மனிதர்கள் பிறப்பதும் இறப்பதும் விதிக்கப்பட்ட ஒன்று. சில இழப்புகள் மிகுந்த வலியைத் தந்து விட்டுச் செல்கின்றன. ஒருவர் இறக்கிற போது அவருக்குத் தெரிந்த அத்தனை தகவல்களும் இறந்து போகின்றன. அவற்றில் பலவும் மற்றவர்களிடம் பகிரப்படாத அற்புத செய்திகளாக இருந்து விடுவதற்கும் வாய்ப்புகள் இருக்கலாம்.
உதாரணமாக ஒரு அறிவியலாளர் தான் கண்டுபிடிக்க மிக ரகசியமாக முயன்று வெற்றி பெறும் சூழலில் எதிர்பாராத சூழலில் அவர் இறக்க நேரிட்டால் அவர் மனத்தில் இருந்தது யாருக்குத் தெரியும்? அவ்வாறு தான் இலக்கியவாதிகள், ஆளுமைகள் இறக்கிற போது அவர்களுடன் சேர்ந்து பல உன்னதங்களும் மறைந்து விடுகின்றன.
என் தந்தை எதிர்பாராவிதமாக இறந்த போது அவரிடம் இருந்த அற்புதமான தகவல்களைச் சேகரித்து வைக்க முடியாத வருத்தம் இன்றளவும் வாட்டி வதைக்கிறது. அவர் அப்படியரு அனுபவச் சுரங்கம். அதைப் போலத்தான் என்னை கொங்கு எழுத்தாளுமை மா.நடராசனின் மரணம் மிகவும் பாதித்தது.
அன்று காலையில் அலைபேசியை உயிர்ப்பித்தேன். கோவையைச் சேர்ந்த பேராசிரிய நண்பரொருவர் ஒரு துக்கச் செய்தியைப் பதிவிட்டிருந்தார். பேராசிரியரும், புகழ்பெற்ற கொங்கு வட்டாரப் படைப்பாளியுமான மா.நடராசன் மறைந்துவிட்டார் என்றது அவரின் முகநூல் பதிவு. அதைப் பார்த்ததும் துடித்துப் போனேன்.
என் மனம் ஆற்றொன்னாத் துயரத்தில் தவித்தது. சற்று நேரம் என்னால் அதை செரித்துக் கொள்ளவியலவில்லை. ஒரு தந்தைமை உறவை இழந்தது போன்ற துயர் என்னை வாட்டிற்று. அவருடன் பழகிய காலங்கள் அற்புதமான அனுபவங்களைத் தரக் கூடியவை. சிலவற்றை நினைக்கும் போது கண்கள் கரை கட்டிக் கொள்கின்றன.
மா.ந. போன்ற தமிழின் ஆகச்சிறந்த ஆளுமைகள் மரிக்கிற போது அத்தனை எளிதாகக் கடந்து செல்ல முடியவில்லை. ஏனெனில் மா. நடராசன் போன்றவர்கள் காணக் கிடைக்காத அறிவுக்
களஞ்சியம். அவர் சிறந்த மானுடநேயர். படோடபம் இல்லாதவர். பழக எளிமையானவர். மனத் தடைகள் அற்றவர். இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். நெருக்கத்தில் பழகியவர்களுக்குத் தெரியும். அவர் ஓர் அற்புதமான ஞானக்குழந்தை. அவ்வளவு வெள்ளந்தியான கிராமத்து அசல் மனிதர் அவர். என்ன செய்ய? மனம் கரைந்தழுகிறது.
சற்றேறக்குறைய இருபது ஆண்டுகள் இருக்கலாம். என் பிறந்தகமான ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டம் தவிர அப்போது வேறு நகரங்கள் அவ்வளவாக அறிமுகமில்லாத நேரம். சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி என்பதெல்லாம் அப்போது எனக்கு ஊர்களல்ல.
நான் காண விரும்பிய கனவு தேசங்கள்(?). இப்போது மாதத்திற்கு ஒரு முறையாவது அவ் ஊர்களுக்கு இலக்கிய கூட்டங்களுக்குக் கலந்து கொள்ள அசாதாரணமாகச் செல்ல வேண்டியிருக்கிறது. அப்படியோர் இலக்கிய மாநாட்டில் அருகமர்ந்து அறிமுகமானவர் தான் எழுத்தாளர், கொங்கு வட்டார மூத்தப் படைப்பாளி மா.நடராசன்.
