனை யும் வளர்ப்பதாக இருக்க வேண்டும் என்று கூறியது. கோத்தாரி குழுவின் பரிந்துரைகளைச் செயல்படுத்த அரசு முனையவில்லை.

அதன்பின் இந்திரா காந்தி தலைமை அமைச்சராக இருந்தபோது நெருக்கடி நிலை என்கிற பெயரால் நடத்திய காட்டாட்சிக் காலத்தில், 42ஆவது அரசமைப் புச் சட்டத்திருத்தத்தின் மூலம், மாநில அரசுகளின் அதிகாரப் பட்டியலில் இருந்த கல்வியை பொது அதி காரப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. கல்வி சார்ந்த எல்லா முடிவுகளையும் எடுப்பதற்கு நடுவண் அரசுக்கு இதன் மூலம் அதிகாரம் வழங்கப்பட்டுவிட்டது. நெருக்கடி நிலை ஆட்சிக்குப்பின் நடந்த தேர்தலில் - 1977இல் காங்கிரசுக் கட்சியும் இந்திராகாந்தியும் படுதோல்வி அடைந்தனர்.

அச்சூழலில் கல்வியை மீண்டும் மாநிலங் களின் அதிகாரப்பட்டியலுக்குக் கொண்டு வருவதில் மாநில அரசுகள் தவறிவிட்டன. இதனால் மாநிலங் களின் உரிமைகள் பறிக்கப்பட்டிருப்பதுடன் மொழிவழியில் அமைந்துள்ள மாநிலங்களின் தேசிய மொழி களை ஒடுக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

கல்வி தனியார் மயமாகி, கல்வி வணிகக் கொள்ளையும், ஊழலும் பெருகியதற்குக் காரணம் கல்வி தொடர்பான அதிகாரம் நடுவண் அரசிடம் இருப்பதே ஆகும்.

பொது அதிகாரப் பட்டியலில் கல்வி சேர்க்கப்பட்ட தால், இராசிவ் காந்தி தலைமை அமைச்சராக இருந்த போது 1986இல் நடுவண் அரசு புதிய கல்விக் கொள் கையை அறிவித்தது. இது “கரும்பலகைத் திட்டம்” என்று அப்போது அழைக்கப்பட்டது. இந்திய அளவில் கரும்பலகையும் இல்லாமல் எண்ணற்ற தொடக்கப் பள்ளிகள் அப்போது இயங்கின. இத்திட்டத்தின் அடிப் பiயில்தான் நாட்டின் சில பகுதிகளில் நவோதயா மாதிரிப் பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டன. இவற்றில் ஒன்ப தாம் வகுப்பிலிருந்து இந்தி அல்லது ஆங்கிலம் மட்டுமே பயிற்று மொழியாக இருக்கும். இப்போது இது ஆறாம் வகுப்பிலிருந்தே நடைமுறைப்படுத்தப்படுகிறது.

1986ஆம் ஆண்டின் புதிய கல்விக் கொள்கையில் 1992ஆம் ஆண்டு சில மாற்றங்கள் செய்யப்பட்டன. “சர்வ சிட்சா அபியான்” எனப்படும் அனைவருக்கும் கல்வி என்கிற திட்டம் அறிவிக்கப்பட்டது. தொடக்கக் கல்வி உரிமையை, அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் பகுதியில் சேர்த்தால்தான், அனைவருக்கும் கல்வி என்கிற கொள்கையைச் செயல்படுத்த முடியும் என்று கல்வியாளர்களும், சமூகச் செயற்பாட்டாளர் களும் வலியுறுத்தினர்.

அதன் விளைவாக அரசமைப்புச் சட்டத்தின் 86ஆவது திருத்தமாக 6 முதல் 14 அகவைக்குட்பட்ட சிறுவர்களுக்குக் கட்டாய இலவயக் கல்வி உரிமை என்பது அரசமைப்புச் சட்டத்தின் விதி 21-A எனச் சேர்க் கப்பட்டது. மேலும் 2009இல் இதற்கென்று தனியாகச் சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் சிறுவர்களுக்கு இக் கல்வி உரிமையை அளிக்கத் தவறுவதற்கு யார் பொறுப் பேற்பது என்பது குறித்து இச்சட்டத்தில் விளக்கப்பட வில்லை.

