சாம்பமூர்த்தி அந்தத் தடை செய்யப்பட்ட பாதைக்குள் தெரியாமல் நுழைந்து போலீசில் மாட்டிக் கொண்ட போது நேரம் மாலை மணி ஐந்து.

வீட்டிற்குப் போகும் வழிக்கு ரெண்டு மூன்று வேலைகள் என்று வைத்திருந்தார். அதிலும் குறிப்பாக மனைவியின் கிழிந்த புடவை இரண்டு எடுத்து வந்திருந்தார். அதைப் பொழுது இருட்டும் முன் அந்தக் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று தைத்துக் கொண்டு போக வேண்டும்.

அதை விட முக்கியமானது பெண்டாட்டியின் செருப்பு அறுந்தது.

அது பெண்டாட்டி செருப்போ, புருஷன் செருப்போ அறுந்த செருப்பு அவர் வீட்டின் ஒரு நபருக்கானது. அதைத் தைக்க வேண்டும். அவ்வளவுதான்.

அதே கொள்கைதான் அவர் எடுத்துச் செல்லும் புடவைக்கானதும். வேறு அகௌரவம், தன் முனைப்பு என்பதெல்லாம் அவரைப் பொறுத்தவரை என்றுமே தலைகாட்டியதில்லை.

அவர் ஆசையாய் தன் மனைவிக்கு எடுத்துக் கொடுத்த தவணைப் புடவை அது. வெறும் இரு நூற்றைம்பது ரூபாயை ஐந்து தவணைகளில் கொடுக்கலாம் என்று ஒருவன் வலிய வந்து சொல்லும் பொழுது வேண்டாம் என்று சொல்ல எவனுக்குத்தான் மனசு வரும்?

என்ன அவர் செய்த ஒரே தப்பு என்றால் அப்படியான தவணைகளுக்கு ஒரே சமயத்தில் இரண்டு புடவைகளை அவர் எடுத்து விட்டதுதான்.

மொத்தம் பத்துத் தவணைகள் என்றுதான் அவர் மனதில் இருந்ததே தவிர, ரெண்டு புடவைக்கும் சேர்த்து மாதம் ரூபாய் நூறு வீதம் அழ வேண்டும் என்று அவருக்கு தோன்றவேயில்லை.

அப்படிக் கொடுத்தால் அது ஐந்து தவணைகளிலேயே முடிந்து போகக் கூடிய கடன் என்று அவர் நினைத்துப் பார்க்கவும் இல்லை.

``சரி இப்போ முதல் போணியா ஏதாச்சும் கொடுங்க சார்..'' என்று விற்றவனும் கேட்கவில்லை.

அவனுக்கென்ன அவசரமோ, அல்லது மேற்கொண்டு பணத்துக்கு அரித்தாலோ அல்லது அங்கு நின்றாலோ எடுக்கப்பட்ட புடவைகள் திரும்பவும் தன் மூடைக்கே வந்துவிடக்கூடும் என்று நினைத்திருக்கலாம்.

மாடி ஆபீஸிலும் கீழ் ஆபீசிலுமாக குறைந்தது பத்துப்புடவைகளாவது கொடுத்து விட்டிருப்பான் என்று பார்த்துப் பெண்மணிகள் ரெண்டு ரெண்டாக எடுத்தார்கள். இவன் என்னத்தைக் கண்டான்? என்ன விசேடம்? என்ற கேட்கத்தான் ஆசை. ஏதாவது பொருந்தாமல் கேட்டு வைக்கப் போக, கோபம் கொண்டோ அல்லது கேலி செய்வதாக நினைத்துக் கொண்டோ திருப்பிக் கொடுத்து விட்டால்?

கருவூலத்திற்குப் போய் வந்த பியூனிடம் ``என்ன சிங்கமுத்து, அரியர் பில் பாசாயிருச்சான்னு அவர்கள் கேட்பது மட்டும் அவன் கவனத்தில் விழ, வாயை மூடிக் கொண்டு யார் யார் முதல் தவணை கொடுத்தார்களோ அதை மட்டும் வாங்கிப் பையில் போட்டுக் கொண்டு கம்பி நீட்டி விட்டான்.

