காதலை ஏற்க மறுத்த மென்பொருள் வல்லுநர் ஸ்வாதி கடந்த மே மாதம் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிக்கொல்லப்பட்டார். அவர் படுகொலை செய்யப்பட்டதற்கு காதல் மறுப்பு காரணமல்ல; இது ஒரு ஜாதி ஆணவக்கொலை என்ற ரீதியில் சமூகவலைத்தளங்களில் செய்திகள் பரவுகின்றன. ஆனால் அவை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

ஆனால் காதலை ஏற்க மறுத்த மாணவிகள், இளம் பெண்கள் படுகொலைகள் என்பவை மிகச்சாதராரணமாகத் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.

இராஜஸ்தான் மாநிலத்தின் பிகானிர் நகரில் உள்ள அரசு கால்நடை மருத்துவக்கல்லூரியில் தினேஷ் சங்லா என்ற மாணவன் முதலாம் ஆண்டில் படித்து வந்தான். அவனுடன் படித்த மீனு சவுத்ரி என்ற பெண்ணை ஒருதலையாகக் காதலித்தான். அவனது காதலை ஏற்றுக்கொள்ள மீனு சவுத்ரி மறுத்தார். எனவே, மீனு சவுத்ரி தங்கியிருந்த மாணவிகள் விடுதிக்குள் பெண் வேடத்தில் நுழைந்து, அவர் மீது ஆசிட்டை ஊற்றினான். மீனு தப்பியோட முயன்றபோது மடக்கிப் பிடித்து கத்தியால் வெறித்தனமாக குத்திக் கொன்றான். ஆசிட் வீச்சில் முகம் சிதைந்து போன மாணவி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

சேலத்தில், வாழப்பாடி அருகே உள்ள பவளத்தானூர் என்ற பகுதியைச் சேர்ந்த 20 வயதுப் பெண் சுஜாதா. அதே ஊரைச் சேர்ந்த 24 வயது நபர் விஜயக்குமார். இவர் எலக்ட்ரீசியனாக இருக்கிறார். சுஜாதா மீது காதல் கொண்டார் விஜயக்குமார். ஆனால் அதை அவர் நிராகரித்து விட்டார். இதனால் கோபமடைந்த விஜயக்குமார், பஸ் ஸ்டாப்பில் சுஜாதா மீது ஆசிட் வீசி விட்டார். இதில் சுஜாதாவின் முகம், தலை, மார்பு என பல பகுதிகளில் தீக்காயம் ஏற்பட்டது.

சென்னை ஆதம்பாக்கம் திருவள்ளூவர் சாலையில் உள்ள ஒரு இணையதள மையத்தில் ஒன்றில் பணியாற்றி வந்த ஒரு இளம்பெண்ணிடம் அதே பகுதியைச் சேர்ந்த விஜயபாஸ்கர் என்பவர் காதலிப்பதாக கூறியுள்ளார். அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். காதலை ஏற்க மறுத்த பெண் மீது கோபமடைந்தார். அந்தப் பெண் வேலை பார்க்கும் இணையதள மையத்திற்கு வந்த விஜயபாஸ்கர் திடீரென அந்த பெண் மீது ஆசிட்டை வீசியுள்ளார்.

காரைக்காலைச் சேர்ந்தவர் வினோதினி. பி.இ. முடித்த இவர், சென்னையில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரை திருவேட்டக்குடியில் கட்டட உபகரணங்களை வாடகைக்கு விடும் சுரேஷ்குமார், ஒருதலையாகக் காதலித்து, திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். வினோதினி மறுத்துவிட்டார். எனவே வினோதினி மீது சுரேஷ்குமார் ஆசிட் வீசினார். பலத்த காயம் அடைந்த அவர் காரைக்கால் அரசு மருத்துவமனையிலும், பின்னர் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். 2013-ஆம் ஆண்டு பிப்ரவரி 12 ல் அவர் உயிரிழந்தார்.

இவையெல்லாம் கடந்த 2012 லிருந்து நடந்து வரும் ஒருதலைக்காதல் கொலைகள் ஆகும். இந்தப் பட்டியல் மிக நீளமானது. சான்றாகச் சிலவற்றைக் கூறியுள்ளோம். காதலை ஏற்க மறுத்தால் காதலைச் சொல்லியவன் வெட்டுகிறான். காதலித்தால் பெற்றோர்கள் வெட்டுகிறார்கள். ஆக, பெண்கள் சொந்தமாக சிந்தித்து ஒரு முடிவெடுத்தால் அதை ஏற்றுக் கொள்ள இந்தச் சமூகம் தயாராக இல்லை என்பதையே இவை காட்டுகின்றன.

