"தலித்துகள் ஆதிக்கக்காரர்களின் வஞ்சக வலைகளில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க வேண்டுமானால் தலித்துகளுக்கு அம்பேத்கரைப் போலவே பெரியாரும் வேண்டும், காரல் மார்க்சும் வேண்டும்" - ராஜ் கௌதமன்
தமிழ் அறிவுச் சூழலில் தவிர்க்க இயலாத அறிவாளுமையான ராஜ் கௌதமனின் 1992-லிருந்து 2008 வரையிலான தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுதி இது. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்டுள்ள இக்கட்டுரைத் தொகுதி எந்த அளவுகோலின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து எவ்வித பதிப்பு விளக்கமும் இல்லை. முன்னுரையில் ராஜ் கௌதமனே குறிப்பிடுவது போல 'இக்கட்டுரைகள் உருவான பல ஆண்டுகள் கழித்தே இங்கு தொகுப்பாக வெளியிடப்படுகின்றன' என்பதைக் கொண்டு பார்க்கையில், அவ்வப்போது எழுதிப் பிரசுரமாகி இதுவரை தொகுக்கப்படாத ராஜ் கௌதமனின் கட்டுரைகள் இவை என்று கருதிக் கொள்ள இடமுண்டு.
முதல் கட்டுரையான 'வேதாகமக் கல்வியும் தலித்தும்' என்ற கட்டுரையானது 1992-ல் அப்போது தமிழ்நாட்டை ஆண்ட அதிமுக ஜெயலலிதா ஆட்சியில் கொண்டுவரப்பட்ட வேதாகமக் கல்வி குறித்த விமர்சனமாக எழுதப்பட்டுள்ளது. நாடு முழுதும் எழும்பி வந்த பார்ப்பனீய மீட்புவாதத்தின் நீட்சியாக இந்த வேதாகமக் கல்வித் திணிப்பை மிகச் சரியாகவே கணித்த இக்கட்டுரையில், அரசு வழங்கும் இலவசங்கள் மக்களைப் பிச்சைக்காரர்கள் ஆக்கி வருகிறது என்ற ராஜ் கௌதமனின் பார்வை வியப்பளிக்கிறது. நிறுவப்பட்டு வரும் மத அடிப்படைவாத ஆளும் சக்திகளுக்கு எதிராக அரசியல் சட்டத்தை ஆயுதமாக அரசியல் செய்வோர் முன்னிறுத்தும் இன்றைய சூழலில், அரசியல் சட்டம் குறித்து ராஜ் கௌதமன் குறிப்பிடும் கருத்தும் கூர்நோக்கத்தக்கது - 'அரசியல் சட்டத்தை ஏற்படுத்திய ஏழு பேர்களில் ஐவர் பார்ப்பன அறிவாளிகள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். தலித் மக்கள் சார்பில் கலந்து கொண்ட டாக்டர் அம்பேத்கருக்கு அதில் என்ன சுதந்திரம் இருந்திருக்க முடியும்? அது மட்டுமல்ல, பிற்படுத்தப்பட்ட பெரும்பான்மை மக்கள் தொகுதிக்குரிய பிரதிநிதி யாரும் இந்தக் குழுவில் அங்கம் பெறவில்லை'. எனவே, தமிழ்நாட்டை ஆளும் அரசும் அரசாங்கமும் எந்தச் சாதிகள், வர்க்கங்களின் மேலாதிக்கத்தில் இருக்க முடியும் என்று நினைவில் கொண்டு வேதாகமக் கல்வியை எதிர்க்க வேண்டும் என்கிறார். அன்றைய காலகட்டத்தில் தோற்கடிக்கப்பட்ட கருணாநிதியின் திராவிடத்திற்கு எதிராகவும் தங்களுக்கு (ஆளும் பார்ப்பனீயத் தலைமைக்கு) ஆதரவாகவும் ஆதிதிராவிடத்தைத் திருப்புகிற கயமைதான் இந்த வேதாகமக் கல்வியை தலித்துகளையும் கற்க அழைக்கும் தந்திரமாகும் என்கிறார். தலித்துகள் ஆதிக்கக்காரர்களின் வஞ்சக வலைகளில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க வேண்டுமானால் தலித்துகளுக்கு அம்பேத்கரைப் போலவே, பெரியாரும் வேண்டும், காரல் மார்க்சும் வேண்டும் என்று 1992-ல் மிகச் சரியாக இக்கட்டுரையில் ராஜ் கௌதமன் சுட்டிக்காட்டியது இன்று வரை தேவையாகவே உள்ளது.