அப்படியான ஒரு குதூகலச் சூழலில்தான் சாம்பமூர்த்தியும் ரெண்டு புடவைகளை எடுத்து வைத்தார். எல்லாரும் ரெண்டு. இவரும் ரெண்டு. இம்மாதிரி பிறரோடு கலந்து குதூகலம் அடையும் வேளைகளில் மனைவிக்குத்தான் ஏதாவது செய்வார் அவர். பிள்ளைகளைக் கூட நினைத்ததில்லை. என்னவோ அப்படி ஒரு வழக்கமாகி விட்டது.

எடுத்திருந்த புடவைகளின் கலரோ, டிசைனோ அவர் தேர்வு செய்யவில்லை. அதெல்லாம் அவருக்குப் பழக்கமுமில்லை.

``எனக்கும் ரெண்டு சேரீஸ் எடுத்தாங்களேம்மா...'' என்று அலுவலகப் பெண்மணிகளிடம் அவர் கேட்டுக் கொண்டபோது அதிசயமாகப் பார்த்தார்கள் அவர்கள்.

``டீ...! சாருக்கும் வேணுமாண்டீ... ஒண்ணு எடு...'' என்று ஒருத்தி சொல்ல ``ஏன் சார், உங்க ஒய்ஃப் என்ன கலர்? என்ன டிசைன் பிடிக்கும் அவங்களுக்கு?" என்று கேட்டாள் இன்னொருத்தி.

கொஞ்சம் வெட்கமாகத்தான் இருந்தது சாம்பமூர்த்திக்கு. ``நல்ல சிவப்பு'' என்ற உண்மையைச் சொல்லத்தான் ஆசை. ஆனாலும் எந்த எண்ணம் ஏற்படுத்திய லஜ்ஜை அவரைத் தடுத்தது.

அவரே கூட எடுத்திருப்பார்தான். சென்னைக்கு அலுவலகப் பணியாக அவர் பயணம் மேற்கொண்டிருந்த வேளைகளில் ஒன்றிரண்டு முறை தேடி அலைந்து எடுத்து வந்திருக்கிறார்தான். என்னவோ தெரியவில்லை. அந்தப் புடவைகளை அவள் அதிகம் கட்டிப் பார்த்ததேயில்லை. விலையைச் சற்று அதிகமாய்ச் சொன்ன கோபமோ என்னவோ? பில்லைக் காண்பித்தால் தானே பிரச்சனை? எதற்கு வம்பு என்று அதனால்தான் இப்பொழுது அவர்களை எடுத்துத் தரச் சொன்னார். வேணும்னா ஆபீசிலே சாரதான்னு ஒரு அசிஸ்டெண்ட் இருக்காங்க. அவுங்களைக் கேட்டுக்கோ - என்று சொல்லலாமே! நம்பகத்தன்மை கூடுமல்லவா?

அந்த இரண்டில் ஒன்றுதான் இப்போது அவர் தைக்க எடுத்து வந்திருப்பது! என்று அவள் கட்டிக் கிழிந்தது என்று தெரியாது இவருக்கு. காலில் போட்டிருந்த புதுச்செருப்பு மாட்டி இழுக்க வாரும் அறுந்து புடவையும் கிழிந்ததென்று சொன்னாள்.

செருப்பு வாங்கி ஒரு வாரம் கூட ஆகவில்லை. நூற்றுப்பத்தோ, நூற்றி இருபதோ அதன் விலை. நூற்றி ஐம்பது என்று சொல்லியிருந்தார். அது என்னவோ அப்படி ஒரு பழக்கம் அவரிடம். சற்றுக் கூட்டிச் கூட்டிச் சொல்வது! அதில் ஏதோவொரு சந்தோஷம். திருப்தி. அதற்காகப் புதுப்புடவையுமா கிழியும்? கிழிந்து விட்டதே? மூன்றங்குல உயர பார்டர்' இணையும் பகுதியில் நெசவு மோசம் என்பது போல் சர்ர்ர்ர்........... என்று சத்தத்துடன் நீளக்கக் கிழிந்து விட்டது என்றாள் சாந்தம். எங்கே அதோடு மூலையில் கிடாசி விடுவாளோ என்று பயந்து போய் இவரே ``தைச்சுறலாம்... தைச்சுறலாம்...'' என்று முந்திக் கொண்டு சொன்னார்.

