நான் எப்போதும் ஒரு புத்தகத்தினைப் படிக்கும்போது அதன் முன்னுரையையோ அணிந்துரையையோ படிப்பதில்லை, அது எதற்காக எழுதப்படுகிறது என்று எனக்குப் புரிவதில்லை. சில நேரங்களில் அவை என்னை தொந்தரவு செய்வதுண்டு. Develop the hints என்று பத்தாம் வகுப்பில் படித்ததுபோல் நூறு பக்க கதையை அல்லது கதைகளை மூன்று பக்கத்தில் சுருக்கமாக சொல்லிவிடும் முன்னுரைகளைத் தொடக்க காலத்தில் வாசித்திருக்கிறேன், கவிதைகளின் முன்னுரைகள் பற்றி கேட்கவே வேண்டாம், கவிதைகளை பிரித்துப்போட்டு (a+b)2 = a2+2ab+b2 என்று கணக்கு சொல்லிக்கொடுத்து, வாசித்தலின் அனுபவத்தினை கெடுத்துக் குட்டிச்சுவராக்கும் முன்னுரைகள் ஏராளம். இன்னும் சில அணிந்துரைகள் ஆன்லைன் ரிவ்யூக்கள் போல ஆகா ஓகோவென hype ஏற்றி வாசிக்கும்போது ஏமாற்றம் அடைந்ததுண்டு. இவற்றையெல்லாம் பார்த்தபின் முன்னுரைகளை/அணிந்துரைகளை வாசிக்கக்கூடாது என்ற கொள்கைப்பிடிப்போடு வாழ்ந்துவந்தேன். ‘நல்லதோ கெட்டதோ போற உசுரு என்னோட போகட்டும், உங்க பொங்கச்சோறும் வேணாம் பூசாரிதனமும் வேணாம்’ என்பதுபோல் அணிந்துரைகளைக் கடந்து போய்விடுவேன். அப்படிக் கடக்கும்போது ‘எழுதப்படும் நூலுக்கு அணிந்துரை தேவையா?’ என்ற முதல் வரி என்னைக் கவர்ந்து அணிந்துரையை வாசித்தேன். அணிந்துரையை சரியாக கையாண்ட மிகச்சிலரில் சுதிர் செந்தில் ஒருவர் என்று கருதுகிறேன். எழுத்தாளனைப் பற்றி அதிகம் பேசி எழுத்தை குறைவாகப் பேசும் அணிந்துரை நம்மை எழுத்தை நோக்கி ஒரு அடி தள்ளுகிறது. எனவே முதல் படியை தாண்டிக்குதிக்க விழையாதவர்கள் முன்னுரையோடு சேர்த்து வாசிக்கலாம். It definitely is spoiler free. ஒருவேளை இரண்டாம் பதிப்புக்கு சுதிர் செந்தில் அணிந்துரை எழுதினால் தன் ரெக்கார்டுகளை தானே உடைக்கும் சச்சின் தெண்டுல்கரின் பிரயத்தனம் தேவைப்படும்.

mathikannan short storiesஇந்த தொகுப்பினில் உள்ள பதிமூன்று கதைகளை நீங்கள் அறுபத்தைந்து முறை வாசிக்கலாம். ஏனென்றால் ஒவ்வொரு கதையும் ஐந்து பரிமாணங்கள் உடையது, சிறார் இலக்கிய பிரியர்கள் சிறார் இலக்கியமாகவும், பின் நவீனத்துவவாதிகள் பின் நவீனத்துவ இலக்கியமாகவும், அரசியல்வாதிகள் அரசியல் கதைகளாகவும், இதுபோன்ற எந்த கண்ணாடிகளும் அணியாமல் வெறும் ரீடிங் கிளாஸ் மட்டும் அணியும் சாதாரண வாசகனுக்கு எளிய கதையாகவும் இருக்கக்கூடியவை இந்த கதைகள். அதுபோக கட்டுரை மட்டும் வாசிக்க விரும்புபவர்களுக்கு இந்த கதைகள் சில நேரம் கட்டுரை வாசித்த உணர்வைத் தருவதுண்டு. இப்படி ஒரு பேனாவை எடுத்து சிவப்பு, கருப்பு, நீலம், பச்சை, வெள்ளை என்று ஐந்து நிறத்தையும் சம அளவில் ஊற்றி ஆறாவதாக ஒரு நிறத்தில் எழுதும் வித்தை ஆசிரியருக்கு உள்ளது.