பார்த்ததும் நேசம் கொள்ளச் செய்த அறிமுகம் அவருடையது. முதலில் அவர் ஒரு பேராசிரியர் என்ற அளவில் தான் என்னுடைய அணுகுமுறை இருந்தது. அதனால் அவரிடம் நெருக்கமாக அணுக எனக்குத் தயக்கமாக இருந்தது. ஆனால் அவர் ஒரு சிறந்த கலைப் படைப்பாளி என்று பிறகு அறிந்து கொண்டேன். அதன் பிறகு அவரிடம் நெருங்கிப் பழக எனக்கு எந்தத் தடையும் இல்லாமல் போனது.
பழகப் பழக அவர் வயது, பதவி எல்லாவற்றையும் கடந்த ஆத்ம நண்பரைப் போல எனக்கு ஆகிப்போனார். ஊர் வந்தபின்னும் எங்களுக்குள் தொலைபேசி உரையாடல்கள் தொடர்ந்தன. எங்கள் நட்பு அதில் வேர் விட்டுக் கிளைத்துக் கொண்டிருந்தது. அலைபேசியற்ற அந்தக் காலத்தில் பிறகு எப்படியோ எங்கள் நட்பு அறுந்து போனது. மா.ந. வின் நூல்களை இலக்கிய விழாக்களில் பார்ப்பதும் வாங்குவதும் மட்டுமே நடந்து வந்தன.
2015 இல் பணி நிமித்தமாக நான் பழனி வர நேர்ந்த போது புதிய ஊர் செல்கிற எந்தத் தயக்கமும் எனக்கில்லை. ஏனெனில் எனக்கு அந்த ஊரில் ஏற்கனவே அறிமுகமான பல இலக்கிய நண்பர்கள் இருந்தார்கள். தவிர மாவட்டம் முழுமையும், அருகமை மாவட்டங்களிலும் கூட நண்பர்கள் இருந்தார்கள். கல்விப்புலம் சார்ந்த தொடர்புகள் மட்டும் தான் அப்பொழுது எனக்கில்லை. மற்றபடி புதிய வசிப்பிடம் பற்றிய பெரிய மனச்சிடுக்கில்லை.
கல்லூரிப் பணியில் இணைந்த பிறகு புலம் சார்ந்தும் பல தொடர்புகள் கிடைத்தன. அதற்கும் இலக்கியத் தொடர்புதான் பெரும் காரணமாகவிருந்தது. இங்கு வந்ததும் இலக்கிய விழாக்களுக்கும் கூட்டங்களுக்கும் நண்பர்கள் அழைக்கத் தொடங்கினர். பழகிய நண்பர்களை அருகிலிருந்து அடிக்கடி பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அது வாழ்வைச் சில, பல சிக்கல்களிலிருந்து மீட்டுக் கொண்டாட்டத்திற்கு இட்டுச் சென்றது.
கோவை இலக்கியச் சந்திப்பை மாதந் தவறாமல் சிறப்பாக நடத்தி வருகிறார்கள் நண்பர்கள் இளவேனில் மற்றும் இளஞ்சேரல் இருவரும். இரட்டைக்குழல் துப்பாக்கியைப் போல அவர்களின் நட்பு. அவர்கள் விழா ஒன்றிற்கு என்னைப் பேச அழைத்திருந்தார்கள்.
அநேகமாக, எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் எழுதிய நூல் என்று நினைவு. அதன் வெளியீட்டு விழா கோவையில் நடைபெற்றது. அந்நூலை அறிமுகம் செய்யும் பணி எனக்கு. அங்குச் சென்றிருந்தேன். விழா சிறப்பாக நடந்து முடிந்திற்று. வெளியே வரும் நேரத்தில் மா.ந என்னைக் கண்டு கொண்டார்.
“எங்கிட்ட சொல்லாமலேயே எங்க ஊருக்கு வந்து பேசிட்டுப் போயிடலாம்ன்னு பார்க்கிறீங்களா?” என்று ஒரு குழந்தையைப் போல புன்னகைத்துக் கொண்டு நின்றார். “ஐயா நல்லாருக்கீங்களா?” என்று அவர் கரங்களைப் பறறிக் கொண்டேன். நட்பின் இழையில் எங்கள் விழிகள் தவித்தன. பிறகு இயல்பானோம்.
“என்ன மீனாசுந்தர் இவ்வளவு தூரம் இந்த விழாவுக்காகவா வந்தீங்க?” என்றார். “ஆமாம் ஐயா” என்றேன். “அடேங்கப்பா மன்னார்குடியிலேர்ந்து எவ்வளவு தூரம். இலக்கியம் சும்மா உங்களை உட்கார விடமாட்டேங்குது” என்றார். நான் அப்போது தான் பழனி வந்த செய்தியைப் பகிர்ந்தேன். “அட இங்கப் பாருய்யா. ரொம்ப சந்தோசம்ங்க. ரொம்ப சந்தோசம்” என்று இரண்டு முறை அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்திவிட்டுச் சொன்னார்.
