"இந்த சிறுகதைகள் ஏன் என்னை இப்படிப் பிடித்து ஆட்டுகின்றன?" என்கிற ஆச்சரியச் சுழியிடலோடுதான் (என்னுரையில்) தனது எழுத்தை ஆரம்பிக்கிறார் எழுத்தாளர் எஸ். காமராஜ் அவர்கள், தனது 'லாஞ்சனை' சிறுகதைத் தொகுப்பில்!
கதையும், கதையின் மாந்தர்களும், அவர்களின் வாழ்க்கையும், வாழ்க்கையின் ஈரமும், பிணைப்பும் நூலாசிரியரையே வியப்பிற்குள்ளாக்குகிறது என்றால், படிக்கிற நம்மை இன்னும் இன்னுமாய் கூடுதல் மனப்பிசைவு கொள்ளச் செய்யும்தானே!
அதைச் செய்திருக்கிறது தோழர் காமராஜ் அவர்களின் எழுத்துகள் 'லாஞ்சனை' நூலில்!
கதைகள் பதின்மூன்றில் பாதி கிராமத்தின் ஈரமும், வெம்மையும், அதைச் சுவாசித்து வாழ்கிற மனிதர்களின் வாழ்க்கை சார்ந்தது!
மீதி நகரம், தொழிற்சங்கம், அதில் உடன் பயணித்த மனிதப் புனிதர்கள் பற்றியும், அன்பையும், நட்பையும், தோழமையையும் கையளித்த மாட்சி மாந்தர்கள் பற்றியதுமானது!
பொதுவாகவே ஒரு நெக்குருகுதல் கொண்டது தோழர் எஸ். காமராஜ் அவர்களின் எழுத்து!
எவ்வித வேகத்தடையும் இல்லாது நம்மைக்கை பிடித்து அழைத்துச் சென்று சாலையோரத் தேநீர் விடுதியில் அமர்ந்து நம்முடன் உரையாடுவது போன்றவை!
அப்படித்தான் 'லாஞ்சனை'யும்!
ஊர்த்தலைவர் அழைப்பதாய்த் தகவல் வந்ததும், இதுவரை தாங்கள் யாருக்கும் தெரியாமல் செய்த தவறைப் பற்றி விசாரிக்க இருக்குமோ? அவளோடு ராவுகள் படம் பார்த்ததைப் பற்றி இருக்குமோ? கோல்ட் பிளேக் சிகரெட் வாங்கிக்கொண்டு பந்துவார்பட்டியில் போய் கள்ளுக்குடித்தது பற்றி இருக்குமோ? போன வாரம் ஏதோ குருட்டு தைரியத்தில் அவளின் கன்னம் உரசியதை முத்தம் என நினைத்த வேளை சப்தமிட்டுப் போனாளே, அவள் பிராது கொடுத்திருப்பாளோ? என்கிற எண்ணக் கோர்வைகளுடன் அவ்விளைஞர்கள் நகர்கிற பொழுது எதிர்படுகிற உறவுகள், மனிதர்கள், காட்சிகள் எல்லாம் ஒரு சிறந்த காட்சி ஊடகத்தின் திரை நகர்வுகளாய் 'ஊர்ப்பொழுதுகள் தேங்கி நிற்பதில்லை' கதையில்!
"அக்கினிச்சட்டியிலிருந்து கிளம்பும் புகையில் விளக்கெண்ணெயின் வாசம் அந்தப் பிரதேசம் முழுவதும் வியாபித்திருக்கும்" என்கிற ஆரம்ப வரிகளுடன் துளிர்க்கிற 'பட்டாசுக்காரனோடு ஒட்டிப்பிறந்த பேனா' கதையில், கதை நாயகன் மரியானை ரத்தமும் சதையுமாய் முன்வைக்கிறார்!
ஊரின் அனைத்து சுக, துக்க நிகழ்வுகளிலும், கேளிக்கைகளிலும் பங்கு கொண்டு சூழலில் சுமுகத்தை விதைக்கிற மரியான், விரும்பியவளைக் கைபிடித்து வாழ்ந்து சந்தோஷித்து வார நகர்வு நாளொன்றில் பட்டாசு ஆலையில் கருகிப்போகிறான் என்பதாய்த் துக்கம் வைக்கிறார்!