2014-2015ஆம் ஆண்டில் 5ஆம் வகுப்பு வரை உள்ள தொடக்கப் பள்ளியில், 8ஆம் வகுப்பு வரை உள்ள நடுநிலைப் பள்ளிகள் சேர்த்து 14 இலட்சம் பள்ளிகள் உள்ளன. இவற்றில் 19.77 கோடி மாணவர்கள் பயில்கின்றனர். மொத்தப் பள்ளிகளில் 11 இலட்சம் பள்ளிகள் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி கள். இப்பள்ளிகளில் 11.9 கோடி மாணவர்கள் உள்ளனர்.

கல்விக் கட்டணம் பெறும் தனியார் பள்ளிகள் 3 இலட்சம் உள்ளன; ஆனால் இவற்றில் 8.56 கோடி மாணவர்கள் படிக்கின்றனர். இந்தப் புள்ளிவிவரம் அரசுப் பள்ளி களில் மாணவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதைப் புலப்படுத்துகிறது. தொடக்கக் கல்வியைத் தருவது என்கிற கடமையிலிருந்து அரசுகள் வழுவி, தனியார் பள்ளிகளை ஊக்குவித்ததே இதற்குக் காரண மாகும்.

முதல் வகுப்பில் சேரும் மாணவர்களில் 83.7 விழுக்காட்டினர் மட்டுமே 5ஆம் வகுப்பில் படிக்கின்றனர்; அதாவது 16.3 விழுக்காடு மாணவர்கள் இடையில் பள்ளிக்கு வராமல் நின்றுவிடுகின்றனர்.

எட்டாம் வகுப்பில் 67.4 விழுக்காடு மாணவர்கள் மட்டும் படிக்கின் றனர். அதாவது முதல் வகுப்பில் சேர்ந்த மாணவர் களில் 32.6 விழுக்காட்டினர் எட்டாம் வகுப்பை முடிப் பதற்கு முன்பே பள்ளியை விட்டு நின்றுவிடுகின்றனர். முதல் வகுப்பில் சேரும் 10 மாணவர்களில் 4 பேர் எட்டாம் வகுப்பை முடிக்கும் முன்பே படிப்பைத் தொடராமல் விட்டுவிடுகின்றனர்.

எட்டாம் வகுப்பு வரை கூட பள்ளியில் பயில இயலாமல் தங்கிவிடும் மாணவர்கள் கீழ்ச்சாதிகளின் உழைக்கும் மக்களின் பிள்ளைகளாகவே இருக்கின்றனர். இதைப்பற்றி 2016இல் தேசியக் கல்வி அறிக்கை வரைவில் எந்த இடத்திலும் குறிப்பிடப்பட வில்லை.

தில்லியில் உள்ள ‘பிரதம’ எனப்படும் தொண்டு நிறுவனத்தின் கல்வியின் தரம் குறித்த 2014ஆம் ஆண்டிற்கான ஆய்வறிக்கையில் (ASER)) இரண்டாம் வகுப்பு மாணவர்களின் மொழிப் பாடப் பகுதியை அய்ந்தாம் வகுப்பு மாணவர்களில் பாதிப்பேர்கள்கூட இயல்பாகப் படிக்க முடியவில்லை; அதேபோல் இரண்டாம் வகுப்புக்குரிய கணிதத்தில் எளிய கூட்டல், கழித்தல் கணக்குகளைச் செய்ய முடியவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இதே கருத்தை நடுவண் அரசின்கீழ் இயங்கும் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசியக் குழுவும் (NCERT) தெரிவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள 15 இலட்சம் பள்ளிகளில் முதல் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையில் 26 கோடி மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளிகளில் 80 இலட்சம் ஆசிரியர்கள் உள்ளனர்.

முதல் வகுப்பில் பள்ளியில் சேர்பவர்களில் 23.6 விழுக்காட்டினர் மட்டுமே உயர்கல்வியில் சேர்கின்றனர். அதேசமயம் 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, ஏழு அகவைக்கு மேற்பட்டவர்களில் 28.26 கோடி ஆண்களும் பெண்களும் எழுத்தறிவற்றவர்களாக இருக்கின்றனர். எழுத்தறிவற்றவர் எண் ணிக்கை உலகிலேயே இந்தியாவில்தான் அதிகம்.

பல்கலைக்கழக நிதி நல்கைக் குழுவின் (UGC) 2014-15ஆம் ஆண்டின் அறிக்கையின்படி, இந்தியா வில் 712 பல்கலைக்கழகங்கள் உள்ளன. 40,760 கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 3.33 கோடி மாணவர்கள் படிக்கின்றனர்.