“ஆமா.. நீங்கெல்லாம் கல்லூரியில தான் இருக்கணும். நான் அடிக்கடி உங்களைப் பார்க்கறப்ப நினைச்சிக்குவேன்” என்றார். “மகிழ்ச்சிங்கய்யா” என்றேன். “பரவாயில்லை ரொம்ப பக்கமா வந்திட்டிங்க. இனியாவது அடிக்கடித் தொடர்பில் இருப்போம்” என்றார். “உறுதியாக ஐயா” என்றேன். என்னுடன் பணி புரியும் சிலரைப் பற்றி விசாரித்தார். அவர்கள் பற்றிய சில செய்திகளை நகைச்சுவையுடன் பகிர்ந்து கொண்டார்.
விடைபெறும் தருணத்தில் அப்போது புதுப்புனல் பதிப்பகத்தின் வழியாக வெளியாகியிருந்த என் மருதத்திணை நூலை அவரிடம் கையளித்தேன். அதைப் பார்வையாலேயே மேலோட்டமாக நோட்டமிட்டவர், எதுவோ கண்ணில்பட்ட இரண்டு கவிதைகளைப் படித்து விட்டு அட நல்லாருக்கே. நூல் முழுக்கவும் விவசாயம் பற்றிய கவிதைகளா? என்று வியப்பிலாழ்ந்தார்.
அடிப்படையில நானும் உங்களைப் போலவே ஓர் எளிய வேளாண்குடியைச் சேர்ந்தவன் மீனா. அந்த வகையில் எனக்கு இது உறுதியாக அணுக்கமான தொகுப்பாக இருக்கும், நிதானமாகப் படித்துவிட்டுப் பேசுகிறேன் என்று பத்திரப்படுத்திக் கொண்டார். அத்தோடு விடவில்லை.
வாங்க வீட்டுக்குப் போகலாம். மதியம் சாப்பிட்டுட்டு கொஞ்சம் ஓய்வெடுத்திட்டு மாலையில போகலாம். நானே பேருந்து நிலையத்துல கொண்டு விடுறேன் என்றார். நான் மற்றொரு நாள் வருகிறேன் என்று அன்பாக மறுத்தேன். சரி.. வாங்க.. எங்காவது இங்கயே மதியச் சாப்பாட்டை உங்க கூடவே நானும் சாப்பிட்டுக்கறேன் என்று தன் மொபட்டில் பின்புறம் என்னை அமரச் செய்து அழைத்துச் சென்றார். இரண்டு மூன்று கடைகளைத் தவிர்த்தார். கூட்டமில்லாத கடையா பார்க்கறேன் அப்பதான் சாப்டுக்கிட்டே பேச முடியும் என்றார்.
சிறு மெஸ் போன்ற கடையில் அமர்ந்து கொண்டோம். அவர் மனத்தில் தேக்கி வைத்திருந்த இலக்கியச் செய்திகளை கொட்டிவிடும் ஆவலில் பேசிக் கொண்டேயிருந்தார். அவரின் ஒவ்வொரு நூல் குறித்தும் அதை எழுதிய அனுபவங்கள் குறித்தும் எழுதப் போகும் நூல்கள் குறித்தும் உரையாடிக் கொண்டேயிருந்தார்.
அண்மைப் படைப்பிற்கு அவரின் மாமன் உறவு கொண்ட ஒருவரைச் சந்தித்ததாகவும், அவர் பாம்பு கடிக்கு வைத்தியம் செய்யக்கூடியவர் என்றும் அந்த வைத்தியத்தை யாருக்கும் அவர் கற்றுத்தர விரும்பவில்லையென்றும் பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
மாமன் இப்போது படுக்கையில் இருப்பதாகவும், ஊர் செல்லும் போது அவருக்குச் சில உதவிகளை மனிதாபிமானத்துடன் செய்து வருவதாகவும் குறிப்பிட்டார். என்ன நினைத்தாரோ மாமன் அவராகவே இப்போது என்னிடம் அந்தத் தகவல்களைப் பகிர்ந்து கொள்ள விரும்பியிருக்கிறார் என்றார். அது குறித்து தான் அடுத்து எழுத எண்ணியிருக்கிறேன் என்றார்.
ஒண்டிக்காரன் பண்ணையம், ஊர் கலஞ்சு போச்சு, அப்பத்தாளுக்கு ஒரு கல்யாணம், கந்தாயம், குன்னம் போன்ற அவரின் அத்தனை நூல்களும் பரவலான கவனிப்பைப் பெற்றவை. கொங்கு வட்டார வாழ்க்கையை ரத்தமும் சதையுமாக ஈரப் பிசுபிசுப்புடன் பேசக் கூடியவை. அவர் கதைகளில் வீண் தம்பட்டமிருக்காது. அருகிருந்து வாழ்வது போன்ற கதாபாத்திரங்களை அவ்வளவு உயிர்ப்புடன் உலவ விட்டிருப்பார்.