இன்னொரு புடவை ரொம்ப நாளாய் தைக்கணும், தைக்கணும் என்று அவளே வைத்திருந்தது அது அவளுக்குப் பிடித்த டிசைன் போலும்.

``தைச்சா இன்னும் ஆறு மாசத்துக்குக் கட்டிக்கலாம்...'' என்றாள். அது அவள் ஆபிஸ் தோழிகளோடு போய் எடுத்து வந்தது. இந்தத் தவணைக்குப் புடவை எடுப்பது, மாசா மாசம் கொடுப்பது என்பதெல்லாம் அவளுக்குப் பிடிப்பதில்லை.

``நூறு நூத்தம்பது கூடக் கேட்பான். எதுக்காக தண்டம் அழணும்? காசென்ன சும்மாவா வருது? கையில காசு வாயில தோசை... கொடுத்து வாங்கிட வேண்டிதானே....? இதுதான் அவள் பாலிஸி.

ஆனால் சாம்பமூர்த்திக்கு என்னவோ இந்தத் தவணை முறை எடுப்பில் எப்போதுமே ஒரு அலாதி சந்தோஷம். தனி பிரேமை.

``காசு கொடுப்பது போலவே இல்லையே?'' முன்னதாகப் பொருள் வேறு கைக்குக் கிடைத்து விடுகிறது? அனுபவிக்க முடிகிறது? இதை விட ஒரு சுகம் உண்டா? என்பார்.

ரெண்டு மீட்டர் சட்டைத் துணியை நாற்பது ரூபாய்க்குக் கொடுத்துவிட்டுப் போனான் ஒருவன். ஆபீஸில் அத்தனை பேரும் எடுத்துத் தள்ளிவிட்டார்கள் அன்று. ரெண்டு ரெண்டாகக் கிழித்துத் தள்ளிவிட்டான் வந்தவன். காசை வாங்கிக் கொண்டு பறந்தும் விட்டான் உடனே.

அது ஒன்றுதான் சாம்பமூர்த்தி காசு கொடுத்துச் செய்த கொள்முதல். ரெண்டு தரமாத் தரலாமா என்று கேட்கத்தான் தோன்றியது அவருக்கு. அவன் முறித்து இல்லை என்று விட்டால்? கேவலமாயிற்றே? அதன் காரணம் பின்னால் தான் தெரிந்தது.

தைத்து சட்டையாக்கி ஒரு வாரம் அதையே போட்டு அடித்தார். நல்ல அழுக்காக்கி, பிறகு தண்ணீரில் நனைத்து சட்டை ரவிக்கையானது தனிக்கதை.

குடுகுடுவென்று ஓடிப் போய் அன்று மாலையில் தைக்கக் கொடுத்தவர் இவர் ஒருவர்தான். தையற்காரன் ஒரு வார்த்தை சொல்லவில்லையே? தெரிந்து பேசாமல் இருந்தானோ அல்லது தெரியாமல் கிடந்தானோ? நமக்குத் தையக்கூலி வந்தாச்சேரி என்று கூட இருந்திருக்கலாமே!

தைத்துப் போட்ட போது பார்க்க நன்றாய்த்தான் இருந்தது. அந்தத் தகுதி கூட அதற்கு இல்லையென்றால் பிறகு எப்படித்தான் துணியை விற்பது? அந்த வாரம் பூராவும் அதோடுதான் வலம் வந்தார் சாம்பமூர்த்தி. அவருக்கென்று ஒரு தையற்காரர் கூட வைத்திருக்கிறார் அவர். அது அவர் வீட்டுப் பக்கம். கொஞ்சம் அப்படி இப்படி என்றுதான் தையல் இருக்கும். ஆனாலும் கூலி பாதியாயிற்றே? சொல்லிச் சரி செய்து கொள்வார். அந்தப் பொறுமையெல்லாம் அவருக்கு நிறைய உண்டு.