ரயில் பிடிக்குமா? யானை பிடிக்குமா? மழை பிடிக்குமா? நிலா பிடிக்குமா? என்று ஒரு குழந்தையிடம் அம்மா கேட்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அந்தக் குழந்தை ரொம்ப நேரம் கண்ணை உருட்டி மேலே பார்த்து, விரலை தாவாங்கட்டையில் வைத்து, உதடு குவித்து, மனதிற்குள் அனைத்தையும் யோசித்து முடித்துவிட்டு, வெகு ஆவலுடல் காத்திருக்கும் அம்மாவைப் பார்த்து ‘அம்மா பிடிக்கும்’ (அந்த ‘அம்மா’ இல்லை) என்று சொல்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது அந்த அம்மாவின் மனநிலை எப்படி இருக்கும். அதுபோன்ற மனநிலைக்கு உங்களை தள்ளுவதற்கு இந்த தொகுப்பில் சில சிறுகதைகள் உள்ளன.

மிகக்காத்திரமான அரசியல் கதையை எப்படி சிறுவர்கள் மொழியில் சொல்வது, எப்படி கொடுங்கனவாக மொழிபெயர்ப்பது, எப்படி ரயில் பயணமாக சிலிர்ப்பூட்டுவது, எப்படி விளையாட்டாக சொல்லிக்கொடுப்பது, எப்படி கூட சேர்ந்து அழுவது, எப்படி கற்பிதங்களை கலாய்ப்பது, மூட நம்பிக்கைகளை தெளியவைப்பது என்பதில் தொடங்கி, தேசிய அரசியலை, அரசியல் போதாமையை, சந்தர்ப்பவாதத்தை வெளிக்காட்டுவது என கிட்டத்தட்ட எல்லா கதைகளும் சமகாலத்தை எதோ ஒருவகையில் பிரதிபலிக்கிறது. ஆனால் இந்த கதைகள் அனைத்தும் கடந்த பதிமூன்று வருடங்களில் வெவ்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டவை. இவருடைய ஆகப்பெரும் பலம் இவரது கதைகளில் வரும் குழந்தைகள் மீதான அக்கறைதான் என்பேன். அவர்களின் அழுகுரலை, சிரிப்பை, விளையாட்டை, மகிழ்ச்சியை இவர் எழுத்துக்கள் நன்றாக உள்வாங்கியிருக்கின்றன.

இந்த தொகுப்பின் முதல் கதையாகிய ‘ஆக்கவோ நீக்கவோ’வின் முதல் வரியிலிருந்து அரசியல் தொடங்கிவிடுகிறது, வெளிநாட்டு உடை அணியும் பாரம்பரிய நாயகனும், ஆஸ்திரேலியா போய் ஆய் போக கடுக்கணை கழற்றிப்போகும் பூனையும் ‘இடது’ காலை ‘செங்கல்’ மீது வைத்து முஷ்டியை உயர்த்தி கவிஞர் பெயர் சொல்பவர்களும், விழுபவர்களை அணைத்துக்கொள்ள காத்திருக்கும் பெருச்சாளிகளும் அரசியல் அதகளம். அதேநேரம் இந்த அரசியலை புறங்கையால் தள்ளிவிட்டு சாதாரணமாக படித்து சிரிக்க வைக்கும் அனுபவத்தையும் இதே கதை தரும். படித்து முடித்தபின் இந்த கதையின் பெயரே அரசியல் என்பது புரியவரும். பெரியவர்கள் உலகில் பூச்சாண்டிகளாக வலம்வரும் அன்னியர்கள் குழந்தைகள் உலகில் ‘பூச்சாண்டி அங்கிள்’களாக வாழ்ந்துகொண்டிருப்பது குழந்தைத்தனங்கள் இந்த உலகிற்கு எத்தனை தேவை என்பதை உணர்த்தும் மிக முக்கியமான கதை இரண்டாம் கதையான ‘நழுவும் பொழுதுகளில் நழுவா கணங்கள்’

