கந்தர்வன் நினைவு சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை 

வெங்கிடுபதியைக் கோவை ரயிலில் சந்திப்பேன் என்று எதிர்பார்க்கவேயில்லை. அவரை மட்டுமென்ன, ஊர்க்காரர்கள், உற்றார் உறவினர் யாரையுமே இங்கு சந்திக்க வாய்ப்பில்லை என்றுதான் எண்ணியிருந்தேன். அவர்கள் எல்லோரையும் விட்டு விலகி கண்காணாத தூரத்துக்குப் போய்விட வேண்டும் என்றுதானே ஐநூறு கிலோ மீட்டருக்கு இந்தப் பக்கமாக வந்திருக்கிறேன். ஆனாலும் நான்கு வருடங்களாக வீட்டோடும் ஊரோடும் தொடர்பற்றிருந்த எனக்கு வெங்கிடுபதியைப் பார்த்ததும் ஊருக்கே போய்விட்ட மாதிரி ஒரு சந்தோஷம். பூரிப்பு. 

கம்ப்பார்ட்மென்ட்டில் வழக்கம்போல பிச்சை கேட்ட என்னை சரிவர கவனிக்காமல் அவரும் பத்து ரூபாய் கொடுத்திருந்தார் - அவரை மாதிரி இருக்கிறதே,.... அவரேதானா; அல்லது அவரின் சாயலா என்று உன்னித்து, அவரேதான் என்ற தீர்மானத்தில், 'வெங்கிடுபதியண்ணா...!" என்று ஊர்க்காரப் பரவசத்தோடு அழைத்தேன். இவளுக்கு எப்படித் தன் பெயர் தெரிந்தது என்கிற ஆச்சரியமும் குழப்பமுமாக ஏறிட்டார். நான்கு வருடங்களுக்கு முன்னால் பேன்ட் சட்டையில் பார்த்த பையன் இப்போது சேலை கட்டிக் கொண்டு, கூந்தல் வளர்த்து, பூவும் பொட்டும் வைத்து, மூக்குத்தி கம்மல் அணிந்து, கண்மை லிப்ஸ்டிக் பூசி திருநங்கையாக எதிரே தோன்றினால் எப்படி அடையாளம் தெரியும்? 

"நாந்தானுங்ணா மேக்காலத் தோப்பு குமரேசன். தொரைராஜ் தம்பி" என்றதும் அவரது முகத்தில் பேரதிர்ச்சி, "டேய்... 'நீயா?" என்று நம்பவியலாமல் பார்த்தார். "நீ இங்கயா இருக்கற? என்னடா இது இப்படியாயிட்ட? அடப்பாவமே...! எப்பேர்பட்ட குடும்பத்துல பொறந்துட்டு உனக்கு இந்தக் கதியா?" 

"எல்லாம் என் தலைவிதிங்ணா" என்றுவிட்டு, "நீங்க எங்கீங்கணா வந்துட்டுப்போறீங்க?" என்று கேட்டேன். 

கோவையில் தனியார் நிறுவனமொன்றில் வேலைகிடைத்து, ஏதோ அலுவலக நிமித்தமாக அடையாறில் இருக்கும் தலைமையகத்துக்கு வந்து திரும்பிக் கொண்டிருக்கிறாராம். 

"எங்க வீட்ல எல்லாரும் எப்படிங்ணா இருக்கறாங்க?"  

"நீ வீட்ட விட்டு வந்ததுலருந்தே உங்கம்மாவுக்கு எப்பவும் உன்னைப் பத்துன கவலைதான். எங்கிருக்கறானோ, எப்டி இருக்கறானோன்னு உங்கற நேரம் தூங்கற நேரம் கூட உன்னைப் பத்தியேதான் பேசும்னு தொரையன் சொல்லுவான். உங்கப்பா வீறாப்ப உட்டுக்குடுக்காம இருந்தாலும் அவுரும் உள்ளுக்குள்ள ஒடைஞ்சு போயிட்டாருன்னுதான் தோணுது. இருந்து மானத்தக் கெடுக்கறத விட அவன் ஓடிப்போனது நல்லதாப்போச்சு. தலைக்கு வந்தது தலைமசுரோட போன மாதிரி'ன்னு பேசுவாரு. உன்னால குடும்பத்துக்கு வந்த அவமானத்தச் சொல்றாரா,.... இல்ல, உங்க பெரியண்ணன் உன்னையக் கால வெட்டி மூலைல போடோணும்னு அருவாளத் தூக்கிட்டு நின்னதச் சொல்றாரான்னு தெரியில..." 

