“பெயல் மணக்கும் முற்றம்” — மழை பெய்த பிறகு மண்ணின் மணமும், ஈரத்தின் வாசனையும் நிறைந்த வீட்டின் முற்றம் என்ற அழகான காட்சி முதலில் மனதில் விரிகிறது.

இன்னும் ஆழமாகப் பார்த்தால், இந்தத் தலைப்பு மழை நனைத்த மண், பழைய வீட்டு முற்றம், நினைவுகள், அமைதி, குழந்தைப் பருவம் எனப் பல உணர்வுகளையும் நமக்குள் எழுப்புகிறது. நூலின் தலைப்பிற்கேற்ப, தொகுப்பின் பல கவிதைகளிலும் மண்ணின் மணமும், மழை பெய்த ஈரத்தின் வாசனையும் இருப்பதை உணர முடிகிறது.

manjula book 500ஆனால் கவிதையை வாசிக்கும்போது ஒரு கேள்வி எழுகிறது. புனைவு என்றால் என்ன?

என்னைப் பொறுத்தவரை, புனைவு என்பது கவிஞர் தனது வார்த்தைச் சாதுர்யத்தை வெளிப்படுத்துவதற்கான ஒரு உத்தி மட்டுமல்ல. அவர் கண்ட ஒரு நிகழ்வை, காட்சியை அல்லது அனுபவத்தைத் தனது அக உலகின் வழியாக மறுபடியும் உருவாக்குவதும் புனைவுதான். கவிஞருக்குத் தோன்றிய விதத்தில் ஒரு காட்சி கவிதையாகிறது. ஆனால் அந்தக் கவிதையை வாசிக்கும் வாசகன் அதே பொருளைத்தான் புரிந்துகொள்வானா?

கவிஞர் ஒன்று சொல்ல, வாசகன் வேறொன்றைப் புரிந்துகொள்ளும் ஆபத்து கவிதையில் எப்போதும் இருக்கிறது.

அப்படியானால், கவிதையின் புனைவு வாசகனுக்குப் புரியும் அளவு எவ்வளவு இருக்க வேண்டும்? என்பது முக்கியமான விமர்சனக் கேள்வியாகிறது.

ஒரு காட்சியைப் பார்த்து அதை அப்படியே பதிவு செய்துவிட்டால் அது ஒரு செய்தியாக இருக்கலாம். அந்தக் காட்சிக்குள் கவிஞரின் கற்பனையும் உணர்வும் நுழையும்போதுதான் அது கவிதையாகிறது. ஆனால் அந்தப் புனைவு வாசகன் பற்றிக் கொள்ளக்கூடிய ஒரு கயிற்றை விட்டிருக்க வேண்டும். இல்லையென்றால், கவிதை கவிஞருக்குள் நிகழ்ந்த அனுபவமாக மட்டுமே நின்றுவிடும்.இந்த அளவுகோலில் மஞ்சுளாவின் கவிதைகளை வாசிக்கும்போது, அவருடைய புனைவு வாசகனுக்கு எட்டாத தொலைவுக்குச் செல்வதில்லை என்பது என் வாசிப்பு.அவர் காட்சியை மறைத்துப் புதிராக்குவதில்லை; மாறாக, நாம் ஏற்கெனவே பார்த்த ஒரு காட்சிக்குள் நாம் கவனிக்கத் தவறிய இன்னொரு உலகத்தைத் திறக்கிறார்.அதுதான் மஞ்சுளாவின் கவிதைகளை வாசிப்பதில் எனக்குக் கிடைத்த முதல் அனுபவம்.

கவிஞர் மஞ்சுளா

மதுரையைச் சேர்ந்த கவிஞர் மஞ்சுளா, இருபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து கவிதை எழுதி வருபவர். முன்னணி இலக்கிய இதழ்கள், இணைய இதழ்கள், மின்னிதழ்கள் எனப் பல்வேறு தளங்களில் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளன. கவிதை மட்டுமல்லாமல், இலக்கிய நூல்கள் குறித்த விமர்சனங்களையும் தொடர்ந்து எழுதி வருகிறார்.

