கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

மத்திய அமைச்சர் ஆ.இராசா ஆய்வுரை

22.2.2008 அன்று திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் பெரியார் உயராய்வு மையமும், மகளிரியல் துறையும் இணைந்து நடத்திய ‘பெரியார் அம்பேத்கர்.

இன்றைய பொருத்தப்பாடு’ என்ற தலைப்பிலான சிறப்புச் சொற்பொழிவில் பங்கேற்று மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சர் ஆ. இராசா ஆற்றிய உரையின் தொடர்ச்சி:

அம்பேத்கர் 10.10.1951 இல் ரிசைன் பண்றார். ஒரு அமைச்சர் ரிசைன் பண்ணிட்டு வெளியே வருகிற பொழுது நான் ஏன் ரிசைன் பண்றேன்கறதுக்கு காரணங் கொடுக்கணும். நான் ஒரு கேபினட் அமைச்சர். கேபினட் அமைச்சர் நான் நாளைக்கு ரிசைன் பண்ணினேன்னு வச்சுக்குங்க, I am entitled to file a paper, why I am to resigning நாட்டு மக்களுக்குத் தெரியணும் இல்லையா? அதுக்காக அரசியல் சட்டத்திலேயே ஒரு அமைப்பு இருக்கு. அப்படி அம்பேத்கர் சட்ட அமைச்சராக இருந்து கொண்டு வெளியேறி வருகிறபொழுது அவர் ஒரு ஆவணத்தை சமர்ப்பிக்க முயற்சி செய்கிறார். அதற்கு நேரு அரசாங்கத்தால் அனுமதி கொடுக்க முடியவில்லை. அவர் வெளியே வந்ததும் அந்த பேப்பரைக் கொடுத்து விடுகிறார். இதத்தான் நான் பார்லிமெண்டில் படிக்கிறேன்னு. அதில் அவர் சொல்கிறார்:

அவர் ஒரு மிகப் பெரிய பொருளாதாரவாதி. பெரிய பொருளாதாரவாதி Problem of rupee - ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அந்தப் புத்தகத்தை இன்றைக்கும் மன்மோகன்சிங் படித்துக் கொண்டிருப்பதாக நாடாளுமன்றத்தில் அவரே பதிவு செய்திருக்கிறார்.The evaluation of the provincial finance in British India அப்படின்னு ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அந்தக் கட்டுரைக்கு மிகப் பெரிய பாராட்டுதல்கள் எல்லாம் கிடைச்சிருக்கு. ஆக, நாணயத்தின் மதிப்பு, உலகச் சந்தையின் மதிப்பு என்று இன்றைக்குப் பேசுகிற அந்த மதிப்பையெல்லாம் அவர் பேசியவர். தன்னை ஏன் அந்த Finance Committee நிதி சம்பந்தப்பட்ட குழுவில் போடவில்லை என்பதாக விலகலுக்கு ஒரு காரணத்தைச் சொல்லுகிறார்.

இரண்டாவது காரணம், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு தரவேண்டுமென்று நான் குறிப்பிட்டிருக்கிறேன். அதற்கு அரசியல் சட்டத்தினுடைய பிரிவுகளில் நான் உரிய ஏற்பாட்டைச் செய்திருக்கிறேன். அரசியல் சட்டத்தின் 340வது பிரிவு to investigate the backwardness of the community in each state ஏனென்றால் என்கிட்ட பட்டியல் கிடையாது. யார் பிற்படுத்தப் பட்டவன்? தமிழ்நாட்டில் வன்னியர் பிற்படுத்தப் பட்டவரா? முக்குலத்தோர் பிற்படுத்தப்பட்டவரா? நாடார் பிற்படுத்தப்பட்டவரா என்கின்ற பட்டியல் எனக்குத்தெரியாது. கேரளாவிலே யார் பிற்படுத்தப் பட்டவன்? மகாராஷ்டிரத்திலே, ஒரிசாவிலே யார் பிற்படுத்தப்பட்டவன் என்கின்ற பட்டியல் கிடையாது.

ஆனால் அரசியல் சட்டத்தில் 40வது பிரிவில் நான் சொல்லியிருக்கிறேன். A commission should be appointed to investigate the backwardness of the community and to give representations ot all the corners என்று அவர் சொல்லியிருக்கின்றார். இப்படி ஒரு ஆணையம் அமைக்க வேண்டுமென்று அரசியல் சட்டத்தில் நான் எழுதிவிட்டேன். நேருவிடம் நான் பலமுறை குறிப்பிட்டு சொல்லியிருக்கிறேன். இந்த ஆணையத்தை முறையாக ஒழுங்குபடுத்தி ஓராண்டு, இரண்டு ஆண்டுகளுக்குள்ளாக சாதிப் பட்டியல் எல்லாம் எடுத்து அவர்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் இடஒதுக்கீடு தர வேண்டுமென்று நாடாளுமன்றத்திலும், நேருவிடத்திலும் பலமுறை கூறிவிட்டேன். ஆனால் அவர்கள் அதைச் செய்ய மறுக்கிறார்கள் என்று இரண்டாவது காரணம்.