சொந்த பந்தங்களின் குடும்ப நிலவரங்கள், ஊர்க் காரியங்கள் ஆகியவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த போது, அப்பால் சென்றிருந்த என் தோழிகள் - செல்வி என்கிற கோத்தி* பொதுவாக ஆண் உடையில் இருக்கும் - அவ்வப்போது பெண்ணுடை தரித்துக் கொள்ளும், பெண்ணுணர்வு கொண்ட ஆண்கள் -- கோத்தியும் நூர்ஜஹானும் - திரும்பி வந்தனர். லுங்கியும் சட்டையுமாக இருந்த செல்வி, "ஏய்,... ரோஷிணி! ஸாரு யாருடீ...?" என்று ஒயிலாகச் சாய்ந்து நின்று, சுரம் பிறழ்ந்த கட்டைக் குரலில் கேட்டாள். "எங்க ஊர்க்காரர் என்றுவிட்டு, "இவுங்க ரெண்டு பேரும் என்னோட ரூம்மேட்ஸ்சுங்கணா. தனியாப் போனா பொறுக்கிப் பசங்க, ரௌடீக கலாட்டாப் பண்ணுவாங்கன்னு மூணு பேரும் ஒண்ணாத்தான் தொழிலுக்கு வருவோம்" என்று அவர்களை அவருக்கு அறிமுகப்படுத்தினேன். 

"அப்படியா....? எங்க தங்கியிருக்கீங்க?" 

"ட்டி. நகர்லங்ணா." 

"ஆமா,... அதென்ன உன்னைய ரோஷிணின்னு கூப்படறாங்க? பேர மாத்தி வெச்சுட்டயா?" 

"ஆம்பள, பொம்பளையா மாறுனதுக்கப்பறம் பேரை மாத்தாம எப்புடீங்ணா? அதுவும் நான் ஆப்பரேஷனும் பண்ணியாச்சு. இவுங்க இன்னும் ஆப்பரேஷன் பண்ணுல. இருந்தாலும் இவுங்கள மாதிரி இருக்கற அரவானிக, கோத்திகளும் பொம்பளைப் பேருதான் வெச்சுக்குவாங்க" 

அவர்களிடம் எந்த ஊர் என்று விசாரித்தவர், "டெய்லியும் இதே ட்ரெய்ன்லதான் வருவீங்களா?" என்று கேட்டார். "இல்லீங்ணா. வேற வேற ட்ரெய்ன்ல போவோம். தூரமா இருந்தா பாதி தூரம் போயிட்டுத் திரும்பிருவோம்" என்றேன். 

எழும்பூர் நிலையம் நெருங்கிக் கொண்டிருந்தது. நாங்கள் இறங்கி அடுத்த கம்ப்பார்ட்மென்ட்டுக்குப் போக வேண்டும். அதைத் தெரிவித்துவிட்டு, "என்னைய இப்புடிப் பாத்ததப் பத்தி ஊர்ல யாருகிட்டயும் சொல்லீறாதீங்ணா. எங்க வீட்டுலயும் அப்பாகிட்டயோ பெரியண்ணங்கிட்டயோ சொல்ல வேண்டாம். அம்மாகிட்டயோ சின்னண்ணங்கிட்டயோ மட்டும் சொல்லுங்கணா. நான் நல்லாத்தான் இருக்கறேன்னு சொல்லுங்ணா" என்று கேட்டுக் கொண்டேன். குடும்பப் பழக்கம், துரையண்ணனின் நண்பரும் கூட என்பதால் அவருக்கு என் விஷயங்கள் எல்லாமே தெரியும். என் மீது அக்கறை கொண்டவரும் கூட. அதனால் என் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டார். விடைபெறுகையில், "கொஞ்சம் இரு. இந்தா இத செலவுக்கு வெச்சுக்க" என்று பர்ஸிலிருந்து நூறு ரூபாய்த் தாள்கள் இரண்டை மடித்து நீட்டினார். மறுத்தபோது, "தொரையன் குடுத்தா வாங்கிக்க மாட்டயா? நானும் அவனையாட்டத்தான்" என்று வற்புறுத்தவே வாங்கிக் கொண்டேன்.  

அம்மாவின் நினைப்பும் அவளைப் பற்றிய ஏக்கங்களும் எப்போதுமே இருக்கும். வெங்கிடுபதியைப் பார்த்ததிலிருந்து அதிகமாகிவிட்டது. அம்மா பிள்ளையாகவே வளர்ந்த நான் அவளைப் பிரிந்து இருந்ததேயில்லை. ஒறம்பறைக்குப் போனால் கூட இரண்டு மூன்று நாட்களில் திரும்பிவிடுவேன். அதற்கு மேல் அவளும் தாங்கமாட்டாள். இந்த நான்கு வருடங்களை எப்படிக் கடந்தோம் என்பது தெரியவில்லை. இனியுள்ள காலத்தை எப்படிக் கடக்கப்போகிறோம் என்பதும் தெரியவில்லை. அவளை ஒரு முறையாவது பார்க்க வேண்டும், அதற்காகவாவது ஊருக்குப் போக வேண்டும் என்று ஆசை. நூர்ஜஹானைப் போலவாவது வீட்டுக்குப் போக முடிந்தால் தேவலாம். இங்கே சுடிதார் அணிந்து கொண்டிருக்கும் அவன் ஊருக்குப் போகையில் பேன்ட் சட்டை அல்லது கைலி சட்டை போட்டுக் கொண்டு போனால் போதும். அப்போது ஆணாகத் தெரியவேண்டும் என்பதற்காகவே கூந்தலை வளர்க்காமல், அரவானித் தோற்றத்துக்கு பொருந்துகிறபடி தோள் வரை முடியைக் கத்தரித்துக் கொண்டிருக்கிறாள். மூன்று நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ஊருக்குச் சென்று, சம்பாதித்த பணத்தைக் கொடுத்துவிட்டு, ஒரு வாரம் தங்கித் திரும்புவாள், ஐந்து பெண் மக்கள் கொண்ட அவளின் குடும்பத்துக்கு அவளது சம்பாத்தியமும் வேண்டியிருப்பதால் அவளை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். என் வீடு அப்படியா? 