'ஸங்கர்ஷ்' என்ற தனிப் பிரசுரத்திலிருந்து ஜேன் பிளாக்ஸ் என்பவரது கட்டுரையின் மொழிபெயர்ப்பே இத்தொகுப்பில் உள்ள 'பெண்ணியமும் மார்க்சியமும்' என்ற இரண்டாவது கட்டுரையாகும். இம்மொழிபெயர்ப்புக் கட்டுரையானது 1985-ல் ராஜ் கௌதமன் குழுவினர் நடத்திய 'இலக்கிய வெளிவட்டம்' என்ற இதழில் வெளிவந்துள்ளது. பெண்ணியவாதிகள் தனிமனிதப் பிரச்சினைகளை மட்டும் முன்வைத்து உழைக்கும் வர்க்கத்தைப் பிரிக்கிறார்கள் என்றும், பூர்ஷ்வாக்களின் தனிப்பட்ட பிரச்சினையை அரசியல் போராட்டத்தில் முன்வைக்கிறார்கள் என்றும் நிறுவனமயமாக்கப்பட்ட மார்க்சியவாதிகள் தொடுத்த குற்றச்சாட்டுகளுக்குப் பதில் தேடும் வகையில் இக்கட்டுரை அமைந்துள்ளது. அமையப்பெறும் சோசலிச அரசு மட்டுமே பெண் விடுதலையை ஏற்படுத்தித் தந்துவிடுமா என்ற கேள்வியும், ஆண்களின் விடுதலையில் பெண்களின் விடுதலை சாத்தியமா என்ற கேள்வியும், பெண் குடும்பத்துள் நடத்தும் வேலையை உற்பத்தி பற்றிய கருத்துடன் இணைக்கும் புதுக் கருத்தியல் முறையையும், அதற்கு அப்போது தோன்றிப் பரவி வந்த அமைப்பியல்வாதம் (Structuralism), பிராய்டிசம் எனப்படும் உளவியலாய்வு, நிகழ்ச்சியுணர்வு வாதம் (Phenomenology) ஆகிய கருத்தியல் துறைகள் வழியாக மனித மறு உற்பத்தியில் சமூக உறவுகள் மற்றும் அதில் பெண்களின் பங்கு குறித்தும் அறிந்து கொள்வதும், அதன் வழியாக மேற்படி வினாக்களுக்கு விடை காணலாம் என்பதையும் விரிவான விளக்கங்களுடன் விவரிக்கிறது இக்கட்டுரை.
பொருளாதார ரீதியில் 'வர்க்கம்' என்றோ, சாதி மத ரீதியில் 'தீண்டத்தகாதோர்' என்றோ, உழைப்பு ரீதியில் 'பாட்டாளி' என்றோ குறிப்பிட்டு அடையாளம் காண முடியாத விளிம்பு நிலை மக்கள் தொகுதியாக உள்ள பெண்களின் அரசியல் முன்னெடுப்பு பற்றிப் பேசுகிறது 'குடும்பம் - பெண்ணியம்' என்ற 3-வது கட்டுரை. 1991-ல் 'நிறப்பிரிகை' இதழ் நடத்திய 'பெண்ணியம் - கூட்டு விவாதம்' பற்றிய ஓர் எதிர்வினையாக இக்கட்டுரை பதிவு செய்யப்பட்டுள்ளது. கம்யூனிஸ்டுகள், பழங்குடிகள், கறுப்பர்கள், தலித்துகள் போன்ற விளிம்பு நிலை மக்கள் தொகுதியினர், மேலாதிக்க மையப் பகுதியினரின் ஒடுக்குமுறைக் கருத்துகளை உருவேற்றித் தமக்கான