ஒரு மொழியின் வளர்ச்சியில் இலக்கியத்தின் பங்கு அளப்பரியது.  கவிதை, பாடல், நாவல், சிறுகதை, கட்டுரை, நாடகம், குழந்தை இலக்கியம் என்று இலக்கியம் பல பிரிவுகளைக் கொண்டுள்ளது.

ஒவ்வொரு பிரிவின் வளர்ச்சியையும் போக்குகளையும் அறிந்து கொள்வதற்கு தொகுப்பு நூல் களே பெரிதும் உதவுகிறது எனலாம்.

இளம் படைப்பாளிகளுக்கும் ஆய்வு செய்பவர்களுக்கும் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் தொகுப்பு நூல்கள் வரப்பிரசாதமாகும்.

தமிழில் குழந்தைப் பாடல்களுக்கான தொகுப்பு நூல்கள் மிகக் குறைவாகவே வந்துள்ளன.

கே.என். சிவராஜ பிள்ளை, கவிமணி, பண்டித முத்துச்சாமி பிள்ளை ஆகியோர் இணைந்து ‘சிறு பாமாலை’ என்ற பெயரில் முதல் குழந்தைப் பாடல் தொகுதியினை வெளியிட்டனர்.

1935-ல் வெளிவந்த ‘பிள்ளைப் பாட்டு’ இரண்டாவது குழந்தைப் பாடல் தொகுதியாகும்.  இது வெளி வந்தது இலங்கையில்,

1970-ல் மூன்றாவது குழந்தைப் பாடல் தொகுதி வந்தது, நூலின் பெயர் ‘முத்துக் குவியல்.’ தொகுத்தவர் பூவண்ணன்.

சுமார் 42 ஆண்டுகளுக்குப் பிறகு 2012-ல் சாகித்ய அகடமி வெளியீடாக ‘குழந்தைப் பாடல்கள்’ தொகுப்பு வந்துள்ளது.  பூவண்ணன் தான் இதையும் தொகுத்துள்ளார்.

பழைய மூன்று தொகுப்புகளும் இப்போது கிடைக்கிறதா என்பது தெரியவில்லை.  ஆனால் அக்குறையைப் போக்கும் விதமாக, சாகித்ய அகடமியின் ‘குழந்தைப் பாடல்கள்’ தொகுப்பு பெரிய அளவில் 200 பக்கங்கள், 274 பாடல்கள் என்று வந்துள்ளது, நிச்சயம் தமிழ்க் குழந்தை இலக்கியத்திற்கு பலம் சேர்க்கும்.

இத்தொகுப்பு புதிய படைப்பாளிகளுக்கு

ஒரு பாட நூலாகவே, வழிகாட்டி நூலாகவே அமையும் என்பதில் சந்தேகமில்லை.  ஏனென்றால் குழந்தைகளுக்குப் பாட்டு எழுதுவது என்பது கடினமான கலை.  இதனை கவிஞர் சௌந்தர கைலாசம் இவ்வாறு கூறுகிறார்,

‘காட்டிலும் யானையினைக்

கையிலுறும் பானைக்குள்

ஓட்டுங் கலையும் ஒரு கலையா?

எழுத்துக் கூட்டுஞ் சிறிய குழந்தைக்குப்

பாட்டெழுதிக் காட்டும் கலையே கலை!’

சிறு குழந்தைகளுக்குப் பாட்டு எழுதுவது என்பது பானைக்குள் யானையை புகச் செய்வது போல் கடினமானதாகும்.  அக் கடினக் கலையை கற்றுத் தரும் வகையில் அமைந்துள்ளது ‘குழந்தைப் பாடல்கள்’ தொகுப்பு நூல்.

இத்தொகுதியில் கவிமணி முதல் இன்றைய கவிஞர்கள் வரை எழுதியுள்ள, பல்வேறு போக்கு களையும் பண்புகளையும் வெளிப்படுத்தும் பாடல்கள் இடம் பெற்றுள்ளன.  இக் கதம்ப மாலையில்தான் எத்தனை எத்தனை வகையான வண்ண மலர்கள்...