மூன்றாவது காரணம். ரொம்ப முக்கியமான காரணம். Hindu Code Bill இன்றைக்கு நாம் சொல்லுகிறோம். உடனே இலேசா பிடிக்கலேன்னாக்கூட டைவர்ஸ்ங்கறான் இன்றைக்கு. பிடிக்கலேன்னா மணமுறிவு. புருசன் பொண்டாட்டிக்குள் தகராறு, மண முறிவு. இந்த மணமுறிவை ஒரு காலத்தில் முடியாது என்று சொன்னார்கள்.

பெண்களுக்குச் சொத்துரிமை தந்தவர் தலைவர் கலைஞர். ஆனால் இந்த சொத்துரிமையை 1950 களில் Hindu Code Bill-லில் கொண்டுட்டு வர்றார் அம்பேத்கர். ஒரு சாதியம் சார்ந்த இந்த இந்து மதத்தில் என்னென்ன முன்னேற்றங்களை, என்னென்ன மறுமலர்ச்சியை திருமணத்தில், சொத்தில் உள்வாங்கிக் கொள்கின்ற அல்லது அகமண முறையில் உள்வாங்கி ஒரு வாழ்வியல் ஆதாரங்களில் எப்படிப்பட்ட நடைமுறையில் சிவில் சட்டம் இருக்க வேண்டுமென்று Hindu Code Bill சொல்கிறது. அந்த Hindu Code Bill பற்றி அவர் சொல்லுகிறபோது, ரொம்பத் தெளிவாகவே சொல்கிறார்.

இது வந்து ஒரு மிகப் பெரிய, இதுவரை யாரும் எடுத்திராத ஒரு மிகப் பெரிய முயற்சி. இந்த முயற்சியை நான் எடுக்க வேண்டுமென்று ஆசைப்பட்டு நேருவிடம் நான் கேட்டபோது, நேரு ஒப்புக் கொண்டார். ஆனால் என்ன காரணத்தினாலோ, தன்னை Agnostic என்று சொல்லிக் கொண்டே நேரு, தன்னை பகுத்தறிவுவாதி என்று சொல்லிக் கொண்ட நேரு, சாதி கிடையாது என்று சொல்லிக் கொண்ட நேரு, இந்து மதத்தில் நான் கை வைப்பதை, பெண்களுக்கு சொத்துரிமை கொடுப்பதை, பெண்களுக்கு மணமுறிவு வழங்குவதை, பெண்களுக்குத் திருமணத்தில் சில சலுகைகளை வழங்குவதை ஒப்புக் கொள்ள மறுக்கிறார். மூதாதையர் சொத்தில் பெண்களுக்கு உரிமை வேண்டும் என்று நான் குறிப்பிட்டு இருக்கிறேன். இந்த மாற்றங்களையெல்லாம் செய்வதற்கு நேருவும், மந்திரிசபையும் ஒப்புக் கொள்ளாத காரணத்தினால் நான் வெளியேறுகிறேன் என்று அவர் சொல்கிறார். என்ன காரணம்.

ஒன்று, பைனான்ஸ் கமிட்டியில் தன்னை ஏன் போடவில்லை? இரண்டு, பேக் வேர்ட் க்ளாஸ் கமிஷன் சொல்லி இத்தனை ஆண்டுகாலமாயிற்றே. அவர்களுக்கு ஏன் இன்னும் நீங்கள் இடஒதுக்கீடு வழங்குவதற்கு எந்தக் காரணமும் சொல்லவில்லை. அந்த ஆணையத்தை ஏன் அமைக்கவில்லை. Hindu Code Bill ஏன் தரவில்லை என்று தான் அவர் தன்னுடைய இராஜினாமாக் கடிதத்தைத் தருகிறார். ஆக, பிற்படுத்தப்பட்ட மக்களுக்குச் செய்ய வேண்டும். செய்யத் துணிந்தவர் அம்பேத்கர். அதற்கான என்ன அடிப்படை ஏற்பாடுகளையும் அரசியல் சட்டத்திலும், அவர் பின்னால் கொண்டு வந்த சட்ட மசோதாவிலும் கொண்டு வந்து சேர்த்தவர் அம்பேத்கர்.

இதை மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பெரியார் காந்திக்கு எதிராக அம்பேத்கருக்கு எழுதிய தந்தியை புரிந்து கொள்ள வேண்டும். இந்த இரண்டு தலைவர்களும், இரண்டு தளத்தில் சிறு சிறு மாற்றங்களோடு இயங்கினாலும்கூட, அவர்களுடைய வாழ்க்கையெல்லாம், தன்னுடைய வாழ்நாளெல்லாம் இந்த மக்கள் கல்வியால், பொருளாதாரத்தால் பிற்படுத்தப்பட்ட இந்த மக்கள் வாழவேண்டுமென்பதற்காக அதற்கு எதிராக இருக்கிற கொள்கைகளையெல்லாம் தகர்த்து எறிந்தவர்கள். கடைசியாக ஒரு கேள்வி. இவர் இன்றைக்கும் தேவைப் படுகிறாரா? என்று கேட்கிறவர்கள் இருக்கிறார்கள்.

