anandakumar book 450ஈழப்பிரச்சினைக்குப்பின் உலகம் முழுவதும் பரவி வாழும் தமிழர்களின் படைப்பிலக்கிய முயற்சிகளால் தமிழ் இலக்கியப் படைப்புகளில் புலம் பெயர்ந்தோர் இலக்கிய வகை காத்திரமான இடத்தை அடைந்துள்ளது. அது ஒரு வகையில் ஈழத்துத் தமிழிலக்கிய மரபின் தொடர்ச்சியாக விளங்குகிறது. ஆரம்பத்தில் டொமினிக்ஜீவா, டேனியல், செ.கணேச லிங்கன், கைலாசபதி, கா.சிவத்தம்பி போன்றோரே அறியப்பட்ட நிலையில் இன்றைக்கு எண்ணற்ற படைப்பாளிகள் எழுதி  வருகிறார்கள்.

புலம்பெயர்ந்த இலக்கியத்தின் ஆரம்ப கால முயற்சிகளின் தேடலை காலனி ஆட்சியிலிருந்து தொடங்கி இந்நூற்றாண்டின் தீவிரமான முயற்சிகள் வரை அறிமுகப்படுத்தும் நூலாக இது விளங்குகிறது. இதில் புலம்பெயர்ந் தோரின் கவிதைகள், சிறுகதைகள் மூலம் அவர்களின் புலம் பெயர்வு வாழ்க்கை பற்றிய இலக்கியப் படைப்புகளை பேரா. ஆனந்தகுமார் எடுத்துக்காட்டுகிறார். நாவல் பற்றியக் குறிப்புகள் இந்நூலில் இல்லை. அது விரிவான தளம்.

புலம்பெயர்ந்தோர் கவிதைகளில் அயல்நிலம், தாய்நிலம் என்ற கண்ணிகள் விரவிக்கிடப்பதை பல கவிதைகளின் மூலம் எடுத்துக்காட்டியிருக்கிறார். அகதிகளின் வாழ்நிலை அதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. பல நாடுகளில் அடிமைத்தனமும் நிற வெறியும் அவர்களைச் சிறுமைப்படுத்தியிருப்பதை மேற்கோள்கள் மூலம் காட்டுகிறார். இதில் பெண்ணுரிமை சார்ந்த குரல் குறிப்பிடத்தக்கதாயும் விளங்குகிறது. இந்த வகையில் வ.அய்.ச.ஜெயபாலன், கலாமோகன், தீபச்செல்வன் முதற்கொண்டு தமிழ்நதி, மல்லிகா வரை பலரின் கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன.

புகலிட இலக்கியத்தில் (அலைவு இலக்கியம்) சிறுகதைகளின் பங்கு முக்கியமானது. அவை யதார்த்தப் பாணி, பின்நவீனத்துவப்பாணியில் அமைந்திருப்பதை வகைப்படுத்துகிறார். படித்தவர்களாக இருந்தாலும் கூலி உழைப்பில் அவர்கள் ஈடுபடுவதைச் சுட்டிக் காட்டுவது ஒரு முக்கிய அம்சம்.

நாடு, தெருக்கள் அல்லாத மிதவை வெளியில் அவர்கள் வாழ்கிறார்கள் என்கிறார் ஆசிரியர்.

புலம்பெயர்ந்தவர்களின் தேசியம் மற்றும் சமீபத்திய நாடு கடந்த தேசியம் பற்றிய அவதானிப்பு களும் இதில் உள்ளன.

நாவல் பற்றியக் குறிப்புகள் இந்நூலில் இல்லை.  இதோடு தொடர்புடைய மீரான் மைதீனின் நாவல்களில் இந்த அம்சங்கள் இருப்பதை ஊடாகக் காட்டுகிறார்.

இந்த வகையில் கலாமோகன் முதற்கொண்டு அ.முத்துலிங்கம், மாத்தளை சோமு வரை பலரின் சிறுகதைகள் இடம்பெற்றிருக்கின்றன. போர்ச் சூழல், அகதி வாழ்க்கை, கயறு நிலை போன்றவற்றை அவை கோடிட்டாலும் அ.முத்துலிங்கத்தின் சிறுகதை லவுகீக வாழ்க்கையில் அதன் தாக்கம் பற்றிய மாறுபட்ட பார்வையைச் சொல்கிறது. மாத்தளை சோமுவின் சிறுகதையில் தோட்டத்தில் உழைத்து அங்கேயே செத்தவர்களைப் புதைப்பதற்கு இடம் தேடும் அவலம், தமிழர்களின் அவலக் குறியீடாய் இன்னொரு கோணத்தில் அமைந்திருக்கிறது.

1980-ல் மதுரை அமெரிக்கன் கல்லூரியின் பாடத் திட்டத்தில் இடம்பெற்ற போத்திரெட்டியின் 'அயல் இலக்கியம் நூல்” ஆரம்ப முயற்சி. அதன் நீட்சியாகவும் ஆழமாகவும் தீவிரமாகப்பயணப்பட்டிருக்கிறது இந்நூல். அந்த வகையில் கவிதை, சிறுகதை தவிர்த்து நாவல், நாடகம், சுயசரிதம்  உட்பட பல பிரிவுகள் பற்றியவை இந்நூலில் இடம்பெறவில்லை.

புலம் பெயர்ந்தோர் இலக்கியம்
(பனுவல்களும் மதிப்பீடுகளும்)
முனைவர் பா.ஆனந்தகுமார்
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,
41- பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்
அம்பத்தூர், சென்னை - 600 098.
தொலைபேசி எண்: 044 - 26359906
விலை : ` 80.00

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.