“இது தேநீர் காலம்”, “தீமிதி”, “மொழியின் கதவு”, “இன்னுமொரு மழை”, “ஒரு பொத்தல் குடையும் சில போதி மரங்களும்”, “வாகை மரத்தின் அடியில் ஒரு கொற்றவை”, “வான்கோவின் தூரிகை” ஆகிய கவிதைத் தொகுப்புகளும், “தூரிகையில் ஒரு சங்கச் சித்திரம்” என்ற கட்டுரைத் தொகுப்பும் இதுவரை வெளியாகியுள்ளன.

பல்வேறு கலை இலக்கிய அமைப்புகளிலும் தொடர்ந்து பங்களித்து வரும் மஞ்சுளா, திருப்பூர் சக்தி விருது, அசோகமித்திரன் நினைவு படைப்பூக்க விருது, ஆளுமை மகளிர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.

இத்தனை ஆண்டுகால வாசிப்பும் எழுத்தும் கொண்ட ஒரு கவிஞரின் புதிய தொகுப்பாக “பெயல் மணக்கும் முற்றம்” நம் கைகளுக்கு வருகிறது. அவரது முன்னுரையில் அவர் குறிப்பிடுவது போல, வாசிப்பிலிருந்து கவிதைக்குள் வந்த இந்தப் பயணம் இன்னும் முடிவடையவில்லை. அந்தத் தொடர்ந்த தேடலின் சில தடங்களை இத்தொகுப்பின் கவிதைகளில் நாம் காண முடிகிறது.

சொற்களின் வழியே என்னைத் தேடி...

கவிதை என்பது சிலருக்கு மட்டுமே வாய்ப்பது ஏன்? இது ஏதேனும் பாரம்பரியத் திறனா? அல்லது கவிதை மனம் உருவாக மனிதர்களுக்குள் ஏதேனும் தனித்துவமான செயல்பாடு நிகழ்கிறதா? என்ற கேள்வி எப்போதும் என் மனதிற்குள் எழுவதுண்டு.

இந்தக் கேள்விக்கான ஒரு பதிலை கவிஞர் மஞ்சுளா அவர்களின் முன்னுரையில் காண முடிகிறது. கவிதை தன்னுள் எவ்வாறு உருவாகிறது என்பதை அவர் தனது அனுபவத்தின் வழியாகச் சொல்கிறார்:

“இன்னும் இன்னுமாகச் சொற்கள் மூலமாகவே என்னிலிருந்து என்னை வெளியேற்றிக்கொண்டிருக்கிறேன். வாழ்க்கை பரந்துபட்டது. மனிதர்கள் வெறும் கருவிதான்; அதற்கு ஒவ்வொரு கருவியும் தொழிற்படவே செய்யும். கலையும் கருவியாய்த் தொழிற்படவே கவிதை இங்கு சாத்தியமாகிறது.”

மேலும்,

“ஒவ்வொரு சொல்லையும் இறுகப் பற்றிக்கொள்ள ஏதுவாக ஏதோவொரு புள்ளியில் கவிதையோடு என்னை இணைத்துக்கொள்ளும் முயற்சியில் மிகக் கவனமாகக் காலத்தின் கைப்பற்றி நடக்கிறேன். அதேவேளையில், என்னையும் கவிதையின் போக்கில் இழுத்துக்கொண்ட வேகத்துடன் அதன் முடிவில்லாத பாதையில் பயணிக்கவும் மேலும் மேலும் கற்றுக்கொள்ளவும் ஆசையுடன் தொடர்கிறேன்.”

இந்த வரிகளை வாசிக்கும்போது, கவிதை என்பது திடீரென்று நிகழும் ஒரு வெளிப்பாடு அல்ல என்பது புரிகிறது. வாசிப்பு, வாழ்க்கை, மனிதர்கள், அனுபவங்கள், சொற்கள் என அனைத்தையும் உள்வாங்கிக்கொண்டு, அவற்றோடு தொடர்ந்து பயணிக்கும் ஒரு மனநிலையே கவிதைக்குள் உருமாறுகிறது.கவிஞரின் இந்த வரிகளையே ஒரு திறவுகோலாக வைத்துக்கொண்டு, இப்போது அவரது கவிதைகளுக்குள் நுழையலாம்.