கருத்துகளாகவே பழகிப் போயுள்ளதைப் போலவே பெண்களுக்கும் நேர்ந்துள்ளது. மேற்கத்திய வரலாற்றிலும் சரி, இந்தியத் துணைக்கண்ட வரலாற்றிலும் சரி, பெண் என்பவள் பிறப்பால் சபிக்கப்பட்டவள், பெண்ணை அளவிட அவளது பாலியல் ஒழுக்கமே அளவுகோல், பெண் அறிவியல்பூர்வமாகவே ஆணுக்குக் கீழானவள், மாதவிடாய் போன்ற இயற்கை உடலியல் மாறுபாடுகள் பெண்ணின் சக்தி விரயம் - அதனால் அவள் பலவீனமடைகிறாள், பெண் ஓர் உயிரியலின் கைதி, குடும்பம் என்ற அமைப்பு பெண்களுக்குப் பாதுகாப்பானது - அது உயர் நாகரிகத்தின் வெளிப்பாடு, அரசு உதிரும்போது குடும்பம் என்ற தனிச்சொத்துரிமை அமைப்பும் உதிர்ந்துவிடும் போன்ற கருத்துகளைப் பெரும்பான்மையான பெண்களே, அதிலும் மார்க்சியத்தால் உள்வாங்கப்பட்ட பெண்கள் உள்ளிட்டோரே நம்பும் நிலைதான் உள்ளது என்கிறார் ராஜ் கௌதமன். அதற்கு என்ன வகையான சிந்தனை முறை தேவைப்படுகிறது என்பதையும் கட்டுரையில் தெரிவிக்கிறார்.
நமக்குக் கற்பிக்கப்பட்ட எல்லாவற்றையும் நாம் விலக்கி வைத்து, இதுவரை சொல்லப்பட்டு வந்த வரலாற்றுக்கும், மரபுக்கும் அப்பாலும் பார்க்க முயலும் பார்வையே தேவை என்கிறார். அதற்குரிய நவீனப் பெண்ணியச் சிந்தனையாளர்களின் கருத்தியல்களைத் துணையாகக் கொள்கிறார். அதே நேரம் முதலீட்டியத்தின் கீழ் நடக்கும் திரிபுவாதங்கள், அந்நியமாதல்கள் போன்றவை கருத்துமுதல்வாதத்தில் முடிந்துவிடும் அபாயமும், அது ஒரு வகையான ரொமாண்டிசிச அபாயம் என்றும் குறிப்பிடுகிறார். ஆண் எளிதாகப் பெண்ணின் விடுதலை அரசியல் முன்னெடுப்புகளை ஏற்றுக்கொள்ள மாட்டான் என்றும், குடும்பத்தை எளிதில் கலைந்துபோக விடமாட்டான் என்றும், அதன் பாதுகாப்பான (அவனுக்கு) தன்மையையும் தாய், மனைவி, மகள் என்ற பெண்ணின் நிலைகள் தரும் 'சுகங்களை' சுலபத்தில் இழக்க முன்வரமாட்டான் என்றும், சிறு கம்யூன் என்ற நிலையில் தொடங்கி விடுதலையுற்ற பெண் - ஆண் வாழ்க்கை சமூக வாழ்வில் நிகழ்வதற்கு எவ்வாறான அணுகுமுறையைக் கைக்கொள்ள வேண்டும் என்பதை அன்னா ட்ரிஸ்டன், ஜூலியா கிறிஸ்தெவா, வில்கெம் ரீச், லக்கான், கிறிஸ்டின் டெல்பி, எஸ்.என். ராம்பால் போன்றோரின் கருத்தியல்கள் வழி ராஜ் கௌதமன் விரிவாக எடுத்து வைக்கிறார்.
