“மகனே நீ வில் வித்தையில் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்று விட்டாய். ஒவ்வொரு தகப்பனும் தன் மகன் தன்னைவிடச் சிறந்தவனாக இருக்க வேண்டும் என விரும்புவது இயற்கை. நீயோ என் விருப்பத்தை நிறை வேற்றியது மட்டுமல்லாமல், எல்லையற்ற மகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டாய்.

நான் கற்றுத் தந்த வில் வித்தையில் என்னையே மிஞ்சும் அளவிற்கு நீ பயிற்சி பெற்று இருப் பதைப் பார்க்க என் மனம் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிக் கொண்டிருக்கிறது” என்று வேடர் குலத் தலைவனான இரண்ய தனுசு தன் மகன் ஏகலைவனைப் பார்த்துக் கூறினார்.

தந்தையினால் இவ்வளவு பாராட்டப்பட்டு இருந்தும், ஏகலைவனின் மனம் நிறைவு அடையவில்லை.

வேகமாக ஓடும் முயலை ஒரே அம்பில் வீழ்த்தி விடும் திறனும், யானையின் துதிக்கையை ஒரே அம்பில் அறுத்து எறிந்து விடும் வலிமையும் அவனுக்கு இருந்தது. ஆனாலும் நாகாஸ்திரம், அக்னியஸ்திரம், வருணாஸ்திரம், பிரம்மாஸ்திரம் என்று சொல்கிறார்களே அவை எல்லாம் தன் கைவரப் பெறவேண்டும் என்று ஏகலைவன் ஆசை கொண்டான்; அதைத் தன் தந்தையிடமும் வெளியிட்டான்.

“மகனே! அவையெல்லாம் அரசர்களின் விடயம். நமக்குத் தேவையில்லை. நாம் மனிதர்கள் யாரையும் கொல்ல விரும்பவில்லை. நாம் வேட்டையாடிப் பிழைப்பதற்கு நமக்குத் தெரிந்த இந்த வித்தையே போதும்” என்று இரண்யதனுசு மகனை அமைதிப்படுத்த முயன்றார்.

ஆனால் ஏகலைவனோ, “இல்லை அப்பா! காற்றை, மழையை, தீயை வரவழைக்கும் அஸ்திரங்கள் எல்லாம் உள்ளனவாம். ஒரே நேரத்தில் பலரை மயக்க வைக்கும் அஸ்திரங்கள் உள்ளனவாம். இன்னும் பல அற்புதங்களை எல்லாம் செய்வதற்கான அஸ்திரங்களும் உள்ளனவாம். அவற்றை எல்லாம் கற்றால் நமக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்குமே?” என்றான்.

அவ்வாறு கூறிய மகனை இரண்யதனுசு சிறிது குழப்பத்துடன் பார்த்தார்.

“மகனே! அவை எல்லாம் சூது வாது நிறைந்தவை. அவற்றைக் கைவரப் பெற்றுள்ள அரசர்கள் யாரும் அமைதியாக வாழமுடிகிறதா? நம் அமைதியான வாழ்விற்கு நாம் கற்றிருக்கும் வித்தைகளே போதும்” என்றார்.

இரண்யதனுசு கூறியதை ஏகலை வன் ஏற்கவில்லை.

“சில சமயங்களில் மழை பொய்த்துப் போகும்பொழுது தண்ணீர் இல் லாமல் எவ்வளவு சிரமப்பட வேண்டியிருக்கிறது? அதேபோல், இந்த அரணிக் கட்டையைத் தேய்த்துத் தேய்த்து நெருப்பை உண்டாக்குவதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறதே வருண அஸ்திரம், அக்னி அஸ்திரம் போன்ற வித்தைகள் தெரிந் திருந்தால் வேலைகளை எல்லாம் எளிதாகச் செய்யமுடியுமே?” என்றான், ஏகலைவன்.

இவ்வாறு மன்னர்கள் பயன்படுத்துவதாகக் கூறப்படும் அஸ்திரங்களையெல்லாம் தான் கற்கவேண்டும் என்ற விருப்பத்தின் மிகுதியில் கூறிய மகனை இரண்யதனுசு இமைகொட்டாமல் பார்த்தார்.