நஞ்சையும் புஞ்சையுமாக ஐந்து ஏக்கர் நிலம் கொண்ட குடும்பம் எங்களுடையது. ஜாதி கௌரவம், சொத்து அந்தஸ்த்து ஆகியவற்றோடு ஊருக்குள் மிகுந்த மரியாதை. எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்னை? 

நான் ஏன் இப்படிப் பிறந்தேன்? 

சிறு வயதிலேயே என் நடை, பாவனை, பேச்சுஎல்லாமும் பெண் பிள்ளை மாதிரியே இருக்கும். அம்மாவுக்கு ஒத்தாசையாக தண்ணி எடுப்பது, வீடு - வாசல் கூட்டிக் கோலமிடுவது, பாத்திரம் கழுவுவது, அம்மியில் மசால் அரைப்பது என்று வீட்டு வேலைகள் எல்லாமும் செய்வேன். "எதுக்குடா பொம்பளைக புள்ளைக செய்யற வேலைகளையெல்லாம் நீ செஞ்சுட்டிருக்கற?" என்று பெரியண்ணன் திட்டுவான். "போடா நீயி! பொட்டப் புள்ளை இல்லாத கொறைய அவன் எனக்குத் தீத்துவெக்கறான்" என்று அம்மா பதிலளித்துவிடுவாள். 

என் வயதுப் பையன்கள் எல்லோரும் தெள்ளு, குண்டாட்டம், கிட்டிப்புள்ளு, கிரிக்கெட், கபடி என்று விளையாடினால் நான் பெண் பிள்ளைகளோடு சேர்ந்து பன்னாங்கல், பல்லாங்குழி, நொண்டி, ஸ்கிப்பிங், கோபி பீஸ் என்று பெண் விளையாட்டுக்களை விளையாடிக் கொண்டிருப்பேன். தோழிகளின் பாவாடை சட்டையை அணிந்து, பௌடர் அப்பி, ஐப்ரோ - கண்மை இளுக்கி கொண்டு, டேப் ரெக்கார்டரில் நடிகைகளின் தனிப்பாடல்களுக்கு நடனமாடுவேன். 

மூன்றாவது படிக்கும் போதே ஊருக்குள் என்னை பொம்பளைச்சட்டி என்று கேலி செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். "என்னம்முணி இவன் இன்னும் இப்புடியே பொட்டப்புள்ளைக கூட வெளையாடீட்டு, பொண்டுகனாட்டவே நடந்துக்கறானே!" என்று அப்பாவும் கவலைப்பட்டார். "சின்னப் பையன்தானெ,.... வளரும்போது வெகரந்தெரியீல தானா செரியாயிரும்" என்று அம்மா சமாதானிப்பித்தாள். ஆனால் வளர்ந்த பிறகும் அதுவே தொடர்ந்தது. இடுப்பாட்டும் நடை, நளின பாவங்கள், ராகப் பேச்சு ஆகியவற்றைக் கண்டித்துத் திருத்த முயன்றார் அப்பா. இனிமேல் வீட்டு வேலைகள் செய்யவிடாதே, பொட்டப் புள்ளைகளோடு விளையாட விடாதே என்று அம்மாவிடமும் உத்தரவு. "அப்படி ஏதாவது கண்ணுல பாத்தேன்,... தோலை உரிச்சு உப்புக்கண்டம் போட்டுருவேன்" என்று என்னையும் மிரட்டுவார். 

வீட்டு வேலை செய்யாவிட்டாலும் பரவாயில்லை. விளையாடாமல் எப்படி இருக்க முடியும் அந்த வயதில்? அப்பா சொல்கிறபடி பையன்களோடு விளையாட என்னால் முடியாது. எனக்கு அந்த விளையாட்டுகளும் தெரியாது; பையன்களைப் பார்த்தாலே வெக்க வெக்கமாகவும் வரும். அவர்கள் தொட்டுப் பேசினால் கூச்சமாக இருக்கும். வகுப்பில் பையன்களோடு உட்கார்ந்திருப்பதே நிர்ப்பந்தத்தால்தான். வீட்டிலுமா கட்டாயம்?அப்பாவின் சொட்டைத் தலை மறைந்ததுமே புள்ளைகளிடம் ஓடுவேன். அவர் வீடு திரும்பும் நேரங்களில் வீட்டுப் பாடம் படித்துக் கொண்டிருப்பேன். 