சிலப்பதிகாரத்தில் கவுந்தியடிகள், கண்ணகி, கோவலன் ஆகியோர் புகார் நகரிலிருந்து மதுரைக்குச் சென்ற பெருவழியின் அடிப்படையில் அக்காலத்தில் நிலவிய சமூக அமைப்பினையும், காவிய ஆசிரியரது எண்ணவோட்டத்தையும் விளக்கும் பணியை மேற்கொள்கிறது தொகுப்பின் நான்காம் கட்டுரை. மிகவும் சுவாரசியமான கட்டுரையாகும். ஒரு காவியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பயணத் தடத்தின் வழியே அக்காலகட்டத்திய சமூக நிலையையும், அக்காலத்தின் அரசியல், ஆட்சி நிர்வாகம், சமயப் பரவல், தலங்களின் தோற்றம், வணிகம், வேளாண் உற்பத்தி, கைவினைத் தொழில், பழங்குடியினர் வாழ்வுமுறை போன்றவற்றை எடுத்துக்காட்டும் முறை புதிதாக உள்ளது. ஒரு நெடுஞ்சாலை உருவாக்கமானது பல்வகைப்பட்ட சமூகங்களுக்கிடையில் எத்தகைய உருமாற்றத்தையும் பண்பாட்டுக் கொடுக்கல் வாங்கல்களையும் ஏற்படுத்துகிறது என்பதைச் சுவைபடச் சொல்லிச் செல்கிறார் ராஜ் கௌதமன். திருவரங்கத்தில் வைணவ வழிபாட்டுடன் அருகத்துதி மேற்கொள்ளப்படும் சமண வழிபாடும் நிறைந்திருந்தது, சமணத் துறவிகள் தங்குவதற்கு இருந்த தவப்பள்ளிகள் போலவே கண்ணகி, கோவலன் போன்ற இல்லறச் சமணர்கள் தங்குவதற்கும் இடமிருந்தது, பெரும் வணிகக் குடிகள் சமண - பௌத்த மரபைக் கைக்கொண்டது, பாண்டிய ஆளுகைக்குட்பட்ட நிலப்பரப்பில் பெண்களுடன் கோவலன் இரவில் பயணம் மேற்கொண்டது, எயினர், மலைக்குறவர், வனவேடர், மறவர் ஆகியோரின் கொற்றவை என்ற ஐயை வழிபாடு, மறை ஓதாத பிராமணர் (வரிப் பாடல் பாடும் இசையால் பிழைத்தவர்கள் அல்லது சங்கறுத்து வளையல் செய்தவர்கள் இந்த பிராமணர்கள்) இருந்த ஊர் என்று வியக்கவைக்கும் செய்திகள் பல இக்கட்டுரையில் உள்ளன.
சங்க இலக்கியங்களில் காணப்படும், தொல்காப்பியத்தால் வரையறுக்கப்பட்டுள்ள அக இலக்கணத்தை மீறிய புதிய வித்தியாசமான சம்பிரதாயங்களைப் பற்றிக் குறிப்பிடுவதும், அதற்கான சமூகக் காரணங்கள் பற்றியும் தொகுப்பின் ஐந்தாம் கட்டுரை பேசுகிறது. குறிஞ்சித் திணையிலும், நெய்தல் திணையிலுமே களவு (காதல்) வாழ்க்கை நடைபெறுகிறது. காரணம், அத்திணை நிலப்பரப்புகளில் இயல்பாகவே பெண்கள் மீன் விற்க, உப்பு விற்க வீதிகளில் செல்ல நேர்வதும், அருவியில் நீராடவும், தந்தையின் தினைக் கொல்லைப் பரணில் ஏறித் தட்டை ஒலித்துக் கிளி குருவி விரட்டவும் சற்று சுதந்திரம் பெற்றிருந்தார்கள். பிரபலமான குறுந்தொகைப் பாடலான "யாயும் ஞாயும் யாராகியரோ" (எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்) என்ற பாடலின் வழியே தந்தைவழி உறவுமுறைகள் அக்காலகட்டத்தில் நிலவி வந்துள்ளதைப் புரிந்து கொள்ளலாம்.
