"இந்த பணம் எனக்கு வேண்டாம், இஸ்லாத்துல இந்த மாதிரி செய்யறது பெரிய பாவம் இல்லையா..."

'நிஷா' இதுல நீ தலையிடக் கூடாது, நான் குடுக்கிற காச வச்சிக்கிட்டு தான் நீ குடும்பம் நடத்தணும்." என்று துவங்கினான் நஸீர்.

"ஏன் இப்படி எல்லாம் பேசறீங்க... இப்போ கொஞ்ச நாளா உங்க பேச்சு , நடையெல்லாம் மாறிப் போச்சு" என்றாள் நிஷா.

"என் பையன்  அப்படியென்ன பெரிய தப்பு பண்ணிட்டான். உன் பையனை படிக்க வச்சு, அவனுக்கும் உனக்கும் சேத்து கஞ்சி ஊத்தறான் இல்ல ஏன் பேச மாட்ட..." என்றான் நஸீரின் தாய்.

"ஏன் மா இப்படி பேசறீங்க... இஸ்லாத்துல.. நேர்மை கண்ணியம் பத்தி.. ஸல்.. எவ்வளவோ போதிச்சிருக்காரு... அதைத் தானே அம்மா இப்போ நான் அவருக்கு சொன்னேன்..."

"இங்க பாரு எனக்கு நீ வசனம் எல்லாம் சொல்லித் தர தேவை இல்ல... மொதல்ல  நீ அதை... சரியா வாசி..."

"நான் முழுசா வசனங்களை உங்களவுக்கு வாசிக்கலைன்னா கூட... ஈமான்  எனக்கு நிறைய இருக்கு…"

"நமது சுவர்க்கமே நமது கணவனிடத்தில் தான்..." இதை சல் சொல்லி இருக்கிறதா நீ கேள்விப்பட்டிருந்தால் இப்படி பேசமாட்ட.." நசீர் குறுக்கிட்டான்.

இப்படியான வாக்குவாதம் தினந் தோறும் நடப்பதால் பதினைந்து வயதே நிரம்பிய அன்சாரி... எப்போதும் போல தலை குனிந்தவாறே தன் அறைக்குள் நுழைந்தான்.

மிகவும் கட்டுப்பாட்டுடனும், மிகுந்த கோட்பாடுடனும் தன் மகளை வளர்த்து வந்த பஷீர் அவள் வாழ்க்கைப் பாதையை தேர்ந்தெடுப்பதில் தவற விட்டிருந்தார். நிஷா  சிறு வயதில் ஒரு ஏஞ்சலைப் போல வலம் வந்தவள்.

அவளது பேச்சில் எப்போதும் ஒரு மழலையின் வாசம் வீசிக் கொண்டிருக்கும்.. ஆட்டோ ஓட்டுநரான பஷீர் வீட்டுக்கு சுமந்து வரும் களைப்பையெல்லாம் நிஷாவின் ஒளிரும் முகம், சுக்கு நூறாக உடைத்து விடும்.  

அப்பாவின் சுமைகளை சுமக்க தயாரானவள், அதை விரும்பாத பஷீர் கட்டிக் கொடுத்த இடம் தான் இப்போது சுமையாகிப் போனது. நசீர் சட்டத்திற்கு புறம்பான பல வேலைகளின் மூலமாக பணம் ஈட்டி வந்தான்.

தீய பழக்கங்களுக்கு வேறு, தன்னை அடிமையாக்கிக் கொண்டான். நிஷா இந்த வாழ்க்கையை அறவே வெறுத்து வாழ்ந்துக் கொண்டிருந்தாள். 

எத்தனை வண்ணக் கனவுகள் அவள் நிஜ உலகில் பலிக்காமல் போயிருக்கும். ஆசைகள் கானல் நீராய் கரைந்து போயிருக்கும். சமுதாயத்தில் ஒடுக்கப்படும் பெண்களுக்கான சங்கிலி இன்னும் உடைந்த பாடில்லை. பாராளுமன்றம் வரை பேசிக்கொண்டே தான் இருக்கிறார்கள். 