ஐந்தாம் வகுப்பு பொங்கல் பண்டிகை. அப்பா எங்களுக்குப் புத்தாடைகள் வாங்க நகரத்துக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார். எனது வெகுநாள் ஆசையை அவரிடம் தெரிவித்தேன். "அப்பா,... எனக்கு கௌனோ மிடியோ வாங்கிட்டு வாங்கப்பா. வீட்டுல இருக்கும் போதோச்சும் போட்டுக்கறேன்". 

அடுத்த கணம் சரவெடியாக என் முதுகில் வெடித்து, அந்தப் பொங்கல் பண்டிகை எனக்கு தீபாவளியாகிவிட்டது. இருந்தாலும் எனக்கு பெண்ணுடை அணிவதிலும் பெண்ணலங்காரம் செய்வதிலுமான மோகம் போகவில்லை. தோழிகளின் ஒத்துழைப்பு இயக்கம் அவர்களின் வீடுகளில் அதைத் தணித்துவந்தது. 

உயர்நிலைப் பள்ளிக் காலங்களில்தான் இன்னும் அதிகமான அவஸ்தைகளுக்கும் துயரங்களுக்கும் ஆளானேன். ஆண் - பெண் பேதங்கள் உணர்வுப்பூர்வமாக அறியப்படும் வயது. பொம்பளச் சட்டி, பொண்டுகன், ஒம்போது என்றெல்லாம் பையன்கள் கிண்டல்கள் செய்வதன் அர்த்தங்கள் விளங்கியிருந்தன. அவர்களின் முன்னிலையில் கூசிக் குறுகினேன். கூடையில கருவாடு கூந்தலில பூக்காடு' என்று ஊர் விடலைகள் என்னைப் பார்த்துப் பாடும்போது அங்கிருந்து ஓடி, அவமானம் தாங்காமல் தனிமையில் அழுவேன். நான் ஏன் இப்படி இருக்கிறேன்? நான் ஆணா, பெண்ணா? என்னை ஏன் இறைவன் ரெண்டுங்கெட்டானாகப் படைத்தான்? ஆண் உடலும் பெண் உணர்வுமாக நான் பிறந்தது யாரின் குற்றம்?  

வளரிளம் பருவத்தின் மாற்றங்கள் தொடங்கிய எட்டு, ஒன்பது வகுப்புகளில் எனது உணர்ச்சிகள் ஜாலமிடலாயின. பையன்களிடம் வெட்கம் கொண்டு விலகியிருந்த நான் இப்போது வேறுவித நாணத்தோடு அவர்கள்பால் ஈர்க்கப்பட்டேன். என்னைக் கேலி செய்யாத அழகான பையன்களைக் காதலிக்கவும், அவர்களால் காதலிக்கப்படவும் விரும்பினேன். கடைசி பெஞ்ச் பையன்களின் சில்மிஷங்களுக்கும் ஆட்பட்டு, ரகசிய ஆசைகளையும் வளர்த்துக் கொண்டேன். 

இறுதி வருடம் ஆண்டுவிழாவில் தோழியரின் பாவாடை தாவணியை உடுத்திக் கொண்டு 'அழகு மலராட' பாடலுக்கு நான் ஆடிய நடனத்துக்கு முதல் பரிசு. ஆனால், "பாவாடை தாவணி போட்டுட்டு ரெக்காட் டேன்ஸ் ஆடி ஊரு பூரா மானத்தை வாங்கிட்டயேடா...! குமரேசனுக்கு சீக்கரம் ஒரு நல்ல மாப்பளையாப் பாத்துக் கட்டி வெய்யுங்கன்னு ஃபங்ஷனுக்கு வந்திருந்தவுங்கல்லாம் சொல்றாங்க" என்று பெரியண்ணன் தாண்டவமாடினான். "இந்தக் காலுதான்டா ஆடுச்சு? இந்தக் காலுதான்டா ஆடுச்சு?" என்று கேட்டுக்கேட்டு என் இரண்டு கால்களிலும் ரத்தக் களறியாகுமளவு நொச்சித் தடியால் விளாசினார் அப்பா. "ஏஞ் சாமீ சொன்னாக் கேக்க மாண்டீங்கற? நாஞ் செஞ்ச பாவமோ என்னுமோ எம் வகுத்துல வந்து ரெண்டுங் கெட்டானாப் பொறந்துட்டு இந்தக் கொடுமையெல்லாம் அனுபவிக்கறயேடா...!" அஞ்சு வயிசு முட்டும் நாங் குடுத்த பாலெல்லாம் நத்த நத்தமாக் கொட்டுதே...!" என்று கண்களைப் பிழிந்து அம்மா என் காயங்களைத் துடைத்தாள்; கை வைத்தியமாக வேப்பிலையும் மஞ்சளும் அரைத்துப் பூசினாள். 