குறிஞ்சியில் நாடன், வெற்பன் என்ற மலைக்குடித் தலைவனே குறப்பெண்ணான தலைவியைக் களவுக் காதல் செய்கிறான். பெற்றோர் மணஞ்செய்து தர மறுத்தால், அவன் அவளை உடன்போக்கில் கூட்டிச் செல்வது பாலைத் திணையில் வைத்துப் பாடப்பட்டுள்ளது. நெய்தல் பகுதிகளில் கொண்கன், சேர்ப்பன், துறைவன், புலம்பன் என்ற அசலூர் செல்வந்த பட்டின இளைஞன் பெரும்பாலும் பரதவப் பெண்ணையே, இரு பாடல்களில் மட்டும் உப்பு விற்கும் உமணப் பெண்களைக் களவுக் காதல் செய்கின்றனர். தேர்களில் வரும் ஆடவர்கள் யாரும் பரதவர்களாகத் தெரியவில்லை என்று சான்றாதாரங்களுடன் ராஜ் கௌதமன் விளக்குகிறார். இவற்றின் மூலம் சாதிய சமுதாயத்தில் கண்டிப்பான நடைமுறையாகவும், அவ்வமைப்பையே கட்டிக்காப்பதாகவும் உள்ள அகமணமுறைக்கு மாறாக, பழைய இனக்குழுச் சமூகங்களில் கண்டிப்பான புறமணமுறை நடைமுறை நிலவியதையும், தற்போதும் கூட பழங்குடிச் சமூகங்களில் இத்தகைய புறமணமுறை (ஓர் இனக்குழுவின் கிளைக்குள்ளே (Clan) மணம் தடை செய்யப்பட்டதும் மற்றொரு கிளையுடன் மணவினை நடப்பதும்) நடைமுறையில் இருப்பதையும் அதன் எச்சமாகக் குறிப்பிடுகிறார்.
நெய்தலில் மட்டும் வேறு வேறு சமூகப் பின்னணி கொண்டவர்களாகக் காதலர்கள் இருப்பது குறித்து வியக்கிறார். முல்லை மற்றும் மருதத் திணைகளில் நிலைபெற்றிருந்த தனிச் சொத்துரிமை, சிறிய அரசுகள் உருவாக்கம், நெல் விளைச்சலும் நிலப்பிரபுத்துவமும் மையமாகக் கொண்ட சமூக அமைப்பு உருவாக்கமும் கற்பு ஒழுக்கம் கற்பத்துப் பெண்களை ஆண்களின் உரிமை உடைமையாக்கியது என்பார். அதுவே பெருமைக்குரிய பண்பாடாகும் என்றும், கருத்தியல் ரீதியாகப் பெண்களையும் ஏற்றுக்கொள்ள வைத்த நிலை குறித்தும் பேசுகிறார். கற்பு ஒழுக்கம் நிலை பெற்றிருந்த மருதத் திணையில் பரத்தையர் சேரிகள் உருவாகியிருந்தன. கற்பு ஒழுக்கப் பெண்கள் கர்ப்பமான காலத்திலும், வீட்டுக்குத் தூரமான காலகட்டத்திலும் மருத நில ஆண்கள் பரத்தையரை நாடிச் செல்வது இல்லறத்தின் ஓர் அங்கமாகவே இருந்தது. வாய்மொழி மரபான நாட்டுப்புறக் கூத்து மற்றும் நாடகப் பாத்திர உருவாக்கத்தில் உள்ளதைப் போன்றே தலைவிக்குத் தோழி பாத்திரம், ராசாவுக்குப் பாங்கன் என்ற கோமாளி போன்ற பாணர் பாத்திரங்கள் உருவாக்கப்பட்டுள்ளதை விளக்குகிறார்.
பாணர்கள் பரத்தைமையில் உள்ள தலைவரிடமிருந்து தலைவிக்குச் செய்திகள் கொண்டுவரும்போது தலைவிகளால் புலையர் என்று கீழ்மைப்படுத்திப் பாடும் நிலை ஏற்பட்டபோது பாணர்களின் (அப்போதைய துடியர், பறையர், பாணர் போன்றோர்) விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டது நிகழத் தொடங்கியது என்று விளம்புகிறார். எட்டுத்தொகை, பத்துப்பாட்டு போன்ற அகப்பாடல்களில் புறத்தை விரவிக் கலந்த தொடக்கமானது பிற்காலத்தில் சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்கள் உருவாகக் காரணமாக இருந்ததைப் போன்று, புறப்பாடல்களில் அகத்தின் முதல், கருப்பொருள்கள் விரவிக் கிடந்தது தூது என்ற இலக்கிய வகை உருவாகக் காரணமாக இருந்ததென்கிறார். மதுரை, வைகை, வைதீக முருகன், திருமால், பாண்டியன் ஆகியவற்றைப் பாடிய கலித்தொகை மற்றும் பரிபாடலில் வழக்கமான மரபிலிருந்து வேறுபட்ட மரபைப் பின்பற்றியிருப்பதை எடுத்துக்காட்டுகள் வழியே விளக்கிச் செல்கிறார்.
