கானல் நீர் கண்களை குருடாக்கி விடும் போல.

ஷ்ரவன் தலையைக் கோதி கோதி முகத்தை சரி செய்து கொண்டே நின்றான். அவன் கால்கள் நடு நடுங்கின. விரல்களை நகமென கடிக்க ஆரம்பித்திருந்தான். தாடியை தடவித் தடவி பார்த்துக் கொண்டான். குரலை மாற்றி மாற்றி பேசி கேட்டான். தன் மீதுள்ள குட்டிச்சுவர் தெரிந்து விட்டதா என தன்னையே ஒருமுறை சுற்றிப் பார்த்தான்.

பசித்த கொக்கின் பாழும் முகத்தோடு அவன் ஒரு வறண்ட நாளை பசுமையாக்க காத்திருந்தான். ரத்தம் குடிக்கும் குரூர காட்டேரியின் புன்னகையோடு அவன் தன் டீமை பார்த்து கட்டை விரலைத் தூக்கி ரெடி.. ரெடி என்றான். டீம் ரெடியாகி அவனுள் இருக்கும் மிருகம் வெளி வருவதைக் காண ஆவலாக தயாரானது.

சற்று தூரத்தில் ஒரு மனிதன் வந்து கொண்டிருந்தான்.

"வேட்டை ஆரம்பம்டா" என்ற ஷ்ரவன் காலை நொண்டி நொண்டி அந்த மனிதனிடம் சென்று என்னென்னெவோ குரங்கு சேட்டை செய்தான்.

"மூடிட்டு போ... ங்கோத்தா... prankதான..." - என்று சொல்லி அவன் நகர்ந்து விட திக்கென்றாகி... "இன்று காலையில் இருந்து இது ஐந்தாவது ஆள். என்னாச்சு... இந்த முட்டாள் மனிதர்களுக்கு..." - ஐயோ... ஐயோ என ஒரு ட்ரக் அடிக்ட் போலத் தலையை உதறிக் கொண்டு கத்திய ஷ்ரவன் கண்களில்... சாகும் வெறி. காலையில் இருந்து ஒன்றுமே போனி ஆகாத சுமையைத் தாங்க முடியவில்லை. இனி அவளோ தான நாம. காற்றில் குத்திக் கொண்டான். அவன் கழுத்தை அவனே கடித்துக் கொள்வான். நல்லவேளை அவன் எதிரே அவன் இல்லை.

தனக்குள்ளேயே துப்பிக் கொண்டவன் கண்களில்... இன்னொரு பெண் நடந்து வருவது தெரிய... மிருகம் பல்லிளிலுத்துக் கொண்டு... அருகே சென்று முகவரி கேட்பது போல எதையோ நீட்டி... பேச்சை ஆரம்பிக்க...

"என்ன அட்ரஸ்.. மூடிட்டு போ... உன் மூஞ்சியைத்தான் prank ஷோ மயிறு ஷோ ல பார்த்துட்டேதான இருக்கோம்... புடுங்கி... உனக்கெல்லாம் வேலையே இல்லையா.." அவனைப் பார்த்துக் கொண்டே மறுபக்கம் துப்பி விட்டு சென்று விட்டாள். இடிந்து போய் அமர்ந்தவனுக்கு எதிரே பசித்த குரங்குகளாக அந்த நால்வர் கொண்ட டீம் ஒடுங்கி பார்த்தது. அழுகையை அடக்கிக் கொண்டிருந்தவன் கண்களில் இப்போது ஒரு ஆட்டோ தெரிய... வேகமாய் முகத்தை துடைத்துக் கொண்டு... வெகுண்டெழுந்து வேட்டைக்கு தயாரானான் .

கை காட்டி நிறுத்தி 'ஆட்டோ வருமா...?' என்றான். பார்க்காதது போல டீமை பார்த்து... சமிக்கை செய்து கொண்டே ஆட்டோ டிரைவரிடம் பேச்சை ஆரம்பித்தான்.

அவன் பேசி முடியும் வரை கேட்டுக் கொண்டிருந்த ஆட்டோக்காரர்..." எல்லாம் சரி.. கேமராவை இந்த பக்கம் வைக்க சொல்லு. அங்க இருந்து வியூ சரியா கிடைக்காது.. போடா டேய்.. நானே ஒருகாலத்துல பெரிய டுபாக்கூர்று... என்கிட்டயேவா...." - தூக்கி போட்டு மிதிக்காத குறையாக கிளம்பி விட்டார் ஆட்டோக்காரர்.

கிட்டத்தட்ட அழுகையே வந்து விட்டது ஷ்ரவனுக்கு. கண்களை விரித்து வாக்கியத்தை திக்கித் திக்கி சிம்பு போல அழுத்தி அழுத்தி பேசி... சொற்களை கடித்து குதப்பி அவனாகவே இன்னொருவனாகவும்... அவனாகவே அவனாகவும்... அவனாகவே யாரோவாகவும்... இன்னும் என்னென்னவோ... செய்து கொண்டிருந்தவனை டீமே ஒரு மாதிரி பார்த்தது.

"ஷ்ரவன் நாளைக்கு வேற இடத்துல பாத்துக்கலாம்... டோன்ட் அப்செட்" என்றார்கள்.

"இல்ல கையெல்லாம் வெட்டி வெட்டி இழுக்குது... மண்டைக்குள்ள ஆயிரம் வண்டுகளின் குடைச்சல்..." என்று தலையை பிடித்துக் கொண்டது கானல் நீரில் சுருண்டு விழுந்து ஒரு மதிகெட்ட மனிதனை போல நீந்தினான். திகைத்துப் பார்த்தவர்கள்.. சட்டென முடிவெடுத்து... அதையும் வீடியோ எடுத்தார்கள்.

பின் "prank ஸ்டார் ஷ்ரவனின் இன்றைய நிலை" என்ற தலைப்பில் வீடியோ வெளியானது.

மனநிலை மருத்துவமனை வாசலில் சேதுவைப் போல அமர்ந்திருக்கும் ஷ்ரவனை காட்டி "இனி அடுத்து..." என்று முடித்திருந்ததைக் காண்கையில் தோன்றியது..

"மனிதனை மனிதன் தின்ன ஆரம்பித்து விட்டான்..."

- கவிஜி

Pin It