அறிவுரை, மிரட்டல், அடி எதனாலும் என் இயல்பை மாற்ற முடியவில்லை. கிண்டல், கேலிகளுக்கு மனம் வருந்தினாலும் உடல், அதன் உணர்ச்சிகள் யாவும் அதன் போக்கிலேயே இயங்கின. நானே கூட ஆணாக விரும்பினாலும் நானெப்படி ஆணாக முடியும்? பொம்பளைச்சட்டி, பொண்டுகன், ஒம்போது, பொட்டை, அலி - எப்படி வேண்டுமானாலும் உலகம் தூற்றிக் கொள்ளட்டும். எனக்குள் நான் ஒரு பெண். அதை நான் மாற்றவோ மறுக்கவோ முடியாது. நான் இப்படி இருப்பதால் யாருக்கு என்ன தொந்தரவு? ஊரார் ஏன் என்னைக் கேலி செய்ய வேண்டும்? குடும்பத்தார் ஏன் என்னை அவமானமாகக் கருத வேண்டும்? அலியென்றாலும் நானும் ஓர் மனித உயிர்தானே! என்னை ஏன் இப்படி இழிவுபடுத்தி சித்ரவதை செய்கிறீர்கள்? 

எல்லோரையும் பார்த்துக் கேட்க வேண்டுமென்று இருந்தது. ஆனால், அம்மாவைக் கட்டிக் கொண்டு அழ மட்டுமே முடிந்தது. 

பொம்பளச்சட்டி என்று சொல்லப்படுகிற சிற்சிலரை எங்கள் வட்டாரத்தில் பார்த்திருக்கிறேன். அவர்களின் சில அவயங்கள் - குறிப்பாக பின்பாகம் பெருத்து - பெண்களை மாதிரி இருக்கும். நடை, பாவனை, பேச்சுகளிலும் அரவானிச் சாயல் தென்படும். எனினும் அவர்கள் திருமணம் செய்து குழந்தை பெற்றுக் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். அசல் அரவானிகளை பொள்ளாச்சியில் ப்ளஸ் ஒன் படிக்கும்போதுதான் நேரில் பார்த்தேன். பகல் பொழுதுகளில் பிச்சைக்கார அரவானிகளும், மாலை நேரங்களில் அதிக அலங்காரம் செய்து ஆண்களை அழைக்கும் அரவானிகளும் பேருந்து நிலையத்தில் ஊசாடுவார்கள். என்னைத் தெரிந்த மாணவர்கள் யாரும் அருகில் இல்லாத இடமாக நின்று அவர்களை கவனிப்பேன்.

என்னைப் பார்த்ததுமே கண்டுகொண்டு, "நீயும் எங்களையாட்ட பொட்டைதான!" என்றுகேட்பார்கள். ஆமாம் என்பேன். எனக்கு அவர்களின் தொழில்கள் பிடிக்காவிட்டாலும் அவர்களும் என்னைப் போன்றவர்கள் என்ற சக உணர்வு ஏற்பட்டது. படிக்கிற பையன் என்று அவர்களுக்கும் என் மீது மதிப்பு. கொஞ்சம் பழக்கப்பட்ட பிறகு அவர்களின் தங்குமிடத்துக்கு அழைத்துச் சென்று இன்னும் பலரை அறிமுகப்படுத்தினர். அதிலிருந்து அவ்வப்போது வகுப்புக்கு மட்டம் போட்டுவிட்டு பகல் நேரங்களில் அங்கே செல்வது வழக்கமாகிவிட்டது. நாங்கள் எங்களின் சந்தோஷங்களையும் துயரங்களையும் பகிர்ந்து கொண்டோம். விருப்பம் போல உற்சாகமாக ஆடிப்பாடி விளையாடினோம். அவர்கள் மூலமாகத்தான் நாட்டில் எங்கெங்கே அரவானியர் அதிகம் இருப்பார்கள், எங்கெங்கு என்னென்ன நிலவரம் என்பதெல்லாம் தெரியவந்தது. என்னைப்பெண்ணாக மதிக்காத, பெண்ணாக இருக்க அனுமதிக்காத இந்த உலகில் அவர்கள் மட்டுமே பெண்ணென அங்கீகரித்து 'டீ' போட்டுப் பேசியதில்தான் எனக்கு மகிழ்ச்சியும் மனநிறைவும். குடும்பத்திலும் நான் புழங்கும் பிற வெளியிடங்களிலும் கிடைக்காத ஆறுதல் அங்கே கிடைத்தது. 

வகுப்புக்கு அடிக்கடி மட்டம் போடுவதும் அரவானிகளுடனான தொடர்பும் வீட்டுக்குத் தெரிந்தபோது அப்பா கட்டுக்கடங்காத ஆவேசம் கொண்டவரானார். ".........த்தனம் பண்ற பொட்டைக கூட சேந்துட்டு குடும்ப மானம், சாதி கௌரவம் எல்லாத்தையும் முச்சந்திக்குக் கொண்டு வந்துட்டயேடா" என்று கண்மண் தெரியாமல் தாக்கினார். "காலு காலா அவனுக்கு அத்தன அடிச்சும் புத்தி வல்ல. அந்தக் காலை வெட்டி மூலைல போட்டாத்தான் அடங்குவான்" என்று பெரியண்ணன் அருவாளைத் தூக்கிக் கொண்டு வந்தான். "அவன மொண்டி மொடவனாக்கிப் போடாதடா" என்று அம்மா குறுக்கே பாய்ந்து தடுத்துவிட்டாள். "போகாத எடந்தனிலே போக வேண்டாம்'னு பாடம் படிச்சவன் தானடா நீயி? பொட்டைத் தொண்டுக் ....................................ககிட்ட எதுக்குடா போற? காலு காலா வீக்குனது மறந்து போச்சா? ஜென்மத்துக்கும் மறக்காதபடி மருந்து தர்றனிரு" என்று வெளியேறிய அப்பா சூட்டுக் கம்பியுடன் வந்து செம்பழுப்பு முனையை இரண்டு கால்களிலும் இழுத்தார். தசையினைத் தீச்சுட்டுக் கருக்கும் வதை பொறாமல் மரண ஓலமிட்டுக் கதறினேன். 