சந்தை நாவலின் கட்டமைப்பில் இலக்கியத் தரமிக்க நாவல்கள் எழுதப்படத் தொடங்கியதைப் பற்றியும், தகவலியம், தொழில்நுட்பம், உலகமயம் என்ற அளவில் பாரிய மாற்றங்களுக்குட்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் சந்தை நாவல், தரமான நாவலுக்குமான எல்லைக்கோடு அழிக்கப்படும் நிலை பற்றியும் வேதநாயகம் பிள்ளை, குருசுவாமி சர்மா, அ. மாதவையா, ஆரணி குப்புசாமி முதலியார், வடுவூர் துரைசாமி அய்யங்கார், ரங்கராஜு, மறைமலையடிகள், வி.கோ.சூ. போன்றோரின் நாவல்களைக் கொண்டு விளக்க முற்படுகிறது 1997-ல் எழுதப்பட்ட 'தொடக்கநிலை நாவல் - பண்டித நாவல் - சந்தை நாவல்' என்ற ஆறாவது கட்டுரை.
1900 முதல் 1950 வரையிலான தமிழகச் சிறுகதைப் போக்குகள் பற்றிப் பேசுகிறது ஏழாவது கட்டுரை. மேற்படி கட்டுரையின் தொடக்கத்திலேயே ஒப்புதல் வாக்குமூலமாக அரை நூற்றாண்டு அனைத்துக் கதைகளையும் வாசித்து எழுதப்படவில்லை என்றும், இக்காலகட்டத்திய சிறுகதை வளர்ச்சி பற்றி புதுமைப்பித்தன், ச. செந்தில்நாதன், கா. சிவத்தம்பி, சி.சு. செல்லப்பா, பெ.கோ. சுந்தரராஜன், சோ. சிவபாதசுந்தரம், தொ.மு.சி. ரகுநாதன் ஆகியோரின் நூல்கள், கருத்துகளை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டதாகக் குறிப்பிட்டு, ஒவ்வொருவரின் கருத்தின் வழியே ஆசிரியரின் தனிப்பட்ட ஆய்வுத் திறப்புகளை இக்கட்டுரை விளக்கிச் செல்கிறது. நவீன சிறுகதையை நல்ல முறையில் அறிமுகம் செய்தவர் வ.வே.சு. அய்யர் என்றால், அதனை வளப்படுத்தியவர்களாக மணிக்கொடி எழுத்தாளர்களைச் சொல்லலாம் என்பதோடு சிறுகதையின் அழகைக் காட்டியவர் கு.ப.ரா. என்றால், அதன் பல்வேறு சாத்தியங்களையும் நடைமுறையில் செய்து காட்டியவர் புதுமைப்பித்தன் என்றும் குறிப்பிட்டு முடிக்கிறார்.