பெரியார் இவ்வளவெல்லாம் பேசினார் சரி. இதெல்லாம் இருக்குதான்னு கேக்குறார். 1973-ல் அவருடைய பிறந்த நாளில் பெரியார் சொன்னத கடைசியா நான் வாசிக் கணும்.

“50 வருட காலமாக சுயமரியாதை இயக்கம் சாதித்தது என்ன என்று பார்த்தால், சிறிது படிப்பு, சிறிது உத்யோகம் பெற நேர்ந்ததோடு அரசியலில் பிராமணர்களின் கொட்டத்தை நல்ல அளவு அடக்கிற்று என்பதல்லாமல், சமுதாயத் துறையில் இழிவும், பொருளாதார ஒடுக்கலும் நல்ல அளவுக்கு பலம் பெற்று விட்டது என்றுதான் நான் சொல்லுவேன்”.

இது பெரியார் சாகிறவரைக்கும் சொன்னார். பெரியார் சாகிறபோதுகூட தான் வெற்றி பெற்று விட்டதாக எப்போதும் சொல்லிக் கொண்டவரல்ல. இன்றைக்கும் என்ன நடக்கிறது. நான் முன்பே குறிப்பிட்டதைப் போல சேதுத் திட்டம் இன்று நிறைவேறாததற்குக் காரணம் இந்த இந்துத்துவா என்கிற அமைப்பு, இந்துத்துவா என்கிற கொள்கை.

இன்னொன்று வரலாற்றைத் திரிப்பதற்குக் காரணமாக இருப்பது இந்துத்துவா. கடந்த பி.ஜே.பி. ஆட்சியில் ரோமிலா தாப்பரும், டி.டி.கோசாம்பியும், ஹபீப்பும் எழுதிய திராவிட இயக்க சமுதாயம் என்றால் என்ன? சிந்து சமவெளி நாகரீகம் என்றால் என்ன? என்பதை விளக்கினார்கள்.

சிந்து சமவெளி நாகரீகத்தில் காளை மாடு இருந்தது. சிவபெருமான் வழிபாடு இருந்தது. அங்கிருந்தவர்கள் உலகத்தின் மூத்த குடிகள். எகிப்திலே பிரமீடுகள் வருவதற்கு முன்னால், நைல் நதிக்கரையில் நாகரீகம் அரும்புவதற்கு முன்னால் சிந்து சமவெளி நாகரீகம், சைனாவினுடைய பெருஞ்சுவர் வருவதற்கு முன்னால் சிந்துசமவெளி நாரீகம் உயர்ந்திருந்தது. அதற்குச் சொந்தக்காரர்கள் தென்னிந்தியாவிலே இருக்கக் கூடிய திராவிடர்கள் என்கின்ற அந்த வரலாற்றைப் புரட்டி, இல்லை. அது காளை மாடு இல்லை, குதிரைதான். அது சிந்து சமவெளி அல்ல. இந்து சமவெளி. வெளியே இருந்து ஆரியர்கள் வரவில்லை.

இங்கேதான் இருந்தார்கள் என்கின்ற வரலாற்றுப் புரட்டை இன்றைக்கும் செய்து கொண்டிருக்கிறார்கள். ஜெய்பால் ரெட்டிதான் ஒரு முறை சொன்னார், பார்லிமெண்ட்ல, டெரரிஸ்ட்ட பத்தி பேசிக்கிட்டு இருந்தாங்க. அவர் சொன்னார், நேரடியா துப்பாக்கியை எடுத்துக் கொண்டு ஒரு நாட்டிலுள்ள மனிதர்களைச் சுடுவது என்பது வேறு, அது டெரரிஸ்ட்.

ஆனால் முரளி மனோகர் ஜோஷி இருக்கிறாரே அவர் டெக்ஸ்ட் புக் டெரரிஸ்ட் என்று ஜெய்பால் ரெட்டி சொன்னார். பாடத் திட்டத்தில் ஒரு பயங்கரவாதி, பாட நூல் பயங்கரவாதி. வரலாற்றைத் திரித்துக் கூறுகிற இந்துத்துவா அமைப்புகள் இன்னமும் இருந்து கொண்டிருக்கிறது. சேது சமுத்திரத் திட்டத்தை முடக்கிப் போடுவதற்கு இன்னமும் இந்துத்துவா இருக்கிறது.

இந்தச் சூழ்நிலையில் பெரியாரும், அம்பேத்கரும் இரு விளக்குகளாக உள்ளனர். இந்த இருளை நீக்குவதற்கு இந்த விளக்குகளை இரண்டு கைகளிலும் ஏந்திப் போராடுவதற்கு முன்வருவோம்.

(நிறைவு)