அன்றிலிருந்து பதின்மூன்றாம் நாள். புண்கள் சற்றே குணமாகி, ஓரளவுக்கு நடக்க முடிந்தது. நள்ளிரவில் வெளியேறினேன். உள்ளூர்க்காரர்கள் பார்த்துவிடாமலிருக்க காட்டு வழியே பக்கத்து ஊர் சென்று அதிகாலைப் பேருந்தில் கோவை ரயில் நிலையத்தை அடைந்தேன். 

சென்னைக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகிவிட்டன. அரவானிகள் குழுவில் இணைந்து நிர்வாணமும் (நிர்வாணம் : அறுவை சிகிச்சை மூலம் ஆணுறுப்பை நீக்கிக் கொள்தல்) செய்து கொண்டேன். ஓர் அரவானித் தாய்க்கு மகளாகத் தத்தெடுக்கப்பட்டு அதன் வழி பாட்டி, சித்தி, பெரியம்மா, அத்தை, அக்கா, தங்கை என்று தத்து உறவுகளும் வாய்த்திருக்கின்றன. ரத்த உறவுகளையும் விட நெருக்கமான தோழிகள். இப்போது இவர்கள்தான் என் குடும்பம்; என் சமூகம்; என் உலகம். 

ஆயினும், என்னை மகனாகப் பெற்ற என் அம்மாவே...! ஒரு நாளேனும் உன் மகளாக நம் வீட்டில் நான் வாழ வேண்டும். உன்மடி மீது தலைவைத்து என் வலிகளையெல்லாம் சொல்லி அழவேண்டும்.  

--- 

அன்று திருப்பதி ரயிலில் பிச்சையெடுத்துத் திரும்பியிருந்தோம். அறை வாசலில் அப்பாவும் பெரியண்ணனும் காத்து நிற்பதைப் பார்த்ததும் திடுக்கிட்டுத் திகைத்து நின்றுவிட்டேன். மறுகணம் சந்தோஷம் தாங்காமல் ஓடியதில் சேலை தடுக்கி விழ இருந்த போது, "டேய்,.... பாத்து வாடா!" என்றான் அண்ணன். 

ஓட்டத்தை வேக நடையாக்கி அவர்களை அடைந்தேன். "அப்பா...! அண்ணா...!" என்ற அழைப்புக்கு மேல் வார்த்தைகள் எழவில்லை. "உன்னைய இந்தக் கோலத்துல பாக்கறக்காடா நான் இன்னும் உசுரோட இருக்கறேன்..?" என்று அப்பா உடைந்து அழுதார். அவர் அழுதோ தளர்ந்தோ நான் பார்த்ததே இல்லை. எதற்கும் கலங்காத இரும்பு மனிதர் அவர். சின்னண்ணன் கூட அவருக்கு வல்லபாய் படேல் என்று பட்டப்பெயர் சூட்டியிருந்தான். அவர் விம்மியழுவதைப் பார்த்ததும் எனக்கு அடிநெஞ்சே ஆடிவிட்டது. 

"உள்ள போலாம் வாங்க! அப்பா, ... வாங்கப்பா! அண்ணா,.... வாங்கண்ணா!" என்று நூர்ஜஹான் கதவு திறந்தாள். அண்ணனிடமிருந்த பயணியர் பையை வாங்கி வைத்துவிட்டு செல்வி நாற்காலிகளை எடுத்துப் போட்டாள். 

"எப்பப்பா வந்தீங்க? எப்படி எடத்தக் கண்டுபுடிச்சீங்க?" என்று ஆச்சர்யத்தோடு கேட்டேன். 