வீட்டிற்கு ஓர் நிஷா இருக்கத்தான் செய்கிறார்கள். வலைக்குள் அகப்பட்டுக் கொண்ட ஒரு பட்டாம்பூச்சியை போல சிறகடித்துக் கொண்டாள். பஷீரிடம் இதை சொல்லி  அவர் சுமையை அதிகரிக்க விரும்பவில்லை. தன் மகன் அன்சாரிக்காக உயிர் வாழ்ந்திருந்தாள்.

"இங்க பாரு எனக்கு ஒரு பத்தாயிரம் வேணும் உங்க வீட்டுல சொல்லி நாளைக்குள்ள ரெடி பண்ணு..."

"எப்படிங்க… எங்க அப்பா இப்போ முதல் மாதிரி ஆட்டோ ஓட்டறதில்லை ... அவுங்களே ரொம்ப கஷ்டத்துல இருக்காங்க... நம்ம தான் அவுங்களுக்கு கொடுக்கணும்..."

"அதெல்லாம் எனக்குத் தெரியாது... சீக்கிரம் ரெடி பண்ணு..."

ஆண்களிடம் திமிர்ந்து கொள்ளும் செருக்கை உடைக்க ஆக்ரோஷமும், ஆவேசமும்  மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் எழுந்து கொள்கிறது... நிஷாவும் அப்படி ஒரு புயலாக பல சமயங்களில் உருமாறிக் கொள்கிறாள், அப்படி உருமாறுகையில் மழையென உடைந்து கொள்கிறது கண்ணீர்.

சிவந்து கொண்ட அவள் முகம் கண்ணாடியில் ஒளிர்ந்ததில் கவலை ரேகை முகத்தில் முளைத்திருந்து தெரிந்தது. வெளியில் வாங்கிக் கொண்ட கடன் பூதமாய் நின்று கொண்டது.

நடக்கின்ற எதையும் அன்சாரி கேட்டுக் கொள்வதாய் தெரியவில்லை. யாரிடம் சொல்லி அழுவது... அவளை யார் வந்து மீட்கப் போகிறார்கள் என்பதே அவளது தீரா வலியாக இருந்தது.

மாலை, நஸீர் வந்தான் .

"என்ன ரெடி பண்ணியாச்சா..?

எதுவும் பேசாமல் இருந்த நிஷா மீது கோவம் அதிகமானது. நஸீரின் அம்மா  எதோ விபரீதம் நடக்கப் போவதை எண்ணி விலகிக் கொண்டாள்.

நிஷாவின் மௌனம், புயல் உக்கிரம் கொண்டதாகவும், எதிர் வினைகளுக்கு தயார்க் கொண்டதாகவும் இருந்தது.

“நான் பேசிக்கிட்டே இருக்கேன்… நீ என்ன, அப்படியே நிக்கிறே” என்று நிஷாவை நோக்கி தன் கைகளை முறுக்கிக் கொண்டு வந்தான் நஸீர்.

பாட்டில் உடையும் சத்தம் பெரிதாக கேட்டது. அதிர்ந்துக் கொண்டார்கள் அனைவரும் அன்சாரி தன் கைகளில் ரத்தம் சொட்ட ஒரு உடைந்த பாட்டிலுடன் நின்றிருந்தான்.

"இன்னோரு அடி முன்னாடி நகுந்தீங்க, உங்கள டாடின்னு கூட பார்க்க மாட்டேன்." அன்சாரின் இந்த குரல் அந்த வீட்டில் ஒரு அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.

நஸீரின் தாய் அப்படியே பதுங்கிக் கொண்டாள். நஸீர் மிரட்சியில் இருந்து மீளாதவனாய் இருந்தான்.

“நீ எதுக்கும் கவலைப்படாத வா, நம்ம தாத்தா வீட்டுக்குப் போயிரலாம் . நிஷாவின் கையைப் பிடித்து வாசலைத் தாண்டினான்.

புயல் கரையைக் கடந்தது.

- சன்மது

Pin It