உணவு முடிந்த பிறகு ஏதோ ஒரு பூங்காவிற்கு அழைத்துச் சென்றார். அன்று மாலை ஐந்து மணி வரையும் எங்கள் உரையாடல் நீண்டது. என்னை அவர் மொபட்டிலேயே அமர்த்தி பேருந்து நிலையம் வரை வந்து விட்டுச் சென்றார்.
பேருந்து நிலையத்தில் தான் அவர் பையிலிருந்து ஒரு பொக்கிசத்தை எடுத்தார். அவர் அப்போது எழுதி சப்னா வெளியீடாக வெளிவந்திருந்த குன்னம் புதினத்தை எடுத்துக் கையப்பமிட்டுத் தந்தார்.
இதற்கு ஒரு மதிப்புரை எழுதுங்கள் மீனா என்றார். ஐயா உங்களுக்கு நான் மதிப்புரை எழுதுவதா என்று சிரித்தேன். எனக்கு எழுத வேண்டாம், என் படைப்புக்கு எழுதுங்கள் என்று அப்போதும் என்னைச் செல்லமாய்ச் சீண்டிவிட்டு, மனதில் பட்டதை எழுதுங்கள் மீனா என்று அவர் சொன்ன அன்பு வார்த்தைகளை எப்படியோ என்னால் நிறைவேற்றவியலவில்லை.
பல பணி நெருக்கடிகளில் கிட்டத்தட்ட 300 பக்கம் இருக்கும் அந்தப் புதினத்தை உடன் என்னால் படிக்க முடியவில்லை. தள்ளி வைத்த வேலை தாமதமாகும் என்பது அதிலும் நிரூபணமாகி விட்டது. அந்தப் பணியைச் செய்யவியலா மன அழுத்தம் என்னை அவர் மறைந்த இவ்வேளையில் மிகையாக வாட்டுகிறது. மன்னியுங்கள் மா.ந.
அதன்பிறகு எங்கள் அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரித் தமிழ்த்துறை விழா ஒன்றிற்கு அவர் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்தார். “கொங்கு வட்டார புதினங்கள்” என்ற தலைப்பில் அவர் உரை அமைந்திருந்தது.
மாணவர்களுடன் மிக எளிமையான அணுகுமுறையுடன் அவர் தம் கருத்துகளைக் கொண்டு சேர்த்தார். அந்த விழாவிலும் என்னைப் பெருமைப்படுத்தி சில வாரத்தைகளை அவர் உதிர்த்த போது தான் எனக்கும் அவருக்குமான உறவு பலருக்கும் தெரிய வந்தது.
அவரின் இறுதி மூச்சுவரை ஓர் இடதுசாரியாக வாழ்ந்ததும் அந்தப் பாதையிலிருந்து சற்றும் வழுவாமல் படைப்புகளைத் தந்ததும் பலருக்கும் உந்துதலாக இருந்தவை. குறிப்பாக, இளைய தலைமுறை எழுத்தாளர்களிடம், கவிஞர்களிடம் அவர் காட்டிய அக்கறையும் மரியாதையும் அனைவருக்குமான இலக்கியப் பாலபாடம்.
அவர் விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் இருக்கிறார் என்ற தகவல் கிடைத்ததும் மனம் தவித்தது. சென்று பார்ப்பதற்கு தீநுண்மியின் பேரோலம் தடுத்தது. விபத்திலிருந்து மீண்டு வந்து திரும்பவும் பல வலுவான படைப்புகளைத் தருவார் என்று தான் எண்ணியிருந்தேன்.
காலம் நம்மை ஏமாற்றி விட்டது. தீநுண்மி கால இந்தக் கொடுங்காலத்தில் அவரின் இறுதி நிகழ்வில் கூடக் கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டது. என்னிடம் மட்டுமல்ல, பழகிய அத்தனை பேரிடமும் பாசத்தை வஞ்சகமின்றி பொழிந்தவர் மா.ந. அவர் படைப்புகள் காலத்தால் அழிக்க முடியாதவை. மா.ந என்ற இரண்டெழுத்துகள் தமிழிலக்கியத்தின் கொங்கு வட்டார முகவரியாக என்றும் விளங்கும்.
வீரவணக்கம். போய் வாருங்கள் எங்கள் மூத்த தோழர் மா.ந.!
- மீனா சுந்தர்