ஒரு முற்போக்குவாதி முட்டாள்களின் கூட்டத்தில் மாட்டிக்கொண்டு முழி பிதுங்கும் அவலத்தை கொஞ்சம் கொஞ்சமாக சொல்கிறது மூன்றாம் கதையான ‘ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்து எட்டு’ கொஞ்சம் போர்தான் என்றாலும், முற்போக்காளன் பேச ஆரம்பித்தால் சகல ஜீவராசிகளும் சப்தநாடிகளையும் அடக்கிக்கொண்டு கேட்கும், ‘நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே’ என்று பில்டப் பாட்டெல்லாம் போடாமலும், இயல்பிலிருந்து ஒரு இஞ்சு கூட நகராமலும் இருந்ததற்காகவே பாராட்டலாம். ஏனென்றால் நியாயமாகப் பேசினால் உலகம் கேட்டு நடக்கும் என்றெல்லாம் கதைபேசித் திரிபவர்கள்தான் இங்கே அதிகம். நிஜத்தில் தொண்டை கிழியக் கத்தினாலும் ஒருபயலும் மதிக்காமல் ‘ரெட்டை இலையா? உதய சூரியனா?’ என்று கேட்கும் ஜனநாயகம்தான் இங்கே உள்ளது என்பதை களத்தில் வேலை பார்ப்பவன் அறிவான்.

குழந்தை மனதோடு, குழந்தை இலக்கியம் வடித்த கலைஞரின் நினைவை எழுதும் கதையை குழந்தை இலக்கியத்தோடு தொடங்குவது நல்ல உத்தி. அதன் தலைப்பு ‘எழுத்துப்பிழை’யும் மிகப்பொருத்தமாக குழந்தைகளின் எழுத்துப் பிழையைக் குறிக்கும் குறியீடாக அமைந்திருக்கிறது. ஆனால் எழுத ஆரம்பித்த குழந்தைகள் கதை என்னானது என்ற ஏமாற்றம் எனக்கு உள்ளது. அடுத்த கதையான ‘இருத்தலுக்கான ஓட்டம்’ இந்தத் தொகுப்பில் என்னை மிகவும் கவர்ந்தது. அந்த கதையினை ஒவ்வொரு முறை படிக்கும்போதும் ஒவ்வொரு சமாச்சாரத்தை புதியதாக சொல்லும் வகையில் கதையின் ஓட்டம் அமைந்த பின்நவீனத்துவக்கதை. அடுத்த கதை ‘அவனன்றி’யும் அப்படித்தான். முந்தைய கதையில் ஓட்டமென்றால் இந்த கதையில் அங்கி. காலர்களும், அங்கிகளும், அணிபவர்களும், அணிய மறுப்பவர்களும், மறுக்கப்படுபவர்களும் காந்தி காலம்தொட்டு மட்டுமன்றி அதற்கு முன்பிருந்தே இருக்கின்றனர் என்பதால் இந்திய வரலாற்றின் எந்த பத்து ஆண்டுகளை ஒப்பிட்டும் இந்த கதையினைப் படிக்க முடியும்.