அந்த வாரக் கடைசியில் லீவு நாளன்று சட்டையைத் தண்ணீரில் நனைத்ததும்தான் பல்லிளித்தது அது, துணி பாதியாய்ச் சுருங்கிப் போனது. அவர் மனசும் கூடத்தான்.

அதிலும் ஒரு நல்லெண்ணம் இருந்தது சாம்பமூர்த்திக்கு. மறுநாள் தவறாமல் அதை அலுவலகத்துக்கு எடுத்துக் கொண்டு போய்க் காட்டினார் எல்லோரிடமும் யாரும் தைக்கக் கொடுக்க வேண்டாம் என்று எச்சரித்தார். எல்லோரும் தரை துடைக்க வைத்துக் கொண்டதாய் பின்னாளில் சொன்னார்கள்.

ஆனால் தவணையில் இந்த ஏமாற்று வேலை கிடையாது. ஏனென்றால் தொடர்ந்து அவன் வர வேண்டுமே? விலைதான் சற்று அதிகமோ, என்னவோ? மனதைச் சமாதானம் செய்து கொள்வார் இவர். தவணை எடுப்பினை ஏனோ அவரால் கைவிடவே முடியவில்லை. சொல்வது ஐந்து, அல்லது எட்டுத் தவணைகள். கூட ரெண்டு மூன்று இழுத்துக் கொண்டாலும் அவன் கண்டு கொள்வதில்லை. ஏமாற்ற மாட்டார்கள் என்ற திடமான நம்பிக்கை. பார்க்கும் மாதாந்திரச் சம்பள உத்தியோகம் அந்த உத்தரவாதத்தைத் தந்தது அவனுக்கு.

சாம்பமூர்த்தி வெறும் டைப்பிஸ்ட்டாகத்தான் இருந்தார். முப்பது வருடம் சர்வீஸ் போட்டுவிட்டார்தான். பதினெட்டு வயதிலேயே வேலைக்கு வந்துவிட்டா. பாய் சர்வீஸிலேயே வேலைக்கு வந்ததில் அவருக்கு அத்தனை பெருமை. இன்னும் எட்டு வருடம் சர்வீஸ் பாக்கியிருக்கிறது அவருக்கு.

ஒழுங்காக டெஸ்டுகளெல்லாம் பாஸ் பண்ணி ப்ரமோஷனில் வந்திருந்தாரானால் இந்நேரம் டெபுடி டைரக்டர் வரை வந்திருக்கக் கூடியவர் அவர்.

``ஊர் விட்டு ஊர் அலையணும், இஷ்டத்துக்கு மாத்துவாங்க... அங்கே இங்கே சிபாரிசு பிடிச்சு உள்ளூர் வரல்லாம் எனக்கு ஆள் அம்பு கிடையாது. காசு செலவழிச்சு வாங்க நான் தயாராயில்லை. எல்லாம் இது போதும்...'' என்று சொல்லிக்கொண்டே இருந்தே விட்டார்.

இருப்பதாறு வயதில் கல்யாணம் ஆனது அவருக்கு. அந்தக் காலத்திலேயே வேலை பார்க்கும் பெண்தான் வேண்டும் என்று பிடிவாதமாக இருந்து கண்டெடுத்தார்.

மனைவி சாந்தம் மருத்துவத்துறைப் பணி. முப்பதாவது வயதில்தான் குழந்தை பிறந்தது அவருக்கு. குழந்தைகள் பிறந்தது என்று தான் சொல்ல வேண்டும். ஆமாம். ரெட்டைப் பெண் குழந்தைகள்.

``மாப்ளே... நாலு வருஷம் காத்திருந்தாலும் லாட்டா அடிச்சிட்டீரே'' என்றார் மாமனார். பிறகு, ஒரு ஆண் குழந்தை வேண்டுமென்று முயன்று, அதுவும் பெண்ணாய்ப் போனது. அது சிசேரியனாகி, பிறகு கர்ப்பப்பை கழற்றி எல்லாக் கூத்தும் முடிந்து போனது அத்தோடு.