வெங்கிடுபதி மூலம் அம்மாவுக்குத் தகவல் தெரிந்ததுமே, "உங்க ரெண்டு பேர்த்துனாலதான் அவன் ஊட்ட உட்டு ஓடிப்போனான். அவன் எப்புடி இருந்தாலும் என்ன பண்ணுனாலும் தேவுல. கண்ணு முன்னாடி அவனப் பாத்துட்டுத்தான் எனக்கின்னி அன்னந் தண்ணி. எப்பாடு பட்டாவது அவனக் கூட்டியாங்க" என்று விட்டாளாம். நேற்றிரவு ரயிலேறி காலை எட்டு மணிக்கு சென்ட்ரலை அடைந்திருக்கிறார்கள். அங்கே தட்டுப்படுவேனோ என்று ஒவ்வொரு ப்ளாட்பாரங்களிலும் ரயில்களிலும் வெகுநேரம் தேடியிருக்கிறார்கள். என்னைக் காண முடியவில்லை. ட்டி. நகர் என்பது மட்டும்தான் வெங்கிடுபதிக்கு தெரியும். "அங்க நெறைய ஏரியா இருக்குதுங்க. எதுக்கும் பஸ் ஸ்டாண்டுல போயி அரவானிக ஆரையாவது பாத்து விசாரிச்சா அவுங்களுக்கு எப்புடியும் தெரிஞ்சிருக்கும்" என்று மாற்று யோசனையும் சொல்லியிருந்திருக்கிறார். சென்னைக்குப் புதுசு. இருந்தாலும் வழிகேட்டு ஸ்டாண்டுக்கு வந்துவிட்டார்கள். அரவானிகளை நாடி என் பழைய ஃபோட்டாவைக் காட்டி, புதுப் பெயரையும் சொல்லி விசாரித்திருக்கிறார்கள். அரவானிகள் தங்குமிடங்கள் பலவற்றுக்கும் வழிகாட்டப்பட்டு, கடைசியாக இங்கே வந்து சேரும்போது மணி நான்கு. 

நூர்ஜஹான் தேநீர் கொண்டுவந்தாள். "நீயும் டீப்போட்டுட்டு வந்துட்டாயாம்மா? உங்களக் காத்துட்டிருக்கீலயே மூலைக்கடைல ரெண்டு மூணு டீ குடிச்சுட்டம். செரிப் பரவால்ல" என்று எடுத்துக் கொண்ட அப்பா அவளிடமும் செல்வியிடமும் அவர்களின் ஊர் மற்றும் குடும்ப விபரங்களை கேட்டறிந்து கொண்டார். 

"மணி ஏளாயிருச்சு. வேணுங்கறத எடுத்துட்டு சட்டுனு பெறப்படு" என்று என்னிடம் உத்தரவிட்டதும் மனசுக்குள் ஒரு சிலிர்ப்பு. தோழிகள் என் கைகளையும் தோளையும் பற்றிக் கொண்டு என் வீடு திரும்பலுக்கு மகிழ்ச்சியையும், அவர்களுடனான பிரிவுக்கு வருத்தங்களையும் தெரிவித்துக் கொண்டார்கள். "இவுங்குளுக்காவது வேற ஆருக்காவது கடன் கிடன் பாக்கியிருந்தா சொல்லு. குடத்தர்லாம்" என்றார் அப்பா. "இவ யாருக்கும் தர வேண்டீதில்லீங்ப்பா. மத்தவங்க தான் இவளுக்குத் தர வேண்டீது இருக்குது. நான் கூட மூவாயர்ருவா தரணும்" என்று நூர்ஜஹான் சொல்லவே, "அது பரவால்லம்மா. வேண்டியவங்களுக்கு ஒதவுனதுதான! அத வாங்கித்தானா நாங்க இன்னிப் பொளைக்கப்போறம்? ஆனாட்டி வாங்குன கடனக் குடுக்காமப் போயிட்டாங்கங்கற கெட்ட பேரு நம்முளுக்கு வரக்குடாது" என்று விட்டார். 

ஒரு சில உடைகள், முக்கியமான சாதனங்கள் ஆகியவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றவற்றைத் தோழிகளே உபயோகித்துக் கொள்ளும்படி சொல்லுவிட்டேன். அண்டை அயல் பழக்கங்களிடமும் விபரம் தெரிவித்து விடை பெற்றுக் கொண்டாயிற்று. என்னைத் தத்து மகளாக்கிய அரவானித் தாயிடமும், அதன் வழி உறவுகளிடமும் சொல்லிக்கொள்ள அவகாசமில்லை. விபரம் தெரிவித்து விடுமாறு கேட்டுக் கொண்டு நூர்ஜஹானிடமும் செல்வியிடமும் விடைபெற்றுக் கொண்டேன். வழியனுப்ப ரயில்வே ஸ்டேஷனுக்கு வருவதாகச் சொன்னார்கள். எதற்கு வீண் சிரமம் என்று மறுத்துவிட்டு, தெரு மூலையில் ஆட்டோ பிடித்தோம். 

--- 

விடிகாலைக் கோவை என்னை வரவேற்பது போலிருந்தது. பஸ்ஸில் ஊருக்குப் போவோம் என்றுதான் நினைத்திருந்தேன். பெரியண்ணன் ரயில்வே ஸ்டேஷனுக்கு வெளியில் நிற்கும் கால்டேக்ஸி ஒன்றை பிடித்துவந்தான். அப்படியானால் இன்னும் ஒரே மணிநேரத்துக்குள் வீடு போய்ச் சேர்ந்துவிடலாம். அம்மா ஆரத்தி எடுப்பாள். அவளைக் கட்டிக் கொண்டு முத்தமிட வேண்டும். அன்னம் தண்ணி கொள்ளாமல் போராடி என்னை மீட்டதற்காக அவளின் காலில் விழுந்து தொழ வேண்டும். நானே சமைத்து, நானே ஊட்டிவிட்டு அவளின் விரதத்தை முடித்து வைக்க வேண்டும். சின்னண்ணனிடம் உன் தங்கச்சியப் பாத்தியாடா என்று அம்மா கேட்பாள். தெருவே என்னைப் பார்க்க வாசலில் வந்து கூடும். அம்மா மிளகாய் சுற்றிப் போடுவாள். பழைய தோழிகள், சொந்த பந்தங்கள்,... என்று எண்ணமிட்டுக் கொண்டிருக்கையில் தாமரைக்குளம் கடந்து கார் ஒரு இடைவழியில் திரும்பியது. 