பெண்கள் குழந்தைப் பருவத்தில் தகப்பனின் கட்டுப்பாட்டிலும், இளமையில் கணவன் கட்டுப்பாட்டிலும், கணவன் இறந்தபின் பிள்ளைகள் கட்டுப்பாட்டிலும் இருக்க வேண்டியதல்லாமல் ஒருபோதும் தன்னிச்சையாக முடிவெடுக்கவோ, சிந்திக்கவோ கூடாது என்கிறது மனுசாஸ்திரம் (மனு சாஸ்திரம் அத்தியாயம் 5 சுலோகம் 148 )

சுதந்திரமாகச் சிந்திக்கின்ற பெண்ணை - தன் வாழ்க்கையைத் தானே நிர்ணயித்துக் கொள்ளும் பெண்ணை - சுதந்திரமாகப் பெண்கள் எடுக்கும் முடிவுகளை புரிந்துகொள்ளும் ஆணை - இந்து மத இலக்கியங்களோ, புராணங்களோ காட்டியதில்லை. தமிழ் இலக்கியங்களின் நிலையும் இதுதான். திருவள்ளுவர்கூட தோழர் பெரியாரின் பார்வையில் கடுமையாக விமர்சிக்கப்படுகிறார்.

இதுபோன்ற இலக்கியங்களைத் தொடர்ந்து, தற்காலத்தில் வெளியாகும் திரைப்படங்கள், திரைப்படப்பாடல்கள் வரை பெண்களை மட்டம் தட்டியும், சுயமாக முடிவுகளை எடுக்கும் பெண்களை கொல்லச்சொல்லியும் அறிவுறுத்துகின்றன. அடிடா அவள, வெட்றா அவள என்பது போன்ற பாடல்கள்தான் இன்று இளைஞர்களின் ட்ரெண்டாகியுள்ளன.

அண்மைக்காலமாக, பெண்கள் விடுதலைச்சிந்தனைகளை வளர்த்துக்கொண்டு வருகிறார்கள். ஆண் சமுதாயம் மீண்டும் கற்காலத்திற்குப் போய்க்கொண்டிருக்கிறது. ஆறடிக் கூந்தல், சீவி, சிங்காரித்து, சேலை, தாவணிகளைக் கட்டிக் கொண்டு வரும் பெண்களே தமக்கு மனைவியாக வரவேண்டும் என்ற சிந்தனையுள்ள மாணவர்கள், இளைஞர்கள் ஏராளமாக உருவாகியுள்ளனர். சுயசிந்தனையுள்ள பெண்களை ஒழுக்கக்கேடானவர்களாகவம், திமிர் பிடித்தவர்களாகவும் பார்க்கும் இளைஞர்கள் பெருகிவருகின்றனர்.

நமது கல்விமுறை முழுக்க முழுக்க மதிப்பெண்களை மட்டுமே குறிவைத்துச் செல்கின்றது. பெற்றோர்களும் சம்பாதிப்பதிலேயே முழுநேரத்தையும் செலவிடும் நிலையில் வாழ்கின்றனர். குறைந்த பட்சம் டி.வி பார்க்கும் நேரங்களையாவது குறைத்துக் கொண்டு குழந்தைகளுக்கு சமூகக்கல்வியைக் கொடுக்க வேண்டும்.

முக்கியமாக ஆண் குழந்தைகளைப் பெற்றவர்கள் மிகுந்த சமூக அக்கறையோடு குழந்தைகளை வளர்க்க வேண்டும். பெண் என்பவள் வெறும் உடல் மட்டுமல்ல; அந்த உடலுக்கும் நம்மைப்போலவே உணர்வுகள் இருக்கின்றன. அந்த உடலுக்கும் உயிர் இருக்கும். அந்த உயிர் தனக்கு வேண்டியதைத் தானே நிர்ணயித்துக்கொள்ளவும், தனக்கு வேண்டாததை விலக்கிக்கொள்ளவும் நம்மைப் போலவே உரிமை படைத்ததுதான்.

அந்த உடலும், உயிரும், உணர்வும் யாரோ ஒரு ஆணுக்குச் சொந்தமானவை அல்ல. அது தகப்பனோ, அண்ணனோ, தம்பியோ, காதலனோ, கணவனோ எவனுக்கும் எந்தப் பெண்ணும் சொத்து அல்ல; உடைமை அல்ல என்பவை போன்ற கருத்துக்களைப் புரிய வைத்து வளர்க்க வேண்டும்.