“வேர்கள் தவமிருக்கும்” — கவிதை

கவிதை என்பது மனித மனத்தின் செயல்பாடுகளையும் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் தன்மை கொண்டது. அந்த வகையில், இந்த முதல் கவிதையில் இயற்கைக் காட்சிகளின் வழியாக மனித வாழ்க்கையின் ஒரு உணர்வை வாசகருக்குள் எழுப்பியிருக்கிறார் கவிஞர்.

பூக்கவும் இல்லை
காய்க்கவும் இல்லை

வேர்கள் தவமிருக்கும்...

...

கூடுகளை இழந்த சில
தாய்ப் பறவைகளின் கீச்சொலிகள்

“பூக்கவும் இல்லை / காய்க்கவும் இல்லை” என்று தொடங்கும் வரிகள், ஒரு மரத்தையும் அதன் கிளைகளையும் பறவைகளையும் பேசுவது போலத் தோன்றுகின்றன. ஆனால், வெளிப்புறமாக எந்த மாற்றமும் நிகழாத ஒரு நிலையை அவை முன்வைக்கின்றன. அந்த மரம் உயிரற்றது அல்ல. “வேர்கள் தவமிருக்கும்” என்ற சொல்லாட்சி, வெளியில் எதுவும் தெரியாமல் உள்ளுக்குள் நடைபெறும் காத்திருப்பை அழகாகச் சுட்டுகிறது.இங்கே காத்திருப்பு, இழப்பு, மௌனம், உயிர்ப்புக்கான சாத்தியம் ஆகிய உணர்வுகள் ஒன்றோடொன்று கலந்திருக்கின்றன.

“இளவேனிற்காலத்தில் மட்டும் / கிளைகள் தோறும் / அதன் சாயல் வெளித்தெரிய” என்ற வரிகள், இயற்கையின் ஒரு பருவ மாற்றத்தை மட்டும் குறிக்கவில்லை. மௌனமாக இருந்த ஒன்றின் இருப்பு மீண்டும் வெளிப்படுவது போன்ற உணர்வையும் தருகின்றன. நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, மறைந்திருந்த ஒரு இருப்பு தன் சாயலை மீண்டும் காட்டுகிறது.

கவிதையின் இறுதியில் திடீரென வரும்,

“கூடுகளை இழந்த சில / தாய்ப் பறவைகளின் கீச்சொலிகள்”

என்ற வரிகள், கவிதைக்கு வேறொரு ஆழத்தைத் தருகின்றன. இங்கே மரத்தின் மௌனத்தோடு கூடுகளை இழந்த பறவைகளின் இழப்பும் இணைகிறது.கீச்சொலி இங்கே வெறும் மகிழ்ச்சியின் அடையாளமாகத் தெரியவில்லை. இழப்புக்குப் பிறகும் தொடரும் உயிரின் குரலாக அது ஒலிக்கிறது.மரம், வேர்கள், கிளைகள், பருவம், பறவைகள் என்று இயற்கையின் காட்சிகளைக் கொண்டு தொடங்கும் கவிதை, இறுதியில் மனித மனத்திற்குள் வந்து நிற்கிறது. அதுவே இந்தக் கவிதையின் அழகு.

வாழ்க்கை என்ற புனைவு”

“ஒளி என்று சொல்கிறேன் நான்
அது ஒளியல்ல என்கிறாய் நீ”

என்ற வரிகளிலேயே கவிதை ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது. உண்மை என்பது ஒரே வடிவத்தில் அனைவருக்கும் பிடிபடக்கூடியதா? ஒருவருக்குத் தெரியும் ஒளி, இன்னொருவருக்குப் இருளாகத் தோன்றலாம். ஒருவரின் பார்வையில் உண்மையாக இருப்பது, இன்னொருவரின் பார்வையில் வேறொரு உண்மையாக மாறலாம்.

“நானும் நீயும்
ஒளியாயும் இருளாயும்
நடந்து நடந்து”

என்று வரும்போது, மனிதர்களின் வாழ்க்கைப் பயணம் ஒரு நிலையான அடையாளத்துக்குள் அடங்குவதில்லை என்பதை கவிஞர் உணர்த்துகிறார். நாம் சில நேரங்களில் ஒளியாகவும், சில நேரங்களில் இருளாகவும் இருக்கிறோம். நம்முடைய மனநிலையும் வாழ்க்கைச் சூழலும் நம்மை மாற்றிக்கொண்டே இருக்கின்றன.