"இங்க எங்கீங்ப்பா போறம்?" என்று புரியாமல் கேட்டேன். 

"கோளிப் பண்ணையொண்ணு சகாய வெலைக்கு வந்துது. வாங்கிப் போட்டாச்சு. அதையும் ஒரு எட்டு பாத்துட்டுப் போயர்லாம்" என்றான் முன்னால் அமர்ந்து வழி சொல்லிக் கொண்டிருந்த பெரியண்ணன். 

பண்ணையில் இறங்கியதும் "பைக்க இங்கதான நிறுத்தியிருக்கறம். இன்னி டேக்ஸி வேண்டாமல்லங்கப்பா?" என்று கேட்டுக் கொண்டு அதைத் தாட்டிவிட்டான். பண்ணையில் கோழிகள் இல்லை. தூரத்தில் மண்ணைக் கொத்திக் கிளறிக் கொண்டிருந்த காவற்காரக் கிழவன் ஊர்ந்து வந்து கும்பிடு போட்டுவிட்டு திரும்பவும் ஊர்ந்து சென்றுவிட்டான். பூட்டியிருந்த வைப்பறையைத் திறந்து உள்ளே சென்றோம். பண்ணை பற்றிய எனது கேள்விகளுக்கு சுவாரஸ்யமற்று அப்பா பதிலளித்துக் கொண்டிருக்கையில் அண்ணன் பீரோவைத் திறந்து துணிக்கடைப் பையொன்றைக் கொடுத்தான். 

"துணிய மாத்திக்க. வேண்ணா அந்த ரூமுக்குள்ள போறதுன்னாலும் போய்க்க" என்றதும் குதூகலமாகி, "நான் வர்றதுக்கு முன்னாடியே எனக்கு ட்ரெஸ் எடுத்து வெச்சுட்டீங்களாங்ப்பா? என்ன, சுடிதாரா....?" என்றபடி ஆவலாகத் திறந்து பார்த்தேன். உள்ளே ரெடிமேட் பேன்ட்டும் சட்டையும் இருந்தன. 

கேட்க வாயெடுப்பதற்குள் அப்பா சொன்னார். "இனிமே இதுதான் உனக்கு உடுதுணி. இல்லாட்டி எங்களையாட்ட வேட்டி கட்டிக்க. சீலை, சுடிதாரு போட்டுட்டு ஆட்டங் கட்டலாம்னு நெனச்சீன்னா,.... உனக்கில்ல, உங்காத்தாளுக்குத்தான் மிதி. காதுல மூக்குல களுத்துல இருக்கறதெல்லாம் மொதல்ல களட்டு. சீலையக் கட்டீட்டு பிச்சை எடுத்து சென்னைப் பட்டணம் போயி எங்க மானத்த வாங்கறயா...? வெட்டி கூறு போட்டுருவன் ராஸ்க்கோல்...!" 

அப்பாவின் பழைய முகம் கடூரத்தோடு உறுமியது. 

"அப்பா, ... நான் இப்ப ஆம்பளையில்லப்பா! பொம்பளை! ஆப்பரேஷன் பண்ணி அறுத்துகிட்டவ" என்று கெஞ்சினேன். 

"நீ ஆம்பளையில்லீன்னாலுஞ் செரி; அறுத்துட்டவனா இருந்தாலுஞ் செரி. அதெல்லாம் உள்ளுக்குள்ள. வெளிய தெரியவா போகுது? உன்னோட மானத்த மறைக்கறதுக்கு மட்டுமில்ல,... எங்க மானத்த, நம்ம சாதி அந்தஸ்த்தக் காப்பாத்தறக்கும் ஆம்பளத் துணிலதான் நீ இருந்தாகோணும்" என்றவர், "எட்றா அந்தக் கத்தரிக்கோல" என்று பெரியண்ணனை ஏவினார். 

எனது கூந்தல் அடியோடு வெட்டப்பட்டது. 

அறுவை சிகிச்சையின்போது தண்டுவடத்தில் ஏற்றிய மயக்க ஊசி மருந்து சரிவர பலனளிக்காமல், விழிப்பும் மயக்கமற்ற இடைநிலை உணர்வில் வலி தாளாமல் உயிரோலமிட்டேனே,... அப்படியொரு கதறல் என்னிலிருந்து வெளிப்பட்டது.

- ஷாராஜ்

Pin It