அடுத்த கதையின் பெயரில்தான் தொகுப்பு வெளிவந்திருக்கிறது. பேரிடர், வியாபாரமாகிப்போன சூழலில், இடர்பட்டவர்களின் இடர்களைக் கண்டுகொள்ளாமல் கற்பனை உலகில் சௌகரியமான வாழ்க்கை வாழ்பவர்கள் செய்யும் உதவிகளே இடர்களாகிப்போன சம்பவங்களை மூன்று தோழிகளின் வாழ்வியல் வழியில் சொல்லிபோகிறது இந்தக் கதை. சுனாமி உதவி செய்கிறேன் என்கிற போர்வையில் தயிர் சாதங்களையும், புளி சாதங்களையும் கட்டிக்கொண்டுவந்து ‘மீன் வாசம்’ இல்லாத உணவை கண்டேயிராத மக்களின் வாயில் திணித்ததை ஜே.டி.க்ரூஸ் நினைவுகூர்ந்ததை இந்தக் கதையைப் படித்ததும் நான் நினைவுகூர்ந்துகொண்டேன். தத்துவங்கள், பெண்ணியம், பெண் விடுதலை, வாழ்வின் சுய தேர்வு என அனைத்தையும் முஷ்டியை உயர்த்தாமல் சொல்லிப்போகிறது இந்தக் கதை.

அடுத்த கதையான ‘திசைவழிப் பயணம்’, நம் வாழ்வின் குழந்தைப் பருவத்தின் மிச்சங்களின் எதோ ஒரு மூலையின் திசையை நோக்கி பயணப்பட வைக்கிறது. ஒருவேளை அந்தப் பயணத்தில் நாம் தொலைந்து போகலாம். அப்படி தொலைந்திருந்தால் என்னாயிருக்கும் என்று எண்ணும்போதே மனம் பதறும். அப்படியான பயணத்தில், அல்லது தொலைதலில் எதோ ஒரு முகம் நினைவிலில்லாத அய்யாவோ, அம்மாவோ, அத்தையோ, மாமாவோ நாம் எதைவிட்டுப் பயணிக்கிறோமோ அதன் முக்கியத்துவத்தை உணர்த்தி நம் பயணத்தின் திசைவழியை மாற்றியிருப்பர். அவர்களின் மிச்சம் ஏதாவது ஒன்று நம்மிடம் மிஞ்சியிருக்கும். எப்படி சாப்பிடவேண்டும் என்பதுபோல. இது மனதிற்கு இதமான கதையாக இருக்குமோ இல்லையோ, ஆனால் நெருக்கமான கதையாக இருக்கும்.

அடுத்த கதையான 'பேராசிரியர் முரளியின் சுட்டுவிரல்' கதைக்கும் கட்டுரைக்கும் நடுவில் சிக்கித் தவிக்கிறது. சில இடங்களில் கதைத்தன்மையும் சில இடங்களில் கட்டுரைத் தன்மையும் மேலோங்குவது இந்தக் கதை போன்ற first-person narrative கதைகளுக்கு நல்லதல்ல. ஆனால் குழந்தைகளுடனான பயிற்சி வகுப்புகளில் விட்டதைப் பிடித்துவிடுகிறார். கதையின் நாயகனின் வகுப்பில் நாமும் அமர்ந்துகொள்கிறோம், பேராசிரியர் முரளியுடன் பேசிக்கொண்டிருக்கிறோம் என்பது இந்தக் கதையின் பலம். முதல் முறை உயிர் எழுத்தில், பின்பு புத்தகத்தில், மீண்டும் மறுவாசிப்பு, இப்போது விமர்சனம் எழுதுவதற்காக என்று நான்கைந்து முறை வாசித்தும் ஒவ்வொரு முறையும் கண்கலங்க வைத்தது இந்த சிறுகதை என்கிற கட்டுரை(?!). தலைப்பையும் அதன் காரணகாரியங்களையும் கதையிலிருந்து நீக்கியிருக்கலாம், ஆனால் அது தன் செயல்பாட்டையும், அதற்கு கிரியாஊக்கியாக இருந்தவரையும் கௌரவிக்கும் செயல் என்றே கருதுகிறேன். அது சிறுகதைக்குத் தேவையா என்பதைவிட இந்த சிறுகதைக்குத் தேவையா என்ற கேள்வி எழுந்தாலும் ஒரு சிறிய நியாயப்படுத்தல் மூலமாக அதை சமன் செய்ய முயன்றிருக்கிறார்.

