tamil oldபழந்தமிழோடு முதன்முதலில் தொடர்பு கொண்ட மொழி பிராகிருதமே. சமஸ்கிருதம் பிற்காலத்தே வந்தது. கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்கு முன் பிராகிருதக் காலப் பகுதி என்றும் அதற்குப் பின்னர் சமஸ்கிருத காலப்பகுதி என்றும் தெ.பொ.மீ. வகைப்படுத்துவார் (தெ.பொ.மீ, 1965, பக். 240-243).

சமண, பௌத்த சமயங்கள் வழி பிராகிருதச் சொற்கள் தமிழுக்கு வந்தன. பழந்தமிழ் பிராமி கல்வெட்டுக்களில் 50 விழுக்காட்டிற்கு மேல் பிராகிருதச் சொற்கள் உள்ளன.

தமிழில் காணப்படும் பிராகிருதச் சொற்கள் சமஸ்கிருத மொழியிலிருந்து எவ்வாறு சிதைந்து வந்தன என்றும் அவற்றிற்குப் பிராகிருத இலக்கணங்களில் காணப்படும் விவரணை யாது என்றும் ஆகிய கோணத்தில் யாரும் விளக்க முற்பட்டதாகத் தெரியவில்லை. அந்த வழியில் ஒருசில பழந்தமிழ்ச் சொற்களுக்கான விளக்கம் இக்கட்டுரையில் இடம்பெறுகிறது.

அங்கியும் வங்கியும்

நெருப்பு என்ற சொல்லைக் குறிக்கத் தமிழில் வேறு சில சொற்களும் காணப்படுகின்றன. தீ, எரி, அனல், அழல், அங்கி போன்ற சொற்களைக் குறிப்பிடலாம். தீ ஐம்பூதங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. ‘நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின்’ என்று பழந்தமிழ் இலக்கணம் கூறும்.

‘வளித்தலைஇய தீயும் தீ முரணிய நீரும்’ என்று புறநானூறும் கூறுகின்றது. தழல், தணல் போன்ற சொற்களும் நெருப்பையே குறிக்கின்றன. ‘செந்தழல் புரைதிரு மேனி’ என்ற தொடர் இடைக்காலத்தில் வருகிறது.

இவற்றுள் ‘அங்கி’ என்ற சொல் பிராகிருத மொழியிலிருந்து பெறப்பட்ட சொல். இச்சொல் சங்க இலக்கியங்களிலும், சங்கம் மருவிய இலக்கியங்களிலும் இடைக்கால இலக்கியங்களிலும் வருகின்றது. ஆனால் தற்காலத் தமிழில் இல்லை. வழக்கொழிந்துவிட்டது.

கடியலூர் உருத்திரங்கண்ணனார் எழுதிய பட்டினப்பாலையில் ‘அங்கி’ என்ற சொல் கையாளப்பட்டுள்ளது.

தவப்பள்ளித் தாழ் காவின்
அவிர்சடை முனிவர் அங்கி வேட்கும்
ஆவுதி நறும்புகை முனைஇ (53-55)

சமணர்களும் பௌத்தர்களும் தவம் செய்யும் பள்ளிகள் இருந்தன. தாழ்ந்த மரங்கள் அடர்ந்த சோலைகளில் விரிந்த சடை முடியினையுடைய முனிவர்கள் நெருப்பினை வளர்த்து வேள்வி செய்தனர்.

தீயிலிருந்து உண்டாகிய நறும்புகையை வெறுத்து குயில்கள் அவ்விடத்தைவிட்டு நீங்கினவாம். வேள்வியில் எழும் தீயைக் குறிக்க ‘அங்கி’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அடுத்து,

புந்தி மிதுனம் பொருந்த புலர்
விடியல்
அங்கி உயர் நிற்ப (பரி. 11)

என்று பரிபாடலில் அங்கி என்ற சொல்லாட்சி இடம் பெற்றுள்ளது. இங்கு ‘கார்த்திகை’ நட்சத்திரம் என்ற பொருளில் அங்கி பயன்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு கோள்கள் நிலைபெறுகின்ற நிலையை விளக்கப்படுகின்ற இடத்தில் ‘வெள்ளி இடபத்தைச் சேரும். செவ்வாய் மேடத்தைச் சேரும். புதன் மிதுனத்தைச் சேரும்.