“மகனே உன் வினாக்களுக்கு என்னால் விடையளிக்க முடியவில்லை. ஆனால் ஒன்றைச் சிந்தித்துப் பார். வயல் வெளியில் வாழும் மக்களும் மழை பொய்த்துப் போகும் காலத்தில் வேறு இடங்களை நாடிச் செல்கின்றனர். அப்போது அவர்களுடைய அரசர்கள் வருணாஸ்திரத்தையோ, அக்னி அஸ்திரத்தையோ பயன்படுத்தி அம் மக்கள் அங்கேயே தங்கி வாழ உதவி செய்வதில்லையே? அது மட்டுமல்லாமல் அம்மக்களும் எப்பொழுதும் அரணிக் கட்டையை கையில் வைத்துக்கொண்டுதானே அலை கிறார்கள்! யாரும் அக்னி அஸ்திரத்தைப் பயன்படுத்தி நெருப்பை உருவாக்கவில்லையே?” என்றார்.

இதைக் கேட்டவுடன் ஏகலைவனின் முகம் சுருங்கியது. இருந்தாலும் அஸ்திரங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை மனத்திற்குள் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டே இருந்தது. இதைப் புரிந்துகொண்ட பாசமுள்ள தந்தை, “நீ நகரத்தின் பக்கம் சென்று, நீ விரும்பும் அஸ்திர வித்தைகளைக் கற்று வா!” என்று மகனுக்கு அனுமதி அளித்தார்.

தந்தை அனுமதி கிடைத்ததும் ஏகலைவன் துணைக்கு ஒரு நண்பனை அழைத்துக்கொண்டு அஸ்தினாபுரம் நோக்கிப் பயணப்பட்டான். அஸ்தினாபுரத்தில் துரோ ணரைக் கண்டு, “தான் வேடர்களின் தலைவன் இரண்ய தனுசுவின் மகன் ஏகலைவன் என்றும், அவரை ஆசானாக வரித்துக்கொண்டு அஸ்திர வித்தைகளைக் கற்றுக்கொள்ள வந்திருப்பதாகவும் கூறிவிட்டு, அவ் வித்தைகளைக் கற்றுத் தருமாறு வணக்கத்துடன் வேண்டிக் கொண்டான்.

ஏகலைவனை ஏற இறங்கப் பார்த்த துரோணர், “வில் வித்தையை அரச குலத்தாரால்தான் கற்றுக்கொள்ள முடியும்” என்றும், ‘மற்றவர்களால் கற்றுக் கொள்ள முடியாது” என்றும் கூறினார்.

அதைக் கேட்ட ஏகலைவன், தன் தன் தந்தையிடம் வில் வித்தையைக் கற்றுக்கொண்டு இருப்பதாகவும், ஆனால் அக்னி அஸ்திரம், வருணாஸ்திரம், நாகாஸ்திரம், பிரம்ம அஸ்திரம் போன்ற அஸ்திரங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் வந்து இருப்பதாகவும், கூறியவுடன், சிறிது அதிர்ச்சியடைந்து ஏகலைவனை முறைத்துப் பார்த்த துரோணர், “சரி, நீ உன் தந்தையிடம் கற்ற வில் வித்தையைக் காட்டு” என்று கூறினார்.

உடனே, ஏகலைவன் தன் வில்லை எடுத்து, வானில் பறந்து சென்று கொண்டிருந்த ஒற்றைக் கழுகைக் குறி பார்த்து அம்பை எய்தினான். அந்தக் கழுகின் கழுத்தில் அம்பு பட்டு கீழே விழுந்தது. துரோணர் பிரமித்துப் போனார். ஆனாலும், தன் குல தருமப்படி பிராமணர்கள், சத்திரியர்கள் தவிர, வேறு யாருக்கும் அஸ்திர வித்தைகள் கற்றுத் தருவதில்லை என்றும், ஏகலைவனின் வில்வித்தை ஆற்றல் ஒரு வேடனுக்குத் தேவையானதைவிட அதிக மாகவே இருப்பதாகவும், மேற்கொண்டு ஆசைப்பட வேண்டாம் என்றும் கூறினார்.

இதைக்கேட்ட ஏகலைவன், தாம் அவரை மனத்தளவில் ஆசானாக ஏற்றுக்கொண்டுவிட்டதாகவும், அவர் தன்னை மாணவனாக ஏற்றுக்கொண்டே ஆகவேண்டுமெனக் கெஞ்னாhன். ஆனால் துரோணர், தன் குல தருமப்படி அது முடியாது எனக் கண்டிப்புடன் கூறி அனுப்பிவிட்டார்.

ஏமாற்றத்துடன் வெளியில் வந்து தன் நண்பனிடம் நடந்ததைக் கூறினான், ஏகலைவன். அப்போது, நண்பன் கூறியது அவனுக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது. ஏகலை வன் துரோணரைச் சந்திக்கச் சென்றிருந்த வேளையில், அவனுடைய நண்பன் அங்குள்ள போர் வீரர்களுடன் பேசிச் சில செய்திகளைச் சேகரித்து வைத்திருந்தான்.