‘ஃபோகஸ் ஃபியூரும் ஐகே பரஞ்மின்னும்' என்ற கதை ஒரு கலாய்ப்பிலக்கியம். இலக்கிய பத்திரிக்கைகள், உலக இலக்கியவாதிகள் என அனைவரையும் கலாய்த்துத்தள்ளுகிறது. கதையில் உப கதையாக வரும் குறுங்கதை கூட சுவாரஸ்யம். பரணில் கண்ணாடிப்பேழைக்குள் தவமிருக்கும் தன் புத்தகங்களை பழைய பேப்பர்காரன் வாயிலாக தமிழ் வாசகர்களுக்கு சேர்க்க நினைப்பது, உலக இலக்கியமா உள்ளூர் இலக்கியமா எனும் மயிர் பிளக்கும் வாதங்களில் ஈடுபடுவது என பல பகுதிகள் பரிசுத்த உலக இலக்கியவாதிகளை தோலுரிக்கிறது.

கட்சி வேலையாகவோ அமைப்பு வேலையாகவோ மக்கள் மத்தியில் நிதி வசூலுக்கு சென்றிருந்தால் உங்களுக்கு 'யானும் நீயும் எவ்வழி அறிதும்' கதையும் அது தரும் சிலிர்ப்புணர்வையும் புரிந்துகொள்ள முடியும், எளிய மனிதர்களின் அன்பும் அது தரும் நிறைவும் கடினப்பட்டு ஒரு நிகழ்வை நடத்துபவர்களுக்கு எவ்வளவு நெகிழ்வைத்தரும் என்று இந்தக் கதை காட்டுகிறது.

நுகர்வு கலாச்சாரம், மூடநம்பிக்கை, வியாபார உத்திகள் எந்தளவுக்கு மோசமாக ஒன்றையொன்று பிணைந்திருக்கின்றன என்பதை புறங்கையால் தட்டிவிட்டுப் போகிறது 'நம்பினால் நம்புங்கள்'. எப்படி காத்திரமான அரசியலை வெகுசன பாணியில் நையாண்டியாக சொல்வது என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டு. கடைசி கதையான 'ஊருக்கே குறி சொல்லும் பல்லி' எப்படி மருத்துவமனைகள் உளவியல் நோய்மைக்கு வழிவகுக்கின்றன என்ற பொதுவான உளவியல் பேசுகிறது. அதில் கடைசி ட்விஸ்ட், க்யூட்.

பொன்னுலகம் பதிப்பகத்தின் வெளியீடாக இந்தப் புத்தகம் வந்துள்ளது. அந்த எதிர்பார்ப்பை வீணாக்காத புத்தகங்களில் இதுவும் ஒன்று. நல்ல எழுத்துக்களை வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பதில் பொன்னுலகம் காட்டும் அக்கறையைப் பாராட்டலாம். அதேநேரம் பொன்னுலகம் பதிப்பகத்தின் எல்லாப் புத்தகங்களிலும் இருந்த ஒன்று இந்த புத்தகத்தில் பெருமளவு தவிர்க்கப்பட்டாலும் சிறிதளவு இருக்கிறது. அந்த ஒன்று இல்லாமல் கவனமாக இருக்க வேண்டும் என்று உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன். அந்த ஒன்று இந்த தொகுப்பின் நான்காம் சிறுகதையின் தலைப்பு. ‘எழுத்துப்பிழை’.

- சத்யா

Pin It