14 இலட்சம் ஆசிரியர்கள் இருக் கின்றனர். ஆனால் உலகில் தரவரிசையில் முதலில் உள்ள 200 பல்கலைக்கழகங்களில் இந்தியாவில் உள்ள எந்தவொரு பல்கலைக்கழகமும் இடம்பெற வில்லை. உயர்நிலைப் பள்ளிகளில் 51 விழுக்காடும், மேனிலைப் பள்ளிகளில் 58 விழுக்காடும் கல்லூரிகளில் 60 விழுக்காடும் தனியாரிடம் இருந்தும் தரம் இல்லையே ஏன்? ஏனெனில் இவை கல்வி வணிகக் கொள்ளை நிறுவனங்களாகவே செயல்படுகின்றன.

மேலும் தாய் மொழி வழியில் கற்பிக்காமல் ஆங்கில வழியில் கற்பிக்கிறார்கள்; போதிய தகுதி பெறாத ஆசிரி யர்களை வைத்துக் கற்பிக்கிறார்கள்.

எனவே தொடக்கக் கல்வி முதல் பல்கலைக்கழகக் கல்வி வரையில் உள்ள குறைபாடுகளைக் களைந்து, கல்வியின் தரத்தை உயர்த்துவதற்காக என்ற பெயரில் மோடி தலைமையிலான நடுவண் அரசு 2016ஆம் ஆண்டிற்கான தேசியக் கல்விக் கொள்கையை முன் மொழிந்துள்ளது.

இதற்கான முதல் தொடக்கமாக 2015 சனவரி 26 அன்று மோடி அரசு, கல்வியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்த கருத்தை “mygov” எனும் வலைத் தளத்தில் தெரிவிக்குமாறு அறிக்கை வெளியிட்டது.

இதற்காக 33 உள்தலைப்புகளையும் அறிவித்திருந்தது. இவ்வாறு பெறப்பட்ட கருத்துகளையும் கணக்கில் கொண்டு தேசிய கல்விக் கொள்கையை வகுப்பதற்காக நடுவண் அரசின் முன்னாள் செயலாளர் டி.எஸ்.ஆர். சுப்பிர மணியம் தலைமையில் அய்வர் கொண்ட குழுவை நடுவண் அரசு 2015 அக்டோபர் 31 அன்று அமைத் தது. இவர்களில் ஆர்.எஸ்.எஸ்.

ஆதரவாளரான ஜெ.எஸ். ராஜ்புட் என்பவர் ஒருவரே கல்வித் துறையைச் சார்ந்த வர். மற்ற நால்வரும் அரசு உயர் அதிகாரிகளாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள்.

எனவே முதலில் கல்வியை உயர் அதிகார வர்க்கத்தின் ஆதிக்கத் திலிருந்து மீட்டெடுத்து கல்வியாளர்களின் பொறுப்பில் ஒப்படைக்க வேண்டும்.

சுப்பிரமணியன் தலைமையிலான குழுவின் அறிக்கை 2016 மே 27 அன்று நடுவண் அரசிடம் அளிக் கப்பட்டது. ஆனால் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த சுமிருதி இராணி இதை வெளி யிடுவதைத் தவிர்த்து வந்தார். குழுவின் தலைவர் சுப்பிரமணியன், “அரசு வெளியிடாவிடில் அந்த அறிக் கையைத் தானே வெளியிடப் போவதாக” அச்சுறுத்தினார்.

அந்நிலையில் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் “தேசியக் கல்விக் கொள்கை 2016 வரைவிற்கான சில உள்ளீடுகள்” (Some Inputs for Draft National Educational Policy 2016)) என்ற அறிக்கையை வெளியிட்டது.

இந்த அறிக்கையின் முன்னுரையிலேயே இந்துத் துவக் கோட்பாட்டை நிலைநாட்டுவது இதன் முதன்மை யான நோக்கம் என்பது புலனாகிறது. “பண்டைய இந்தியாவில் உருவான கல்வி முறை என்பது வேதக் கல்வியே ஆகும்.

இவ்வுலக வாழ்விற்கான அல்லது அதற்கு அப்பால் உள்ளது பற்றிய அறிவைப் பெறுவது மட்டுமே நோக்கமன்று; ஒருவன் தன்னை முழுமை யக அறிதலே இதன் விழுமிய நோக்கமாக இருந்தது.

