Bharathi tamilதமிழகத்தில் பொதுவுடைமைச் சிந்தனைகள் பாரதியெனும் மகாகவிஞனை அடையாளப்படுத்தி முன்னெடுத்துச் செல்லப்பட்டன. பொதுவுடைமை, புரட்சி என்கிற சொற்களைத் தமிழில் முதலில் அறிமுகப்படுத்தியவர் பாரதியே.

தமிழில் மார்க்சியத் திறனாய்வு என்பது பாரதியின் படைப்புகள் பற்றிய விவாதத்தின் வழியே அறிமுகமானது. இதனைத் தொடங்கி வைத்தவர் பேராசான் ப.ஜீவானந்தம். இந்திய விடுதலைக்குப் பின்னர் பாரதி பற்றிய ஆய்வுகளையும், பாரதி விழாக்களையும் முன்னெடுத்துச் சென்றவர்கள் பொதுவுடைமைச் சிந்தனையாளர்களே.

ஜீவாவின் முன் முயற்சி காரணமாக பாரதி பிறந்த மண்ணான எட்டையபுரத்தில் பாரதி முற்போக்கு வாலிபர் சங்கம் உருவாக்கப்பட்டது. இச்சங்கத்தின் சார்பாக ஆண்டுதோறும் பாரதி நினைவுநாள் செப்டம்பர் மாதத்தில் ஊர்த்திருவிழாவைப் போல் இரண்டு நாள்கள் கொண்டாடி வருகின்றனர்.

இவ்விழாவின் போது கருத்தரங்குகளும் பட்டிமன்றங்களும் வழக்காடு மன்றங்களும் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. இந்நிகழ்வில் மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் கே.டி.கே.தங்கமணி, கே.பாலதண்டாயுதம், அறந்தை நாராயணன், தஞ்சை இராமமூர்த்தி, குன்றக்குடி அடிகளார், கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன், ராஜம் கிருஷ்ணன் ஆகிய பெரும் ஆளுமைகள் கலந்துகொண்டுள்ளனர்.

பாரதி விழாவின் மூலமாகவே நாவலாசிரியர் பொன்னீலன், பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன், பேராசிரியர் தி.சு.நடராசன், ஆய்வாளர் செந்தீ நடராசன், சி.சொக்கலிங்கம், நா.இராமச்சந்திரன் ஆகியோர் பொதுவுடைமை இயக்கத்திற்கும், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்திற்கும் அறிமுகமாயினர்.

எட்டையபுரம் பாரதி விழாவை ஒருங்கிணைத்துத் தொடர்ந்து நடத்தியதில் பேராசிரியர் நா.வானமாமலை, தொ.மு.சி.ரகுநாதன் ஆகியோர் வரிசையில் இளசை மணியனுக்கு மிக முக்கியமான பங்குண்டு.

விழாவைத் திட்டமிடல், நிதி திரட்டல், மேடை பொறுப்பு, உணவு ஆகிய அனைத்துப் பணிகளிலும் பங்கேற்று தனது வீட்டுத் திருமணத்தைப் போல் இந்த விழாவை ஆண்டுதோறும் கொண்டாடி வந்தார். பாரதியின் மீதும் பொதுவுடைமைச் சிந்தனையின் மீதும் கொண்ட ஈடுபாட்டின் காரணமாக அரசு வேலையைத் துறந்து இளசை மணியன் இப்பணியில் ஈடுபட்டார்.

பாரதி செயல்பாட்டாளர் என்ற நிலையைத் தாண்டி பாரதி ஆய்வாளர் என்ற வரிசையில் அவருக்கு இடம் தேடித்தந்தது ‘பாரதி தரிசனம்’ (1977) என்ற அவரது பாரதியாரின் இந்தியா பத்திரிகை கட்டுரைகள் தொகுப்பு நூலாகும்.

இரண்டு பகுதிகளாக வெளிவந்த இந்நூலைப் பெரும் முயற்சியில் வெளிக்கொண்டுவந்தார். கல்கத்தா தேசிய நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்த இந்தியா பத்திரிகையின் மூலப் பிரதிகளை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹிரேன் முகர்ஜியின் உதவியால் பெற்று நூலாக்கினார்.

இந்தியா பத்திரிகையின் மைக்ரோ பிலிம்மை வாசிப்பதற்கு உள்ளூர் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு லென்சைப் பொருத்தி மிகச் சிரமப்பட்டு வாசித்து மூன்றாண்டுகள் கடுமையாக உழைத்து அதனை நூலாக்கினார்.

அவ்வகையில் இந்தியா பத்திரிகையில் வெளிவந்த பாரதி கட்டுரைகளை முதலில் நூலாகக் கொண்டு வந்த பெருமை இளசை மணியனுக்கே உண்டு. பாரதி ஆய்வு வரலாற்றில் இந்நூல் இன்றும் ஒரு மைல்கல்லாகத் திகழ்கின்றது.

தொ.மு.சி.ரகுநாதன் அறக்கட்டளையின் செயலாளர் என்ற முறையில் எட்டையபுரத்திலுள்ள ரகுநாதன் நூலகத்தை உருவாக்கியதிலும் அதனைத் தொடர்ந்து பராமரித்துப் பாதுகாத்ததிலும் இளசை மணியனுக்குக் குறிப்பிடத்தக்க பங்குண்டு.

இடதுசாரி படைப்பாளியாகவும் விமர்சகராகவும் திகழ்ந்த தொ.மு.சி.ரகுநாதன் இளசை மணியனின் செயல்பாடுகளுக்குப் பல வகையில் தூண்டுதலாக இருந்தார். இதன் காரணமாக ரகுநாதனின் மறைவுக்குப் பிறகு ரகுநாதன், சாந்தி, தாமரை, குமரிமலர், முல்லை, தேசாபிமானி, ஆனந்தபோதினி ஆகிய இதழ்களில் எழுதிய அரிய பல கட்டுரைகளைத் தொகுத்து ’மனசாட்சியின் குரல் பாரதி’ (2012) என்ற தலைப்பில் இளசை மணியன் நூலாக்கியுள்ளார்.