அதற்குப்பின் அவர் தன் சம்சாரத்தைப் பார்த்துப் பார்த்து மனதுக்குள் வெகுவாக அழுதிருக்கிறார். பாவி நான், என் சந்தோஷத்தை மட்டும் முதலாக வைத்து வாழ்ந்திருக்கிறேனே? என்று புழுங்கினார். முதுகு வில்லாக வளைந்து போய் பார்க்கவே பரிதாபமாய், ``ஏன்யா, நீர் உம்ம பாரியாளுக்குச் சாப்பாடு போடுறீரா? இல்லையா?'' என்று பலரும் கேட்கும் அளவுக்கு ஆகிப்போனது நிலைமை.

``ரெண்டு பேர் சம்பாரிச்சு அப்படி என்னதான்யா பண்றீங்க? அந்தம்மா என்னடான்னா வக்கொரடு கணக்கா குச்சி மாதிரி நடந்து போய்க்கிட்டிருக்கு. நீர் என்னடான்னா பத்து வருஷம், பதினெஞ்சு ருஷம் ஆன பேன்ட், சட்டையைக் கூட மாத்தாம, விடாமப் போட்டுக்கிட்டுத் திரியிறீரு... என்னதான் நினைச்சிட்டிருக்கீர் உம்ம மனசுல? முடியப் பாரும்... பாகவதர் கணக்கா? நாலு மாசத்துக்கொருதரம்தான் வெட்டுவீர் போலிருக்கு? சிக்கனமாய் இருக்கலாம்யா, தப்பில்லை... ஆனா கஞ்சனா இருக்கக்கூடாது. நீர் உமக்கே செலவு செய்துக்க அழுதா முடியுமா?''

ஆபீஸ் மேனேதெரின் சரமாரியான கேள்விகளுக்கெல்லாம் அசந்தாரில்லை சாம்பமூர்த்தி.

``இங்கே ஒண்ணு எல்லோரும் கவனிக்கணும். சொல்றவங்களெல்லாம் ஒரு குழந்தை வச்சிருக்கிறவங்க... அதுவும் ஆம்புளைப் பிள்ளை. இல்லைன்னா ஒரு பொட்டை, அதுவும் இல்லைன்னா ஒரு பெண்ணும், ஒரு ஆணும். எனக்கு மூணுமே பொட்டையால்ல போச்சு?'' என்பார் அழுத்தம் திருத்தமாக....

ஏறக்கட்டிய ஒரு காக்கிப் பேன்ட், கையும் உயரமும் ரொம்பவும் சின்னதாகிப் போன ஒரு வெள்ளைச் சட்டை. ரெண்டு அம்மைத் தழும்பின் மேல் தெரியும் கையில். பெரும்பாலும் இந்த உடையில்தான் இருப்பார் சாம்பு. எப்பொழுது எடுத்தது, தைத்தது அவருக்கே தெரியாது. ஆனாலும் எதையும் விடுவதாய் இல்லை அவர்.

காலமும், நிகழ்வுகளும் சமூக ஓட்டத்திலிருந்து நம்மை ஒதுக்கித்தான் விடுகின்றன என்பதற்கடையாளமாய் ரோட்டில் ஓரமாய் தேமேனென்று அந்தச் சைக்கிளில் போய்க் கொண்டிருப்பார். ஒரு டூ வீலர் வாங்கச் சொல்லி ஆன மட்டும் சொல்லிப் பார்த்தார்களே... ஐம்பது தவணைய்யா... என்றார்களே? ஊஹும் அந்தத் தவணைக் கடனுக்கு மட்டும் அசையவே இல்லை இவர்.

மூன்று பெண்களையும் கரையேற்றி விட்டுத்தான் எந்தச் சந்தோஷத்தையும் நினைத்துக் கூடப் பார்ப்பது என்று பிரதிக்ஞை எடுத்துக் கொண்டது போல் இருக்கும். அவர்கள் இருவரும் அந்தத் துவிச் சக்கர வண்டியில் செல்லும் காட்சி பார்ப்பவர் பார்வையில் இருந்து மறையவே மறையாது.

ஒரே ஒரு வசதி சாம்புவுக்கு. வேறு யாருக்கும் கிடைக்காத வசதி என்று கூடச் சொல்லலாம். உடல் நோவு, காய்ச்சல் கரப்பு என்று அவர் அலைந்ததேயில்லை. அதுதான் அவர் சம்சாரம் பணியாற்றும் ஜி.எச். இருக்கிறதே! மருந்து, மாத்திரைகளுக்கு இன்று வரை தட்டுப்பாடு என்பது இல்லை.