குருகுலக் கல்வியானது குருவுக்கும் சீடனுக்கும் இடை யில் பிணைப்பை உண்டாக்கியது. ஆசிரியரை மய்ய மாகக் கொண்டதாகக் கல்வி இருந்தது. மாணவர்கள் கண்டிப்பான ஒழுக்க விதிமுறைகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும்” என்று குருகுல கல்வியைப் பற்றி விளக்கப்பட்டுள்ளது.

குருகுலக் கல்வியை இந்த அறிக்கை இப்போது சுட்டிக்காட்டுவதன் நோக்கம், தொடக்கப் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரையில் ரோகித் வெமுலா, கன்னையா குமார் போன்று எவரும் எதிர்த்துப் பேசாமல் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்பதற்காகவே ஆகும்.

வேதக் கல்வி முற்றிலும் பார்ப்பனர்களுக்கு மட்டுமே உரியதாக இருந்தது என்பதையும், சாத்திரங்களில் சூத்திரன் வேதம் ஓதுவதைக் காதால் கேட்டால் அவன் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும்; வேதத்தை ஓதிட முயன்றால் அவன் நாக்கை அறுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருப்பதையும் இந்த அறிக்கையில் கூறாமல் ஏன் மறைத்தார்கள்?

சிந்துவெளி நாகரிகத்தை ஆரிய நாகரிகமென்று பார்ப்பன அறிவாளிகள் நிறுவிட முயல்கின்றனர். அது போல், கி.மு.700இல் தட்சசீலா (Takshila)வில் உலகின் முதலாவது பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது என்கிற அப்பட்டமான பொய் இந்த அறிக்கையில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.

அதேபோன்று நாளந்தாப் பல்கலைக் கழகம் கி.மு.4ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட தாகக் கூறப்பட்டுள்ளது. இதற்கு எத்தகைய வரலாற்றுச் சான்றும் இல்லை.

ஆனால் அப்பல்கலைக் கி.பி.4ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டதற்கான தொல்லியல் சான்றுகள் உள்ளன. நாளந்தாப் பல்கலைக்கழகம் என்றால் எல்லோருக்கும் உடனே நினைவிற்கு வருவது அது பவுத்த தத்துவக் கல்விக்கான தலைமை இடமாக ஆசியாவிற்குத் திகழ்ந்தது என்பதாகும்.

ஆனால் தேசிய கல்விக் கொள்கை அறிக்கையிலோ, நாளந்தா வில் கற்பிக்கப்பட்ட பாடங்களின் பட்டியலில் இறுதியில் பவுத்த தத்துவம் இடம்பெற்றுள்ளது.

காந்தியைக் கொன்ற கோட்சே ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் தீவிரமாகச் செயல்பட்டவர். மோடி ஆட்சி ஆர்.எஸ்.எஸ். அமைப்பை ஆணிவேராகக் கொண்டிருக் கிறது. பாரத இந்துத்துவப் பண்பாட்டை மீட்டுருவாக் கம் செய்வதற்காக இந்த அறிக்கையில் காந்தியின் மேற்கோளைச் சுட்டியுள்ளது. “நிலத்தை மதிப்பிடுவது போல் - பங்குச் சந்தையில் பங்குகளை மதிப்பிடுவது போல் கல்வியை நாம் மதிப்பீடு செய்கிறோம். அதிக வருவாய் ஈட்டுவதற்கான வழியாகக் கல்வியை மாணவர்களுக்கு அளிக்க விரும்புகின்றோம். ஆனால் கற்பவனின் ஒழுக்கத்தை மேம்படுத்துவது பற்றி நாம் சிறிதும் சிந்திப்பதே இல்லை” - என்பதே காந்தியின் மேற்கோளாகும். ஆனால் தேசியக் கல்வித் திட்ட வரைவு அறிக்கையின் தொடக்கம் முதல் முடிவு வரையிலும் காந்தியின் கூற்றுக்கு மாறாகக் கடந்த இருபது, முப்பது ஆண்டுகளில் உருவாகி வளர்ந்துள்ள உலகமயப் பொருளாதார-சமூகச் சூழலின் தேவைக்கு ஏற்ப இந்திய இளைஞர்களின் கல்வி அறிவை - தொழில் திறனை, வாழ்க்கைக்கான பொருளை ஈட்டுவதே முதன்மை எனும் சிந்தனைப்போக்கை வளர்த்தெடுக்க வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் பண்டைய கலாச்சாரங்களைக் கட்டிக்காப்பது என்கிற பெயரில் இந்துத்துவ ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற் காகவே-“இந்திய ஞான சூரியனின் ஒளி இந்தியா முழு வதும் பரவி, பின் ஆசியாவிலும் உலகம் முழுவதும் பரவும்” என்கிற அரவிந்தரின் மேற்கோளுடன் முன் னுரை முடிகிறது. இனி எஞ்சியுள்ள 21ஆம் நூற்றாண்டு என்பது இந்தியாவுக்கு உரியதாக இருக்கும் என்கிற பொய்யான பெருமிதத்தை நம்முன் நிறுத்துகிறது.