மகாகவி பாரதியின் ‘பாப்பா பாட்டு’, கவிமணியின் ‘தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு’, பாரதிதாசனின் ‘பூனை வந்தது பூனை - இனிப் போனது தயிர்ப்பானை’, அழ. வள்ளியப்பாவின் ‘வட்டமான தட்டு, தட்டு நிறைய லட்டு’ தமிழ் ஒளியின் ‘பாடம் படியா ஒரு பையன்’, மயிலை சிவ முத்துவின் ‘மாமி சுட்ட பிட்டு’, வாணிதாசனின் ‘பாலுக்குள்ளே வெண்ணெய் உண்டாம் உண்மை’, கா. நமச்சிவாய முதலியாரின் ‘அ அதுவோர் அத்திப்பழம், ஆ என்பவன் ஆசைப்பட்டான்’, தம்பி சீனிவாசனின் ‘அன்றொரு நாள் ஆடுகையில் நான் இழந்த பந்து’, பெ.நா. அப்புஸ்வாமியின் ‘டம்மாரம் அடி டம்மாரம், டம் டம் அடி டமாரம்’ செல்ல கணபதியின் ‘கொட்டும் மழையின் சத்தம் கேட்டுக் கொர் கொர் என்று தவளையார்’, பெரியசாமி தூரனின் ‘தாடி நீண்ட தாத்தா, தடவி ஒரு நாள் பார்த்தார்’, பூவண்ணனின் ‘எத்தனை பட்டை வயிரத்திலே’ ஆகிய பிரபலங் களின் பிரபல பாடல்கள் இத்தொகுப்பில் இடம் பெற்று உள்ளன.

இது தவிர, குழந்தை இலக்கியத்திற்கே உரிய பண்புகளான எளிமை, திரும்பக் கூறல், பேச்சு வழக்கு, வினா - விடைக் குறிப்பு, விடுகதைத் தன்மை, நாப்பயிற்சி, வேடிக்கை இனிமை, அறிவுரை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட பாடல்கள் கவனமாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

எளிமைக்கு உதாரணமான குயிலனின் பாடல் இது:

“சின்னச் சின்னச் சிட்டு

சிங்காரச் சிட்டு

நெல்லைப் போலே மூக்கு

நேர்த்தியான நாக்கு

வட்ட வட்ட கண்கள்

பட்டு போலே மேனி

வானத்திலே பறக்கும்

வந்து சற்றே இருக்கும்

காட்டுக்கிரை தேடக்

காற்றைப் போலப் பறக்கும்

வீட்டுக் கூரை மேலே

கூட்டில் வந்து படுக்கும்

சிட்டைப் போலேப் பறந்து

சிறுவர் வாழ வேண்டும்

சற்றும் சோம்பலின்றித்

தாவித் திரிய வேண்டும்.”

திரும்பக் கூறல் என்பது குழந்தைப் பாடலுக்கு ஒரு குணம், குற்றமன்று.

‘பொய் சொல்ல மாட்டோம்!

பொய் சொல்ல மாட்டோம்!

...............................

...............................

ஆயிரம் வந்தாலும்

ஆயிரம் போனாலும்

பொய் சொல்ல மாட்டோம்!

பொய் சொல்ல மாட்டோம்!’

என்ற மயிலை சிவமுத்துவின் பாடல் நல்ல எடுத்துக்காட்டு.

வேடிக்கை, விநோதம் என்பவற்றை குழந் தைகள் பெரிதும் விரும்புகின்றனர்.  அது சொல் விளையாட்டாக அமைவது மொழியைக் கற்கவும் உதவுகிறது.  இரட்டைக் கிளவியைக் கொண்டு வே. இரா. சிவஞான வள்ளல் எழுதிய ‘பள்ளிக்குப் போனாள்’ என்ற பாடல் தொகுப்பில் உள்ளது.

பாடலைப் பார்ப்போம்:

‘கர கர வென்று

கதிரவன் வரவே

தக தக வென்று

வானம் வெளுத்தது.

சர சர வென்று

சாரதா எழுந்தாள்.

தட தட வென்று

தண்ணீர் இறைத்தாள்.

மட மட வென்று

குளித்து முடிந்தாள்.

சிடு சிடுப்பின்றித்

தலையை வாரிக்

கம கம வென்று

கடி மலர் எடுத்துத்

தள தள வென்று

தலையில் முடித்தாள்.

கண கண வென்று

மணியொலி எழவே

குடு குடு வென்று

பள்ளிக்குப் போனாள்.

வினா - விடை வடிவில் குழந்தைப் பாடல் அமைவது ஒரு வகை.  கவிஞர் மன்ற வாணனின் ‘எங்கே போகிறாய்?’ பாடலில் விடைகள் தான் குழந்தைக்குரியதாக இல்லை.  பாடல் இதோ;

‘அன்புத் தங்கை, அறிவுத் தங்கை

எங்கே போகிறாய்?

இன்பம் தழைக்கும் இனிய உலகைப்

படைக்கப் போகிறேன்.

இன்பம் தழைக்க இன்னல் விலக்க

என்ன செய்குவாய்?

துன்பச் சாதிச் சமயப் பூசல்

ஒழிக்கப் போகிறேன்.

சாதிச் சமயப் பூசல் ஒழிய

என்ன செய்குவாய்?

நீதியோடு நிதியும் பெருகச்

சட்டம் இயற்றுவேன்.

பேதம் ஒழியச் சட்டம் இயற்றி

என்ன செய்குவாய்?