கார்த்திகை உச்சமாக விடிதல் உண்டாகும்’ என்று வரும். இங்கு ‘அங்கி’ கார்த்திகைக் கோளைக் குறிக்கின்றது. புலர் விடியற்காலைக்குரியோனாகிய சூரியன் என்றும் பொருள் கொள்ளப்படுகின்றது (அங்கி = சூரியன்). கார்த்திகை மாதத்தில் தீப வழிபாடும் குறிப்பிடத்தக்கது.

சிலப்பதிகாரத்தில் வஞ்சினமாலையில் அங்கி என்ற சொல் வந்துள்ளது.

நீல நிறத்துத் திரிசெக்கர் வார்சடைப்
பால்புரை வெள்ளெயிற்றுப் பார்ப்பனக் கோலத்து
மாலை எரியங்கி வானவன் தான்தோன்றி
(சிலம்பு. வஞ்சினமாலை)

நீல நிறத்தினையும் சிவந்த நீண்ட முறுக்குண்ட சடையினையும் பால் போன்ற வெள்ளிய பற்களையும் உடைய ஒரு பார்ப்பன வடிவத்தோடு தானே எதிர்வந்து அங்கி வானவன் (நெருப்புக் கடவுள்) தோன்றினான். அங்கி கடவுளின் வருணனையும் இளங்கோவடிகள் தருகிறார். சிலப்பதிகாரத்தைத் தொடர்ந்து திருவாசகம், தேவாரம் போன்ற இடைக்காலப் பக்திப் பனுவல்களிலும் ‘அங்கி’ என்ற சொல் இடம்பெற்றுள்ளது.

கொதியுறு காலன்அங்கி நமனோடு தூதர்
கொடு நோய்களான பலவும் (தேவாரம்-கோளறு)
அங்கியில் வீழ்தர ஆய்ந்த அம்பினர் (தேவாரம் 3:13)
அங்கி அருக்கன் இராவணன்அந் தகன் கூற்றன்
(திருவா. பூவல்லி)

திருவாசகத்தில் நெருப்புக் கடவுள் என்ற பொருளில் வர, நெருப்பு என்ற பொதுப் பொருளிலும் விரிவடைவதைத் தேவாரத்தில் காண்கிறோம்.

‘அங்கி’ என்ற சொல் ‘அக்னி’ என்ற சமஸ்கிருதச் சொல்லோடு தொடர்புடையது. அக்னி (agni) என்ற சொல் பிராகிருத மொழியில் அக்கி (aggi) என்று ஓரினமாதல் என்ற விதிப்படி முதலில் மாற்றமடையும்.

பின்னர் இச்சொல்லின் இடையிலிருக்கிற ககர மெய்யலி மூக்கொலியாக (மூக்கினசாயல்) சிலபோது மாற்றமடைந்து அங்கி என்று மாறும். இது பிராகிருத இலக்கணம் தருகிற விதியாகும்.

தமிழில் அக்கி என்ற சொல் மிகுந்த வெப்பத்தின் விளைவாக ஏற்படுகிற நோயைக் குறிக்கிறது. அக்கினி என்ற சொல்லும் வழங்கி வருகிறது. முதலில் வந்த ‘அங்கி’ தற்போது இல்லை.

அடுத்தது ‘வங்கி’ என்ற தமிழ்ச் சொல்லையும் காண்போம். இதுவும் அங்கியைப் போலத்தான். ஆனால் ‘வங்கி’ என்றால் ‘வளைந்த’ என்று பொருள். ‘வங்கி வளையல்’ என்ற தொகைச்சொல் வளைந்த வளையல் என்று பொருள்படும். ‘வங்கை’ என்ற நாட்டுப்புறச் சொல் (வளைந்த புத்தியுடைய) பொறாமையைக் குறிக்கும்.

‘வங்கை இடிக்காவிட்டாலும் வாசற்படி இடிக்கும்’ என்றொரு பழமொழி உள்ளது. வக்ர புத்தி என்ற தொடரையும் கவனிக்க. வங்காள விரிகுடாவிலுள்ள ‘வங்கா’ என்ற சொல்கூட வளைந்த நிலப்பகுதியைத்தான் குறித்தது. வங்கா என்ற சொல் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ‘பங்கா’ என்று மாறிவிடும்.