இந்த அறிக்கையின் நான்காவது உட்பிரிவில் (Chapter- 4) தான் சிக்கல்களுக்கான தீர்வுகள் முன் மொழியப்பட்டுள்ளன.

4.1 எனும் பிரிவு பள்ளி முன்பருவக் கல்வி (Preschool Education) பற்றிப் பேசுகிறது. தொடர்ந்து பள்ளிக்குச் செல்வதற்கான மனநிலையை - ஊக்கத் தைக் குழந்தைகள் 4, 5 அகவையினராக இருக்கும் போதே உருவாக்கிட வேண்டும்; அப்போதுதான் முதல் வகுப்பில் சேரும் குழந்தைகளிடம் 5ஆம் வகுப்பில் ‘இடைநிற்றல்’ ஏற்படாது என்று அறிக்கை கூறுகிறது.

பள்ளி முன்பருவக் கல்விக்காக ‘அங்கன்வாடிகள்’ செயல்படுகின்றன. தமிழ்நாடு, கேரளா போன்ற சில மாநிலங்களில் மட்டுமே இவை நல்ல முறையில் செயல் படுகின்றன.

இவற்றை இன்னும் செம்மையாகச் செயல்படுத்த வேண்டிய தேவையும் உள்ளது. முன்பருவக் கல்வி உரிமையை உறுதி செய்திட 2009ஆம் ஆண்டின் கல்வி உரிமைச் சட்டத்தில் 6 அகவை முதல் என்று இருப்பதை 3 அகவை முதல் என்று மாற்றம் செய்ய வேண்டும்.

இந்த அறிக்கையில் முதல் வகுப்பில் 5 அகவை எய்திய எல்லாக் குழந்தைகளும் பள்ளியில் சேர வேண்டும்; அக்குழந்தைகள் பல்கலைக்கழகக் கல்வி வரை தொடர்ந்து படித்திட வேண்டும் என்கிற விருப் பம் மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் இடைநிற்றலுக்கான சமூக-சாதிய, பொருளாதாரக் காரணிகள் பற்றி எந்தவொரு இடத்திலும் சுட்டிக்காட்டப் படவில்லை. திட்டமிட்டே இந்த உண்மை மறைக்கப் பட்டுள்ளது.

4.4 பள்ளிக்கல்வி எனும் தலைப்பின்கீழ், குறைந்த அளவில் மாணவர்கள் உள்ள-திறம்படச் செயல்படுத்த வாய்ப்பில்லாத பள்ளிகளை அருகில் உள்ள பள்ளிகளுடன் இணைத்திட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஊரகப் பகுதிகளில் வாழும் ஏழை எளிய - கீழ்ச்சாதி வீட்டுப் பிள்ளைகள் பணம் கட்டித் தனியார் பள்ளி களில் படிக்க முடியாமல் அரசின் தொடக்கப் பள்ளிகளில் படிக்கிறார்கள். இந்திய அளவில் பெரும்பாலான தொடக்கப் பள்ளிகளில் இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர். ஒரு வகுப்புக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலையை ஏற்படுத்தி ஏழை, எளிய குடும்பங்களின் பிள்ளைகளுக்கு நல்ல கல்வி வழங்க வேண்டிய அரசு, அதற்கு மாறாக அவற்றை மூடுவதற்கு வழி சொல்கிறது.

இந்தி அல்லது ஆங்கில மொழி வழியில் கற்பிக் கப்படும் கேந்திரிய வித்யாலயா, நவோதயா பள்ளி களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்று இந்த அறிக்கை கூறுகிறது. தாய்மொழி வழியில் கற்பிக்கும் போக்கிற்கு இது மேலும் இடையூறாக அமையும்.

4.5 பாடத்திட்டத்தைப் புதுப்பித்தலும் தேர்வு முறையில் சீர்திருத்தமும் என்கிற பிரிவின்கீழ், எல்லா மாணவர்களுக்கும் அவர்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் கடமைகள் குறித்துக் கற்பிக்க வேண்டும்.