அதுவரை கதை முழுவதுமாய் மரியான் கொண்டிருந்த சந்தோஷம், அவனின் கொண்டாட்டம், அவனின் துள்ளல், அவனின் அன்பு, அவனின் காதல், அவனின் நட்பு, அவனின் சந்தோஷக் களி கொள்ளல் எல்லாம் நம் கண்முன்னே கருகிப்போவதை இவ்வளவு நெக்குருகச் சொல்லிக் கடத்துவது திரு. காமராஜ் அவர்களது எழுத்தின் பலம்தான்!
"ஊரை நெருங்கும்போது மேட்டுமலை பறைமுழக்கம் அந்தப் பிரதேசம் அதிர ஒலித்தது" எனப் பூக்கிற சொற்களோடு இணைபடுகிற 'ஆசை நாயகியின் பேசரி மூக்குத்தி' கதையில், வங்கிப்பணிக்குச் செல்லும் முன்பான சிறுவயதில், பிராயங்களில் சொந்த ஊர் பாட்டிகள் உச்சி முகர்ந்து கொண்டாடிய உயிர்ப்பும், இறந்துபோன அஞ்சனம்மா பாட்டியின் நினைவும் சொந்த ஊரும் நாற்றாங்காலிடும்!
"நர்ஸ் பொண்ணு வந்து பார்த்துவிட்டு, 'இன்னும் கண்ணு முழிக்கலையா?' எனக் கேட்டுக்கொண்டு தீர்ந்துபோயிருந்த குளுக்கோஸ் பாட்டிலை நிறுத்தினாள்" என ஆரம்பிக்கிற 'லாஞ்சனை'யில், ஃபயர் ஆபீஸில் ஏற்பட்ட விபத்தில் தீக்காயங்களுடன் ஆஸ்பத்திரியில் கிடக்கிற ஒரு தாயைப் பற்றியதான மகளின் சொல்லல்!
"காலில் இல்லை, உடம்பில் சக்கரத்தைக் கட்டிவிட்டது போலொரு மனுஷி!"
ஃபயர் ஆபீஸில் அட்வான்ஸ் வாங்கிவிட்டு வேலைக்குச் செல்லாமல் இருந்த கணவனால், வீட்டு வாசலுக்கு வந்து நின்ற மேஸ்திரியின் பேச்சால் ஆங்காரக்காளியாய் கையில் அருவாமனையுடன், "இதே பேச்ச என் புருஷனை விட்டு உன் பொண்டாட்டி புள்ளைங்களை கேட்கச் சொன்னா எப்படியிருக்கும்?" என்பது போலான பேச்சுகளும் அவளது நடத்தையும், அவள் மேல் பயம் கலந்த மரியாதையை வரவழைத்தன என்பது கதையின் தெறிப்புகள்!
'இரண்டாவது மரணம்' கதையில் ஜாதிக்கலவரத்தில் எந்த ஜாதியையும் சேராத விபச்சாரி கொலையுண்டு இறந்த நாளில், "ஏ தவம், உன்னை எதுக்குமா கொன்னாங்க? நீ அங்கிட்டும் இல்லை, இங்கிட்டும் இல்லை, உன்னைப் போய்..." எனச் சாக்கடையில் கிடந்த அவளைப் பார்த்துப் புலம்பும் துப்புரவுத் தொழிலாளர்களின் வார்த்தைகளுடன் பிணைத்துக் கதை சொல்லிச் செல்கிற பாங்கு கொஞ்சமல்ல, நிறையவே சிலிர்க்கப் பண்ணுகிறது!
இப்படி புத்தகம் முழுக்க விரவியிருக்கிற கதைகள் சாமான்ய மக்களது வாழ்வின் வலிகளை, சந்தோஷத்தை, துயரை, அன்றாடத்தை நம் மனதின் மிக அருகே வந்து பதிவு செய்துவிட்டுப்போவதுதான்!
எளிமை எப்பொழுதும் ஆடம்பரமானதுதானே? அப்படியொரு எளிமையான ஆடம்பரமாய் 'லாஞ்சனை'!
தமிழ்கூறும் நல்லுலகத்தால் 'லாஞ்சனை' பேசப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை!
வாங்கிப் படியுங்கள் 'லாஞ்சனை'!
வெளியீடு: யாவரும் பதிப்பகம்
விலை: ரூ. 160/-
தொடர்புக்கு: 90036 42040
– விமலன், விருதுநகர்