ஆனால்,

“அதுபோல் அல்லாமல் ஆவதும்
எதுவுமே ஆகாமல் போவதும்”

என்ற வரிகள் மனித இருப்பின் நிலையற்ற தன்மையை இன்னும் ஆழமாக்குகின்றன. நாம் எதிர்பார்த்தபடி இருப்பதும் இல்லை; நாம் நினைத்தபடி ஆகிவிடுவதும் இல்லை. சில நேரங்களில் நாம் நினைத்த அடையாளங்களையே கடந்து வேறொன்றாக மாறிவிடுகிறோம்; சில நேரங்களில் எதுவுமற்ற நிலைக்கும் தள்ளப்படுகிறோம்.

அடுத்து வரும்,

“நமக்கும் பிடிபடாதது எதுவோ
அதுவே
கழுத்தில் ஏறிக் கயிறாய்த் தொங்கும்”

என்ற வரிகள் கவிதையின் சிந்தனையை இன்னொரு தளத்திற்குக் கொண்டு செல்கின்றன. நமக்குப் புரியாததும், நம்மால் பிடித்துக்கொள்ள முடியாததுமான ஒன்று, வாழ்க்கையில் ஒரு சுமையாக மாறிவிடுகிறது. புரிந்துகொள்ள முடியாத கேள்விகள் சில நேரங்களில் நம்மை விட்டு விலகுவதில்லை; மாறாக, அவையே நம்மை இறுக்கிப் பிடிக்கும் கயிறாக மாறுகின்றன.

இறுதியில்,

“வாழ்வென்ற புனைவின்
ஒரு பெரும் மாயம்
அல்லது
சிறு தந்திரம்”

என்று கவிதை முடிகிறது.

“வாழ்க்கை உண்மையா, மாயையா?” என்று நேரடியாகக் கேட்காமல், வாழ்க்கை என்ற புனைவு நம்மை எப்படியெல்லாம் நடத்துகிறது? என்ற சிந்தனையை வாசகரிடம் விட்டுச் செல்கிறது.

நினைவுகளால் நனைந்த மனித மனம்

தொகுப்பின் பெயர் தாங்கிய இந்தக் கவிதை தொடங்கும்போதே ஒரு முதிய பெண்ணின் உருவம் நம் கண்முன் வருகிறது:

“கிழிந்த குடையும் வயோதிக நடையும்
அவளை அச்சுறுத்தவில்லை”

பெருமழை அவளுக்கு அச்சமில்லை. மாறாக, அந்த மழையை “வஞ்சனையற்ற சிரிப்பொன்றை” உதிர்த்து எதிர்கொள்கிறாள். இந்தச் சிறிய காட்சியிலேயே அந்தப் பெண்ணின் வாழ்க்கை அனுபவமும் மன உறுதியும் வெளிப்படுகின்றன.

அடுத்து,

“சாலைகள் நிரம்பிய பின்
மெதுவாகத் தன் கால்களை நீரில் அலம்புகிறாள்”

என்ற காட்சி வருகிறது. மழைநீர் நிறைந்த சாலையில் தன் கால்களை அலம்பிக்கொள்ளும் அந்தச் செயல் மிகவும் இயல்பானது. ஆனால், அந்த இயல்பான காட்சிக்குள் கவிதை ஒரு பெரிய நினைவுலகைத் திறக்கிறது.கவிதையின் உண்மையான திருப்பம் இதற்குப் பிறகுதான் வருகிறது.

“ரொம்ப நாளாச்சு எங்க ஊரு ஆத்தப் பாத்து”

என்ற அவளுடைய பேச்சு, மழையையும் ஆற்றையும் வெறும் இயற்கைக் காட்சிகளாக இல்லாமல் அவளுடைய கடந்த கால நினைவுகளாக மாற்றி விடுகிறது.ஒரு காலத்தில் நாணல் புதர்களுக்கிடையே கெண்டைகளும் கெளுத்திகளுமாகத் துள்ளிய நதி, இப்போது அவளுடைய நினைவுகளில் மட்டுமே இருக்கிறது.