பொறுப்பான இந்தியக் குடிமக்களாகவும் உலகக் குடி மக்களாகவும் உருவாக்க வேண்டும் என்று கூறப் பட்டுள்ளது, தான் ஒரு ‘இந்தியக் குடிமகன்’ என்று நினைக்க முடியாத அளவுக்குத் தேசிய இனங்களை நடுவண் அரசு ஒடுக்கிவரும் நிலையில் ‘உலகக் குடி மகன்’ என்று தன்னைக் கருத வேண்டும் என்பது எவ்வளவு பித்தலாட்டம்! தாராளமய - தனியார்மய - உலகமய ஏகாதிபத்தியச் சிந்தனையில் தன்னைக் கரைத்துக் கொள்ள வேண்டும் என்பதே இவ்வாறு கூறுவதன் நோக்கமாகும்.

“அறிவியல், கணிதம், ஆங்கிலம் ஆகிய பாடங்களுக் குத் தேசிய அளவில் ஒரே பாடத் திட்டம் என்று வகுக் கப்பட வேண்டும். சமூக அறிவியல் பாடத்தில் ஒரு பகுதி இந்தியா முழுமைக்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். மற்ற பாடங்களுக்கான பாடத் திட்டத்தை மாநில அரசுகள் வகுத்துக் கொள்ளலாம்” என்று இந்த அறிக்கை சொல்கிறது.

உயர்கல்வி முழுவதையும் பார்ப்பன மேல்சாதி ஆதிக்க வர்க்கத்தினர் கைப்பற்றிக் கொள்வ தற்கான வழி இது. மாநிலங்களின் அடையா ளங்கள்-உரிமைகளை அடியோடு துடைத்தெறிந்து எல்லாவற்றையும் ‘அனைத்திந்தியா’ என்று ஆக்கி நடுவண் அரசின்கீழ் எல்லா அதிகாரங் களையும் குவிப்பதற்கே இது வழிகோலும். வரலாறு பாடத்தில் ஒரு பகுதியை நடுவண் அரசுக்கு ஒதுக்குவது என்பது இந்துத்துவத்தைத் திணிப் பதற்காகவே! மாநிலப் பாடத் திட்டத்தை மாநில அரசுகளே வகுக்கும் உரிமை நீடிக்க வேண்டும்.

விரும்புவோர் மட்டும் 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை எழுதலாம் என்பது, கீழ்ச்சாதி வீட்டுப் பிள்ளைகளுக்குக் கேடானதாகவே அமையும்.

கிராமப்புற மற்றும் நகர்ப்புற உழைக்கும் மக்களின்-பிற்படுத்தப்பட்ட-தாழ்த்தப்பட்ட-பழங்குடி வகுப்பு களின் பிள்ளைகளை இரண்டாம் நிலையினராக்கி - வெறும் உடலுழைப்பாளிகளாக நிலைபெறச் செய்தி டவே 10ஆம் வகுப்பில் இரண்டு வகையான தேர்வு முறைகளை இந்த வரைவு பரிந்துரைத்துள்ளது.

கணக்கு, அறிவியல், ஆங்கிலம் ஆகிய பாடங் களில் தேர்ச்சிக்குரிய மதிப்பெண் பெற முடியாத தால்தான் பொதுத் தேர்வில் பலரால் தேர்ச்சி பெற முடியவில்லை.

தரமான வினாத் தாள் பிரிவு-அ (Part-A) அமைக்கப்படும்; பத்தாம் வகுப்பை முடித்தபின் உடலுழைப்பை முதன்மை யாகக் கொண்ட தொழிற்கல்வி சார்ந்த (Vocational Stream) சான்றிதழ் - பட்டயப் படிப்புகளுக்குச் செல்ல விரும்புகின்ற - சுமாராகப் படிக்கும் மாணவர்களுக்கு மிக எளிய வகையில் இம்மூன்று பாடங்களுக்கும் வினாத்தாள் - பிரிவு-ஆ (Part - B) அமைக்கப்படும் என்று இந்த வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பள்ளி முன்பருவக் கல்வி முதலே தரமான கல்வியைத் தருவதே குறிக்கோள் என்று தம்பட்டம் அடித்துக்கொள் ளும் இந்த வரைவு, கீழ்த்தட்டு - கீழ்ச்சாதி மக்களைத் தாழ்த்தி வைக்கும் இந்த வருணாசிரமத் திட்டத்தை முன்மொழியலாமா?எனவே சிறப்பாகப் படிக்கும் மாணவர் களுக்கு இம்மூன்று பாடங்களிலும்  4.11 பிரிவு கல்வியில் கலாச்சாரம் மற்றும் மொழி பற்றியதாகும்.