திண்தேர்ப் புரவி வங்கம் பூட்டவும்
வங்கப் பாண்டியில் திண்தேர் ஊரவும் (பரி.20)

என்று பரிபாடலில் வங்கம் என்ற சொல் வந்துள்ளது. அதாவது புதுவெள்ளம் வந்ததும் வைகையாற்றில் புனலாடச் சென்றவர்கள் அவசரத்தில் தேரில் பூட்ட வேண்டிய குதிரைகளை வங்கத்திலும் வங்கத்தில் பூட்ட வேண்டிய பாண்டில் எருதுகளைத் தலைகால் தெரியாமல் பூட்டினார்களாம். ‘வங்கம்’ என்பது ‘வளைந்த வண்டி’யைக் குறித்தது.

‘வணங்கு கால் வங்கம் புகும்’ என்று வங்க வண்டி குறித்து கலித்தொகையிலும் வந்துள்ளது. ‘வங்கம்’ என்ற மரக்கலத்தைக் குறிக்கும் சொல் எவ்வாறு வந்தது என்று அறியத்தக்கது. வங்கம் என்பதற்குக் ‘கடலலை’ என்ற பொருளும் உள்ளது. வளைந்து வளைந்து வருவதால்தானோ என்னவோ? இந்த ‘வங்க’ என்ற சொல் ‘வக்ர’ என்ற சமஸ்கிருதச் சொல்லிலிருந்து வந்தது.

‘வக்ர’ என்ற சொல் ‘வக்க’ என்று மாற்றமடைந்து (ஓரினமாதல் என்ற விதி மேலே சுட்டிக் காட்டினோம்), பின்னர் இடையில் வரும் மெய்யலி மூக்கொலி சாயல் பெற்று மாறி வங்க என்றாயிற்று. இதுவும் பிராகிருதச் சொல்தான்.
இந்தி மொழியில் ‘ஆங்க்’ என்றால் கண் என்பது பொருள்.

ஆக்ஷி என்றால் கண் என்பது பொருள். ஆக்ஷி என்கிற சமஸ்கிருத சொல் அக்கி (akkhi) என்று மாறி பின்னர் ஆங்க் என்று இடையில் மெய்யலி கெட்டு உயிர் மூக்கினசாயல் வந்துவிடுகிறது. ஆதி நீடலும் ஏற்படுகிறது. இவை யாவும் பிராகிருத மொழியில் ஏற்படும் மாற்றங்களாகும்.

கண்ணனும் விண்ணகரமும்

கண்ணன் என்ற சொல் கிருஷ்ண என்ற சொல்லிலிருந்து வந்தது. அதாவது கிருஷ்ண என்ற சொல்லின் பாகதச் சிதைவுதான் கண்ணன் என்பது. இதனை நமது உரையாசிரியர்கள் சுட்டியுள்ளனர் (தொல். எச்சவியல்). கண்ணையுடையவன் கண்ணன் என்று பொதுவாக நம்பப்பட்டாலும் கிருஷ்ண என்ற சொல்லே மூலம்.

இதனைப் பிராகிருத இலக்கணங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம். ‘துஞ்சா கண்ணர்’ போன்ற தொடர்கள் சங்க இலக்கியங்களில் வந்துள்ளன. அங்கு அவற்றிற்குத் தூங்காத, உறங்காத கண்களை உடையவர்கள் என்பதுதான் பொருள். அது வேறு. இங்கு நாம் குறிப்பிடும் கண்ணன் வேறு.

பல சங்க இலக்கியப் புலவர்களின் பெயர்கள் கண்ணன் என்ற சிறப்புப் பெயருடன் காணப்படுகின்றன. எ.கா. மதுரைக்கதக்கண்ணன் (குறு. 88), வேம்பற்றூர்க் கண்ணன் கூத்தன் (குறு. 362). அதனால் இச்சொல்லாராய்ச்சி முக்கியமானதாகிறது. வைணவ இலக்கியத்தில் கண்ணன் என்ற சொல் பெருவாரியாகப் பயன்படுத்தப்படுகிறது. ஒரு பாடல் எடுத்துக்காட்டாக