வருண அஸ்திரம், அக்னி அஸ்திரம், நாக அஸ்திரம், பிரம்ம அஸ்திரம் என்பதெல்லாம் வெறும் பெயர்களே யன்றி, அப் பெயர்களுக்கும், செயல்களுக்கும் தொடர்பு ஏதுமில்லை. வேடர்கள் மற்றும் சாதாரண மனிதர்கள் பயன்படுத்தும் அம்புகள் சாதாரண கொல்லர்களின் உலைக்களத்தில் செய்யப்படுகின்றன.

ஆனால், அஸ் திரங்கள் எனப்படுபவை சில சிறப்பான உலைக் களங்களில் செய்யப்படுகின்றன. அவற்றை உருவாக்கும் பொழுது சில நச்சுக் குழைவுகளில் நனைத்து நனைத்து உருவாக்குவார்கள். அந்த அம்புகள் நனைக்கப்படும் நச்சுக் குழைவுகளின் தன்மையைப் பொறுத்து அவை எய்யப்பட்டவர்களின் மேல் அவற்றின் செயல்கள் இருக்கும். சில நச்சுக்குழைவுகள் ஒருவனைக் குறிப்பிட்ட நேரம் மயக்கத்தில் வைத்து இருக்கும்.

சில கை, கால்களை முடக்கிவிடும். சில உடலில் தாங்க முடியாத எரிச்சலை ஏற்படுத்தும். சில ஒரேயடியாகக் கொன்றுவிடும். இதுபோல் அம்புகளில் தோய்க்கப்பட்ட நச்சுக் குழைவுகளைப் பொறுத்துதான் அம்புகளின் வீரியம் இருக்கிறதே தவிர, நெருப்பை வரவழைக்கும், நீரை வரவழைக்கும், பாம்பை வரவழைக்கும் அஸ்திரங்கள் என்பதெல்லாம் இல்லை. மற்றவர்கள் சத்திரியர்களின் வலிமையைப் பற்றிய அச்ச உணர்வு பெறவேண்டும் என்பதற்காகத்தான் அதுபோன்ற கட்டுக்கதைகள் கட்டப்பட்டு உலாவவிடப்பட்டுள்ளன என்பதே அச் செய்தி.

இச் செய்தியைக் கேள்விப்பட்டவுடன் அந்த நச்சுக் குழைவுகள் பற்றியும், அவற்றைத் தோய்த்து அம்புகளை உருவாக்குவது பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆவல் ஏகலைவனுக்கு உண்டானது.

அங்கிருந்த போர் வீரர்கள், கொல்லர்கள், நச்சுக் குழைவைச் செய்யும் மருத்துவர்கள் ஆகியோரைப் பார்த்து அவ் விவரங்களைத் தெரிந்துகொண்டு வருவதாகக் கூறி நண்பனை அனுப்பிவிட்டான்.

ஆனால், அவனுக்கு அவ் விவரங்கள் எளிதில் கிடைக்கவில்லை. இருப்பினும் அவனுடைய விடாமுயற்சியின் காரணமாக ஒரு கொல்லன் சில அஸ்திரங்களைச் செய்து கொடுத்தான். ஆனால், அவனால் நச்சுக் குழைவுகள் செய்வதெப்படி என சொல்லிக்கொடுக்க முடியவில்லை.

அதையும் தெரிந்துகொள்ள வேண்டுமென அலைந்து கொண்டிருந்த நிலையில், ஒருநாள், ஒரு நாய் அவன் தங்கியிருந்த இடத்திற்கருகில் வந்து ஓயாமல் குரைத்துக் கொண்டிருந்தது. அதைக் கேட்கச் சகிக்காத ஏகலைவன், உடல் இயக்கத்தை அரைகுறையாக முடக்கும் ஒரு அஸ்திரத்தை எடுத்து அந்த நாயின்மீது எய்தான். அடிபட்ட நாய் குரைத் துக் கொண்டே ஓடிவிட்டது.

மறுநாள் அரண்மனையிலிருந்து சில காவலாளர்கள் அந்த நாயுடன் வந்து, ஏகலைவனை அந்த நாயின் மேல் அஸ்திரம் எய்த ‘குற்றத்திற்காக’ அருச்சுனனிடம் அழைத் துச் சென்றார்கள். அப்பொழுதுதான் ஏகலைவனுக்கு அது அருச்சுனனுடைய நாய் என்று தெரிந்தது.

