செவ்வானம் வெடித்திருந்ததில், செம்மை நிறமெனப் பூத்திருந்தது அந்த மாலைப் பொழுது. வனத்தின் நீட்சியென உயர்ந்துக் கொண்டு நிலத்தை அணைகட்டி நின்றது மலை முகடுகள். அடிவாரத்தில் குறைந்த எண்ணிக்கையில் இருந்தவர்களின் வாழ்வாதாரத்தை பூர்த்திசெய்ய வேலிகளைக் கொண்டு பிரிந்திருந்த நிலம் வெங்காயம், முட்டைக்கோஸ், தென்னை, நிலக்கடலை, கத்திரி என பல தாவரங்களால் இணைந்திருந்தது .

ரமேஷ், நிலத்தடி நீரை தென்னைக்குப் பாய்ச்சிக் கொண்டிருந்தான். ஒரு ஏக்கர் பரப்பளவில் கைககளைக் காற்றில் அசைத்தபடி சம இடைவெளியில் வளர்ந்து கொண்டிருந்தது தென்னை மரங்கள். இரு தென்னை மரங்களுக்கு நடுவில் நின்று கொண்ட ஒற்றை பாக்குமரம், ஆளுயரமே வளர்ந்திருந்த மரங்கள் கால்களை ஆழமாக நிலத்தில் ஊன்றி நிமிர்ந்து நின்றிருந்தது .

வாய்க் காலில் அழகாக உருண்டு வந்த நீர் வழித்தடங்கள் மாறாமல் நீந்திக் கொண்டு போனது. பாத்திகளில் தலைகாட்டிக் கொண்டிருந்த கற்களை அகற்றுவதில் மூழ்கிப் போனவனுக்கு பொழுது மறந்து போனது. இருள் மெல்ல போர்த்திக் கொண்டு வந்தது. அவசரமாய் தண்ணீர் இரைக்கும் இயந்திரத்தை நிறுத்தினான்.

வானம் முடிந்துவிடும் இடத்திலிருந்து சிறிதளவு எட்டிப் பார்த்தது வெளிச்சம். கைக்கடிகாரம் ஆறு மணியைக் காட்டியது. விரைந்த அவன் கைகள் இரு சக்கரத்தின் சாவியை தேடியது. நிறுத்தப்பட்ட வாகனத்தில் இருப்பதைத் தெரிந்து கொண்டவன். தோட்டத்திலிருந்து கிளம்ப ஆயத்தமானான்.

தோட்டத்தின் நுழைவாயிலை அடைந்தவன் அதிர்ந்துபோனான்.

ஒற்றை மலையென, உருவம் ஒன்று நுழைவாயில் கதவுகளின் வெளியேக் கண் சிமிட்டிய படி நின்றிருந்தது .

‘யா...ன...’ என்ற பதட்டக் குரலுடன் வண்டியை அங்க போட்டு விட்டு அந்த உருவத்தைப் பார்த்தவாறே கால்கள் பின்னோக்கி நடக்கையில் பின்னிக் கொண்டது.

“இன்னைக்கு நேரம் போறதே தெரியாம… இதுகிட்ட மாட்டிட்டோமே... கொஞ்சம் சீக்கரம் வேலைய முடிச்சிருக்கலாம்...அந்த கருவாய் பய கணேஷ் பேச்சக் கேட்டுட்டு இன்னைக்கு சந்தைக்குப் போனதுல இங்க லேட் ஆயிருச்சே.. என்று தனக்குள் பேசிக் கொண்டிருந்தான். தட்டு தடுமாறியவன் பம்புசெட்க்குப் பக்கத்தில் வேயப்பட்ட கூரையின் கீழ் அமர்ந்து கொண்டான். தோட்டத்தைச் சுற்றி போடப்பட்டிருந்த மின் வேலி அரணென நீண்டிருந்தது.

உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டு வாயிற்கதவை நோட்டமிட்டான்.

அங்கு ஏதும் நின்றிருப்பதைப் போல தெரியவில்லை. சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டான். வெளியே போவதற்கு முடியாது. இருட்டுவதற்குள் போய் இருக்க வேண்டும். பக்கத்துத் தோட்டம் ஆளருவமற்று மூச்சு வாங்குவது காதுகளில் விழுந்தது. இப்படியே காலை வரை புழங்குவது கடினம். இருட்டில் பார்ப்பதெல்லாம் விகாரமாய் தெரிந்தது. ஒரே வழி யானை விரட்டியை அழைப்பதுதான் என தன் அலைபேசியைத் தேடினான்.

புஷ்... உஷ் ... என தன்னுக்குப் பின்னால் இருந்து சத்தம் கேட்டது.

பெரிய பாறையில் ஒற்றை மீன் துள்ளுவது போல அந்த பெரிய உருவத்தில் சிறிய கண்கள் சிமிட்டிக் கொண்டிருந்தது. ரமேசுக்கு நெஞ்சு அடைத்து விழி பிதுங்கி இருந்தது. மின்வேலிக்கு மறுபுறம் இருந்து காதுகளில் விசிறிக் கொண்டும், துதிக்கையை ஆட்டியபடியும் சிலையென நின்றிருந்தது யானை.

சுற்றி இருந்த காடுகள் பேரமைதியை இறைத்துக் கொண்டிருந்தது.

மலை யானையென அசைந்திருந்தது, யானை மலையென நின்றிருந்தது.