இப்படியான அளந்தெடுத்த வாழ்க்கையைத்தான் வாழ்ந்து கழித்துக் கொண்டிருக்கிறார் சாம்பமூர்த்தி.

செய்யும் வேலையில் வெட்கமென்ன? கேவலமென்ன? மனைவியின் பாதுகையைக் கருமே கண்ணாய்த் தூக்கி வந்திருப்பது என்ன தவறான செயலா? அல்லது வெட்கக்கேடானதா? அது காசய்யா காசு! உழைத்து வந்த காசாக்கும்? நூற்றைம்பது கொடுத்து வாங்கி (சொன்னது அப்படித்தானே! அந்தத் தொகையைத்தான் நினைவில் வைத்திருக்க வேண்டும்) ஒரு வாரத்தில அறுகுமானால் அதைக் கருத்தாய்ச் சுமந்து வந்து, கவனமாய்த் தைப்பதில் என்ன தவறு?

``யோவ்...? கண்ணு தெரியலையா? நீ பாட்டுக்குப் போயிட்டிருக்கே? விழுந்து தொலைக்கப் போறய்யா பள்ளத்துல...!"

ஏதோவோர் சொறி நாயைப் பார்ப்பது போல் துச்சமாய்ப் பார்த்து கையை நீட்டி, நாக்கை மடித்து அந்தப் போலீஸ் ஒருமையில் சத்தமாய் திட்டியபோதுதான் தன் நினைப்பில் வந்தார் சாம்பமூர்த்தி. என்னவோ தன்னிலையில்லாமல் தடையை மீறி இப்படி நுழைந்து விட்டோமே என மனது வெட்கப்பட்டது அவருக்கு. உள்ளே நட்ட நடுவில் மூன்றடி அகலத்துக்குப் பள்ளம் தோண்டிப் போட்டிருந்தார்கள். பெரிய பெரிய சிமென்ட் காங்க்ரீட் குழாய்கள் உள்ளே இறக்கப்பட்டிருந்தன. பாதாளச் சாக்கடை வேலை நடக்கிறது என்று புரிந்து கொண்டார் இவர். இரு பக்கமும் நடந்து மட்டும் போகலாம். வண்டியை உள்ளே கொண்டு போகுதல் என்பது ஆகாது.

ஆபீஸ் வாட்ச்மேன் வேட்டை சொன்னானென்று அவனிடம் விவரமாய்க் கேட்டுக் கொண்டு புறப்பட்டு வந்திருந்தார். அந்தச் சந்து முனைக்கு அவர் வருவது அதுவே முதல் முறை. செருப்புகள் அங்கே விலை மிகக் குறைவு என்றும், தெருப்பூராவும் இருபுறமும் வெறும் செருப்புக் கடைகளேயென்றும், மொத்தக் கொள்முதல்தான் அங்கே பெரும்பாலும் நடக்கும் என்றும் உற்பத்திக்களமே அதுதான் என்றும், அறுந்த செருப்புக்களைத் தைக்க ஏறக்குறைய அங்கே காசு வாங்குவதில்லை என்றும், நகரத்தின் பல கிளைகள் அவர்களைச் சேர்ந்ததென்பதால், ஏதேனும் ஒரு கிளையின் பெயரைச் சொல்லி அங்கே சரி செய்து கொள்ளலாம் என்று இஷ்டத்துக் அளந்து விட்டிருந்தான் அவன். சொன்ன சொல்லும் பேசிய பேச்சும் அவரை அங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.

``உள்ளேல்லாம் சைக்கிளைக் கொண்டு போகக்கூடாது. இங்கேயே நிறுத்திடணும்'' என்று சைக்கிள் ஹாண்டில்பாரைக் கெட்டியாகப் பிடித்து அவர் சொன்ன விதம். இவரைச் சற்று அச்சப்படுத்தத்தான் செய்தது. அந்தப் போலீஸ்காரர் காட்டிய இடத்தில் நிறுத்தப் போன சாம்புவுக்கு ஒரு யோசனை தோன்றியது அப்போதும். அது அவரது அனுபவத்தினால் கிளர்ந்த யோசனை.