விசாரணையில் ஏகலைவன் உடல் இயக்கத்தைத் தளர்த்தும் அஸ்திரத்தை அந்த நாயின்மேல் எய்தது தெரிந் தது. அந்த அஸ்திரம் அவனுக்கு எப்படிக் கிடைத்தது என விசாரித்தபொழுது ஏகலைவன் பதிலேதும் சொல்லவில்லை. கோபமடைந்த அருச்சுனன், ஏகலைவனைக் கொல்லப் போனான்.

ஆனால், தருமபுத்திரன் அவனைத் தடுத்து இவனைக் கொன்றுவிட்டால் இந்த அஸ்திரம் இவனுக்கு எப்படிக் கிடைத்தது என்று தெரிந்துகொள்ள முடியாது. ஆகவே, இவனை என்ன செய்வதென குருதேவர் துரோண ரிடம் கேட்போம் என்று அவரிடம் அழைத்துச் சென்றனர்.

ஏகலைவனைப் பார்த்ததும், இவன் தன்னிடம் அஸ்திரம் கற்க வந்தவன் என்பதைத் தெரிந்துகொண்டார் துரோணர். தான் எதையும் கற்றுத் தராமலேயே எப்படி இவன் அஸ் திரங்களைப் பெறமுடிந்தது என்று வியந்தார்.

ஆனால், எப்படி விசாரித்த போதிலும் ஏகலைவன் தனக்கு அஸ்திரமளித்த கொல்லனைக் காட்டிக் கொடுக்கவில்லை.

நெருப்பை, நீரை, பாம்பை வரவழைக்கும் அஸ்திரங்கள் எல்லாம் கட்டுக் கதைகள் என்பதை அவன் தெரிந்து கொண்டிருப்பது துரோணருக்குப் புரிந்தது. அந்த நச்சுக் குழைவுகள் செய்யும் வழிமுறை பற்றியும், அவற்றை வைத்து அஸ்திரங்களைச் செய்யும் வழிமுறைகளைப் பற்றியும் கற்றுக் கொள்ளவே அங்கு இருக்கிறான் என்பதும் தெரிந்தது. இதை அறிந்த துரோணர் மிகவும் ஆத்திரம் கொண்டார்.

அதை உணர்ந்த அருச்சுனன் அவனைக் கொன்று விடலாமா? என்று துரோணரிடம் கேட்டான்.

சிறிது நேரம் யோசித்த துரோணர் அவனைக் கொல்ல வேண்டாமென்றும், அவனது வலது கைக் கட்டைவிரலை வெட்டிவிடுமாறும் உத்தரவிட்டார்.

“தன்மீது விதிக்கப்பட்ட அந்தத் தண்டனைக்கு, தான் செய்த குற்றம் என்ன?” என்று கேட்ட ஏகலைவனிடம், அவன் வருணாசிரம முறையை மீறி சத்திரியர்களின் கல்வியைக் கற்க முனைந்தது குற்றமென்றும், அதற்கு மரண தண்டனையைத்தான் அளிக்க வேண்டும் என்றாலும், அவன்மீது கருணை கொண்டு உயிருடன் விடுவதாகக் கூறினார், துரோணர். காவலர்கள் ஏகலைவனை இழுத்துக் கொண்டு சென்று விட்டனர்.

துரோணர் அளித்த தண்டனையில் மனநிறைவு அடையாத அருச்சுனன், அவனை இமைக்காமல் பார்த்துக் கொண்டேயிருந்தான்.

அதைப் புரிந்து கொண்ட துரோணர், “அருச்சுனா! இவனைக் கொன்றுவிட்டால், அஸ்திரங்களைப் பற்றிய இரகசியத்தை யார் கொடுத்தது என்று நிரந்தரமாகத் தெரியாமல் போய்விடும். இவன் உயிரோடு இருந்தால் ஒரு வேளை அதைத் தெரிந்து கொள்ள முடியும். அப்பொழுது அவனுக்குத் தகுந்த தண்டனை வழங்கலாம்.

ஒருவேளை ஏகலைவன் அதை வெளியில் சொல்லாமலேயே இருந்தாலும் நமக்கு இழப்பு ஒன்றுமில்லை. இனி அவனால் எந்த வேலையையும் செய்ய முடியாது. அதுமட்டுமல்ல. வருணா சிரம முறையை மீறுவோர் என்ன கதி அடைவார்கள் என்பதற்கு உயிருள்ள சான்றாக இவன் இருப்பான். ஆகவே, உன் கோபத்தை விட்டொழி” என்று கூறினார்.

- இராமியா

Pin It