நாதம் ஓங்கும் நல்ல தமிழைப்

படித்து மகிழ்வேன்!

குழந்தை இலக்கியம் என்றாலே அறிவுரை கூறுவது என்று தமிழில் புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது.  குழந்தைப் பாடல்களில் இப்போக்கு தூக்கலாகவே இருக்கிறது.

இத் தொகுப்பில் முதல் பாடலாக அமைந் துள்ள ‘எல்லாம் ஒன்றாய்த் தெரிகிறது’ கவி மாமணி இளையவன் எழுதியது.  சிந்து நடையில் பாடக் கூடிய சந்தத்தில் அமைந்த அருமையான பாடலின்  அறிவுரை குழந்தைகளுக்குரியதல்ல.  பாடல் இது!

‘மாடியிலிருந்து பார்க்கின்றேன்

மாதா கோவில் தெரிகிறது!

கோடியில் என்ன தெரிகிறது?

கோவில் கோபுரம் தெரிகிறது!

இங்கே என்ன பார்க்கின்றேன்?

இஸ்லாம் பள்ளி தெரிகிறது!

எங்கள் வீட்டு மாடியிலே

எல்லாம் ஒன்றாய்த் தெரிகிறது!’

வாய்மொழித் தன்மைக்கு எடுத்துக்காட்டாக இத் தொகுப்பில் நாடோடிப் பாடல்களான ‘ஆக்காட்டி, ஆக்காட்டி எங்கெங்கே முட்டை வைத்தாய்?’ ‘பச்சைக் கிளியே! வா, வா, பாலும் சோறும் உண்ண வா’ என்பவை இடம் பெற்றுள்ளன.

தொகுப்பில் மழலைப் பாடல்கள் இடம் பெறாதது ஏனென்று தெரியவில்லை.  மழலைப் பாடல்களுக்கென்று ஒரு தொகுப்பு தமிழில் இது வரை வரவில்லை.  இக்குறை வருங்காலத்திலாவது போக்கப்பட வேண்டும்.

இத்தொகுப்பிலுள்ள ஒரு முக்கிய கவனக் குறைவை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.  அடுத்த பதிப்பில் திருத்திக் கொள்வதற்காகவே.  நிறைய பாடல்கள் மீண்டும் மீண்டும் இடம் பெற்றுள்ளன.  அழ.  வள்ளியப்பாவின் ‘லட்டு’ பாடல், சிவஞான வள்ளலின் ‘பள்ளிக்குப் போனாள்’ ஆகியன மூன்று முறை வந்துள்ளன.  இன்னும் 12 பாடல்கள் இரண்டு முறை அச்சிடப்பட்டுள்ளன.

‘குழந்தைப் பாடல்கள்’ தொகுப்பினைத் தொடர்ந்து ‘சிறுவர் கதைக் களஞ்சியம்’ என்ற பெயரில் ஒரு கதைத் தொகுப்பினை வெளியிட்டு தமிழ்க் குழந்தை இலக்கியத்திற்கு உரம் சேர்த் திருக்கிறது சாகித்ய அகடமி.  தமிழ்க் குழந்தை இலக்கியத்தில் அனுபவமும் ஆர்வமும் கொண்ட பேராசிரியர்கள் இரா.  காமராசுவும், கிருங்கை சேதுபதியும் தொகுத்தளித்துள்ளனர்.

இதற்கு முன் சிறுவர் இதழான கண்ணனில் வந்த கதைகள் தொகுப்புகளாக வந்துள்ளன.  இது தவிர வேறு வரவு இருப்பதாகத் தெரியவில்லை.  எனினும் சாகித்ய அகடமியின் கதைக் களஞ்சியம் முக்கியத்துவம் வாய்ந்தது.  மகாகவி பாரதி முதல் அண்மையில் எழுதிய மாணவர் மருதுவின் படைப்பு வரை தொகுக்கப்பட்டுள்ளதே அந்த முக்கியத்துவம்.

தமிழ்க் குழந்தை இலக்கியத்தில் கதை உலகம் ஒரு கடல்.  அதில் தொகுப்பாளர்கள் முத்துக் குளித்திருக்கிறார்கள்.  எதார்த்தம், கற்பனை, புனைவு, குழந்தை மனம், நகைச்சுவை உணர்வு, வேடிக்கை, குறிக்கோள்கள், அறிவுரைகள், புதிய உத்திகள், புராண, இதிகாச, நாட்டுப்புறப் பண்புகள் என்று சிறுவர் கதை உலகின் பல்வேறு போக்கு களை பிரதிநிதித்துவப்படுத்தும் படைப்புகளைத் தேடித் தேடித் தொகுத்திருக்கிறார்கள்.  அவர் களுக்குப் பாராட்டு உரித்தாகுக!