போலீஸ் தடுப்புக்கு இந்தப் புறம் நின்று பார்த்தபோது தெரு நெட்டுக்கு நேர் கோடு போல் காட்சியளிக்க, எங்கு நின்றாலும், வாகனம் கண்ணில் படுவது போல் நிறுத்தலாமே என்று நினைத்தார். நினைத்தாரேயொழிய... அதை நடைமுறைப்படுத்த சற்று பயம்தான். ஏற்கெனவே வண்டியை உள்ளே ஒட்டிக் கொண்டு போக யத்தனித்தது கண்டனத்திற்குள்ளாகியிருக்க, இதனை அத்தனை சுலமாபகச் செய்து விட முடியுமா? ஆனாலும் ஒரு அசட்டுத் துணிச்சல் அவரை விரைவுபடுத்தியது.

வண்டியைச் சத்தமின்றி மெதுவாக உருட்டி, இரண்டு டூ வீலர்களுக்கு நடுவே கிடைத்த கொஞ்சூண்டு இடத்தில் கஷ்டப்பட்டு நுழைத்தார். இடம் வலதுமாக இடித்தது வண்டி. பெடல் மாட்டிக் கொண்டு இம்சித்தது. துளிதுளியாக நகர்த்தி, நன்றாக உள்ளே நுழைத்து, ஸ்டாண்டில் கால் வைத்து, பின் கேரியரைப் பிடித்து இழுத்தார். ஏதோவொரு பிடிப்பில் நின்றது போலிருந்தது. கையை ஜாக்கிரதையாய் விடுவித்து, சரி என்று இடதுகாலினை எக்கி, சாய்த்துக் கொண்டு உடலை முன்பக்கம் நன்றாய் வளைத்து, கைகளைப் பின் கேரியரின் அடியில் கொண்டு போய் பூட்டின் கொக்கியை விரலால் அழுத்தி இழுத்தார். அரதப் பழசான அது வர மறுத்தது. நிதானித்ததாய் நினைத்துக் கொண்டு அழுத்தி இழுத்த போது, துறு ஏறிக் கிடந்த அது சிக்கித் திணற, டொக்கொன்று ஒரு சத்தம். என்ன என்று புரியாமலே நிதானிப்பதற்குள் ``இன்னும் என்னய்யா பண்ணிட்டிருக்க அங்க?'' என்ற காவலின் கேள்வி மிரட்ட, சாம்பமூர்த்தி அதன் தொடர்ச்சியாக நெருக்க நெருக்கமாய் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அடுத்த நீண்ட வரிசையிலான மொத்த வண்டிகளையும் ஒன்றன்பின் ஒன்றாய்ச் சடசடவென்று சாய்ந்து விட்டன. சாம்பமூர்த்திக்கு பயத்தில் ஒன்றுமே ஓடவில்லை.

கடைசியாய் நின்றிருந்த ஒரு வெள்ளை யானை கணக்கான கனத்த புல்லட், கருமமே கண்ணாய் அங்கே அருகே நின்று கொண்டு படு தீவிரமாய் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி, எவனோ ஒருவனைக் கை நீட்டிக் கெட்டவார்த்தை சொல்லி அழைத்துக் கொண்டிருந்த சார்ஜன்ட் மேல் திடுமெனச் சாய்ந்து அவர் விலகி நிதானிக்கும் முன் அவரையும் சேர்த்து அமுக்கிச் சாய்த்துக் கொண்டு கீழே விழ, அதே சமயம் ``கிரீச்'' என்ற பெருஞ்சத்தத்தோடு இன்னொரு புல்லட்டில் அங்கே பிறிதொரு சார்ஜன்ட் வந்து நிற்க, சர்வ நாடியும் ஒடுங்கிப் போய் அத்தனையையும் கண் கொண்டு பார்த்துக் கொண்டு பொறி கலங்கிப் போனவராய்ச் செய்வதறியாது கிடந்தார் சாம்பமூர்த்தி.

 

Pin It