அதனால்தான் இறுதி வரிகள் மிகவும் அழகானவையாகின்றன:

“நதி சொட்டு சொட்டாய் இப்போது
அவள் நினைவுகளின் முற்றத்தில்”

வெளியில் பெருமழை பெய்கிறது. ஆனால், அவள் நினைவுகளில் இருக்கும் நதி சொட்டு சொட்டாய் மட்டுமே இருக்கிறது. இந்த முரண்தான் கவிதையின் அழகை மேலும் ஆழப்படுத்துகிறது. வெளியுலகில் பெருக்கெடுக்கும் மழை, அவளுக்குள் பெருக்கெடுப்பது நினைவுகளாக.

இங்கேதான் “பெயல் மணக்கும் முற்றம்” என்ற தலைப்பின் முழு அர்த்தமும் நமக்குப் புரிகிறது. அது மழையால் நனைந்த ஒரு வீட்டின் முற்றம் மட்டுமல்ல; நினைவுகளால் நனைந்த ஒரு மனித மனமும் ஒரு முற்றமாகிறது.ஒரு முதிய பெண்ணின் மழைநேரக் காட்சியை மட்டும் பதிவு செய்திருந்தால் இது ஒரு அழகான காட்சிக்கவிதையாக நின்றிருக்கும். ஆனால், அந்தக் காட்சிக்குள் அவளுடைய சொந்த ஊரையும், ஆற்றையும், கடந்த காலத்தையும் கொண்டு வந்து நிறுத்துவதன் மூலம் கவிதை இயற்கையிலிருந்து நினைவுக்கும், நினைவிலிருந்து மனித மனத்திற்கும் பயணிக்கிறது.

அதுவே “பெயல் மணக்கும் முற்றம்” கவிதையை இந்தத் தொகுப்பின் தலைப்பாகத் தாங்குவதற்கான காரணத்தையும் உணர்த்துகிறது.

மனிதனைத் தேடும் கவிதை

“கடவுள் தேடும் பொருள்” -இந்தக் கவிதை, மனிதர்களுக்குள் இருக்கும் தனித்துவமான பார்வைகளிலிருந்து தொடங்கி, இறுதியில் மனிதம் என்றால் என்ன? என்ற கேள்விக்குள் வந்து நிற்கிறது.

“ஒரு பெண்ணால்
ஒரு பூவைப் பிரபஞ்சமாகப் பார்க்க முடிகிறது”

என்ற வரிகளிலிருந்து, ஒவ்வொருவரும் உலகத்தைத் தங்களுக்கே உரிய பார்வையில் காண்கிறார்கள் என்பதை கவிஞர் சுட்டுகிறார். ஓவியனுக்கு பறவை வானமாகிறது; கவிஞனுக்கு துளியளவு கண்களில் கடலைப் பருக முடிகிறது. சான்றோனுக்கு வலி வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்த்துகிறது; தியாகிக்கு உயிர் வாழ்வும் பெருமதியாகிறது.இவ்வாறு ஒவ்வொருவரின் தனித்துவமான குணங்களால் வாழ்க்கை அழகு பெறுகிறது.

ஆனால் கவிதை இங்கேயே நின்றுவிடவில்லை.

“மரணம் வருவதற்குள்
வாழ்வின் அர்த்தம் பொதிந்த
நமது கண்ணீருக்கும் சிரிப்புக்குமிடையே
நாம் மனிதமாய் இருக்கிறோமா”

என்ற கேள்வி, கவிதையின் மையமாகிறது.அதன் உச்சமாக,

“நமது புழக்கடைப் பக்கம்
எந்தக் கடவுளும்
புழுவின் வடிவில்கூட வருவதில்லை”

என்ற வரிகள் வருகின்றன. பூவில் பிரபஞ்சத்தையும், பறவையில் வானத்தையும் காணும் மனிதனால், தன் அருகிலிருக்கும் சிறிய உயிரைக்கூட கவனிக்க முடியாத முரணை கவிஞர் முன்வைக்கிறார்.இவ்வாறு, கடவுளைத் தேடும் கேள்வியாகத் தொடங்கும் கவிதை, இறுதியில் மனிதனைத் தேடும் கேள்வியாக மாறுகிறது.