“மாநிலங்களுக்கிடையேயும் உலகின் பல பகுதிகளுக்கும் செல்வதற்கு மாணவர்களின் மொழித்திறனை வளர்க்க வேண்டும். இதற்கு மும்மொழிக் கொள்கை உதவுகிறது.

தாய்மொழி வழியில் கற்பது தான் எளிதானதும் திறனை வளர்ப்பதும் ஆகும் என்பது உண்மைதான். ஆனால் ஆங்கில மொழியைக் கற்க வேண்டும் என்கிற விருப்பம் மக்களிடம் அதிகமாகி வருகிறது.

அதனால் ஆங்கிலவழிப் பள்ளிகள் பெருகி யுள்ளன” என்று இந்த அறிக்கை கூறுவது தாய்மொழி வழிக் கல்விக்குக் கதவை அடைப்பதாகும்.

4.11 (1) “எல்லா மாநிலங்களும் யூனியன் பிரதேசங் களும் விரும்பினால் 5ஆம் வகுப்பு வரையில் தாய் மொழியில், வட்டார அல்லது அப்பகுதி மொழியைப் பயிற்று மொழியாகக் கொள்ளலாம்.”

4.11 (2) “தேசிய அளவிலும் உலக அளவிலும் உயர்ந்த நிலையை அடைவதற்கும் உலக அறிவைப் பெறுவதற்கும் ஆங்கில அறிவு முதன்மையாக வேண்டப் படுகிறது. எனவே இளம் வயதிலேயே மாணவர்கள் ஆங்கிலத்தில் இயல்பாகப் பேசவும் எழுதவும் பயிற்சி அளிக்க வேண்டியது இன்றியமையாததாகும். எனவே 5ஆம் வகுப்பு வரை தாய்மொழி வழியில் படிக்கலாம். அப்போது ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாகப் படிக்க வேண்டும். 6ஆம் வகுப்பில் மூன்றாவது மொழி யாக எது இருப்பது என்பது மாநிலங்களின் உரிமை யாகும்.”

மேலே சுட்டப்பட்டுள்ள இவ்விரு பிரிவுகளும் இந்திய அளவில் உயர்நிலைப் பள்ளி வரையில் தாய்மொழி வழியில் பயிலும் 70 விழுக்காட்டு மாணவர்களின் கல்வியின் எதிர்காலத்தைக் குழிதோண்டிப் புதைப்பதாகும்.

தமிழ்நாட்டில் 60 விழுக்காடு மாணவர்கள் தமிழ் வழியில் பள்ளிக் கல்வியைப் படிக்கின்றனர். ஆங்கில வழிக் கல்வி யை ஊக்குவித்து வளர்ப்பது என்பது தாய்மொழி வழியில் கற்பிக்கும் அரசுப் பள்ளிகளை மூடச் செய்வதாகும்.

உலகின் வளர்ச்சி அடைந்த நாடுகளும், இன்று வேகமாக வளரும் பல நாடுகளும் அரசின் நிதியில், அருகமைப் பள்ளிகளைக் கொண்ட பொதுப்பள்ளி முறையைத்தான் கொண்டுள்ளன.

பெரிய பணக்காரர் களும் அடித்தட்டு ஏழைகளும் ஒரே பள்ளியில் படிக்கின்றனர். அனைவரும் இலவசமாகத் தாய்மொழி வழியேகற்கும் பள்ளிகள் மட்டுமே இந்த நாடுகள் அனைத்திலும் உள்ளன. இவை சோசலிச நாடுகள் அல்ல; அனைத்தும் முதலாளித்துவ நாடுகளாகும்.

ஆனால் அவை மக்கள் நல அரசுகளாக (Welfare States) இருப்பதால் அனைவருக்கும் ஒரே தரமான இலவசமான பொதுப்பள்ளி முறையைச் செயல்படுத்து கின்றன.

மேலும் பொதுப் பள்ளி முறையில் முன்பருவக் கல்வி முதல் 18 அகவை வரையிலான மேனிலைப் பள்ளிக் கல்வி வரை அரசின் செலவில் - பொறுப்பில் ஒரே தரமான கல்வி அளிப்பது அரசின் கடமை; பெறுவது மாணவர் உரிமை என்று கல்வி உரிமைச் சட்டம் உடனடியாகத் திருத்தப்பட வேண்டும்.