இத்தொகுப்பில் இடம் பெற்ற கதைகளைத் தேர்ந்தெடுப்பதற்கு தொகுப்பாளர்கள் கடைப் பிடித்த அளவுகோலையும் சொல்லியுள்ளார்கள்.  ‘பெரிதும் அறிவுரை கூறுதலையே நோக்கமாகக் கொண்ட கதைகள் மலிந்திருக்கும் தமிழ்ச் சூழலில் முடிந்த மட்டிலும் அது கடந்து குழந்தை உலக உணர்வுகளைச் சித்தரிக்கும் கதைகளைத் தேடித் தொகுத்திருக்கிறோம்.’  50 கதைகள் கொண்ட இத்தொகுப்பில் பெரும்பாலான கதைகள் இவ் அளவுகோலின் படியே அமைந்துள்ளது என்பது உண்மை.  இத்தொகுப்பின் வெற்றிக்கும் அதுவே காரணம்.

‘நாட்டு எலியும் நகரத்து எலியும்’ ஒரு நாட்டுப்புறக் கதை.  எழுதியவர் மறைமலையடிகள்.  தூய தமிழில் இக் கதையை வாசிக்கும் நல்வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

பிரபல எழுத்தாளர் தி.ஜ.ர.  எழுதியுள்ள ‘மந்திர அடுப்பு’ குழந்தைகளின் மனதை கொள்ளை  கொள்ளும் கதை.  ராஜா, ராணி, இளவரசன், அரக்கன் இவர்கள் தான் பாத்திரங்கள்.  ஆனால் இந்த ராஜா ராணி கதையில் ரேடியோ வருகிறது.  ஏரோப்ளேன் வருகிறது.  இந்த விநோதத்தைத் தான் குழந்தைகள் விரும்புகிறார்கள்.

டாக்டர் பூவண்ணனின் ‘நந்துவின் பந்து’ கதையில், நந்துவின் பாத்திரப் படைப்பு வலிமை யானது.  தனது பெருந்தன்மையான செயலின் மூலம் தாத்தாவிடம் மனமாற்றத்தை அவன் ஏற்படுத்தி விடுவதை நயமாகச் சொல்லும் கதை.

ரேவதியின் உமுஜாசே.  கதைத் தலைப்பே அபாரம்.  இதுவும் கதை சொல்லுவதற்கு ஒரு உத்தி தானே!

தேவபாரதியின் தேவதை தந்த வரம்,  சுயநலத்தை விட பொது நலனே சிறந்தது என்பதை அறிவுரை, பிரசங்கம் எதுவும் இல்லாமல் சொல்லி விடும் கதை.

வரலாற்று நாவலாசிரியரான கௌதம நீலாம்பரன் ‘உழைத்த பணம்’ என்கிற கதையில் ஒரு மன்னர் பாத்திரத்தை புனைந்து உழைப்பின் மேன்மையை சொல்லி விடுகிறார்.

நூல் தொகுப்பாளரில் ஒருவரான கிருங்கை சேதுபதியின் ‘பரிசுத் திருநாள்’ ஒரு நல்லாசிரியைப் பற்றிய கதை.  நடை இன்னும் குழந்தைகளுக் குரியதாக இருக்க வேண்டும்.

இத்தொகுப்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் படைப்புகள் இடம் பெற்றுள்ளது.  குறிஞ்சிச் செல்வர் கொ.மா. கோதண்டம், அவரின் துணைவியார் ராஜேஸ்வரி கோதண்டம், மைந்தன் கொ.மா.கோ.  இளங்கோ.  தமிழ்க் குழந்தை இலக்கியத் திற்கு ஒரு குடும்பமே தொண்டு செய்வதைப் பாராட்ட வேண்டும்.

அதே போல் கவிஞர் மலையமான், அவரின் துணைவியார் முனைவர் சரளா இராசகோபாலன் ஆகியோரின் கதைகளும் இடம் பெற்றுள்ளது.

இதில் இடம் பெற்ற கதைகளை விட, இடம் பெறாத கதைகள் நிறைய இருக்கின்றன.  அனைத் தையும் தொகுத்து வெளியிட ஒரு தொகுப்பு போதாது என்று தன்னடக்கத்துடன் ஒப்புக் கொண்டுள்ள தொகுப்பாளர்களின் கருத்து கவனிக்கத்தக்கது.  மேலும் பல தொகுப்புகளுக்குத் தேவை உள்ளது என்பதையே அவர்கள் கூறி யுள்ளார்கள்.

தமிழ்க் குழந்தை இலக்கியத்தில் சாகித்ய அகடமியின் இரண்டு தொகுப்புகளும் சிறந்த முயற்சிகளாகக் கருதப்படும் என்பதில் சந்தேக மில்லை.