மனமும் கண்களும் காணும் உலகம்

சிறுத்தையொன்று எதையோ கவ்விக்கொண்டு ஓடுகிறது. அருகில் அணிற்பிள்ளையொன்று மரத்தின் மீதேறி விளையாடுகிறது. இரண்டு வெவ்வேறு காட்சிகளைப் பார்த்த கவிஞர்,

“ஒன்றை என் மனமாகவும்
இன்னொன்றை என் கண்களாகவும் பாவிக்கிறேன்”

என்று அவற்றைத் தனக்குள் இணைத்துக்கொள்கிறார்.இங்கே இயற்கைக் காட்சி வெறும் பார்வையாக நின்றுவிடாமல், கவிஞரின் அக உலகத்துக்குள் நுழைகிறது. சிறுத்தை மனமாகவும், அணில் கண்களாகவும் மாறும்போது, வெளியில் பார்க்கும் உலகமும் உள்ளுக்குள் இயங்கும் மனமும் ஒன்றோடொன்று கலக்கின்றன.

அதன்பின் பகற்பொழுது,

“ஒரு தோசை போல்
அதை விழுங்கிவிட்டு”

ஒரு முழு நாளையே தோசை போல விழுங்கிவிட்டு மாலையில் இளைப்பாறும் மனிதனின் இயல்பான வாழ்க்கை இங்கே கவிதையாகிறது.ஆனால் இரவு வந்ததும் கவிதை மீண்டும் ஒரு கேள்வியை எழுப்புகிறது:

“என் கனவில் வருவது
யாராக இருக்கக்கூடும்?”

அதற்கான பதில் கடைசி இரண்டு வரிகளில் எதிர்பாராத விதமாக வருகிறது:

“அருகிலேயே காத்திருக்கிறது
வளர்ப்புப் பூனை”

பகலில் காட்டுக்குள் ஓடும் சிறுத்தையையும் மரத்தில் விளையாடும் அணிலையும் பார்த்த மனம், இரவில் கனவில் வரப்போகும் உயிரைத் தேடுகிறது. ஆனால் அது தொலைவில் இல்லை; அருகிலேயே காத்திருக்கும் ஒரு வளர்ப்புப் பூனை.

காட்டு விலங்குகளின் உலகத்திலிருந்து வீட்டுக்குள் இருக்கும் ஒரு பழக்கமான உயிரிடம் கவிதை திரும்புகிறது. பெரிய காட்சிகளையும் சிறிய அன்றாட அனுபவங்களையும் ஒரே கவித்துவப் பார்வைக்குள் கொண்டு வருவதுதான் இந்தக் கவிதையின் தனிச்சிறப்பு.

புனைவின் வழியாக ஒரு புதிய உலகம்

கவிஞர் மஞ்சுளா வாழும் மதுரை நிலத்தின் காட்சிகள் அவரது கவிதைகளில் பல்வேறு வடிவங்களில் பதிவாகின்றன. வெயில், மாலைநேரம், பூக்கள், மரங்கள், பட்டாம்பூச்சிகள், வானம், இரவுக் காட்சிகள், மழை, நதி என இயற்கை அவரது கவிதைகளுக்குள் தொடர்ந்து பயணிக்கிறது. அதே நேரத்தில் குழந்தைப் பருவ நினைவுகள், வலி, ஏக்கம், வாழ்க்கையின் புரிபடாத பக்கங்கள், மனதின் மாயங்கள் என அவரது அக உலகமும் கவிதைகளுக்குள் விரிகிறது.வெளியில் காணப்படும் காட்சிகளை அப்படியே பதிவு செய்வதைக் காட்டிலும், அவற்றைத் தனது அனுபவங்களோடும் உணர்வுகளோடும் இணைத்து புனைவின் வழியாக ஒரு புதிய உலகமாக மாற்றுகிறார் மஞ்சுளா.

புனைவின் வழியே மனிதனைத் தேடும் முயற்சியே கவிஞர் மஞ்சுளாவின் கவிதைகள். அந்தத் தேடலின் வழியே செல்லும்போது, அவரது கவிதைகளுக்குள் நாம் காண்பது மஞ்சுளாவை மட்டுமல்ல; நம்முடைய நினைவுகளையும், நம்முடைய வலிகளையும், நம்முடைய கேள்விகளையும் கூடத்தான்.

நூலின் பெயர்:பெயல் மணக்கும் முற்றம்

ஆசிரியர்:கவிஞர் மஞ்சுளா

பதிப்பகம்:கொட்டாரம்,

பக்கம்: 96, விலை:130

அ.தமிழ்ச்செல்வன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.