against hindi 450ஒவ்வொரு பொழுதும் ஒவ்வொரு புதிய  சிக்கலோடுதான் விடிய வேண்டும் என்று மத்திய அரசு  முடிவெடுத்து விட்டது போலத் தெரிகிறது. 

இன்றைய நாளுக்கு உள்ள சிக்கலாக ஒன்றை ஆர் எஸ் எஸ் இயக்கமும், இன்னொன்றை மத்திய அரசின் மனித வளத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியாலும் வெளியிட்டுள்ளனர்.

ஐஏஎஸ் வினாத்தாளை இந்தியில் உருவாக்கி, வேறு மொழிகளில் பெயர்க்க வேண்டும் என்று ஆர் எஸ் எஸ் அமைப்பின் கல்விப் பிரிவான சிக்ஷா சன்ஸ்கிருதி உத்தான் நியாஸ் வலியுறுத்தி உள்ளது. 

ஐ ஏ எஸ் தேர்வு என்பது இந்தியா முழுமைக்கும் ஒரே வினாத்தாள் அடிப்படையில் நடத்தப்படுவது. அதனால் அது முதலில் ஒரு மொழியில் உருவாக்கப்பட்டுப் பிற மொழிகளுக்கு மாற்றம் செய்யப்படும். இதுவரையில் அந்த முதல் மொழி ஆங்கிலமாக இருந்தது. இப்போது அதனை இந்தியாக மாற்ற வேண்டும் என்கின்றனர். 

அதில் ஒன்றும் பிழையில்லை, எங்கிருந்தோ வந்த ஆங்கில மொழியை விட, இந்திய மொழிகளில் ஒன்றான இந்திக்கு முன்னுரிமை கொடுப்பதில் என்ன தவறு என்றும், இந்திதானே இந்தியாவில் கூடுதல் மக்களால் பேசப்படும் மொழி என்றும் சிலர் வாதிடுகின்றனர். 

இரண்டு வாதங்களும் சரியானவை அல்ல. ஆங்கிலம், இந்தி ஆகிய இரு மொழிகளுக்கு இடையில் இருக்கும் ஒரு முதன்மையான வேற்றுமையை நாம் மறந்து விடலாகாது. இந்தி என்பது இந்தியாவில் சிலருக்குத் தாய்மொழியாகவும், பலருக்கு அந்நிய மொழியாகவும் உள்ளது. ஆங்கிலமோ, இந்திய மக்கள் அனைவருக்கும் அந்நிய மொழி. ஆகவே அதில் ஒரு பொதுமை இருக்கிறது. இந்தியில் முதல் வினாத்தாள் உருவாக்கப்பட்டால், இந்தி மொழி சார்ந்த சிந்தனைகள், இந்தி மொழியின் மரபுகள் ஆகியன அதில் இயல்பாக இடம்பெற்றுவிடும். பிற மொழி பேசும் மக்களுக்கு அது கடினமானதாகவும், இந்தி பேசுவோருக்கு எளிமையானதாகவும் அமையும்.

இரண்டாவதாக இந்திதான் பெரும்பான்மை மக்கள் பேசும் மொழி என்கின்றனர். அதில் விவாதத்திற்கு உரிய செய்திகள் இருப்பினும், அதனைச் சரி என்றே ஏற்றுக்கொண்டு ஒரு வினாவை நாம் முன்வைக்க வேண்டியுள்ளது. பெரும்பபான்மை அடிப்படையில்தான் அனைத்தும் இங்கே முடிவு செய்யப்படுகிறதா என்பதே அவ்வினா. 7 கோடி மக்கள் வாழும் ராஜஸ்தானில், 4.5 கோடி மக்களின் தாய்மொழி ராஜஸ்தானி. ஆனால் அந்த மொழிக்கு, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் கூட இடம் இல்லை.

எட்டாவது அட்டவணை ஏற்றுக் கொண்டுள்ள 22 மொழிகளில் ராஜஸ்தானி இல்லை.  ஆனால் வெறும் 24,500 பேர் மட்டுமே பேசும் சமஸ்கிருதத்திற்கு இடம் இருக்கிறது. அது மட்டுமின்றி, சமஸ்கிரூத மொழிக்கு ஆண்டுதோறும், காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலிருந்து அரசின் பணம் கொட்டிக் கொடுக்கப்படுகிறது. ஏன் இந்த அநீதி என்று கேட்டால், சமஸ்கிருதம் தொன்மையான மொழி என்கின்றனர். 

இந்தியைப் பற்றி பேசும்போது பெரும்பான்மை பற்றிப்  பேசுகின்றனர். ராஜஸ்தானியைப் பற்றிக் கேட்டால், பெரும்பான்மை முக்கியம் இல்லை, தொன்மைதான் முக்கியம் என்று கூறுகின்றனர். 

இது வெறும் ஆர் எஸ் எஸ் அமைப்பின் கருத்தாக  மட்டுமின்றி, மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்கிரியாலின் கருத்தாகவும் உள்ளது. ஓரிரு நாள்களுக்கு முன், கரக்பூரில் உள்ள ஐ ஐ டி நிறுவன மாணவர்களிடம் பேசியபோது,  "சமஸ்கிருதம் உலகின் முதன் மொழியும், அறிவியல் மொழியும் ஆகும். இதனை நீங்கள் உலகிற்கு மெய்ப்பிக்க வேண்டும்" என்று அவர் குறிப்பிடுகின்றார். இனிமேல்தான் அதனை மெய்ப்பிக்க வேண்டும் என்று அமைச்சர் கூறுவதிலிருந்தே, அது இன்னும் மெய்ப்பிக்கப்படவில்லை என்பது உறுதியாகின்றது.  உண்மை அல்லாத ஒன்றை எவராலும் மெய்ப்பிக்க முடியாதுதானே!

நாட்டில் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. காஷ்மீர் மக்கள் தங்கள் உரிமைகளை இழந்துள்ளனர். வேலையில்லாத்  திண்டாட்டம் பெருகிக் கொண்டே போகிறது. எல்லாவற்றையும் விட்டுவிட்டு, எந்த மொழியில் வினாத்தாள் தயாரிக்கலாம் என்பது குறித்து நாட்டில் விவாதம் தொடங்கப்பெறுகின்றது,  

அன்று ஒரு திரைப்படத்தில், "இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய்ப் போகட்டும்" என்று அரசுக்கு எதிரான வில்லன் பாத்திரம் பேசும். இன்று அரசே அப்படித்தான் பேசுகிறது! 

Pin It