குத்து வைத்து உட்கார்ந்து இருந்தான் ரமேஷ். எழுந்து ஓட சக்தியற்றவனாய் இருந்தது அவனது அப்போதைய தோற்றம். எழுந்து ஓடினாலும் தோட்டத்திற்குள் தான் ஓடிக்கொள்ள வேண்டும். அவன் மூளை அவனிடத்தில் இருந்து வெகுதூரத்தில் இருப்பதாகத் தோன்றியது. கண்களை மூடிக் கொண்டதில் தெளிவாக தெரிந்துகொண்டது மரணவாசல்கள். வன தெய்வதிலிருந்து அவன் குலதெய்வம் வரை அழைத்துப் பார்த்தான்.

துதிக்கையை ஆட்டி ஆட்டி அவனை வெறிக்க வெறிக்க பார்த்துக் கொண்டிருந்தது அந்த மதகயம்.

“போ போ ... இங்கிருந்து போ..” சத்தமில்லாமல் விரட்டினான்.

“ஆமா எங்க போவ… என்னைச் சொன்னாக் கூட வீட்டுக்கு போயிருவேன். நீ எங்க போவ... அதுக்காக போன வாரம் செல்லத்தாயையும், வேலுசாமியையும் கொன்னதெல்லாம் ஏத்துக்க முடியாது. நீ இங்கிருந்து ஒன்னும் பண்ண முடியாது, நாங்க வெவசாயமாவது பண்ணறோம். எங்களுக்கு கொழந்த குட்டி எல்லாம் இருக்கு.... உனக்கு… ஆமா இருக்கு... ஆனா நீ வேற நாங்க வேற... எங்க வாழ்க்கை வேற உன் வாழ்க்கை வேற... என்று அமைதியான முறையில் நடுங்கிக் கொண்டே தர்க்கம் செய்து கொண்டிருந்தான் .

அவன் காலருகில் கருமை நிறத்தில் ஒன்று எதையோ தேடி வேகமாக ஊறிப்போனது... அனேகமாக கருநாகமாகத்தான் இருக்கு வேண்டும்.

அந்த பெரிய உருவத்திற்கு, முன்னால் இதற்காக ஒன்றும் இவன் புளகாங்கிதம் அடையவில்லை. ஒரே நிலையில் அமர்ந்ததில் கால்கள் இவன் பேச்சை கேட்காமல் இருந்தது.

நிலவொளியில் வனம் இருளை வாரிக் கொண்டிருந்தது. தங்கிப் போன களிற்றின் நிழலில் பிளறிக் கொண்டது யாமம். வேலி ஊன்றிய தைரியத்தில் உயிரைப் பற்றிக் கொண்டவன் அலைபேசியை மறந்து போனான் .

எதையோ அசைபோட்டபடி பார்த்துக் கொண்டிருந்த கும்பி, சற்று உக்கிரம் கொண்டதாய் தன் தும்பிக்கையின் முடிவில் உள்ள துவாரத்தில் பெரும்காற்றை வெளியேற்றிக் காட்டியது.

“இந்த கம்பியெல்லாம் நம்பற மாதிரி இல்ல, அது பாக்கற பார்வைக்கு கம்பி எல்லாம் தாண்டி வந்து மிதிச்சாலும் மிதிச்சிரும்… இங்கிருந்து நகுராம என்னவே பாக்குதே...”

"ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுத்தினைப் புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே..." என்று பயத்தில் யானைக்கான பாடலை எல்லாம் பாடிப் பார்த்தான்.

அலைபேசி எங்கோ தூரத்தில் அடிப்பது கேட்டது... எடுக்கவும் வழியில்லை...

கடுங்குளிர் ஊசியென தைத்தது. பயத்தோடு பசிக் கலந்திருந்து. தூக்கம் வெகு தொலைவில் கனவை விரித்திருந்தது.

எப்படி என்று தெரியவில்லை... தூங்கிப்போனான்...

ரமேசு… ஏன்டா போன எடுக்கவேயில்ல... நைட்டு இங்கையே தூங்கீட்டையா...

அரண்டு கொண்டு எழுந்தான் ரமேஷ்... விடிந்திருந்தது...

"நேத்து..." என்று ரமேஷ் முடிப்பதற்குள் வந்தவன்

"சொல்ல மறந்துட்டேன் ரமேஸு இந்த மின்வேலில. மின்சாரம் வரதில்ல எதோ கோளாறு இன்னைக்கு தான் சரி செய்யணும்..."

இப்போது தான் யானை மிதித்தது போல இருந்தது ரமேஷுக்கு.

அவன் உட்கார்ந்திருந்த இடத்துக்குப் பின்னால் இருந்த ஒற்றை வாழைமரம் குலைத் தள்ளி இருந்தது. இதைத் தான், நேற்று இரவு வந்தவன் வெறிக்க பார்த்துக் கொண்டிருந்திருப்பான், கொடுத்திருந்தால் போயிருப்பான்…

வேலியில் மின்சாரம் சரிசெய்யப்பட்டு விட்டது.

இவன் யானைக்கும், யானை இவனுக்கும் கொண்டிருந்த பயம் மின்பாய்ந்து கொண்டிருந்த வேலியில் பொசிங்கிப் போவதை பார்த்துக் கொண்டிருந்தான்.

- சன்மது

Pin It