விளிம்பு நிலை மக்களியல் பற்றிய விரிவான கட்டுரையாகத் திகழ்கிறது தொகுப்பின் எட்டாம் கட்டுரையான 'புறக்கணிக்கப்பட்ட மக்கள் நோக்கில் மறுபரிசீலனையும் சமூக உருமாற்றமும்'. இத்தாலிய மார்க்சியரான அந்தோனியோ கிராம்சி அரசியல் ரீதியாக முதன்முறையாகப் பயன்படுத்திய ‘Subaltern’ என்ற சொல்லாடல் இந்திய அளவில் 1960-லிருந்து ரணஜித் குஹா அறிமுகப்படுத்திப் பணிபுரிந்ததைக் குறிப்பிட்டுத் தொடங்கும் இக்கட்டுரையானது யார் யார் விளிம்பு நிலை எனப்படுவோர், அவர்களின் வரலாறு, அவர்களின் பார்வையில் சமூக மாற்றத்தை அடைவதற்கான செயல்பாடு ஆகிய விஷயங்களைப் பேசுகிறது. பழங்குடியினர், பெண்கள், தலித் மக்கள் ஆகியோரை விளிம்பு நிலை மக்கள் தொகுதியினர் என்று குறிப்பிடும் ராஜ் கௌதமன், இவற்றைச் சேராத பால் புதுமையினர், மாற்றுத் திறனாளிகள் போன்றோரைச் சேர்ப்பவர்களை ஐயம் தொனிக்கும் குரலில் சுட்டுவது வியப்பளிக்கிறது; ஏற்கத்தக்கதாகவும் இல்லை. இக்கட்டுரை 2006-ல் எழுதியதாகக் குறிப்புள்ளது. ஒருவேளை இப்போது இக்கட்டுரை எழுதப்பட்டிருப்பின் LGBTQ, மாற்றுத் திறனாளிகள் போன்றோரை அவரே சேர்த்திருக்கக்கூடும். விளிம்பு நிலை மக்களின் விடுதலை அரசியலுக்கு ஆசிரியர் கீழ்க்கண்ட 3 'அ'க்களைச் செயல்படுத்த வேண்டும் என்கிறார் - 'ஆதிக்கக் கருத்தியல் கட்டுமானங்கள் புனைந்த கற்பிதங்களில் உள்ள அபத்தங்களை அம்பலப்படுத்துதல் வேண்டும் (Exposition). ஆதிக்கக் கருத்தியல் கட்டுமானங்களுக்குள்ளேயே உள்ள நேர்மறையான அம்சங்களை அபகரிக்க வேண்டும் (Appropriation). பிறப்பால் கற்பிக்கப்படும் அபத்தமான தகுதிகளையும் அவற்றின் மதிப்பீடுகளையும் அழித்தொழிக்க வேண்டும் (Annihilation).'
1904 - 1908 வரையிலான காலகட்டத்தில் பாரதியின் அரசியல் இயக்கம் எவ்வாறு இருந்தது என்பதையும், இக்காலகட்டத்தின் தொடக்கத்தில் சமூக சீர்திருத்தமே முதன்மையானது என்று முழங்கிய பாரதி, இறுதியில் அரசியல் விடுதலையே முதன்மையானது (சுயராஜ்யம்), சமூக சீர்திருத்தம் பேசுவோர் அதன் எதிரிகள் என்ற அந்தர் பல்டி நிலைக்கு வந்து சேர்வது வரை பாரதியின் படைப்புகளின் வழியே தொகுப்பின் ஒன்பதாம் கட்டுரையில் ராஜ் கௌதமன் நிறுவுகிறார். பாரதம், ஆரியவர்த்தம், பிரம்மதேசம் ஆகிய தொன்மங்களின் நவீன அடையாளமாக இந்திய தேச உருவாக்கமும் தேசிய உணர்வும் இருந்ததை இக்கட்டுரை பேசுவது, இன்றைய வைதீக சனாதன மத அடிப்படைவாத பாரத தேசியக் கருத்தியல் வலுப்பெற்று வரும் சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இப்போதும் உள்ளது மறுக்கவியலாது. எவ்வாறு தொடர்ச்சியாக பல்வேறு வரலாற்றுக் காலகட்டங்களில் தொடங்கி நாளது தேதி வரை 'பாரத தேச' சித்தாந்தம் உருப்பெற்று வந்துள்ளது என்பதற்கு ஒரு பருக்கை எடுத்துக்காட்டாக பாரதியை முன்வைத்து இக்கட்டுரை பேசுகிறது.
