திறக்கும் போதே தெரிந்து விட்டது. ஆனாலும் திறந்தேன். கையோடு வட்டத்தில் சுழன்று வந்த மூடியை பற்றியது பற்றியபடியே வைத்திருக்க... பார்வை டிபன் பாக்ஸ்க்குள் மடிந்து கிடந்த காகிதத்தின் மீது விழுந்தது.

மூடியை சத்தமிடாமல் டேபிள் மீது வைத்து விட்டு உள்ளூர ஊரும் சப்தத்தோடு காகிதம் எடுத்தேன். முன்னே பின்ன பக்கவாட்டில் மதிய நேர சலசலப்பு லன்ச் மக்கள். கண்ணில் பட்டோருக்கு சிறு புன்னகை. கண்ணோரம் விழுந்தோருக்கு சிறு தலையாட்டல்.

கிறுக்குத்தனத்தில் சித்திரம் வரைவாள் ரூமா. இன்று என்ன பண்ணி வைத்திருக்கிறாள். கண்கள் பசியில் அசையாதிருக்க காகிதம் பிரித்தேன். ஒரு வரி கடிதம் அது,.

"ஒன்னுமில்ல போ"

குறு குறுவென அவள் பார்க்கும் முகம் நொடியில் கடிதத்தில் வந்து "ஒன்னுமில்ல போ" என்று சொல்லி வாயை அந்த பக்கம் இழுத்து இந்த பக்கம் குவித்தது. கன்னம் கொண்ட மச்சத்தில் நெளிந்து விரியும் காதலுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.

புன்னகை வந்து விட்டது. கூடவே அவள் பூச்சூடும் வாசமும்.

இத்தனை குறும்புக்காரியிடம் எப்படி சண்டை போட்டேன். நான் எங்கு போட்டேன். அவள் தானே போட்டாள். நான் மீண்டும் படித்தேன்.

" ஒன்னுமில்ல போ..." என்று சொல்லி நாக்கை வாயோரம் பற்களுக்கு இடையே வைத்துக் கொண்டு பூனை போல பார்ப்பாளே... அந்த முகம் நினைவுக்கு வந்தது.

"என்ன சார்... வெறும் டிபன் பாக்சில்.....காதல் நிரப்பி அனுப்பி இருக்காங்களா மேடம்" என்ற அருகே வந்து நகர்ந்த முத்துவை பார்த்து மர்ம புன்னகை செய்தேன்.

நல்லா இருக்க......திடீர்னு மூஞ்சை தூக்கி வெச்சிக்கற....

அவள் என் பேச்சுக்கு காது மட்டும் அல்ல கால்கள் கூட கொடுக்கவில்லை. வீட்டுக்குள் அங்கும் இங்கும் எதுக்கு இப்படி நடப்பாள் என்றே தெரியாது. ஆனால் நடப்பாள்.

எங்க பார்த்தாலும் ஒட்டடை... துணி துவைச்சு தீரல. இதுல காலைல டிபன்.... மத்தியானம் சாப்பாடு..... ட்ரெஸ்ஸை வேற அயன் பண்ணனும்... வீடு முழுக்க இப்டி ஈரத்தோடு வராதன்னு எத்தனை தடவை சொல்றேன்... இதை வேற மாப்பு போடணும்...

நல்ல தண்ணீ இல்ல....வாங்கணும்னு நேத்துலருந்து சொல்றேன்.....கேஸ் வேற முடிய போகுது.... புக் பண்ணனும்..... எப்ப பாரு கம்பியூட்டர் முன்னாலேயே உக்காந்துட்டு இருந்தா சோறு வருமா.....இன்னைக்கு பட்டினி போட்டா தான் புத்தி வரும்....

அய்யே... என்ன லுக்கு.... நான் லன்ச் பத்தி சொன்னேன். இடுப்பில் கை வைத்துக் கொண்டு பேசும் நொடி நேரத்தில் மலையாள சேச்சி ஆவாள்.

நிஜமாவே கோப படறாளா... இப்டி அழகா இருக்கா... நான் பேக்கை தூக்கிக் கொண்டு கிளம்பி விட்டேன். பாதகத்தி நிஜமாவே சாப்பாடு வைக்கல. கடிதம் கொண்ட ஒன்னுமில்ல போ... கண்களில்.... முத்தங்களை சிதற வைத்தது.

சட்டென எடுத்த முடிவில் மதியம் விடுமுறை. வீடு வந்திருந்தேன். ஸ்விக்கிகாரன் பிரியாணி கொடுத்தான். சாப்பிட்டு விட்டு.... இருக்கும் துணிகளை எடுத்து வாஷிங் மெஷினில் போட்டேன். அவள் வளையலோசை மெஷினுக்குள் இருந்து வாத்தியம் ஊதியது.

என்னாடை கைக்கு வருகையிலெல்லாம் ஒட்டிக்கொண்டே அவளாடையும் வருவது என்ன விந்தை. வீடெல்லாம் அவள் காலடிகள்... வீணை மீட்டும் சுவடுகளை விட்டு விட்டு நடந்த இடைவெளிகளில் மெல்ல நடந்து பார்த்தேன். ஆகிருதி அத்தியாயம்...ஆங்காங்கே.