வண்ணமாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்
கண்ணன்கேசவன் நம்பி பிறந்தினில்
எண்ணெய்சுண்ணம் எதிரெதிர்தூவிடக்
கண்ணன்முற்றம் கலந்தன ராயிற்றே
(நாலாயிர திவ்வியப் பிரபந்தம்)

இப்பாடலில் இரண்டாவது வரியில் ‘கண்ணன்’ (கிருஷ்ண) என்ற சொல் வந்துள்ளது. நான்காவது வரியில் வரும் ‘கண்ணன்’ என்பதனைக் கண் + நல் (முற்றம்) என்று பிரித்து அகன்று பரந்த முற்றம் என்று பொருள் கொள்வர். கிருஷ்ண என்ற சொல் எவ்வாறு கண்ணன் என்று மாறிற்று என்பதைக் காண்போம்.

Krsna என்ற சொல்லில் வரும் ரு என்பது சமஸ்கிருத மொழியில் உயிரெழுத்தாகக் கொள்ளப்படுகிறது. அவ்வுயிரெழுத்து அகரமாகவோ, இகரமாகவோ, உகரமாகவோ பிராகிருத மொழியில் மாறும். சிலவேளைகளில் ரகரமாகவும் மாறும். இங்கு அகரமாக மாறுகிறது. அடுத்த நிலையில் (s) என்னும் ஸகர ஒலி ஹ (h) ஆக மாறும். ஹ வும் மூக்கொலியும் முன் பின்னாக மாறும் (metathesis).

Krsna > kanha

கண்ஹ என்ற சொல்தான் கண்ணன் என்று தமிழில் வழங்கி வருகின்றது. இதனைத்தான் நமது உரையாசிரியர்கள் பாகதச் சிதைவு என்று குறிப்பிட்டுள்ளனர். சமஸ்கிருதச் சொற்களில் வரும் நாமடி ஸகர ஒலி தமிழ்மொழியில் டகரமாக மாறும் என்பது பிற்காலத்தில் வந்த இலக்கண விதியாகும். விஷம் என்பது விடம் என்பது போல ‘கிருஷ்ண’ என்பது ‘கிருட்டிண’ என்றும் மாறி வழங்குகிறது. வீரசோழிய இலக்கணம் இவ்வாறான விதிகளைத் தருகின்றது.

விண்ணகரம்

அடுத்து விண்ணகரம் என்ற சொல்லைக் காண்போம். விண்ணகரம் என்ற சொல்லை விண்ணில் இருக்கிற நகரம் என்றுதான் நான் முதலில் பிரித்துப் பொருள்காண முற்பட்டேன். பின்னர்தான் அது ‘விஷ்ணு கிரஹம்’ என்ற சொல்லின் பிராகிருதச் சிதைவு என்று அறிந்துகொண்டேன்.

தமிழகத்திலுள்ள விஷ்ணுவின் கோயில்கள் விண்ணகர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளன. திருமாலின் கோயில்கள் ‘விண்ணகரம்’ என்று அறியப்படுகின்றன. 108 வைணவ திவ்விய தேசங்களில் திருமங்கையாழ்வார் ஐந்து கோயில்களை விண்ணகரம் என்று குறிப்பிட்டுள்ளார். அவை யாவன

1. பரமேச்சுர விண்ணகரம்
2. காழிச் சீராம விண்ணகரம்
3. அரிமேய விண்ணகரம்
4. வைகுந்த விண்ணகரம்
5. நந்திபுர விண்ணகரம்

‘விண்ணகரம்’ என்பதற்கு விண்ணில் உள்ள பரமபதத்திற்குச் சமமான தலம் என்று பொருள் கொள்வதும் காணப்படுகிறது. விண்ணகரம் என்பதற்கு விஷ்ணுவின் வீடு என்பதுதான் சரியான பொருள்.

பல்லவர்காலக் கல்வெட்டு சாசனங்களில் பரமேஸ்வர விண்ணகரம் என்று காஞ்சியில் உள்ள ஸ்ரீவைகுந்தநாத பெருமாள் ஆலயம் குறிப்பிடப்பட்டுள்ளது. விஷ்ணு என்ற (visnu) சொல்லில் உள்ள நாமடி ஸகர ஒலி மூக்கொலியோடு வரும்போது (h) வாக மாறி பின்னர் மூக்கொலி முன்னும் லீ கர ஒலி பின்னும் மாறிவிடும்.