தொல்காப்பியம் எவ்வாறு ஓர் இலக்கண விளக்கவியல் ஆய்வு அடிப்படையிலான நூல் என்பதையும், சங்க இலக்கியங்கள் அவ்வாறன்றி மாந்தர்களின் அக - புற வாழ்வை ஒட்டி அறங்கள் கூறுகின்றன என்பதையும் ஆதாரங்களோடு விளக்கும் கட்டுரை பத்தாவது கட்டுரையான 'தொல்காப்பியம், சங்க இலக்கியம் - அறவியல் நோக்கு' ஆகும். சங்க இலக்கியப் பாடல்கள் பாடப்பட்ட காலம் வேறு என்பதும், தொல்காப்பிய நூல் உருவாக்கக் காலம் வேறு என்பதும் அறவியல் நோக்கில் விளக்கப்படுகிறது. சங்க இலக்கியப் பாடல்கள் நூல்களாகத் தொகுக்கப்பட்ட காலமும் அவை பாடப்பட்ட காலமும் வேறு வேறாகவே இருந்திருக்க வாய்ப்புள்ளது. சமண - பௌத்தம் ஆகிய சிரமண மதங்கள் மேலோங்கிய காலத்தில் தொல்காப்பியம் படைக்கப்பட்டிருக்கக்கூடும் என்கிறார் ஆசிரியர்.
தொகுப்பின் இறுதியில் ஆசிரியரின் பாணர் குழுவினர் எவ்வாறு விளிம்புநிலை மக்கள் தொகுதியினராக மாற்றப்பட்டுள்ளனர் என்பதைச் சங்க இலக்கியங்கள் வழி நிறுவும் ஆங்கில வழிக் கட்டுரையாகும். இக்கட்டுரையில் உள்ள கருத்துகளில் பெரும்பாலானவை இத்தொகுப்பின் 4, 5 மற்றும் 10-வது கட்டுரைகளில் ஆசிரியர் ஏற்கனவே தமிழில் விரிவாக எழுதியவற்றின் சுருக்கமான ஆங்கில மொழிபெயர்ப்பாகவே தெரிகிறது.
காலச்சுவடு கண்ணன் நேர்காணல் செய்த ராஜ் கௌதமனின் மிக விரிவான செவ்வி ஒன்றும் தொகுப்பின் கடைசியில் இணைக்கப்பட்டுள்ளது. தொகுப்பில் நமக்கு எழும் நியாயமான கேள்விகள், ஐயங்கள், விமர்சனங்கள் ஆகியவற்றுக்கு ஆசிரியரே பதில் கூறுவதாக இச்செவ்வி அமைந்துள்ளது. சில இடங்களில் சுந்தர ராமசாமி பற்றிய 'அழுத்தம்' தொனிப்பது நேர்காணலை மேற்கொண்டது காலச்சுவடு கண்ணன் என்பதனாலும் இருக்கலாமோ? எம்.ஜி.ஆர். ரசிகராக இருந்தது, தமிழவன், ரவிக்குமார், எஸ்.வி.ஆர்., ஞானி, மா. கிருஷ்ணன் ஆகியோருடனான நட்பு, சொந்த வாழ்க்கைக் குறிப்புகள், அ-புனைவு ஆக்கங்களிலிருந்து புனைவாக்கங்களுக்கு நகர்ந்த சுவாரசியமான காரணங்கள், மரபான விஷயங்களை மனம் வெறுத்து அவநம்பிக்கைக்கு உள்ளாகி எல்லாவற்றையும் கேலி செய்யும், விமர்சனம் செய்யும் புதுமைப்பித்தனின் மனோபாவம் அடிப்படையில் தலித் மனோபாவம் என்பது, வள்ளலாரும் புதுமைப்பித்தனும் தலித்துகளுக்குச் சார்பாகச் செயல்பட்டவர்கள் என்பது போன்ற பல சுவையான தகவல்கள் கொண்டதாக நேர்காணல் விரிகிறது.
ராஜ் கௌதமனே சொல்வது போல அவருடைய சிந்தனைகளின் பரிணாம வளர்ச்சி அல்லது தளர்ச்சி ஆகியவற்றை இனம் காண இத்தொகுப்பு துணைபுரிவதோடு, தமிழின் முக்கிய சிந்தனை ஆளுமைகளில் ஒருவரின் கருத்தியல்களை விரிவாகப் புரிந்துகொள்ளவும் இத்தொகுப்பு உதவுகிறது.
(நூல் விவரங்கள்: ராஜ் கௌதமன் கட்டுரைகள் - ராஜ் கௌதமன் - NCBH வெளியீடு - www.ncbhpublisher.in - மின்னஞ்சல்:
- அன்புச்செல்வன்