அவள் வாசம் நிறைந்த சமையலறையில்.... கொஞ்ச நேரம் நின்று பார்த்தேன். கேசம் தீண்டும் ஞாபகம். கடுகு டப்பா உள்பட காணும் டப்பாவில் எல்லாம் கால அழுக்கு. துடைத்து வைத்தேன். தூபம் காட்டும் அவள் கண்கள் சிரிக்கும் நினைப்பு.

பாரத் கேஸ்க்கு அலைபேசி.......கேஸ் புக் பண்ணினேன். அலைபேச அவளிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும். எதிராளி கொலையாளியாக இருந்தாலும்... எறும்பூரும் இனிப்பாக மாற்றி விடுவாள்.

டைல்ஸ் தரையெல்லாம் மாப் போட்டு துடைத்தேன். 'கீறல் போட்றாத' என்று வீட்டின் வேரை நிதானமாக்கும் அவள் குரலில்.... கம்மல் சிணுங்கும் ஓவியம். சிரித்துக் கொண்டேன்.

எனக்கொரு ஆசை......

என்ன

இன்னைக்கு ஹால்லயே....

ஏன்.....?

ஒரு இங்கிலீஸ் படத்துல பார்த்தேன்.... அது நல்லா இருந்துச்சு....

ஏய்.....!

அய்யே.... நல்ல படம் தான்... ரெண்டு மூணு சீன் மட்டும் தான்....

இந்த மாதிரி நேரங்களில் எல்லாம் எப்டி தான் உதடு பட்டுனு பெருசாகுமோ... கொரியாகாரி வாய். முனங்கும் போதே.... முகத்தில்... பூரிப்பு எனக்கு.

ஷோ கேஸ்- ஐ துடைத்தேன். டேபிள்.....டி பாய்...நாற்காலிகள் மேஜைகள் சோபா என்று தூசு கொண்ட இடமெல்லாம் நேசம் கொண்டு சுத்தம் செய்தேன்.

கொஞ்ச நேரமாவது உக்காறேண்டி.... நடந்துக்கிட்டே...

ஏன் நடந்தா உனக்கென்ன......... வலிக்குதா........சொல்லி விட்டு ஓடி பாத்ரூம்குள் ஒளிந்து கொள்ளல் சாம மொழிநடை.

அடிங்...இப்பிடியெல்லாம் அசிங்கமா பேச யார்டி உனக்கு கத்துக் குடுத்தா...

நீ தான்.... செயல்முறை விளக்க....ப்ரோபஸ்ஸர்.

வெட்கம் தாங்காமல் இல்லை இல்லை வெப்பம் தாங்காமல் துடைத்து பளிச்சிட்ட மின்விசிறியை வேக படுத்தினேன்.

யாரு இவ.. எங்கிருந்து....வந்தா.. மொத்த அழகையும் பதுக்கி வெச்சுகிட்டு கொஞ்சம் கொஞ்சமா பிச்சு தர்றா...

காய்ந்து ஒரு வாரத்து துணிகளை மடித்து பீரோவில் வைத்தேன். கள்ளி பீரோவுக்குள்ளும் அவள் வாசத்தை தான் நிரப்பி இருக்கிறாள்.

வீடு பளிச்சென்று ஆகி விட்டது. மனம் கூட. மேடம் வரட்டும். காலையில் சண்டை போட்டமேன்னு பீல் பண்ணட்டும். இன்று இரவு உணவுக்கு வெளியே சென்று பிரியாணி சாப்பிட வேண்டும். அதற்கு முன் கள்ளிக்கு தெரியாமல் ஒரு ச்சில் பியர் குடித்து விட வேண்டும். நான் குளித்து விட்டு காத்திருந்தேன்.

நேரம் ஆனது. ஆளை காணவில்லை. அலைபேசியில் அழைத்தேன். பதில் இல்லை. என்ன இது.... கோச்சிட்டு போற அளவுக்கா சண்டை போட்டோம்..... யோசித்துக் கொண்டே வாசலில் நீண்ட நாட்களுக்கு பின் அவளுக்காக காத்திருந்தேன்.

ஸ்கூட்டியில் ஊட்டியே வந்தது போல வந்தாள்.

அவளுக்கு முன்பே வீடு வந்திருந்த என்னை ஏன் என்பது போல பார்த்தாள்.

நீ உள்ள வந்து பார் மகளே......அப்புறம்.....இன்னைக்கும் ஹால்லயே தான்... வாய்க்குள் வார்த்தை வசந்தகாலம் சுமக்க.. கண்களில்....ஒரு ஜாலி கெத்து.

வேகமாய் வீட்டுக்குள் வந்தவள் கையில் இருந்த கேரி பேக்கை டேபிள் மீது வைத்தாள். அனிச்சையாய் வீட்டை கண்கள் விரிந்து பார்த்தாள். கன்னத்தில் கைகள் குவிய ஆனந்த பார்வை என் மீது. அவளை இது எப்படி இருக்கு என்பது போலவே பார்த்துக் கொண்டே டேபிள் மீது வைக்கப்பட்ட கேரி பேக்கை பிரித்தேன்.

அதில் எனக்கு பிடித்த பீப் பிரியாணியும்.... சிங்காரோ பியரும். 

- கவிஜி

Pin It