பெண் பிள்ளைகளாக இருந்தால் முன்பைவிடக் கூடுதலாக அவர்களையே முடிவெடுக்க வைக்க வேண்டும். தன் வாழ்க்கையைத் தானே நிர்ணயிக்கும் திறனை வளர்த்துவிட வேண்டும். முதலில், சுயமாக முடிவெடுக்கும் தன்மையைத் தாய் வளர்த்துக்கொள்ள வேண்டும். தந்தை என்ற ஆண் அதற்கு தடையாக வரக்கூடாது. தம் பெற்றோரிடம் சமத்துவத்தைக் காணும் ஆண் குழந்தை தானும் அவ்வாறே வளர வாய்ப்பாக இருக்கும்.

காதல் என்பதைப் பற்றி ஆண் பெண் இருபாலரிடமும் விரிவாக விளக்கமாகப் புரியவைக்க வேண்டும். தோழர் பெரியார் காதலைப் பற்றிக்கூறுகிறார்.

“ஆசையைவிட, அன்பை விட, நட்பைவிட காதல் என்பதாக வேறு ஒன்று இல்லை என்றும், அவ்வன்பு, ஆசை, நட்பு ஆகியவைகள் கூட மக்களுக்கு அஃறிணைப்பொருள்கள் இடத்திலும் மற்ற உயர்திணைப் பொருள்களிடத்திலும் ஏற்படுவதுபோல் தானே ஒழிய வேறில்லையென்றும் அதுவும் ஒருவருக்கொருவர் அறிந்து கொள்வதிலிருந்து, நடவடிக்கையில் இருந்து, யோக்கியதையில் இருந்து, மனப்பான்மையில் இருந்து, தேவையில் இருந்து, ஆசையில் இருந்து உண்டாவதென்றும் அவ்வறிவும் நடவடிக்கையும் யோக்கியதையும் மனப்பான்மையும் தேவையும் ஆசையும் மாறக்கூடிய தென்றும் அப்படி மாறும் போது அன்பும் நட்பும் மாறவேண்டியது தான் என்றும், மாற கூடியதுதான் என்றும் நாம் கருதுகின்றோம்.” குடி அரசு - தலையங்கம் - 18.01.1931

காதலில் இணைவைப் போல பிரிவும் இயல்பானது எனப் புரிய வைக்கிறார் பெரியார். காதலின் வெற்றியில் கல்வியையும், எதிர்கால வாழ்க்கைக்கான வாய்ப்புகளையும் உதறித்தள்ளிவிட்டு திருமணம் என்ற புதைகுழியில் விழும் பெண்களையும், ஆண்களையும் பார்க்கிறோம். அதேபோல, காதலின் தோல்வியில் எதிர்காலத்தைப் பெரும் சுமையாக எண்ணி தற்கொலை செய்து கொள்ளும் இருபாலரையும் பார்க்கிறோம். ஒருதலைக் காதலால், தன் சுயமரியாதைக்குக் கேடு விளைந்தாக எண்ணி பெண்களைக் கொலை செய்யும் ஆண்களையும் பார்க்கிறோம்.

பெரியார் ‘காதல்’ பற்றியும் ‘ஒழுக்கம்’ பற்றியும் பேசியவையும், எழுதியவையும் தமிழ்நாட்டில் பாடத்திட்டத்தில் வைக்கப்பட வேண்டும். தொடக்கக் கல்வியிலிருந்தே பாலியல் கல்வி, பாலின சமத்துவக்கல்வி ஆகியவற்றைப் பாடத்திட்டத்தில் இணைக்க வேண்டும். தொடக்கக் கல்வியிலிருந்தே கோ-எஜூக்கேஷன் என்ற இருபாலரும் இணைந்தே படிக்கும் முறை கட்டாயப்படுத்தப்பட வேண்டும். ஒருபாலினம் மட்டுமே படிக்கும் கல்வி நிலையங்கள் இழுத்து மூடப்பட வேண்டும்.

குறிப்பாக, பெற்றோர் குழந்தைகள் கேட்டதை எல்லாம் வாங்கிக்கொடுப்பவர்களாக, குழந்தைகள் வீம்பு பிடித்தால் உடனே அதைச் செய்து கொடுப்பவர்களாக இருக்கக்கூடாது. அளவுக்கு மீறிய பாசம், செல்லம் கொடுத்து வளர்க்கக் கூடாது. இழப்புகளையும், தோல்விகளையும், ஏமாற்றங்களையும் - அவற்றிலிருந்து மீள்வதையும் பழக்கிக்கொடுக்காத பெற்றோர் இந்தச் சமுதாயத்திற்கு ஒரு விஷவிதையை விதைக்கிறார்கள்.