இவற்றில் தாய்மொழி அல்லது மாநில மொழி ஒன்றே பயிற்று மொழியாக இருக்க வேண்டும். ஆங்கிலம் கல்வி மொழியாக இருத்தல் கூடாது.

ஆங்கில வழிக் கல்வி நம் வகுப்பறைகளைப் புரியாத இருளில் மூழ்கடித்து, கல்வியை வெறும் மனப்பாடம் என்பதாக்கிவிட்டது என்று சொல்கிறார், கல்வியாளர் வே. வசந்தி தேவி.

“தனிமனிதரிடையே புதைந்திருக்கும் முழு ஆளு மையை வளர்த்தெடுப்பதும், அதை மொத்த சமுதாயத் தின் நலனுக்காகப் பயன்பெற வைப்பதும் கல்வியின் இலக்குகளாகும்.

கல்வி சிலரின் இலாபம், ஆதிக்கம், அதிகாரக் குவியல் ஆகியவற்றுக்கான சாதனமாக இருத்தல் கூடாது. அத்துடன் ஆயிரம் பாகுபாடுகளும் ஒடுக்குமுறைகளும் கொண்ட நம் நாட்டில் பொருளா தார, சமூக அநீதிகளுக்கு ஆளாகியிருப்போரை மேலெழச் செய்யும் வலிமை மிக்க ஆயுதமாகக் கல்வி விளங்க வேண்டும்” என்று முனைவர் வே. வசந்தி தேவி திட்டவட்டமாகக் கூறுகிறார்.

தனியார் பள்ளிகள் 1973-74இல் 5.6 விழுக் காடாக மட்டுமே இருந்தன. இவை 1993-94இல் 15.2 விழுக்காடாக உயர்ந்தன. 2011-12இல் 40.3 விழுக்காடானது. 2016இல் 50 விழுக்காட்டை எட்டியிருக்கும்.

ஆங்கில வழிக் கல்வி மோகத் தால் - அரசுகளின் ஊக்குவிப்பால் இது 70-80 விழுக்காடாக உயர்ந்திடக் கூடும். ஆங்கில வழிக் கல்வியால் தமிழ்நாட்டில் தமிழ்மொழியைப் புரிந்துகொள்ள முடியாத இளைய தலைமுறை வளர்ந்து வருகிறது.

ஆங்கில வழியிலான கல்வி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற தேசிய மொழிகளை அழிக்கும். இம்மொழிகளில் படைப்பாளிகளும், படிப்போரும் இருக்கமாட்டார்கள்.

4.11 (5) பிரிவில் - “இந்திய மொழிகள் உருவாகி வளர்வதற்குச் சமற்கிருத மொழி ஆற்றிய பங்களிப் பையும் நாட்டின் கலாச்சார ஒருமைப்பாட்டைக் கட்டிக் காத்து வருவதில் சமற்கிருதம் ஆற்றிவரும் ஒப்பரிய பங்களிப்பையும் கருத்தில் கொண்டு பள்ளிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் தாராளமான வழிகளில் சமற்கிருதத்தைக் கற்பிக்க வேண்டும்” என்று கூறப் பட்டுள்ளது.

இந்துத்துவ ஆதிக்க ஆணவத்திற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்?

ஒருபுறம் பார்ப்பனிய - மேல்சாதி ஆதிக்கத்தை - இந்துத்துவத்தை நிலைநாட்டுவதற்கும், மறுபடியும் பல்வேறு தேசிய இன வழிப்பட்ட மக்களைப் பன்னாட்டு - உள்நாட்டுப் பெருமுதலாளிகளிடம் குறைந்த கூலிக்கு வேலை செய்ய வைப்பதற்கும் மேலும் வலிமை சேர்ப்பதாகவே 2016ஆம் ஆண்டின் தேசியக் கல்விக் கொள்கை வரைவு அமைந்துள்ளது.

எல்லா வகையிலும் - கல்வியில் மாநிலங்களின் உரிமையைப் பறிக்கின்ற, தாய்மொழிவழிக் கல்விக்குக் குழிதோண்டுகின்ற, உழைக்கும் மக்களை மேலும் சுரண்டுகின்ற, இந்துத்துவப் பாசிசத்தை நிலைநாட்டத் துடிக்கின்ற இந்த அறிக்கையைத் தீயிட்டுப் பொசுக்கு வோம்!

Pin It