இத்தொகுப்பு நூல் பாரதி ஆய்வு நூல்கள் வரிசையில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இதனைத் தொடர்ந்து பாரதியைப் பற்றி அவர் நண்பர்கள் எழுதியதைத் தொகுத்து ஒரு நூலாக்கியுள்ளார் (2018).

இந்நூலைக் கீழஈரால் தொன் போஸ்கோ கல்லூரியினர் வெளியிட்டுள்ளனர். மேலும் பாரதியைப் பற்றி மார்க்சிய அறிஞர் ஆர்.கே.கண்ணன் தாமரை, சரஸ்வதி இதழ்களில் எழுதிய பாரதி பற்றிய கட்டுரைகளைத் தொகுத்து ‘பாரதியின் கீர்த்தியும் மூர்த்தியும்’ (2017) எனும் தலைப்பில் நூலாக்கியுள்ளார்.

சோவியத் புரட்சியின் நூற்றாண்டு நிறைவையட்டி சோவியத் பலகனி இதழில் வெளிவந்த ருசியப் புரட்சிக்கும் இந்தியாவிற்குமான தொடர்பு பற்றி சோவியத் அறிஞர்களின் கட்டுரைகளைத் தொகுத்து ‘ருசியப் புரட்சியும் இந்தியாவும்’ (2019) எனும் நூலாக்கியுள்ளார்.

இவையன்றி பாரதியையும் தாகூரையும் பற்றி அவர் எழுதிய மூன்று கட்டுரைகளை சிறு பிரசுரமாக வெளியிட எண்ணியுள்ளார். தற்போது அதன் கையெழுத்துப் பிரதி கோவை வழக்கறிஞர் சுப்பிரமணியனிடம் இருப்பதாக அறிகிறேன்.

எட்டையபுரத்திலுள்ள பாரதி அருங்காட்சியகத் தோடும் (பாரதி பிறந்த இல்லம்), பாரதி மணிமண்டப நூலகத்தோடும் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்த இளசை மணியன் பாரதியின் அரிய கைப்பிரதிகளையும் தேடிச்சேகரித்து வைத்திருந்தார்.

விளாத்திகுளம் சுவாமிகள் பற்றிய கட்டுரை தாமரை இதழில் வெளிவரச் செய்தார். அத்தோடு எட்டையபுர அரண்மனையோடு கொண்டிருந்த தொடர்பின் காரணமாக அரண்மனை அச்சகத்தில் வெளியிடப்பட்ட ‘வம்ச தீபிகை’ முதலான அரிய நூல்களைச் சேகரித்துப் பாதுகாத்து வைத்திருந்தார்.

அவ்வகையில் பாரதியாரால் இரங்கற்பா பாடப்பட்ட சுப்புராம தீட்சிதர் தெலுங்கிலிருந்து தமிழில் மொழிபெயர்த்த ‘ஆந்திர மகாபாரதம்’ நூலின் பழமையான அச்சுப் பிரதியை அச்சில் கொணரும் முயற்சியில் ஈடுபட்டார்.

ஆனால் அந்நூலின் முற்பகுதியில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பக்கங்கள் கறையானால் அரித்துத் தின்னப்பட்டிருந்தன. மதுரை காமராசர் பல்கலைக்கழக மேனாள் தெலுங்குப் பேராசிரியர் டி.எஸ்.கிரிபிரகாஷ் அவர்கள் உதவியோடு அந்நூலை வெளியிட நானும் முயற்சி செய்தேன்.

தற்போது அந்நூலை வெளியிட சாகித்திய அகாதெமி நிறுவனம் முன்வந்துள்ளது.

இளசை மணியன் எளிய மனிதர். ஆர்ப்பாட்டம் இல்லாதவர். புன்முறுவலோடு எல்லோரையும் வரவேற்று விருந்தோம்பல் செய்யும் நற்பண்பு மிக்கவர். எங்கள் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை மாணவர்கள் கடந்த பத்தாண்டுகளாக எட்டையபுரம் பாரதி விழாவில் பங்கேற்ற போது அவர் செய்த உதவிகள் மறக்கமுடியாதவை.

மேலும் எங்கள் பல்கலைக்கழக பாரதியார் ஆய்வகத்தின் சார்பில் பாரதியார் அருங்காட்சியகம் அமைவதற்குப் பேருதவிகள் புரிந்தார். அதன் திறப்புவிழாவில் (15.08.2016) பங்கேற்றுச் சிறப்பித்தார். மேலும் அந்த அருங்காட்சியகத்தினைச் சிறப்பு மிக்கதாக்குவதற்கு பாரதியின் கையெழுத்துப் பிரதி ஒன்றை எனக்குத் தருவதாக வாக்களித்திருந்தார். அதனை அஞ்சலில் அனுப்பி வைப்பதாகவும் சொன்னார்.

நான் புதிய துணைவேந்தர் வந்த பிறகு அதனை ஒரு நிகழ்வாகச் செய்யலாம் என்று கருதி அனுப்ப வேண்டாமென்று கூறிவிட்டேன். அப்பிரதி இப்போது எங்கிருக்கிறது என்று தெரியவில்லை. எட்டையபுரம் பாரதி விழாவைத் தொடர்ந்து நடத்துவதும் ரகுநாதன் நூலகத்தைப் பாதுகாப்பதும் நாடறியச் செய்வதுமே இளசை மணியனுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.

- பா. ஆனந்தகுமார்