அன்று யாரும் இல்லாது காலி நாற்காலிகளைக் கொண்டு மௌனம் காத்து இருந்தது அந்த தேநீர் விடுதி.
நுழைந்த உடன் வெறுமனே இருந்த நாற்காலிகளைப் பார்த்தவுடன் சற்று ஏமாற்றத்துடன் ஒரு இருக்கையை தேர்வு செய்து அதில் அமர்ந்து கொண்டான் சூர்யா. கணிப்பொறியில் அந்த நாளுக்கான கணக்கை பார்த்துக் கொண்டு இருந்தான் பிரகாஷ்.
பெருமூச்சுடன் சுவரென நின்று கொண்டிருந்த பழுப்பு நிற கண்ணாடி வழியாக சாலையை பார்த்தான். பகலும் இரவும் கூடும் நிகழ்வொன்றில் எதையோ தேடி ஓடிக் கொண்டிருந்த மனிதர்களின் கூட்டம் அப்போது கொண்ட மழையை பொருட்படுத்தாமல், மறைந்து கொண்டனர். சாலையில் இதமான காற்று தேநீர் விடுதிக்குள் வருவதற்கு தயங்கி வாசலில் நின்று கொண்டது.
வெகுநேரம் தேடிப் பார்த்தான் அவன் தேடிய தினேஷ் வரவே இல்லை.
சூர்யாவும் ,தினேசும் நெருங்கிய நண்பர்கள். இருவருக்கும் உள்ள நெருக்கம் ஒரு நாளில் சொல்லி விட முடியாது. ஒரு நாள் இருவருக்கும் ஒரு வாக்குவாதம் முற்றிப் போனதில் பேச்சு வார்த்தை இருவருக்குள் குறைந்து கொண்டது நாளடைவில் முற்றிலும் நின்று போனது.
ஒரு வருடம்... இரண்டு வருடம்... மூன்று வருடம்...
பேச்சு வார்த்தை இருவருக்குள்ளும் இல்லாமலே இருந்தது.
இருவரும் அப்படி இருந்ததில்லை... எப்படியோ பேசிக் கொள்ளும் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு பேசிக் கொள்வார்கள். இப்போது சந்தர்ப்பம் அமையாதவாறு பார்த்துக் கொண்டார்கள். வருடங்கள் ஓடிக் கொண்டிருந்தது.
இவர்களது பிரிவை தெரிந்து கொண்ட பிரகாஷ் இருவரையும் சமரசம் செய்து கொள்ள இருவரையும் ஒரு நண்பர்கள் தினத்தன்று தேனீர் விடுதிக்கு அழைப்பு விடுத்திருந்தான்.
ஐந்து மணிக்கு வருவதாக கடைசியில் இருவரும் ஒப்புக்கொண்டனர்...
சூர்யாவின் கடிகாரத்தில் மணி ஐந்து பதினைந்தை காட்டியது.
“அன்று அப்படி அவன் பேசி இருக்க கூடாது, என்னுடைய கருத்திற்கும் சிறுது செவி சாய்த்திருக்கலாம்... அவனிடத்தில் இருந்து தான் தர்க்கம் துவங்கியது...
ஆனால் நானும் சற்று நிதானித்து பதில் அளித்திருக்கலாம். இப்படி ஒரு பெரும் பிரிவை தாங்கிக் கொள்ள வேண்டிய சூழ்நிலை அமைந்து விட்டதே.. என்னுடைய பதில் அன்று அவனுக்குள் பெரிய கீறலை ஏற்படுத்தி இருக்குமோ?.. இப்படி தனக்குள் அளவளாவிக் கொண்டிருந்தான்.
இதற்கு மேல் வருவதாக தெரியவில்லை, மெதுவாக எழுந்து பணியில் ஆழ்ந்திருந்த பிரகாஷிடம் கூட சொல்லாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்துகொண்டான் சூர்யா…
மணி ஐந்தே முக்காலை எட்டி இருக்கும்...
மெதுவாக கதவை திறந்தவாறு அமர்ந்திருந்தவர்களை நோட்டமிட்டான் தினேஷ் , ஆங்காங்கே இரண்டு ஒருவர் அமர்ந்து கொண்டு அளவளாவிக் கொண்டிருந்தனர்.
காலியாக இருவர் அமர்ந்து கொள்ளும் நாற்காலியை தேர்வு செய்து அமர்ந்து கொண்டான் தினேஷ். அந்த இருக்கையில் சற்று முன்பு யாரோ அமர்ந்து எழுந்த சூடு இருக்கையை விட்டு அகலாமல் அவன் உடலில் பரவிக் கொண்டதை உணர்ந்தான், அது சற்று இதமாக அவனுக்கு இருந்தது… ஏதோ அவன் பாரத்தை சற்று வாங்கிக் கொண்டதை போல இருந்தது… தேடித் பார்த்தான்
சூர்யா எங்கும் தென்படவில்லை... பழுப்பு நிற கண்ணாடிக்கு வெளியில் மழை நின்ற பாடில்லை அதற்காக யாரும் நின்ற பாடில்லை...
நான் தான் கொஞ்சம் கோவக்காரன் ,அவனாவது வந்து என்கிட்ட பேசி இருக்கலாமே... அவன்கிட்ட பேசாமல் நான்கு வருடம் கடந்து விட்டது..
இன்றைக்கும் ஏமாற்றம்... தன் ஏமாற்றம் தாளாமல் வடிந்து கொண்ட கண்ணீரை தன் கைக்குட்டையில் ஒத்திக் கொண்டான்…
நாற்காலியை விட்டு எழுந்து, கணினியில் சற்று மும்மரமாக இருந்த பிரகாஷை பார்த்தான். பிரகாஷ் பார்ப்பதாக தெரியவில்லை... விடுதியை விட்டு வெளியேறினான் தினேஷ்.
கணக்குப் பார்த்துக் கொண்டிருந்த பிரகாஷிடம் வாடிக்கையாளர் ஒருவர். இன்னைக்கு என்ன ‘டி’ மட்டும் பிரீனு போட்டிருக்கிங்க. என்ன விசேஷம்? ஒன்னும் இல்லைங்க. தினேஷ் சூர்யா னு ரெண்டு திக் பிரெய்ன்ட்ஸ் இருந்தாங்க திடீர்னு சின்ன சண்டை வந்து ரொம்ப நாளா பேசாம இருந்தாங்க.
அப்பறம் ஒரு நாள் ரெண்டு பெயரையும் ஒரு பிரெய்ன்ட்ஷிப் டேல மீட் பண்ண வைக்கலாம்னு இங்க வரச் சொன்னேன்.. இதோ அன்னைக்கு இந்த ரோட்டுல கிராஸ் பண்ணும்போது… பஸ்சுல அடிபட்டதுல சூர்யா ஸ்பாட்டுலேயே இறந்துட்டாரு அப்பறம் ஹாஸ்பிடல் போற வழில தினேசும் இறந்துட்டார்... அவுங்க ஞாபகமா வருசத்துல இந்த ஒரு நாள் மட்டும் ‘டி பிரீ...
- சன்மது