இதனை கிருஷ்ண என்ற சொல்லை விளக்கும்போதும் கூறினோம். விஷ்ணு என்பது இந்த இலக்கண விதிப்படி விண்ஹ (vinhu) என்று மாறும். வீடு என்ற சொல்லைக் க்ரஹ, க்ருஹ என்ற இரு சொற்களால் சமஸ்கிருதத்தில் வழங்குவர். மொழி முதலில் வரும் சமஸ்கிருதச் சொற்களின் மெய் மயக்கங்கள் பிராகிருத மொழியில் பொதுவாகச் சகித்துக் கொள்ளப்படுவதில்லை.

இவ்விதியின்படி மொழி முதலில் வரும் மெய்மயக்கங்களில் ஒரு மெய் கெடும். அல்லது ஒரு உயிரெழுத்து கூட்டாக வருகிற மெய்யெழுத்துக்களைப் பிரித்து ஏற்றுக் கொள்ளப்படும்.

க்ரஹ (graha) என்பது கரஹ என்று மாறி ‘கரம்’ என்று மாறுகிறது. இவ்வாறு விண்ணகரம் என்ற சொல்லைப் புரிந்து கொள்ளலாம். விண்ணகரம் என்பது பிராகிருதச் சொல்லே என்று புரிந்து கொள்ளலாம்.

விஷ்ணு என்ற சொல் தமிழிலக்கண மரபுப்படி விட்டுணு என்றும், விட்டு என்றும் மாறும். விட்டு சித்தன் விரித்த இப்பன்னு பாடல் வல்லார்க்கு இல்லை பாவமே (நாலாயிர திவ்வியப் பிரபந்தம்).

உண்ணம்

உண்ணம் என்ற தமிழ்ச் சொல் வெப்பம் என்ற பொருளுடையது. உஷ்ண என்ற சமஸ்கிருதத்திலிருந்து வந்த பிராகிருதச் சொல்லே ‘உண்ணம்’ என்பது. ஏற்கெனவே குறிப்பிட்டபடி, ஸகர ஒலியும் மூக்கொலிகளும் மெய்மயக்கமாக வரும்போது ஸகர ஒலி ஹவாக மாறி மூக்கொலி முன்பின்னாக மாறும் என்று சொன்ன விதிப்படி உஷ்ண > உண்ஹ > உண்ணம் என்று பிராகிருதம் வழியாகத் தமிழுக்கு வந்தது.

உண்ணம் என்பது உஷ்ணம் என்றும் விண்ணவன் விண்ணு என்பது விஷ்ணு என்றும் தமிழிலிருந்து வடமொழிக்குச் சென்றதாகச் சிலர் தொடர்பு படுத்துவது சரியாகப்படவில்லை.

குறிப்பு : மகாபாரத காலத்திலே, அஃதாவது கண்ணபிரானுடைய காலத்திலே சமணர் தமிழ்நாட்டுக்கு வந்ததாகத் தெரிகிறது. 22ஆவது தீர்த்தங்கரராகிய நேமிநாத சுவாமி கண்ணபிரானுடைய நெருங்கிய உறவினர் என்றும், கண்ணபிரான் எதிர்காலத்திலே சமணத் தீர்த்தங்கரராகப் பிறந்து சமண மதத்தை நிலைநாட்டப் போகிறார் என்றும் சமண நூல்கள் கூறுகின்றன. இக்காலத்துச் சமணருடைய நம்பிக்கையும் இதுவே. கண்ணபிரானும் அவரைச் சார்ந்தவர்களும் சமண சமயத்தவர் என்றும் சமண நூல்கள் கூறுகின்றன. (காண்க மயிலை சீனி.வேங்கடசாமி. 1954:31).

பார்வை நூல்கள்

1. மீனாட்சிசுந்தரன்,தெ.பொ., தமிழ்மொழி வரலாறு, பூம்புகார் பதிப்பகம், சென்னை, 1965.

2. வேங்கடசாமி, மயிலை சீனி., சமணமும் தமிழும், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், சென்னை, 1954, (மறுபதிப்பு) 2010.

- ஆ.கார்த்திகேயன்